Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

"அம்மா, நான் காலைலயே சர்ச்சுக்கு போயிட்டு வந்துட்டேன். நீங்க சொன்ன மாதிரியே வாரா வாரம் தவறாம போயி ப்ரேயர் பண்ணிட்டு தான் இருக்கேன். இன்னிக்கு சண்டேம்மா. வாரம் முழுக்க வேலை செஞ்சவளை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்களேன்.."

கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்தவாறு காதில் கைபேசியை வைத்துக்கொண்டு அவள் பேசிக்கொண்டிருக்க, எதிர்முனையில் அதிருப்தியான சத்தங்கள் எழும்பின.

"கீர்த்தி! அடி வாங்குவ நீ!! ஃபோன் பண்ணும்போதெல்லாம் எடுக்கறதே இல்ல; வேலை வேலைன்னு ஓட வேண்டியது! அப்பறம் சண்டே கூப்பிட்டாலும் 'ரெஸ்ட் எடுக்க விடு'ன்னு புலம்புறது. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க??"

"ம்மா.. சும்மா கேட்டேன்மா! சரி சொல்லுங்க, எப்டி இருங்கீங்க நீங்களும் அப்பாவும்? என்ன புது சேதி?" குறும்பும் சோர்வும் சரிசமமாக குழைத்த குரலில் வினவியபடியே தான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில நாவலின் அட்டைப்படத்தை விரலால் வருடினாள் அவள்.

கீர்த்தி பால்ராஜ்; அலுவலகத்தில் கீர்த்தி ராஜ்; நண்பர்களுக்கு கீர்த்தி. தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர் பட்டாளத்தைப் போலவே பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலைபெற்று வீட்டிலிருந்து வந்து தனியே தங்க வேண்டிய சூழல். அது தந்த சுதந்திரத்தின் மீது தீராக் காதல்.

ஐந்தரையடி உயரம், திராவிட நிறம், இடைவரை நீளும் சுருண்ட கார்குழல், சின்ன மான்விழிகள், அளவான நெற்றி, காதில் சின்னதாய் வெள்ளி வளையங்கள், கழுத்தில் சிலுவை போட்ட வெள்ளிச் சங்கிலி. இயல்பான, தோழமையான சிரிப்பு; இயன்றவரை அனைவருக்கும் உதவும் குணம். ஞாயிறுக்காக ஆர்வமாகக் காத்திருந்து நேரமே எழுந்து காலை வேளையின் அழகியலை ரசிக்கத் தெரியுமளவு ரசனையுள்ளவள், தன் கடமையையும் மறக்காமல் தேவாலயத்திற்குச் செல்வாள். பெற்றோருக்குச் செல்ல மகள். எனவே அவளை நினைத்து அவர்கள் கவலைப்படாத நாளே கிடையாது.

"..என்னதான் சம்பளம் கணிசமா வருதுன்னாலும், இப்பவும் தன்னந்தனியா நீ தங்கியிருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல கீர்த்தி! நம்ம ஊர்லயே வேலை பார்த்தா என்ன குறைஞ்சு போயிடும்?"

"ஹான்.. இன்ஃபோசிஸ் கம்பெனியை காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ப்ரான்ச் ஓப்பன் பண்ண சொல்லுங்க, நான் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடறேன்!!"

அவள் நகைக்க, மறுபுறம் அவள் அன்னையோ உச்சுக்கொட்டினார்.

"எப்பவுமே உனக்கு விளையாட்டுத் தான்! நீ பாட்டுக்கு தன்னந்தனியா அங்க இருக்கற.. ஆத்திர அவசரத்துக்கு கூட வர முடியாத தூரம்.. போன மாசம் நடந்த குருத்தோலை பண்டிகைக்கு வரல.. கேட்டா வேலை! அன்னிக்கு ராஜியோட பிறந்தநாளுக்கும் வரல.. கேட்டா வேலை! இப்ப பிரபா கல்யாணத்துக்காச்சும் வருவியா.. இல்ல அப்பவும் வேலை வந்துடுமா?"

"ஹம்மா…"

காஞ்சிபுரத்திலிருந்து 4ஜி அலைவரிசையில் ஆதங்கத்தோடு ஒலிக்கும் அம்மாவின் புலம்பல்களால் காதுகள் உருகத் தயராகியிருந்த நேரத்தில் சரியாக காலிங்பெல் அடித்து அவளைக் காப்பாற்ற, கடவுளுக்கு நன்றி சொன்னவாறே கைபேசியை வைத்துவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் கீர்த்தி.

வாசல் நிலைப் படியின் உயரத்திற்கு சமனாக ஆறடியில் நின்றது ஒரு ஆண் உருவம். சாதாரண பருத்தியாடையில் சட்டையும் கால்சட்டையும் அணிந்து, சற்றே சோர்ந்த பாவனையில் நின்றிருந்த அந்த ஆடவனின் முகத்தில் மாதக்கணக்காய் மண்டியிருந்த தாடி, மீசை. கேசமும் சரியாக வாராமல் ஆங்காங்கே துருத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறிய வசீகரப் புன்னகையொன்று இதழில் குடிகொண்டிருந்தது.

ஒருகணம் புரியாமல் பார்த்தாள் கீர்த்தி. ஆனால் மறுகணமே அவனை யாரெனத் தெரிந்து அலறத் தொடங்கியது கீர்த்தியின் நெஞ்சம்.

"நீயா??"

தன்னையறியாமல் அந்த ஒருமை விளிப்பை இதழ்கள் கூறிவிட, கதவின் மறுபுறம் நின்ற ஆடவனின் முகம் குழப்பமாக சுருங்கி, அரைக்கணம் யோசனையாக வளைந்து, பின் தெளிந்து அதிர்ச்சியாக விரிந்தது.

"நீயா?"

அவனும் அதே அதிர்ச்சியை அதே வார்த்தையில் பிரதிபலிக்க, முன்பிருந்த அதிர்ச்சி களைந்து அளவற்ற ஆத்திரம் குடிகொண்டிருந்தது கீர்த்தியின் விழிகளில்.

பட்டென்று கதவை அடித்து சாத்தியவள், வேகமாக சமையலறைக்குச் சென்று ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து மடமடவெனக் குடித்தாள். இன்னும் குறையாமல் கொந்தளித்த நெஞ்சத்தை சாந்தப்படுத்த, கையால் நெஞ்சை நீவிக்கொண்டாள். முன்னறைக்கு மீண்டும் வந்தபோது எதேச்சையாக நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், தனது கண்கள் அனிச்சையாகவே கலங்கிக் குளமாகியிருப்பதைக் கண்டாள்.

கைகளால் கண்களைத் துடைத்துக்கொண்டே, "ஒண்ணுமில்ல கீர்த்தி… அவன் போயிட்டான்… திரும்ப வரமாட்டான்… அவனை இனி பார்க்க மாட்டோம் நாம… அஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்ததையெல்லாம் நாம நினைச்சு அழ வேணாம்… எல்லாம் சரியாப் போயிடும்…" எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

மீண்டும் தனது அழைப்பு மணி ஒலிக்க, இம்முறை சென்று கதவைத் திறக்க எந்த முயற்சியும் செய்யவில்லை அவள். நான்கைந்துமுறை காலிங் பெல் அடித்து அடித்து ஓய, இப்போது கதவைக் கைகளால் தட்டும் சத்தம் கேட்டது.

சில நிமிடத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ஆத்திரமாகச் சென்று கதவைத் திறந்தபோது, எதிரே நின்றிருந்ததோ பதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சின்னப் பெண். முழங்கால் வரை வரும் பூப்போட்ட கவுன் ஒன்றை அணிந்து, தோள்வரை இருந்த கூந்தலை ஒரு ஹெட்பேண்ட் போட்டு வழியவிட்டிருந்தாள். கீர்த்தி ஒருகணம் திகைத்தாலும், சுதாரித்துக்கொண்டு, "யாரும்மா, என்ன வேணும்?" என்றிட, அந்தச் சிறுமி வெள்ளையாகப் புன்னகைத்தாள்.

"ஹாய்!! நான் மகதி. உங்க புது நெய்பர். எதிர் வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கோம்.."

கீர்த்தி அச்சிறுமியை உற்றுப் பார்த்தபோது, சற்றுமுன் அவளது மூச்சைக் கிட்டத்தட்ட நிறுத்திய வாலிபனின் சாயல் தெரிந்தது முகத்தில். சந்தேகமாக மெல்ல, "நீ.. மாறனோட.." என இழுக்க, அச்சிறுமி உற்சாகமாகத் தலையசைத்தாள். "மாறனோட சிஸ்டர்"

"அண்ணா ஒழுங்கா பேசாம வந்துட்டான் போல..? கோச்சிக்காதீங்க.. அவனுக்கு புது மனுஷங்க கிட்ட சகஜமா பேச வராது. அவன் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். ஆனா நான் நல்லா பேசுவேன். நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கப் போறோம்னு தோணுது. உங்க பேர் நீங்க இன்னும் சொல்லலியே..?"

கீர்த்தியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்ததால், மகதி தன் கேள்வியை இருமுறை கேட்ட பிறகே தட்டுத்தடுமாறித் தன் பெயரைச் சொல்ல முடிந்தது அவளால். ஆனால் அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

"நைஸ் நேம் கீர்த்தி... எங்க வீட்ல, இன்னிக்கு ஈவ்னிங் சின்ன பங்ஷன் மாதிரி அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கோம். நெய்பர்ஸ் எல்லாரையும் அறிமுகம் பண்ணிக்கறதுக்காக. ஸோ நீங்களும் கண்டிப்பா வரணும். தேங்க்ஸ், வரேன்.. பைய்..."

கையசைத்துவிட்டு அவள் செல்ல, கீர்த்தி குழப்பமும் கோபமுமாய் வந்து கூடத்தில் அமர்ந்தாள்.

கதவுக்கு வெளியே ஆட்கள் சாமான்களோடு வருவதும் செல்வதும் கேட்டது. கூடவே "பீரோவை உள்ளாற வைங்க, அடுப்பை கிச்சன்ல வைங்க" என ஆழ்ந்த குரலில் உரத்துக் கட்டளையிட்ட அவனது குரலும் கேட்டது.

இந்தக் குரலைக் கேட்டு மயங்கித் திளைத்திருந்த நாட்கள் எத்தனை… இந்தக் குரலால் நம் பெயரை அழைக்க மாட்டானா என ஏங்கித் தவித்த இரவுகள் எத்தனை…

திடீரென அதை நினைவுபடுத்திய மனதைத் திட்டி அடக்கியவள், காதில் இசையூட்டியை அணிந்துகொண்டு அந்த சத்தங்களைப் புறக்கணிக்க முயன்றாள். மதியம் வரை நீண்ட அந்தப் போராட்டம், ஒருவழியாக வெளி சத்தங்கள் அடங்கியதும் நின்றது. ஒரு மணி அளவில் பசியுணர்ந்ததும் சமையலறைக்குச் சென்று, காலையில் சமைத்த பாத்திரத்தைத் திறந்து, அதில் கட்டியாகிக் காய்ந்துபோன சேமியாவை மீட்டி ஒரு தட்டில் போட்டுக்கொண்டு, தொட்டுக்கொள்ள நேற்று கடைவீதியில் வாங்கிய 'வீல் சிப்ஸ்' பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிரித்தவாறே வந்து தரையில் அமர்ந்தாள் கீர்த்தி.

ஒரு விள்ளல் எடுத்து வாய்க்கருகே கொண்டு செல்கையில் சொல்லிவைத்தாற்போல வாசல் மணி அடித்தது. கூடவே, "கீர்த்தி மேடம்!" என வீட்டு உரிமையாளரின் குரலும் கேட்டது.

பெருமூச்சுடன் கையை கழுவிக்கொண்டு ஓடிச்சென்று கதவைத் திறந்து அவரை நோக்கியவள், அவர்பின்னால் ஆறடிக்கும் உயரமாய் நின்றவனைப் பார்த்தும் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

உரிமையாளர் அவளுக்கு வணக்கம் கூறி, குசலமெல்லாம் விசாரித்துவிட்டு, "இவர் மிஸ்டர் மாறன், நம்ம பில்டிங்குக்கு புதுசா குடி வந்திருக்கறார். உங்களுக்கு எதிர் போர்ஷன்ல தான்..! நீங்க கொஞ்சம் வந்து, அக்ரீமெண்ட் பேப்பர்ல இவருக்காக ஒரு சாட்சிக் கையெழுத்து போட முடியுமா மேடம்?" என்றிட கீர்த்தி திகைத்தாள்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தபோது, அவன் முகம் குனிந்திருக்க, அதில் என்ன உணர்வுகள் ஊடுருவியதெனப் பார்க்க முடியவில்லை அவளால். ஆனால் அவனது கைகள் இறுக்கமாக மூடியிருந்ததைக் கவனித்தாள். அவளுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.

மீண்டும் அவரிடம் திரும்பியவள், "சார்.. நான் எப்டி.. முன்னப் பின்ன தெரியாதவங்களுக்கு எல்லாம் சாட்சிக் கையெழுத்து போடறது? பிரச்சனை ஆகிடாதா?" என்க, அவர் அவசரமாக மறுத்தார்.

"சேச்சே! அதெல்லாம் எதுவுமே இல்ல மேடம். வீட்டுல யாராச்சும் இருந்தா அவங்களையே போடச் சொல்லியிருப்பேன், ஆனா சாரும் அவரோட தங்கச்சியும் மட்டும்தான் இருக்காங்க. ஸோ, கையெழுத்துக்கு ஆள் பத்தல. நான் கிருஷ்ணசாமி சாரை கூப்பிடப் போறேன் இன்னொரு கையெழுத்துக்கு. அதனால பயப்படாதீங்க. ஜஸ்ட் ஒரு கர்ட்டசி கையெழுத்துதான் மேடம்.. வாங்களேன்.."

அவர் அவ்வளவு கூறிய பின்னரும் மறுக்கத் தோன்றாமல், கதவைப் பூட்டிவிட்டு அவர்களுடன் நடந்தாள் அவள். தரைத்தளத்தில் அவரது முன்னறையில் பத்திரங்கள், கோப்புகள் ஆகியவை வைக்கப்பட்டிருக்க, கீர்த்தி அவசரமாகச் சென்று அவர்கள் காட்டிய தாள்களில் கையெழுத்திடத் தொடங்கினாள்.

அவர் அடுத்த சாட்சிக் கையெழுத்துக்காக கிருஷ்ணசாமியை அழைக்கச் சென்றுவிட, அவன் மட்டும் நின்றான் சுவரோரம். கண்கள் திரும்பாவிட்டாலும் அவன் நின்றிருந்ததை உணர முடிந்தது அவளால். கடைசிக் கையெழுத்தைப் போடும்போது அவன் ஓரடி நெருங்கி வர, லேசாகக் கை நடுங்கியது அவளுக்கு. சட்டென அதை மறைத்துவிட்டு முறைப்போடு நிமிர்ந்தாள் அவள்.

"என்ன??"

"நீ.. கீர்த்தி தானே.. கீர்த்தி பால்ராஜ்..? கே.என்.ஆர் காலேஜ்..?"

"ஹ்ம்ம். உன்னால அவமானப்பட்ட அதே கீர்த்தி தான். சந்தேகம் தெளிஞ்சிருச்சா?"

அவளது தொனியில் தான் எடுத்து வைத்த ஓரடியைக் குறைத்துப் பின்வாங்கினான் அவன்.

அவன் ஏதும் கூற வருமுன் செயலாளர் உள்ளே வர, பேனாவை மேசைமீது அழுத்தி வைத்துவிட்டு அவள் முறைப்போடு வெளியேற, அவன் திகைப்பில் உறைந்து நின்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro