Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

episode 1

கார்மேகங்கள் சூழ்ந்துக்கொண்டு கானம் பாடும் மின்னல்களை கைதட்டி வரவேற்க , பூமாதேவியைக் குளிரவைக்கும் நோக்கத்தில் இறைவனோ அந்த இந்திரனுக்கு ஆணையிட்டு மழைபொழியுமாறு செய்தார். அந்த அழகான மழைச்சாரல்கள் அங்குமிங்கும் சிதறிக்கொண்டு இருந்தது. சில ஓட்டு வீட்டின் கூரையிலிருந்து நீர்வீழ்ச்சிப்போல் மழைத்துளிகள் விழுந்துக்கொண்டு இருந்தது.

அது நவம்பர் மாதம் என்பதால் போதுமென்ற அளவு மழை வெளுத்து வாங்கியது. சாலையில் ஒரு ஓரமாய் நம் கதாநாயகி மழைக்கு டீக்கடை வாசலில் ஒதுங்கிநின்றாள்.
நல்ல மாநிறமான நிறம்,தோள்பட்டையை தொடும் அளவுக்கு கூந்தல், கச்சிதமான தேகம், அதற்கு பொருத்தமான மஞ்சள் நிறச்சுடிதார். அவளைப்பார்க்கும் யாவரையும் கவர்ந்திழுக்கும் வசீகர புன்னகை கொண்ட முகம். மூன்றாம் ஆண்டு பிகாம் முடித்துவிட்டு வீட்டில் தன்னுடைய தாய்க்கு உதவியாக இருக்கும் சராசரி பெண்ணவள். அவளுக்கென்று கனவுகள் என்று பெரிதாய் எதுவுமில்லை. அப்பா அம்மா மற்றும் குட்டித்தங்கை ஹேமா இவ்வளவு தான் இவள் உலகம்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மாநகரம் தான். இவளைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு எதார்த்தமான நடைமுறையை விரும்பும் ஒருத்தி. சரி இவள் பெயர் தான் என்ன என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது . அவள் பெயர் ரோஜா .

கல்லூரி நாட்களில் இவளுக்கு ஒரு காதலும் இருந்தது. அந்த காதல் முழுமையடைவதற்கு முன்பே இறைவன் அவனை பறித்துக்கொண்டான். அந்த அசம்பாவிதத்தை அவள் இன்றும் மறக்கவில்லை என்றாலும் மனதில் மறைத்துக்கொண்டு அவனுடைய நினைவுவலையத்திற்குள் அவ்வப்போது பயணித்துவிட்டு வருவாள்.

மழை ஓரளவு விட்டதும் தனது துப்பட்டாவால் முகத்தை சற்று அழுத்தி ஈரத்தை துடைத்துவிட்டு தற்செயலாக வந்து நின்ற ஆட்டோவை..

"அண்ணே முகப்பேரு வரீங்களா" என்றாள் தனது சிவந்த உதட்டினை குவித்தப்படி.

"வா மா உக்காரு" என்று அவளை அமர்த்திக்கொண்டு அவள் சொன்ன இடத்திற்கு வந்து நின்றது ஆட்டோ. இறங்கியதும் அவர் கேட்ட தொகையைவிட இருபது ரூபாய் அதிகமாகவே தந்துவிட்டு அத்தோடு இல்லாமல் "அண்ணே தாங்க்ஸ்" என்று மனநிறைவோடு சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததும்...

அங்கு கண்களை கசக்கியபடி தங்கை ஹேமா அழுதுக்கொண்டு இருப்பதை கவனித்தவள்.
"தங்கம் எதுக்கு அழறீங்க" என்று பாசமாய் அவள் முகத்தை ஏந்திட...

"அக்கா,நான் இரண்டு நாளாவே நம்ம வீட்டுக்கு ஒரு நாய்குட்டி வேணும்னு கேட்டுட்டே இருக்கேன் ஆனால் அப்பாவும் அம்மாவும் வேண்டாம் சொல்றாங்க' என்று சிணுங்கியவளை ஆசுவாசப்படுத்தி..

"இல்லை டா தங்கம் நம்ப வீடு அவ்வளவு வசதிப்படாது பெட்ஸ் வளக்குறதுக்கு. நம்ம இதை விட ஒரு பெரிய வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கலாம் சரியா" என்று சமாதானம் செய்தவுடன் சரியென்று தலையை அசைத்துவிட்டு தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுப்பாடம் செய்வதற்கு அறையினுள் புகுந்தாள் ஆறாவது படிக்கும் ஹேமா.

"ஹாஹா இந்த வீட்ல ரோஜா இருந்தாத்தான் வீடு வீடாவே இருக்கும் போலருக்கு. அதுவும் நம்ப ஹேமா ரோஜா பேச்சுக்கு மட்டும் தான் கட்டுபடுறாள். ம்ம்ம் ரோஜா கல்யாணம் ஆகி போயிட்டா ஹேமாவை சமாலிக்கிறது ரொம்ப கஷ்டம்" என்று பெருமூச்சு விட்டு நகர்ந்தார் மோகன். வயது 52 தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மனைவி மக்கள் வேலை இதுவே அவருடைய மிகப்பெரிய உலகம்.

"ரோஜா ஹேமா நீங்க கேட்ட குலாப்ஜாமுன் செய்து வச்சுருக்கேன் வாங்க சாப்பிடலாம்"என்று சமையலறையில் இருந்தப்படி தாய் லட்சுமி குரல் கொடுக்க இருபெண்பிள்ளைகளும் விழுந்தடித்துக்கொண்டு சமையலறைக்கு ஓடிவந்தனர்.

"ஐ...செம்ம மா மழைக்கு அதுக்கும் எதாவது சாப்பிட்டா நல்லாருக்கும்னு தோனுச்சு அதுக்கு ஏத்தமாதிரி நான் கேக்காமலே நீயே ஒரு டிஷ் செய்துட்ட தாங்க்ஸ் மா"என்று அன்னையின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு தன் அறைக்குள் புகுந்தாள். அது ஒரு தனிவீடு தான் ஆனால் அவ்வளவு வசதிப்படாது. பெயருக்கு இரண்டு பெட்ரூம், இரண்டு நாற்காலியும் ஒரு கம்ப்யூட்டர் வச்சதுமே இடமில்லாமல் அடங்கிப்போன வரவேற்பு அறையும். கொஞ்சம் கூட காற்று வசதியில்லாத சமையலறையும் கொஞ்சம் இக்காட்டான வீடுதான் என்றாலும் இந்த அழகான குடும்பத்திற்கு இதுவே பிருந்தாவனம் தான்.

மோகன் சம்பாதித்து வாங்கிய வீடு என்பதால் கஷ்டமோ நஷ்டமோ இதே வீட்டில் வாழ்க்கை ஓட்டவேண்டும் என்று முடிவு எடுத்திருந்தனர் தம்பதியர். சென்னையில் முக்கியமான ஏரியாவான முகப்பேரில் ஒரு சொந்த வீடு இருப்பதே பெரிய விஷயம் தான். ஆனால் ஒன்று மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நல்ல இதமாக இருக்கும் அடக்கமாக ஆனால் வெயில் காலத்திலோ சுட்டெரிக்கும் வாசல் நேரே வெயில் பட்டவாறு.

நம் கதாநாயகி ரோஜாவிற்கு ஒரே ஒரு ஆசைதான். இந்த வீட்டை விட ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று. ஆனால் அதற்கு ஒன்று இந்த வீட்டை விற்று வேறு வீடு பார்க்க வேண்டும் அல்லது தந்தையிற்கு சம்பளம் உயர்வு வந்தவுடன் லோன்போட்டு வேற வீடு வாங்கிவிட வேண்டும். அப்படியும் இல்லை என்றால் தான் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும். இந்த மூன்றில் எதாவது ஒன்று நடந்தால் மட்டுமே சாத்தியம்.

வீட்டை விற்க பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சம்பளம் உயர்வுக்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை அப்படினா மூன்றாவது ஆப்ஷன் 'நான் வேலைக்கு போகணும்'

'ம்ம்ம் வீட்டில் தின்னுட்டு தின்னுட்டு தூங்கி பழக்கம் ஆயிடுச்சு நான் எங்கே வேலைக்கு எல்லாம்' என்று யோசித்தவாறு மொபைலை துலாவிக்கொண்டு இருந்தாள்.

"ஹாய் டி" என்று மெஸேஜ் வந்தது தோழி திவ்யாவிடமிருந்து.

"சொல்லு மச்சி எங்கே ரொம்ப நாளா மெஸேஜ் காணோம்"

"இல்லை டி இவ்வளவு நாள் வீட்ல பேச்சு துணைக்கு ஆளு இல்லாமே கிடந்தேன் ஆனால் இப்போ எங்கள் அண்ணன் வந்துருச்சுல யூ.எஸ் ல எம்.பி.ஏ முடிச்சிட்டு இப்ப இங்கேயே வந்தாச்சு."

"அப்படியா சூப்பர் டி"

"ஆமாம் ஆமாம்.... இனி அப்பாவோட பிஸினஸ் அண்ணன் தான் கவனிக்க போறாரு"

"ரியலி"

"யெஸ்...ஆர்.கே கன்ஸ்டரக்ஷன்ஸ் எம்டி இனிமே எங்கள் அண்ணன் தான்"

"ஓ....நைஸ்"

"என்னடி எல்லாத்துக்கும் ஒன்வர்ட் ஆன்ஸர் "

"அதெல்லாம் ஒன்னுமில்லை ஜஸ்ட் மைண்டுல ஒன்னு ஓடுது அதான் திங் பண்ணிட்டு இருக்கேன்"

"என்னது டி"

"வேலைக்கு போகணும் தோன்றுது டி எதாவது ஐடியா குடு டி"

"ஹாஹா உனக்கு என்ன வேலை தானே எங்கள் அண்ணன் கிட்ட சொல்லி ஆர்.கே கன்ஸ்டரக்ஷன்ஸ் ல வேலை போட்டு தரசொல்றேன். ஆல்ரடி எங்கள் கம்பெனில அக்கவுண்ட்ஸ் மேனஜர் போஸ்ட் காலினு அப்பா சொல்லிட்டு இருந்தாரு. ஸோ அந்த வேலை உனக்கு கன்பார்ம்." என்று சிரித்தவாறே அவள் கூறிவிட்டு போனை வைக்க...

'என்ன இந்த திவ்யா டக்குன்னு அவள் அப்பா கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுறேன் சொல்றா. அதுவும் அக்கவுண்ட்ஸ் மேனஜரா ஐயோ எனக்கு அனுபவம் கூட இல்லை. இந்த லட்சுணத்துல நான் எப்படி. அதுவும் எம்டி இப்போ அவளோட அண்ணன். ஆண்டவா என்ன பண்ணப்போறேன்' என்று விழித்தவள்.

மறுபடியும் திவ்யாவிற்கு டயல் செய்ய தற்செயலாக போனை எடுத்தது அவளுடைய அண்ணன் ஆதித்யன்

"ஹலோ திவ்யா இருக்காங்களா" என்று தயக்கத்துடன் ரோஜா கேட்டதும்

"திவ்யா லேல ரூம்ல இருக்கா நீங்க" என்றான் ஆதித்யன்.

"ஓகே நான் அப்றம் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

'செம்ம வாய்ஸ் யாரு இந்த பொண்ணு. திவ்யா ப்ரண்டு போலருக்கு ஸோ ஸ்வீட்' என்று உள்ளூர அவளை நினைத்து புன்னகையித்தபடி இடத்தை விட்டு அகன்றான். சற்று நேரத்தில் திவ்யா இறங்கி கீழே வந்ததும்...

"திவி உனக்கு போன் வந்துச்சு யாரோ உன் ப்ரண்டு நினைக்கிறேன். கால் பண்ணி பேசிடு"என்று ஆதி என்கிற ஆதித்யன் விலக...

திவ்யா தனது டயல் லிஸ்டை செக் செய்தபோது தான் தெரிந்தது அது ரோஜா என்று.
'இப்பதானே இவள்கிட்ட பேசினேன் அதுக்குள்ள என்னவாம் சரி கால் பண்ணி கேப்போம். ம்ம் அதுக்கு முன்னாடி இவள் வேலைக்கு ஜாயின் பண்ற விஷயத்தை அண்ணன் கிட்ட காதுல போட்டு வைப்போம்' என்று அறையை விட்டு வெளியே வந்தவள் டைனிங் டேபிளில் இருந்த ஆப்பிளை வெட்டிக்கொண்டு இருந்த அண்ணன் ஆதித்யனிடம்.

"அண்ணா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"

"என்னடி வாலு சொல்லு"

"என்னோட ப்ரண்டு ரோஜா நம்ப கம்பெனில ஜாயின் பண்ண ஆசைப்படுறா அதான் அக்கவுண்ட்ஸ் மேனஜர் போஸ்ட் காலினு அப்பா சொல்லிட்டு இருந்தாரே அந்த வேலையை இவளுக்கு தரலாமா என்று கேட்டவுடன்' முதலில் அவனுக்கு சிரிப்பு தான் எட்டிப்பார்த்தது.

"திவி, இது என்ன விளையாட்டா ? இதுக்கு முன்பு அக்கவுண்ட்ஸ் மேனஜரா இருந்தவருக்கு பன்னிரண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நீ சொல்ற உன் ப்ரெண்டு இப்பதான் ப்ரெஷர் அப்படி இருக்கிறப்ப அவ்வளவு சுலபமாக எப்படி மா வேலை போட்டு தரமுடியும் ? நோ வே" என்க...

திவ்யாவிற்கு முகமே வாடியது...

"திவி என்ன மா ட்ல் ஆயிட்ட." என்று ஆதித்யன் கேட்டதும் ஒன்றுமில்லை என்றபடி எழுந்தவளை அவளுடைய தந்தை சக்கரவர்த்தி பிடித்து நிறுத்தி..

"திவ்யா உன் அண்ணன் சொல்றது எல்லாம் சரிதான் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு யாரையும் வைக்க முடியாது மா. ஒன்னு பண்ணு உன் ப்ரெண்டை ஆபிஸ்க்கு வரச்சொல்லு கொஞ்சநாள் முதல்ல என்ன மாதிரியான ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கோம் இதையெல்லாம் பேஸிக்கா சொல்லி தருவோம். ஆதி அலாட் பண்ற சின்ன சின்ன வொர்க் எல்லாம் செய்யட்டும் அதுகப்றம் போஸ்டிங் தரலாம்" என்றதும் அப்போது தான் அவளுக்கு நிம்மதியே வந்தது.

"தாங்க்ஸ் டாட்"என்று அணைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

ஆதித்யன் மனதுக்குள் யார் இந்த ரோஜா ,நம்ம திவ்யா இந்த அளவு முக்கியத்துவம் தருகிறாள்.பொதுவாக பசங்க தான் ப்ரெண்ட்ஸ்காக எல்லாம் செய்வாங்க ஆனால் பொண்ணுங்களும் ப்ரெண்ட்ஸ்காக ஹெல்ப் எல்லாம் பண்றாங்க சூப்பர். என்று ஆப்பிளை சுவைத்தப்படி சிந்தித்தான்.

தொடரும்




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro