Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

13

நிலாவின் பார்வையில்..

ஒரு திடுக்கிடும் நிகழ்வு நடந்தது மட்டுமல்லாது, நாங்கள் அவரின் பிள்ளைகள் இல்லை என்பதை வேறு கூறிவிட்டார். எனக்கு அப்பா கூறிய வேறு எதுவுமே என் காதில் விழவில்லை. நாங்கள் இருவரும் அநாதையாகிப் போன உணர்வு எனக்கு. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுது தீர்த்துட்விட்டேன்.

ஆனால் கயல் இவை எதற்கும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அப்பாவுக்கு கயலின் மனநிலை குறித்த கவலை உருவாகியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கயல் கொஞ்சம் கோபக்காரி. ஆனால் வெகு சீக்கிரத்தில் உடைந்து போகக் கூடியவள். அவளுக்கு நிதானமாக சிந்திக்க தெரியாது. அவள் எப்போதும் எடுத்தோம் கவுத்தோம் என்றே முடிவெடுப்பாள். இப்போது இருக்கும் கயலை பார்க்க எனக்கே பயமாக இருந்தது. உச்சகட்ட கோபத்தில் இருக்க வேண்டியவள் அமைதியின் மறு உருவமாக இருப்பதை கண்டு ஆச்சரியத்தை விட பயமே வந்தது.

" இவ்வளவு நடந்தும் அம்மா மேல  உங்களுக்கு கோபம் இல்லையாப்பா?" என்று கேட்டேன்.

" இதுல கோபிக்க எதுவுமே இல்ல நிலா. நிதானமா யோசிச்சி பாரு. அம்மா அவ காதலிச்சவன்கிட்ட போய் இருக்கா. இதுவே ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணோ, இல்லைன்னா இருபது வயசுல இருக்குற பொண்ணோ பண்ணா ' ரொம்ப தைரியசாலி, காதலுக்காக இவ்வளவு தூரம் போயிட்டாளே' நு எல்லாம் பேசுவோம். ஆனா அதுவே கல்யாணம் ஆன பொண்ணு பண்ணா அதை வேறவிதமா பார்க்குறோம். நான் எது சரி தப்புன்னு சொல்ல வரல. உங்க அம்மா இருபது வருசம், ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் இல்லை, இருபது வருசம் தனக்கு பிடிக்காத வாழ்க்கைய வாழ்ந்திருக்கா. அது சாதாரணமான விசயம் கிடையாது.

நம்ம வீட்டுல இது நடந்ததால நமக்கு இதை ஜீரனிக்க கஷ்டமா இருக்கு. இதுவே அடுத்தவங்க வீட்டுலன்னா ஒரு வேல அவ பண்ணத நம்ம பாராட்டியிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல" என்றார்.

அப்பாவின் வாதம் நியாயமாக தோன்றியது. ஆனாலும் அது எங்கள் வீட்டில் நடந்ததால் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. என்னதான் எங்கள் தாய் செய்ததை மற்றவர்கள் வீர தீர செயலாக கருதினாலும் என்னால் அதை அப்படி ஏற்க முடியவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அமுதாவின் தாய் தந்தையர் அவர்கள் இல்லை என்று மாதவன் கூறிய பின், அவளின் உண்மையான தாயை பார்க்க வேண்டும் என்று அமுதா கேட்பாள். அது அவளின் ஆசையாக இருக்கும். ஆனால் எனக்கு எங்களின் பயாலஜிக்கல் தந்தையை காண வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கூட இல்லை. முடிந்தால் அவரை என் வாழ்நாளில் நான் காணவே கூடாது. யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் என்ன என்ன நடக்கப் போகின்றது என்று.

கயலின் பார்வையில்.

நிலாவும் அப்பாவும் என் மனநிலை குறித்து கவலைப்படுவது அப்பட்டமாக தெரிந்தது. எனக்கு ஒன்றும் மனநிலை குழம்பிப் போகவில்லை. நிதானமாகத்தான் உள்ளேன். உள்ளுக்குள் எரிமலை வெடிப்பது என்னவோ உண்மைதான். இப்போது எனக்கு தேவையானது ஒன்றுதான். அப்பாவை கவலைப்படுத்தும் எந்த ஒரு காரியத்தையும் நான் செய்துவிடக் கூடாது. அவரை இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும்.

" என்ன இரண்டு பேரும் இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்கீங்க. என்னடா இவ, சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் கோபப்படுறவ இப்போ அமைதியா இருக்காலேன்னு யோசிக்கிறீங்களா? ஒருத்தங்க கோபப்பட்டா அதை தணிக்கிறதுக்கு மததவங்க தயாரா இருக்கனும். நான் எப்போ கோபப்பட்டாலும் நீங்க ரெண்டு பேருமே என்ன சமாதானம் செய்ய வருவீங்க. ஆனா இப்போ நீங்க ரெண்டு பேருமே கவலையில இருக்கீங்க. இப்போ நானும் கோபப்பட்டா என்ன யாரு சமாதானம் செய்வா. சோ கொஞ்ச நாளைக்கு நான் கோபப்படக்கூடாதுன்னு இருக்கேன்". நான் கூறியதை கேட்டு அந்த நிலையிலும் நிலா சிரித்துவிட்டால்.

" அப்பா நடந்த எதையும் நம்மலால மாத்த முடியாது. தயவு செய்து அம்மா பண்ணதுக்கு மட்டும் நியாயம் சொல்ல வராதீங்க. அப்படி நீங்க பண்ணும் போது உங்க மேல அதிகமா கோபம் வருது. கொஞ்ச நாளைக்கு இது எது பத்தியும் பேச வேணாம். நானும் நிலாவும் வேலைக்கு லீவ் சொல்லிடுறோம். நீங்களும் ஒரு மாசம் லீவ் போட்றுங்க. நம்ம மூனு பேரும் எங்க சரி போயிட்டு வந்துடலாம். இங்க நம்ம இருக்க வேணாம். அம்மா, இந்த ஊரு எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு மறந்துட்டு வாழலாம்." என்றாள்.

பாலகுமார் பார்வையில்.

கயலின் பேச்சைக் கேட்டு எனக்கு மிகவும் ஆச்சரியமாகஇருந்தது. நாங்கள் எல்லாம் முன் கோபக்காரி என நினைத்தவள் எவ்வளவு நிதானமாக யோசித்திருக்கின்றாள். அவள் கூறுவதிலும் ஒரு பாய்ன்ட் இருந்தது. சில நாட்கள் இங்கிருப்பதை தவிர்ப்பதே சிறந்தது என தோன்றியது.

" சரி கயல் சொல்றபடி பண்ணலாம். இத்தனை வருசத்துல இன்னைக்குத்தான் உருப்படியா ஏதோ சொல்லிருக்கா. அதை ஏன் தட்டிக் கழிக்கனும்" என்று நான் கூற அவள் என்னை முறைத்தால்.

" ஆனா உடனே நாம எதுவும் பண்ண வேண்டாம். ஒரு வாரம் பத்து நாள் போகட்டும். அதுக்கு அப்புறமா போகலாம்" என்றார். எல்லோருக்கும் தங்கள் நிலையை சமன் படுத்திக்கொள்ள அவகாசம் தேவைப்பட்டது.

அடுத்து வந்த நாட்கள் சுவாரசியம் எதுவுமில்லாமல் போனது. வீடும் ஓரளவுக்கு அமைதியாக. இனிமேல் வனிதா எங்கள் வாழ்வில் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். அவளிடம் இருந்து வந்த விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்திட்டு நான் அனுப்பி வைத்தேன். வனிதாவுக்கும் எங்களுக்குமான உறவு முற்றாக முடிந்தது.

ராஜா பார்வையில்.

வனிதாவின் விவாகரத்து பத்திரம் வந்ததும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டோம். இனிமேல் அவள் வனிதா ராஜா. என் வாழ்வில் ஒளியேற்ற வந்த தேவதை அவள். இப்போது கொஞ்சம் வயதான தேவதை. காதலிக்க ஆரம்பித்த நாட்களில் வனிதா ரொம்பவும் ஒல்லியாக இருப்பாள். இப்போது கொஞ்சம் புஷ்டியாக இருக்கின்றாள். அவள் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலித்தவனுக்காக இருபது வருடங்கள் ஒருத்தி காத்திருந்தாள் என்றால் அது என் வனிதாவாகத்தான் இருக்கும். இப்படி ஒருத்தி கிடைக்க நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை. என் வனிதா, என் வீட்டில், என் மனைவியாக.

வாழ்க்கையில் பாதிக்கும் மேலான நாட்கள் ஓடிவிட்டது. இருந்தாலும் மீதி இருக்கும் நாட்கள் எங்களுக்கானது. நாங்கள் எங்களுக்காக வாழப்போகின்றோம். அதற்காக நாங்கள் இழந்தது எங்களின் பிள்ளைகளை. கயல் மற்று  நிலாவை நான் சந்திக்கவே கூடாது என்று வனிதா மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டாள். பாலகுமாரை மேலும் மேலும் கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை. ஒரு கணம் எனக்கு தோன்றியது. பாலகுமார் மேல் இரக்கம் ஏதும் வனிதாவுக்கு இருக்குமோ என்று. இருந்தாலும் தவறில்லை. இத்தனை வருடங்கள் இவளின் கொடுமைகளை தாங்கியிருக்கின்றார். பரவாயில்லை. எங்கள் மகள்கள் சந்தோசமாக இருப்பதை தூர இருந்தே நான் பார்த்துக்கொள்வேன். எப்படியும் இன்னும் சில வருடங்களில் புகுந்த வீட்டுக்கு சென்று விடுவார்கள். அந்த நேரத்தில் எப்படியும் அவர்களை பிரிந்துதான் ஆக வேண்டும். அதற்கு இதுவே பரவாயில்லை. இருந்தாலும் உள் மனதுக்குள் தந்தை பாசம் எட்டிப் பார்த்தது.

என் மகள்களா வனிதாவா? மிகவும் கடினமான ஒரு முடிவு. இனிமேல் எங்களுக்கு என்று பிள்ளைகள் பிறக்கப்போவதில்லை. எது எப்படி இருந்தாலும் இடையில் நான் புகுவதால் கயல் மற்றும் நிலாவின் வாழ்வில் குழப்பங்கள்தான் அதிகமாகும். இப்பொழுது மட்டும் அவர்களின் வாழ்வை நான் குழப்பவில்லயா என்று உங்களுக்கெல்லாம் தோன்றலாம். இப்போது இருக்கும் குழப்பம் அவர்களின் தாய் விவாகரத்து பெற்று இன்னொரு ஆணுடன் வாழ்கின்றாள் என்பதுதான். ஆனால் அதுவே நாந்தான் அவர்களின் தந்தை என்று தெரிய வந்தால் அதனால் வரப்போகும் குழப்பம் மிகவும் பெரியது. அந்த குழப்பதை நானும் கூட தவிர்க்க நினைத்தேன்.

இப்போது என் முன் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் என் தேவதையை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பார்க்காத எல்லா சந்தோசத்தையும் அவளுக்கு திகட்ட திகட்ட கொடுக்க வேண்டும். நான் கொடுக்கும் அன்புச் சித்திரவதையில் ' டேய் போதும்டா உன் அன்பு' என்று கதற வேண்டும். என் மகாராணி அவள். விவாகரத்து வரும் வரைக்கும் என்னை அவள் அருகிலேயே விடவில்லை. பாதகத்தி. ஆனால் இன்று என் மார்பில் நிம்மதியாக உறங்குகின்றால். எத்தனை நாட்கள் இந்த உறக்கத்துக்காக காத்திருந்திருப்பாள் என்பதை நினைக்கும் போதே என் கண்களில் கண்ணீர் முட்டுகின்றது. இறுதியில் அவள் ஜெயித்து விட்டாள். எங்கள் காதலையும் ஜெயிக்க வைத்து விட்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro