11
11-வனிதாவின் பார்வையில் (தொடர்ச்சி)
ஒரு வருடம் முன், ராஜா பீகாரில் இருந்து ரிலீஸ் ஆகி வந்தான். அவன் ஜெயிலில் இருக்கும் வேலை அவ்வப்போது நாங்கள் போனில் பேசிக்கொள்வோம். அவன் இங்கு வந்த அடுத்த நாளே, நான் அவனை சந்திக்க அவனது வீட்டுக்கு சென்றேன். பல நாள் பிரிவுக்கு பின் சந்திக்கும் காதலர்களாக எங்களை நாங்கள் உணர்ந்தோம். என்னைக் கண்டதும் அவன் எனது அருகில் வந்து என்னை அணைக்க முற்பட்டான். நான் தடுக்க, அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்.
"ராஜா, நான் சொல்றத முழுசா கேளுங்க. நான் இப்போ பாலகுமாரோட பொண்டாட்டி. உங்க கூட ஒன்னா இருந்துட்டு என்னால அந்த வீட்டுக்கு போய் அவங்க யாரோட முகத்தையும் நேரா பார்க்க முடியாது. அதுக்கு காரணம் புருசன் மேல இருக்குற பாசமோ இல்லை தாலி செண்டிமெண்டோ கிடையாது. எனக்குனு சில வரைமுறைகள் இருக்கு. அது எனக்கு நானே போட்டுக்கிட்ட கோடுகள். அதை நான் என்னைக்குமே தாண்டக் கூடாதுன்னு நினைப்பேன். எனக்கு தெரியும் என் மேல இன்னும் உங்களுக்கு அதே காதல் இருக்குன்னு. ஏன்னா நீங்க என் ராஜா. என்னை எப்பவுமே நீங்க ஏமாத்த மாட்டீங்க. எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க. நான் அந்த வீட்ட விட்டு மொத்தமா வந்துடுறேன். அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்போல என்னவேணா பண்ணிக்கோங்க" என்று கூறி மந்தகாச புன்னகையை சிந்தினேன். என் ராஜா நான் சொல்வதை கேட்காமல் இருப்பானா...
உடல் கவர்ச்சியில் இருந்து உண்மையான காதல கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம். அதை மட்டும் கண்டுபிடிச்சிட்டோம்னா, நம்மகிட்ட இருக்குற முழுப் பலத்தையும் பயன்படுத்தி அந்த காதல அடைய முயற்சிக்கனும். அந்த காதல ஏனோ தானோன்னு கடந்து போகக் கூடாது. காதல் நம்மல சேர்த்துவைக்கும்னுலாம் நினைக்கவே கூடாது. நமக்கு தேவையானதுக்காக வேண்டி நாம எவ்வளவு வேணாலும் இழக்கலாம். Fight what you love.
அதன் பின் பல நாட்கள் எங்கள் சந்திப்புகள் ரகசியமாக நடந்தது. வீட்டில் நான் முழு ராட்சசியாக மாறினேன். வாஷிங்க் மெசினில் ஆடைகளை கழுவினால் 'எதற்காக டெய்லியும் வாஷிங்க் மெஷின் போடுறீங்க என்று' கத்துவேன். அதுவே அழுக்கு ஆடைகள் இருந்தால் 'வாஷிங்க் மெசின்ல டிரஸ்ஸ போட தெரியாதா' என்று கத்துவேன். நான் வீட்டில் ஏதும் பேச ஆரம்பித்தாலே ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் ஓட ஆரம்பித்தனர்.
இப்படி கையும் களவுமாக நிலா எங்களை கண்டுபிடிப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எது எப்படியோ எல்லாம் நன்மைக்கே. நானாக இந்த விடயத்தை சொல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை.
நேற்றைய சம்பவத்தின் பின், இதோ இன்று நான் ராஜாவுடன் இருக்கின்றேன். முழுமையாக அவனுக்கு சொந்தமாகப் போகின்றேன். பாலகுமாருக்கு நான் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டது போல இன்னும் இரண்டு நாட்களில் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் விவாகரத்துக்கான நோட்டீஸ் சென்றுவிடும். அதன் பின் என் வாழ்வை நான் வாழ ஆரம்பித்து விடுவேன்.
பாலகுமார் பார்வையில் (இன்று)..
இது நடக்கும் என்பது எனக்கு முன்னமே தெரியும். வனிதா எழுதி இருந்த கடிதத்தை மறுபடியும் படிக்க ஆரம்பித்தேன்.
பாலகுமாருக்கு,
நான் திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்தேன். காலத்தின் கோலம் எங்களால் ஒன்று சேர முடியவில்லை. இருந்த போதிலும் திருமணமாகி ஒரு மாதம் வரை நான் உங்களுடன் அன்பாகத்தான் இருந்தேன். பழையவை எல்லாவற்றையும் மறந்து வாழ ஆசைப்பட்டேன். என்னால் முடிந்த வரை அதை சரியாகவும் செய்தேன். நீங்களும் முதல் ஒரு மாதம் சந்தோசமாகத்தான் இருந்தீர்கள். என்னை அன்பாக பார்த்துக் கொண்டீர்கள். முழுமையாக என்மீது அன்பை பொழியாவிட்டாலும் என்மீது அக்கறையாக இருந்தீர்கள். ஆனால் நான் கர்ப்பமான செய்தி தெரிந்த பின் நீங்கள் என்னை ஒதுக்க ஆரம்பித்தீர்கள். அதன் பின் என்னுடன் பேசவே இல்லை.
குழந்தைகள் பிறந்ததும் மறுபடியும் என்னுடன் பேச ஆரம்பித்தீர்கள். ஆனால் என்னால் உங்களுடன் பழையபடி சரியாக பேச முடியவில்லை. அப்போது நான் உங்களை ஒதுக்க ஆரம்பித்தேன். காரணம் ராஜாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்தில் தெரிந்து கொண்டேன். அவனுக்காக மனம் ஏங்கியது. ஒரு வேலை கர்ப்பகாலத்தில் நீங்கள் என்னை ஒதுக்காமல் என்னுடன் அன்பாக நடந்திருந்தால் என் மனதில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்காதோ என்னமோ.
காத்திருந்தேன், காத்திருந்தேன், காத்திருந்தேன். ஒன்றல்ல, இரண்டல்ல இருபது வருடங்கள்.
என்னைப் பற்றிய முழு உண்மையும் இப்போது நிலாவுக்கு தெரிந்துவிட்டது. இனியும் என்னால் அந்த வீட்டில் உங்கள் எல்லோருடனும் வாழ முடியாது. உங்கள் எல்லோரையும் பொறுத்த வரை நான் கணவனை மதிக்க தெரியாத மனைவியாகவும், பிள்ளைகளை பராமரிக்காத தாயாகவும் இருந்துவிடுகின்றேன். நான் இல்லை என்றால் நிலாவும் கயலும் பெரிதாக எதுவும் இழந்து விடமாட்டார்கள். சில உண்மைகள் என்னுடனே அடங்கிப் போகட்டும். உங்களுக்கு அவை தெரிய வேண்டாம். தெரிய வரும் போது உங்கள் மனம் வேதனைப்படும்.
இதோ என் வாழ்க்கையை நான் வாழச் செல்கின்றேன். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. என் வாழ்க்கை. நான் வாழ போகின்றேன். அவ்வளவுதான். இன்னும் இரண்டு நாட்களில் விவாகரத்து பத்திரம் வந்துவிடும். அதில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்.
கடைசியில் ஒரே ஒரு விடயம் மட்டும் கூற வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தையின் பாசம் மிக முக்கியமானது. நிலாவுக்கும் கயலுக்கும் அது அளவுக்கு அதிகாமகவே கிடைத்தது. எனக்கு அது சிறிது கூட கிடைக்கவில்லை.
இப்படிக்கு
வனிதா.
கடிதம் நிதானம் இல்லாமல் அவசரமாக எழுதப்பட்டதை போல இருந்தது. வனிதா அவள் கூற வந்த விடயத்தை சரியாக சொல்லாதது போல இருந்தது. அவளுக்கு தேவை விவாகரத்து. அதை தெளிவாக கூறிவிட்டாள். ஆனால், அவள் பக்கம் தவறில்லை என்பதை அவளால் சரியாக கூறமுடியாமல் போனது தெளிவாகத் தெரிந்தது.
"சில உண்மைகள் என்னுடனே அடங்கிப் போகட்டும். உங்களுக்கு அவை தெரிய வேண்டாம். தெரிய வரும் போது உங்கள் மனம் வேதனைப்படும்" கடிதத்தில் இந்த வரிகளை படிக்கும்போது எனக்கு சிரிப்பாக வந்தது. அந்த உண்மை நாங்கள் திருமணம் முடித்த முப்பத்தி இரண்டாவது நாளே எனக்குத் தெரியும். அதுதான் கயலும், நிலாவும் எனக்கு பிறக்கவில்லை என்பது.
திருமனம் முடித்து முப்பத்தி இரண்டாம் நாள்...
வனிதா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்ட பின் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என் மனதில் இருந்த பழைய காதல் எல்லாம் எங்கோ தூரத்துக்கு சென்று மறைந்து கொண்டது. நானும் வனிதாவும் முழுமையான கணவன் மனைவியாக வாழாவிட்டாலும், முடிந்த வரை ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாகவே இருந்தோம்.
அப்பாய்ன்மன்ட் எடுத்து நானும் வனிதாவும் டாக்டரை சந்திக்க சென்றோம். வனிதாவை உள்ளே அழைத்துச் சென்று பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து டாக்டர் வெளியே வந்தார்.
"வாழ்த்துக்கள் மிஸ்டர் குமார். உங்களுக்கு ட்வின்ஸ். குழந்தைங்க அம்மா வயித்துல திடகாத்திரமா இருக்காங்க. எந்த ப்ராப்ளமும் இல்லை. ஆனா டாக்டர்கிட்ட காட்ட ஏன் இவ்வளவு தாமதம் ஆனீங்க. எழுபத்தஞ்சு நாள் காத்திருக்கனுமா? முதல் மாதம் பீரியட்ஸ் தள்ளிப் போனதுமே வந்திருக்கனும். ஏன்னா ட்வின்ஸ் என்றதால வனிதா கொஞ்சம் சோர்வா இருக்காங்க. சில மெடிசின்ஸ் எழுதித் தரேன். நேரம் தவறாம போட சொல்லுங்க" என்றார். என் தலையில் இடிவிழுந்தது போல இருந்தது. திருமணமாகி இப்போதுதான் முப்பதிரண்டு நாட்கள். ஆனால் டாக்டர் எழுபத்தைந்து நாள் கர்ப்பம் என்று கூறுகின்றார்.
"டாக்டர் எத்தனை நாள் கர்ப்பம்னு சொன்னீங்க" இதை கேட்கும் போதே என் உதடுகள் பயத்தில் துடிதுடித்தது. மருந்து எழுதுவதில் மும்முரமாக இருந்தவர் என் முகத்தை பார்க்காமலேயே சொன்னார் "செவன்டி பைவ் டேய்ஸ்".
இந்த உண்மை தெரிந்த பின் எப்படி என்னால் வனிதாவுடன் சகஜமாக பேச முடியும். பெண்களை அடித்து, கேவலமாக பேசும் ஆண் நானல்ல. இந்த நிலையில் அவளை என்னால் விவாகரத்தும் பண்ண முடியாது. அவள் வாழ்விலும் ஏதோ ஒன்று பெரிதாக நடந்திருக்கின்றது. வனிதாவுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தேன். ஒரு கட்டத்தில் நாங்கள் பேசிக்கொள்வதே இல்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro