Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

10

வனிதாவின் பார்வையில் (தொடர்ச்சி).

சில காலமாக கடவுள் என் பக்கம் இருந்ததை போன்ற ஒரு உணர்வு இருந்தது. ராமசாமி பேசியது, தந்தை படுக்கையில் விழுந்தது, ராஜாவின் காதல், பாலகுமாரின் காதல் தோல்வி. எல்லாம் இப்படி எனக்கு சாதகமாக இருந்த வேளை, ஒரு இடி என் தலையில் விழுந்தது. இந்த மாதம் எனக்கு மாதவிலக்கு வரவில்லை. என்னுடைய மாதவிலக்கு சரியாக ஒவ்வொரு மாதமும் ஒரே திகதியில் வரும். ராஜாவிடம் இருந்து தகவல் எதுவும் வராத கவலையில், இந்த மாதம் பத்து நாட்கள் தள்ளிப்போயிருந்ததை நான் கவனிக்கவில்லை.

எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. பார்மசியில் ரகசியமாக ப்ரக்னன்சி டெஸ்ட் அட்டையை வாங்கிப் பார்க்க, எல்லாமே கைமீறி போய் இருந்தது. ஆம் நான் கர்ப்பமாக இருந்தேன். இது மட்டும் என் வீட்டில் தெரிந்தால் என்னை உயிருடன் எரித்துவிடுவார்கள். எனக்கு இருக்கும் தெரிவுகள் இரண்டுதான். ஒன்று யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு செல்ல வேண்டும். இரண்டு எந்த குழப்பமும் விளைவிக்காமல் பாலகுமாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். கருவை கலைக்கும் தைரியம் எல்லாம் எனக்கில்லை. அப்படி ஏதும் நான் செய்யப்போக எங்கள் வீட்டில் கண்டுபிடுத்து விட வாய்ப்புண்டு. இரண்டாவது தெரிவை நான் தேர்ந்தெடுத்தேன்.

பாலகுமார் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறியும் நான் சம்மதம் தெரிவித்ததற்காக அவருக்கு நான் காரணம் கூற வேண்டும். இருப்பதில் ஒரு நல்ல பொய்யை கூற வேண்டியதுதான். என் நிலை அப்படி.

அடுத்த வாரமே திருமணம் நடந்தது. முதல் இரவு அறைக்குள் பாலகுமார் இருந்தார். என்ன நடக்குமோ என்ற பயம் எனக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளகூடாது என்று எனக்குள் நானே சபதம் செய்தேன்.

"எனக்கு தெரியும் நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு. ஒரு பொண்ண காதலிச்சி அவள மறக்க முடியாம இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னீங்க. அதனாலதான் எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சது. உங்கள மாதிரி ஒருத்தர புருசனா அடைய நான் கொடுத்து வெச்சிருக்கனும். உங்க உணர்வுகளை மதிக்காம நான் நடந்தேன்னு நீங்க நினைச்சா என்ன மன்னிச்சிடுங்க" என்றேன்.

அவரும் முரண்டு பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவரை வளர்த்த அவரது மாமா. அவரின் சொல்லை இவர் என்றுமே தட்டியதில்லையாம். எங்கள் இல்லற வாழ்வும் ஆரம்பித்தது. மனமொத்த தம்பதியர்களாக நாங்கள் வாழாவிட்டாலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்தோம்.

ஒரு மாத முடிவில் டாக்டரிடம் செக்கப்புக்காக சென்றோம். எல்லாம் நன்றாகவே முடிந்தது. ஆனால் அதன்பின் பாலகுமாரின் செயல்களில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் என்னுடன் ஓரளவுக்கு பேசுவார். நானும் போக போக சகஜமாகிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் திருமணமாகி ஒரு மாதத்தின் பின், அவர் இன்னும் என்னை விட்டு  தூரமாகிப் போவதாக தோன்றியது. இரவு நேரங்களில் மிக தாமதமாக வீடு வர ஆரம்பித்தார். நான் எதுவும் கேட்டால் பதில் கூட வராது. எனக்குள் இருந்த மிருகம் லேசாக முழித்துக்கொள்ள ஆரம்பித்தது. அந்த மிருகம் எனது கப்போர்ட்டினுள்ளோ அல்லது என் தலையனுக்குள்ளோ ஒளிந்திருக்கவில்லை. அது என் தலைக்குள் சிம்மாசனமிட்டு பட்டாபிகேசத்துக்கு காத்திருந்தது.

என் வார்த்தைகள் தடிக்கத் தொடங்கியது. "என்ன இப்பவும் உங்க காதலிகூட தொடர்புல இருக்கீங்களா?" இப்படியான கேள்வியில் ஆரம்பித்து "என் வாழ்க்கைய மோசம் பண்ணிட்டீங்களே" வரைக்கும் சென்றது. இங்கு உண்மை என்னவென்றால் நான் செய்த தவறுகளை மறைக்க பாலகுமாரின் செய்கைகளை கேடயமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். குழந்தைகள் பிறந்தன. இரட்டைக்குழந்தைகள். மூத்தவள் கயல், இளையவள் நிலா.

சுவர்க்கத்து களிப்பை அனுபவித்துக்கொண்டிருந்த ஆதாம் ஏவாலை, கடவுள் பூமிக்கு தூக்கி வீசிய பின் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பைபிலில் ஏராளமாக உண்டு, அதே போலதான் என் வாழ்க்கையும். நரகத்தில் இருந்த என்னை ராஜா எனும் தேவதூதன் தூக்கி வந்து, சுவர்க்க சோலைகளை சிலகாலம் என் கண் முன் காட்டிவிட்டு மறுபடி நரகத்தின் வாயிலில் விட்டதை போல இருந்தது என் நிலமை. அதிலும் கர்ப்பமாக இருந்த நாட்களில் பாலகுமாரின் ஒதுக்கம் வேறு என்னை வாட்டியது. வீட்டில் மனம் விட்டு பேசக்கூட யாருமில்லை. இப்படியான மனநிலையில் இருப்பவள் என்ன யோசிப்பாள் என்று யாராலும் கணிக்க முடியாது. அப்படியான ஒரு புதிராகத்தான் நான் இருந்தேன். அந்த ஒரு நாள் வரும் வரை.

குழந்தைகள் பிறந்து ஒரு மாதமாகி இருக்கையில் ராஜாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அவன் பொருட்கள் கொண்டு சென்ற வண்டியில் போதைப் பொருட்களுடன் சேர்த்து ஆயுதங்களும் இருந்ததற்காக அவனை பீகார் போலீஸ் அரஸ்ட் செய்துவிட்டார்களாம். இப்போதுதான் அவனுக்கு என் முகவரி கிடைத்ததாம். நான் திருமணம் செய்து கொண்டது தெரியுமாம். காலம் முழுவதும் அவன் என் நினைவுகளோடே வாழ்ந்து விடுவானாம். அவனை நான் மன்னிக்க வேண்டுமாம்.

அவன் இன்னும் தன்னை நல்லவன் என்று என்னிடம் நிரூபிக்க செய்யும் செயல்கள் என்னை பிரமிக்க வைத்தது. இன்னும் அவன் காதல் பித்துப்பிடித்த முட்டாளாகவே இருக்கின்றான். எனக்கு சந்தோசத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. காரணம் என் ராஜா என்னை ஏமாற்றவில்லை. நான் சம்மதம் சொன்னால் தண்டனை காலம் முடிந்ததும் கண்டிப்பாக என்னிடம் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என்ன தண்டனைக்காலம் தான் கொஞ்சம் அதிகம். மொத்தமாக இருபது வருடங்கள். பரவாயில்லை அவனுக்காக காத்திருக்கலாம்.

பிள்ளைகள் இருவரிடமும் பால்குமார் உயிராக இருந்தார். குழந்தைகள் பிறந்த பின் அவர் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். ஆனால் நான் அவருடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தேன். ஏனென்றால் என் மனதில் இப்போதெல்லாம் ராஜாவின் எண்ணங்கள் அதிகமாக வர ஆரம்பித்தது. இருந்தாலும் குழந்தைகளுடன் அன்பாகவே இருந்தேன்.

குழந்தைகளுக்கு மூன்று வயதாகும் போது ஒரு நாள் கயல் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தாள். அன்று நான் காய்ச்சலில் துவண்டிருந்தேன். அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு அவளுக்கு சாப்பாடு ஊட்ட முயன்றேன். அவள் சாப்பிடவே இல்லை. சரி பசி இல்லை போலும் என நினைத்து கிட்சன் சென்று வேலைகளை முடித்து விட்டு ஹாலுக்கு வர, அங்கு கயல் பாலகுமாரிடம் சிரித்து விளையாடி உணவை உண்டு கொண்டிருந்தாள்.

கஷ்டப்பட்டு நான் அவளுக்கு உணவு கொடுத்தும் உண்ணாதவள், அவர் கொடுத்ததும் எந்த சில்மிஷமும் செய்யாமல் சாப்பிடுகின்றாள். எனக்கு கிடைக்காத, நான் ஏங்கிய தந்தை பாசம் இவளுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம். ஆளவந்தானில் கமல் கூறுவது போல கடவுள் பாதி மிருகம் பாதியாக இருந்த நான் அன்றிலிருந்து வீட்டுக்குள் முழு மிருகம் ஆனேன். அதன் பின் அவர்கள் ஒன்றாக இருந்தால் குத்திக்காட்ட ஆரம்பித்தேன். பாலகுமார் சந்தோசமாக இருந்தால் எனக்கு பிடிக்காமல் போனது. நாளாக நாளாக அவர்கள் எது செய்தாலுமே எனக்கு பிடிக்காமல் போனது. ஒரே வீட்டில் இருந்தாலும் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என் செய்கைகளை பார்ப்பவர்களுக்கு வினோதமாக தோன்றலாம். திருமணம் முடித்து பிள்ளைகள் என்றான பின் யாராவது தன் மகள்கள் மீதே பொறாமை கொள்வாளா? ஏன் இல்லை. பொதுவாக பெண்கள் அவர்கள் கணவனிடம் சண்டை போட முதல் காரணம் " இப்போலாம் உங்களுக்கு பிள்ளைகள்தான் முக்கியமா போயிடிச்சில்ல. என்ன பத்தி எதுவுமே யோசிக்கிறதில்ல" இப்படித்தான் ஆரம்பிக்கும். சில நேரங்களில் தன் பிள்ளைகள் மீது பொறாமை கூட வரும். ஆனால் வெறுப்பு வருவதில்லை.

இவை எல்லாம் இப்படி இருக்க, வீட்டில் பொய் கூறிவிட்டு ஒரு தடவை ராஜாவை பார்க்க பீகார் ஜெயிலுக்கு சென்று வந்தேன். அவனுக்காக காத்திருப்பதாகவும் சொன்னேன். அதன்பின் எனக்கான உலகத்தை நான் வடிவமைக்க ஆரம்பித்தேன். அதில் என் தந்தை இல்லை. பாலகுமார் இல்லை. என் மகள்கள் இல்லை. நானும் ராஜாவும் மட்டும். என் ராஜாவுக்காக எங்களின் மகள்களை பாலகுமாருக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்தேன். தினமும் சண்டை போட்டேன். எடுத்ததெற்கெல்லாம் திட்டினேன். என்னை என் மகள்கள் ராட்சசியாக பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். பாலகுமார் அவர்களை காக்க வந்த தேவதூதனாக நினைத்தேன். நான் நினைத்த எல்லாவற்றிலும் வெற்றியும் கண்டேன். என் மகள்களை பாலகுமார் நன்றாக பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. காதலுக்காக எதை எதையோ இழப்பார்கள். ஆனால் காதலுக்காக சொந்த மகள்களை இழக்கப்போகும் முதல் பெற்றோர் நாங்கள்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro