Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8.


நாட்கள் யாருக்காகவும் காத்திராமல் நகர்ந்தன.  சிறுவயது முதல் கவின், கவின் என அவன் பின்னாலே திரிந்தவள் இப்போது அவன் இல்லாமல் வாழப் பழகி விட்டாள். விடிந்தால் கல்லூரி, அது விட்டால் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தால் வினய்யுடன் எதாவது வம்பளந்து விட்டு தூங்கப் போய்விடுவாள்.  ஆக மொத்தத்தில் வெளியில் இருந்து பார்க்க உற்சாகமாய் சந்தோஷமாய் தானிருந்தாள் நித்யா.  ஆனால் இரவில் அறையில் தனித்திருக்கும் போது தான் சொல்ல முடியாத வெறுமையும் தனிமையும் எட்டிப் பார்க்கும்.

போன புதிதில் கவின் அவளுடன் போனில் பேசுவதே இல்லை . மற்ற எல்லோருடனும் பேசிவிட்டு அவர்களே போனை நித்யாவின் கொடுக்கப் போனால் கூட ஏதாவது காரணம் சொல்லி விட்டு போனை வைத்து விடுவான். ஆனால் என்ன நினைத்தானோ போன வருடம் நித்யாவின் பிறந்த நாளுக்கு அவனே அழைத்துப் பேசினான்.  அதன் பின்னர் சுபா, வினய்யுடன் பேசும் போதெல்லாம் அவளுடனும் பேருக்கு இரண்டு வார்த்தை பேசுவான்.  ஆனால் அவன் பேசாமல் இருந்ததை விட இப்படி அந்நியமாய் பேசுவது தான் அதிகமாய் வலித்தது நித்யாவுக்கு. 

படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வராமல் அங்கேயே வேலை தேடிக் கொண்டான் கவின்.  ரம்யா எவ்வளவு கெஞ்சியும், சுதாகர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் எந்த பலனும் இல்லை.  நித்யாவின் கல்லூரி வாழ்க்கையும் முடிந்தது. என்னதான் முயன்றாலும் அவளால் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.  அதுவும் இப்போது வீட்டிலேயே இருக்க கவின் கவின் என்று மனம் அவன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தது. அவனிடம் போன் பண்ணி சண்டை போடலாம், இந்தியா வரச் சொல்லி கெஞ்சலாம் என அடிக்கடி தோன்றும்.  ஆனால் அவன் தான் அவளை இப்போதெல்லாம் யாரோ போல நடத்துகிறானே, எந்த உரிமையில் அவனுடன் பேசுவது? 

வீட்டில் இருந்தால் தான் மனம் இப்படி அமைதி இல்லாமல் தவிக்கிறது.  எதாவது வேலை தேடிக் கொள்ளலாம்.  வெளியே போய் ஏதாவது பண்ணலாம் என்று நினைத்தவள் வேலை தேடும் முயற்சியில் இறங்கினாள். பல  இடங்களில் விண்ணப்பித்து விட்டு பதிலுக்காய் காத்திருந்தாள் . 

அன்றும் ஒரு Interview, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. ஆனாலும் வேண்டா வெறுப்பாய் கிளம்பிப் போனாள்.  வேலை கிடைத்து விட்டது.  அவளே எதிர்பார்க்காதது தான் ஆனால் உண்மையிலே அவள் வேலைக்கு தேர்வாகி விட்டாள்.  பழைய நித்யாவாய் இருந்திருந்தாள் பெரிய ஆர்ப்பாட்டமே செய்திருப்பாள்.ஆனால் இப்போது துளியும் உற்சாகமோ, சந்தோஷமோ இல்லை .  வேலை கிடைத்து விட்டது என இதே மூஞ்சியோடு வீட்டில் சொன்னாள் எல்லோரும் வித்தியாசமாய் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாய் இருப்பதாய் காட்டிக் கொள்ள வேண்டுமே!! ஒரு Sweet box வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போனாள்.  

இல்லாத உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு வாசலில் இருந்தே அம்மா ... வினய் ... என்று கத்தியபடி உள்ளே நுழைய அவளை விட உற்சாகமாய் அவளுக்காய் காத்திருந்தார்கள் ரம்யாவும் சுபாவும். 

வா நித்தி ... இந்தா Sweet எடுத்துக்கோ ...

அப்படியே நித்யாவை பிடித்து இழுத்து அவளருகில் அமர வைத்து ஊட்டியும் விட்டாள் ரம்யா.  சக்கரையை மென்றபடி நித்யா ஒன்றும் புரியாமல் விழிக்க,

"கவின் வரானாம் " புன்னகையுடன் சொன்னார் சுபா.  ஓஹ் அவளுக்கு சொல்லிக் கொள்ளாமலே கிளம்பியவன் இப்போது அவளிடம் சொல்லாமலே திரும்பி வருகிறான்.  வரட்டும், யார் வந்தாலும் வராவிட்டாலும் அவளுக்கு என்ன?  

மனதில் தோன்றியதை காட்டிக் கொள்ளாமல் வலிந்து புன்னகைத்து விட்டு,

"எனக்கு வேல கெடச்சிடுச்சும்மா ... " லட்டுவை சுபா, ரம்யா, வினய் மூவருக்கும் கொடுத்து விட்டு தன் அறைக்குப் போய் கதவடைத்துக் கொண்டாள். மற்ற பெண்கள் இருவரும் சங்கடமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கவின் நித்யாவை விட மூன்று வயது மூத்தவன். அவள் பிறந்ததிலிருந்து அவனை பார்த்துக் கொண்டு தான் வளர்ந்தாள். அவன் அவள் வாழ்க்கையின் ஒரு அங்கம் இல்லை . அவள் மொத்தமும் அவன் தான்.  இன்று அவளை யாரோ போல நடத்துகிறான்.  அழுகை முட்டிக் கொண்டு வந்தது.  கடைசியாய் கவின் கிளம்பிப் போன அன்று அழுதது. அதற்கு பின்னர் இன்று தான் அழுகிறாள். அழுது தீர்த்து களைத்துப் போனவள் குளியலறைக்குப் போய் முகம் கழுவினாள்.

" உன்ன பாக்காம, உன்னோட பேசாம என்னால இருக்க முடியாது நித்தீ ... " கண்ணாடியில் தெரிந்த கவினை முறைத்து விட்டு வெளியே வந்தாள்.  முகத்தை துவட்டிய படி Dressing table முன்னால் போய் நின்றவள் " வீட்டுக்கு வா, ஒனக்கு இருக்கு " என்றால் கண்ணாடியில் கவினை  பார்த்த படி. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro