Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

10.


கவின் வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.  அவன் வந்தால் அவனுடன் நிறைய சண்டை போட வேண்டும் என யோசித்து வைத்திருந்தவளுக்கு இப்போது அவனை தனியே பார்க்கும் போதெல்லாம் ஏனோ வார்த்தை வர மறுத்தது.  அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்தாலே அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.  இதில் அவன் வேறு எதுவும் பேசாமல் ஏதோ அர்த்தம் புரியாத பார்வை பார்த்து வைப்பான்.  அவளுக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்தே சகஜமாய் தொட்டு பேசுபவன், இப்போது அவன் விரல்கள் கூட படாமல் பார்வையிலே அவனை கட்டிப் போட்டான். இருந்தாலும் தன் முயற்சியை கைவிடாமல் தினமும் பல தடவை அவனை எப்படியெல்லாம் திட்ட வேண்டும் என்று ஒத்திகை பார்த்து விட்டு கவினை தேடி போனாள்.  ஆனால் அவன் பார்வையிலே அவள் மொத்த சக்தியும் வடிந்து போக எதுவும் பேசாமல் திரும்பி வந்து விடுவாள்.

நித்யாவை இப்படி வாட்டி வதைப்பவன் அங்கே தன் அறையில் கூலாக படுத்துக் கொண்டு காலை ஆட்டியபடி பாடல் கேட்டுக் கொண்டிருந்தான் படு உற்சாகமாய். இருக்காதா பின்ன? இந்த இரண்டு நாட்களில் நித்தி அவன் கண்களை சந்திக்க முடியாமல் படும்பாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறானே! வழக்கமாய் வம்பளந்து, பேசி, சிரித்தே பழக்கப்பட்டவள் இப்போது அவன் ஒரு பார்வையில் என்னமோ ஆகிவிடுகிறாள்.  மிரட்சியாய்  கண்களை விரித்து, மூச்சு வாங்கிய படி கன்னம் சிவக்க நின்றிருந்த நித்தியை பார்க்க புதியாய் இருந்தது அவனுக்கு.  அந்தக் கோலத்தில் நிற்கும் அவனுடைய நித்தியை ரசிப்பதில் அவனுக்கு தனிப் பிரியம்.  இதில் வேண்டுமென்றே அவளை சீண்ட அவள் கண்களை ஊடுருவும் ஒரு பார்வை பார்த்து வைப்பான். அப்போது அவள் கன்னங்கள் இன்னும் சிவப்பேறி அவள் பார்வையை தாழ்த்திக் கொள்ள,  அவனுக்குள் எக்கச்சக்கமாய் இரசாயன மாற்றங்கள் நடக்கும்.  

கவின் வந்த முதல் நாள் அவளுடன் கோபம் குறையாமல் தானிருந்தான்.  அவளும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் முறைத்து விட்டு அங்கிருந்து போய் விட்டாள்.  அன்று மாலை கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்க்க, உர்ரென்று முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள் அவனை கடந்து அறைக்குள் வந்தாள்.  சுவர் பக்கமாய் திரும்பி நின்றவள் ஏதேதோ முணுமுணுப்பது கேட்டது.  ஆஹ், அவனுடன் சண்டை போடப் போகிறாள். கவினும் ஆர்வமாய் காத்திருக்க, அவன் பக்கமாய் திரும்பியவள் தரையை பார்த்த படி " இங்க பாரு கவின்!!  " என்று தொடங்கி ஏதோ பெரிதாய் பேசத் தயாரானவள் அவன் கண்களை சந்தித்ததும் அப்படியே நின்று விட்டாள்.  என்ன பேச வந்தோம் என்பதே மறந்து விட்டது.  மூச்சு வாங்கியது .அவள் நிலையை புரிந்து கொண்டவன் இதழோரமய் ஒரு குறும்பு புன்னகை பரவ கன்னங்கள் சூடேறியது அவளுக்கு .  அதற்கு மேல் முடியாமல் அறையிலிருந்து ஓடியே வந்து விட்டாள்.

கடவுளே என்ன கொடுமை இது!!  போயும் போயும் இந்த கவின்!  அவன் பார்வையை சந்திக்க முடியாமல் இப்படி .... அவமானமாய் இருந்தது. தன்னை தானே கேவலமாய் திட்டி விட்டு அன்றே மீண்டும் ஒரு முறை முயல திரும்பவும் அதே போல் தான்.  அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் இதுவே தான் நடந்தது. இப்போதெல்லாம் சண்டை போட வேண்டும் என்பதே மறந்து அவனுடன் இயல்பாய் அவன் முகத்தை பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டால் கூட போதும் என்பது போல் ஆகிவிட்டது நித்யாவின் நிலை.  ஆபீஸ் போனால் கூட எந்த வேலையும் ஓட மறுத்தது.  The great நித்தி கவினை பார்த்து பயப்படுவதா?  இதற்கு அவள் பூமியை பிழந்து கொண்டு உள்ளே போய் விடலாம்.  இன்று பேசியே தீர வேண்டும்.  தீர்க்கமான முடிவுடன் ஆபிஸிலிருந்து கிளம்பினாள்.  

வீட்டுக்கு வந்து Fresh ஆகி உடை மாற்றி விட்டு கண்ணாடியை பார்த்து கவினிடம் என்னென்ன பேச வேண்டும் என்று ஒரு முறை Practice செய்து கொண்டாள்.  சண்டை இல்லை.  சாதாரணமான பேச்சு தான்.  MBA பற்றி அவளுக்கு பதில் தெரிந்த சில கேள்விகள் ... சந்தேகம் கேட்பது போல அவனிடம் கேட்க வேண்டும்.  அவன் பார்வையில் அவள் தடுமாறவேயில்லை என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் அவ்வளவு தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  திரும்பிய போது சுபா தான்.  கையில் காபி கப்புடன் நின்றிருந்தாள்.  மனதில் கவினின் நினைப்பு ஓடிக் கொண்டிருந்ததால் எதுவும் பேசாமல் காபியை வாங்கிக் கொண்டவள் கட்டிலில் போய் அமர, சுபாவும் அருகில் வந்து அமர்ந்தாள்.

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நித்தி ...

சொல்லும்மா.

ஒரு வரண் வந்திருக்கு ...

அதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் " யாருக்கு? " என்றாள்.  ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எங்கோ பார்த்த படி. 

அடுத்த பக்கம் பதில் இல்லாமல் போகவே, சுபா பக்கம் திரும்பி பார்க்க,

யாருக்குன்னு கேக்குற?  ஒனக்கு தான்!!! 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro