அன்பு - 1
நகரமே பரபரப்பை பூசிக்கொண்ட அந்த காலை நேரம்.. சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த சுஜா தன் போக்கில் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு அம்மாவிற்கு கவலைப்பட வேறு என்ன இருக்கும்.. தான் பெற்ற செல்வத்தை தவிர.
அதே தான்.. இங்கும் நடந்து கொண்டிருந்தது.. "கழுதை.. பொழுது விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னும் இது எழுந்துக்கலை.. ஊருல எல்லாரும் புள்ளை பெத்துக்கிட்டாங்கனு நானும் ஒன்னைப் பெத்தேன் பாரு.. இதுக்கு அப்புறம் பொறந்தது கூட எவ்வளவு பொறுப்பா இருக்கு.. இதுல இன்னும் ஒரு வருஷத்துல டிகிரி முடிக்கப் போறாளாமா.. ஏய் எருமை எழுந்துக்கப்போறியா இல்ல.. தோசைக் கரண்டி எடுத்துட்டு வரவா" என தன் போக்கில் கத்தியபடி வேலை செய்து கொண்டிருந்தவர்.
ஏதோ சத்தத்தை உணர்ந்து தன் வேலையை நிறுத்தியவர் வேகமாக வெளியே வந்தார்.. அங்கு அவரை எதிர்பார்த்தபடி நின்றிருந்த 'டுண்டு'விடம் "ஏன்டி நான் பெத்த வானரம் இங்க வந்துச்சா" என கேட்க.. அவள் தன் அருகே நின்றிருந்த 'புஜ்ஜூ'வைப் பார்க்க.. அவன் வெளியே இருந்த மாடிப்படியை நோக்கினாள்.
'அங்க தான் இருக்காளா' என மெதுவாக படிகளின் அருகில் சென்றவர் அவள் காதைப் பிடித்து திருக "ஆ.. ஆ.. அம்மா" என கத்தியவாறே எழுந்தாள் அவரது செல்வ மகள்.
அவள் காதுகளை நன்றாக திருகியவர் "ஏன்டி வயித்துல இருக்கும்போது தான் பத்துமாசம் தாண்டியும் உள்ளவே இருந்து என்னை படுத்தி எடுத்த.. பிறந்த அப்புறமும் இப்படி தினமும் என்னை டென்சன் பன்ற.. நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேன்.. நீ வாயைக் கூட திறக்காம இங்க என்ன பன்ற" என முழு கோவத்துடன் கேட்டார்.
"மா... நீங்க தான் டென்சன் பண்றீங்க என்னை.. பெத்த பொண்ணை வானரம்னு சொல்றீங்க.. ஆனா ஒரு நாயை பட்டு செல்லம்னு கொஞ்சறீங்க.. இது உங்களுக்கே ஓவரா இல்லை" என தன் காதுகளை தேய்த்தவாறே கேட்க
அவளை நோக்கி ஒரு முறைப்பை செலுத்தியவர் "உனக்கு வீட்டில சோறு போடனுமா வேண்டாமா" என்க
டுண்டுவையும், புஜ்ஜூவையும் முறைத்தவாறே "உங்க பையனையும் பொண்ணையும் நான் ஒன்னும் சொல்லலை.. ஆனா தயவுசெய்து சாப்பாட்டுல கை வச்சிடாதீங்க தெய்வமே" என கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
அவள் சேட்டைகளை கண்டு சிரிப்பு எழுந்தாலும்.. தற்போது சிரித்தால் தன்னை ஏய்த்து விடுவாள் என்பதால்.. முகத்தை கடினமாகவே வைத்துக்கொண்டு "போய் இவங்க ரெண்டு பேருக்கும் பால் எடுத்துட்டு வந்து கொடு" என விரட்டினார்.
'ம்ம்.. சங்கடை எடுத்துட்டு வந்து காட்டி விடறேன்' என முணுமுணுத்தவாறே உள்ளே சென்றாள்.. இவர்கள் போட்ட சண்டையில் இன்று காலை காஃபி கிடைக்குமா என்ற யோசனையுடன் நின்றிருந்த டுண்டுவிற்கும், புஜ்ஜூவிற்கும் அப்போது தான் உயிரே வந்தது..
தாயும் மகளும் உள்ளே நுழையும் போது..
குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
என்ற குரல் அவர்களை வரவேற்க சுஜா தன் அருகில் நின்றிருந்த மகளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தார்.. 'தினமும் வாங்குவது தானே.. ஆனாலும் குள்ளச்சி இத்தனை நல்ல பொண்ணா பிறந்திருக்க கூடாது..' என தன் குட்டித் தங்கையை மனதில் திட்டியவாறே அம்மாவின் செல்லங்களுக்கு பால் எடுத்து சென்றாள்.
இவளைக் கண்டவுடன் வாலை ஆட்டியபடி அவள் மேல் உராய்ந்தபடி பாலை சுவைத்தபடி இருந்த இருவரின் கழுத்தை நீவியபடி தன் அம்மாவைப் பற்றி கோள் சொல்லிக்கொண்டிருந்தாள்..
"ஆனாலும் உங்க அம்மா.. ரொம்ப ஓவரா பண்றாங்க.. காலையில் எழுந்த பொண்ணுக்கு ஒரு வாய் காஃபி கொடுக்காம.. காதைப் பிடிச்சு திருகிட்டாங்க.. என்னை மாமியார் கொடுமை பண்றாங்க" என மூக்கை உறிந்தபடி பேசிக்கொண்டே இருந்தவளின் பேச்சை உள்ளே இருந்து பறந்து வந்த தோசைக் கரண்டி நிறுத்த அமைதியாகி விட்டாள்.
முகத்தில் சிரிப்பைத் தேக்கியவாறே கிட்சனில் நுழைந்து அதை அம்மாவின் கைகளில் கொடுக்க.. சுஜா "ஏன்டி ரோஷமுள்ள புள்ளையா இருந்தா இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டிருக்கும்.. ஆனா நீ.. பல்லைக் காட்டிட்டு நிக்கிற" என கடிக்க
அவள் தோளைக் குலுக்கியவாறே "அட என்னம்மா.. அந்த கரண்டியால நீங்க என்னை நாலு அடி வச்சிருந்தா கூட எனக்கு பிரச்சினை இல்லை.. கோவப்பட்டு திட்டினாலும் 3 வேளையும் சோறு போடறீங்க.. கேட்டது வாங்கி கொடுக்கறீங்க.. அப்புறம் எப்படி எனக்கு ரோஷம் வரும்" என்றவாறே அன்னையை கட்டிக்கொள்ள
அவள் சிறுபிள்ளைத் தனமான பேச்சில் மனம் மகிழந்தாலும்.. பெண்ணாக பிறந்தவளுக்கு எச்சரிக்கை உணர்வும் அவசியம் அன்றோ.. என லேசான வருத்தமும் எழுந்தது.
அதை ஒதுக்கியவர் "போடி முதல்ல குளிச்சுட்டு வா.. உனக்கு அப்புறம் பிறந்தவ எவ்வளவு பொறுப்பா காலையில சாமி கும்பிட்டு இருக்கா.. நீயும் இருக்கியே.." என திட்டியவாறே பூஸ்டை அவள் கைகளில் திணித்தார்.
அன்னை கொடுத்ததிலும் இன்னொரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தவள்.. அதைக் குடித்துவிட்டு.. அவர் கன்னத்தில் முத்தமிட்டு வாயை துடைத்துக்கொண்டாள்.. எருமை மாடு என சுஜா தொடங்குவதற்குள் குளிக்க ஓடி விட்டாள்.
குளித்து முடித்த பின்.. நடு வீட்டில் தன் இரண்டு மகள்களும் அம்மா அம்மா என ஏலமிட சுஜா எரிச்சலுடன் வெளியே எட்டிப்பார்த்தார்.. அங்கே இரட்டை ஜடையை பின்னியபடி கைகளில் ரிப்பனோடு சிறிய மகளும்.. தலையை கூட ஒழுங்காக துவட்டாமல் பெரிய மகளும் நின்றனர்.
வேகமாக வந்தவர் பெரியவளின் தலையில் கொட்டி "நீயும் அவளைப் பாத்துகிட்டு தான இருக்க.. அவளுக்கு இருக்கற அறிவுல பாதி உனக்கு இருந்தா கூட எனக்கு நிம்மதியா இருக்கும்" என திட்டி அவளை தலையை வெயிலில் உலர்த்த அனுப்பி வைத்துவிட்டு சிறியவளின் தலையில் ரிப்பன் வைத்து கட்டத் துவங்கினார்.
ரொம்ப நேரமாக அவள் வராமல் இருக்க சுஜா சீப்புடன் வெளியே எட்டிப் பார்க்க.. அவள் 'டுண்டு'வுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.. 'இவளை திருத்த என்னால முடியாது' என நொந்தவர் அவளை இழுத்து பிடித்து தலையை உலர்த்தி பின்னலிட்டார்.
அது முடிந்ததும் மீண்டும் சாப்பிடும் போது ஒரு போராட்டம் துவங்கியது.. அதை சுஜா அமைதிப்படுத்துவதற்குள் ஃபோனின் அழைப்பு தடுத்தது.. அவர்களது தந்தை ரகுராம் அழைத்திருக்க.. போட்டி போட்டபடி இருவரும் பேசியபின் சுஜாவின் கைகளுக்கு அலைபேசி வர.. அவரும் அதை எடுத்துக்கொண்டு சமையல் அறையின் உள்ளே சென்று விட்டார்.
பத்து நிமிட உரையாடலோடு இருவருக்கும் லன்ச் பாக்ஸ் ரெடி செய்து துரத்திவிட்டு தானும் தன் பணிக்கு தயாராக ஆரம்பித்தார்.
சுஜா - ரகுராம் இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. அவர்களின் காதலுக்கு பரிசாக பிறந்தவள் தான் மூத்த பெண் செல்வி.. தன் செல்வ மகளுக்கு குலதெய்வத்தின் பெயரையே ரகுராம் வைத்திருந்தார்.. பின் பதினொரு வருட இடைவெளியில் பிறந்தவள் தான் மதுரண்யா.. இது சுஜாவின் தேர்வு..
ரகுராம் சிவில் என்ஜினியராக இருக்க.. சுஜாவிற்கு அவருக்கு விருப்பமான டெக்ஸ்டைல் பிசினெஸை அமைத்துத் தந்திருந்தார்.. தங்கள் இரு பெண்ணரசிகளின் தேவைக்கும் அதிகமாகவே வருமானம்.. அமைதியான வாழ்வு.. மகள்களோடான பாசம் என தங்களை ஒதுக்கிய சொந்தங்களின் நினைவுகளை உதறிவிட்டு இருவரும் நிம்மதியாக இருக்கின்றனர்.. சொந்தங்களில் பகை, பாசம் என அனைத்திலும் விலகி இருந்தாலும் ரகுராமின் அண்ணன் மட்டும் இவருக்கு துணையாக இருந்து வருகிறார்.
செல்வி நான்காம் வகுப்பு பயிலும் மதுரண்யாவை அவள் பள்ளியில் விட்டுவிட்டு.. அருகில் இருக்கும் தன் கல்லூரிக்குச் சென்றாள்.. செல்வி.. பத்தொன்பது வயது குழந்தை.. படிப்பது மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்.. அனைவரையும் சட்டென நம்பிவிடும் மனம்.. பெரிய நட்பு வட்டம்..
அனைவருக்கும் நல்லவள்.. அம்மாவிற்கு மட்டும் இம்சை.. அப்பாவின் இளவரசி.. தங்கைக்கு எப்போதும் வெட்டியாய் இருக்கும் ராட்சஸி.. இனிப்புக்கு மிகவும் பிடித்தவள்.. பிரியாணி என்று காகிதத்தில் எழுதினாலும் ரசித்து உண்பாள்.. வளர்ப்பு பிராணிகள் மீது தனி பிரியம் உண்டு..
அவளது அழகே.. அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் அவள் குணம் தான்.. மற்றபடி எல்லா கதைகளில் வரும் கதாநாயகியைப் போன்று நமது செல்வியும் அழகி தான்.. ஆனால் மதுரண்யாவை விட சற்று குறைவு தான்.
கல்லூரிக்குள் நுழைந்தவளை அவளது நட்பு வட்டம் இழுத்துக்கொள்ள.. காலையில் இருந்து இனிப்பு சாப்பிடாத குறையை மார்வெல் கேக் சாப்பிட்டு தீர்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து வகுப்பிற்கு சென்றாள்.
பின் மாலை மதுரண்யாவை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.. மீண்டும் இருவரும் சுஜா வரும்வரை அமைதியாக இருந்துவிட்டு அவர் வந்தபின் போர்க்களம் ஆரம்பமாகிவிட.. சுஜாவின் "வீட்டில சாப்படறீங்களா.. எப்படி" என்ற கேள்வி அமைதியாக்கிவிட்டது.
அன்றைய நாளைப் பற்றி பேசியபடியே அன்னையின் மீது கால் போட்டபடி செல்வி உறங்கிப் போக.. சுஜாவிற்குத் தான் தன் மூத்த பெண்ணைப் பற்றிய கவலை எழுந்தது.. இன்னும் சிறுபிள்ளையாகவே இருக்கிறாள் என.
செல்வியின் இத்தகைய அமைதியான தூக்கம் இன்னும் எத்தனை நாட்களுக்கு.. சுஜாவின் பயம் அவசியமானது தானா???
பார்க்கலாம்.......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro