Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8 உண்மையை நோக்கி

8 உண்மையை நோக்கி

அபிநயாவின் முன் நிற்கவே தடுமாறினான் அஸ்வின். தன் கால்கள் செயலிழந்துவிட்டதை போல் உணர்ந்தான் அவன். வீங்கி வெளுத்திருந்த அவளுடைய முகத்திலிருந்து அவன் கண்கள் அகல மறுத்தன.

"அவங்க குடும்பத்தையே நான் அடியோட வெறுக்கிறேன்" என்று அவள் கூறிய வார்த்தைகள், அவன் காதுகளில் எதிரொலித்தன. அதைக் கேட்ட பொழுது, அவனுக்கு தெரியாது, அதை கூறியது அவனுடைய அபிநயா தான் என்பது. இது அநியாயத்தின் உச்சகட்டம். எவனோ செய்த தவறுக்காக இவன் பாதிப்படைக்கிறான்.

அபிநயாவை எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தான் அஸ்வின். ஆனால் இன்று, அவள் எதிரில் நிற்கும் பொழுது பேச்சிழந்து நிற்கிறான். அந்த பெண்ணிற்கோ, அவள் அவனின் மனதை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது பற்றி ஏதும் தெரியாது.

அபிநயா தன் கண்களை துடைத்தபடி உள்ளே ஓடி சென்றதை பார்த்த பொழுது, தன்னை கையாலாகாதவனாக உணர்ந்தான் அஸ்வின்.

அவள் கையைப்பற்றி நிறுத்தி, "உனக்கு நான் இருக்கிறேன்" என்று கூற வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

அங்கிருந்து பரபரவென்று வெளியேறினான். அங்கு இன்னும் ஒரு நொடி கூட தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தனக்கு வாழ்க்கை அளித்த, உயர்ந்த உள்ளம் கொண்ட, தன் சகோதரனின் நிலையைக் கண்டு மனம் உடைந்து போனான் அருண்.

"இல்லை... இது நடக்கக் கூடாது. ஏதாவது செய்து, இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும். விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைப்பது என்பது பாவச்செயல். அதுவும், அஸ்வின் போன்ற ஒரு நல்ல மனிதன் விரும்பும் அந்த பெண்ணுக்கு இந்த நிலை ஏற்படக் கூடாது. என்று நினைத்தபடி, சுபத்ராவிடம் ஏதும் சொல்லிக் கொள்ளாமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அருண்.

அஸ்வின் பில்டர்ஸ் அலுவலகம்

தனது தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தான் மனோஜ். அவன் எதிரில் நின்றிருந்த அருண் தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

"என்னால ஆவினை இந்த நிலையில் பாக்க முடியல. அவன் எங்க போனான்னு தெரியலை. எதுவும் சொல்லாம அபிநயா வீட்டிலிருந்து கிளம்பிப் போயிட்டான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, மனோஜ்." என்றான் அருண் வேதனையுடன்.

இந்த எதிர்பாராத சூழ்நிலை, மனோஜை மௌனமாக்கி இருந்தது.

"அந்த பொண்ணு யாருன்னு தெரியாதப்பவே அவனுக்கு இந்த கல்யாணத்துல உடன்பாடில்ல. இப்போ, அந்த பொண்ணு அபிநயா தான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், அவனுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்? நம்ம ஏதாவது செஞ்சாகணும் மனோஜ்."

"நான் என்ன செய்யணும்னு நினைக்கிற?"

"நம்ம தருணைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும். அவன் அபிநயாவை காதலிக்கிறான்னு சொல்றது சுத்த பொய். அவன் எதுக்காக அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்னு, நம்ம கண்டுபிடிச்சா மட்டும் போதும்."

தனது கைபேசியை வெளியில் எடுத்த மனோஜ், கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.

"கமிஷனர் சார், எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். அது ரொம்ப முக்கியமானது."

"நிச்சயமா செய்யறேன். என்ன விஷயம்னு சொல்லுங்க."

"நான் உங்க ஃபோனுக்கு ஒரு ஃபோன் நம்பரை மெசேஜ் பண்ணி இருக்கேன். அந்த ஃபோனுக்கு சொந்தக்காரன், இப்போ எங்க இருக்கான்னு எனக்கு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்ல முடியுமா?"

"அது என்ன பெரிய விஷயம்? ஒரு மணி நேரத்துல சொல்றேன்."

"தேங்க்யூ சார்."

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"கமிஷனர் மட்டும் அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சி சொல்லட்டும், அவனுக்கு மனோஜ்னா யாருன்னு நான் காட்டுறேன்" என்றான் கோபமாக.

"அவன் மட்டும் எனக்கு வேண்டிய விஷயத்தை சொல்லலன்னா, அவனை நான் கொன்னுடுவேன்" என்றான் அருண்.

"அஸ்வின் வேற எங்க போனான்னு தெரியல. அவன் மனசுல இருக்குறதை வெளியில சொல்லக் கூட மாட்டான்..." என்றான் வேதனையுடன் மனோஜ்.

"அவன் சொல்லணும்னு எந்த அவசியமுமில்ல. அவனுக்கு வேண்டியதை நம்ம செய்யலாம்." என்றான் அருண்.

"என்ன செய்யணும்?"

"இந்த கல்யாணத்தை நிறுத்தி அபிநயாவை அவனுக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்கணும்."

"அது அவ்வளவு சுலபம்னு நினைக்கிறியா நீ?"

"அது சுலபமா இல்லாம இருக்கலாம். ஆனா முடியவே முடியாதுன்னு சொல்ல முடியாது இல்லயா? முயற்சி பண்ணா நிச்சயம் செய்யலாம்."என்றான் அருண்.

"இன்னைக்கு நடந்ததை வச்சி பாக்கும் போது, அபிநயா உங்க குடும்பத்தையே ஒட்டுமொத்தமா வெறுக்கிறாங்கன்னு தெரியுது. அப்புறம் அவங்க அஸ்வினை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதிப்பாங்க?"

"அவங்க எங்க குடும்பத்தை வெறுக்க காரணம், தருணும் எங்க பாட்டியும் தான். அவங்க தருணை கொலை செய்ற அளவுக்கு கோவத்துல இருக்காங்க. இருந்தாலும் அவனை கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அப்படி இருக்கும் போது, அவங்க ஏன் ஆவினை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டாங்க?"

"உங்க பாட்டி?"

"அவங்களை பத்தி யார் கவலை படுறது? எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா, அவங்கள இமயமலைக்கு அனுப்பிடுவேன்" என்றான் சலிப்புடன் அருண்.

"எது செஞ்சாலும் அது அஸ்வினையும், அபிநயாவையும் எந்த விதத்திலும் பாதிக்காம செய்யணும். அதை மறந்துடாதே" என்றான் மனோஜ்.

"ஆமாம்" என்று அவனை ஆமோதித்தான் அருண்.

அஸ்வின், அன்று அஸ்வினாகவே இல்லை. இதற்கு முன், யாருமே அவனை அப்படி பார்த்திருக்க மாட்டார்கள். கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல், காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான், சொல்ல முடியா உணர்வுகள் ஆர்ப்பரிக்க. யாருமில்லா இடத்தில் காரை நிறுத்திவிட்டு, கொட்டும் மழையில் இறங்கி நின்றான்.

புயலடித்துக் கொண்டிருந்த அவன் மனம், பல கேள்விகளை, அவனுள் எழுப்பியது. அவள் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? இல்லாமல் இல்லை... அவள் இருக்கத் தான் போகிறாள்... அவன் வீட்டில்... அவன் தம்பியின் மனைவியாக...! அவள் தருணுடன் வாழும், கொடிய வாழ்வை பார்க்க வேண்டிய துரதிஷ்டம் அவனுக்கு ஏற்பட போகிறது. அது வெறும் தண்டனையாக மட்டும் இருக்கப் போவதில்லை, அது மிகப் பெரிய சாபமாக அவனை வாட்டி வதைக்க போகிறது. இந்த நொடி அவனிடம் யாராவது விஷத்தை கொடுத்தால், அவன் அதை வாங்கி சந்தோஷமாக குடித்து விடுவான். இந்தக் கொடுமையான வாழ்வை எதிர்கொள்வதை விட, அது எவ்வளவோ சுகமானது. எப்படிப்பட்ட வலியையும் கூட பொறுத்துக் கொண்டு விடலாம், ஆனால் இதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை அவனால். அபிநயா இல்லாமல் வாழ முடியாது என்பதை அவன் ஆழமாக உணர்ந்தான். அன்றொரு நாள், அவள் நாய்க்குட்டியை காப்பாற்றிய போது, அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை அவன் மனதில் உதித்தது. அதை எண்ணிய பொழுது, அவனை அறியாமலேயே அவன் முகத்தில் புன்னகை பூத்தது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் கூட, அவளின் புன்னகை, இவன் மனதில் அமைதியை ஏற்படுத்தும் மந்திர வித்தையை செய்யமுடியும் என்றால், நிச்சயம் அவன் அந்தப் புன்னகையை வேறொருவருக்கு தாரைவார்க்க போவதில்லை. அப்படி அவன் செய்வானேயானால், அவன் வாழ்வதில் அர்த்தமே இல்லை.

தருண், அபிநயா... அந்த எண்ணமே அவன் இதயத்தில் அமிலத்தை வார்த்தது. தருண் எந்த பெண்ணையும் தனதாக்கிக் கொள்ள தகுதியற்றவன். நிச்சயமாக அபிநயா போன்ற ஒரு நல்ல பெண்ணை அவன் அடைய கூடாது.

அஸ்வின் தான், நேரடியாகவே அபிநயா சொன்னதை கேட்டானே, அவள் தருணை எவ்வளவு வெறுக்கிறாள் என்று தான் அவள் கூறினாளே. தருணை கொல்ல வேண்டும் என்னும் அளவிற்கு அவள் கோபமாக இருந்தது, அஸ்வினின் இதயத்திற்கு நிம்மதியை அளித்தது.

அபிநயாவின் திருமணத்தில், பாட்டி மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அந்த கல்யாணம் அஸ்வினுடன் நடக்கப் போவதில்லை. தருணை மணக்கப் போகும் பெண், அவள் தான் என்று தெரிந்தபின், எப்படி அவனால் விட்டுவிட முடியும்? யாரோ, அவனுடைய இதயத்தை சிதைத்து விட்டதைப் போல் உணர்ந்தான் அஸ்வின். அவன் தருணையும், அபிநயாவையும் நன்கு அறிந்தவன். எப்படி அவன், தருண் அபிநயாவை மணப்பதை வேடிக்கை பார்க்க முடியும்?

அதே நேரம், "நான் அபிநயாவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்" என்று அவனால் கூற முடியுமா? நிச்சயம் அவனால் முடியும் தான்... ஆனால், அபிநயா அவனை ஏற்றுக் கொள்வாளா? அவள் தான் அவர்களின் குடும்பத்தையே வெறுக்கிறாளே...! பிறகு எப்படி அவள் அவனை மணக்க சம்மதிப்பாள்? அது பற்றி பிறகு பார்க்கலாம். அவள் தருணை வெறுப்பது உண்மை. அப்படி என்றால் அவள் அவனை மணந்து கொள்ள தேவையில்லை. அவளை காக்க, இவன் இருக்கும் போது, அது நிச்சயம் நடக்காது.

மனோஜுக்கு ஃபோன் செய்தான் அஸ்வின். அவனுடைய தொலைபேசி எண், ஒளிர்ந்ததை பார்த்ததும், துள்ளி எழுந்தான் மனோஜ். அவன் கைபேசியியை பிடுங்கி, அதன் ஸ்பீக்கரை ஆன் செய்தான் அருண்.

"அஸ்வின்..." என்று ஆரம்பித்த அவன், மேலும் ஏதும் பேசுவதற்கு முன், அவன் பேச்சை துண்டித்தான் அஸ்வின்.

"எனக்கு தருணை பத்தின எல்லா டீடெயில்ஸும் வேணும். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நீ எந்த ஸோர்ஸை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோ, எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவுவழிச்சுக்கோ, நாளைக்கு காலைல, எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சாகணும். அப்படி இல்லனா, என் முன்னாடி வந்து நின்னுடாத."

மனோஜ் ஏதும் பேசுவதற்கு முன் அழைப்பை துண்டித்தான் அஸ்வின். காரில் அமர்ந்து, என்ஜினை உயிர்பித்து, கியரை மாற்றி கிளம்பினான் அவன்.

மனோஜும், அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் இந்த மாதிரி அஸ்வினை பார்த்ததே இல்ல" என்றான் மனோஜ்.

"விஷயம் அப்படிப்பட்டது" என்றான் அருண்.

"ஆமாம். இதிலிருந்தே தெரியுது, அவன் எந்த அளவுக்கு இந்த விஷயத்தால பாதிக்கப்பட்டிருக்கான்னு."

சற்று நேரத்தில், மனோஜுக்கு கமிஷனரிடம் இருந்து ஃபோன் வந்தது.

"சொல்லுங்க சார்..."

"அவன் சென்னையில தான் இருக்கான். அவன் இருக்குற அட்ரஸை நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன்."

"தேங்க்யூ சார்"

"நான் அவனை அரஸ்ட் பண்ணட்டுமா?"

"வேண்டாம் சார். நீங்க செஞ்ச இந்த உதவியே போதும். நான் அவனை பார்த்துக்கிறேன்."

"ஏதாவது உதவி வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க."

"ஷ்யூர் சார் "

கமிஷனரின் இணைப்பை துண்டித்து விட்டு மற்றொரு எண்ணுக்கு தொடர்பு கொண்டான் மனோஜ்.

"சக்தி, நான் சொல்ற அட்ரஸை எழுதிக்கோ. அங்க இருக்குற ஒரு பையன் எனக்கு வேணும்."

"ஓகே சார்."

"அவனை நம்ம இடத்துக்கு அள்ளிக்கிட்டு வந்திடு."

"நீங்க வர்றதுக்கு முன்னாடி, அவன்கிட்ட இருந்து ஏதாவது விஷயத்தை வாங்கணுமா?"

"ஆமாம். உன்னுடைய பாணியில அவனை கவனிச்சி வை. அஸ்வின் அங்க வரும் போது, நேரத்தை வீணாக்காம, அவன் ஒன்னு விடாம எல்லாத்தையும் துப்பிடணும்."

"செஞ்சுடறேன், சார்"

அஸ்வின் அலுவலகத்தினுள் நுழைவதை மனோஜும் அருணும் கண்டார்கள். அப்போது நேரம் இரவு பத்தரை மணி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

அஸ்வின் தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான். அவன் மதிய உணவு கூட சாப்பிடவில்லை. அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. இன்னும் கூட அவனால் நம்ப முடியவில்லை, தருணை கத்தியால் குத்தியது அபிநயா தான் என்பதை. தருண் அபிநயாவை காதலிக்கிறான் என்ற பொய்யை எண்ணும் போதெல்லாம், அவன் உடல் பற்றி எரிந்தது.

நடந்தவற்றை நிதானமாக யோசிக்க தொடங்கினான். தருணை கத்தியால் குத்திவிட்டு தான், அன்று அவள் அப்படி தலைதெறிக்க ஓடி வந்தாளா? அவள் கையைப் பிடித்து இழுத்ததற்காக அவள் தருணை கத்தியால் குத்தினாள் என்பது உண்மையாக இருக்குமா? எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவள் அல்லவா அவள்? ஏதோ தவறு நடந்திருக்கிறது. தருண், செய்யக் கூடாத ஒன்றை செய்திருக்கிறான். இல்லாவிட்டால் நிச்சயம் அபிநயா அவனை கத்தியால் குத்தியிருக்க மாட்டாள்.

கதவை திறக்கும் சத்தம் கேட்டு, நிமிர்ந்து அமர்ந்தான் அஸ்வின். மனோஜும், அருணும், கதவை தட்டாமல் நுழைந்ததை அவன் பெரிதாக எண்ணவில்லை.

"ஆவின், இந்த கல்யாணம் நிச்சயமா நடக்கக் கூடாது. ஒரு பெண்ணை பலவந்தபடுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறது அநியாயம்." என்ற அருணை அமைதியாய் பார்த்தான் அஸ்வின்.

"நீ என்ன நினைக்கிற?" என்றான் மனோஜ்.

"கையைப் பிடிச்சி இழுத்த சாதாரண விஷயத்துக்காக, அவனை அபிநயா கத்தியால குத்தியிருப்பான்னு நான் நம்பல. அவ ப்ளூகிராஸ் மெம்பெர். ஒரு நாய்க்குட்டி கூட அடிபட கூடாதுன்னு நினைக்கிறவ. இந்த சின்ன விஷயத்துக்காக, கொலை பண்ற அளவுக்கு அவ போயிருப்பான்னு நான் நினைக்கல."

"உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியணுமா?" என்றான் மனோஜ்.

"கண்டிப்பா எனக்கு தெரிஞ்சாகணும்."

"சரி வா, போகலாம்"

"எங்க?"

"உண்மைய தெரிஞ்சுக்க"

மனோஜ், அஸ்வினையும், அருணையும் புறசென்னையில் இருக்கும், தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். இந்த இடம் அவர்களுக்குக்கு மிகவும் பரிச்சயமானது தான். அது அவர்களுடைய குடோன். அவர்களுடைய ஆட்கள் அங்கு நின்றிருந்தார்கள். தன்னுடைய தற்காப்புக்காக சிலரை வைத்திருந்தான் அஸ்வின். அவர்கள் அவனுக்காக எதையும் செய்ய கூடியவர்கள்.

அங்கு ஒருவன், நாற்காலியுடன் பிணைக்கப்பட்டு, அமர வைக்கப்பட்டிருந்தான். அவனை யாரோ நன்றாக உதைத்திருக்கிறார்கள் என்பது, அவன் முகத்திலிருந்த ரத்தக் காயங்களை பார்க்கும் போதே புரிந்தது. அஸ்வினுக்கு அதிர்ச்சி அளித்தது என்னவென்றால், அவன் தருணின் நண்பன் கண்ணன்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro