6 காலக்கெடு
6 காலக்கெடு
அபிநயா என்ற பெயரைக் கேட்டவுடன், தடுமாறி போனான் அஸ்வின். இதற்கு முன், அவன் எப்போதும், எதற்காகவும், இப்படி கலவரப்பட்டதில்லை. அவன் முகம், குப்பென்று வியர்த்துப் போனது. தருண் சொன்ன அபிநயா, அவனுடைய அபிநயாவாக இருந்து விடுவாளோ? ஒரு நிமிடம் நிதானமாய் சந்தித்தவன், இல்லை, அந்தப் பெண், அவனுடைய அபிநயாவாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிறிய நாய்க்குட்டியின் துன்பத்தை கூட பொறுக்க மாட்டாதவள், அவனுடைய அபிநயா. கையை பிடித்து இழுத்ததற்காக, அவள் நிச்சயம் ஒருவனை கத்தியால் குத்தும் அளவிற்கு சென்றிருக்க மாட்டாள். அவள் தான் நீல சிலுவை சங்கத்தை சேர்ந்தவளாயிற்றே. தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் அஸ்வின்.
ஆனால், அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவன் ஒருவனால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறான் என்பது. அபிநயா என்ற பெயரைக் கேட்டவுடன், அஸ்வினின் முகம் மாறிப் போனதை கவனித்தான் அருண். அவன் எதற்காகவும் இப்படி பீதி அடைந்து அவன் பார்த்ததில்லை. அவன் முகத்தில் தோன்றிய வியர்வை முத்துக்கள் கூறின, அவன் எவ்வளவு பதட்டத்துடன் இருக்கிறான் என்பதை. அவனுடைய பதட்டம் அருணையும் தொற்றிக் கொண்டது. தருண் கூறிய பெண், அதே அபிநயாவாக இருக்க வாய்ப்புள்ளதா என்று எண்ணினான் அருண். அங்கிருந்து சத்தமின்றி நழுவிச் சென்றான் அருண்.
மனோஜ்க்கு ஃபோன் செய்து விஷயத்தை கூற, அவனும் பதட்டம் அடைந்தான்.
"தயவுசெஞ்சி, ரெண்டு பேரும் ஒன்னு தானான்னு கொஞ்சம் சீக்கிரமா செக் பண்ணி சொல்லு, மனோ" என்றான் அருண்.
"ஆமாம். நம்ம ரோஷனுக்காக வெயிட் பண்ணகூடாது."
"நம்ம ஏன் ப்ளூ கிராஸ் சொசைட்டியை, அப்ரோச் பண்ண கூடாது? நமக்கு அங்கயிருந்து ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்கலாம் இல்லயா?"
"ஆமாம். அது நல்ல ஐடியா. நான் அதை உடனே செய்யறேன்." என்றான் மனோ.
அவர்கள் அழைப்பை துண்டித்தர்கள்.
திருவான்மியூர்
நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விடாமல் அழுதுகொண்டே இருந்தார். மற்றொரு பெண்மணி அவர் பக்கத்தில் அமர்ந்து, அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.
"அழுகயை நிறுத்து பத்மா. நீயே இப்படி அழுதுகிட்டிருந்தா, அவளை யாரு சமாதானப்படுத்துறது?"
"என் பொண்ணு, இப்படி கொலை பண்ணிட்டு வந்து நிப்பான்னு, நான் கனவுல கூட நினைச்சதில்ல கா..." பத்மா தன் அழுகையின் இடையில் கூறினார்.
"அவ, வேற என்ன செஞ்சிருக்கணும்னு நினைக்கிற நீ? அவ அவனைக் கொல்லாம இருந்திருந்தா, அவன் அவளுடைய வாழ்க்கையை நாசம் பண்ணி இருப்பான். அவளுடைய இடத்துல நீயே இருந்தாலும், இதைத் தான் செய்வ" என்றார் காட்டமாக பத்மாவின் நாத்தனார், மங்கை.
"அந்த பார்ட்டிக்கு போக மாட்டேன்னு சொன்னவளை, நான் தான், கட்டாயப்படுத்தி அனுப்பிவச்சி, அவளுடைய வாழ்க்கையை கெடுத்துட்டேன். இதெல்லாம் என்னால தான்"
"இங்க பாரு பத்மா, நடந்தது என்னவோ நடந்து போச்சு. இனிமே அதைப் பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. இனிமேல் நடக்கப் போறத பத்தி யோசிக்கலாம்."
"என்னால எதுவுமே யோசிக்க முடியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு."
"நான் அவளை பாண்டிச்சேரிக்கு கூட்டிகிட்டு போறேன். நீ என்ன சொல்ற?"
அந்த நேரம், அவர்களின் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்த மங்கை, யாரோ தெரியாத ஒரு பெண்மணி, முகத்தில் எந்த ஒரு சலனமும் இன்றி நிற்பதைப் பார்த்து முகம் சுளித்தார்.
"வணக்கம்" என்றார் அந்தப் பெண்மணி.
"வணக்கம். மன்னிக்கணும், எனக்கு நீங்க யாருன்னு தெரியல."
"ஏன்னா, இதுக்கு முன்னாடி நம்ம சந்திச்சதில்ல" என்றார் அந்தப் பெண்மணி.
"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"
"நம்ம உள்ள போயி பேசலாமா?"
"உள்ள வாங்க" என்றார் மங்கை.
அவரை அமர சொல்வதற்கு முன், அந்தப் பெண்மணியின் அடுத்த வார்த்தைகளை கேட்டு கொதித்தெழுந்தார், மங்கை,
"நான் தருணுடைய பாட்டி" என்று அவர் கூறியதைக் கேட்டு.
"என்னது...? நீங்க அந்தப் பொறுக்கியோட பாட்டியா?" என்றார் எரிச்சலுடன்.
"வார்த்தையை யோசிச்சி பேசுங்க." என்றார் சுபத்ரா.
"நான் யோசிச்சி தான் பேசறேன். இல்லன்னா, இதை விட மோசமான வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்திருக்கும். ஏன்னா உங்க பேரன் அப்படிப்பட்டவன் தான். எவ்வளவு தைரியம் இருந்தா, அவன் எங்க வீட்டு பொண்ணு மேல கை வைச்சிருப்பான்?" என்று சீறினார் மங்கை.
அவர்கள் சத்தத்தைக் கேட்டு அபிநயாவும், பத்மாவும் வெளியே ஓடி வந்தார்கள்.
"உண்மைய சொல்லப் போனா, நான் தான் உங்க மேல கோவப்படணும். உங்க வீட்டு பொண்ணு, என் பேரனை கொல்ல பார்த்திருக்கா." அதை அபிநயாவை பார்த்தபடி கோபத்துடன் கூறினார்.
"ஏன்னா, அவன் வாழவே தகுதி இல்லாதவன்" என்றார் மங்கை மேலும் கோபத்துடன்.
"ஆனா, அவன் உயிரோட தான் இருக்கான். உங்க வீட்டு பொண்ணு அவனை தப்பா நினைச்சிகிட்டிருக்கா. அவன் செஞ்சது சரின்னு நான் சொல்ல வரல்ல. ஆனா எல்லா நாணயத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கு."
"எந்த பக்கத்தை பத்தி பேசுறீங்க?" என்றாள் அபிநயா கொந்தளிப்புடன்.
"அவன் உன்னை காதலிக்கிறான்..."
"என்னது..? காதலா? அந்த வார்த்தைக்கு, உங்க பேரனுக்கு அர்த்தம் தெரியுமா? ஒரு பெண்ணை மானபங்க படுத்த பாக்குறதுக்கு பேர் தான் காதலா? அவன் என்னை, குளோரோபாம் கொடுத்து மயக்க பார்த்தான். அது தெரியுமா உங்களுக்கு?"
இதைக் கேட்டு அதிர்ந்து போனார், சுபத்ரா. இது அவர் எதிர்பாராத, நாணயத்தின் அடுத்த பக்கம். உண்மையிலேயே தருண் அப்படி செய்தானா? அவர் தடுமாறித் தான் போனார். ஆனால் இப்பொழுது பின்வாங்க முடியாது. ஏன்றால், தருண் ஸ்ருதியை காதலிக்கிறான். ஒரு வேலை தருண், இவள் சொன்னதை, காதல் மிகுதியால் செய்திருக்கலாம். அவனும் சின்னப்பிள்ளை தானே? தன்னால் அபிநயா இல்லாமல் வாழ முடியாது என்று அவன் கூறவில்லையா? என்று தாறுமாறாக நினைத்தார் சுபத்ரா. தருணின் மீதுள்ள அன்பால், அவர் குருடாகிப் போனார்.
"ஏன் அமைதியா இருக்கீங்க? என்ன ஆச்சு? நாணயத்தோட மறுபக்கத்தை தாங்க முடியலயா?" என்றாள் அபிநயா.
"அவன் கையில குளோரோஃபார்ம் இருந்ததை பார்த்து, நீ அவனை தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். அவன் செஞ்சது தப்பு இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா, எல்லாத்துக்கும் மேல, அவன் உன்னை காதலிக்கிறான். அது தான் எனக்கு ரொம்ப முக்கியம்."
"அதனால?" என்றாள் முகத்தை சுருக்கி அபிநயா.
"அதனால, உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்."
அதைக் கேட்டு மூன்று பெண்மணிகளும் அதிர்ச்சியானார்கள்.
"என்னது...? கல்யாணமா...? அந்த பொறுக்கியோடவா? நிச்சயம் நடக்காது." என்று தீர்க்கமாக கூறினாள் அபிநயா.
"அப்படின்னா, அவனை கொலை செய்ய பார்த்த குற்றத்துக்காக ஜெயிலுக்கு போக தயாரா இரு."
என்ன பெண் இவள்? என்றானது அவர்களுக்கு.
"மிரட்டுறீங்களா?" என்றார்? மங்கை.
"என்ன வேணா நெனச்சுக்கோங்க. இது தான் என்னுடைய முடிவான முடிவு. உங்களுக்கு நான் இருபத்தி நாலு மணி நேரம் கொடுக்குறேன். ஜெயிலா, கல்யாணமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க."
"உங்க பேரன் என்னை கெடுக்க பாத்தான்னு, நான் அவன் மேல கேஸ் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?" என்றாள் அபிநயா காட்டமாக.
"பண்ணி தான் பாரேன். அதை எப்படி சந்திக்கிறதுன்னு, எங்களுக்கு நல்லாவே தெரியும். தருணுடைய அண்ணன், யாருன்னு உனக்கு தெரியுமா? அஸ்வின்னா யாருன்னு விசாரிச்சு பாரு. அவனுடைய பவர், செல்வாக்கு என்னன்னு நீ தெரிஞ்சுக்குவ. இந்த கேசை ஒண்ணுமே இல்லாம அவனால செய்யமுடியும். இந்த கேசை எடுத்துக்கிட்டு நீ கோர்ட்டுக்கு போனா, உனக்கு தான் நஷ்டம். எனக்கு தெரியும், நான் உங்ககிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது தான். ஆனா, என் பேரன்களுடையை சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, தருண் மாறிடுவான்னு நான் நம்புறேன். ஏன்னா அவன் உன்னை அந்த அளவுக்கு நேசிக்கிறான்.( பத்மாவையும் மங்கையையும் பார்த்தபடி) அவளுக்கு சொல்லி புரிய வைங்க. நல்லது கெட்டதையும், அதோட விளைவுகளையும், எடுத்துச் சொல்ல வேண்டியது உங்களுடைய கடமை இல்லயா? வயசு பொண்ணு, ஜெயிலுக்கு போனா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உங்களுக்கு முடிவெடுக்க இருபத்தி நாலு மணி நேரம் இருக்கு. நல்ல முடிவா சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன்."
அவர்களின் அதிர்ச்சி நிரம்பிய முகத்தை பார்த்து, திருப்தியுடன் அங்கிருந்து சென்றார் சுபத்ரா.
மற்ற இருவரின் முகத்தை பார்த்து தொப்பென்று அமர்ந்தாள் அபிநயா. அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால், அவர்களை சொல்லியும் தவறில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்?
சிட்டி மருத்துவமனை
சுபத்ரா, தருணுக்கு பழச்சாறை ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அஸ்வினும், அருணும் அங்கு வந்தார்கள்.
"எப்படி இருக்க?" என்றான் அஸ்வின்.
"இப்ப கொஞ்சம் தேவலாம்" என்றான் தருண்.
"என்னை எதுக்கு வர சொன்னிங்க, பாட்டி?" என்றான் அஸ்வின்.
வெளியில் சென்று பேசலாம், என்று கண்ணால் ஜாடை காட்டி விட்டு வெளியே வந்தார் சுபத்ரா. அஸ்வினும், அருணும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
"ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் உன்னை வர சொன்னேன்."
"சொல்லுங்க."
"நான் இன்னைக்கு அந்த பொண்ண பார்க்க போயிருந்தேன்."
"எந்த பொண்ணு?" என்றான் அருண்.
"தருணை கத்தியால குத்தினாளே, அவளைத் தான்."
"ஓ..." என்றான் அஸ்வின் எந்த உணர்ச்சியும் இன்றி.
"இதுல புதுசா என்ன இருக்கு? அவன் தப்பு செய்யும் போதெல்லாம், நீங்க அவனை காப்பாத்த தானே செய்றீங்க? இந்த முறையும், அந்த பொண்ணு, அவன் மேல எந்த கேசும் கொடுக்கக் கூடாதுன்னு, போயிட்டு வந்திருப்பீங்க." என்றான் அருண் அலுப்புடன்.
"இல்ல. அவங்களுக்கு நான் அவகாசம் கொடுத்துட்டு வந்திருக்கேன்."
"என்ன சொல்றீங்க?" என்றான் அஸ்வின்.
"நான் அந்தப் பெண்ணை தருணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்க போயிருந்தேன்."
"என்னது.....?" என்றான் அதிர்ச்சியுடன் அஸ்வின்.
"தருண் அவளை ரொம்ப காதலிக்கிறான். அவன் எப்படி அழுதான்னு நீங்க தான் பாத்தீங்களே..."
"அவங்க ஒத்துக்கிட்டாங்களா?" என்றான் அருண்.
"இல்ல. அதனால தான் நான் 24 மணிநேரதை டெட்லைனா குடுத்து, எது வேணும்னு தேர்வு செய்ய சொல்லி இருக்கேன்."
"தேர்வா? என்ன தேர்வு செய்ய சொல்லி இருக்கீங்க?"
"கல்யாணமா, இல்ல ஜெயிலான்னு."
"உங்களுக்கு என்ன..."
"பைத்தியமா பிடிச்சு இருக்கு?" என்று கேட்காமல், பல்லை கடித்து மென்று முழுங்கினான் அஸ்வின்.
"எனக்கு வேற வழியில்ல, அஸ்வின்."
"உங்களுக்கு என்ன புத்தி தடுமாறி போச்சா?" என்று சீறினான் அருண்.
"நாக்கை அடக்கு அருண்..." என்று அவனை கண்டித்தார் சுபத்ரா.
"முடியாது... எல்லாதுக்கும் ஒரு எல்லை இருக்கு. தருணை அடியோடு வெறுக்குர ஒரு பொண்ணுக்கு நீங்க எப்படி இதைச் செய்யலாம்?"
"அவன் அவளை காதலிக்கிறான்."
"ஆனா, அந்த பொண்ணு, அவனை கத்தியால் குத்தியிருக்கா. அந்த பொண்ணு எந்த அளவுக்கு அவனை வெறுக்கிறான்னு கூடவா உங்களால புரிஞ்சுக்க முடியல?" என்று கத்தினான் அருண், முழுவதுமாய் பொறுமை இழந்தவனாய்.
"கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாயிடும்" என்றார் சர்வ சாதாரணமாக.
"ஓ அப்படியா...?" என்று எகத்தாளமாய் கேட்டான் அருண்.
"அவங்கள பாத்தா, ரொம்ப கட்டுப்பெட்டியான குடும்பம்னு தெரியுது. எதிர்காலத்துல, அவ அவனை முழுமனசோட ஏத்துக்குவா."
"இது அநியாயம். கொஞ்சம் கூட விருப்பமே இல்லாத ஒரு பெண்ணை, கட்டாயப்படுத்தி, மிரட்டி, கல்யாணம் பண்ணி வைக்கிறது அநியாயம்." என்றான் அருண்.
சுபத்ரா பதிலளிக்காமல் அமைதியாய் நின்றார். அவரையே வைத்த கண் வாங்காமல், பார்த்துக் கொண்டிருந்த, அஸ்வின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. அவன் முகத்தில், அவருக்குத் தெரிந்ததெல்லாம், வெறுப்பும் அருவருப்பும் தான். தன்னுடைய மரியாதையை முழுவதுமாக இழந்து விட்டதை உணர்ந்தார் சுபத்ரா.
"நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க, அஸ்வின்?"
"பிரயோஜனமே இல்லன்னு தெரிஞ்சதுக்கப்புறம், உங்ககிட்ட பேசி, என்னோட நேரத்தை வீணாக்க, நான் தயாரா இல்ல. எதுவுமே புரியாம தப்பு செய்றவங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியும். உங்களுக்கே நல்லா தெரியும், நீங்க செய்யறது அப்பட்டமான தப்புன்னு. இருந்தாலும், உங்க பேரனுக்காக இதை நீங்க செய்யுறீங்க. செய்யுங்க... ஆனா, நீங்க நிச்சயம் ஒரு நாள் வருத்தப்படுவீங்க."
கோபம் கொப்பளிக்க அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அஸ்வின். சுபத்ராவின் மீது ஒரு கோப பார்வையை வீசிவிட்டு, அவனை பின்தொடர்ந்தான் அருண்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro