54 முடிவு
54 முடிவு
மறுநாள்
அஸ்வின் பில்டர்ஸ் அலுவலகம்
அலுவலகத்தில், அருணையும் மனோஜயும் காணாமல் குழம்பினான் அஸ்வின். மேலும், அவன் எத்தனை முறை ஃபோன் செய்த போதும், அசிஸ்டன்ட் கமிஷனர் நௌஷாத் அவனுடைய அழைப்பை ஏற்காதது அவனுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அவன் கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.
"அஸ்வின் பேசறேன், சார்"
"சொல்லுங்க அஸ்வின்"
"நௌஷாத் எங்க போனாரு? அவர் ஏன் என்னுடைய காலை அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறார்?"
"நௌஷாத் இந்தியாவுல இல்ல. அவருடைய பிரதருக்கு நேத்து ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவரை பாக்க அவர் நேத்து நைட் சிங்கப்பூர் கிளம்பி போயிட்டார்."
"அதை ஏன் நீங்க என்கிட்டே முன்னாடியே சொல்லல?"
"ஏன்னா, நீங்க அவர்கிட்ட கொடுத்திருந்த வேலையை அவர் முடிச்சிட்டார்."
"ஆனா, எனக்கு இன்னும் தருணுடைய பாடி கிடைக்கலை"
"பாடியா? நீங்க என்ன சொல்றீங்க...? நீங்க தருணை உயிரோட அருண்கிட்ட ஒப்படைக்க சொன்னதா நௌஷாத் சொன்னாரே."
ஒரு நிமிடம் திகைத்து நின்றான் அஸ்வின்.
"அருணா?"
"ஆமாம் சார், அருணும், மனோஜும் அவனை அவங்களோட கூட்டிக்கிட்டு போனாங்களே"
"எப்ப கூட்டிட்டு போனாங்க?" என்றான் அதிர்ச்சியாக.
"நேத்து நைட். என்ன ஆச்சு அஸ்வின், ஏதாவது பிரச்சனையா?"
"இல்ல சார்... ஒரு பிரச்சனையும் இல்ல. நான் பாத்துக்குறேன்."
"ஓகே அஸ்வின். ஹாவ் எ குட் டே"
"தேங்க்யூ சார்"
அஸ்வின், அழைப்பைத் துண்டித்து கொண்டான். என்ன நடக்கிறது என்பது அவனுக்கு புரியவில்லை. அருணுக்கும், மனோஜுக்கும், தருணை பற்றி எப்படி தெரிந்தது? விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று அவன் தான் எச்சரிக்கையுடன் இருந்தானே? அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் மோப்பம் பிடித்தார்கள்...? எதற்காக அவர்கள் தருணை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்...? அவனை எங்கே கொண்டு சென்றார்கள்?
தன்னுடைய கைபேசியில் இருந்து அவன் மனோஜுக்கு ஃபோன் செய்தான். அவனுடைய ஃபோன் பிஸியாக இருந்தது. அவன் அருணுக்கு ஃபோன் செய்ய, அவனுடைய ஃபோனும் பிஸியாக இருந்தது. அவர்களே தன்னை அழைப்பார்கள் என்று சிறிது நேரம் காத்திருந்தான். ஆனால் அவர்களிடமிருந்து அவனுக்கு அழைப்பு வரவில்லை. ஒரு வேலை அவர்கள், ஒருவர் மற்றவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ...? இல்லாவிட்டால்.... ஒருவேளை அவனுடைய நம்பரை பிளாக் செய்துவிட்டார்களோ...?
தன் அறையை விட்டு வெளியே வந்தான் அஸ்வின். அங்கிருந்த வாட்ச்மேனை அழைத்தான். அஸ்வின் அழைத்ததால், அவர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
"உங்க ஃபோனை கொஞ்சம் குடுங்க"
அதைக் கேட்ட அந்த காவலாளியின் விழிகள், அதிர்ச்சியில் விரிந்தது.
"இது ரொம்ப சாதாரண ஃபோன் சார்" என்றார் ஃபோனை பாக்கெட்டில் இருந்து எடுத்தபடி.
"பேசினா, அந்தப் பக்கம் இருகுறவங்களுக்கு கேட்கும் இல்ல?" என்றான் அஸ்வின்.
"கேக்கும் சார்"
"குடுங்க" என்றான்
தனது ஃபோனை அஸ்வினிடம் கொடுத்து விட்டு, அவர் சற்று தூரமாய் சென்றார்.
அருணின் நம்பருக்கு கால் செய்தான் அஸ்வின். அது யாரென்று தெரியாததால் அந்த அழைப்பை ஏற்றான் அருண்.
"யார் பேசுறீங்க?" என்றான் அருண்
"அஸ்வின்" என்றான் அஸ்வின்.
பல்லை இறுக்க கடித்து, கண்களை மூடிக் கொண்டான் அருண். அவன் அருகில் நின்றிருந்த மனோஜ், அவன் தோளை குலுக்கி,
"என்ன ஆச்சி?" என்றான்.
"ஆவின்...." என்றான் ஃபோனின் ஒரு முனையை மூடிக்கொண்டு.
பேசு என்று சைகை செய்தான் மனோஜ். ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான் அருண்.
"ஹாய், ஆவின், உன் நம்பரை எப்ப மாத்தின?" என்றான் சகஜமாக.
"நீ எங்க இருக்க?"
"இங்க தான், ஆவின்..."
"இங்கன்னா எங்க?"
அருண் மனோஜை பார்க்க, சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சைகை செய்தான் மனோஜ்.
"சினிமா பாத்துகிட்டு இருக்கோம்" என்றான் அருண்
"சினிமாவா? எப்போதிலிருந்து ஆஃபீஸ் ஹவர்ஸ்ல நீ சினிமா பாக்க ஆரம்பிச்ச?"
"இது ரொம்ப நல்ல படம் பா..."
"இன்னும் அரை மணி நேரத்துல, நீ மனோஜோட என் முன்னாடி இருக்கணும். புரிஞ்சுதா?" என்றான் தீர்க்கமாக.
"எஸ் ஆவின்" என்றான் மெல்லிய குரலில்.
அழைப்பைத் துண்டித்துவிட்டு, அந்த காவலாளியிடம் ஃபோனை கொடுத்துவிட்டு தன் அறைக்குச் சென்றான் அஸ்வின். அருணும், மனோஜும் திறமைசாலிகள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவர்கள், அவன் நினைத்ததை விட திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
அஸ்வின் கூறியபடி அரைமணி நேரத்தில், அருணும், மனோஜும் அவன் முன் வந்து நின்றார்கள். தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி, தன் கையிலிருந்த பேனாவை சுழற்றினான் அஸ்வின். அவனை பார்த்து இருவரும் அசடு வழிந்தார்கள்.
"தருண் எங்க?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அஸ்வின்.
அருணும், மனோஜும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள்.
"நான் கேட்டது காதுல விழலயா?"
"அதை விடு ஆவின். நீ அவனைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல" என்றான் அருண்.
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"உன்னை பொறுத்தவரை, அவன் செத்துட்டான். அவ்வளவு தான்"
"அருண், இது விளையாட்டில்ல" என்றான் அஸ்வின் பல்லைக் கடித்தபடி.
"அதனால தான் நாங்க இதை கையில் எடுத்துக்கிட்டோம். அவன் அவ்வளவு சுலபமா செத்துடக் கூடாது." என்றான் அருண் கோபமாக.
"அவன் ஏற்கனவே சித்திரவதையை அனுபவிச்சிடான்" என்றான் அஸ்வின்
"அது அவனுக்கு பத்தாது"
"சொல்றத கேளு"
"முடியாது ஆவின்... நான் என்னைக்குமே உன்னை மீறி பேசினது இல்ல. இதுக்கு அப்புறமும் நான் அப்படியே இருக்க ஆசைப்படுறேன். தயவுசெய்து என்னை உன் பேச்சை மீற வச்சிடாதே"
அஸ்வின் மென்று முழுங்கினான். அவனுடைய பார்வை, அருணின் பக்கத்தில் நின்றிருந்த மனோஜின் மீது விழுந்தது.
"நீ... அவனோட பார்ட்னர் இன் க்ரைமா?" என்றான் அஸ்வின்.
"ஆமாம்... என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்காக அதை செய்ய நான் தயங்க மாட்டேன்... அதுக்கும் மேல, நியாயம்னு ஒன்னு இருக்கு... அதை செய்ய நான் எப்பவும் தயங்கவே மாட்டேன்"
"நீ தருணுக்காக வருத்தப்பட வேண்டாம், ஆவின்"
"நான் அவனுக்காக வருத்தப்படல. ஆனா உனக்காக படுறேன்" என்றான் அஸ்வின்.
"தேவையில்ல... அவனை அவ்வளவு சீக்கிரமா இந்த உலகத்தில் இருந்து அனுப்ப நான் விரும்பல. அவனுக்கு இன்னும் தண்டனை கிடைக்கணும். (என்ற பொழுது அவன் தொண்டை அடைத்தது.) அவன்... அவன் செஞ்சதை செய்யுறதுக்கு யாருக்குமே துணிச்சல் வராது... எப்படி அவன் அப்படி செய்யலாம்? எங்க அம்மாவுடைய பேரையே அவன் கெடுத்துட்டான், ஆவின். அவங்களுடைய வளர்ப்பை கேள்விக்குறியாக்கிட்டான்... என்னால அதை பொறுத்துக்கவே முடியல. எங்க அம்மா உயிரோட இருந்திருந்தா, அவனை மன்னிச்சிருக்கவே மாட்டாங்க. தயவுசெய்து புரிஞ்சுக்கோ. நீ அவனை மறந்துடு" என்றான் அருண் விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
"நீ, அவனை என்ன செய்யப் போற?" என்றான் அஸ்வின்
"ஒன்னும் இல்ல"
"அப்படின்னா?"
"யாருமில்லாத ஒரு இடத்தில அவனை விட போறேன். அவன் கொஞ்ச கொஞ்சமா சாகட்டும்"
"அவன் நிறைய காயப்பட்டிருக்கான்"
"அதனால தான் மேற்கொண்டு அவனை நான் காயப்படுத்த நினைக்கல. வலின்னா என்னன்னு அவனுக்கு தெரியணும். ஒவ்வொரு நிமிஷமும், செத்து செத்து பிழைக்கிறது எப்படிபட்ட அவஸ்தைன்னு அவன் உணரணும். அவன மாதிரி மிருகத்துக்கு உணர்வே கிடையாது. வலின்னா என்னன்னு அவன் இதயத்தால உணர மாட்டான். அதனால தான், உடல் மூலமா அவனுக்கு அந்த வலியை உணர்தணும். அவனை அதை அனுபவிக்க விடு. வா மனோஜ் போகலாம்." என்று மனோஜின் கையைப் பிடித்து தன்னுடன் இழுத்துச் சென்றான் அருண். அஸ்வினோ பேச்சிழந்து நின்றான்.
அஸ்வின் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அருண், அவன் குற்ற உணர்ச்சியில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டான். அஸ்வினை அப்படி விட்டுவிட அவனுக்கு மனமில்லை. அஸ்வினால் தருண் இறந்தால், அந்த எண்ணம், அஸ்வினை வாழ்நாள் முழுக்க துரத்திக் கொண்டே இருக்கும் என்பதை அருண் அறிவான். அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து அஸ்வினை காக்க நினைத்தான் அருண். அதனால் உடனடியாக சக்திக்கு ஃபோன் செய்தான். அஸ்வின், தருணை தன்னிடம் ஒப்படைக்க சொன்னதாக பொய் கூறினான். சக்திக்கு அவன் மீது சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு தெரியும், அந்த விஷயத்தை அஸ்வின் எவ்வளவு ரகசியமாக வைத்திருந்தான் என்று. அஸ்வின் கூறாமல் அந்த விஷயத்தைப் பற்றி அருணுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை என்று நம்பினான் சக்தி.
அதன் பிறகு மனோஜிடம் விஷயத்தை கூறி, அவனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டான் அருண். சென்னையை விட்டு வெகு தொலைவில் இருந்த பண்ணை வீட்டில் தருணை வைத்துவிட்டு, தங்கள் இல்லத்திற்கு வந்து அமைதியாய் படுத்துக் கொண்டார்கள்.
அருண் நினைத்தது போலவே அஸ்வினின் இதயம் லேசானது. தருணுடைய மரணம், அவனால் ஏற்படப் போவதில்லை அல்லவா...? அருணும் அவன் பக்க நியாயத்தை புரிந்து கொண்டுவிட்டான். இரட்டைப் பிறவிகளாக இருந்த போதிலும், அருணுக்கும் தருணுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்...! அதற்கு மேல், வேலை செய்ய மனமின்றி வீட்டிற்கு திரும்பிச் சென்றான் அஸ்வின்.
அஸ்வின் இல்லம்
வெகு விரைவாக வீட்டிற்கு வந்துவிட்ட அஸ்வினை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் அபிநயா.
"என்ன அதிசயம், நீங்க இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க...!"
"ஆமாம், என்னால உன்னை பாக்காம இருக்க முடியல... " என்று சிரித்தான் அஸ்வின்.
"எதுக்கு இந்த பில்டப்?"
"என்ன பண்றது? என் பொண்டாட்டியுடைய கவனத்தை என் பக்கம் திருப்ப, இதெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கு..." என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
"எப்படி, இப்படி அப்பாவி மாதிரி மூஞ்சிய மாத்தி பேசுறீங்க?"
"நான் அப்பாவி மாதிரியா இருக்கேன்?" என்று சிரித்தான் அஸ்வின்.
"சந்தேகமா இருந்தா கண்ணாடியை பாருங்க"
"எனக்கு, ஒரு டெரர் தான் தெரியறான்"
"பாரு... மறுபடியும் பில்டப்... இப்போ நான் சொல்லணும், இல்ல அஸ்வின், நீங்க ரொம்ப ஹான்டம்சமா இருக்கீங்க... ரொம்ப அட்ராக்டிவ்வா இருக்கீங்க... நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன்... அப்படின்னு சொல்லணும் இல்ல?"
"ஓ... அப்படின்னா நான் ரொம்ப அட்ராக்டிவ்வா, ஹண்ட்ஸமா இருக்கேன்... நீ என்னை ரொம்ப காதலிக்கிற... அப்படித் தானே...? "
"ரொம்ப ஆடாதீங்க... நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன். அதனால தான் நீங்க எனக்கு ஹாண்ட்சமா, ஆட்ராக்டிவா தெரியறீங்க. ஏன் தெரியுமா?"
தெரியாது என்று தன் உதடை மடித்தான் அஸ்வின்.
"ஏன்னா, நம்ம காதலிக்கிற அந்த ஒரு நபர் தான், இந்த உலகத்திலேயே அழகானவாங்களா நம்ம கண்ணுக்கு தெரிவங்களாம்."
"அப்படியா...? எத்தனை பொண்ணுங்க என்னை பார்த்து வழியுறாங்கன்னு உனக்கு தெரியுமா?"
அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் அபிநயா. அஸ்வினின் கழுத்தை நெறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
"யார் அவளுங்க...? ஞாபகத்துல வெச்சுக்கோங்க, எவளையாவது பார்த்து பல்லை இளிச்சிங்க, நான் என்ன செய்வேன்னு உங்களுக்கே தெரியும். ஒழுங்கா, அடக்க ஒடுக்கமா இருங்க. மிஸஸ் அபிநயா அஸ்வின் மறுபடி கத்தியை எடுக்க தயங்க மாட்டா" என்றாள்.
"அபிநயாவோட புருஷனோட கவனத்தை யாராலும் ஈர்க்க முடியாது... ஏன்னா, யாரும் என்னோட பைத்தியக்கார பொண்டாட்டிக்கு ஈடாக முடியாது" என்று சிரித்தான்.
"போதும் நிறுத்துங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு"
"என்னுடைய ஒரு நாள் டர்ன்-ஓவர் எவ்வளவு தெரியுமா உனக்கு? எல்லா வேலையையும் விட்டுட்டு நான் இங்க நிக்கிறேன்! உனக்கு என்னை விட பாத்திரம் தேய்க்கிறது முக்கியமாக போச்சா...?"
"போங்க... நான் இங்க இருந்தா, நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க" என்றாள் அவன் சட்டையின் பொத்தானை உருட்டியபடி.
"நான் ஏதாவது செய்யும் போது, பதிலுக்கு ஏதும் செய்யாம உன்னாலயும் இருக்க முடியாது..."
சிரித்தபடி லேசாய் அவன் கன்னத்தில் தட்டினாள் அபிநயா.
"எனக்கு ஸ்டிராங்கா ஒரு டீ குடேன்"
"ஓகே..."
அங்கிருந்து செல்ல எத்தனித்தவனை, அவன் கழுத்தில் இருந்த டையை பற்றி தன் பக்கம் இழுத்தாள் அபிநயா.
அஸ்வினின் கண்கள் விரிந்தன.
"டீ கேட்டுட்டு தூரமா போனா நான் எப்படி கொடுக்கிறது?" என்று அவள் கேட்க,
அஸ்வின், நம்ப முடியாமல் தன் புருவத்தை உயர்த்தினான். அவனைப் பார்த்து சிரித்தபடி அங்கிருந்து ஓடிப்போனாள் அபிநயா.
மறுநாள்
அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின். அப்பொழுது அவனுடைய அறைக்கு விரைந்து வந்தான் அருண்.
"ஆவின்..."
"என்ன ஆச்சி அருண்?"
"தருண் சூசைட் பண்ணிக்கிட்டான்" என்ற அருணின் வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சியானான் அஸ்வின்.
"ஆனா எப்படி? எந்த முடிவும் எடுக்க முடியாத அளவுக்கு, அவன் பலவீனமா இருந்தானே?" என்று கேள்வி எழுப்பினான் அஸ்வின்.
"கத்தியால அவன் கழுத்தை அறுத்துகிட்டான்"
"ஆனா, அவனுக்கு எங்க இருந்து கத்தி கிடைச்சது?"
"எனக்கும் ஒன்னும் புரியல. விடு ஆவின். அவனுடைய சேப்ட்டர் ஓவர்" என்றான் அருண்.
அவனை சந்தேக கண்ணோடு பார்த்தான் அஸ்வின்.
"அவனுடைய இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யணும்" என்றான் அருண்.
"யாரோட இறுதி சடங்கு?" என்ற அபிநயாவின் குரல் கேட்டு இருவரும் பின்பக்கமாக திரும்பினார்கள்.
அஸ்வின் எதுவும் கூறுவதற்கு முன்,
"தருணுடைய இறுதி சடங்கு, அண்ணி" என்றான் அருண்.
"தருணுடைய இறுதி சடங்கா?" என்று அதிர்ச்சியானாள் அபிநயா.
"போலீஸ் துரத்தும் போது, அவன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல மாட்டி இறந்துட்டான்" என்றான் அருண்.
"அடக்கடவுளே..."
"நான் போஸ்ட்-மாட்டம் ஃபார்மலிடீஸை கம்ப்ளீட் பண்ணிட்டு வரேன்" என்று அருண் சொல்ல, சரி என்று தலை அசைத்தான் அஸ்வின்.
"இதை பத்தி பாட்டிகிட்ட சொல்லிட்டீங்களா?" என்றாள் அபிநயா.
"இல்ல. இப்ப தான் சொல்ல போறேன்" என்றான் அருண்.
"அவங்ககிட்ட நான் சொல்றேன்" என்றான் அஸ்வின்.
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் அருண்.
அஸ்வின் சுபத்ராவிற்கு ஃபோன் செய்தான். அவன் அழைப்பை ஏற்றார் சுபத்திரா.
"எப்படி இருக்க, அஸ்வின்?"
அவருக்கு பதில் அளிக்காமல்,
"நீங்க எப்படி இருக்கீங்க, பாட்டி?" என்றான்.
"பூஜை புனஸ்காரங்களில் என்னுடைய நேரத்தை செலவிட்டுகிட்டு இருக்கேன்"
"வந்து... நான்... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். தயவு செய்து உங்களை நீங்க தயார் பண்ணிக்கங்க."
சுபத்ரா அமைதியானார்.
"பாட்டி, நான் பேசுறது கேக்குதா?"
"தருண் கிடைச்சுட்டானா?" என்று சுபத்ரா கேட்க,
இந்த முறை அஸ்வின் அமைதியானான்.
"தருணுக்கு என்ன ஆச்சு?"
"வந்து பாட்டி..."
"அவன் உயிரோட இருக்கான் இல்ல...?"
"அவன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான் "
அருண் கூறிய பொய்யை அவன் காப்பாற்றினான்.
"ஆக்சிடெண்ட்டா?"
"ஆமாம், பாட்டி. போலீஸ் துரத்துனப்போ, அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி ஓடும் போது, ஒரு வண்டியில் அடிபட்டு இறந்துட்டான்"
"நான் வரேன்" அவர் அழைப்பைத் துண்டித்தார்.
அஸ்வினுக்கு ஆச்சரியமாகிப் போனது. அவன் சுபத்ராவின் தரப்பிலிருந்து மிகப் பெரிய புயலை எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவர் ஆழமான கடலைப் போல் அமைதியாய் இருந்தார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
....
அரசு மருத்துவமனையில் அருணுக்காக காத்திருந்தான் மனோஜ். அருண் வந்ததும் தன் கையை அசைத்தான்.
"அஸ்வின்கிட்ட என்ன சொன்ன?"
"நம்ம பிளான் படி தான் சொன்னேன்"
"அவன் நம்பிட்டானா?"
"நான் அப்படி நினைக்கல"
"அவன் நம்மள கேள்வி கேட்காத வரைக்கும் நமக்கு பிரச்சனை இல்ல"
"அவன் கேள்வி கேட்டாலும் எனக்கு பிரச்சனை இல்ல" என்றான் அருண்.
"ஆனா, தருண் சூஸைட் பண்ணிக்குவான்னு நீ எப்படி சரியா கெஸ் பண்ண?"
"அவனுக்கு நான் பயம் காட்டினேன். நம்ம மறுபடியும் அவனை மீன் தொட்டிக்குள்ள போடப் போறதா சொன்னேன். அவன் அதை நம்பிட்டான். எனக்கு தெரியும், அதுக்கப்புறம் நிச்சயம் அவன் வாழ நினைக்க மாட்டான். அவன் கண்ணுல படுற மாதிரி ஒரு கத்தியை வச்சேன். எதிர்பார்த்த மாதிரியே அவன் தற்கொலை பண்ணிகிட்டான்"
"நான் உன்னை ஒன்னு கேட்கலாமா, அருண்?"
"என்ன வேணா கேட்கலாம்"
"தருணை நினைக்கும் போது உனக்கு வருத்தமா இல்லயா?"
"நிச்சயமா இருக்கு... அவன் என்னோட கூடப்பிறந்த தம்பியாச்சே, எப்படி இல்லாம இருக்கும்? ஆனா, அவனுக்காக நான் வருத்தப்படுறதை விட, அஸ்வினுக்காக நான் அதிகமா வருத்தப்படுறேன். தருணா, அஸ்வினானு பார்க்கும் போது, அஸ்வின் தான் ஃபர்ஸ்ட் வருவான். ஏன்னா, தருண் நல்லவன் இல்ல. அவன் செஞ்சது ரொம்ப தப்பு. அவன் நிச்சயம் அப்படி செஞ்சிருக்கக் கூடாது. அவன் எப்போ இப்படி மாறினான்னு எனக்கு புரியல"
"அவன் ட்ரீட்மென்ட்காக அமெரிக்காவுக்கு போன போது...! அவன் திரும்பி வந்த போது, ஒரு அதீத மாற்றத்தை நான் அவன்கிட்ட பார்த்தேன்" என்றான் மனோஜ்.
ஆமாம் என்று தலை அசைத்தான் அருண்.
"பணம் மனுஷனை இப்படி எல்லாம் மாத்தும்னு என்னால் நம்பவே முடியல" என்று வருத்தப்பட்டான் அருண்.
"அது யாரை வேணாலும் மாத்தும்... என்ன வேணா செய்யும்... இந்த உலகத்தில இருக்கிறதுலயே மோசமான வஸ்து பணம் தான்" என்று மனோஜ் கூற, வலி நிறைந்த புன்னகை சிந்தினாள் அருண்.
அப்போது அசிஸ்டன்ட் கமிஷனர் நௌஷாத் அங்கு வந்தார்.
"எல்லா ஃபார்மலிடீஸும் முடிஞ்சிடுச்சு. நீங்க எதை பத்தியும் கவலைப்பட வேண்டியதில்ல. நான் உங்களுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க அவனுடைய பாடியை அதில் எடுத்துக்கிட்டு போனா, யாருக்கும் உங்க மேல சந்தேகம் வராது."
"தேங்க்ஸ் சார்" என்றான் மனோஜ்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர், இன்ஜினை உயிர்பித்தார். அருணும், மனோஜூம் காரில் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தார்கள்.
அஸ்வின் இல்லம்
இறுக்கமாய் காணப்பட்டார் சுபத்ரா. அவர் தருணுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. அது அங்கிருந்த மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அபிநயாவோ, அவன் முகத்தை பார்க்க கூட ஆர்வம் காட்டவில்லை.
ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்துகொள்ள, அவனுடைய இறுதி சடங்கை பார்த்தாலே போதுமானது.
இங்கு, நாம் தருணின் இறுதி சடங்கை பார்வையிட்டு கொண்டிருக்கிறோம். அங்கு குழுமியிருந்த யாரும் அவன் இறந்துவிட்டதற்காக வருந்துவதாக தெரியவில்லை. வாழும் போது எண்ணில்லா மனிதர்களை அழ வைத்த ஒருவன், தனக்காக அழ யாரும் இன்றி தன் இறுதி பயணத்தை துவங்கினான்.
தருணின் இறுதி சடங்குகள் முடியும் வரை அஸ்வின் இல்லத்தில் தங்கியிருந்தார் சுபத்ரா. தருணிடம் தான் காட்டிய அதீத நம்பிக்கையும், அன்பும் மட்டுமே நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் அவர் தவித்தார். ஆதலால், யார் சொல்லியும் கேட்காமல் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றார். அஸ்வின் மற்றும் ஸ்ருதியின் வற்புறுத்தல்கள் அவருடைய எண்ணத்தை மாற்றவில்லை. அருணோ அவருடைய முடிவில் தலையிடவேயில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro