37 நம்பிக்கை வார்த்தைகள்
37 நம்பிக்கை வார்த்தைகள்
காலை உணவிற்காக அனைவரும் ஒன்று கூடினார்கள்.
"அஸ்வின் நீ தருணையும் ஆபீசுக்கு கூட்டிகிட்டு போய், வேலை கத்துக் கொடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் சுபத்ரா.
அஸ்வினும், அருணும், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சுபத்ராவை ஏறிட்டு பார்த்துவிட்டு, தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். உண்மையிலேயே அஸ்வினுக்கு பாட்டியின் அந்த கருத்து பிடித்திருந்தது. ஏனென்றால் அவன் தருணை எப்பொழுதும் தன் கண் பார்வையில் வைத்திருக்க முடியும் அல்லவா? அவன் சரி என்று சொல்லும் முன்பாக,
"இல்ல பாட்டி. நான் அஸ்வினை மாதிரி தனியா முன்னேற விரும்புறேன். எது செய்யறதா இருந்தாலும், என்னுடைய சொந்த முயற்சியில் செய்யணும்னு நினைக்கிறேன்" என்றான் தருண்.
"என்ன செய்யப் போற?" என்றான் அஸ்வின்
"இறால் ஏற்றுமதி..."
"இறால் ஏற்றுமதியா? அதை பத்தி உனக்கு என்ன தெரியும்?" என்றான் அருண்.
"என்னுடைய ஃப்ரெண்டு ரொம்ப சின்ன அளவுல அதை பாண்டிச்சேரியில பண்ணிக்கிட்டு இருக்கான். அது அவனுடைய குடும்ப தொழில். அவங்க அதை தலைமுறை தலைமுறையா செஞ்சுக்கிட்டு வராங்க. என்னை அவன் கூட பார்ட்னரா சேர சொல்லி அவன் கூப்பிட்டுகிட்டே இருக்கான். அவனோட சேர இது தான் சரியான நேரம்னு நான் நினைக்கிறேன்"
"உன்னோட பிளான் என்ன?" என்றான் அஸ்வின்.
"அவனை என்னோட ஒர்க்கிங் பார்ட்னரா சேத்துக்கிட்டு, அதை லார்ஜ் ஸ்கேல் பிசினஸா பண்ணலாம்னு நினைக்கிறேன்"
"அப்போ, நீ பாண்டிச்சேரிக்கு போயிட போறியா?" என்றார் சுபத்ரா கவலையாக.
ஆமாம் என்று தலை அசைத்தான் தருண்.
"அதை நீ இங்கிருந்து செய்ய முடியாதா?" என்றார்.
"அவனுக்கு எந்த அனுபவமும் இல்லாம, இங்க தனியா எப்படி செய்யமுடியும்?" என்றான் அருண்.
"அப்போ அதை தவிர வேற ஏதாவது தொழில் செய்யலாம் இல்ல?" என்றார் சுபத்ரா.
"அது நல்ல வருமானம் இருக்கிற தொழில் பாட்டி. அதோட இல்லாம, எனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாது. என் ஃப்ரெண்டு தான் என் கூட இருந்து எனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்க போறான். நானும் ஏதாவது கத்துக்கணும் இல்லயா? அதுக்கு, இது தான் நல்ல சந்தர்ப்பம்."
"நீ ஏன் உங்க அண்ணன்கிட்ட இருந்து கத்துக்க கூடாது? உன்னுடைய ஃபிரண்டு உங்க அண்ணன விடவா உனக்கு உதவிட போறான்?"
"பாட்டி... " என்று சுபத்ராவை அஸ்வின் தடுக்க, அனைவரது பார்வையும் அவன் மீது திரும்பியது.
"அவன் தன்னிச்சையா செயல்பட விரும்புறான். அவனை அப்படியே இருக்க விடுங்க."
"ஒருவேளை அவனுடைய ஃபிரண்ட், இவனை அடக்கியாள நினைக்கலாம் இல்ல?"
"அதுக்கு வாய்ப்பில்ல. எல்லா பணத்தையும் முதலீடு பண்றதால, தருண் தான் முதலாளியா இருக்க போறான்"
"ஆமாம்" என்று அவனை ஆமோதித்தான் தருண்.
"அதுக்கு எவ்வளவு பணம் போடலாம்னு இருக்க?" என்றான் அஸ்வின்.
"ஒரு கோடி ரூபா"
"உனக்கு ஒரு கோடி எவன் குடுப்பான்?" என்றான் அருண்.
"நான் பேங்க்ல லோன் அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்"
"அதுக்கு அஷ்யூரன்ஸ் கொடுக்கணுமே...?"
"வேண்டியதில்ல. உனக்கு நான் பணம் தரேன்" என்றான் அஸ்வின்.
"இல்ல அஸ்வின், எனக்கு வேண்டாம்"
"கடனா வாங்கிக்கோ. நீ எப்போ இரட்டிப்பா சம்பாதிக்கிறியோ, அப்ப எனக்கு திருப்பி கொடு"
"தேங்க்யூ. டாக்குமெண்ட் எழுதி கையெழுத்து போட்டு வாங்கிக்கோ. நான் உனக்கு ரெண்டு வருஷத்துல அதை திருப்பிக் கொடுக்கிறேன்."
"நாளைக்கு ஆஃபீஸுக்கு வா. நான் மனோஜ்கிட்ட அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செய்ய சொல்றேன்."
சரி என்று தலை அசைத்தான் தருண்.
"நீ எங்க கூடவே இருந்து ஏதாவது செஞ்சா எனக்கு சந்தோஷமா இருக்கும்" என்றார் சுபத்ரா சோகமாக.
அங்கு இருந்தவர்களில் வாயை திறக்காமல் இருந்தது அபிநயா மட்டும் தான். அவள் ஏதும் பேசவுமில்லை, நிமிர்ந்து தருணை பார்க்கவும் இல்லை. தருணும் கூட, அபிநயாவை ஒரு முறையும் நிமிர்ந்து பார்க்காமல் இருந்தது, அஸ்வினுக்கு ஆச்சரியத்தை தந்தது. அமைதியாய் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றுவிட்டான் தருண். அவனுடைய *மிக நல்லவன்* தோற்றம், அஸ்வினின் மன அமைதியை கெடுத்தது.
அபிநயாவும் தங்கள் அறையை நோக்கி சென்றாள். அஸ்வினுக்கு அபிநயாவை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல மனம் வரவில்லை.
"அருண், நான் இன்னைக்கு ஆஃபீஸ் வரல" என்றான்.
சரி என்று தலை அசைத்தான் அருண். அவன் *ஏன்* என்று கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில், கிட்டத்தட்ட அஸ்வினுடைய மனோநிலையில் தான் அவனும் இருந்தான்.
"மனோஜ்கிட்ட நான் தருணுடைய புரோபோசலை பத்தி பேசுறேன்" என்றான்.
"தருணுக்கு பணம் கொடுக்கிறது உனக்கு சரின்னு படுதா? எனக்கு என்னமோ அது தப்பா தோணுது. அவனை நம்புறது சரியில்ல, ஆவின். ஏதாவது ஒரு பொண்ணு அவனை கடந்து போனா, அவன் எல்லாத்தையும் மறந்துட்டு அவ பின்னாடி போயிடுவான். இதுல இருக்கற ஒரே நல்ல விஷயம், அவன் சென்னையை விட்டு போறது தான்."
அது உண்மை தான். அஸ்வினும் அதற்காகத் தான் இவ்வளவு பணத்தை அவனுக்கு கொடுக்க தயாராக இருக்கிறான்.
"நான் பணத்தை பத்தி கவலை படல. அவன் லைஃப்ல செட்டில் ஆனா போதும்."
"உன் இஷ்டம். நான் ஆஃபீஸ் கிளம்பறேன்." என்று அங்கிருந்து கிளம்பி சென்றான் அருண்.
அஸ்வின் தங்கள் அறைக்குள் நுழைந்த பொழுது, அபிநயா நீச்சல் குளத்தின் அருகில் இருந்த பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.
"திடீர்னு என் பூச்செடி மேல உனக்கு காதல் வந்திடுச்சா?" என்றான்.
"நான் குழப்பமா இருக்கும் போதெல்லாம், என் மனசை மாத்த புதுசா ஏதாவது செய்வேன்" என்றாள் அபிநயா.
"இப்போ என்ன குழப்பம் உனக்கு?"
"நான் அத பத்தி பேச விரும்பல" என்றாள் அவனை பார்க்காமல்.
"யார்கிட்ட?"
"யார்கிட்டயும்... முக்கியமா உங்ககிட்ட"
"ஏன் அப்படி?"
"ஏன்னா, நீங்க உங்க தம்பிக்கு உதவுறதை நான் தடுக்கிறதா நீங்க நினைப்பீங்க"
"நீ தருணை பத்தி பேசுறியா?"
அவனுக்கு பதில் கூறாமல் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
"அவன் நம்ம கூடவே இருக்கணும்னு நினைக்கிறியா?" என்று கேள்வி எழுப்பினான் அஸ்வின்.
பல்லைக் கடித்துக் கொண்டு, அவனை முறைத்தாள் அபிநயா. கையிலிருந்த குழாயை வீசி எறிந்துவிட்டு, அவனை கடந்து உள்ளே செல்ல எத்தனிதவளை, கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் அஸ்வின்.
"என் பொண்டாட்டிகிட்ட இருந்து அவன் ரொம்ப தூரம் போகணும்னு தான் நான் நினைக்கிறேன்" என்றவனை இமை கொட்டாமல் பார்த்து நின்றாள்.
"அவன் இங்க இருக்கிற வரைக்கும், உன்னால நிம்மதியா இருக்க முடியாது"
"ஆனா, ஒரு கோடி ரூபாய் ரொம்ப அதிகம். அவன் அதுக்கு தகுதி இல்லாதவன்"
"ஆனா, உனக்கு தகுதி இருக்கு... உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, அவன் இங்க இருந்தா, உனக்கு நிம்மதி இருக்குமா? அவன் கூட ஒரே வீட்ல இருக்கிறது உனக்கு பாதுகாப்பா இருக்கும்னு நீ நினைக்கிறாயா?"
இல்லை என்று தலை அசைத்தாள் அபிநயா.
"உன்னுடைய பாதுகாப்புன்னு வரும் போது, ஒரு கோடி ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. என் பொண்டாட்டிய பாதுகாப்பா வச்சிக்க முடியலன்னா, எவ்வளவு பணம் இருந்தும் என்ன பிரயோஜனம்?"
அவள் மனதை அவன் தொட்டுவிட்டான் என்று கூறவும் தான் வேண்டுமோ? அவளது பார்வை, அவன் முகத்தில் வேரூன்றி நின்றது. பணத்தைவிட, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமான பணக்காரன் இவன். அவள் மனதைக் கவர அதுவே போதுமானது அல்லாவா?
அவள் முகத்தை பார்த்து புன்னகைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல எத்தனித்த அவனை, அவன் கையை பிடித்து நிறுத்தினாள் அபிநயா. அவள் பிடித்திருந்த தன் கையை பார்த்துவிட்டு, அதிலிருந்து தன் கண்ணை அவள் முகத்திற்கு உயர்த்தினான் அஸ்வின். அவனை தொடும் தைரியம் அவளுக்கு அதற்கு முன் வந்ததில்லை. அப்படி செய்தால், அவனுடைய கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும், இந்த முறை அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.
"நீங்க எங்கூட இருக்கற வரைக்கும், அவனால என்னை எதுவும் செய்ய முடியாது" என்று பெரும் முத்துக்களை உதிர்த்தாள் அவள்.
இருவரும் தன்னிலை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அந்த புகழுரை, தன் வாயிலிருந்து எப்படி வந்தது என்பது அவளுக்கு புரியவில்லை. அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது அஸ்வினுக்கு புரியவில்லை. அவனது மனைவியிடம் இருந்து பெற்ற முதல் புகழுரை... அவள் முகத்தில் தெரிந்த ஆழமான உணர்வு அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவனுடைய பொறுப்புணர்வு அதிகரித்தது. அவள் அவனிடம் எப்படி நடந்து கொள்கிறாள் என்பது விஷயமே இல்லை. அவள் அவனை நம்புகிறாள்... அது தான் இங்கு முக்கியம். அவளது நம்பிக்கையை அவன் பாழாக்க கூடாது. கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு அவன் இருந்தாக வேண்டும். அவள் சண்டையிடும் போதெல்லாம் அவளிடம் வம்புக்கு சென்ற அவன், அவளுடைய அந்த பார்வையை ஏற்க முடியாமல் தடுமாறினான். ஒரு வழியாக தன்னை சுதாகரித்துக் கொண்டான்.
"இந்த மாதிரி முழுங்குற மாதிரி என்னை பார்த்து, என்னை தப்பு செய்யத் தூண்டாத" என்று சிரித்தான்.
அவனுடைய வார்த்தைகளுக்கு எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், நீச்சல் குளத்தின் பக்கம் சென்று, மறுபடியும் செடிகளுக்கு தண்ணீர் விட தொடங்கினாள் அபிநயா. திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான் அஸ்வின். அவள் ஏன் இவ்வளவு குழப்பத்துடன் காணப்படுகிறாள்? சில நேரங்களில் அவள் வார்த்தையும், செயலும் சம்மந்தமற்ற வகையில் இருக்கிறது. எது அவளை சங்கடப்படுத்தி கொண்டிருக்கிறது? முதலில் தருண் இங்கிருந்து செல்லட்டும். அதன் பிறகு, உடனடியாக அவளிடம் பேசி, அவர்களுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சினைகளைத் தீர்த்து விட வேண்டும், என்று எண்ணிக் கொண்டான் அஸ்வின்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro