Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

34 மீண்டும் தருண்

34 மீண்டும் தருண்

பலமான  திட்டத்துடன் அஸ்வின் இல்லத்தில்  நுழைந்தான் தருண். அந்தத் திட்டத்திற்கான ப்ளூ பிரிண்டை, தன் தலைகுள் ஆழமாய் வரைந்து வைத்திருந்தான். இந்த முறை, எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய திட்டம் முழுமையடையும் வரை, அவன் மீது யாருக்கும், எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதில் அவன் தீர்க்கமாய் இருந்தான்.

தன் கண்ணான பேரப் பிள்ளையை அலங்கோலமாய் பார்த்து மூச்சடைத்து போய் நின்றார் சுபத்ரா. உயிரற்ற பிணம் போல் தரையில் சரிந்து விழுந்தான் தருண். அருணின் பெயரை சொல்லி அவனை அழைத்தவரே தருணை நோக்கி ஓடினார் சுபத்ரா. அவரின் மரண ஓலத்தை கேட்டு, அருணுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவன் கீழ்தளம் நோக்கி விரைந்தான். அங்கு தருண் இருப்பதை பார்த்து முகம் சுளித்தான். வேலைக்கார ராமுவின் உதவியுடன் தருணை தூக்கி சோபாவில் படுக்க வைத்தான் அருண்.

"அருண், டாக்டரை வரச்சொல்லு" என்றார் சுபத்ரா.

சரி என்று தலையசைத்துவிட்டு டாக்டருக்கு ஃபோன் செய்தான் அருண்.

"ராமு, கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா" என்று சுபத்ரா  கட்டளையிட, ராமு சமையலறையை நோக்கி சிட்டாய் பறந்தான்.

"டாக்டர் வராரு" என்று அழைப்பை துண்டித்தான் அருண்.
 
"இவன் டுமாரோ லேண்ட்டுக்கு போயிருக்கிறதா சொன்னியே..." என்றார் அருணை பார்த்து சுபத்ரா.

"அவனுடைய ரூம்ல டுமாரோ லேண்ட் டிக்கெட் பாக்ஸ் இருந்ததை நான் பார்த்தேன். அதனால, அவன் அங்க தான் போயிருப்பான்னு நெனச்சேன்"

"அப்போ நீ எனக்கு கொடுத்த தகவல் நிச்சயமானது இல்ல, அப்படித் தானே?"

அருண் அமைதி காத்தான்.

"என்ன அண்ணன் நீ? பாரு, அவனை எப்படி போட்டு அடிச்சிருக்காங்கன்னு" என்று கண்ணீர் வடித்தார் சுபத்ரா.

"எதுக்காக என் மேல பாய்றீங்க? அவனுடைய வழக்கமான நடத்தையை  வச்சி தான் நான் அதை கணிச்சேன். அதுல என்னுடைய தப்பு என்ன இருக்கு?"
என்று அருண் கேட்க பதில் சொல்ல முடியாமல் நின்றார் சுபத்ரா.

அப்போது, ராமு வெந்நீருடன் அங்கு வர, சுடு நீரால் தருணின் முகத்தை துடைத்து விட்டார்.

அப்பொழுது அங்கு டாக்டர் வந்து சேர்ந்தார். அவர் தருணை கவனமாக பரிசோதனை செய்தார்.

"இவர் எதுவுமே சாப்பிடலன்னு நினைக்கிறேன். நான் அவருக்கு இண்ஜக்க்ஷன் போடுறேன். நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. சரியாயிடுவார்"

சரி என்று தலையசைத்தார் சுபத்ரா. அவனுக்கு ஊசி போட்டு விட்டு, அங்கிருந்து சென்றார் மருத்துவர். சுபத்ரா, தருணின் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.

"கடவுளே... என் பேரப் பிள்ளையை காப்பாத்து" என்று கடவுளிடம் மன்றாடினார்.

அருண் தன் கண்களை சுழற்றினான் வெறுப்பாக. தருண் திரும்பி வந்ததில் ஏற்கனவே அவன் கடுப்பில் இருந்தான். அவனுக்காக சுபத்திரா பிரார்த்தனை செய்வதை பார்த்து அவனுக்கு சுவரில் முட்டிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

"தருண் திரும்பி வந்துட்டான்னு அஸ்வினுக்கு  ஃபோன் பண்ணி சொல்லு" என்றார் சுபத்ரா.

சரி என்று தலையசைத்துவிட்டு அஸ்வினுக்கு ஃபோன் செய்தான் அருண். அஸ்வினுடைய ஃபோன் எங்கேஜ்டாக இருந்தது.

திருவன்மியூர்

சக்தி கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் அஸ்வின்.

"தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நாங்க எப்படிப்பட்ட தப்பு செஞ்சிருக்கோம்னு எங்களுக்கு நல்லா தெரியும். எங்களுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. அவன் எங்க இருந்தாலும் தூக்கிடுறேன்."

"தேவையில்ல" என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டு அழைப்பை துண்டித்தான் அஸ்வின்.

அடுத்த நிமிடம் அவனுக்கு அருணிடமிருந்து  அழைப்பு வந்தது.

"சொல்லு, அருண்"

"ஆவின்... தருண் இஸ் பேக்..."

அது அஸ்வின் எதிர்பார்த்தது தான். அதை காட்டிக் கொள்ளாமல்,

"ஓ... அவன் டுமாரோ லேண்டிலிருந்து வந்துட்டானா?" என்றான்.

"இல்ல... இந்த தடவையும் அவனை யாரோ கடத்தியிருக்காங்க போலயிருக்கு."

"அவனை யார் கடத்தினாங்கன்னு தெரியுமா?"

"தெரியல"

"அவன் எதுவும் சொல்லலயா?"

"அவன் அன்கான்ஷியஸ்ஸா, வீக்கா இருக்கான்"

"சரி, அவனை கவனிசிக்கோ. நான் சீக்கிரம் வரேன்"

"வேணாம் ஆவின். நீ வர வேண்டாம். நான் அவனை பார்த்துக்கிறேன்"

"இப்போ, அப்பா பரவாயில்லாம இருக்கார். அம்மாவும் அத்தையுமே அவரை பார்த்துக்க முடியும். நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல"

"இப்ப, நீ இங்க வர வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"

"நான் அங்க வரணும்னு பாட்டி எதிர்பார்ப்பாங்க. அவங்க தான் உன்னை எனக்கு ஃபோன் செய்ய சொல்லியிருப்பாங்க... சரியா?"

"ஆமாம்..."

"நான் அங்க வரேன்"

தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல பேசி விட்டு,  இருவரும் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.

அஸ்வின் தங்கள் அறையிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அங்கு அபிநயா பத்மா சமைத்த சுழியனை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

இங்கு வந்த பின் அஸ்வின் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அபிநயா ஒரு சாப்பாட்டு ராமி. எதுவாக இருந்தாலும் அவள் ருசித்து, ரசித்து, திருப்தியுடன், அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டாள். அப்படி சாப்பிட்டாலும் கூட, அவளுக்கு எடை கூடவே இல்லை. அது யாருக்கும் கிடைக்கப் பெறாத வரம். பெண்கள் பொதுவாக விரும்புவது அதைத் தான். அபிநயாவுக்கு அது இயல்பாகவே அமைந்திருந்தது.

அஸ்வின் அங்கு வந்து அவள் முன் அமர்ந்தான்.

"அத்தை, நான் திரும்பி வீட்டுக்கு போக வேண்டிய வேலை வந்திருக்கு." என்று மங்கையிடம்
கூறிவிட்டு, அபிநயாவை பார்த்து,

"நீ இங்க இருக்கணும்னா, இருந்துட்டு வா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான்.

"அதெல்லாம் தப்பு தம்பி. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் வந்தீங்க. அதே மாதிரி, போகும் போதும் ஒன்னா தான் போகணும்." என்றார் பத்மா.

"பத்மா சொல்றது சரி தான். உங்க வேலையெல்லாம் விட்டுட்டு, எங்க கூட வந்து தங்கி இருந்தீங்க. அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.  நீங்க போகும் போது அபியையும் கூட கூட்டிட்டு போங்க."

அபிநயாவுக்கு அங்கிருந்து செல்லவும் மனம் இல்லை... அதே நேரத்தில், அங்கு அவளை விட்டுச் செல்லும் அஸ்வினின் எண்ணத்திலும் உடன்பாடில்லை. அவள் அஸ்வினின் முகத்தில் ஏதோ ஒரு தயக்கத்தை உணர்ந்தாள். ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? ஒருவேளை, அந்த பிரச்சனை அவனுடைய கேர்ள் ஃபிரண்ட் சம்பந்தப்பட்டதாக இருக்குமோ? அவளைப் பார்க்கத் தான் போகிறானோ...? என்று அவள் கற்பனை தேரோட்டினாள்.

அஸ்வின், தங்கள் அறையை நோக்கி செல்வதை பார்த்து அவனை பின்தொடர்ந்தாள் அபிநயா.

"எதுக்கு இவ்வளவு அவசரமா வீட்டுக்குப் போகணும்னு சொல்றீங்க?"

"தருண் திரும்பி வந்துட்டானாம்."

அபிநயாவுக்கு அப்பாடா என்று இருந்தது. நல்லவேளை, அது அவனுடைய கேர்ள் ஃப்ரெண்ட் சம்மந்தப்பட்டது அல்ல.

"அவனை பாக்கவா இவ்வளவு அவசரமா போறீங்க? அவன் டூர் தானே போயிருந்தான்....?"

"இல்ல, அவனை மறுபடியும் யாரோ கிட்னாப் பண்ணிட்டாங்க...  எப்படியோ சமாளிச்சு வீடு வந்து சேர்ந்திருக்கான். அதனால தான் பாட்டி நான் அங்க இருக்கணும்னு நினைக்கிறாங்க"

"அவன மாதிரி ஆளுங்களுக்கு வேற என்ன கிடைக்கும்? கடத்திட்டுப் போனவங்க எதுக்கு அவனை உயிரோடு விட்டாங்க? அப்படியே கொன்னு போட்டிருக்க கூடாது?" என்று மூணுமுன்னுத்தாள்.

"நீ ஏதாவது சொன்னியா?" என்றான் அஸ்வின்.

"நான் உங்க கூட வர வேண்டாம்னா, நான் இங்கேயே இருக்கேன்"

"நீ எப்பவும் என் கூட இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்"

அதை கேட்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

"ஆனா, என்னை இங்கேயே இருக்க சொன்னிங்க?"

"திடீர்னு வர சொன்னா, உனக்கு உங்க அம்மா, அப்பாவைவிட்டு வர கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன்"

"அம்மாவும், அத்தையும், நிச்சயமா என்னை இங்க இருக்க விடமாட்டாங்க" என்று அவர்கள் மீது பழியைப் போட்டாள்.

"நான் வேணும்னா அவன் கிட்ட பேசுறேன்."

அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"அதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டே.

"நானும் உங்க கூட வர்றேன்"

"எனக்கு தெரியும், உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு" என்றான் வழக்கமான குறும்பு புன்னகையுடன்.

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. என்னால எங்க அம்மாகிட்டயும், அத்தைகிட்டியும் திட்டு வாங்க முடியாது.  உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது. உங்ககிட்ட சரின்னு தலையாட்டிட்டு, நீங்க போனதுக்கப்புறம் என்னை வச்சி செய்வாங்க" என்றாள்.

*நீ சொன்னதை நான் நம்பிவிட்டேன்* என்பது போல புன்னகை புரிந்தான் அஸ்வின்.

அதைப்பற்றி கவலைப்படாமல், துணிமணிகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள் அபிநயா, அஸ்வினை பார்க்காமல். அவனோ, பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

அபிநயாவின் அப்பா, அம்மா, அத்தையிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் அஸ்வின் இல்லம் நோக்கி கிளம்பினார்கள்.

அஸ்வின் இல்லம்

தருண் இன்னும் சுயநினைவு பெறவில்லை. சுபத்ரா, அவனை விட்டு ஒரு நொடி கூட விலகவில்லை. அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் அப்படித் தானே இருப்பார்...?

அருண் பதட்டத்துடன் காணப்பட்டான். இப்படி தாறுமாறாக அடி வாங்கிய பின், தருணின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அவன். அஸ்வினும் அபிநயாவும் உள்ளே நுழைவதை பார்த்து, அவன் பெருமூச்சு விட்டான்.

அஸ்வினை கவலையுடன் பார்த்தார் சுபத்ரா.

"பாத்தியா உன் தம்பியோய நிலைமைய... கிழிச்சி போட்ட கந்தல் துணி மாறி கிடக்கிறான் பாரு..." என்று நா தழுதழுத்தார்.

ஏதும் கூறாமல் அமைதியாக நின்றான் அஸ்வின்.

"டாக்டர் என்ன சொன்னாரு?" என்று ஏதோ கேட்க வேண்டும் என்று கேட்டாள் அபிநயா.

"அவனுக்கு நல்ல ஆகாரமும், ஓய்வும் தேவைனு சொன்னாரு. படுபாவிங்க, அவனுக்கு சாப்பாடு கூட போடல போல இருக்கு..."

"அவனுக்கு சாப்பாடு போடவா கடத்திட்டு போனாங்க?" என்றான் அருண்.

அவனை கோபாவேசத்துடன் பார்த்தார் சுபத்ரா. அப்பொழுது தருண் லேசாக அசைவதை கவனித்தார்கள்.

"தருண் கண்ணா..." என்று அவன் கண்ணம் தொட்டார் சுபத்ரா.

தருண் மெல்ல தன் கண்களை திறந்தான். அங்கிருந்தவர்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்துவிட்டு, ஓவென அழ தொடங்கினான்.

"ஏம்பா அழற? நீ நம்ம வீட்ல தான் இருக்க. உன்னோட அண்ணன்களும் உன்கூட தான் இருக்காங்க. நீ இப்போ ரொம்ப பாதுகாப்பா இருக்க." என்று அவனுக்கு தைரியம் அளித்தார் சுபத்ரா.

மெல்ல அவர்களை ஏறிட்டுப் பார்த்தான் தருண். இங்கு நிற்கும் இந்த இருவரும் தான் அவனை கடத்தியவர்கள் என்று கூறினால், சுபத்ரா நம்பவா போகிறார்? இந்த வீடு தான் அவனுக்கு உலகிலேயே  பாதுகாப்பற்ற இடம் என்பதை அவர் துளியும் நம்ப போவதில்லை.

"எனக்கு தெரியும் பாட்டி. நான் இங்க பாதுகாப்பா தான் இருப்பேன். நான் எவ்வளவு கேவலமா இருந்திருக்கேன்னு தெரிஞ்சுகிட்டேன். அதனால தானே என்னை சாவடி அடிச்சி அவங்க ஆத்திரத்தைத் தீர்த்துக்கிட்டாங்க...!  இதெல்லாம் என்னால தான். நான் வேற ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டேன். என்னை மாதிரி மோசமானவங்களுக்கு இந்த உலகத்துல இடமில்ல. நம்ம செய்ற பாவம்,  நம்ம எங்க போனாலும், நம்மளை துரத்திக்கிட்டே வரும். எனக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும், நல்ல விஷயங்களை செய்ய நான் தவறிட்டேன். என்னால பாதிக்கப்பட்ட எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு நான் நினைக்கிறேன்... என் சாவுக்கு முன்னாடி நான் அதை செய்யணும்."

அவன் தன் பார்வையை அபிநயா மீது பதித்தான்.

"என்னை மன்னிச்சுடுங்க அண்ணி"

அங்கிருந்த அனைவரும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தார்கள். தருண் அபிநயாவை அண்ணி என்று அழைத்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.

"உங்ககிட்ட ரொம்ப கேவலமா நடந்துகிட்டேன்... உங்களால  முடியும்னா, என்னை தயவுசெய்து  மன்னிச்சுடுங்க ப்ளீஸ்..."

சுபத்ராவின் கண்கள் அருவி போல் பொழிந்தன. அபிநயாவோ வாயடைத்துப் போய் நின்றாள். இப்படி தருண் தலைகீழாக மாறிப் போனது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால், அஸ்வினும், அருணும் என்ன கண்றாவி இது? என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றார்கள். தருணிடமிருந்து இப்படி ஒரு மாறுதலை யார் தான் எதிர்பார்க்க முடியும்? அவனுடைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? அவர்கள் ஒருவரையொருவர்  பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அவனை *நன்கு கவனித்தால்* ஏற்பட்ட மாறுதலாக இருக்குமோ? ஒரு விதத்தில் அவர்களுக்கு சந்தோஷம் தான். தருண் மாறிவிட்டான்...

தொடரும்...

 













Bạn đang đọc truyện trên: Truyen247.Pro