Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33 காதல் கோட்டை

33 காதல் கோட்டை

சக்திக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவன், அந்த மாநகரின் மூன்று முக்கிய புள்ளிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தருணை தேடும்படி அவனுடைய ஆட்களை நாலாபக்கமும் விரட்டினான் சக்தி. இந்த முறை, தருண் அவர்கள் கையில் கிடைத்தால், அவர்கள் அவனை நிச்சயம் கொன்று விடுவார்கள். அவர்கள் அவ்வளவு ஆத்திரத்துடன் காணப்பட்டார்கள். அந்த பகுதியை சல்லடை போட்டு சலித்து கொண்டிருந்தார்கள்.

அந்த மிகப்பெரிய கட்டிடத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பழைய காரின் டிக்கியில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு  ஒளிந்திருந்தான் தருண். அந்தக் கார் அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்று அவன் வேண்டாத கடவுள் இல்லை. அந்தக் கார், அங்கிருந்து கிளம்பியது. தன் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி விட்டார் என்று குதூகலித்தான் தருண். உண்மை தான். அவன் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி தான் விட்டார். ஆனால் அவனுக்கு தெரியாது, பாவம் செய்தவர்களின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி வைப்பது, அவர்களை தண்டிப்பதற்காக தான் என்பது.

அரை மணி நேர பயணத்திற்கு பின் அந்த கார் நின்றது. தருண் மிக மிக சோர்வாக காணப்பட்டான்.  அந்த காரின் டிக்கியை திறந்து கொண்டு, ரோட்டில் விழுந்தான். பக்கத்திலிருந்த பூங்காவிற்குள் தவழ்ந்து சென்றான். அங்கிருந்த புல் தரையில் மல்லாக்க விழுந்தவன், மறுநாள் காலை அந்தப் பூங்காவின் காவலன், அவன் முகத்தில்  தண்ணீர் தெளித்த பொழுது தான்  கண் திறந்தான்.

"யார் நீ? இங்க தூங்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு?"

"ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடலண்ணா... எனக்கு மயக்கமா வருது" என்று அவன் கூற அந்த காவலாளி அவனை பார்த்து பரிதாப பட்டான்.

அவன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த காலை உணவை, தருணுக்கு  சாப்பிட கொடுத்தான். அன்று தான் முதன் முதலாய் சோற்றை பார்ப்பவன் போல, அதை அவசர அவசரமாய் தின்று முடித்தான் தருண். சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கேயே சற்று நேரம் இளைப்பாறினான். ஓரளவிற்கு அவனுக்கு தெம்பு கிடைத்தவுடன் அந்த காவலாளியிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றான்.

.....

சக்திக்கு மனது திக் திக் என்றது. அந்த மூவரிடமும் உண்மையை கூற அவனுக்கு தைரியம் வரவில்லை. ஆனால் அவன் கூறித்தான் ஆகவேண்டும்.  எனவே, அவன் மனோஜுக்கு ஃபோன் செய்தான்.  மனோஜ் அந்த அழைப்பை உடனே ஏற்றான்.

"சொல்லு சக்தி..."

"சார், அந்த தருண்..." என்று இழுத்தான்.

"செத்துட்டானா? பரவாயில்ல. நான் பாத்துக்குறேன்" என்றான் மனோஜ் சர்வ சகஜமாக.

"இல்ல சார்... அவன் எங்ககிட்டயிருந்து தப்பிச்சு போயிட்டான்."

"என்னது....? ஆனா எப்படி?" என்றான் அதிர்ச்சியாக.

"அவன் மயக்கமாயிட்டான்னு, அவனை கட்டி வைச்சிருந்த கயிறை எல்லாம் கழட்டி, அவனை படுக்க  வச்சிருந்தோம் சார். அப்படியே நினைவில்லாம தான் இருந்தான். ஆனா, இன்னைக்கு அவனை அங்க காணோம்."

"உன்னை எல்லாம் ஒரு ரவுடின்னு சொல்லிக்காத... பலவீனமா இருந்த ஒருத்தன கூட உங்களால பாத்துக்க முடியாம எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? என் புத்திய ஜோட்டால அடிக்கணும். நீ எல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு உன்னை நம்பினேன் பாரு..." என்று எரிந்து விழுந்தான்.

"எங்க ஆளுங்க, அவனை எப்படியும் தேடி கண்டுபிடிச்சுடுவாங்க சார்..."

"எங்கிருந்து கண்டுபிடிப்பீங்க? அஸ்வின் இல்லத்துல இருந்தா?" என்று சீறினான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தான் சக்தி.

"அவன் என்னெல்லாம் செய்ய போறானோ தெரியலை..." என்றான் மனோஜ் அலுப்பாக.

"இந்த தடவை நான் உங்களுடைய உத்தரவுக்காக காத்திருக்க மாட்டேன் சார். நானே அவனை என் கையால கொன்னுடுவேன்" என்றான் சக்தி கோபமாக.

அழைப்பை துண்டித்தான் மனோஜ் வெறுப்புடன். சத்தி பயந்து செத்தான். மனோஜே எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்றால், அஸ்வினை பற்றி சொல்ல வேண்டியதில்லை. 

அவன் அடுத்து அருணுக்கு ஃபோன் செய்தான். அவன் வானத்திற்கும் பூமிக்கும் எகிறி குதித்தான். அவன் மனோஜை  விட அதிக கோபத்துடன் எரிந்து விழுந்தான். ஏனென்றால், அவன் தருணை ஒரே வீட்டில் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமே... எவ்வளவு அழகாக திட்டமிட்டு, அவனை கடத்தியிருந்தான்.... அனைத்தும் வீணாகிவிட்டது என்று பெருமூச்சு விட்டான் அருண்.

திருவன்மியூர்

பக்கத்து வீட்டு சிறுவர்களுடைய ஹாம்ஸ்டருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அபிநயா. அதை கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். விளையாட்டு மும்முரத்தில், தன் கணவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கூட அவள் கவனிக்கவில்லை.

"இது எவ்வளவு அழகா இருக்குல்ல..." என்றாள்.

அவள் விரலை அந்தக் கூண்டுக்குள் விட்டாள்.

"அக்கா அது உங்க விரலை கடிச்சிடும்" என்றாள் ஒரு சிறுமி.

"ஆனா, அது கடிச்சா வலிக்காது" என்றான் ஒரு சிறுவன்.

"ஆமாக்கா வலிக்காது" என்றான் இன்னொருவன்.

"சோ ஃபன்னி" என்றாள் அபிநயா.

"எங்கேயோ ஓடி போறதா நினைச்சு, இந்த சக்கரத்தில் அது ஓடிக்கிட்டே இருக்கும்." என்றாள் அந்த சிறுமி.

அந்த வெள்ளை எலி, அவள் விரலை கடித்த பொழுது அவள் சிரித்தாள்.  ஏன் என்றால் அந்த சிறுவர்கள் சொன்னது போல்  அவளுக்கு வலிக்காமல் கூசியது.

"உங்க ப்ளூ கிராஸ்ல, ஹாம்ஸ்டர் இல்லயா?" என்றான் ஒரு சிறுவன்.

"ப்ளூ கிராஸ்ல எந்த அணிமலும் இருக்காது.  அது மிருகங்களை பாதுகாக்கிற  ஒரு ஆர்கனைசேஷன். இந்த உலகத்தில் வாழற எல்லா உயிரையும் நம்ம நேசிக்கணும், அப்படிங்கறதை தான் ப்ளூகிராஸ் சொல்லுது. அதுல மெம்பரா இருக்கவங்க எல்லாம் என்னை மாதிரி அணிமல் லவ்வர்ஸ்."

"ஓ ஓ ஓ...." என்றார்கள் அந்த பிள்ளைகள்.

அப்போது, அஸ்வின் வருவதை பார்த்தாள் அபிநயா. அவர்கள் இருவருமே எதிர்பாராத வண்ணம்,

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா..." அந்த குட்டீஸ் பாட ஆரம்பித்தார்கள்.

அஸ்வின் வாய்விட்டு சிரிக்க, அபிநயாவோ வாய் பிளந்தாள்.

"மாமா, உங்க பாட்டு சூப்பர்..." என்றாள் ஒரு பெண்.

"எங்க அப்பாவுக்கு கூட அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்" என்றான் ஒரு பையன்.

அபிநயாவை ஒரு குறும்பு பார்வை பார்த்தான் அஸ்வின்.

"உங்களுக்கு அபி அக்காவ ரொம்ப பிடிக்குமா?" என்றான் மற்றொரு  பையன்.

அபிநயாவை பார்த்து, கண் சிமிட்டினான் அஸ்வின்.

"மாமா, அபி அக்கா ரொம்ப கோபக்காரங்களாச்சே, நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?" என்றான் ஒரு பொடியன் கிண்டலாக.

அபிநயா தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஆமாம், யாராவது அவங்ககிட்ட வாலாட்டினானா, வச்சி வாங்கிடுவாங்க..."

அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் அஸ்வின்.

"உங்களுக்கு தெரியுமா, உங்க அக்காவும் இந்த எலி மாதிரி தான்" என்றான்.

பிள்ளைகள் சிரித்தார்கள். அபிநயா கோபப் பார்வை வீசினாள்.

"அவ கோபப்படுவா... ஆனா, எனக்கு வலிக்கிறா மாதிரி எதுவும் செய்ய மாட்டா. அந்த எலி மாதிரியே, ஒரே இடத்துல நின்னு ஓடிக்கிட்டே இருப்பா, வேற எங்கேயோ, தூரமா ஓடுறதா நெனச்சுக்கிட்டு... " என்னிடமிருந்து என்ற வார்த்தையை அவன் கூறாவிட்டாலும், அது புரிந்தது.
அபிநயா அதைக் கேட்டு வாயடைத்து போனாள். பிள்ளைகள் விபரம் புரியாமல் சிரித்தார்கள்.

"நீங்க அவங்களுக்கு ஒரு நல்ல பேர் கொடுத்திட்டீங்க. எலி அக்கா"  என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிப் போனார்கள் அந்த பிள்ளைகள். அஸ்வின், சிரித்தபடி  அவர்கள் அறைக்குள் சென்றான். அபிநயா அவனை பின் தொடர்ந்தாள்.

"அவங்க என்னை எலி அக்கான்னு கூப்பிட போறாங்க" என்று பல்லை கடித்தாள்.

"அது உனக்கு பொருத்தமா தான் இருக்கும்"

"வாயை மூடுங்க"

"பாரு உனக்கு எவ்வளவு கோவம் வருது... ஆனாலும், நீ இப்போ என்னை கட்டிப்பிடிக்க போறேன்னு எனக்கு தோணுது"

"உங்க கனவுல தான் நடக்கும்..."

"அது என்னோட கனவா இருந்தா, கட்டிப்பிடிக்கிறதோட நிக்காது..." அவளை ஆழமாய் ஊடுருவி படி பார்த்து சிரித்தான். அது அவளின் வயிற்றில் சில பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்தது.

"ப்ளூ கிராஸ் மெம்பர்ஸ் எல்லா உயிரினங்களையும் விரும்புவீங்களா?"

அவனுக்கு பதில் அளிக்காமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னும் அந்த பட்டாம்பூச்சி உணர்விலிருந்து வெளிவராததால்.

"நான் அதை நம்ப மாட்டேன். நீங்க அழகா இருக்கிற உயிரினங்களை தான் விரும்புவீங்க."

"அப்படி ஒன்னும் இல்ல. நாங்க எல்லா உயிரினங்களையும் சமமா மதிப்போம்"

"அப்படியா?"

"உங்களுக்கு ப்ளூகிராஸ் பத்தி என்ன தெரியும்?"

"நீங்க யாரை வேணாலும் கத்தியால குத்துவீங்கன்னு தெரியும்" என்றான் நக்கலாக. 

அபிநயா தன் கண்களை சுழற்றினாள்.

"சரி சரி... நான் ஒத்துக்குறேன் நீங்க எல்லா உயிரையும்  ஒரே மாதிரி தான் மதிப்பீங்க"

அவள் அருகில் வந்து, அவளிடம் ஒரு சிறிய டப்பாவை கொடுத்தான்.

"இதை உன்னுடைய அலமாரியில் இருந்து எடுத்தேன். உனக்கு கொடுக்கணும்னு தோணிச்சு..."

"என்னுடைய அலமாரியில் இருந்தா?"

ஆமாம் என்று பொறுப்புணர்ச்சியுடன் தலையசைத்தான் அஸ்வின்.

குழப்பத்துடன் அந்த டப்பாவை திறந்து, தூக்கி எறிந்த அபிநயா,

"ஆஆ ஆ..." நின்ற இடத்திலேயே, கத்தியபடி குதித்தாள்.

அவள் தோளை அஸ்வின் மெல்ல தொட, அவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அந்த டப்பாவில் இருந்தது, ஒரு கரப்பான்பூச்சி. அது இங்கும் அங்கும் பறந்து அவளுக்கு பீதியை கிளப்பியது. அவளை கட்டிக்கொண்டு சிரித்தான் அஸ்வின்.

அவள் மெல்ல தன் கண்களைத் திறந்து பார்க்க, அது அவள் அருகில் வந்தது. மீண்டும் அஸ்வினை கட்டிக்கொண்டு கத்தி கலாட்டா செய்தாள்.

அவள் கத்திய கத்தலை கேட்டு, மங்கையும், பத்மாவும் அங்கு வந்தார்கள். அவள் அஸ்வினை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒன்றும்  புரியாமல் விழித்தார்கள்.

"என்னாச்சு தம்பி?" என்றார் மங்கை.

அவளை அணைத்திருந்த தன் கரங்களை விலக்கிக் கொண்டான் அஸ்வின்.

"கரப்பான் பூச்சி..." என்று அஸ்வினை விட்டு விலகாமல் கத்தினாள் அபிநயா.

அவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

"பைத்தியக்காரி... நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம்" அங்கிருந்து நகர்ந்தார் மங்கை. அவரை பின் தொடர்ந்தார் பத்மா.

மறுபடியும் அவளை தழுவிக் கொண்டான் அஸ்வின்.

"இந்த உலகத்தில் எல்லா உயிரும் முக்கியம் தான். அதுங்க ஏதோ ஒரு விதத்துல நமக்கு உதவுது" என்றான் கனவில் மிதந்து கொண்டு.

தன் கண்களை மெல்லத் திறந்தாள் அபிநயா. தன் கண்களை இங்குமங்கும் ஓட விட்டாள். அந்த கரப்பான் பூச்சி எங்கும் தென்படவில்லை. கோபமாக அஸ்வினை  தள்ளிவிட்டாள்.

"என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க?"

"நீ ஒரு ஜான்சிராணி... யாரை வேணாலும் கத்தியால் குத்துவ... ஆனா, ஒரு கரப்பான் பூச்சிக்கு முன்னாடி உன்னோட வீரம் எடுபடல" என்று கிண்டலடித்தான்.

"அது நம்ம மேலே ஓடும் போது எப்படி தெரியுமா இருக்கும்...? யக்..." என்று வாந்தி வருவது போல் செய்தாள்.

"நான் தான் சொன்னேனே, நீங்கல்லாம் அழகா இருக்கிற உயிரினங்களை மட்டும் தான் விரும்புவீங்கன்னு... பாவம் அந்த கரப்பான்பூச்சி..."

அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள். அவன் சொல்வது உண்மை தானே? யாராவது கரப்பான்பூச்சியை விரும்புவார்களா?

அஸ்வினுக்கு ரொமான்டிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, அந்த கரப்பான்பூச்சி அறையின் மூலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அஸ்வின் எதிர்பாராத விதம், அதை நோக்கிச் சென்று, அதை தன் கையில் பிடித்தாள். அஸ்வின் ஆச்சரியப்பட்டான்.

"இப்ப என்ன சொல்றீங்க?" என்றாள் கோப சினுங்களுடன்.

"வாவ்... கரப்பாம்பூச்சி ராணி..." என்றான் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு.

அந்த கரப்பான் பூச்சியை ஜன்னல் வழியாக வெளியே எறிந்துவிட்டு, தன் கையை கழுவ, குளியலறை நோக்கி சென்றாள். அவள் வெளியே வந்த பொழுது, அவள் கையைப் பிடித்து இழுத்தான் அஸ்வின்.

"என்ன செய்றீங்க? என்னை விடுங்க."

"உன்னால கரப்பான் பூச்சியை கூட விரும்ப முடியுது... ஆனா, உன் பாவப்பட்ட புருஷன் மேல மட்டும் கரிசனம் வரலயா?" என்றவனை இமை கொட்டாமல் பார்த்தாள் அபிநயா.

"உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். நீ நிக்கிற இடத்துல இருந்து, ஒரே ஒரு அடி எடுத்து வச்சா, காதல் என்கிற பேரோட என்கிட்ட நீ வந்துடுவ. அந்த ஒரு அடி தான் பாக்கி. அதை எடுத்து வச்சி, காதலை அடைஞ்சிடு" என்றான் குழைவாக.

தன் உடல் மொத்தமும் மரத்துப் போவதை போல் உணர்ந்தாள் அபிநயா. யார் தான் இவனைப் விரும்பமாட்டார்கள்? அனைத்து நல்ல குணங்களும் கொண்ட ஒரு மனிதனைக் காண்பது எவ்வளவு அரிது... இவனிடம் தான் அனைத்து நற்குணங்களும் குவிந்து கிடக்கிறதே...

ஆனால், அவள் தான் ஏற்கனவே அந்த காதல் எனும் கோட்டையை அடைந்து விட்டாளே. அவளுக்கும் தெரியும், அவள் அவனை காதலிக்க துவங்கிவிட்டாள் என்று.  அவள் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டியது தான் மிச்சம்.

அவள் சொல்லாவிட்டால் என்ன? அதை வெளிப்படையாக அவளை செல்ல வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் கூடி வந்து கொண்டிருக்கின்றன. அவள் அதை சொல்ல போகிறாள்... விரைவில்...

 தொடரும்...




 





















Bạn đang đọc truyện trên: Truyen247.Pro