14 திட்டம்
14 திட்டம்
தருணுக்கு *நலங்கு வைக்கும்* வைபவம் முடிவுற்றது. அவன் தன் முகத்தை கழுவிக் கொள்ள, அவன் அறையை நோக்கி சென்றான். தருணுக்கு நலங்கு வைத்தது போக, வெள்ளிக் கிண்ணத்தில் மீதமிருந்த சந்தனத்தை குனிந்து எடுத்துக் கொண்டு நிமிர்ந்தார் சுபத்ரா. அப்பொழுது அஸ்வின் வந்ததைக் அவர் கவனிக்காததால், அவனுடன் மோதியதில் அவர் கையிலிருந்த சந்தனக் கிண்ணம் தவறி விழுந்து, அதில் இருந்த சந்தனம் தரையில் சிதறியது. தரையில் விழுந்திருந்த சந்தனத்தை, பீதியுடன் பார்த்துக் கொண்டு நின்றார் சுபத்ரா.
"என்ன பாட்டி இப்படி பண்ணிட்டீங்க?" என்றான் அஸ்வின், ஏதும் செய்யாதவனை போல.
"அட கடவுளே நான் இப்போ என்ன செய்வேன்?" என்று புலம்பினார் சுபத்ரா.
"பரவாயில்ல பாட்டி, இதெல்லாம் நடக்குறது தான். விடுங்க" என்றான் அஸ்வின்.
"இல்ல அஸ்வின், நம்ம குடும்ப வழக்கப்படி, இந்த சந்தனத்தை கொண்டு தான் அபிநயாவுக்கு நலங்கு வைக்கணும்."
சந்தனக் கிண்ணம் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு, அங்கு ஓடி வந்தான் அருண்.
"என்ன பாட்டி இது? இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சதுல இருந்தே எல்லாம் தப்பு தப்பாவே நடந்துக்கிட்டு இருக்கு, இப்ப அபிநயா வீட்ல என்ன சொல்லுவீங்க? அவங்க இதை கெட்ட சகுனம்னு நினைக்க போறாங்க."
"இல்ல, இல்ல அவங்களுக்கு இதை பத்தி தெரிய கூடாது. ராமு..." என்று வேலைக்காரனை அழைத்தார் சுபத்திரா.
"சொல்லுங்கம்மா"
"இதை கிளீன் பண்ணிடு"
"சரி மா"
"நான் இப்போ வரேன்" என்று உள்ளே விரைந்தார் சுபத்திரா.
நேராக பூஜை அறையை நோக்கி சென்றவர், புதிய சந்தனத்தை, வேறு ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் குழைத்துக் கொண்டு வந்தார். அதை அஸ்வின் கையில் கொடுத்து,
"இதை அபிநயா வீட்ல கொண்டு போய் கொடுத்துடு" என்றார்.
"ஆனா, மாப்பிள்ளைக்கு நலங்கு வெச்சது போக, மீதி சந்தனத்தை தான் கொடுக்கணும்னு சொன்னீங்களே?" என்று அவன் கேட்க, இயலாமையால் பெருமூச்சு விட்டார் சுபத்ரா.
"அதை விடு... நம்மால ஒன்னும் செய்ய முடியாது. அவங்களுக்கு இத பத்தி எதுவும் தெரிய வேண்டாம்"
"ஓகே" என்று தன் தோள்களை குலுக்கினான் அஸ்வின்.
"நானும் உன்னோட வரேன்" என்றான் அருண்.
"போ... ஆனா அவங்ககிட்ட எதுவும் சொல்லாதே" என்று அருணை மீண்டும் எச்சரித்தார் சுபத்ரா.
தனது உதடுகளுக்கு *ஜிப்* போடுவது போல் சைகை செய்தான் அருண்.
சந்தனம் கீழே கொட்டிய வருத்தத்துடன், தன் அறையை நோக்கி சென்றார் சுபத்ரா. அருண் சொல்வது சரி தான். இந்த கல்யாண பேச்சு தொடங்கிய நாளிலிருந்து எதுவுமே சரியாக நடக்கவில்லை.
அஸ்வினின் கையில் இருந்த சந்தன கிண்ணத்தை வாங்கி கொண்டு, காரை நோக்கி நடந்தான் அருண். அவனை அமைதியாய் பின்தொடர்ந்தான் அஸ்வின்.
"அபிநயா மாதிரி ஒரு நல்ல பொண்ணை மனைவியா அடையிற தகுதி தருணுக்கு இருக்குன்னு நீ நினைக்கிறாயா?" என்றான் அருண்.
"என்னைப் பொறுத்தவரை, எந்தப் பெண்ணையுமே மனைவியா அடைய அவனுக்கு தகுதி இல்ல" என்றான் அஸ்வின்.
"ஆமாம்...உன்னை மாதிரி ஒரு நல்லவன் தான் அவங்களுக்கு கணவனா கிடைக்கணும்" என்றான் அருண்.
"நான் நல்லவன் இல்ல" என்றான் புன்னகையுடன் அஸ்வின்.
"ஆனா, கெட்டவனும் இல்லயே... இந்த கல்யாணத்தை நிறுத்த, நீ ஏன் எதுவுமே செய்ய மாட்டேங்குற?"
"என்னை என்ன செய்ய சொல்ற? நம்மள விட அதிகமா, தருணை நம்புறாங்க பாட்டி. அவன் அவங்கள நல்லா பிரைன் வாஷ் பண்ணி வச்சிருக்கான். எல்லாத்துக்கும் மேல, அவன் அபிநயாகிட்ட எப்படி நடந்துக்கிட்டான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்புறம் அவங்ககிட்ட பேசி என்ன பிரயோஜனம்?"
"நீ பேசுறத பாத்தா, அவங்க, உன்னைவிட பவர்ஃபுல்னு சொல்ற மாதிரி இருக்கு."
"இது பவரை பத்தின விஷயம் இல்ல"
"தருண் இப்ப இருக்கிற மாதிரி, எப்பவும் அவனை பூட்டி வைக்கணும். இல்லனா, அவன் நிறைய பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசம் பண்ணிடுவான். இந்தக் கல்யாணத்தை பண்ணி வைக்கிறதால அவன் மாறுவான்னு நான் நம்பல. அவன் செய்ற வேலைகளை செஞ்சிகிட்டு தான் இருப்பான். தயவு செஞ்சி இந்த கல்யாணத்தை நிறுத்திடு. நான் ஓப்பனா சொல்றேன்... அதை செய்ய, நானும் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்."
"உண்மையான நிலையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. இந்த கல்யாணத்தை நிறுத்துறது தீர்வாகாது."
"நீ என்ன சொல்ற?"
"இந்த கல்யாணம் நடக்கட்டும்"
"ஒன்னு, அபிநயா தருணை கொன்னுடுவாங்க. இல்ல, நம்ம மேல இருக்குற கோவத்துல, அவங்க நம்ம குடும்பத்துக்கு நல்ல மருமகளா நிச்சயம் இருக்க மாட்டாங்க. நம்ம எல்லாரையும் கதற விடுவாங்க"
"அதைப் பத்தி அவ புருஷன் தானே கவலை படணும்? நீ கூலா இரு." என்றான் இதழ் ஓர புன்னகையுடன்.
"இந்த ஒரு விஷயத்துல நான் உன்னை ரொம்ப வெறுக்கிறேன்" என்று பல்லை நறநறவென்று கடித்தான் அருண்.
"தேங்க்யூ" என்றான் சிரித்தபடி.
திருவன்மியூர்
சந்தனக் கிண்ணத்தை பத்மாவிடம் அளித்தான் அஸ்வின். அதை அவன் கையில் இருந்து பெற்றுக் கொண்டு, அவர்களை அமருமாறு கேட்டுக்கொண்டார், பத்மா. உள்ளே செல்ல எத்தனித்தவளை அழைத்தான் அஸ்வின்.
"ஆன்ட்டி..."
"சொல்லுங்க தம்பி..."
"அங்கிளுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு? பரவாயில்லயா?"
அவன் காட்டிய அக்கறையை பார்த்து வியந்து போனார் பத்மா. ஏனென்றால், அவனுடைய பாட்டி சுபத்திரா கூட, அவள் கணவரைப் பற்றி இது வரை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
"நல்லா இருக்காருப்பா" என்றார்.
"இந்த கல்யாண வேலைக்கு இடையில அவரை கவனிச்சிகுறது உங்களுக்கு கஷ்டமா இருக்கு இல்லயா?"
"நீங்க சொல்றது சரி தான், தம்பி. எல்லா வேலையும் நானும் அக்காவும் செய்ய வேண்டி இருக்கு..."
"நீங்க தப்பா நினைச்சுக்கலனா அவரை கவனிக்க நான் ஒரு நர்சை அப்பாயின்ட் பண்றேனே"
அதை கேட்டு பூரித்து போனார் பத்மா.
"பரவாயில்ல, தம்பி. இன்னும் இரண்டு நாள் தானே... அதுக்கப்புறம் நாங்க சும்மா தானே இருக்கப் போறோம்" என்றார் அதே பூரிப்புடன்.
"உங்களுக்கு ஏதாவது வேணும்னா, தயவு செஞ்சி எந்த தயக்கமும் இல்லாம என்கிட்ட கேளுங்க"
"நிச்சயமா..." என்று மகிழ்ந்ததோடு நில்லாமல்,
சந்தனக் கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை, அவர் கட்டை விரலால் தொட்டு, அஸ்வினின் நெற்றியில் திலகமிட்டு,
"நீங்க நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தினார்.
அஸ்வின் மட்டுமல்ல, அருணும் கூட விக்கித்துப் போனான். தருண் பயன்படுத்திய சந்தனத்தை, அபிநயா பயன்படுத்த கூடாது என்று தான் அஸ்வின் எண்ணியிருந்தான். ஆனால், அவனே கூட எதிர்பாராத விதமாய், பத்மா அந்த சந்தனத்தை அவனுக்கு இட்டு விட்டார். இப்பொழுது அந்த சந்தனத்தினால் தான் அபிநயாவுக்கு நலங்கு வைக்கபட இருக்கிறது. மனதுக்குள் சிரித்துக் கொண்டான் அஸ்வின்.
அதே நேரம் அபிநயா, நலங்கு வைக்க, வரவேற்பறைக்கு அழைத்து வரப்பட்டாள். வழக்கம் போல, அஸ்வினை பார்த்த மாத்திரத்திலேயே வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளைப் பொறுத்த வரையில் அவன் தான் ஒரு உதவாக்கரை ஆயிற்றே...!
ஆனால் அஸ்வினோ, தன்னை மறந்து நின்றான். அவள் மிக அழகாய் இருந்த போதிலும், அவளுடைய முகத்தில் துளி கூட சந்தோஷம் தென்படவில்லை. அஸ்வினை சிறிதும் சட்டை செய்யாமல், அங்கு வைக்கப்பட்டிருந்த மனையில் வந்து அமர்ந்தாள். அவளுடைய இறுமாப்பான செய்கையை பார்த்து, குறும்புப் புன்னகை பூத்தான் அஸ்வின்... *இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு?* என்பதைப் போல.
பத்மா சந்தனக் கிண்ணத்துடன் சென்று நலங்கை துவங்கி வைத்தார். அதை பார்க்க மிகவும் ஆர்வமானான் அஸ்வின். ஒரு பெண் அந்த சந்தனத்தை அவள் கண்ணத்தில் தடவிய போது, அவன் முகம் மலர்ந்தது. அவர்களின் குடும்ப வழக்கப்படி, நலங்கு இனிதே நடைபெற்றது.
"நாங்க கிளம்புறோம், ஆன்ட்டி" என்றான் அஸ்வின்.
"சரிங்க தம்பி" என்றார் பத்மா.
அபிநயாவை ஓரப் பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான் அஸ்வின்.
திருமணத்திற்கு முதல் நாள்
தனது கையிலிருந்த சிப்ஸ்ஸை கொரித்துக் கொண்டிருந்தான் மனோஜ். இங்குமங்கும் நடந்து கொண்டிருந்த அருணை பார்த்து அவன் சிரிக்க, அவன் கையிலிருந்த சிப்ஸ் பாக்கெட்டை பறித்து, கீழே போட்டு, அதை ஓங்கி மிதித்து நொறுக்கினான் அருண்.
"வாட் த ஹெல்... அது ஃபாரின் சிப்ஸ் தெரியுமா...? என்னோட ஃபிரண்ட் அதை வாங்கிட்டு வந்தான். நான் அதுக்காக பத்து நாள் காத்திருந்தேன்"
"ஒரு பொண்ணோட வாழ்க்கை, இங்க ஊசலாடிக்கிடிருக்கு... நீ என்னடான்னா இந்த சிப்ஸ்ஸை பத்தி கவலைப் படுற..."
"ரிலாக்ஸ்..."
"உங்க ரெண்டு பேரையும் நான் வெறுக்கிறேன்... நீயும் ஆவின் மாதிரியே நடந்துக்கிற" என்றான் கடுப்புடன்.
"நான் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டேன்... ஓகேவா?"
"நிஜமாவா...? எப்போ?" என்றான் நம்ப முடியாமல்.
"மனோஜை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?" என்று தன் காலரை உயர்தினான் மனோஜ்.
"டேம் யூ... ஐ லவ் யூ, மேன்" என்று அவனை கட்டி அணைத்தான் அருண்.
"அஸ்வின், அபிநயாவை விரும்புறான். அதனால தான் நான் இதை செஞ்சேன்"
"உன்னோட பிளான் என்ன?"
"என்னோட ஆளுங்க, சரியா கல்யாண நேரத்துக்கு முன்னாடி, தருணை கடத்திடுவாங்க"
"வாவ்... அப்படியே அவனை நல்லா கவனிக்க சொல்லு" என்றான் அருண்.
"எவ்வளவு முடியுமோ அவ்வளவு..." என மனோஜ் சொல்ல, இருவரும் இடி இடி என சிரித்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro