Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புயலே 5

அத்தியாயம் 5

ராமின் பார்வையில் புருவத்தை உயர்த்தி என்ன என்பதை போல் கேட்டான் யாதவ்... ஒன்னுமில்லை என்பதைப் போல் தலையாட்டினான்.. ஆனால் துகிராவின் பெயரை ஆரா என்று அழைக்கும் காரணம் தான் புரியவில்லை.

அவ்வெண்ணத்தை அப்படியே ஒதுக்கிவிட்டு  "சர்ஜரி கிளாஷுக்காவது போகணும் டா..." கைக் கடிகாரத்தை பார்த்தபடி கூறினான்.

"ம்மம்..." என்றபடி மணியை பார்த்தவன் தாயிடம் "வரேன் மாம்..." என்றான் யாதவ்.

"நம்ம காரே  ரெடியாகிடுச்சு யாதவா... அதையே எடுத்துட்டு போங்க..." என்றதும் சரியென்று தலையாட்டியவன் தனது வாகனத்தின் சாவியை ராமிடம் கொடுத்தான்.

"போயிட்டு வரோம்மா..." என்று ராமும் விடைப் பெற, இருவரும் கல்லூரியை நோக்கி பயணப்பட்டனர்.

முன்பிருந்த ஜன நெரிச்சல் சற்றே குறைந்திருந்தது. அதீத வேகமும் இல்லாமல், குறைந்த வேகமும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது யாதவனின் நான்கு சக்கர வாகனம்.

அக்கணம்  தீடிரென ஆடவனது உடலில் அதீத குளிரை உணர்ந்தான். கைகள் தன்னாலேயே கட்டிக் கொண்டது. இருந்தும் குளிர் அவனது உடலை நீங்குவேனா என்றது.

நேரம் செல்ல செல்ல மேனி முழுவதும் குளிரால் விரைத்துக் கொள்ள "ஹக்..." என்ற சத்தத்தோடு கண் விழித்தான் நந்தன் யாதவ் பிரசாத்.

கண்ணாட்டியை நினைத்துக் கொண்டே உறங்கி விட்டவனுக்கு கடந்த கால நினைவுகள் அனைத்தும் கனவாய் வந்திருக்கிறது என்பதை உணரவே பல நிமிடங்கள் தேவைப் பட்டது..

அப்பொழுதும் அவனது உடல்  குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியில் மழைக் கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதை ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த மழையின் துளிகள் காட்டிக் கொடுத்தது.

மழை காற்றின் ஈரமும், ஏசியின் குளிரும் இவனது உடலுக்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. ஊப் என்று காற்றை வாயில் நிரப்பி ஊதிக் கொண்டவன்  ஏசியை ஆப் செய்து விட்டு படுக்கையில் விழுந்தான்.

குளிருக்கு இதமாக தலை முதல் கால் வரை போர்வையை இழுத்து போர்த்தி கொண்டவன் உறங்க முயற்சித்தான். உறக்கம் வருவேனா என்றது... புரண்டு புரண்டு படுத்தவன் எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை அதிகாலையில் ராம் வந்து எழுப்பிய பிறகே எழுந்தான்.

"யாதவா... மச்சி டேய்..." போர்வையை ஒரு பக்கமாக இழுத்தான் ராம்.

நண்பனின் குரலில் அடித்துப் பிடித்து எழவில்லை என்றாலும் மெல்லமே புரண்டு படுத்தான்.

"மச்சி டேய்..." கொஞ்சம் பெரிய குரலில் அழைத்தான் ராம்.

இப்பொழுது போர்வையை மட்டும் விலகி  "என்ன டா..." என்றான் உறக்கம் கலையாதக் குரலில்.

"இப்ப கிளம்பினா தான் டா மதியதுக்குள்ள ஈரோடு போக முடியும். கொஞ்சம் எழு டா..." என்றான் கெஞ்சலாக.

"ம்ம்..." என்றவன் போர்வையை விலக்கியப்படி குளியலறையை நோக்கி நடந்தான்.

'எத்தனை அலைச்சல் இவனுக்கு...  பேசாம அங்கேயே ஏதாவது ரூம் அரேஞ்ச் பண்ணுவோமா, ஹாஸ்பிடல்ல லீவ் சொல்றதுக்கு முன்னாடி இவன்ட கேட்டுட்டு முடிவு பண்ண வேணும்...' என்று நினைத்தான்.

"மச்சான் டேய்,  ரெடியாகிட்டு இரு, நானும் ஃப்ரெஷ்ஷப் ஆயிட்டு வந்துடறேன்..." என்றான் குரல் உயர்த்தி...

முகத்தைக் கழுவி விட்டு வெளியில் வந்தவன் சரியென்று தலையாட்டினான்."டேபிள் மேல காபி இருக்கு எடுத்து குடிச்சிட்டு தென் ரெப்பிரஷ்ஷாயிட்டு வா டா..." என்றான் ராம்.

"சரி டா..." என்றவன் ராம் வைத்திருந்த காபியை பருகிவிட்டு தன்னவளை காண ஆயத்தமானான்...

அடுத்த சில நிமிடங்களில் குளித்து விட்டு வெளியில் வந்தவன் டிரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்றிருந்தான். ஆளுயரக் கண்ணாடியின் முன் தன் பிம்பத்தை பார்த்தவனது இதழ்களில் மெல்லிய புன்னகை...

"ரொம்ப அழகா இருக்கீங்க நந்தன்..." இப்பொழுதும் பாவையின் வார்த்தைகள் காதில் கேட்க...   அவனது இதழ்களில் மலர்ந்த மெல்லிய புன்னகை கூட சிரிப்பாய் உருமாறியது.

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்..

என்ற பாடல் வரிகளை மெல்ல முணுமுணுத்தான்.

"என்ன சொல்ல போகிறாய்..." என்று ஆடவனது தோளில் கைப் போட்டப்படி பாடினாள் நவிதா...

பக்கவாட்டில் நின்ற நவிதாவை பார்த்தவன் இதழ்கள் இன்னும் விரிந்து கொண்டது. "என்ன வாண்டு..." எனக் கேட்டான்.

"என்ன அண்ணே ஒரே பாட்டா இருக்கு.என்ன மேட்டர்..." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டாள். ஒன்றுமில்லை என்பதை போல் தலையாட்டியவனை நம்பாது பார்த்தாள் நவி...

மதங்கியின் பார்வையில் சிரித்தவன் "உன் அக்கா ஞாபகம் வந்துருச்சு..." என்றதும் இளையவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து அமர்ந்தது.

"நேத்து அவளைப் பார்க்க தான் போனேன்..." என்றான் யாதவ்.

"ம்ம் ராம் அண்ணா சொன்னான்..." என்றாள் மெல்ல.

அக்கணம் நவியின் தலையில் தட்டியப்படி "என்ன ராம் அண்ணா சொன்னான்..." என்று கேட்டுக்  கொண்டே அவர்களோடு வந்து நின்றான் ராம் பிரசாத்.

"எருமை..."என்று ராமை அடிக்க போனவள் அவன் அடிக்கு சிக்காமல் விலகி போனதும் யாதவிடம் திரும்பி "பாருங்க அண்ணா..."புகார் வாசித்தாள் நவி...

அவனோ "ஏண்டா..." என்பதை போல் ராமை பார்த்தான்.

ஆடவனது பார்வையை அசட்டை செய்தவன் நவியிடம் திரும்பி "அம்மா பூசணிக்காய் அல்வா செஞ்சு வைச்சு இருக்காங்களாம் பம்ப்கின்..." என்றதும் மற்ற அனைத்தையும் மறந்து "நிஜமாவா?..." எனக் கேட்டாள் கண்களை விரித்து..

இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியபடி ஆமென்பதைப் போல் தலையாட்டினான். அடுத்த நிமிடம் சிட்டாய் பறந்து விட்டாள் நவிதா.. செல்லும் தங்கையை இதழ்களில் மலர்ந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவன் யாதவிடம் திரும்பி

"டைம் ஆயிடுச்சு, நாம கிளம்ப வேண்டாமா?..." என்றான்.

"நாம இல்லை நான்... நான் மட்டும் தான் போறேன். நீ வர வேண்டாம்..." என்றான் யாதவ்...

"வாட்,நீ மட்டுமா அதெல்லாம் வேண்டாம்..." அவசரமாக மறுத்தான் ராம்.

"நான் பார்த்துக்கிறன் டா மச்சி.நீ பயப்படறளவுக்கு எதுவும் நடக்காது, கொஞ்ச நாளைக்கு அங்கையே இருக்கிறது போல் ஏற்பாடு பண்ணிட்டேன்..." என்று கூறினான்.

"எங்க தங்க போற நீ..." எனக் கேட்டான் ராம்... அவன்  விலாசத்தை கூறியதும் ராமின் இதழ்கள் புன்னகை பூசிக் கொண்டது

"நீ நடத்து மாப்பிள்ளை..." என்றவன் மீண்டும் "நான் கூட வந்து ட்ராப் பண்றேன் டா. ரொம்ப தூரம் தனியா டிராவல் பண்ண வேண்டாம்..." என்றான் அக்கறையான குரலில்.

"நான் பார்த்துக்கிறேன் டா... ரொம்ப யோசிக்காத..இப்ப நான் நல்லா இருக்கேன்..." என்றான் சிரிப்போடு.

யாதவ் தனியாக செல்வதில் துளியும் விருப்பமில்லை ராமிற்கு.   யாதவின் அடத்திற்காக மட்டுமே அவனை தனியாக அனுப்ப ஒப்புக் கொண்டான்.

"என்னமோ சொல்ற, நானும் சரின்னு சொல்றேன்..." என்றவன் "தனியா போயிடுவ தானே மச்சி..." எனக் கேட்டான் ராம்.

யாதவிற்கோ சிரிப்பு தான் வந்தது
"அடேய்.. நான் பார்த்துக்கிறேன் டா..." என்றான். மனமே இல்லாமல் சரியான்றான் ராம் பிரசாத்..

அடுத்த சில நிமிடங்களில் யாதவ்  கிளம்பி வெளிவர. ராமும் மருத்துவமனை செல்ல வெளியில்  வந்தான்.

ராமை கேள்வியாகப் பார்த்தான் யாதவ். அவனது பார்வையை புரிந்து கொண்டவன் போல "ஹெட் கால் பண்ணார் டா... இம்போர்ட்டன்ட் கேஸ் ஒன்னு இருக்கு வர முடியுமா கேட்டார். சோ ஒரெட்டு போயிட்டு வந்துடறேன்..." என்றவன் மேலும்

"சரி டா பார்த்து போ அங்க போனதும் கால் பண்ணு..." என்றான். சின்ன தலையசைப்பு மட்டுமே யாதவிடத்தில்.

அதன் பிறகு இருவரும் உண்டு முடித்ததும் கிளம்பினர். ராம் மருத்துவமனையை நோக்கி பயணிக்க... யாதவோ ஈரோடை நோக்கி பயணித்தான்.

இருவரின் இந்த பயணம் இனிமையானதாக அமையுமா? பார்ப்போம் விதி யாரை விட்டது...

*****

சென்னை பரபரப்பிற்கு துளியும் சம்பந்தமில்லாமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பிரபல மருத்துவமனை.

மருத்துவமனை கட்டிடத்தை சுற்றிலும் பெரிய பெரிய மரங்களும், கண்ணை கவரும் பூச்செடிகளும் இருந்தது. கட்டிடத்தின் பக்கவாட்டில் சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமும் பெரியவர்கள் அமர்ந்து பேசக் கூடிய அளவிற்கு கார்டன் ஏரியாவும் இருந்தது. பார்க்கில் பிள்ளைகள் விளையாடுவதையும், அங்கிருக்கும் வண்ணப் பூக்களை கண்டாலே குழப்பத்தில் அங்கு வரும் மனிதனின் மனம் சற்றே அமைதியாகி விடும் என்பது அத்தனை உண்மை...

அக்கணம் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் கவனத்தை ஈர்க்க அதீத பிரயத்தனம் செய்தது  மரக்கிளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தென்றல்...

மரக்கிளைகளின் நடுநடுவே சென்று சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மங்கையின் கவனம் அந்த ஈர்த் தென்றலின் மீதோ மரக் கிளைகளின் சலசலப்பின் மீதோ செல்லவே இல்லை.

அழகிய தமிழ் மகளின் கவனம்
தன் மீது துளியும் இல்லை என்றதும் மங்கையின் மீது கோபம் கொண்ட தென்றலோ பெண்ணின் முகத்தை கொஞ்சம் வேகமாக வருடி விட்டது...

தன் நினைவில் உழன்று கொண்டிருந்தவள் தென்றலின் தீண்டலில் நடப்பிற்கு வந்தாள். நன்கு வாரி இறுக பின்னியிருந்த ஈரக் கேசம் கூட தென்றலின் வருடலுக்கு ஏற்ப அசைந்து கொடுத்தது.

நெற்றியை வருடி, கன்னத்தில் முத்தமிட்டு, கழுத்தில் அழுத்தமாக புதைந்து போன கேசத்தை செவியோரம் ஒதுக்கி விட்டாள் பாவை.

தையலின் முகம் அத்தனை அமைதியாக இருந்தது. அதற்கு மாறாக மனம் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. மனதின் ஆர்ப்பரிப்பு பாவையின் கண்களிலும்  பிரதி பலித்தது.

அலைபாயும் கண்களை இறுக மூடி கொண்டாள். கண்களுக்குள் பல கொடூரமான நினைவுகள் மின்னி மறைந்தன. பட்டென கண்களை திறந்து கொண்டவளின் காதில் "மிஸ் அனிதா சந்திரசேகர்..." என்ற குரல் கேட்டது.

குரல் வந்த திசையை பார்த்தாள் பெண் "இப்ப நீங்க உள்ள போகலாம்..." என்றார் அட்டென்ட்டர்

"ம்ம்..." என்றபடி எழுந்து கொண்டவள் மருத்துவரின் அறையை நோக்கி நடந்தாள்.

இவள் அனிதா சந்திரசேகர்,  அழகின் மொத்த இலக்கணம், மலரினும் மெல்லியவள், கொள்ளைக் கொள்ளும் அழகும், பெண்மையும் நிறைந்த மலர்கொடியாள்.

அதனால் தான் இந்த நயவஞ்சக உலகத்தில் பல கொடூரங்களில் சிக்கி தவித்து, போராடி தப்பித்து வந்திருக்கிறாள்.

அப்படி வந்தவளுக்கு கிடைத்த பரிசு என்னவோ தனிமை மட்டும் தான்!

அந்த தனிமை  தான் அவளை இன்னும் இன்னும் மனதளவில் முடக்கி வைத்து விட்டது.

அவளுள் ஏதோ ஓர் மாற்றம். உண்மையை சொல்லப்போனால் இப்போதெல்லாம் தையல் சிரிப்பதேயில்லை.

பல நேரம் சிந்தனையில், பல நேரம் கேள்வியில், பல நேரம் எப்படி செல்கிறது என்றே தெரியாமல் தான் அவளது நாட்கள் நகர்கின்றது...

இப்படியே சென்றால் தனது நிலைமை என்னாகுமோ ? இந்த கேள்வி தான் அனிதாவை இங்குவரை அழைத்து வந்திருக்கிறது.

ஆம் தற்பொழுது அவள் மனநல மருத்துவமனையில் தான்  இருக்கிறாள்..

முகத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் அனிதா..

"வாங்க மா... சிட்..." என்றவர்

"என் ஒய்ஃப்,  உங்களைப் பத்தியும் உங்க அம்மாவை பத்தியும் நிறையா சொல்லிருக்காங்க..." என்றார் புன்னகையோடு..

ஆம், அவளது தாயின் நெருங்கிய தோழியான விஜயா தற்செயலாக  இவளது வீட்டிற்கு வந்திருந்தார்.

அவரிடம் மனம் விட்டு பேசவில்லை என்றாலும் தாயின் இறப்பை கூறிவிட்டு 'அம்மாவோட இழப்பு ரொம்ப என்னை பாதிச்சுடுச்சு ஆன்டி.. கவுன்சிலிங் போறது போல ஏதாவது ஹாஸ்பிடல் சொல்ல முடியுமா...' என்று கேட்டிருந்தாள்.

தாய், தந்தையென இருவரையும் இழந்து தனியாக நிற்கும் பெண்ணின் நிலை அவருக்கு புரிந்தது. அதனாலேயே தன் கணவரின் மருத்துவமனைக்கே அனிதாவை செல்ல கூறினார்.

அவர் கூறிய  மருத்துவமனைக்கு வந்தவளுக்கு  தற்பொழுது மருத்துவர் கூறிய பிறகே விஜயா இவரின் மனைவி என்பது தெரிய வந்தது. 

அவளது அமைதி மருத்தவருக்கு புரியத் தான் செய்தது.  அதனாலயே நேரடியாக சற்று முன்னர் பரிசோதித்ததை பற்றி பேச ஆரம்பித்தார்.

  "உங்க டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன் அனிதா.  நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க. கொஞ்ச நாளைக்கு எங்க டாக்டர் கிட்ட கவுன்சிலிங் வாங்க அண்ட் அவர் சொல்ற மெடிசன்ஸ் எல்லாம் பிரப்பரா ஃபாலோ பண்ணாவே போதும். நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னுமில்லை.." என்றார் தலைமை மருத்துவர்...

"சரிங்க சார்..." என்றவள் எழுந்து செல்ல பார்க்க

"வெயிட் அனிதா. இப்ப உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் போற டாக்டர் வர சமயம் தான். நானே அவரை உங்களுக்கு இன்ட்ரோ பண்றேன்..." என்றார் தலைமை மருத்துவர்...

அவர் அப்படி கூறியதும் ஒரு பக்கம் கைகால்கள் எல்லாம் ஆட்டம் கண்டது அனிதாவிற்கு. தெரிந்தவர் என்றாலும் ஒரு வித பயம் அவளை ஆட்க் கொண்டது. கைகளை பிசைந்தபடி சுற்றிலும் பார்வையைப் பதித்தாள்.

அக்கணம் "எக்ஸ்கியுஸ் மீ சார்..." என்றபடி உள்ளே நுழைந்தான் ராம் பிரசாத்.

உள்ளே நுழைந்தவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் சட்டென குனிந்து கொண்டாள். அதற்கு பின் நிமிரவே இல்லையே...

"வாங்க சார்..." என்றவர் அனிதாவை பார்த்து "இவங்க அனிதா, இவங்களை நீங்க கொஞ்சம் பெர்சனலா ஹேண்டில் பண்ண வேணும் சார்..." என்றார் தலைமை மருத்துவர்.

"ஓகே சார்..." என்று அனிதாவின் ரிப்போர்ட்டைப் பார்த்தவன் பின் அனிதாவை பார்த்தான்.

அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். பாவையின் அலைபாயும் கண்களும், துடிக்கும் இதழ்களும் அவளது பயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அனிதாவின் பயத்தை ஆண்கள் இருவருமே உணர்ந்து தான் இருந்தனர்...

"அனிதா, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க..."  தலைமை அதிகாரி சொல்ல சரியென்று தலையாட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் பெண்...

பாவை வெளியே சென்றதும் "கொஞ்சம் கிரிட்டிகல் ரேஞ்ச் தான் ராம்... நீங்க ஹேண்டில் பண்ணிடுவீங்கன்னு தான் நேரடியா உங்ககிட்டயே சொன்னேன்..." என்றவர் மீண்டும்

"ஏதோ ஒரு விஷயத்தில அதிகமா பாதிக்கப்பட்டு இருக்காங்க. அதோட விளைவு பல மாசம் தனிமையிலேயே இருந்திருக்காங்க. அவங்க தனிமையும் அதனாலா உண்டான பயமும், இவங்களை தூங்க விடாம பண்ணிருக்கு. அந்த தூக்கமும், இவங்க மனசை அழுத்திட்டு இருக்கிற விசயமும் சரியான பாதிக்கு பாதி இவங்க குணமாகிடுவாங்க..." என்றார் தலைமை மருத்துவர்.

"இவ்வளவு எடுத்து சொல்றேன்னா இந்த கேஸ் எனக்கு ரொம்ப முக்கியம்ன்னு புரிஞ்சுக்கோங்க ராம். மாத்திரை மருந்து மட்டுமில்ல உங்க கவுன்சிலிங்கும் அந்த பொண்ணுக்கு தேவை.அதான் பெர்சனலா உங்ககிட்ட சொல்றேன். அண்ட் பிராப்பர் ரிப்போர்ட் மெயில் பண்ணிடுங்க..." என்றார் தலைமை மருத்துவர்.

"ஓகே டாக்டர்..." என்று எழுந்து சென்றவனின் மனம் கேட்ட ஒரே கேள்வி "இந்த பெருசுக்கு, அந்த சிறுசு என்ன உறவா இருக்கும்..." என்பது தான்.

தலைமை மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்தவனின் பார்வை வராண்டாவில் அமர்ந்திருந்தவளை தொட்டு மீண்டது.

ஒரு பார்வை தான் மீண்டும் பாவையை கண்டுகொள்ளாமல் நேராக தன் அறைக்கு சென்றவன் அட்டெண்டரிடம்

"மிஸ் அனிதாவை வர சொல்லுங்க..." என்றான்.

"மேம்...நீங்க உள்ள போலாம்..."அட்டெண்டர் கூறியதும்   ராமின் அறையை நோக்கி நடந்தாள்.

நிலைக் கதவின் வலது பக்கத்தில் "டாக்டர் ராம் பிரசாத், MD psychology..." என்ற பெயரை தாங்கி நின்றது அந்த நீல நிற பெயர் பலகை... அதனைப் பார்த்துக் கொண்டே ராமின் அறைக்குள் நுழைந்தாள் அனிதா.

"சிட் மிஸ் அனிதா சந்திரசேகர்..." தன் முன்னிருந்த இருக்கையை கைக் காட்டினான் ராம்.

"தேங்க் யூ சார்..." என்றபடி அவன் கைகாட்டிய இடத்தில் அமர்ந்தவளை சின்ன புன்னகையோடு பார்த்தவன்

"ஃபீல் ஃப்ரீ மிஸ் அனிதா..." என்றான்.

இதழின் கடயோரம் மலர்ந்த புன்னகையோடு சரியென்றாள். மறைந்தும் மறையாமல் வெளிவந்த புன்னகையை மீண்டும் காண வேண்டுமென்று ஆவல் கொண்டானோ? என்னவோ

"சேர் எட்ஜ்ல உட்கார்ந்து பேசணும் இல்லை.. நல்லாவே உட்காருங்க நான் எக்சஸ்ட்ரா ஃபீஸ் எதுவும் கேட்க மாட்டேன்..." என்றான் கிண்டலாக.

"ஹாங்...என்ன..." கண்களை விரித்து ராமை பார்த்தவள் பின் அவன் கூறியதை செய்தாள்.

பெண்ணின் என்ன என்ற கேள்வியில்
"ஃபீல் ஃப்ரீன்னு சொன்னேன்..." என்றான்.

"ம்..." மெல்லியதாக கேட்டது பெண்ணின் குரல்

மெல்லிய புன்னகையோடு
"Are you a single daughter?..." ஒரே பொண்ணா? என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

"ம்ம்... ஆமாம் சார்..." என்றாள்.

"அம்மா, அப்பா என்ன பண்றாங்க..." அடுத்த கேள்வி அவனிடத்தில்...

"அப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டார். அம்மா பக்கமா  இறந்தாங்க..."அமைதியாக ஒலித்தது பெண்ணின் குரல்...

"அம்மா எப்படி இறந்தாங்க? நெட்சரல் டெத் தானே..." எனக் கேட்டான்.

"ஹான்...ஆ...மா... ஆமா டாக்டர்..."  அவசரமாக கூறினாள்.

மானினியின் குரலில் தெரிந்த அதீத பதட்டத்தையும், நடுக்கத்தையும் குறித்து கொண்டான். பின் அடுத்த சில கேள்விகள் சாதரணமாக கேட்டான். அச்சாதரணமான கேள்விகள் கூட அவள் பயந்து, நடுங்கி தான் பதில் கூறினாள்.

ஒவ்வொன்றையும் குறித்து கொண்டவன் அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தான்.

"ரெகுலரா வரணும் மிஸ் அனிதா சந்திரசேகர்...அப்ப தான் டிரீட்மெண்ட் மிஸ் ஆகாம போகும்..." என்றவனிடம் சரியென்று தலையாட்டி விட்டு எழுந்தாள்.

"அண்ட் நீங்க எனக்கொரு உதவி செய்யணுமே..." நெற்றியை வருடி கொண்டே யோசனையாக கூறுவது போல் கூறினான்.

'என்ன...' என்பதைப் போல் பார்த்தாள் அனிதா.

"உங்க வீட்டுக்கு பக்கத்தில ஒல்டேஜ் ஹோம் இருக்கு... அங்க தினமும் போகணும். போவீங்களா?.." எனக் கேள்வியாக கேட்டான்.

அவளோ ' ஏன்...' என்றாள் ஒற்றை கேள்வியாக.

அவளின் கேள்வியில் புன்னகைத்தவன் "அங்க போங்க சொல்றேன்..." என்றான்.

அதற்கு மேல் அவனிடம் கேள்விக் கேட்க வரவில்லை அவளுக்கு.  சற்று  தயங்கியப்படி சரியென்றவள் அங்கிருந்து நகர்ந்தாள். செல்லும் பெண்ணை ஒரு பார்வைப் பார்த்தவன் பின் அடுத்தடுத்த வேலையில் கவனமானான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro