Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புயலே 4


அத்தியாயம் 4

உன்னை காணும் வரை

உன் மேல் வெறுப்பு மட்டுமே

என் மனதில்..!!!

உன்னை மீண்டும் கண்ட நொடி

என்னுள் புதைத்த காதல்

துளிர் விடுவதுதேனோ...

செப்பு இதழ்களை திறந்தப்படி ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள் துகியின் மகள் சரண்யா... மகளின் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டிருந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

குழந்தைகளை தந்தையின் பாசத்திற்காக ஏங்க வைக்கிறோமென்று நினைத்தவளின் மனமோ சொல்ல முடியா வேதனையில் சுழன்றது...

மகளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள் அவளின் அருகிலேயே படுத்துக் கொண்டாள்... தையலின் நினைவுகள் முழுவதும் தன்னவனை முதன்முறையாக பார்த்த நாளை நோக்கி வேகமாக நகர்ந்தது...

இங்கு தையலின் நினைவுகளுக்கு காரணமானவனோ தன் வலது கையிலிருந்த தழுப்பை வருடிக் கொண்டிருந்தான்... மெல்லிய புன்னகை அவனது இதழ்களில்.

'ஆமா நான் தான் பண்ணேன்.. அதுக்கு என்ன இப்ப?...' அத்தனை தெனவெட்டாக புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவளின் முகம் மின்னி மறைந்தன...

"ரவுடி..." செல்லமாக முணுமுணுத்தவன் கண்களுக்குள் விழுந்தன அன்றைய நாளின் நினைவுகள்.

*****

தென்னிந்தியாவின் தலைவாசல் என்றழைக்கப்படும் சென்னை தான் தற்பொழுது நம் கதையின் கதைக் களம்...

இந்தியாவிலேயே வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிகிறது என்பதாலோ என்னவோ சென்னையில் வாகன நெரிசல்கள் சற்றே அதிகம் தான்.

அதுவும் காலை எட்டு மணியிலிருந்து பத்து மணி வரையிலும் இருக்கும் ட்ராஃபிக் ஜாமை பற்றி சொல்லவே வேண்டாம் ஒரு சில கிலோ மீட்டர் வரையிலும் வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.

அத்தகைய போக்குவரத்து நெரிசலில் தான் மாட்டிக் கொண்டிருந்தது அந்த அரசுப் பேருந்து. நிமிடங்கள் பல கடந்தும் நின்ற இடத்தை விட்டு துளியும் நகராது இருந்தது அந்த பேருந்து.

காலை ஒன்பது மணியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பகலவன் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தது... இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இணையாகப் பேருந்து நெரிசலில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு வியர்த்து ஊற்றியது.

அதிசயமாக அன்று அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நம் நாயகனின் நிலையை சொல்லவே வேண்டாம்.

வியர்வையில் குளிக்கவில்லை அவ்வளவு தான். நெற்றி, கழுத்து வளைவு, கை முஷ்டி என்று பல இடங்களில் வியர்வை வழிந்துக் கொண்டிருந்தது...

நெற்றியில் வழிந்த வியர்வையை கைக் குட்டையில் துடைத்துக் கொண்டே அருகில் நின்ற நண்பனிடம் "இதுக்கு தான் என் கார்லயே போலாம் சொன்னேன் கேட்டியா டா நீ. உடம்பு முழுக்க கசகசன்னு இருக்கு. இப்படியே போயி கேஸ் ஹேண்டில் பண்ணா நல்லா இருக்குமா சொல்லு...." மெல்லிய குரலில் தன் அருகில் நின்ற ராமனை கடிந்து கொண்டிருந்தான் யாதவ்.

"கார் மக்கர் பண்ணலைன்னா நான் ஏன் உன்னை பஸ்ல கூட்டிட்டு வர போறேன். இந்த நேரம் பார்த்து ஆட்டோ கூடக் கிடைக்கல. அதான் பஸ்ல போலாம் சொன்னேன். ஆனா இது இந்தளவுக்கு இருக்கும்ன்னு யோசிக்கவே இல்லை டா யாதவா..." நெற்றில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேக் கூறினான் ராமன். அவனுக்குமே வியர்த்துக் கொட்டி கொண்டிருந்தது. தன் வியர்வையை துடைத்துக் கொண்டே யாதவை ஒரு பார்வைப் பார்த்தான்.

ஆறடி உயரம், நல்ல களையான முகம், கோதுமை நிறத்திற்கு சற்றே கூடுதல் நிறத்தில் இருந்தான். அலையலையான கேசம், பரந்த நெற்றி, சிரிக்கும் கண்கள், இதழ்கள் சிவந்து கிடந்தது. இரண்டு நாட்களாக மலிக்கப்படாத தாடி.. அது கூட அத்தனை வசீகரத்தை கொடுத்தது அவனுக்கு. பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு என்ற பகட்டு துளியும் இல்லாமல் தான் அழைத்ததும் அரசு பேருந்தில் ஏறிய நண்பனை அத்தனைப் பிடித்தது ராமிற்கு.

யாதவும், ராமும், மருத்துவ மாணவர்கள். இருவருமே தற்பொழுது கல்லூரியின் கடைசி வருடத்தில் இருக்கின்றனர். எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு எம்.டி படித்து கொண்டிருக்கின்றனர். அது கூட முடிக்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது.

கல்லூரியின் தொடக்கத்தில் இருந்தே இருவருமே நெருங்கிய நண்பர்கள். இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு எதுவரைக்கும் என்றால் நண்பர்கள் இருவரின் ஒவ்வொரு செயலும் இருவருக்குமே அத்துப்படி என்ற அளவிற்கு... மெல்லிய புன்னகையோடு யாதவை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போது தான் அதையும் கவனித்தான்.

"ஹேய் என்னடா இது?..." அதிர்ச்சியாக கேட்டான் ராமன்.

ராமின் அதிர்ச்சியான குரலில் வெளியில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த யாதவோ நிதானமாக திரும்பி "என்னடா..." என கேட்டான்.

"என்ன என்னடா? கையில என்ன இத்தனை இரத்தம், சட்டை முழுக்க ரத்தமா இருக்கு கொஞ்சம் கூட ஒரைக்கலையா உனக்கு?" எனக் கோபமாக கேட்டான் ராம்.

"என்ன சொல்ற? கையில இரத்தமா?..." எனக் கேட்டவன் தனது கையைப் பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

அது கூட நிமிடமே... கைகளில் வழிந்த இரத்தத்தின் காயத்தைப் பார்த்தான். ஆழமாக இல்லையென்றாலும் நன்றாகவே காயம் இருந்தது.. இத்தனை நேரம் இதனை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தோம் என நினைத்தவன் ராமின் கையிலிருந்த கைகுட்டையை வாங்கி கைகளில் வழிந்த இரத்தத்தை துடைத்தான்.

"கீறி விட்டது போல இல்லையே டா? நல்லா ஆழமா இருக்கே..." யாதவின் காயத்தை ஆராய்ந்தப்படி கூறினான் ராம் பிரசாத்.

"ம்ம்.நானும் கவனிச்சேன்..." என்றவன் காயத்தின் மீது துணியை அழுத்தி வைத்தபடி சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினான்..

ஒரு சிலர் ராமனின் கத்தலில் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்... அதில் இவனது கைகளில் காயத்தை உண்டாக்கியவளும் இருந்தாள்...

மற்றவர்கள் ஐயோ என்பதை போல் பார்த்தார்கள் என்றால் மதங்கியின் பார்வையில் தெரிந்த குரூர சிரிப்பு இவனது புருவங்களை சுருங்க செய்தன...

சட்டென நல்லாளை நெருங்கியவன் மெல்லிய குரலில் "நீதானே இப்படி பண்ண?..." எனக் கைகளை கண்களால் கட்டியபடி கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் இதழ்களில் தவழ்ந்த ஏளன புன்னகையோடு 'ஆமா நான் தான் பண்ணேன்.. அதுக்கு என்ன இப்ப?...' எனக் கேட்டாள்.

வஞ்சனியின் தெனாவெட்டான பதிலில் யாதவிற்கு கோபம் வந்ததோ இல்லையோ அவனுக்கு பின்னால் நின்றிருந்த இராமிற்கு அத்தனை கோபம் வந்தது.

"பண்றதை பண்ணிட்டு எந்தளவுக்கு தெனாவெட்டா பேசறா பாரு..." அதட்டலாக கத்தியபடி யாதவை தாண்டி முன்னால் வந்தான். அவனுக்கு முன்னால் நின்ற பெண்ணைப் பார்த்ததும் கத்திக் கொண்டிருந்தவன் அப்படியே அடங்கி விட்டான்...

இதனை கவனிக்காத யாதவோ
"மச்சி அமைதியா இரு, நானே கேட்கிறேன்..."ராமனை தடுத்தப்படி அந்த பெண்ணின் முன் சென்று நின்றான் யாதவ்.

அவனது வெட்டும் பார்வையை அசட்டை செய்தவள் திரும்பி கொள்ள
"ஏன் இப்படி பண்ண?..." எனக் கேட்டான் பொறுமையாக... சட்டென திரும்பி அவனைப் பார்த்தவள்

"நீ பண்ண வேலைக்கு பஸ்ல இருந்து கிழ தள்ளி விட தான் நினைச்சேன். என் பிரென்ட் ரொம்ப பயப்பட்டதால தான் தொட்ட கையை கிழிச்சு மட்டும் விட்டு இருக்கேன்..." அடக்கப்பட்ட கோபத்தோடு சீறினாள் பெண்.

"நான் என்ன பண்ணேன்..." புருவங்கள் உயர கேள்வியாக கேட்டான். அவனது குரலில் அத்தனை பொறுமை..

"நீ பண்ண அசிங்கத்தை வெளிய வேற சொல்லனுமா?..." பல்லைக் கடித்தாள் பெண். காந்தை கத்தியதில் சிலர் என்ன என்னவென்று வர அவர்களிடம் திரும்பி "கூட்டத்தில கோவிந்த போட யாரையும் நான் கூப்பிடல, என் பிரச்சனையை நானே பார்த்துப்பேன். நீங்க உங்க வேலையை பாருங்க..." வந்தவர்களை அப்படியே அடக்கிவிட்டு யாதவிடம் திரும்பினாள்.

அவனோ அப்பெண்ணை அழுத்தமாக பார்த்து "நான் என்ன பண்ணேன்..." என்றவனது குரலிலும் அழுத்தம் கூடியிருந்தது.

அவனது குரலில் தெரிந்த அழுத்தமும், அதிகாரமும் இவளை ஒரு பக்கம் யோசிக்க வைத்தது என்றால் ஒரு பக்கம் கோபத்தை கொடுத்தது.இவனிடம் என்ன பொறுமையாக பேச வேண்டும் என்று கூட நினைத்தாள். ஆனால் அவனது அழுத்தமான பார்வையும் நிமிர்ந்து நின்று 'நான் என்ன பண்ணேன்..'என கேட்ட விதமும் இவளை சற்றே நிதானப்படுத்தியது.

"என் ப்ரெண்ட் மேல நீ கையை வைச்சதுக்கு தான் உன் கையில நான் பிளேடை வைச்சேன்..." என்றாள் கோபமாக.

'இவ்வளவு சாதரணமாக சொல்றா பாரு பிளேட் வைச்சேன்னு.. சரியான ராங்கியா இருப்பா போல...' என நினைத்தவன் பார்வை ராங்கிக்கு பின்னால் வந்து நின்ற பெண்ணை பார்த்தது.

அவனது பார்வையில் அவளோ கூனிக் குறுகி நின்றாள். ஒருவித நடுக்கம் அவளில்.. உடல் நடுங்கி கொண்டிருந்தது அந்த பெண்ணிற்கு. அவள் நின்ற விதமே கூறியது இந்த ராங்கி கூறுவது உண்மை தான் என்று.

"இங்க பாருங்க... என்னைப் பாருங்க மா..." என்றான் ராங்கிக்கு பின்னால் நின்ற பெண்ணிடம். சட்டென பின்னால் திரும்பி தன் தோழியை பார்த்தாள் இவள்.

"நீ எதுக்கு இங்க வந்த?, நவியோட போயி உட்காரு..." என்றவள் இவனிடம் திரும்பி

"என்கிட்ட பேசு...அவளை எதுக்கு கூப்படற?..." என்றாள் கோபமாக.

அவளது கோபத்தை கண்டு கொள்ளாமல் அவளுக்கு பின்னால் நின்ற பெண்ணிடம் "என்னை பாருங்க மா...தைரியமா பாருங்க, நான் தான் உங்க மேல கையை வைச்சேனா?..." என்றான் அமைதியான குரலில்.

அவனது அமைதியான குரலில் நிமிர்ந்தாள் அப்பெண்... அவளது விழிகள் தன்னிச்சையாக கலங்கியது "நீங்க இல்லை..." என்பதை போல் தலையாட்டினாள்.

தற்பொழுது யாதவின் பார்வை ராங்கியின் மீது அழுத்தமாக விழுந்தது. அவளோ "ஏய் அனிதா... எதுக்கும் பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கிறேன்..." என்றாள் யாதவை கண்களால் எரித்தப்படி...

"இல்லை ஆரா... இவர் இல்லை? அவன் இறங்கிட்டான் போல..." என்றாள் படபடப்பாக.

அக்கணம் ராங்கியின் பெயரை அனிதா கூறியதும் 'ஆரா...' என்று மெல்லியதாக முணுமுணுத்தது ஆடவனின் மனம்..

"உண்மையை தான் சொல்றயா?..." எனக் கேட்டாள் நம்பாது.

"ஆமாம்..." என்பதைப் போல் தலையாட்டால் அவளிடத்தில்.

"ஓகே...நீ போ..." என்றவள் அனிதா சென்று இறுக்கையில் அமரும் வரை அமைதியாக நின்றாள்.

பின் யாதவிடம் திரும்பி "சாரி..." என்றாள் அதே தெனாவெட்டான குரலில்.

தையலது இந்த பதிலில் இத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த ராமிற்கு கோபம் வந்தது... யாதவின் பின்னால் நின்றவன் முன்னால் வந்து "என்ன பதில் இது.. அவனுக்கு இரத்தம் வர வரைக்கும் பண்ணிட்டு நீ என்னவோ அசட்டையா பதில் சொல்ற... ரொம்ப தப்பு துகிரா..." என்றான் கோபமாக.

"அதுக்காக இவன் கால்ல விழ சொல்றேயாண்ணா..." கோபமாக கேட்டாள் ராமின் சித்தப்பா மகளான துகிரா.

மதங்கியின் செயலுக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்னவென்று பார்ப்போம் என்று தான் இத்தனை நேரம் அமைதியாக நின்றான். தற்பொழுது நண்பனின் மீது தவறில்லை என்றதும் தங்கையின் மீது கோபம் கொண்டான். ஆனால் அவளோ இன்னும் குதித்தாள். அண்ணன், தங்கை இருவரின் வாக்குவாதமும் இனிதே தொடங்கியது..

இங்கு அவர்களின் சண்டைக்கு காரணமானவனோ துகியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் செய்த காரியத்தின் பின்னாலிருக்கும் காரணம் அவனுக்கு தெளிவாக புரிந்தது... அனிதா கூனிக் குறுகி நிக்கிறாள் இவள் தொட்டக் கையை உடைக்க பார்க்கிறாள் என்ன பெண் இவள் என்று தான் பார்த்தான்...

நொடிகள் நிமிடங்களாக யாதவின் பார்வையில் ரசனைக் கூடியது.. யாதவின் கண்களுக்கு பேரழகியாய் தெரிந்தாள்.

உண்மையில் துகியும் அழகி தான். பார்த்ததும் பிடித்து விடும் அழகு.கோதுமை நிறம், பேசும் கண்கள், சிவந்த இதழ்கள், கூரீய நாசி... கடிக்க தோன்றும் குண்டு குண்டு கன்னங்கள்... என்று பார்க்கவே அத்தனை அழகு... இத்தனை நேரம் அவளின் அழகை அவன் ரசித்தானா? இல்லை அவளின் துணிவை ரசித்தானா? என்பது அவனுக்கே வெளிச்சம்...

அழகு என்பது ஓவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடும்... சிலர் நிறம் தான் அழகு என்பார்கள்.. சிலர் பெண்ணின் நன் நடத்தையைக் குறித்து அழகு என்பார்கள்... சிலர் பெண்ணின் தன்னம்பிக்கையும், நிமிர்வும், தைரியமும் அழகு என்பார்கள். இதில் யாதவின் கண்களுக்கு மங்கையின் நிமிர்வும், தைரியமும் தான் அழகாய் தெரிந்தது.

"இப்ப என்ன? உன் ஃப்ரெண்டை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணுமா?..." என்ற இராங்கியின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் இவர்களின் பேச்சை அப்போது தான் கவனித்தான்.

"அதெல்லாம் வேண்டாம் சின்ன காயம் தான் நான் பார்த்துக்கிறேன்..." என்ற யாதவை துளியும் கண்டுகொள்ளாமல்

"நவீரா,.அனிதாவ காலேஜ்ல விட்டுட்டு தென் நீ காலேஜ் போ..." என்றாள் அனிதாவுடன் அமர்ந்திருந்த அவளது தங்கையிடம்.

"சரிக்கா?.." என்ற குரல் மட்டுமே அங்கிருந்து வந்தது.

அடுத்த நிமிடம் அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் யாதவின் கைகளை பற்றியப்படி கிழே இறங்கினாள்.

அவளின் அதிரடியில் விழிகள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொள்ள மங்கையின் கைகளில் பார்வையை பதித்தப்படி அவளோட இறங்கினான். அவர்களுடன் ராமும் இறங்கிக் கொண்டான்..

அடுத்த சில நிமிடங்களில் யாதவின் கைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு இருந்தது... அவளோட அவனிருந்த அந்த சில நிமிடங்கள் கூட யாதவின் கண்கள் பெண்ணின் மீது தான் இருந்தது.

அந்த மெளன காணம் மூவரும் வெளியில் வரும் வரை நீடிக்க "நான் போயிட்டு வரேன் அண்ணா..." ராமனிடம் மட்டுமே கூறிவிட்டு நகர்ந்தவளின் கைகளை இறுக பற்றினான் யாதவ்.

ஆடவனின் கைகள் பூவையைத் தொட்ட நொடி பொழுதில் அவனது கன்னத்தில் இவளது கைகள் அதீத வேகத்தில் தொட்டு மீண்டது.

"ஏய்..." ராம் அதிர்ந்தான்.. யாதவிற்கோ அத்தனை கோபம். மருத்துவமனை வரைக்கும் அழைத்து வந்ததற்கு நன்றி சொல்ல நினைத்தான் அவள் விலகி செல்லவும் பட்டென கையைப் பிடித்து விட்டான்.

ஆனால் வஞ்சனி என்ன ஏதென்று கேட்காது அறைந்தது அத்தனை கோபத்தைக் கொடுத்தது... கண்களை இறுக மூடி திறந்தவன் அவளிடம் பேசாது விறுவிறுவென அங்கிருந்து நடந்தான்.

"ரொம்ப பண்ற நீ... என்ன நினைச்சிட்டு அவன் மேல கை வைச்ச நீ? துகி எது பண்ணாலும் சரியா இருக்கும்னு நினைச்சுட்டு இருந்தது ரொம்ப பெரிய தப்புன்னு ப்ரூப் பண்ணிட்ட..." சற்று கடுமையாகவே பேசியவன் நண்பனை நோக்கி நடந்தான்.

அண்ணனின் அதட்டிலில் தன் தவறு புரிந்தது எடுத்ததும் கை நீட்டியிருக்க கூடாது என்று நினைத்தவள் வேக நடையோடு சென்று கொண்டிருந்தவனின் பின்னாலயே சென்றாள்.

அடுத்த சில நொடிகளில் அவர்களுக்கு முன் சென்று நின்றாள். கோபமாக பார்த்த ராமை ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கோ பார்வையை பதித்தப்படி நின்ற யாதவை பார்த்தவள் "நீங்க கையை பிடிக்கவும் கோபம் வந்திருச்சு.அதான் அடிச்சிட்டேன் சாரி. என்ன ஏதுன்னு கேட்காம கை நீட்டி இருக்க கூடாது..." என்றாள் மெல்லிய குரலில்.

காந்தையின் மன்னிப்பை காதில் கூட வாங்காமல் அங்கிருந்து நகர்ந்தான் யாதவ் பிரசாத்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் "சரி தான் போடா..." என்பதை போல் தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். செல்லும் தங்கையை ஒரு பார்வை பார்த்த ராமோ நண்பனின் பின்னாலேயே சென்றான்.

தற்பொழுது ஆட்டோ கிடைத்து விட இருவரும் யாதவின் இல்லத்தை நோக்கிப் பயணத்தினர். பயணம் முழுவதுமே அமைதியில் தான் கழிந்தது...

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் யாதவின் வீட்டை அடைந்திருந்தனர்.

இருவரும் வீட்டினுள் நுழைந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த யாதவின் தாய் சட்டென இருவரையும் திரும்பி பார்த்தார்.

"என்ன மகனே... தீடிர் வருகை.. காலேஜ் கட்டா? இன்னைக்கு போகலையா?.." எனக் கேட்டவர் அப்போது தான் அவனது கைகளில் இருந்த கட்டையும், சட்டையில் இருந்த ரத்ததுளிகளையும் பார்த்தார்.

"என்னடா கையில இவ்வளவு பெரிய கட்டு... வெளிய போயி வம்பு பண்றளவுக்கு நீ நல்ல பையன் இல்லையே..." கிண்டலாக கேட்டார் யாதவின் தாய் வைதேகி.

தாயை முறைத்தவன் பதில் பேசாது தனது அறையை நோக்கி நடந்தான். யாதவ்வ் அங்கிருந்து நகர்ந்ததும் ராமிடம் திரும்பியவர் "என்னாச்சு தம்பி? பெரிய பிரச்சனை எதுவும் இல்லை தானே?..." எனக் கேட்டார் பரிதவிப்பு அவரது குரலில் நன்றாகவே தெரிந்தது.

அவரது குரலில் தெரிந்த பேதத்தில் "பெருசா ஒன்னுமில்லை மா..." என ஆரம்பித்தவன் பேருந்தில் நடந்ததில் ஆரம்பித்து மருத்துவனையில் நடந்தது வரை அனைத்தும் கூறினான் ராம்.

"வாவ்...செம்ம பொண்ணுல்ல.. என்ன பேர் டா ராம்..." சிலாகித்து கேட்டார் வைதேகி. பிள்ளையை அடித்து விட்டாள் என்று கோபம் கொள்வார் என்று பார்த்தால் அவரோ அவளை பாராட்டி பெயரை கேட்டது ஆச்சரியமாக இருந்தது.. அவரை விழிகள் விரிய பார்த்தவன் தங்கையின் பெயரை கூறும் முன்பே

"ஆரா... அவ பேர் ஆரா மாம்..." என்றபடி தன் அறையிலிருந்து வெளி வந்தான் யாதவ். தற்பொழுது ராமின் பார்வை யாதவின் மீது அதிர்ச்சியாக படிந்தது...

உன் நினைவில் நானிருக்கும்

ஓவ்வொரு

மணி துளிகளும்

எனக்கு நொடி நேரமாக

மாறுவதேனோ.....!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro