புயலே 1
அத்தியாயம் 1
மஞ்சள் மாநகரம், கைத்தறி நகரம், நெசவு நகரம் என பல அடைப்பெயர்களை கொண்ட ஈரோடு தான் நம் கதையின் கதைகளம்
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாவனி_ஜீவா நகரில் அமைந்துள்ளது அந்த இரண்டடுக்கு மாடிவீடு... வில்லா போன்ற அமைப்பிலிருந்த வீட்டை சுற்றிலும் பசுமை நிறைந்திருக்க... மரத்தை சுற்றிலும் சின்னஞ்சிறு பறவைகள் ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக கத்திக் கொண்டிருந்தது.
பறவைகளின் ஆர்ப்பாட்டமும், சத்தமும் வீட்டிற்கு உள்ளேயும் தான் என்பது போல சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தைத்தோடு அவளது குழந்தைகளின் சிரிப்பு சத்தமும், அவளின் அன்னை திட்டிக் கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது.
அங்கு சமையலறையில்...
பாத்திரங்களை கழுவி கொண்டே
"குழந்தைங்க ரெண்டு பேரும் கூட எழுந்துட்டாங்க... ஆனா இவ இன்னும் தூங்கிட்டு இருக்கா கழுதை..." சற்று சத்தமாக பேசியவர் ஈரமான கைகளை முந்தானையில் துடைத்து விட்டு அவளது அறையை நோக்கி நடந்தார் பார்வதி.
"நேரமாச்சு உனக்கு...உன் பிள்ளைக கூட எழுந்துட்டாங்க..." என கத்திய
தாயின் கத்தல் துளியும் காதில் விழவில்லை என்பதை போல் தான் உறங்கி கொண்டிருந்தாள் அவள்.
"இப்ப நீ எழுந்துக்க போறயா? இல்லை மூஞ்சில சுடு தண்ணி ஊத்தவா?..." அறையின் நுழைவாயிலில் தாயின் சத்தம் கோபமாக கேட்க ஆரம்பிக்கவும் கண்களை திறக்காமலேயே
"ஒரு ஃபைவ் மினிட்ஸ் ம்மா..." என்றவள் இன்னும் பல ஃபைவ் மினிட்ஸ் கடந்து தான் எழுந்தாள்.
சட்டென கலைந்த உறக்கத்தில்
அடித்து பிடித்து எழுந்தவள் மணியை பார்க்க அதுவோ காலை எட்டு மணியை காட்டியது. தலையில் அடித்துக் கொண்டே அவசரமாக குளியல் அறைக்குள் நுழைந்தவள் அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வெளி வந்தாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த பிள்ளைகளின் கேசத்தைக் கோதிக் கொண்டே "என்னம்மா நேரமா எழுப்பி விட்டுருக்க வேண்டாமா? பாருங்க ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு... ஒரு ஆபிஸ் மேனேஜேர் நான்... நானே லேட்டா போனா நல்லாவா இருக்கும் சொல்லுங்க... உறக்கம் நீங்கா குரலில் கத்திய மகளை சமையலறையின் நுழைவாயிலில் நின்றபடி முறைத்தார் அவளின் தாய் பார்வதி...
அவரது பார்வையில் அசடு வழிய சிரித்தாள். பின் பிள்ளைகளிடம் திரும்ப அவர்களோ பாட்டியிடம் திட்டு வாங்கும் தன் தாயை பார்த்து வாயில் கைவைத்து சிரித்தனர்.
இருவரையும் குறுகுறுவென பார்த்தவள் "முதல்ல இவங்களை ஸ்கூல்ல ஜாயின் பண்ண வைங்க மா...என்னை மட்டும் ரெண்டரை வயசுலயே ஸ்கூல்லா சேத்தி விட்டுட்டு... இவங்கள இன்னும் ஸ்கூல்க்கு அனுப்பாம இருக்கீங்க.." என குரலில் சட்டென துளிர்த்த பொறாமையுடன் கேட்டாள்.
அவளின் ஸ்கூல் என்ற வார்த்தையில் பிள்ளைகளின் முகம் கடுப்போடு தாயின் மீது படிந்தது.
"நாங்க போக மாட்டோம்,..." என பிள்ளைகள் கத்தவும்
"அஞ்சு வயசு ஆகட்டும் அப்புறம் பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பலாம்..."என பார்வதி சொல்லவும் சரியாக இருந்தது. வெடுக்கென திரும்பி பார்த்தாள். அன்றைய நாளில் ஸ்கூலுக்கு செல்ல மாட்டேன் செல்ல மாட்டேன் என கத்தியவளை முதுகில் நான்கு அடி வைத்தல்லவா அனுப்பி வைத்தார். இவளுக்கு ஒரு நியாயம், இவளின் பிள்ளைகளுக்கு ஒரு நியாயமா?
"அதெல்லாம் முடியாது, நான் நாளைக்கே இரண்டு பேரையும் பிளே ஸ்கூல்ல ஜாயின் பண்ண கேட்டுட்டு வரேன்..." என்றாள் தீவிர குரலில்..
"உனக்கு ஏன் மா இந்த கொலவெறி..." அந்த பக்கம் சரண் கூறினான் என்றால் மறு பக்கம்
"நான் தாத்தாக்கிட்ட சொல்லிடுவேன்..."என்று சரண்யா மிரட்டவே செய்தாள்...
"அம்மா.. இவங்களுக்கு நீ தான் இப்படி பேச சொல்லி கொடுக்கறயா?..." கோபமாக தாயை கேட்டாள் அவள்.
காலங்காத்தலயே ஆரம்பிச்சுட்டாங்களா?.. என்பதை போல் மூவரையும் பார்வதி பார்க்க...அக்கணம் வீட்டினுள் நுழைந்தார் பார்வதியின் கணவர் மோகன்.
"அப்பா இவங்கள பாருங்க பா..." வந்தும் வராமல் தந்தையிடம் புகார் வாசித்தவளின் குரலை மீறிக் கேட்டது சிறியவர்களின் குரல்.
"தாத்தா அம்முவை பாருங்க..."என்று
உள்ளே நுழைந்த மோகனுக்கோ என்ன நடந்தது என்று புரியவில்லை திருத்திருவென விழித்தார்.
கணவரின் பார்வை புரிந்து கொண்ட பார்வதியோ "இப்ப மல்லுக்கு நிக்கிறதுக்கெல்லாம் நேரமாகலயா உனக்கு..." எனக் கேட்கவும் பதில் பேசாது கடிக்காரத்தை பார்த்தவள் அதற்கு மேல் பேசாது உணவை தின்றாள். அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு கிளம்பியும் விட்டாள்.
மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திக் கொண்டடிருந்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. பிள்ளைகள் இருவரின் புன்னகையும் அவனது நினைவுகளை கொடுத்தது.
அவனது நினைவில் அவளையும் அறியாமல் அங்கையின் இதழ்களில் புன்னகை... அந்த புன்னகை தோன்றிய மறுகணம் அவன் விட்டு சென்ற நாளின் நினைவுகள் தாக்கியது... தொண்டை குழி ஏறி இறங்கியது... அவனை நுனி முதல் அடிவரை நேசித்தவள் தான் தற்பொழுது அவனை முழுவதுமாக வெறுத்து நிற்கிறாள்... விருப்பிற்கும், வெறுப்பிற்கும் நூலிழை தானே இடைவெளி...
அந்த இடைவெளியை நிரப்பும் நாள் தான் எப்பொழுதோ?..
அவனின் நினைவில் மூழ்கி இருந்தவள் எப்பொழுது அலுவலகம் வந்தாள் எப்பொழுது வேலைகளில் மூழ்கினாள் என்றே தெரியாத நிலை தான்...
என் காதலின் மனதிற்கு ஆயிரம்
கடிவாளம் இட்டு கொண்டாலும்..!!
உன் வாசம் மட்டும் என்னுள் இன்றும் இருக்கிறது ஏனோ..!!
உன் வாசம் தான் எந்தன் சுவாசமோ....!!
****
அதிகாலை வெயிலின் தாக்கமும், ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த தென்றலின் வருடலும் அவ்வறையில் உறங்கிக் கொண்டிருந்தவனை துளியும் அசைக்கவில்லை... அக்கணம் கதவு தட்டும் கேட்டது. பட்டென கண்களை திறக்கவில்லை என்றாலும் கொஞ்சமே அசைந்தான் உறங்கிக் கொண்டிருந்தவன். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"கடவுளே..." சலித்து கொண்டபடி எழுந்தான் அவன். உறக்கத்திற்கு கெஞ்சிய கண்களை துடைத்துக் கொண்டே அறைக்கதவை திறந்தான். அங்கு அவனின் கார்பன் காப்பி தான் நின்றுக் கொண்டிருந்தான்...
"கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டா உனக்கு? தூங்கிட்டு இருக்கேன்னு தெரியுதுல, சும்மா சும்மா கதவை தட்டற..." கத்த ஆரம்பித்தவனுக்கு மேல் கத்தினான் வந்தவன்
"உன் போன் எங்க? அதை முதல்ல தூக்கி போடு. தூங்கிட்டு இருக்கிறவனுக்கு கால் பண்ணி அவனும் கத்திறான்.எழுப்ப வந்த கூலிக்கு நீயும் கத்திற...ஒழுங்கா போனை எடுத்து பேசு..." என்றவன் திரும்ப, அவனது அலைபேசி சத்தமிட்டு கத்தியது.
"இந்தா ராம் அண்ணா தான் கூப்பிடறான்..." அலைபேசியை நீட்டயப்படி கூறியவன் மீண்டும் அலைபேசியை வாங்க அங்கேயே நின்றான்.
தம்பியை ஒரு பார்வை பார்த்தபடி அலைபேசியை கையில் வாங்கியவன் "சொல்லு டா ராம்..." என்றான்.
"என்ன சொல்லு டா ராம்..." கடுப்பாக கத்தியவன் "எட்டு மணி வரைக்கும் அப்படி என்னடா உங்க இரண்டு பேருக்கும் தூக்கம்...அண்ணன், தம்பி இரண்டு பேருக்கும் மாறி மாறி கால் பண்ணி சலிச்சு போச்சு எனக்கு... உங்களுக்கெல்லாம் எதுக்கு டா போன்? தூக்கி குப்பையிலே போடுங்க..." என ராம் மேலும் கத்த, காதிலிருந்து அலைபேசியை எடுத்து காதை துடைத்துக் கொண்டான் இவன்.
இங்கு ஜெய்யோ "டேய் ராம் அண்ணா... இப்ப கூட நான் தான் கால் எடுத்தேன். அவனை மட்டும் திட்டு..." என்றதும் தம்பியை முறைத்தான் பெரியவன்.
அண்ணனின் முறைப்பை கண்டுக் கொள்ளாமல் கேசத்தை கோதிக் கொண்டே சிரித்தான் ஜெய். ஜெய்யின் சிரிப்பை பார்த்தவனுக்கு சிரிப்பு வர அதே புன்னகையோடு ராமிடம் பேசினான் பெரியவன்.
எதிரில் கூறப்பட்ட செய்தியில் கண்கள் இரண்டும் விரிய "நிஜமாவா? அப்ப இன்னைக்கே கிளம்பி வரவா..." எனக் கேட்டான் ஆர்வமாக.
"ஆமா... ஆனா நீ இங்க வரணும்னா நான் உன்னை ஃபூல்ல செக் பண்ணிட்டு கன்பார்ம் பண்ணதுக்கு அப்பறம் தான் நடக்கும்..." என்றதும் சரியென்று கூறுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை இவனுக்கும்.
"சரி எது பண்றதா இருந்தாலும் சீக்கிரம் பண்ணு..." என்றவன் அலைபேசியை துண்டித்து தம்பியை பார்த்தான். அவனும் என்ன என்பதை போல் பார்த்தான். அவனிடம் விவரத்தை கூற பட்டென அண்ணனை அணைத்துக் கொண்டான் இளையவன்.
"இனிமே எல்லாமே சரியாகிடும் டா,நீ தைரியமா போ, இங்க இருக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்..." என்றதும் சரியென்று தலையாட்டினான் ஜெய்யின் அண்ணன்.
இதோ இன்று... ராம் கூறியதை போல அடுத்த இரு தினங்களில் சென்னை வந்திருந்தான் அவன். சென்னை விமான நிலையத்திலிருந்து ராமின் இல்லம் நோக்கி விரைந்தது ராம் அனுப்பிய வாகனம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro