மர்ம பங்களா.
நேரம் நள்ளிரவை கடந்துக் கொண்டிருந்தது. இருள் படர்ந்த அந்த சாலையின் ஒரு மரத்தடியில், நகத்தை கடித்துக்கொண்டு பரபரப்பின் உச்சத்தில் நின்றிருந்தான் ஒருவன். தன்னந்தனிமை.. பௌர்ணமியை நெருங்கும் பிறை நிலவின் வெளிச்சம்.. இரவுநேர பூச்சிகளின் ஜல்ஜல் ஓசை... மரத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஒற்றை ஆந்தையின் குழறல் ஓசை.. இத்தனை மயான அமைதியில் அவனுக்கு பயம் எழவில்லை.. பதட்டம் மட்டுமே.
நொடிகள் நகர நகர அவன் இதயம் திக் திக் என துடிக்கத் தொடங்கியிருந்த சமயத்தில், தூரத்தில் தெரிந்தது ஒரு வெள்ளை உருவம். சட்டென மரத்தின் பின்னே தன் உருவத்தை ஒளித்துக் கொண்டவனின் கண்கள், அந்த வெள்ளை உருவத்தை நோக்கி கூர்மையாகிட.. அரக்கபரக்க ஓடிவந்த அந்த உருவத்தை, ஒற்றை சாலை-விளக்கு ஒளியின் அடியில் தெளிவாகக் கண்ட பின்பே ஒரு நிம்மதி அவனுள். நிம்மதி பெருமூச்சுடன் மரத்தின் பின்னிருந்து வெளியே வந்தவன், கையில் ஒரு டிராவல் பேக்குடன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே மூச்சிறைக்க, ஓட்டமும் நடையுமாக வந்து அவனிடம் சேர்ந்த அந்த வெள்ளை உருவத்தை அனைத்துக் கொண்டான்.
"சீக்கிரம் வாங்க! யாராச்சும் வர்றதுக்கு முன்னாடியே கெளம்பீறலாம்." வெள்ளை அனார்கலி அணிந்திருந்த அப்பெண், அவனை நோக்கி பரபரக்க.. "ம்ம்.. வா, வண்டி ரெடியா வச்சுருக்கேன்," டிராவல் பேக்கை வாங்கிக்கொண்டு அவளின் கையை பிடித்தவன், ஒரு அடி முன்னே வைத்த நொடி, "எங்க போறீங்க இவ்வளவு வேகமா?" இருவரின் முதுகுக்கும் மிக அருகில் கேட்ட குரலால் உடல் சில்லிட்டு திடுக்கிட்டுத் திரும்பினார்கள் இருவரும்.
தன் காதலியை தனக்குப் பின்னால் நிறுத்தியவன், "நாங்க எங்க போனா உங்களுக்கு என்ன?" தன் முன்னே நிற்கும் நடுத்தர வயதுடையவனை எச்சரிக்கையுடனே நோக்கினான்.
"நீங்க எங்க வேணும்னாலும் போவீங்க... ஆனா, உங்கள பெத்தவங்க உங்கள நெனச்சு நெனச்சு தெனம் தெனம் வேதனைல தவிக்கணும். அப்டி தானே?" என்றவனின் அமைதியான ஆழ்ந்தக் குரலில், வியர்த்து விறுவிறுக்க இருவரும் அரண்டு விழிக்க, "பெத்தவங்கள தவிக்க விட்டுட்டு போறது தப்பில்ல?" தெரு முழுக்க கேட்கும் குரலில் அந்நபர் உருமிய அதே நொடியில் ஒற்றை தெருவிளக்கும் டப்பென அனைந்துப் போனது.
"ஆஹ்ஹ்ஹ்ஹ்!!.."
"ஆஆஆஆஹ்ஹ்ஹ்.."
காதலர்கள் இருவரின் மரண ஓலத்தை தொடர்ந்து மயான அமைதி மட்டுமே அவ்விடத்தில்.
✨✨✨
"ம்ம்ம்... ரத்த பொரியல் வாசம் மூக்க தொலைக்குது.. ஆனா, ஆறு பேருக்கு எதுக்குமா இவ்வளவு?" தோட்டத்தின் ஒரு ஓரத்தில், நான்கு செங்கல்களை தூக்கிவைத்து, பெரிய சைஸ் கடாயில் தழும்பத் தழும்ப ரத்தத்தை ஊற்றி ரத்தப்பொரியல் செய்து கொண்டிருக்கும் தன் மனைவியை, பின்னிருந்து அனைத்தான், நடுத்தர வயதில் இருக்கும் ராஜா.
"வயிறார சப்புடுறதே என்னைக்காச்சும் தான். ஒருநாள் மூனு வேளைக்கும் நல்ல சாப்பாடு கெடைக்குறதே இங்க ஆடிக்கு ஒருநாள் ஆமாவாசைக்கு ஒருநாளா தான் இருக்குது... சாப்புட்டு போகட்டும் விடுங்க'ங்க.." மன நிறைவுடன் சொல்லிக்கொண்டே, கடாயில் கரண்டியை விட்டுக் கிளறிக் கொண்டிருந்தாள் அவள்.
"வச்சு சாப்டலாம்ன்னு சொன்னா கேக்க மாட்ட நீ." அவன் அலுத்துக்கொள்ள, "விடு டா.. எல்லாரையும் பட்னி போடுறது அரசிக்கு மனசு கேக்காதுன்னு உனக்குதான் தெரியும்ல?" மருமகளுக்கு ஆதரவுக்குரல் கொடுக்க வந்து நின்றாள், ராஜாவின் அன்னை, ரதி தேவி.
"கூட்டு சேந்துட்டீங்களா? சரிதான் போங்க," தாய்க்கும் தாரத்திற்கும் நடுவில் நின்றவனை நோக்கி இருவரும் சிரிக்க.. அவர்களுக்கு சில அடிகள் தள்ளி இருக்கும் எட்டடி கம்பவுண்டுக்கு அப்பக்கமாக, சாலையில் கேட்ட சலசலப்பு சத்தத்தால் மூவரின் முகமும் இறுகியது.
"ஏங்க, ரோட்ல ஏதாச்சும் பிரச்சனை ஆகீருச்சா?" அரசியின் குரல், தீவிரத்துடன் தன் கணவனை நோக்க, "அப்டிதான் நெனைக்குறேன். நீ அடுப்புல அதிகமா பொக வராம பாத்துக்கோ, நான் போய் என்னன்னு பாக்குறேன்." முகத்தில் ஒரு சலனத்துடனே வீட்டுக்குள் வந்தவன், உள்ளிருந்து மட்டுமே பார்க்கமுடியும் கண்ணாடி ஜன்னல் வழியாக, வீட்டின் தலைவாயிலை தாண்டியிருக்கும் பதினைந்து படிகள் முடிவடையும் அந்த சாலையில் நிற்கும் ஜன கும்பலை நோட்டமிட்டான். கேமராவும் மைக்குமாக நிற்கும் சிலர், அங்கிருக்கும் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இரு சடலங்களை படம் பிடித்துக்கொண்டும் சுற்றி வேடிக்கை பார்க்கும் ஜனங்களை பேட்டி எடுத்துக்கொண்டும் இருக்க.. இன்னொரு புறம் பரபரப்புடன் மொபைலில் பேசிக்கொண்டே அந்த சடலங்களை நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள் காவலாளிகள்.
"மர்ம பங்களாவின் அருகே மீண்டும் ஒரு உயிரிழப்பு! அதுவும் ஒன்னு இல்லைங்க, இரட்டை தற்கொலை!
இந்த ஊரோட யூடியூபர்ஸ் மத்தியில சமீப காலமா பரபரப்பா பேசப்படும் இடம்தான் இந்த மர்ம பங்களா. இங்க அடிக்கடி நெறைய கொலைகள் நடந்துட்டு இருந்த சூழல்ல இதுதான் முதல் தற்கொலை. அதுவும், இரட்டை தற்கொலை.
ஊர்மக்கள் சொன்ன தகவல்படி, தற்கொலை செஞ்சுக்கிட்ட ரெண்டுபேரும் காதலர்கள். அடுத்த தெருவுல தான் ரெண்டு பேரோட வீடும் இருக்கு. ரெண்டு வாரம் முன்னாடி இவங்க வீட்டுல உள்ளவங்க காதலுக்கு மறுப்பு சொல்லி, பயங்கரமா பிரச்சன பண்ணதா தகவல் கெடச்சுருக்குற நிலையில, இன்னைக்கு, விடியற்காலை ஆறு மணி போல இவங்க ரெண்டுபேரும் சடலாமா மீட்டெடுக்க பட்டுருக்காங்க. அதுவும், இந்த மர்ம பங்களா பக்கத்துல உள்ள மரத்துல.
கூடுதலா, இங்க ஒரு டிராவல் பேக் கெடச்சுருக்குறதா காவல் துறைல இருந்து தகவல் வந்துருக்கு. அதுல, பெண்களோட ஆடைகள் மற்றும் பெண்கள் உபயோக படுத்துர பொருட்கள் இருந்ததாவும், அதோட சேத்து தெரு முனைல ஒரு கார், சாவியோட கெடச்சுருக்குறதாவும், அதுலயும் ஒரு டிராவல் பேக் கைபற்றியிருக்குறதாவும் காவல்துறை குடுத்த தகவல் மூலமா அறிய முடியுது.
இதவச்சு பாத்தா இந்த காதல் ஜோடி, ஓடி போறதுக்கு முயற்சி செஞ்சுருக்கலாம் என்ற எண்ணமும் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருது. ஆனா, அப்டி முடிவெடுத்தவங்க எதுக்காக தற்கொலை செஞ்சுக்கணும்? இந்த கேள்வியும் இங்க இருக்குற நிலையில, இந்த இரட்டை தற்கொலைக்கும் மர்ம வீட்டுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குங்குற கோணத்துலயும் மக்களிடையே கருத்துக்கள் வருது.
இது ஒருபக்கம் இருந்தாலும், மர்ம பங்களாவ காரணமா வச்சு, இந்த காதல் ஜோடிய அவங்க குடும்பத்துல உள்ளவங்களே கொலை செஞ்சுருக்கலாம் என்ற கோணத்துலையும் காவல்துறை விசாரணை நடத்திட்டு இருக்குறதா தகவல் வெளியிட்டுருக்காங்க.
இப்போ வாங்க, இந்த இரட்டை தற்கொலைய பத்தி நாம மக்கள் கணிப்ப கேக்கலாம்.
"ஐயா! நீங்க சொல்லுங்க, ஐயா. இந்த தற்கொலைக்கும் மர்ம வீட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கா?"
"அட, ஆமா மா. இது கண்டிப்பா அந்த மர்ம வீட்டுனால வந்ததுதான்,"
"எதவச்சு இந்த தற்கொலைக்கும் மர்ம வீட்டுக்கும் தொடர்பு இருக்குறதா சொல்லுறீங்க ஐயா?"
"10 வருஷத்துல இதுவரைகும் இந்த வீட்ட சுத்தி ஆறு கொலைகள் நடந்துருக்கு. ஆனா, மொத தடவையா இப்போ தற்கொலை நடந்துருக்கு. இதுக்கு முன்னாடி போலீஸ்லாம் கூட இந்த பங்களாகுள்ள போக முயற்சி செஞ்சாங்க. ஆனா, கதவ இம்மியளவு கூட தெறக்க முடியல. பூட்ட ஒடைக்கக் கூட முடியல."
"அட, அதுகூட பத்து வருஷமா பூட்டி இருக்கு.. ஜாம் ஆகிருச்சுன்னு சொல்லிக்கலாம். ஆனா, கண்ணாடி ஜன்னல்! அதக்கூட போலீஸால ஒடைக்க முடியலங்க.."
"நீங்க நெனைக்குற மாதிரி இது ஒண்ணும் முதல் தற்கொலை இல்லங்க... ரெண்டாவது. இந்த பங்களா, பத்து வருஷமா பூட்டி இருக்குறதுதான் இந்த ஊரு காரங்களுக்குத் தெரியும். ஆனா, சந்திரமுகி அரண்மனையவிட இந்த பங்களாவுக்கு உள்ள வரலாறு ரொம்ப பெருசுங்க.. வழி வழியா இங்க ஒரு மாந்திரீக குடும்பம் வாழ்ந்து வந்ததாதான் நான் சின்ன புள்ளையா இருக்கைல என் தாத்தா சொல்லிறுக்காங்க. சயின்ஸ் வளர வளர மக்களுக்கு மாந்திரீகம் ஜோசியம் மேலலாம் நம்பிக்கை கொறஞ்சு போச்சு. அதனால இந்த குடும்பத்து மவுசு ஊருக்குள்ள கொறஞ்சு போச்சு. நான் பொறக்குறதுக்கு முன்னாடியே அந்த குடும்பம் மாந்திரீகத்த விட்டுட்டாங்க. ஆனா, பத்து வருஷம் முன்னாடி, ஒருநாள் திடீர்ன்னு அந்த குடும்பத்த சேந்த மூனு பொண்ணு மூனு பையன் இதே மரத்துல தற்கொல பண்ணிக்கிட்டாங்க. அதுக்கப்பறமா அந்த குடும்பம் மொத்தமா ஃபாரின் போய் செட்டில் ஆகிட்டாங்க. அந்த நாள்ல இருந்துதான் இந்த பங்களா முன்னாடி நெறைய மர்ம கொலைகள் நடக்க ஆரம்பிச்சது. சிலர், அந்த ஆறு பேரோட ஆவி தான் கொல்லுதுன்னு சொல்லுறாங்க.. சிலர், இங்க பங்களால உள்ள மாந்திரீக குடும்பம் தான் அப்பப்போ ரகசியமா இங்க வந்து நரபலி குடுக்குறதா சொல்லுறாங்க.. ஆனா உண்ம எண்ணனு யாருக்கும் தெரியாது."
மக்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்று கூற.. வீட்டின் கண்ணாடி ஜன்னல் வழியே அனைத்தையும் பார்த்து கடுகடுத்துக் கொண்டிருந்தான் , ராஜா.
✨✨✨
அரசு கலை கல்லூரி, தொண்டி.
"2022-23 கல்வி சுற்றுலா"
அறிவிப்பு பேனரை தாங்கியபடி, ஊட்டி சாலையில் உற்சாகமாக சென்றுக் கொண்டிருந்தது இரண்டு சுற்றுலா பேருந்துகள். கூச்சலும் பாடலும் என குத்தாட்டமும் கும்மாளமுகாக அந்த பேருந்துகள் சென்றுக் கொண்டிருக்க.. ஆண்களின் பேருந்தில் கடைசி இருக்கையில் இருந்த அம்மூவர் மட்டும் மொபைலில் தீவிரமாக மூழ்கிப்போய் இருந்தார்கள்.
"கண்ணா, இந்த இடம் பாரு டா. நல்லா கேவ் (cave) பிளேஸ் டா. இதுவும் நாம போற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கும்."
"இல்ல டா, அதா நான் பாத்துட்டேன். அந்த இடம் வெட்ட வெளியா இருக்கும். நடந்து போக 5 நிமிஷமாச்சு ஆகும். போறத யாராச்சு பாத்துட்டா அப்பறம் பிரச்சன ஆகீரும், வேற பாரு டா டேவிட்"
இன்னும், சில நொடிகள் கடந்த நிலையில், "இத பாரு டா, ஃபாரஸ்ட் ஏரியா" மீண்டும் டேவிட் எதையோ காட்ட, "டேய், அங்கலாம் மிருகம் அசால்ட்டா வரும். பிளான் பண்ணி போய் சாவ சொல்லுறியா?" டேவிட்டின் தலையில் தட்டிய திவின், "அத விட்டுட்டு இத பாருங்க ரெண்டு பேரும்!" கண்களில் உற்சாகம் மின்ன கிசுகிசுக்கும் குரலில் கத்தினான்.
"இந்த இடத்துல ஒரு பங்களா இருக்காம்.!" ஒரு யூடியூப் விடியோவை காட்டினான்.
"டேய்! பாழடைஞ்ச பங்களா டா.. பேய் பங்களாவா இருக்கப் போவுது!" டேவிட் கண்களை விரிக்க, "வாய கழுவு டா. இது பாழடஞ்ச பங்களாலாம் இல்ல... பத்து வருஷம் முன்னாடி வரையும் ஒரு பெரிய ஃபேமிலி இருந்துருக்காங்க. அவங்க பாமிலியோட ஃபாரின்ல செட்டில் ஆகிட்டாங்க. அதுக்கு அப்பறமா யாருமே பராமரிக்காம இப்டி இருக்காம். அப்டிதான் இந்த வீடியோல சொல்றாங்க." வீடியோவை கண்ணாவிடம் நீட்டினான் திவின்.
ஓடவிட்டு ஓடவிட்டு முழு விடியோவையும் பார்த்து முடித்த கண்ணா, "ரைட் டா.. நம்ம பிளான எக்சிகியூட் பண்ண சரியான இடம் தான் இது. ஆறு பேரும் இங்கேயே கொஞ்ச நாளைக்கு தங்கிக்கலாம். யாருக்கு சந்தேகம் வராது." நண்பர்கள் இருவரையும் பார்த்து கூற, மற்ற இருவரின் கண்களிலும் திகில் கலந்த சிறு நிம்மதி.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro