Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2. அன்னையர் தினம்


20 செப்டம்பர் 2000

முத்துலட்சுமியின் கணவன் மாணிக்கத்திற்கு பட்டாளத்தில் வேலை. நான்கு நாட்கள் முன்பு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்து போராடி உயிர் இழந்த இந்திய ராணுவத்தினருக்கு கேம்பில் இறுதி மரியாதை நடந்து கொண்டிருந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வருகை தந்து, அஞ்சலி செலுத்தி, வீரர்கள் சிலரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கான தேநீரும் சிற்றுண்டியும் தயார் ஆனதும் கேம்ப் உணவகத்திலிருந்து வெளிப்பட்டான் அந்த கேம்பின் சமையல்காரன் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணிக்கம்.

 கேம்ப் இருந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு இருந்தது. வீரர்களின் உறவினர்கள் வந்த பேருந்திலிருந்து ஒரு முகமுடி உருவம், மத்திய மந்திரிக்கு குறிவைத்தது. இதை தற்செயலாக கவனித்த மாணிக்கம்

"மந்திரி ஜி..." என அலறியபடி அவரை முழூ பலத்தோடு தள்ள, துப்பாக்கியின் குண்டு அவன் நெற்றியில் பாய்ந்தது.

****

உளுந்தூர்பேட்டை அருகே ஒரு கிராமம்:

ஒரு வயது அஞ்சுகத்தை இடுப்பில் சுமந்திருந்த முத்துலட்சுமிக்கு தந்தி மூலம் வந்த தகவலை தெரிவித்தார் அவளது மாமனார்.

"இல்ல மாமா அது அவங்க இல்ல.. பாப்பாவை இன்னும் இவங்க பாக்கவே இல்ல மாமா. லீவு கேட்டு ஆபிஸருக்கு கடுதாசி போட்ருக்காக. காது குத்துக்கு நாள் குறிக்க சொன்னாங்க தான? அவரு வந்துருவாரு.."

"பைத்தியக்காரி அப்ப இது என்ன டீ"
கதறினார் தந்தியை அவள் கையில் திணித்து.

தட்டச்சு எழுத்துக்கள் எல்லாம் சிதறிய எள் மணிகளாக தெரிந்தன. இடம் வலமாக தலையை வேகமாக ஆட்டி, தந்தி காகிதத்தை கீழே போட்டாள்.

"அது சும்மா மாமா" கண்கள் கலங்க, தொண்டைக் குழியிலும் வயிற்றிலும் ஆயிரம் ஈட்டிக்கள் இறங்க நிதர்சனத்தை ஏற்க மறுத்தது அவளது காதல் நெஞ்சம்
"த.. த...தமாசு காட்றதாம் என்னமோ சொன்னாகளே சேக்காளிங்க கூட கே... கேம்புல இப்புடி தமாசு... கா... காட்டி..."

அவர் தலையை பிடித்துக்கொண்டு திண்ணையில் நிலைகுலைந்து அமர்ந்தார்.

"ஐயனாரப்பா என் புள்ளையை பறிச்சுக்கிட்டியேன்னு அழுவறதா இல்ல பச்ச மண்ணா ரெண்டு உசிரு அனாதையா ஆகிடுச்சேன்னு அழுவறதா...  ஐயா மாணிக்கம்.. ராசா... ஐயோ..."

****

நான்கு நாட்களுக்கு பிறகு டிரங்கு பெட்டியில் அவனது உடைமைகளும், சவப்பெட்டியில் அவனது உடலும் மூவர்ணக்கொடி அலங்கரிக்க வந்து சேர்ந்தது. மயங்கி வாசல் படிக்கட்டில் சரிந்தாள் இருபது வயது முத்துலட்சுமி.

இறுதி சடங்கு முடிந்தது.
சடங்கு, சாங்கியம் என்ற பெயரில் அவளை வாட்டி வதைத்தது ஊரும், உறவுக்கூட்டமும், சித்த பிரம்மை பிடித்தது போல் இருந்தவளை. மகள் அஞ்சுகத்தின் பசி அழுகை மட்டுமே அவள் காதில் கேட்டது.

பிள்ளையை தூக்கி அவள் பாலூட்ட, மாமியாரும் உறவினரும் சபித்தனர் அந்த சிசுவை.

"மூதேவி.. எப்ப எட்டு வச்சி நடந்துச்சோ அன்னைக்கே எங்க மூத்தாரை காவு வாங்குச்சு"

கள்ளச்சாராயம் குடித்து நான்கு மாதம் முன்பு குடல் வெந்தவரின் மரணத்திற்கு பழி சுமந்தாள் குழந்தை அஞ்சுகம்.

"ஆமா... போன வாரம் பேசிச்சாமே உன் பேத்தி?" நீட்டி முழக்கி, தலைவிரி கோலமாய் இருந்த ஒருத்தி மேலும் தூபம் போட.

"அந்த விளங்காததை என் பேத்தின்னு சொன்ன மருவாதி கெட்ரும் பாத்துக்க மதனி"
விரல் நீட்டி எச்சரித்தாள் மாணிக்கத்தின் தாய்.

பொசுக்கென மூக்கை சிந்தி அழத்துவங்கினாள்.

"அந்த நார வாயை வச்சிக்கிட்டு பா பா ன்னுச்சு. அப்பனை ஆசையா கூப்பிடுதுன்னு பாத்தா என் மகனை பரலோகததுக்கு அனுப்பிருச்சே பீடை.."

தாயாகவும் பெண்ணாகவும் இருந்துக்கொண்டு மற்றொருவரை, அதுவும் பச்சிளங்குழந்தையை காயப்படுத்த எப்படி துணிந்து விடுகிறது நெஞ்சம்?

முத்துவின் நெஞ்சம் கருகியது. மாமியாருக்கு விருப்பமில்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது. அவ்வப்போது தேள் போல கொட்டிக் கொண்டு தானிருந்தாள். ஆனால் பேத்தியிடம் ஆசையாக தானிருந்தார். தந்தி வரும் வரை.

தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அருகில் இருந்தவர்கள் மீது உருண்டு விழுந்து அரற்றினாள் மாணிக்கத்தின் அம்மா.

"நான் அன்னைக்கே சொன்னேனே, என் பெரிய அண்ணன் பொண்ணை சீரும் சிறப்புமா கட்டிக்கயிருக்க கூடாதா? இந்த பஞ்சத்துல அடிப்பட்டவைளை பாத்து என்ன தான் மயங்குனானோ? கண்ணாலம் கட்டிகிட்டு யென் புள்ளைக்கு வாழ கூட குடுத்து வைக்கலையே. இருவத்தாறு வயசுல என் தங்கத்தை வாரி குடுத்துட்டு நிக்கிறேனே.."

"இந்தா மங்கா... சும்மா இருக்க மாட்ட"
அவளது அண்ணன் கடிந்துக் கொண்டார்.
"ஏண்டி உனக்கு புள்ளைன்னா அவளுக்கு புருஷன் இல்ல? அதுவும் அறியாத புள்ளை பாவம். அதை போட்டு ஏண்டி வார்த்தையால வதைக்கற? என் பொண்ணும் முத்துவும் ஒரே வயசு, ஒரு அப்பனா அந்த புள்ளைய பாக்க பாக்க மனசு பதறுது டீ.." 
பஞ்சாயத்து பிரெஸிடெண்டும் மங்காவின் சகோதரருமான லிங்கேஸ்வரன்.

கண்களை துடைத்தபடி வெளியேறப்போனவர், முத்துவின் தலையை ஆதூரமாக வருடி, "அவ கிடக்கறா, நீ சங்கடப்படாத மா. ஈஸ்வரியை உங்கூட துணைக்கு இருக்க சொல்லிருக்கேன் கொஞ்ச நாளு..."

அதன்பின் உறவினர்கள் ஒன்றுகூடி ஏதோ ரகசியம் பேசினர்.

முத்துவிற்க்கோ மாணிக்கத்தின் முகமும் அவன் மீது வீசும் ஜவ்வாது வாசமுமே கவனத்தில் நிலைத்தது. இரவில் ரகசியமாக அவனது சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு 'இதெல்லாம் கனவு தான மாமா? நீ சீக்கிரம் வந்துருவ தான?' என மனம் போன போக்கில் அரற்றினாள்.

மூன்று வருட திருமண வாழ்க்கையில், அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே. இருபது வயதில் வேறு என்ன நினைக்க தோன்றும் ஒரு பெண்ணுக்கு?
உறங்கும் மகளை பார்த்தாள். அச்சு அசலாக மாணிக்கத்தை போலவே இருந்தாள் அஞ்சுகம். நெஞ்சம் விம்மி வெடித்தது. சேலைத்தலைப்பை வாய்க்குள் கடித்துக்கொண்டு ஓசைப்படாமல் அழுது கரைந்தாள் இரவு முழுவதும்.

****

"அண்ணி அண்ணி" லிங்கேஸ்வரனின் மகள் ஈஸ்வரி அவளை உசுப்பினாள். 
"அண்ணி இவங்க எல்லாரும் எதோ ரகசியம் பேசுறாங்க. என்னை விரட்டி விரட்டி விடுறாங்க. என்னமோ தப்பு நடக்குதுன்னு தோணுது."

அவளின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை முத்து.

"அண்ணி.. பெரிய மாமாவை சார்ந்து இருக்கறவங்களுக்கு அதாவது உங்களுக்கு  அரசாங்கத்துலேந்து உதவித்தொகை பணம் வரும். அதோட.. அவரு மந்திரி ஐயாவை காப்பாத்தினதுக்கு விருதும் பணமும் தருவாங்க. இது சட்டப்படி உங்களுக்கும் பாப்பாவுக்கும் தான் சேரணும் இவங்க எதோ திட்டம் போடுறாங்க.. உசாரா இருங்க"

"அதெல்லாம்.. அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க ஈஸு.. நீ தப்பா புரிஞ்சிருக்க. அத்தை பிள்ளையை பரிகொடுத்த வேதனைல திட்டுது. கொஞ்ச நாள் போனா சரியாகிடும் ஈஸு"

ஒரு வாரமாக ஓயாமல் அழுது கண்கள் வரண்டு, இடுங்கி போயிருக்க, சோர்வு உறக்கமாய் அவளை இழுத்தது.

****


மாமனார் வயலுக்குப் போகும் நேரத்தில், மாமியாரின் போக்கு முற்றிலும் வேறாக இருந்தது.

இரண்டு வாரம் கழித்து,
தீடீரென ஆவேசம் பொங்க, "அடியே எந்திரி.. வா.. வா.."
முத்துவை தர தரவென கையை பற்றி இழுத்துவந்து கூடம் தாண்டி வீட்டுக்கு வெளியே தள்ளினாள் அவளது மாமியார்.

நிலைத்தடுமாறி விழுந்தாலும் குழந்தையை காப்பாற்ற முனைந்து சமாளித்துக் கொண்டாள் முத்து.

"எல்லாரையும் காவு வாங்குற அந்த புள்ளை இங்க இருக்க கூடாது. அது எமன். அதையும் தூக்கிட்டு உன் அப்பன் வீட்டுக்கு ஓடிரு."

எத்தனை கெஞ்சியும் கதறியும் அவளை ஏற்கவில்லை, மங்கா.
"மானங்கெட்ட குடும்பமா டீ நீங்க? துக்கத்துக்கு வந்தப்ப உன்னையும் கூடவே கூட்டிட்டு போக சொன்னா உங்கப்பன் என்னவோ புள்ளையாண்ட கேக்கணும்னு சொல்றான்".

வயதில் மூத்தவராயினும் பெண்ணின் தகப்பன் என்பதாலேயே மரியாதை கட்டெறும்பாய் தேய்ந்தது. 

"மாமா மெட்ராஸ்லேந்து வந்ததும் போறேன் அத்தை" காலை பிடித்துக்கொண்டு மன்றாடினாள் முத்துலட்சுமி. அஞ்சுகம் தத்தி தள்ளாடி அவளை நோக்கி வந்து, தடுமாறி விழுந்து வீறிட்டது.

"ஏன் அரசாங்கத்துல காசு குடுப்பாங்கன்னு சொல்லிக்குடுத்துட்டு போனாளா உன் ஆத்தா? வந்தா முழுங்கலாமுன்னு யோசனையா? என் புள்ளையை முழுங்கிட்ட இந்த காசையும் முழுங்கணுமா?"




விக்கித்து போனாள் அந்த பெண்.

"இல்ல அத்தை காசெல்லாம் இல்ல, இங்க அவரு வாழ்ந்த இடத்துலையாவது இருந்த மனசை தேத்திக்கறேனே" கேவினாள் பரிதாபமாக.

முத்துலட்சுமியின் உடமைகள் என சில துணிமணிகள் மட்டும் மூட்டையாக கட்டி தூக்கிவீசப்பட்டது. ஊரே அவளை தூற்றியது. யாரேனும் அடைக்கலம் கொடுத்தால் வகுந்துவிடுவேன் என ஊர் நடுவே நின்று மிரட்டினான் மாணிக்கத்தின் தம்பி வைரவன்.

இடுப்பு குழந்தையோடு செய்வதறியாது ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்து நிழலில் அடைக்கலம் புகுந்தாள். ஈஸ்வரிக்கு வேலைக்கான நேர்காணல் ஒன்று பெங்களூரில் நடக்க அவளை அழைத்துச் சென்றிருந்தார் லிங்கேஸ்வரன்.

மாணிக்கம் இறப்பிற்கு பின் முத்துலட்சுமிக்கான உதவித்தொகை அவளது  கையிலிருந்து நழுவியது.  கருணை முறையில் வந்த அரசு உத்தியோகத்தை மாணிக்கத்தின் தம்பி வைரவன் நைச்சியமாக பேசி தான் வாங்கி கொண்டான்.  கிராம கூட்டுறவு வங்கி பணியில் அமர்ந்துக் கொண்டான்.

*****

"மனுச ஜென்மங்களா நீங்கல்லாம்? தூ தெறி" ஆக்ரோஷமாக துண்டை உதறி எறிந்துவிட்டு மொத்த ஊர் ஜனத்தையும் எரித்துவிடும் பார்வை பார்த்தார் லிங்கேஸ்வரன்.

கையெடுத்து கும்பிட்டார் "போதும் இந்த ஊரும் இந்த முட்டாள் ஜனமும், இதுங்களை முன்னேத்த நான் படுற பாடும். அந்த மாணிக்கம் பய ஒரு மந்திரி உசிர  காப்பாத்த ஒரு வினாடி யோசிக்காம தன் உசிர தியாகம் பண்ணுனான். அவன் எங்க? நீங்கள்ளாம் எங்க? ஒரு தியாகியோட பொஞ்சாதிக்கு நீங்கள்ளாம் தர்ர மரியாதை இதுதானா?

ஈவு இரக்கம் இல்லாம இந்த பெண்ணையும் அவ குழந்தையையும் சித்ரவதை பண்ணியிருக்கீங்களே...  உங்க வீட்டுலயும் பொட்டை புள்ளைங்க இருக்குல்ல? ஒரு நிமிஷம் முத்துலட்சுமி இடத்துல அதுங்கள நினைச்சு பாக்க தோணலை?

மாணிக்கம் மாதிரி லட்சம் பட்டாளத்துகாரங்க எல்லையில சுயநலமில்லாம நெஞ்சை நிமித்தி நிக்கறதால தான் நாம திங்கவும் தூங்கவும் முடியுது."

அதே ஆங்காரத்தோடு தங்கையின் பக்கம் திரும்பினார்.

"ராட்சசி! பொம்பளையா டீ நீ?அடிக்கிற அடியில உன் பல்லோட சேந்து தலைக்கு ஏறியிருக்குற அகங்காரமும் இறங்கிடும். பொம்பளையை கைநீட்டுற வழக்கத்தை எங்கப்பன் எனக்கு கத்து குடுக்கலை.

இந்த பாரு, மாமாவோட முகத்துகாக அவரு தலை குனியக் கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக தான் போலீஸ் கம்ப்ளெய்ண்டு குடுக்கலை. உன் மருமகளை நீ பண்ற கொடுமையெல்லாம் தெரியாதுன்னு நினைப்பா?

உன்னை நம்பி என் பொண்ணை எப்படி டீ உன் வீட்டுக்கு வாழ அனுப்புவேன்?" 

"என்ன ணே சொல்ற?" அதிர்ந்தாள் மங்கா.




" மாணிக்கம் வைரவன் ரெண்டுமே உன் புள்ளைங்க தானடீ அவுங்களுக்குள்ள பாகுபாடு பாக்கறியா? அப்ப மருமவளுங்களும் அப்படி தான?"

"அண்ணே அது வேற. இது நம்ம ஈஸ்வரி..."

"அட ச்சை.."


"அண்ணிக்கு சேர வேண்டிய பென்ஷன், வேலை எல்லாம் நீ புடுங்கிவச்சிக்கிட்ட வைரவா.

உன்னை கல்யாணம் பண்ணா அவங்களையும் பாப்பாவையும் பட்டினி போட்டுட்டு நீ சம்பாதிக்கற பாவக்காசுல தான டா நான் குடும்பம் நடத்தணும். அந்த மானங்கெட்ட வாழ்க்கை எனக்கு வேணாம். நீ அந்த காசு பணத்தையே கட்டிகிட்டு குடும்பம் நடத்து"
அவனுக்கும் தனக்கும் போடப்பட்ட பரிசத்தை உடைத்தாள் லிங்கேஸ்வரன் மகள் ஈஸ்வரி ஊர் முன்னிலையில்.


மாணிக்கத்தின் தந்தை கம்ப்ளெயிண்ட் கொடுத்ததாக கூறி போலீஸ் மங்காவையும் வைரவனையும் கைது செய்தது.

*******

2002

"ஈஷு.. ஈஷு.."

"பெரியவங்களை பேரு சொல்லி கூப்பிட கூடாது தங்கம்"

"அட போக்கா.. அவ இப்படி கூப்பிடலைன்னா எனக்கு அன்னி பொழுது, அச்சோன்னு இருக்கு"

அலுவலக பையை மேசையில் வைத்துவிட்டு இரண்டரை வயது அஞ்சுகத்தை கையில் அள்ளிக்கொண்டாள் ஈஸ்வரி "ஈஷுவுக்கு என்ன வச்சிருக்க பட்டு?" அஞ்சுகத்தின் கன்னத்தில் முத்தம் பதித்து தானும் ஒன்று அதனிடம் பெற்றுக்கொண்டாள்.

"மித்தாய்.. ஈஷு மித்தாய்... தாத்தா  குத்துச்சு... ஈஷு சாப்டு"
இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்பை ஊட்டிக் கொண்டிருக்க அதை ரசித்தபடி இரவு உணவை தயார் செய்தாள் முத்துலட்சுமி.

லிங்கேஸ்வரனும் அவரது மனைவியும்  ஊரில் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு மகளோடு சென்னைக்கு வந்துவிட்டனர்.
ஈஸ்வரி தனியார் வங்கியில் பணிக்கு சேர, லிங்கேஸ்வரன் சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார்.

*****




முத்துலட்சுமியை மேலே படிக்க சொல்லி வற்புறுத்தினாள் ஈஸ்வரி.

"அட போ ஈஸு இதென்ன சினிமாவா? ஈரோயினிக்கு கஷ்டம் வந்ததும் தீடீர்னு ஒரே சீனுல படிச்சு பட்டம் வாங்கி ஆபிஸர் ஆவறதுக்கு?"

ஈஸ்வரி க்ளுக்கென சிரிக்க, முத்துவிற்குமே சிரிப்பு வந்துவிட்டது. "நானு சின்னப் பிள்ளைலேருந்தே மக்கு தான். ரொம்ப பெஞ்சு தேச்சு தேச்சு தேன் பாஸானே. இருவது பேத்துல நான் தான் இருவதாவது ரேங்கு.

வீடு வாசல் தோப்பு தொரவுன்னு பெரிய வீட்டுகாரியும் இல்லை.
உன் அண்ணன் என்னை எதுக்கு ஆசைபட்டு கட்டுச்சுன்னு எனக்கு இப்பவுமே புரியலை ஈஸு..."

"ஜல்லிக்கட்டுல வைரனை மாடு முட்டுச்சே அப்பவே அந்த வீணாபோனவனை சாவட்டும்னு நீ விட்ருகணும் க்கா. அவனுக்கு போய் ரத்தம் குடுத்து காப்பத்துன பாரு. அந்த நாயி நன்றியே இல்லாம உனக்கு துரோகம் பண்ணுது."

"விடு ஈஸு அதை போய் ஏன் இப்ப.."

"அதுல தான் மாணிக்கம் மாமாவுக்கு உன் மேல பிரியம்" லேசாக முறுவலித்தாள் முத்துலட்சுமி.

"நீ ரொம்ப வெகுளியா இருக்க முத்துக்கா. உனக்கு ஒரு பிடிமானம் வேணும். நீ எதாச்சும் வேலைக்கு போகணும். நாளைக்கு உன் பொண்ணு உன்னை மரியாதையோட, கர்வத்தோட பாக்கணும்.


உன் சம்பாத்தியத்துல உன் மகளை நீ வளத்துன பெருமை, கண்ணியம் உனக்கு இருக்கணும். நீ யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.

இது உன் வீடு, இது உன் குடும்பம். நான் உயிரே போனாலும் உங்க ரெண்டு பேரையும்  விட்டுகுடுக்க மாட்டேன். ஆனா நீ சுயமா நின்னு ஜெயிக்க வேண்டியது முக்கியம்."

முத்துலட்சுமி தையல் வகுப்பில் சேர்ந்தாள். மெல்ல மெல்ல முன்னேறி அக்கம் பக்கத்தினருக்கு ரவிக்கை, சுடிதார் என தைத்து குடுக்க தொடங்கினாள். அவளது ஆர்வத்தை பார்த்து எம்பிராய்டரி, ஆரி வர்க் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டாள். மூன்று வருடத்தில் வங்கி லோன் போட்டு சிறிதாக ஒரு டெய்லர் கடை வைத்தாள்.

*****

2020

"என்னடா பண்ற? நான் தடுக்கி விழுந்து பல்லு பேந்துட போகுது. உன் தாத்தனோட பல் செட்டை தான் யூஸ் பண்ணணும். அஞ்சு மா... கண்ணை கட்டி எங்கடி இழுத்துட்டு போற?"

"ஆதித்யா நீயும் கூட்டு களவாணியா டா.."

"முத்துக்கா நீங்க மட்டும் எப்படி பயமே இல்லாம சைலண்டா வரீங்க?"

"கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா ஈஷு மா? லொட லொடன்னு.. பாவம் ஹரி சித்தப்பா" அஞ்சு கிண்டலடித்தபடி முத்துலட்சுமியையும் ஈஸ்வரியையும் ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

ஹரி - ஈஸ்வரிக்கு திருமணம் நடந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டது. பள்ளிகளுக்கு ரெடிமேட் யூனிபார்ம் தைத்து விற்பனை செய்யும் பிசினஸை ஹரியும் அவனது தந்தையும் செய்து வந்தனர்.

நல்ல வசதியான வாழ்க்கை. அவளது மகன் ஆதித்யாவிற்கு பதினேழு வயது. மகள் ப்ரியா பன்னிரெண்டு வயது.

ஈஸ்வரியின்  கண்கட்டை அவிழ்த்துவிட்டு அவளையும் முத்துவையும் அணைத்துக் கொண்டனர் அஞ்சு (எ) அஞ்சுகம், ஆதித்யா, ப்ரியா.

"வாவ் இந்த பார்ட்டி ஏற்பாடெல்லாம் யாரோடது? எதுக்கு?"

"ஐடியா உன் செல்ல பொண்ணோடது, உதவி நாங்க எல்லாரும் செஞ்சோம்"
அவள் கணவன் ஹரி கேக் ஒன்றை கொண்டு வைத்தான்.

"ஷ்ஷ்ஷ்... சைலன்ஸ்" அஞ்சுகத்தின் எச்சரிக்கை வர, அமைதி.

ஈஸ்வரியின் பெற்றொர், ஹரியின் பெற்றோர், முத்துலட்சுமி, ஈஸ்வரி, ஹரி அவர்களது குழந்தைகள்  அனைவரும் குழுமியிருக்க,

"என்னோட அப்பா இறந்துபோனப்ப நடந்ததெல்லாம் இப்ப கொஞ்சம் வருஷம் முன்னாடி பெரிய தாத்தா அதாவது என்னோட சொந்த தாத்தா டெத் டைம்ல தான் தெரியவந்தது. மொதல்ல அம்மா மேல ரொம்ப கோவம் வந்தது, இவ்ளோ கோழையா இருக்காங்களேன்னு. ஆனா அப்பறம் ஈஷு மா என்னை கேட்டாங்க, உன் அம்மா கோழையா இருந்தா நீ எப்படி உசிரோட இருக்க முடியுமான்னு.

It made me think. அந்த கஷ்டத்துல முத்து மா தைரியமா இருந்தாங்க எனக்காகன்னு புரிஞ்சுது.  வாழ்க்கை முழுதும் தைரியமா, உறுதியா, இருந்தாங்க எனக்காக. மனசு தளராம, நிலையா நிதானமா சிந்தித்து முடிவு எடுக்கற குணம் உங்ககிட்ட எனக்கு பிடிச்ச குணம். உங்க அளவு பொறுமை சாந்தம் நான் வளர்த்துக்க ஆசைப்படறேன்.
Thank you அம்மா.

முத்துவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"Now, ஈஷு மா, or அம்மா ஸ்டைல்ல  ஈஸு...thank you! என் அப்பா இருந்தா கூட இவ்வளவு எனக்காக செஞ்சிருப்பாரானு தெரியலை. என்னோட படிப்பு, இந்த வசதியான வாழ்க்கை, freedom, எல்லாம் குடுத்து சொந்த பொண்ணா வளர்த்துருக்கீங்க. ஹரி சித்தப்பா you too. தைரியம், தன்னம்பிக்கை குடுத்து, முட்டி மோதி சாதிச்சு சமுதாயத்துல என்னோட இடத்தை பிடிக்க ஊக்குவிச்சு. நான் தளர்ந்து விழும்போதெல்லாம் இதோ நாங்க இருக்கோம் நீ ஓடுன்னு என்ன தாங்கிபிடிச்ச எல்லாருக்கும், thank you so much"

அனைவரும் சற்றே உணர்ச்சி வசப்பட,

"Happy Mother's day ஈஷு மா முத்து அம்மா"

"இன்னிக்கா? ஏய் இப்ப இல்லையே.. மே மாசம் தான?"
அனைவரும் குழப்பத்தில் ஒன்றாக மறுத்து பேச,

"சைலன்ஸ்" ப்ரியா மேஜை மீது எழுந்து நின்று கத்தி "அக்கா ஏதோ சொல்லணுமாம்"

அனைவரும் அஞ்சுவை ஆவலாய் நோக்க, "எனக்கு மும்பை Tata Instituteல MSc. Environmental Science படிக்க அட்மிஷன் கிடைச்சிடுச்சு, ஸ்காலர்ஷிப்போட."

ஹோவென அனைவரும் குதூகலித்து ஆரவாரம் செய்து அவளை அணைத்துக்கொண்டு வாழத்துச் சொல்லி முடித்தனர்.

சற்று அனைவரையும் அமைதி படுத்திவிட்டு, "அம்மா, ஈஷு மா நீங்க ரெண்டு பேரும் இல்லைனா இது எதுவுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. இருபது வருஷம் முன்னாடி இதே நாள்ள தான் எனக்கு ரெண்டு அம்மா கிடைச்சாங்க. ஊர்ல பிரச்சனை நடந்த அன்னிக்கு தான ஈஷு மா என்னை உங்க மகளா வளக்க முடிவெடுத்தீங்க?"

கண்ணீரோடு ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஈஸ்வரி.

"ஸோ என்னை பொறுத்தவரை இன்னைக்கு தான் எனக்கு அன்னையர் தினம்"

முத்துலட்சுமி பெருமை பொங்க மகளை பார்த்து பூரித்து நின்றாள். ஈஸ்வரியின் குடும்பத்தினரையும் ஹரி குடும்பத்தினரையும் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டாள். 

🌺🌺🌺🌺🌺







Date published: 30th November 23

Word count: 1754






Bạn đang đọc truyện trên: Truyen247.Pro