Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -6

மூச்சு முட்டியது போல் உணர்ந்தவள், சட்டென தன் படுக்கையில் இருந்து எழுந்தாள். தன் சுற்றுவட்டாரத்தை பார்த்தாள், அது அவளது அறையே தான்.

தான் மயங்கியப் பின் என்ன நடந்தது என்று எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. உடையில் ஈரம் கூட இல்லை.

'என்னை காப்பாற்ற அவன் வந்தானே.. நான் எப்படி என் ரூம்க்கு வந்தேன்?..' என்ற குழப்பத்தோடு அறையைவிட்டு வெளியேறியவள் ருத்ராமாவைக் கண்டாள்.

அவரிடம் சென்றவள், "ருத்ரா மா, நான் நேத்து எங்கயாவது வெளில போனேனா?" என அவசரமாய் கேட்டவளை அவர் கூடுதலாக ஓரிரு வினாடி பார்த்து விட்டு, பின்
"ஆமாம்மா நேத்து தாராமாவும் நீங்களும் எங்கையோ வெளில போய்ட்டு வந்தீங்களே.." அவர் ஆரம்பிக்கும் போது இருந்த மகிழ்ச்சி முடிக்கும் போது அவளிடம் இல்லை.

"நான் அதைக் கேக்கல.. அதுக்கப்புறம் எங்கேயாவது போனேனா?" என அவள் லேசான எரிச்சலுடன் கேட்க,

"இல்லையேமா.. அப்போ ரூம்க்கு போனவங்க இப்ப தான் வெளில வர்றிங்க"

'அப்படினா எல்லாமே என் கனவா?..' என்ற எண்ணம் எழும் போதே அழுகையும் சேர்ந்தெழுந்தது.

தன் அறைக்கு சென்றவள், அருகில் இருந்த அனைத்தையும் கோபத்தில் தள்ளி விட்டாள்.

அப்போது அவள் கையில் ஏதோ சிக்கி கொண்டது போல் உணர்ந்தவள் என்ன வென்று பார்க்க, அவள் கையில் போட்டு இருந்த ப்ரேஸ்லெட்டில் ஒரு செயின் மாட்டிக்கொண்டு இருந்தது. அதில் நிலா போல் வட்டமாய் ஒரு டாலர் இருந்தது.

இதற்கு முன் அதை எங்கேயோ பார்ததுப் போல் அவளுக்கு தோன்ற, எங்கே.. என்று தன் சிந்தையை அலசியவளுக்கு சட்டென ஒரு முகம் ஞாபகத்தில் உதித்தது.

அது இனியனின் முகம்.

அவள் இதே போல் ஒரு செயினை அவன் கழுத்தில் கண்டுள்ளாள். ஆனால் இது எப்படி அவளிடம் வந்தது. அவனை முந்தன நாள் பார்த்தது.

கண்டிப்பாக நேற்று அந்த புதியவனுக்கும், பச்சை கண்களை உடையவனுக்கும் இடையில் இவள் மாட்டிக் கொண்ட போதுதான் இது சிக்கிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கும் இனியனுக்கும் என்ன சமந்தம்? ஒருவேளை அதில் ஒருவர் இனியனாக இருக்க கூடுமோ? என்ற சந்தேகம் எழ, இதே போல் உலகத்தில் ஒரு செயின் தான் இருக்க வேண்டுமா என்ன? என்ற கேள்வியும் எழுந்தது.

அவனிடம் பேசியே பார்த்து விடலாம்
என்ற முடிவுக்கு வந்தவள் அவனின், அலைப்பேசிக்கு அழைத்தாள்.
அவன் எடுக்க வில்லை.

மீண்டும் மீண்டும் முயர்ச்சித்தாள். பலனில்லை. எரிச்சலடைந்தவள் போனை மெத்தையில் விசிறி அடித்தாள்.

அவன் வீட்டு முகவரி தெரியாது. அவன் நண்பர்களை பற்றி தெரியாது. அவன் ஊர்  பெயர் தெரியாது. அவன் பெயரைத் தவிர அவனைப் பற்றி வேறெதுவும் தெரியாது.
வெறும் இணையத்தல நண்பன்.

இதுவரை இரண்டு தடவை சந்தித்திருக்கிறார்கள். அதுவும் ஒரு காபி ஷாப்பில். அப்போதும் அவன் அவனைப் பற்றி பேசவில்லை (இவள் பேச விடவில்லை).

ஆன்லைனும் வரவில்லை. இப்போது இவள் தொடர்புக்கொள்ள அவன் அலைப்பேசி எண்ணைத்தவிற வேறெதுவும் அவளிடம் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் 'நீங்கள் தொடர்பு கொண்ட எண் இப்போது உபயோகத்தில் இல்லை' என்றே வர ஆரம்பித்து விட்டது. ஓய்ந்து போனாள் அவள்.

அன்று முழுவதும் உடல் இங்கிருந்தாலும் நினைப்பெல்லாம் எங்கோ இருந்தது.

கனவிலும் அந்த பெண்மணி வந்து,

விடைகள் உன்னை தானாக அடையும்
நீ அதை அடைய முயற்சித்தால்
விடைகளுக்கு பதில் மரணத்தை அடைவாய்...!!!

என மிக சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

'புரியல? லூசு மாதிரி எதையாவது பண்ணிட்டு இருக்காம.. மூடிட்டு இருனு இன்டேரக்ட்டா சொல்லுது அந்த அம்மா' என அவளது மைன்ட் வாய்ஸ் வேறு முடிந்தளவு அவளை இன்ஸல்ட் செய்தது.

இனி எப்படி தூக்கம் வரும். எழுந்தமர்ந்துக் கொண்டாள். நடு நெத்தியில் எரும்பு கடித்ததைப் போல் உணர்ந்தவள் தொட்டுப்பார்த்தாள். பொட்டு வைத்ததுப் போல் லேசாய் வீங்கியிருக்க, ஜன்னல் வழியே வந்த டிங் டிங் டிங் என்ற சத்தம் அவளை திசைத் திருப்பியது.

சத்தத்தை வைத்தே குல்பி வண்டி என கண்டுக் கொண்டவளுக்கு, சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழ, தெரு நாய்களின் ஊலைச் சத்தம் வேறு அவளை பயமுறுத்தியது.

ஹரிஷை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையோடு தன் அறையை விட்டு மெல்ல வெளியேறியவள், ஹரிஷின் அறைக் கதவை தட்டப் போக, அது உள் புறம் தாளிடாமல் இருப்பதை கண்டவள், சட்டென உள்ளே நுழைந்தாள்.

அவனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
அவனருகில் சென்றவள்,

"ஹரிஷ்ஷ்ஷ்" என குனிந்து அவன் காதில் மெல்லிய குரலில் கத்தினாள். இவள் நினைத்ததுப் போல் அல்லாமல் அவன் உடனே முழித்துக் கொண்டான்.

திடுக்கிட்டவன், "நீ இங்க என்ன பண்ற?" என சட்றே உரக்க கேட்டான்.

"ஷூ..." என தன் ஆள்காட்டி விரலை தன் உதட்டில் வைத்து அமைதியாய் இருக்கும் படி சைகை செய்தாள்.

"நீ.. இங்க.. என்ன.. பண்ற..?" என மீண்டும் அதையே மெல்லிய குரலில் கேட்டான்.

"ப்ளீஸ் ஒரு ஹெல்ப் வேணும்.. ரொம்ப அர்ஜன்ட்.." என அவள் அவசரமாய் கூற

"என்ன ஹெல்ப்?" என்றான்.

"எக்ஸ்ப்ளைன் பண்ணலாம் இப்போ நேரம் இல்லை.. ஜஸ்ட் என் கூட வாங்க" என அவனை பேச விடாமல் தர தர வென்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

அவள் போவதற்குள் குல்பி வண்டி அந்த தெருவின் கடைசி முடிவில் நின்று கொண்டிருந்தது.

அவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு அதனிடம் ஓடினாள்.

அவனுக்கு புரிந்துப் போனது ஒரு குல்பிக்காக தான் அவள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று.

அந்த குல்பி காரரிடம் "அண்ணா இரண்டு குல்பி" என வாங்கிக் கொண்டவள் ஒன்றை ஹரிஷ் கையில் திணித்தாள்.

"இல்லை எனக்கு வேணாம்" என அவன் கூற,
அவள் கிளுக்கென சிரித்து விட்டு,

"ஹீ..ஹீ..அது உங்களுக்கு இல்லைப் பா.. அதுவும் எனக்கு தான்" என்றாள் தன் கையில் இருந்த குல்பியை சாப்பிட்ட படி

"அப்போ ஏன் என்கிட்ட குடுத்த?" என அவன் கடுப்புடன்

"பிகாஸ்.. என் ஒரு கையில தான் அடிப்பட்டுற்குள… எப்படி என்னால பிடிக்க முடியும்....?” என அவள் கேட்க,

"கையில தானே அடிப்பட்டுருக்கு.. விரல்ல இல்லேயே" என கூறியபடி அவள் விரல்களால் பிடித்துக் கொள்ளும் படி அவள் உள்ளங்கையில் திணித்தான்.

"ஹீம்ம்ம்” என முகத்தை திருப்பிக் கொண்டவளை ஓரக் கண்ணால் பார்த்து லேசாய் சிரித்தவன்,

"நீ குல்பி சாப்பிடனும்னா தனியா வர வேண்டியது தானே.. என்னை ஏன் இழுத்துட்டு வர.."

'நான் நாய்க்கு பயந்து தான் கூட்டிட்டு வந்துற்கேனு இவனுக்கு தெரிஞ்சா என் மானம் போய்டும்' என மனதுக்குள் நினைத்தவள் "அதெல்லாம் அப்படி தான்" என்க,

"எதெல்லாம் எப்படி தான்?" என மறுக் கேள்வி கேட்டவனிடம்,

"சரி அதை விடுங்க.. இதுக்கு முன்னாடி மிட் நைட்ல என்னைமாதிரி ஒரு அழகான பொண்ணுக்கூட..." என்றவளை அவன் முறைக்க,

"சரி சரி.. என்னை மாதிரி ஒரு பொண்ணுக்கூட இப்படி குல்பி சாப்பிட்டு இருக்கிங்களா..?" என அவள் கேட்டு விட்டு அவனை ஆர்வமாய் பார்க்க,

"இல்லை" என ஒற்றை வார்த்தியில் பதில் அளித்தவுடன், ஆர்வம் வடிந்து போன முகத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

வெறுமனே அமைதியாய் நடப்பது அவளுக்கு எரிச்சலைத் தர, தன் முன் நடப்பவனை ஓடி சென்று அவன் முன் தன் கையை நீட்டி வழி மறித்தாள்.

"இப்ப என்ன வேணும்?" என தன் கண்களை மேல் நோக்கி சுழட்டி கேட்ட வாரே, அவள் பின்நோக்கி நடக்கும் படி இரண்டடி நடந்தான்.

"என்ன நீங்க எப்ப பாத்தாளும் எரிஞ்சு எரிஞ்சு விழுறிங்க..? ஹான் புடிச்சிட்டேன்.."
என்ன காற்றில் சுடக்கிட்டவளை, அவன் என்ன என்பது போல் பார்க்க "நீங்க லவ் பெயிலியர் தானே?.." என்றதற்கு அவன் இல்லை என்று தலையாட்ட, அழுவதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டவள்,

"அப்போ என்ன தான் ப்ராப்ளம் உங்களுக்கு?.. சொல்லுங்க நான் தீர்த்து வைக்கிறேன்.." என்றவுடன் நடந்துக் கொண்டு இருந்தவன் ஒரு நிமிடம் நின்று பின், "உண்மையாவா..?" என கேட்டான்.

"நிலாவை நம்பினோர் ஆல்வேஸ் சேப்பாக இருப்பார்.. சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"நான் கொஞ்ச நாள்லா ஒரு வீட்ல தங்கியிருக்கேன்.. அங்க ஒரு கொசு என்னை மிட் நைட்ல எழுப்பி குல்பி சாப்பிட கூட்டிட்டு வந்து.. கேள்வி மேல கேள்வியா கேட்டு என்னை கொல்லுது.. அதை கொல்றதுக்கு எதாவது ஐடியா இருந்தா.. ப்ளீஸ் கொஞ்சம் சொல்லு.." என அவன் சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் சொன்ன இடத்துலையே நின்று கண்ணத்தில் கைவைத்து யோசித்தவளுக்கு, அவன் தன்னை தான் சொல்கிறான் என பிடிப் படும்போது, அவன் பாதி தூரம் நடந்து இருந்தான். நாய்களின் ஊலைச் சத்தம் அவள் காதில் விழுந்தவுடன் முகத்தில் பீதி பரவ, அவனிடம் ஓடிச் சென்று சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

அவள் அவ்வப்போது பின்னே திரும்பி திரும்பி பார்ப்பதை உணர்ந்தவன். என்ன வென்று பார்க்க, அங்கே நாய்கள் சண்டை பிடித்துக்கொண்டிருந்தன. நாய்க்கு பயந்து தான் தன்னை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள் என புரிந்துக் கொண்டவன் அவளிடம் அதை கேட்கவில்லை. கேட்டாலும் அவள் ஒத்துக்கொள்ள போவதில்லை.

இருவரும் வீட்டை அடைந்து அவர் அவர் அறைக்கு செல்லும் வேலையில்,

"நீங்க எப்போமே இப்படிதானா..?, இல்லை இப்போ மட்டும் இப்படியா?" என அவன் அறைக்கதைவை சாத்தும் நேரம் கேட்க,

மர்ம புன்னகை வீசிவிட்டு, "கேள்வி கேக்கிறது ஈசி.. பதில் சொல்றது கஷ்டம்" என்றான்.

"உண்மை தான்.. என்கிட்ட கூட நிறைய கேள்வி இருக்கு.. ஆனா பதில் தான் இல்லை” என தன் வாழ்வில் கடந்த சில நாட்களை நினைத்து அவள் கூற,

"கேள்விக்கான பதிலை தேட ட்ரை பண்ணி.. மறுபடியும் கேள்வியே கிடைச்சா.. நம்ப கேள்விய மாத்திடுவோம்.. கிடைக்க வேண்டிய பதில் எப்பவா இருந்தாலும் கிடைக்க தானே போகுது.. சோ நம்ப எனர்ஜிய எதுக்கு வேஸ்ட் பண்ணனும்?" என கேட்டுவிட்டு அறையின் கதவை சாத்திவிட்டான்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro