Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா- 39

'ஆத்திரக்காரனிற்கு புத்தி மட்டு' என்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அதுவும் கொம்பனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதை நிலா மிகச் சரியாய் கணித்து விட்டால் போலும்.

அவன் கேட்ட செய்தி உண்மையா என அறிந்துக்கொள்ள, தன் புரவியில் புயலென கோட்டையின் எல்லையில் இருந்த ஆற்றை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தவனின் கரத்தில் அம்மோதிரம் காணாமல் இருக்க, அதுவோ அவனது அறையில் பல வீரர்களின் பாதுகாப்பிற்கு இடையில் பத்திரமாய் உறங்கி கொண்டிருந்தது. அதை அப்படியே கையில் போட்டுக்கொண்டு போக அவன் ஒன்னும் முட்டாள் இல்லை அல்லவா?

மாடத்தின் வழியே ஏறி, அவ்வறைக்குள் மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க, தொப்பென உள்ளே‌ விழுந்தான் மாயன். அவனது உருவம் மறைக்கப்படாமல் இருக்கவே, அங்கே நின்றுக்கொண்டிருந்த இரண்டு வீரர்கள், தங்களது மாய சக்தியால் அவனைக் கண்டுத் தாக்க, அதில் தூக்கி வீசப்பட்டவன், சற்று நிதானித்துக்கொண்டு நிலா அவனிடம் தந்த, சங்கிலியில் தொங்கிய சாவியை தன் கழுத்திலிருந்து அறுத்தெடுத்தவன், அதை வலி வாலாய் மாற்றி நொடியில் அவனை நோக்கி பாய்ந்து வந்த வீரர்களை வீழ்த்த மீதிப் பேர் அந்த வாலைக் கண்டு அரண்டுப் போய் நின்றார்கள். அவர்கள் அவனை நெருங்காமல் தங்களது மந்திரச் சக்தியால் தாக்க, அவ்வாலையே கேடயமாக மாற்றியவனை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்த வாலைக் கண்டு பயம் கொண்டவர்கள் பாதிப்பேர் அங்கிருந்து தப்பி ஓட, தோல்வியை ஒற்றுக்கொள்ள விரும்பாத மீதிப் பேரும் அந்த வாலைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். ஆழனின் வாலைப் பற்றி கேள்விப்படாமலும் அதன் சக்தியைப் பற்றி தெரியாமலும் யாரும் அங்கு இருக்க வாய்ப்பே இல்லை.

மீதியிருந்த பத்துப்பேரின் வீரத்தைக் கண்டு அவர்களது உயிரைப் பறிக்க விரும்பாதவன், அவர்களை இறகி வாலால் தாக்கி அதன் குண்டு மணியில் அடைத்து விட்டு, அந்த மோதிரத்தை தேட ஆயுத்தமானான். அப்பொழுது வித்தியாசமாய் ஒருப்பெட்டி அவனது கண்ணில் படவே, அதைத் திறந்துப் பார்த்தவனிற்கு ஏமாற்றம் தராத விதத்தில் அதிலிருந்த மோதிரத்தின் பொலிவு அவனது கண்களை கூசச் செய்தது.

அவனது இதழ்களில் ஒருப் புன்னகை குடிக்கொள்ள நிலாவின் வார்த்தைகள், அவனது நினைவுகளில் வந்துப் போனது.

"நான் உயிரோடத் தான் இருக்கேனு தெரிஞ்சா, கண்டிப்பா அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறும். கோபம் வந்தா யோசனைத் தடுமாறும். அவன் ஓடி ஒளியுற ஆள் கிடையாது. என்னைத் தேடி கண்டிப்பா வருவான். அப்படி அவன் வரும்போது மோதிரத்தைப்போட்டுட்டு வந்தா என்ன ஆகும்னு அவனுக்குத் தெரியும். அவனுடைய உயிர் பயத்தை விட அந்த மோதிரத்தோட சக்தி போய்டாமா இருக்க என்ன பண்ணனுமோ அதுக்குத் தான் அவன் முக்கியத்துவம் குடுப்பான். சோ அந்த மோதிரத்தை சேப் பண்ணிட்டுத் தான் வருவான். இங்கத் தான் உனக்கு வேலை இருக்கு. நீ கோட்டைலயே இருந்து அந்த மோதிரம் எங்க இருக்குன்னு கண்டுப்புடிக்கணும்."

"அந்த மோதிரத்தைப் பாதுகாப்பா வச்சிருக்கணும்னு நினைக்கிறவன் அதை நம்ப எடுக்குற மாதிரி அவ்வளவு சுலபமான எடத்துலையா வைப்பான்?" என்றான் மாயன்.

"அந்த மோதிரத்தைப் பத்தி நமக்குத் தெரியும்னு அவனுக்குத் தான் தெரியாதே. அப்புறம் அவனுக்கு அவ்வளவு யோசிக்க நேரமும் இருக்காது. அந்த நேரத்தையும் நம்ப குடுக்கக் கூடாது. சோ மிஞ்சி மிஞ்சி போனா அதைப் பாத்துக்க நாளஞ்சு ஆளுங்களை செட் பண்ணி வச்சிருப்பான். அவங்க கிட்ட இருந்து அந்த மோதிரத்தை எடுக்குறது ரொம்ப சுலபமான விஷயம் தான். இருந்தாலும் வேலை சீக்கிரம் முடிஞ்சா தான் உன்னால குகைல இருக்கிற மக்களைக் காப்பாற்ற முடியும். அதனால இதை வச்சிக்கோ." எனத் தன் கழுத்திலிருந்த ஆழனின் சாவித்தொங்கும் சங்கிலியை மாயனின் கரத்தில் திணித்தாள்.

இதையனைத்தையும் அசைப்போட்ட மாயனின் மனம், "ஹும்ம்.. ஸ்மார்ட்..!" என தன்னவளை பெருமைப் பாடிக்கொண்டது.

அதைத் தன் உடைக்குள் வைத்துக்கொண்டவன், அங்கிருந்து செல்லும் முன், இறிகியில் இருந்த மணியை அவ்வறைக்குள் தூக்கி விசிறி விட்டு செல்ல, அதற்குள் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் விடுவிக்கப் படும்போது அவன் அங்கிருந்து மறைந்திருந்தான். அந்த மணி மீண்டும் தனக்குச் சொந்தமான இடத்திலேயே அடைக்கலமாகி விட்டது.

அடுத்து அவனது பயணம், கோட்டையின் கீழிருக்கும் குகையை நோக்கி தொடர்ந்தது.

இத்தனை ஆண்டு காலமாய், வெறும் கொம்பனின் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய அந்த மக்கள், திடீரென ஒரு அன்னியன் உள்ளே நுழைவதைக் கண்டு புரியாமல் பார்க்க, இன்று தங்களின் மரணம் உறுதி என அதை எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருப்பதாக அவர்களது முகமே அவனிற்கு கூறியது.

"விடிவுகாலம் பிறந்து விட்டது. கொம்பனின் ஆட்டம் இன்றோடு முடியப் போகிறது. அவள் வந்து விட்டாள். உங்களின் மிளிராவின் வாரிசும், ராஜ வாரிசுமான அவள் வந்து விட்டாள்." என உச்சிக் குரலில் நெற்றி நரம்புகள் புடைக்க, மகிழ்ச்சியின்‌ கர்வத்தில் கூறியவனின் வார்த்தையைக் கேட்டு, அம்மக்கள் அனைவரும், ஆனந்தத்தில் திளைக்க, அவனது வார்த்தைகளுக்கு ஏற்றவாறு அவர்களது விடுதலையும் நடந்து முடிந்தது மாயனால்.

கொம்பன் கோட்டையில் இருந்து புறப்பட்டு விட்ட செய்தி மசூராவின் மூலமாய் நிலாவிற்கு சென்றடைந்து விட, இருப்பினும் இவ்வளவு நேரமாகியும் அவன் அங்கு வந்து சேராது இருப்பது அவள் மனதிற்கு ஏதோ நெருடலாய்ப் பட்டது.

நாகாவும் கொம்பனும் ஒன்றாகத் தான் புறப்பட்டார்கள் என்றச் செய்தியும் அவளை வந்துச் சேர்ந்தது. இருவரையும் காணவில்லை என்றால் வழியில் என்ன நடந்திருக்கக் கூடும்? கொம்பன் அவனது தந்தையைக் கொல்லும் போது அவன் பேசிய வாக்கியங்கள், அவளுள் ஓடிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து கொம்பன் மேல் ஏகளவனிற்கு வன்மம் இருந்ததை அவள் உணர்ந்திருந்தாள்.

மக்களனைவரும் தங்களுக்குள் பேசிச் சிரித்து மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம் இருக்க, இவள் மட்டும் யாரையோ எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். அவள் மனம் அவளுக்கு ஏதோ சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றிக் கண்டாலும், அதில் எந்த அளவுக்கு உண்மை அடங்கியுள்ளது எனத் தெரியாமல், வழக்கம் போல் மனதிற்கும் சிந்தைக்கும் நடுவில் போர் நடத்திக்கொண்டிருந்தாள்.

சரியாய் அந்தச் சமயத்தில், குகையில் அடைக்கப்பட்ட மக்களும் அங்கு வந்துச் சேர்ந்து விட, அனைவரும் அவளைக் கொண்டாட, இருப்பினும் குழம்பிய முகம் மாறாமல் இருந்த நிலாவின் அருகில் "நீ நினைப்பது சரிதான் தாயே.. விரைந்துச் செல்." என குகையினுள் இருந்த அதே முதியவரின் குரல் கேட்டு திடுக்கிட்டு அவரின் புறம் திரும்பியவளின் முகத்தில் குழப்பம் நீங்கி பெரிய புன்னகை ஒட்டிக்கொள்ள, "எப்படி உங்களுக்கு இது எல்லாம் தெரியுது?" என புருவங்களை உயர்த்திக் கேட்டாள் சிரித்தப்படி. அவளது தலையில் கை வைத்து முடியை சிலுப்பியவர் லேசாய்ச் சிரித்தபடி,

"ஏனென்றால் ஏகளவனுக்கு நாகக் கலையைக் கற்றுத் தந்ததும் கொம்பனிற்கு அம்மோதிரத்தை செய்துத் தந்ததும் நான் தானம்மா. இயற்கையையும் இயற்கையின் யுக்திகளையும் கற்றுத் தேர்ந்தவன்‌ நான்."

"இப்படிப்பட்ட நல்ல விஷயத்தை தப்பானவங்களுக்கு ஏன் கொடுத்திங்க?"

"அதற்கும் அந்த விதி தானம்மா காரணம். நல்லதுக்காக நான் செய்தக் காரியம் இப்படிக் கெட்ட வழியில் பயன்படுத்தப் படும் என நான் நினைக்கவில்லையே."

"இனி எல்லாமே நேர் வழியில் தான் இங்கு நடக்கும். நான் புறப்படுறேன்."

"ஒரு நிமிடம். மிக முக்கியமான விஷயம். அந்த ஏகளவன் பிறரை வசியம் செய்வதில் வல்லவன். நீ ராஜ வாரிசு என்பதால் அவனால் உன்னை வசியம் செய்ய இயலாது. ஆனால் உன்னை தடுமாற வைக்க இயலும். எனவே அவனது கண்களை பார்ப்பதைத் தவிர். உனது முதல் குறி அவனது கண்களாக இருக்க வேண்டியது அவசியம்." என்றார்.
.
.

நெளி நெளியாய் பல இராட்சச, நாகங்கள் கொம்பனின் காலிலும் கைகளிலும் ஊர்ந்து அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இரணம் செய்துக்கொண்டிருந்தது.

இடைக்கு மேல் மனிதனும் இடைக்குக் கீழ் நாகமுமாய் எதிரிலிருந்த பாறையின் மேல் அமர்ந்திருந்த ஏகளவன் நாகா அந்த இடமே அதிரும் படி கெக்கரித்துக்கொண்டு இருந்தான்.

"அந்த நிலா இன்னும் சாக வில்லை என்றால் என்ன? அவள் உயிரோடு இருப்பதே உன் உயிரை எடுக்கத் தான் அல்லவா? அதற்கு முன் நான் முந்திக் கொள்ள வேண்டாமா? உன் உயிர் என் கையால் தான் போக வேண்டுமடா" என்றவனின் கையசைப்பில் அந்த நாகங்கள் கொம்பனின் கால் கை என மேலே‌ மேலே ஊர்ந்துச் சென்றன. கொம்பன் தனது மாய சக்தியால் அதை எத்தனை முறை தடுத்தாலும் நொடிக்கு நூறு முறை அவை அவனை நெருங்கி வதம் செய்தன.

"நா..நாகா விட்டு விடு. தவறு செய்கிறாய். பின் வருத்தப் படுவாய்." என அப்போதும் குரலில் கம்பீரம் இழக்காமல் அவனை எச்சரித்தவனைக் கண்டு, கெக்களித்தவன்,

"ஏய் எனக்கு உன் போல் உயிர்ப் பயம் இல்லையடா. சாகும் நேர்த்தில் கூட உனது அகம்பாவம் அடங்க வில்லை இல்லையா?" என நாகாக் கூறிய நொடி அந்த குகை முழுவதும் இருண்டுப் போனது.

பின் நாகாவின் அலறல் சத்தம் கேட்க, அடுத்தப் பத்து நொடியில் மீண்டும் ஒளிப்பெற்ற குகையினில் ராஜ வாரிசுக்கே உண்டான தோரணையில் நின்றுக் கொண்டிருந்தாள் நிலா.

தன் தம்பியின் கண்கள் சிதைக்கப் பட்டு குருதி வழிய துடித்துக்கொண்டிருந்தவனைக் கண்ட கொம்பனுக்கு முதல் முதலாய் மரண பயம் தேகத்தை நடுங்க வைக்க, மிரட்சி நிறைந்த கண்களோடு நோக்கினான் நிலாவை.

அவளோ அவனைச்சுற்றியிருந்த நாகங்களை நொடிப்பொழுதில் இல்லாமல் செய்து விட,
அவளின் முன் கைக் கூப்பி, "என்னை மன்னித்து விடு. என்னை தயவு செய்து மன்னித்து விடு. நான் செய்ததெல்லாம் தவறு தான்." எனக் கைகூப்பிக் கெஞ்சினான்.

"தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டா, அவங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு குடுக்குறதுல தப்பு இல்லைத் தான். ஆனாஆஆ.." என இழுத்தப் படி அவனை ஒருச் சுற்று சுற்றி, அவனுக்கு நேராய் நின்றவள், "ஆனா.. நீ பண்ணது தப்பு இல்லை. பாவம். பாவத்துக்கு மன்னிப்புக் கிடையாது. நரகம்... நரகம் தான் கிடைக்கும்." எனக் கூறி அவளின் பார்வையாலே அவனை விசிறி அடித்ததில் வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் இரத்தம் வழிய சுருண்டு விழுந்தான் அவன்.

"நீ செத்தா நரகத்துக்கு போவியானு எனக்குத் தெரியல. அதனால நீ ஒன்னும் கவலைப் படாத. உன் உயிர் போகாமலேயே நான் காட்டுறேன் உனக்கு நரகத்தை." என்றவள், அவனுக்கு நேராய் கைகளை உயர்த்த, அவனுள் இருந்து தொடர்ந்து ஒருப் பெரிய வெளிச்சம் வெளி வர அந்த வெளிச்சத்தோடு அவனது உடலும் அந்தரத்தில் மிதக்க, பிறகு அந்த வெளிச்சம் ஓயும் போது, அவனது உடலும் தரையில் தொப்பென்று விழுந்தது.

அந்த வெளிச்சத்தை ஒன்றாய் தன் கைக்குள் குவித்து மூடித் திறந்தாள். அது ஒரு சின்ன வைரக் கல் போல் மாறியிருந்தது.

"உன் சக்திகளும், உன் நினைவுகளும் இதற்குள். உன் நினைவுகள்ள இப்போ இங்க நடந்தது மட்டும் தான் இருக்கும். நீ இங்க அனுபவிக்குற நரக வேதனை என்னால தான்னு அதை நினைச்சு நினைச்சு உயிரை விடு. உன் உயிரும் அவ்வளவு சீக்கிரம் போய்டாது கவலைப் படாதே. நீ உயிர் வாழ்றதுக்கான அனைத்து தேவைகளும் இங்கு கிடைக்கும். உன் தம்பியை பற்றி கவலைப்படாதே. அவனுக்கும் உன் நிலைமைத் தான். ஆனா அவனுடைய நினைவுகள மட்டும் நான் எடுக்க மாட்டேன். ஏன்னுத் தெரியுமா? காலம் பூரா இந்தக் கல்லை பார்வையில்லாம எடுக்க, தேடியே சாகட்டும்." என்றவளது வார்த்தைகள் கூட, அவனுக்குப் புரிந்ததா என்றுத் தெரியவில்லை.

"எங்களைக் கொன்னுடு. தயவு செஞ்சுக் கொன்னுடு." எனக் கெஞ்சிய நாகாவைக் கண்டுக் கெக்களித்தவள்,

"சாகனும்னு அவ்வளவு ஆசையா உனக்கு? ஆனா எனக்கு ஆசை இல்லையே. உங்களைக் கொன்னுட்டா இந்தக் கொம்பனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?" என்றவள் அந்த இடத்திலிருந்து மறைந்தாள்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro