நிலா- 38
"இவ்வளவு நெருங்கி விட்ட தாங்கள்.. இன்னும் சற்று முயற்சித்தால் அதற்க்கான விடையையும் கண்டுக்கொள்ளலாமே.." என்றவரின் குரல் கேட்டு அவ்விடத்திலேயே நின்றான்.
"யோசிக்கிற அளவுக்கு எங்கக் கிட்ட நேரம் இல்லை. அந்த மோதிரம் அவனுக்கு எந்த விதத்துல பலத்தைத் தருதுனு கொஞ்சம் சொல்லுங்களேன்?!" என்றவளைப் பார்த்தவர்,
"அது ஆயிரம் அகிலப் பூவைக் கொண்டு உருவாக்கப் பட்டது. இன்றுவரை அவன் உயிர் பயம் இல்லாமல் இருக்கிறான் என்றால் அதன் துணையால் மட்டுமே."
"நாளை நடக்க இருக்கும் திருவிழாவை அவன் நிப்பாட்ட நினைக்கிறதுக்கும் இந்த மோதிரத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?" என்றவளது கேள்விக்கு அவர் மாயனைப் பார்த்தார்.
"கண்டிப்பா.. சனித் திருவிழா அன்று கதிரவன் உக்கிரமாய் இருப்பான். பனியிலேயே இருக்கும் அகிலப் பூவுக்கு அது ஆகாது. ஒருவேளை நாளைத் திருவிழா நடந்தால் மக்களனைவரும் ஊர் எல்லையிலிருக்கும் ஆற்றருகில் கூடி தங்களுக்கு சொந்தமானப் பொருளை படையலாய் ஆற்றில் விடும் போது, கண்டிப்பாய் அரசனானக் கொம்பன் அங்கிருக்க வேண்டியது அவசியம். அப்படி அவன் அங்கு வந்தால் அவனது கையிலிருக்கும் அகிலப்பூவைக் கொண்டு உருவாக்கப் பட்ட மோதிரம் தன் சக்தியை இழந்து விடும்." என்றவனது வார்த்தையை ஆமோதிக்கும் படி தலையசைத்தார் அந்த முனிவர்.
"இல்லை. திருவிழா நிற்கக் கூடாது. நான் நிற்க விட மாட்டேன்." என்றவளின் குரலில் இருந்த அழுத்தம் மாயனை வியக்க வைக்க,
"எப்படி?" என்றான் கேள்வியாய்.
"நான் மக்கள்கிட்ட பேசுறேன்.."
"அவங்களைப் பொறுத்த வரைக்கும் நீ சாதாரண ஒரு பணிப்பெண் நிலா. நீ சொன்னா அதை அவங்க எப்படி மதிப்பாங்க? ஏத்துப்பாங்க?"
"அப்போ அவங்க மதிக்கிறவங்களை பேச வைக்கலாம்." என்றவளின் குரலில் ஒரு தீர்க்கம் இருந்தது.
.
.
விடிந்தால் திருவிழா.. இதில் கொம்பனின் கட்டளையைக் கேட்டு மக்களனைவரும் கூடியிருக்க, ஆனால் அவனை எதிர்க்கத்தான் அங்குள்ள ஒருவரிடமும் தைரியமில்லாமல் போனது.
அதில் மாசா, ஈலா, சுமோ என அனைவரும் தடுக்கத் தடுக்க, கோபத்தில் கண்கள் சிவந்து கை நரம்புகள் புடைக்க வீர நடைப்போட்டு, அனைவரையும் முந்திக்கொண்டு நடந்து வந்தார் ஆழன்.
ஒருசிலர் அவரைக் கண்டு வாயடைத்து நிற்க, வெகு சிலரோ அவர் மேலிருந்த மரியாதையின் நிமித்தமாக, வழி விட்டு விலகி நின்றனர். இன்னும் பலரின் கண்களில் அவரைக் கண்ட ஆனந்தத்தில் கண்ணீர்ப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
ஒருப்பெரியப் பாறையின் மேல் ஏறி நின்றவரின் கையில், பிடிமானத்துக்காய் ஒருப் பெரிய கம்பை ஊன்றி நின்றார் அவர்.
இத்தனை ஆண்டுக் காலமாய் இறந்து விட்டதாய் நினைத்துக்கொண்டிருந்தவர் இன்று உயிருடன் தங்களது கண் முன் நிற்பதைக் கண்டு அனைவரும் மலைத்துப் போய் நின்றுக்கொண்டிருந்தார்கள்.
அனைவரின் இதழ்களும் "ஆழன் ஆழன்" என உச்சரிக்க, தன் ஒருக் கையை தூக்கி அனைவரையும் அமைதிப் படுத்தினார் அவர்.
"இத்தனை ஆண்டுகாலமாக எங்க ஐயா போயிருந்திங்க.. இங்க நடக்கிற அநியாயமும் அக்கிரமங்களும் உங்களுக்குத் தெரியுமா? இல்லை தெரிஞ்சும் சும்மா இருந்திங்களா?" என மக்களில் ஒருவர் வெகுண்டெழ, சுரத்தே இல்லாமல் ஒரு சிரிப்பை உதிர்த்தவர் தெரியும் என தலையசைத்தார். பிறகு அங்கு சிறு சலசலப்பு எழ, பலரின் குரல் ஆக்ரோஷமாய் ஒளிக்க, தன் கையில் ஏந்தியிருந்த கம்பை ஓங்கி, அவர் தரையில் ஒரு அடி அடித்ததில் மக்களனைவரும் அமைதியாயினர்.
"கோபம் வருகிறதா? இத்தனை ஆண்டுக் காலமாய் இங்கு நடப்பவை அனைத்தையும் அறிந்தும் நான் ஏன் எதுவும் செய்யவில்லை எனக் கேள்வி எழுகிறதா?" என்ற அவரது கேள்வியை அனைவரும் ஆமோதிக்கவே,
"இத்தனை ஆண்டுகளமாய் அந்தக் கொம்பன் என்னைச் சிறையில் அடைத்திருந்தான். ஆதலால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. நீங்கள் அனைவரும் வெளியில் தானே இருந்தீர்கள்? அவன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தையும் நேரடியாய்ப் பார்த்த நீங்கள் ஏன் எதுவும் செய்யவில்லை? எங்களை அடிமைப் படுத்த யாரடா நீ என இப்பொழுது கூடியதுப் போல் முன்பே ஒன்றுக்கூடி அவனை எதிர்த்திருக்க வேண்டியது தானே? ஏன் செய்யவில்லை?" என ஆக்ரோஷமாய் கேட்ட அவரின் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் அனைவரின் தலையும் தாழ்ந்தது.
"பயம்.. உயிர் பயம்.. இன்று வரை வாய்பொத்தி வேடிக்கைப் பார்க்க வைத்தது உயிர் பயம் அல்லவா? எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறையில் அடைத்துவிடுவான். அங்கிருந்து மீளவே முடியாது என்ற பயம். அடைக்கட்டுமே.. எத்தனைப் பேரை அடைப்பான்?.. ஆயிரம்?.. இரண்டாயிரம்?.. அனைவரையும் சிறையில் அடைத்து விட்டு அவன் என்ன சுடுகாட்டிலேயா ஆட்சிப்புரிவான்?" என்றார் கழுத்து நரம்புகள் புடைக்க.
"இல்லை உங்களின் அமைதிக்கு உயிர் பயம் தவிர்த்து வேறு ஏதெனும் காரணமுண்டா? அவனின் அக்கிரமங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ? அவனால் பாதிக்கப்பட்டவரின் குமறல் உங்களின் செவிகளில் விழ வில்லையோ? இல்லை அதற்கெல்லாம் சாட்சி வேண்டுமா..? நானிருக்கிறேன் சாட்சியாய்.. இதுப் போதாதா உங்களுக்கெல்லாம்?" என்றவரின் கேள்விக்கு அங்கு அமைதியே நிலவ, ஒரு உஷ்ணம் மிக்க பெரு மூச்சை வெளியிட்டு,
"கொம்பனை எதிர்த்து நாளைத் திருவிழா நடத்தப் பட வேண்டும்." என அழுத்தமாய் அவர் கூறியும் அங்குள்ள ஒருவரும் அதற்கு முன்வரவில்லை.
"மிளிராவின் மேல் உண்மையாய் பாசமும் நேசமும் வைத்த ஒருவர் இங்கில்லையா? ராஜ வாரிசான அவளையும் அவள் மகள் நிலாவையும் கொன்ற கரங்களை எதிர்க்க ஒருவருக்கும் இங்கு மனமில்லையா?" என்றவரின் கண்களில் கண்ணீர் திரண்டு பார்வையை மறைக்க, அதுத் தெளியும் பொழுது, மக்களனைவரும் முன் வந்து தங்களது கையை உயர்த்தி நிற்க, "அரசர் வரவில்லை என்றாலும் நாளைத் திருவிழா நடைப்பெறும்.. மிளிராவின் மகளும் ராஜ வாரிசும் ஆன நிலாவின் தலைமையில்." என அவர் கூறி முடிக்கும் பொழுது நிலா இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள் என்ற உண்மையை அறிந்து மக்கள் மத்தியில் ஆனந்தம் செழித்தது.
.
.
காலை விடிந்தது. திருவிழாக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஜக ஜோதியாய் நடைப்பெற்றுக்கொண்டிருந்தச் செய்தி கொம்பன் காதிற்கு செல்லவே கோபத்தில் இரத்தம் சிவக்க கொதித்துக்கொண்டிருந்தான்.
"என்னை மீறி ஏற்பாடு நடத்துகிறார்களா? நடத்தட்டும் நடத்தட்டும். என்ன ஆனாலும் நான் செல்லப் போவதில்லை. நான் தலைமைத் தாங்காமல் அந்தத் திருவிழா எப்படி நடக்கிறது என்றுப்பார்க்கத் தானேப் போகிறேன்." என சினம் தீர கர்ஜித்தவன் தன் அறையில் நுழைந்து ஒரு வட்டக் கண்ணாடியை கையில் ஏந்தினான். பொதுவாய் அவனுக்கு எதாவது எதிராகவோ இல்லை ஆபத்து நேரப் போவதாக இருந்தால் சஊழா நாகம் அந்த கண்ணாடியின் வழியாகவே அவனுக்கு முன் கூட்டியே காண்பித்துவிடும். ஆனால் இன்று அப்படி எதுவும் அவனுக்கு தெரியாமல் போகவே அவனது நம்பிக்கையும் கர்வமும் ஒருப் படி ஏறிப்போனது. பாவம் அவனுக்கு தெரியாமல் போனது தனக்காக காத்திருக்கும் ஆபத்து தெரியாமல் போனதற்கு காரணம் அவனது தம்பி நாகாவால் தான் என்று. நாகாவின் நிலைமையோ படு மோசம். அவன் எதை தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என சஊழாவை தன் வசியத்திற்குள் வைத்திருந்தான். ஆனால் அவன் யாரை வைத்து கொம்பனின் கவனத்தை திசைத் திருப்ப வேண்டும் என நினைத்தானோ அவளையே தனது இந்த செயல் காப்பாத்தும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
மசூராவோ நிலாவை விடிந்ததில் இருந்து காணாமல் தவித்திருக்க, நிலாவோ மக்களின் திருவிழாவிற்கு ராஜ வாரிசு என்னும் முறையில் தலைமை ஏற்றிருந்தாள். மாயனால் அவளுடன் இருக்க முடியவில்லை. சிறைக் காப்பாளர் என்னும் முறையில் அவன் கோட்டையில் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் அவன் கோட்டையிலேயே இருந்ததற்கு வேறு ஒருக் காரணமும் உண்டு.
மிளிராவின் சாயலில் இருக்கும் நிலாவை அம்மக்கள் மிளிராவாகவே பாவித்து தலையில் தூக்கி வைக்காதக் குறையாய் அவளை அன்பில் திளைக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
திருவிழா ஆரம்பமானது. கோட்டை எல்லையில் இருக்கும் ஆற்றில் மக்களனைவரும் தங்களுக்கு சொந்தமானவற்றை விட்டு தங்களது வேண்டுதலை முன் வைத்தனர்.
அப்படி அவர்கள் வேண்டுதல் உண்மையாகும் பட்சத்தில் அவர்களுக்கு சொந்தமானது அவர்களிடமே வந்து சேர்ந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தனக்குச் சொந்தமானது என்று சொல்லிக்கொள்ள, நிலாவிடுமும் ஒன்றிருந்தது. அவளின் அன்னையின் முதலும் கடைசிப் பரிசுமான ஒரு மெல்லிய சங்கிலி.
கைகள் நடுங்க, கண்கள் கலங்க தன் கழுத்தில் இருந்ததை முதல் முறையாய் தன் கரங்களால் கழட்டியவள், அதை அந்த ஆற்றில் விடும் முன் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவரின் கண்ணிலிருந்து ஒருச் சொட்டு கண்ணீர் அந்த ஆற்றில் விழுந்து தண்ணீரோடு தண்ணீராய் கலந்துப்போனது.
அவள் விடும் முன் ஆழன் அதைத் தடுக்க, வார்த்தையாய் அவர் கேட்காத கேள்வியை கண்களாலே புரிந்துக்கொண்டவள், "இங்க வாழ்ற மக்களோட ஆட்சி சரியானவரின் கையில் இருக்க வேண்டும் அப்பா. இது என் ஆசை மட்டும் இல்லை. என் அம்மாவுடைய ஆசையும் கூட. அது கண்டிப்பா நிறைவேறும். நிறைவேறும்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு." என்றவளின் நம்பிக்கையைக் கண்டு அவளை உச்சி முகர்ந்தவர், "உன் நம்பிக்கை பொய்க்காதம்மா. நீ பொய்க்க விட மாட்டாய்." என்க, அந்தச் சங்கிலியை அவள் ஆற்றிலிட்டு அது தன் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்தவளிடம் அது தன்னிடம் வெகு சீக்கிரத்தில் திரும்பி விடும் என்னும் நம்பிக்கை இருந்தது.
இங்குத் திருவிழா எந்த குறையும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருப்பது கொம்பன் காதுகளுக்கு எட்டாமல் இல்லை.
அவனுக்கு வந்த சினைத்தை அடக்கியவனின் தலையில் பெரிய இடியாய் வந்து விழுந்தது அந்த செய்தி.
ராஜ வாரிசான நிலா தலைமையேற்க ஜகஜோதியாய் திருவிழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இறந்து விட்டதாய்ச் சொல்லப் பட்ட நிலா. முற்றுப்பெற்றதாய் நினைத்தது கமாவாய் மாறியது எப்போது?
அவனின் செவிகளை அவனே நம்பவில்லை. உயரம் தெரியா அந்த பள்ளத்தாக்கில் விழுந்த அவளது உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது? அதற்கு வாய்பே இல்லையே என நினைத்துககொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை துருவா என்னும் உயிரினம் இன்னும் அழிந்துப் போக வில்லை என்று.
"எப்படி? எப்படி? எப்படி?" என்ற அவனது கேள்வியில் அந்த இடமே அதிர்ந்து ஓய்ந்துப்போனது. அருகில் நின்றிருந்த நாகாவிற்கும் இதுப் பெரிய அதிர்ச்சி தான். மசூராவோ உண்மைத் தெரிந்ததில் ஆடிப்போயிருந்தார்.
இதற்கிடையில் பணிப்பெண்ணாய் முதல் இந்தக் கோட்டையில் நுழைந்த போது அவளிடம் வாக்குவாதம் செய்த மசூராவின் முன்னால் ஒப்பனையாளராய் இருந்தவள்
இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் தங்களில் ஒருப்பணிப்பெண் வெளியில் செல்வதாகவும் அவளை ஒருவன் வந்து அடிக்கடி பார்த்து செல்வதாகவும் கூறியவள் மற்றும் அந்த பணிப்பெண் அரசியிடம் சமீபகாலமாய் ஒப்பனையாளராய் பணிப்புரிகிறாள் என்றும் தன்னால் முடிந்த வற்றை கொளுத்திப் போட, ஏற்கனவே தகதகவென்று நெருப்புக் கனலாய் எரியும் கொம்பனிற்கு அந்த பணிப்பெண் நிலா தான் என்ற உண்மைப் புரிந்துப் போனது.
'ஆத்திரக்காரனிற்கு புத்தி மட்டு' என்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அதை கொம்பன் விஷயத்தில் நிலா சரியாய் கணித்து விட்டாள் போலும்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro