நிலா- 36
கோட்டையின் அடிப்பாகத்திலிருந்த, அந்த இருள் நிறைந்தப் பாதையில், நிலாவின் கையில் மிதந்த நெருப்புப் பந்து தான் பயணிக்கும் பாதையிலிருந்த இருளை மட்டும், விலக்கிக் கொண்டிருந்தது.
நிலாவின் உருவமும் மாயனின் உருவமும் மறைந்திருந்த காரணத்தினால் அது பார்ப்பதற்கு ஒரு நெருப்புப் பந்து மட்டும் தனியாய் மிதந்தது செல்வதுப் போல் காட்சியளித்தது.
"மாயன் இப்போ எங்க தான் கூட்டிட்டுப் போற என்னை?" என்றவளின் குரல் காற்றில் கரைந்து மிகவும் மெல்லியதாகவே மாயனின் செவிகளுக்குப் போய்ச் சேர
ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய அந்த மிகக் குறுகியப் பாதையில் மாயன் முன்னேயும் நிலா பின்னேயும் சென்றுக்
கொண்டிருந்தார்கள்.
"சொல்றேன். இப்போ அமைதியா வா.." என்றவனை நம்பி சில நிமிடங்கள் நடைக்குப் பின்னால், ஓர் கதவை அடைந்தார்கள் இருவரும்.
அது ஒரேப் பக்கம் திறப்பதுப் போல் அல்லாமல் ஒரே சமயத்தில் ஒருப் பக்கம் முன்னாலும், மறுப்பக்கம் பின்னால் திறக்கப்படுவதுப் போலவும் அமைக்கப்பட்டிருக்கவே, அதில் முதலில் நிலாவை அனுப்பிய மாயன் அவள் சென்றப் பிறகு அவளைத் தொடர்ந்துச் சென்றான்.
மீண்டும் சில நிமிடங்கள் பயணம். பிறகு ஒரு ஆறடி உயரத்திற்கு ஒரு இரும்பாலானக் கதவு. அதை மோதித் திறக்க முற்பட்ட மாயனால் இம்மியளவுக்கூட நகர்த்த முடியவில்லை.
அவனது சக்தியும் அதில் எடுப்படவில்லை.
"ஹலோ.. எஸ்கீயுஸ் மீ.. சார் என்னப் பண்றீங்க?" எனக் கைகளை பின்னியப்படி புருவத்தை உயர்த்தி கேட்டவளிடம்,
"பார்த்தா தெரிலியா.. கதவை திறக்க முயற்சிப் பண்ணிட்டு இருக்கேன்."
"அதான் முடியலைல. ராஜ வாரிசுனு நான் எதுக்கு இருக்கேன்? தள்ளு மேன்.." என அவனைப் பின்னுக்கு இழுத்தவள், "இப்போ பாரு.." எனத் தன் கையிலிருந்த நெருப்பு பந்தை பெரிதாக்கி அதை கதவின் மேல் அவள் வீசியவுடன் அது துகள் துகளாய் சிதறி அதில் வட்டமாய்ப் பெரிய ஓட்டை ஏற்பட்டது.
இல்லாதத் தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டவள், அடுத்தடுத்து அதேப் போல் நான்கு கதவுகள் வரவும் நொந்துப்போனாள். ஒவ்வொன்றும் ஒன்றை விட பல மடங்கு வலிமையைக் கொண்டிருந்தது.
கடைசியாய் முதலில் வந்ததுப் போல் ஒரு மரக்கதவு வர அதன் பிறகு பாதைச் சற்று விரிந்து அந்த இடம் கொஞ்சம் வெளிச்சமாய் மாறியிருந்தது. அவர்கள் சேர வேண்டிய இடத்தை நெருங்கி விட்டதன் அடையாளமாய் அந்தப் பாதை வலப் புறமாய் திரும்பி முடிய அங்கே கரு நிறத்தில் நீலநீலமாய் திரைச்சீலைகள் தொங்கின. அதற்கு எதிர்ப்புறம் சிலரின் பேச்சு சத்தம் கேட்டது நிலாவிற்கும் மாயனிற்கும்.
"மாயன் எங்கே?" என்ற கொம்பனின் குரலைக் கேட்டு நிலா மாயனைப் புரியாமல் பார்த்து,
"இன்று ஓரிரவு மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு நான் தான் அனுப்பி வைத்தேன் அரசே." என்றான் அவனது வலதுக் கையான சீரண். அதைக் கேட்டுக் கொண்டே முன்னேறி நடந்தவனது காலடிச்சத்தம் மறையும் வரை அங்கே நின்றவர்கள் அது மறைந்தவுடன், முன்னேறி நடக்கத் தொடங்கினார்கள்.
கொம்பனையே பின் தொடர்ந்து சென்றவர்களுக்கு, ஒருப் பெரிய அறவல் சத்தம் கேட்டது. குகைப் போல் ஒரு வாயில் வரவும் கொம்பன் சீரணை அங்கேயே நிற்கும் படி சைகைச் செய்துவிட்டு அதனுள் நுழைய பிறகு அந்த இடமே அமைதியைத் தத்தெடுத்துக்கொண்டது.
மாயனின் முகம் கலவரத்தைக் குடிக்கொள்ள, நிலாவுக்கோ ஒன்றும் புரியவில்லை அந்த வாயிலில் நுழைவதற்கு சற்று முன் வரை.
அன்றொரு நாள் முதல் முதலாய் கோட்டையில் அவள் கண்ட அதே மக்கள்கள் தான் அந்தப் பெரிய குகையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலியால் பல ஆண்டுகாலமாய்ப் பூட்டப்பட்டதன் சான்றாய் ஆராத வடுக்கள் இரணமாய்க் காட்சியளித்தன. அந்த இடம் முழுவதும் அடிக்கு அடி நெருப்புப்பந்தங்கள் ஏற்றப்பட்டு வெப்பத்தால் சூழப்பட்டிருந்தது.
அவர்களுக்கு நடுவே நின்றுக்கொண்டிருந்த
கொம்பன், "அனைவரும் மிகவும் நன்றாஆஆக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவரையும் பல்லாண்டுக் காலமாய் இங்கு அடைத்து வைத்ததற்கானக் காரணத்தை அனைவரும் அறிவீர்கள் அல்லவா?" என ஏளனமாய்க் கேட்டவுடன் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட,
"அமைதிக் காக்கவும். நீங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இருந்தும் ஒரு முறை நினைவுப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு மரணத்தைக் கண் முன் நான் காட்டிவிடுவேன். அல்லது அவர்களின் மரணத்தை நானே எழுதிவிடுவேன் என்பதை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்திருப்பீர்கள். அது என் மக்களாக இருந்தாலும் சரி. என்னைப் பெற்றவராய் இருந்தாலும் சரி பாரபட்சம் என்று எதுவுமில்லை என நான் பல முறைக் கூறியது வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல." என அவன் கூறியவுடன் அங்கு ஏற்பட்ட சலசலப்பு இன்னும் அதிகரிக்க,
"இதோ அதை இன்று நிரூபித்தும் விட்டேன். உங்களின் முன்னாள் அரசரான கேளவன் இன்று மாலையில் உங்களின் தற்போதைய அரசரின் கையாலே தன் உயிரை விட்டார். அதற்கான காரணத்தையும் நீங்கள் யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்." என்றான் அழுத்தமாய்.
"தற்போதைய அரசனா? நீயா? அதை உன்னை அரசராக ஏற்றுக்கொண்டவர்களிடம் போய்ச்சொல். அவர்கள் வேண்டுமானால் உன் கட்டுக்கதையெல்லாம் நம்புவார்கள். இதோ இப்பொழுது உன் தந்தையை கொன்று விட்டதாய்ச் சொல்கிறாய் அல்லவா? அதற்கும் எதாவது கட்டுக்கதை வைத்திருப்பாய். போய்ச் சொல் அதை உன் மக்களிடம். அவர்கள் கூட உயிர் பயத்தினால் தான் உன்னை அரசராய் ஏற்றுக்கொண்டார்கள். ஒருநாள்.. ஒரு நாள் உயிர் போனாலும் பரவாயில்லை என அவர்கள் துணியும் போது உன் ஆட்டம் செல்லாமல் போய்விடும். அந்த நாள் விரைவில் வரத் தான் போகிறது. தர்மமும் வெல்லத் தான் போகிறது." என வரண்டுப் போன நாவையும் பொருட்படுத்தாமல் ஆத்திரத்தில் கொம்பனை முதல் முதலாய் எதிர்த்துப் பேசிய அந்த முதியவரை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.
"உன் தர்மம் வெல்வதைக் காண, நீ உயிரோடு இருக்க வேண்டுமல்லவா? அதற்கு நீ எனக்கு பணிந்து தான் ஆக வேண்டும்." என்றக் கொம்பனிடம்,
"என் உயிர் போனாலும் பராவாயில்லை. ஈனப் பிறவி உனக்கு என் தலை ஒருப் பொழுதும் தாளாது."
"ஆனால் வருகின்றன சனித் திருவிழா வரை உங்களுக்கு நான் அவகாசம் அளிக்கின்றேன். அதற்குள் உங்களில் யாரொருவர் என்னை அரசராய் ஏற்றுக்கொள்கிறாரோ, அந்நொடியே அவருக்கு நான் விடுதலை அளிக்கிறேன். இல்லையெனில் உங்களின் சக்திகள் அந்த மந்திரப் பந்துக்குள் அடைந்திருப்பதுப் போல் நீங்களும் இந்த குகைக்குள்ளேயே அடைந்துக்கிடந்தே சனித்திருவிழாவன்று அன்று உங்களின் உயிரை விடுவீர்கள்." என கர்ஜித்தவனின் ஆள்காட்டி விரல், அவனுக்கு நேராய் குகையின் உச்சியின் நடுப்பாகத்தில் பொதிந்திருந்த ஒரு மந்திரப் பந்தைக் காட்டியது.
வந்த வழியிலேயே புயலென சென்றக் கொம்பனைச் சிவந்த விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்த நிலா அம்மக்களின் அருகே செல்ல முற்பட, அவள் கரத்தைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் மாயன்.
"இவங்க என்னத் தப்பு செஞ்சாங்கனு கேட்டியே.. கொம்பனை அரசனா ஏற்காதது தான் இவங்க செஞ்சத் தப்பு. என் அப்பாவைப் பற்றியும் மிளிரா அத்தையின் குணத்தைப் பற்றியும் நல்லாப் புரிஞ்சவங்க இவங்க. அதனாலத் தான் அவங்க இரண்டு பேரும் இறந்ததற்கான காரணத்தை கொம்பன் சொல்லும் போது அவங்க நம்பலை. இவனை எதிர்க்கவும் செஞ்சாங்க. அதற்கு பலனா அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் ஒழுங்கான சாப்பாடு தண்ணி இல்லாம இங்க அடைஞ்சி இருக்காங்க. இவங்க எல்லாரும் கோட்டைக்கு கீழத் தான் இருக்காங்கனு யாருக்கும் தெரியாது. அதை ஒரு ராஜ இரகசியமாவே கொம்பன் வச்சிருக்கான். அவனுடைய பிறந்த நாள் அன்னைக்கு மட்டும் தான் இவங்க எல்லாரும் வெளியில வருவாங்க. ஆனால் அப்பவும் ஊர் மக்களோட பேசுவதற்கு இவங்களுக்கு அனுமதி கிடையாது." எனக்கூறிக்கொண்டே எதிர்திசையிலிருந்த வெளியேச் செல்வதற்கான வழியில் அவளை அழைத்துக்கொண்டு போனான்.
"மாயன் என் கையை விடு." என அவனிடமிருந்து கையை உறுவ முயற்சித்தாள் நிலா.
"எங்கப் போற?"
"அவங்களுக்கு அவங்க சக்தியை மீட்டுத் தந்து அவங்களை இங்க இருந்து தப்பிக்க வைக்கலாம் இல்லையா? அவங்க சக்தியெல்லாம் அந்த பந்துக்குள்ளத் தானே இருக்கு. அதை எடுக்குறது ஒன்னும் அவ்வளவு கடினம் இல்லையே?" என்றவளை அந்த குறுகிய பாதைக்குள் அழைத்துக்கொண்டு போன வாரே பதில் கூறினான்.
"எனக்கு ஏதோத் தப்பாப் படுது அதை அவ்வளவு எளிதா எடுக்கும்படி அவன் வச்சிருக்கான் என்றால் அதில் கண்டிப்பா ஏதோ மர்மம் இருக்கு." எனக் கூறிக்கொண்டே நடந்தவன்,
"உண்மை. அந்தப் பந்து அது இருக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டால் இந்தக் குகையே சரிந்து விழுந்து விடும்." என தீடீரென கரகரப்பாய் ஒருக் குரல் வரவும் இருவரும் அப்படியே நின்றார்கள்.
அந்த குறுகிய பாதையில் இரண்டு மூன்று சிறிய அளவிலான சிறை இருப்பதைக் கவனித்தார்கள். முதல் சிறை காலியாக இருக்க, இரண்டாவது சிறையிலிருந்த சிறிய வெளிச்சத்தில் ஒரு வயது முதிர்ந்த முதியவர் தெரியப்பட்டார்.
"இந்தக்குகை விழுகாம அதை எடுக்க வேறு வழியே இல்லையா?" எனச் சற்றும் யோசிக்காமல் நிலாக் கேட்ட கேள்விக்கு,
"இருக்கு.." என்றார் அவர்.
"எப்படி?"
"அந்த பந்தை எடுக்கும் வேலையில் நொடிப்பொழுதும் தாமதிக்காமல், வேறு ஒருப் பொருளை வைக்க வேண்டும்."
"அது என்னப் பொருள் ஐயா?" எனக் கேட்ட நிலாவைப் பார்த்து ஒரு வரண்ட புன்னகை உதிர்த்தவர்,
"மோதிரம். கொம்பன் கையிலிருக்கும் மோதிரம். ஏனென்றால் அந்த பந்திற்கு இணையான சக்தி அந்த மோதிரத்திலேயே உள்ளது!"
"அவ்வளவு தானா?!"
"ஆனால் அதை எடுப்பது அவ்வளவு சுலபமில்லை.."
"ஏனைய்யா?"
"அந்த மோதிரத்தை அவன் கையிலிருந்து யாராலும் கழட்ட முடியாது. இரண்டு விஷயத்தைத் தவிர." என்றார்.
"அந்த இரண்டு விஷயம் என்ன என்ன?"
"ஒன்று அவன், மற்றொன்று" என நிறுத்தியவர்,
"அந்த விதி." என்றார் அழுத்தமாய்.
"இதில் முதலாவது கொஞ்சம் சுலபம் தானே.." என்றவளை ஒருப் பார்வை பார்த்தவர்,
"இல்லை. அதுதான் கடினம். அவன் உயிர் இருக்கும் வரை கண்டிப்பாய் அவன் அதை கழட்டவே மாட்டான்."
"ஏன் அப்படி.. அந்த மோதிரத்துல என்ன இருக்கு?"
"ஏனென்றால் ராஜ வாரிசான, உன் மனதில் ஒருக் கேள்வி இருக்கிறதல்லவா அதற்கு அந்த மோதிரம் தான் பதில்.."
அவரது வார்த்தைகளை கேட்டவளுக்கு இத்தனை நேரமும் மாயனும் அவளும் பிறர் பார்வையில் இருந்து தங்களை மறைத்திருந்தது அப்பொழுது தான் உரைத்தது.
"உங்களுக்கு எப்படி" என்றவளின் வார்த்தைகள் தடைப்பட்டன அவரது பதிலைக் கேட்டு,
"நான் தங்களுக்கு தேவையான பதிலைக் கூறிவிட்டேன். மற்றவற்றை தேவையான நேரம் வரும்பொழுது கூறுகிறேன். இப்பொழுது நீங்கள் விடைப்பெறலாம்." என்றார்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro