Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -28

விழுந்த நிலா, பனி மூட்டத்தில் மறைந்து காற்றை கிழித்துக்கொண்டு தரையை அடையும் முன் பஞ்சு மெத்தைப் போல் தன்மேல் அவளை ஏந்தியது ஓன்று.

அவளின் அரைக்குறைப் பார்வையில் அதன் உருவத்தை பார்க்க சற்றே சிரமமாய் இருந்தாலும் கண்டுக்கொண்டாள் அது துருவா தான் என்பதை. இருந்தும் மீண்டும் மயங்கிப் போனாள்.

அவள் மயக்கம் தெளியும் போது, ஏதோ மாற்றம் அவளுள்.

விவரிக்க முடியாத மாற்றம். அவள் விழிகள் விழிக்க மறுக்க, கைகள் அசைய மறுக்க, இதழ்கள் பிரிய மறுக்க, ஏதோ தன்னை இறுக்கிப்பிடித்திருப்பதுப் போல் உணர்ந்தாள். ஏதோ கணமான ஒன்று தன் மேல் அமர்ந்திருப்பதைப் போல் உணர்ந்தாள். திடீரென அவளின் மூடிய இமைகளுக்குள் பெரிய ஒளி புகுந்ததுப் போல் உணர்ந்தாள். அந்தரத்தில் மிதப்பதுப் போலும் தன்னைச் சுற்றி பெரிய ஒளி வட்டம் இருப்பதுப் போலும் திடுமென அவ்வொளி வட்டம் அவளுக்குள் புகுந்து விடுவதுப் போலும் உணர்ந்தாள்.

ஒரு நொடியில் அனைத்தும் ஓய்ந்து போனது. உடலிலிருந்த இறுக்கம் நீங்கி மயக்கம் தெளியும் வேளையில் மீண்டும் அவள் விழிகளுள் இருள் சூழ்ந்துக்கொண்டது.

மயக்க நிலையிலும் சிலரின் குரல்களை அவளால் கேட்க முடிந்தது. அதில் ஒருவரின் குரல் அவளுக்கு மிக பரிட்சயமான மாயனின் குரல். இன்னும் இருவரின் குரலை அவளால் அடையாளம் காண முடியவில்லை. அதில் ஒருவரின் குரல் பெண்ணுடையதாகவும் இன்னொருவரின் குரல் ஆணுடையதாகவும் இருந்தது.

ஆனால் அவள் மயக்கம் தெளிந்து எழும் வேளையில் அவளைச் சுற்றி வேறு யாரும் இல்லை.

அவள் உடல் லேசாய் இருப்பதுப்போல் உணர்ந்தவள், மெல்ல எழுந்தாள். காலை கீழே ஊன்றுவதற்காக தரையை பார்த்தவளுக்கு மீண்டும் தலைச் சுற்றுவதுப்போல் இருந்தது.

ஓர் பெரிய மரத்தின் உச்சியின் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு  ஊஞ்சல் போல் இலைத்தழைகளால் உருவாக்கப்பட்டிருந்ததன் மேல் அமர்நிருந்தவள் இறங்க வழித்தெரியாமல் அதன் உயரத்தைக்கண்டு விழிப்பிதுங்கி முழித்துக்கொண்டிருந்தாள்.

அவளிற்கு எதுவும் புரியவில்லை. இரவு அந்த உச்சியில் இருந்து விழுந்ததும் பிறகு அவளை துருவா காப்பாற்றியதும் பின் மயக்கத்தில் தன்னைச் சுற்றி அவள் உணர்ந்த விஷயங்களும் கனவா நினைவா என்றுக் கூட அவளிற்கு தெரியவில்லை.

ஒரே நாளில் இத்தனை விஷயங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கும், இத்தனை பிரச்சினைகளையும் எதிர் கொள்ளக் கூடிய அளவிற்கு அவள் திடமானவள் அல்ல. அவள் மனம் உடைந்திருந்தது. எண்ணங்களில் நிலையில்லாமல் அவளுள் ஓர் சலசலப்பு இருந்துக்கொண்டே இருந்தது.

அவளுக்கு இப்பொழுது தேவையானது எல்லாம், அனைத்திலும் இருந்தும் விடுதலை. அனைத்தில் இருந்தும். தன்னை சுற்றி இங்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறது எனப் புரிந்துக்கொள்ளவும் அதை ஏற்றுக்கொள்ளவும் அவளிற்கு நேரம் தேவைப்பட்டது.

நான்‌ இந்த விளையாட்டிற்கு வரவில்லை என்று ஓடி ஒளிந்துக்கொள்ள முடியாதா என்று ஏங்கினாள்.

அலையென ஆர்ப்பரிக்கும் தன் மனதை கட்டுப்படுத்த வழியின்றி திணறியவளின் கவனத்தை "ஏய் நிலா என்னைக் காப்பாத்து..!" என கீழிருந்து வந்த குரல் அவளின் கவனத்தை திருடவே, அதில் திடுக்கிட்டவள் குரல் வந்த திசையில் தன் தலையைக் குனிந்து பார்க்க, அங்கு மாயன் நின்றிருந்தான். அவனைக் கண்டவுடன் அவளை அறியாமல் எரிச்சலில் அவளது கருவிழிகள் மேல் நோக்கி வட்டமடித்து விட்டு மீண்டும் அவன் மேல் பார்வையை பதிக்க விருப்பமின்றி வேறு புறத்தில் நிலைக்குத்தி நின்றன.

"பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க.. இது கிட்ட இருந்து காப்பாத்தேன்..!!" என்று மீண்டும் அவன் குரல் அவள் செவிகளில் உறக்க ஒளிக்கவே, எதற்கு இப்படி அலறுகிறான் என்ற கேள்வியோடு அவனைக் கண்டவளின் பார்வைக்கு, துருவாவும், அதனிடமிருந்து தப்பிக்க மரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் மாயனும் காட்சியளித்தனர்.

இருந்தும் அவளின் மனம் அவனிற்கு உதவ மறுக்கவே, வீண் வீம்பை இறுக்கப் பற்றிக் கொண்டு, உற்றென்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

"அம்மாஆஆ..! தாயேஏஏ..! உனக்கு பழி வாங்க நேரமே இல்லையா? அப்படியே நீ என்னை பழி வாங்கனும்னாலும் நான் உயிரோட இருக்கணும்ல.. அதுக்காகவாவது என்னை காப்பாத்தேன்."

அவனின் குரலில் மிகுந்த எரிச்சல் கொண்டவள், "ஏய் லூஸா நீ? நானே இந்த மரத்து மேல இருந்து இறங்க வழித் தெரியாம இருக்கேன். இதுல உன்னை எங்க இருந்து காப்பாத்துறது." எனக் கத்தியவளைக் கண்டு
'முதல்ல வாங்க போங்கலருந்து வா போனு மாறுச்சி. இப்போ இருந்தோ கொஞ்ச நஞ்ச மரியாதையையும் போய்டுச்சு. டேய் மாயன் நீ இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ தெரியலைடா' என மனதில் புலம்பியவன்,

"அங்க இருந்து குதி. உனக்கு ஒன்னும் ஆகாது" என்றான்.

"என்னை மறுபடியும் போட்டுத்தள்ள ப்ளான் பண்றியா?" அவளின் குரலில் கேலியும் இளக்காரமும் நிறைந்திருந்தது‌.

"நான் சொல்றதைக் கேளு. இனி நீ இங்க இருந்து குதிச்சா மட்டுமில்ல வானத்துல இருந்து குதிச்சாக் கூட ஒன்னும் ஆகாது."

"நான் நம்ப மாட்டேன்."

"கடைசி முறையா நான் சொல்றதை நம்பேன்." என கெஞ்சலாய் அவன் கூறியவுடன், எரிமலையாய் பொங்கி எழப் போனவள், துருவா மாயன் மேல் பாய தயாராகியதை உணர, நேரம் தாழ்த்தாமல் கிளையிலிருந்து கண்களை இறுக்க மூடியபடி ஓரே மூச்சில் குதித்து விட்டாள்.

அவள் பாதத்தின் கீழ் நிலத்தின் பிடிமானம் இருப்பதை உணர்ந்த பின்பே தன் விழிகளை விலக்கியவளின் இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டிருந்தது.
அவளால் நம்ப முடியவில்லை. அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவளின் பாதங்கள் கூட வலிக்கவில்லை. காற்றில் மிதந்து வந்து இறங்கிய து ப்போல் தான் உணர்ந்தாள்.

ஆனால் அவள் இதைக் கண்டு அதிசயப்பதிற்கான நேரம் இதுவல்ல. துருவா மாயனை நோக்கி ஓடிவந்து பாயப் போன அந்த நொடியில் அவளது கைகள் அவளை அறியாமல் அவளது முகத்திற்கு நேராய் பதறி தீடீரென அவள் உள்ளங்கைகளுக்குள் இருந்து அங்கு ஏற்பட்ட ஒரு வித ஒளியில் மூடிய இமைகளை விளக்கியவள், மாயனிற்கு முன் தன்னால் உருவாக்கப்பட்ட கண்ணாடி போன்ற தடுப்பில் மோதி நின்ற துருவாவையும் தன் கரங்களையும் மாறி மாறி இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளது சிந்தையில் ஒன்றா இரண்டா அப்பப்பா..! எண்ணில் அடங்கா எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விளையாடிக்கொண்டு இருந்தன.
இதயம் தன் போக்கிற்கு இனி துடிக்கவே போகாததுப் போல் துடித்துக்கொண்டு இருந்தது.

அவள் கால்கள் தள்ளாடி மடங்கி தரையில் அமரந்து விட, இன்னும் அவளதுப் பார்வை அவள் கைகளை விட்டு அகலவில்லை.

அவளருகில் வந்து அமர்ந்த மாயன் மென்மையாய் "நிலா.." என்று அழைத்திட துருவாவோ அவள் உருவாக்கிய திரையின் வழியே அவளின் வாடிய முகத்தைக் கண்டு அவளருகில் செல்ல முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

"நான் ராஜ வாரிசா மாறிட்டேனா?" என்ற அவளது கேள்விக்கு தலையசைத்து ஆமோதித்தான்.

"நான் ராஜ வாரிசா இருக்க விரும்பலை. நான் பழைய மாதிரி ஆகனும். எனக்கு இந்த சக்தி எல்லாம் வேண்டாம்." என பிதற்றியவளைக் கண்டு திகைத்தவன்,

"இது உங்க அம்மா பல ஆசைகளோட உனக்கு தந்த பரிசு. அதை நீ ஏற்றுக்கொள்ளாம மறுத்தனு தெரிஞ்சா உங்க அம்மா எவ்வளவு கஷ்டப் படுவாங்க?" என்றவுடன் எழுந்து நின்றவள்,

"அவங்க ஆசைப் பட்டது ரொம்ப பெருசு. அதை நிறைவேத்துற அளவுக்கு என் கிட்ட திடம் இல்லை. என்கிட்ட இந்த பொறுப்புகளை எல்லாம் சமாளிக்கிறதுக்கு திறமையும் இல்லை. நான்.. நானே..." என திணறியவளின் செவிகளில், கொம்பன் வார்த்தைக்கு வார்த்தை அவளையும் அவள் அன்னையையும் முட்டாள் என்றழைத்தது மலரைக் கண்ட வண்டுப் போல்  அவள் காதுகளில் மொய்த்துக்கொண்டே இருக்க, கண்களை காதையும் இருக்க மூடியவளின் செவிகளில் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் இம்சை செய்ய, தன் இருக்கரங்களால் தலைமுடியை கொற்றாய்ப் பிடித்துக்கொண்டு "இல்லைலைலை....!" என்று அவ்விடமே அதிரும் படிக் கத்தியவளின் மனநிலையை அறிந்த காதல் கொண்டவனின் நெஞ்சம் தன்னவளை சமாதானம் செய்யும் வழிப் புரியாமல் தவித்தது.

"நான் முட்டாள் இல்லை.. நான் முட்டாள் இல்லை.." என மீண்டும் மீண்டும் பிதற்றியவளிடம், "ஆமா நிலா நீ முட்டாள் இல்லை. கொஞ்சம் பொறுமையா இரு."

"ஆனா நான் முட்டாள்னு எல்லாரும் சொல்றாங்களே.. அப்போ நான் முட்டாளா? நான் முட்டாளா சொல்லு..?!!" என அழும் குழந்தையைப் போல் கண்களைக் கசக்கிக்கொண்டே கேட்டவளைப் பார்த்தவன்,

"யார் உன்னை முட்டாள்னு சொன்னாங்களோ.. அவங்க கிட்ட நீ முட்டாள் இல்லைனுநிறுபி."

"என்னால முடியுமா?" எனக் கேட்டவளின் கண்களில் நிறைந்திருந்த உணர்வை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

"இந்த உலகத்துல வாழ்ற யாராலும் முடியாததை உன்னால செய்ய முடியும். உன்னால மட்டும் தான் முடியும்."

"எங்க அம்மாவ உயிரோட கொண்டு வர முடியுமா..?!" என்றவளின் கேள்வியில் அப்பாவித்தனமே நிறைந்திருந்தது.

"உயிரற்ற அவங்க உடல் கூட நம்மகிட்ட இல்லை. அப்படி இருந்தாலும் அவங்க விதி முடிஞ்ச பச்சத்துல உன் மொத்த சக்தியை திரட்டினாலும் அவங்களை உன்னால காப்பாற்ற முடியாது."

"அப்போ என்னை மட்டும் எப்படி உங்க அப்பா காப்பாத்தினாங்க? அவங்க காப்பாற்றாம விட்டிருந்தா, இத்தனையையும் நான் அனுபவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது இல்லையா?"

"எத்தனையோ தடவை மரணம் உன் கிட்ட வந்திருந்தாலும், அதால உன் கிட்ட நெருங்கக் கூட முடியலை. அது ஏன்னு தெரியுமா?" என்றதற்கு அவள் மறுப்பாய் தலையசைக்க,

"ஏன்னா நீ பிறந்ததே அந்த கொம்பனைக் கொல்ல த்தான். நீ வந்த காரியம் முடியாம  உன் உயிர் உன்னை விட்டு போகாது. இன்னைக்கு இல்லை.. நீ பிறக்கும் போதே அது உறுதியாகிடுச்சி. என் உள்மனசு சொல்றது உண்மையா இருந்தா.. அவனை அழிக்கிறதுக்காகவே பிறந்தவ நிலா நீ." என விதியைப் பற்றி நன்கு அறிந்தவனே அது தங்களுக்கு வைத்திருக்கும் விளையாட்டைப் பற்றி அறியாமல்  அதை தவறாய் கணித்து விட்டான் போலும்.

பேதையவள் தன் விதியின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

"இ.. இல்லை.. எனக்கு யாரையும் பழி வாங்க வேண்டாம். நான் போறேன்.. நான் பூமிக்கே போறேன். என்னை விட்டுடுங்க.." எனத் தன் கேசத்தை கசக்கியப் படிக் கூறியவளிடம் அவன் எது ச்சொன்னாலும் அது அவள் சிந்தைக்கு எட்டவில்லை.

"என்னை விட்டுடு.. நான் போகனும். ப்ளீஸ்.. நான் போகனும்.. நான் போனும்." எனக் கூறி அவனிடம் இருந்து விலகியவளிடன் மணிக்கட்டை பற்றியவன், "நீ பயப்படுர.. இதை எல்லாத்தையும் விட்டுட்டு பயந்து ஓடப் பாக்குற..!" என அடிக்குரலில் கூறியவனை, ஓர் பார்வைப் பார்த்தவள், "நான் ஒன்னும் பயப்படல..!" என்று வெடுக்கென கைகளை உறுவிக்கொண்டாள்.

"நீ பொய் சொல்ற.. நீ பயப்படுர. பிரச்சனையை விட்டு ஓடப் பாக்குற. நீ ஓட ஓட இது உன்னைத் துரத்தும்
."

"நான் ஒன்னும் எதைப் பார்த்தும் பயந்து ஓடல.." "ஓடல.." என மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு மரத்தில் தன் தலையை அடித்தவளை, தோல்களை பற்றி அவன் இழுக்க, அவளோ இரும்புப் பிடியாய் மரத்தைப் பற்றிக் கொண்டிருந்தாள்.

"நான் ஒன்னும் பிரச்சனையைப் பார்த்து ஓடலை.. ஓடலை.." என பிதற்றிக்கொண்டே தன் தலையை மரத்தில் மோதியவளின் நெற்றியிலிருந்து ரத்தம் சொட்டியது.

அவளை விடாப் பிடியாய் இழுத்து தன் முன் நிறுத்தியவினிடம் துள்ளியவளின் கன்னத்தில் அவனின் ஐந்து விரல்களும் பதிந்திருக்க, அடுத்த நொடி நிலாவின் விரல்கள் அவனின் கன்னத்தை அழுந்த உரசிச் சென்றது.

அவளின் அறையிலமலலைக் கலங்கி ஒரு வினாடி திகைத்துப் போய் நின்றான் அவன். அவள் அடித்த வேகத்தில் அவனது கன்னத்தில் கோடுப்போல் சதை லேசாய் கிழிந்து இருக்க, உதட்டின் ஓரம் குருதி கசிந்தது.

அதற்கும் தனக்கும் சமந்தமில்லாததுப் போல் மிரண்டுப் போய் நின்றிருந்தாள் நிலா.

"நா.. நான் லேசாய் தான் அடிச்சேன்.." என்றவள் "இதோ இப்படி தான்.. என தன் கன்னத்தில் அடித்துக் காட்டியவளைப் பார்த்து சிரிப்பதா இல்லை முறைப்பதா என்று தெரியாமல் விழிப் பிதுங்கி நின்றான் மாயன்.

ஏதோ உந்துதலில் தன் நெற்றியை வருடியவள் சட்டென தன் கையைப் பார்க்க, சிறிது நேரம் முன்பு வழிந்துக் கொண்டிருந்த இரத்தம் மறைந்திருந்தது. அவளிற்கு எந்த விதமான வலியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சற்று முன்பு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்றே அவளிற்கு சந்தேகம் வந்து விட்டது.

அருகிலிருந்த, ஓர் உரைந்த ஆற்றின் அருகில் சென்று குதிக்காலில் அமர்ந்தவள், அதில் தன் பிம்பத்தைப் பார்த்து உறுதி செயிதுக்கொண்டாள். ஆம் அவளின் நெற்றியில் எந்த காயமும் தென்படவில்லை.

ஆச்சரியம் மாறா முகத்துடன் ஆற்றில் தெரியும் தன் பிம்பத்தை ஆள்காட்டி விரலின் நுனியால் அவள் தொட்ட அடுத்த நொடி, பனிக்கட்டியாய் உறைந்திருந்த நீர், கண்ணிமைக்கும் நேரத்தில் விரிசல் விட்டு நீரோடையாய் ஓடத்தொடங்கிவிட்டது.

"ராஜ வாரிசோட சக்தியைப் பற்றி உனக்கு இன்னும் முழுசாத் தெரியலை நிலா. அதுவும் நீ கனல் ராஜ வாரிசோட சக்தியையும் திரவி ராஜ வாரிசோட சக்தியையும் ஒரு சேரப் பெற்றவள். ஒரு வேலை சாப்பாடு இல்லாம உன் வருகைக்காக ஒரு கூட்டமே நம்பிக்கையோட காத்துக்கிட்டு இருக்கு. நீ உடைக்கப் போறது உன் அம்மாவுடைய நம்பிக்கையை மட்டும் இல்லை. அவங்க நம்பிக்கையையும் சேர்த்து தான். நீ ராஜ வாரிசுனு இந்த உலக மக்களுக்கு மட்டும் தெரிஞ்சா அப்போவே அந்தக் கொம்பனுடைய கதை முடிஞ்சிடும். ஆனா அவனை அவ்வளவு சுலபமா இல்லாம பைத்தியம் பிடிக்க வச்சி அழிக்கனும். அதுக்கு நீ தான் தயாராகனும். இதை நீ சுமையா நினைக்கிறதும் இல்லை சுகமா ஏத்துக்குறதும் உன்னுடைய விருப்பம்."
என்றவன்,

"நான் கிளம்புறேன்.. என்னால உன் கூட ரொம்ப நேரம் இருக்க முடியாது. நீ இங்க இருக்குற விஷயமும் நான் இங்க வந்துட்டு போற விஷயமும் யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாது." என்றவன் ஓர்முறை அவளைப் பார்த்து, "பார்த்து பத்திரம்.." என்றுவிட்டு தன் புரவியில் மனதை இங்கு விட்டுவிட்டு வெறும் உடலோடு சென்றான்.

அவனின் வார்த்தைகள் அவள் மனதின் ஆழம் சென்று அவள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, அவள் ராஜ வாரிசு என்பதற்கு அடையாளமாக, வலப் புற கழுத்தில் காதிற்கு கீழ் ஓர் வட்டமும் அதற்குள் நுனுக்கமான வடிவமைப்பும் கருநிறத்தில் அச்சாய் பதிந்திருந்ததை தன் விரல்களால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro