நிலா -20
நாள்: 1
இரவு பகலானது. பகலும் இருளத் தொடங்கியது. மாயன் எங்கே சென்றான்? எதற்கு சென்றான்? என்ற கேள்விக்கு எவருக்கும் விடைத் தெரியாமல் அனைவரும் தவித்திருக்க, எதுவும் அறியாப் பிள்ளைப் போல் உள்ளே நுழைந்தான் மாயன்.
யாவரின் கேள்விகளுக்கும் பதிலுரைக்காமல் ஏதோ யோசனையுடனே அமர்ந்திருந்தவன் தான் இருந்த இடத்திலேயே குப்புற கவிழ்ந்து விட்டான்.
அவன் மனம் முழுக்க, குழப்பம் சூழ்ந்திருக்க தான் செய்யப் போகும் காரியத்தை எண்ணி உள்ளுக்குள் வெட்கிக் கொண்டு இருந்தான்.
இதை செய்ய வேண்டுமா? இதை செய்தே ஆக வேண்டுமா? என்றவனுக்கு தன்னிடம் வேறு வழி என்பதே இல்லை என்றுப் புரிந்தது.
எத்தனை கேவலமான காரியம். நம்பிக்கை துரோகம். வா என்றழைத்ததும் கேள்வி கேட்காமல் வந்தவளுக்கு நான் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இத்தனை நாள் எது நடக்கக் கூடாதென்று நினைத்தேனோ இன்று அது நடக்க, நானே மிகப்பெரிய காரணமாக போகிறேன். சுயநலத்தின் உச்சக்கட்டம். இத்தனை சுயநலவாதியா நான்?
அதே நேரத்தில் அவள் தான் முக்கியம் என நான் இதைச் செய்யாமல் விட்டால் என் தகப்பனிற்கு பிள்ளையாய் பிறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.
இன்னும் இரண்டு மணி நேரம். இரண்டே மணி நேரம் மட்டும் தாக்கு பிடித்துவிட்டால், செய்த காரியத்திற்கும் குடுத்த வாக்கிற்கும் பலன் கிட்டி விடும். ஆனால் அது முடியாத காரியம். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கு செல்ல வேண்டும். நான் இல்லை நாங்கள். ஒரு மணித்துளி தவறினாலும் 22 வருடம் முன்பு வந்த தன் தந்தையின் பொய் இறப்புச் செய்தி இன்று மெய்யாகிவிடுமே.
அவளின்றி இவ்வுலக மக்களின் நிலைமை என்னவாகும்? மக்கள் இருக்கட்டும், தன் நிலைமை என்னவாகும்? அவளின்றி தன்னால் வாழ்ந்து விட முடியுமா என்ன? என அவனின் ஆதி முதல் அந்தம் வரை அவளே நிறைந்திருந்தாள்.
நடுக்கடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தவனின் மனம், தீடீரென ஒரு கரம் தன்னைத் தழுவியதை உணர்ந்து அடங்கி ஓய்ந்து விட, சட்டெனத் தன் தலையைத் திருப்பி யாரென்றுப் பார்த்தவனின் அருகில் நிலா அமர்ந்திருந்தாள்.
"எழுந்து சாப்பிடு. நேத்து நைட் போனவன் இன்னைக்கு நைட் தான் வந்துருக்க. கண்டிப்பா எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட.."
"இல்லை எனக்கு வேண்டாம்.." என எழுந்தமரந்தவனது கண்கள் மறந்தும் கூட நிலாவை ஏறிடவில்லை.
"என்ன வேணாம்? உனக்கு வேணுமா வேண்டாமானு நான் ஆப்ஷனே குடுக்கல. ஒழுங்கா சாப்டுட்டு படுத்துக்கோ."
"உனக்கு தான் என்னை பிடிக்காதுல. அப்புறம் நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலனா உனக்கென்ன?"
"பிடிக்காதுனு நான் சொன்னேனா?"
"அப்புறம்?"
"கொஞ்சம் பிடிக்கும்."
"நான் உனக்கு எவ்வளவு கெட்டது பண்ணிற்கேன்? அப்புறம் எப்படி உனக்கு என்னை பிடிக்கும்?"
"அந்த கெட்டதும் என் நல்லதுக்காக தானே பண்ண..?" என்றவுடன்,
"ஆ..ஆ..ஆமா" என திக்கித் திணறிக் கூற,
"அதனால தான்." என்றவுடன் மாயனின் நெஞ்சில் சொல்ல முடியாத வலியோன்றுப் பரவியது.
நிலாவோ,"இப்போ சாப்பிடப் போறியா இல்லையா?" என அவனது அமைதியைக் கண்டு சற்றே அதட்டல் கூடியக் குரலில் கேட்க
"இல்லை நான் மறுபடியும் கிளம்பணும்."
"இப்போ தானே வந்த.. சாப்பிட்டாவது போ.."
"இல்லை. தாமதமாகிடும்.. நான் வர்றேன்.." என்றவன் நிலாவிடம், "நீயும் வர்றியா?!" என தயங்கியப் படிக் கேட்க, அவள் வேகமாக தலையசைப்பதற்குள் "ஏன் நிலா வரணும்?" என வந்த ஈலாவின் சந்தேகம் கலந்தக் குரல் மாயனைச் சற்றே மிரளச் செய்தது.
"இ.. இல்லை. அவ வரணும்னு அவசியம் இல்லை. இங்கேயே இருக்காளேனு சொன்னேன் அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை." என வார்த்தைகள் தந்தியடிக்கக் கூறியவனை அவள் ஒரு விதமாய் பார்க்க,
"அதான் சொல்றேன்ல. சும்மா தான் கூப்டேனு இப்ப எதுக்கு இப்படி பார்க்குற? சரி விடு அவ வரவே வேண்டாம். நான் கிளம்புறேன்." என்றவன் வாசல் நோக்கி செல்லப் போக,
"மாயன்" என்ற ஈலாவின் குரல் கேட்டு நின்றவனிடம், "நான் சும்மா தான் கேட்டேன்.. நீ அவளை தாராளமாக் கூட்டிட்டுப் போ.." என்றாள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல்.
அந்த அழகான இரவில், தன் மனதை ஆட்சி செய்பவள் தன் அருகில் இருக்க, அதை இரசிக்கும் மனநிலையிலோ மாயன் இல்லை.
எந்த காதலன் தான் காதலிக்கும் பெண்ணை மரண வாசலில் விட்டுவிட்டு வருவான்? இல்லை விட்டுவிடத்தான் முடியுமா?
ஆனால் என்ன செய்ய? தன் தந்தையா இல்லை தன் தந்தைக்கு செய்த வாக்கா என்று பார்க்கையில் அவன் தந்தையே அதில் உயர்ந்து நின்றார்.
22 இரண்டு வருஷங்கள் முன்பு இதே இரவில் 6 வயது மாயனும் அவனின் அண்ணன் இனியனும் விழா முடிந்து வீடு திரும்பாத தன் பெற்றோர்களுக்காக காத்திருக்க, இரத்தக் கரையோடும் அங்கும் இங்கும் கிழித்திருந்த வெட்டுடனும், குடிலுக்குள் நுழைந்தார் அவனின் தந்தை ஆழன்.
அவரின் கையில் சிறுக் குழந்தையொன்று பசியால் அழுதுக் கொண்டு இருந்தது.
"அப்பா.. அம்மா எங்கே? உங்களுக்கு என்ன ஆச்சு? யாரிந்த குழந்தை?" எனப் பதறி மாயன் கேட்க, அவரோ வேகமாய் குடிலின் வாசற் கதவை அடைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தவர், "அவள் இனி வரமாட்டாள். என்னிடமும் நேரம் மிக குறைவாகவே உள்ளது. இது உன் மிளிரா அத்தையின் குழந்தையடா.." என அவன் கைகளில் அக்குழந்தையைக் குடுத்தவர், தன் இரு புதல்வர்களிடம், "எனக்கு வாக்குக் குடுங்கள் இனி இப்பெண் குழந்தை உங்களின் பொறுப்பு. எக்காரணத்திற்க் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், இப்பெண் குழந்தைக்கு எந்த வித ஆபத்தும் நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மாயனிடம் திரும்பி,
"சீக்கிரம் மாயா.. என்னிடம் நேரமில்லை.. என் கடைசி ஆசையும் இதுவே.. நீயாவது அதை நிறைவேற்றுவாயா? எனக்கு வாக்கு குடுப்பாயா?" என இரத்தக் கறைப் படிந்த அவர்க் கையை நீட்டிய நேரம், அக்குடிலின் கதவு தட தட வென தட்டப்பட, அவர் கையின் மேல் தன் கையை பொறுத்தி, "நான் வாக்களிக்கிறேன். எனக்கென்ன ஆனாலும் சரி.. இக்குழந்தையின் மேல் சிறுக் கீறல் கூட விழ விட மாட்டேன். இது சத்தியம்." என்றவனைப் பார்த்து வெற்றிப் புன்னகை உதிர்த்தார் ஆழன்.
"ஆனால் இக்குழந்தை இங்கிருந்தால் அது முடியாது. பூமி கிரகத்தில் இக்குழந்தையை விட்டுவிடு. இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்." எனக்கூறி அதற்கான மந்திரத்தை அவனிற்குக் கற்பித்தார். அடுத்த நொடி அவனைச் சுற்றி ஒரு நீல நிறப் பந்து உருவாகி அடுத்த கணம் மறைந்தது. அப்பந்தோடு அவனும் மறைந்திருந்தான்.
தன் முதல் புதல்வனான இனியனை அருகில் அழைத்து இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு அவனை உச்சி முகர்ந்தவர், பின் வாசல் வழியாய் அவனை அனுப்பி விட்டு திரும்பும் நேரம் குடிலின் கதவு உடைக்கப்பட்டு நான்கு நபர்கள் உள்ளே நுழைந்து ஆழனைச் சுற்றி வளைத்தனர்.
.
.
இதுவரை தன் வாழ்வில் பனியை மட்டுமே பார்த்தவன் முதன் முதலாய் பூமியின் மழையை பார்த்து அதுவும் கொட்டும் பேய் மழையை பார்த்து அரண்டுப் போய் கையில் அழும் குழந்தையை சமாதானம் செய்ய அறியாமல் நடுசாலையில் அலைந்துக் கொண்டு இருந்தான்.
அப்போது இருள் நிறைந்த சாலையில் அவனை நோக்கி ஒரு கார் ஒன்று வர, அது என்ன வென்றே அறியாமல் திகைத்தவன், அதன் மஞ்சள் நிற ஹெட் லைட் வெளிச்சத்தில் கண்கள் கூசி குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி சாலையில் அமர, அவனின் முன் சர்ர்ர் என்று ப்ரேக்கையும் மீறி வழுக்கிக்கொண்டே, சரியாய் ஒரு இன்ச் இடைவெளி விட்டு நின்றது அந்தக் கார்.
அதிலிருந்து இளம் வயது நபர் ஒருவர் இறங்கினார். அவனிற்கு அவரின் உடை நடை அனைத்தும் வித்தியாசமாய் தெரிய, அவருக்கு அவனும், அவன் உடையும் வித்தியாசமாய் தெரிந்தது.
அவரைக் கண்டு அவன் அஞ்சுவதை உணர்ந்தவர், அவனருகில் சென்று, "யாருப்பா நீ.. இந்த நேரத்துல இங்க என்ன பண்ற? உன் அப்பா அம்மா எங்கே? கையில வேற குழந்தை வச்சிருக்க?" என்று வருசையாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக, எதுவும் பேசாமல் குளிரில் நடுங்கிய அவனை காருக்குள் அமரச் செய்தார் அவர்.
சாலையிலேயே தன் கவனத்தை வைத்திருந்தவரை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் மாயன்.
அதைக் கவனித்தவர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் புறம் திரும்பி, "என்னை ஏன் இப்படி பார்க்கிற?" என்று கேட்க, அவனிடம் பதில் இல்லை.
அவன் கண்களின் நிறமும் அவனும் வித்தியாசமாக இருக்கவே, "தமிழ் தெரியுமா?" என்று வினவ, அதற்கும் அவனிடம் பதில் இல்லை.
அவன் கையில் அழும் குழந்தையை கவனித்தவர் அதை வாங்கிய சிறு நேரத்தில் அது அழுகை நிறுத்தி தூங்கிவிட, அதை அதிசயமாய் பார்த்துக்கொண்டு இருந்தான் மாயன்.
"சரி இங்கையே இரு. நான் பாப்பாவுக்கும் உனக்கும் குடிக்கப் பாலாவது வாங்கிட்டு வர்றேன்." என்றவர் மழை நின்றுவிட்டதை உறுதிச் செய்துக்கொண்டு குழந்தையை கையில் ஏந்திக் கடைக்குச் சென்று மீண்டும் வருகையில், காருக்குள் அவன் இல்லை. மறைந்திருந்தான்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro