நிலா- 18
நாள்: 3
விடிந்து பல மணிநேரம் ஆகியும், நிலாவுக்கு மட்டும் விடியல் எட்டவில்லை. பொருத்து பார்த்த மாயன், அவள் இழுத்து போர்த்தி இருந்த போர்வையை, மொத்தமாய் உறுவ, அலறியடித்து எழுவாள் என எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம் தரும் வகையில் சுலோவ் மோஷனில் கண்களை மட்டும் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
அவளின் கண்கள் சிவப்பேரியிருந்தது. அப்போது தான் உணர்ந்தான், தன் கையில் இருந்த அவளின் போர்வை கொதிப்பதை.
செய்வதறியாமல் அவள் நெற்றியில் ஈரத்துண்டை வைத்துத் கொண்டிருந்தவனிடம் வெளியே சென்று விட்டு அப்போதே உள்ளே நுழைந்த ஈலா விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள,
"நீ இப்படி பொத்தி பொத்தி வச்சா அவளுக்கு இன்னும் தான் உடம்பு சரியில்லாம போகும் கொஞ்சம் நகரு." என்றவள் நிலாவின் காதருகில் ஏதோ கிசுகிசுக்க, உடனே துள்ளிக்கொண்டு எழுந்த நிலாவைப் கண்கள் விரிய பார்த்தான் மாயன்.
"அப்படி என்ன சொன்ன?"
"வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்." என சாதாரணமாய் அவள் சொல்ல,
"விளையாடுறியா ஈலா.. இங்க என்ன நடந்துட்டு இருக்குனு தெரிஞ்சு தான் பேசுறியா?"
"பக்கத்துல போய்ட்டு வர்றதால ஒன்னும் ஆகிடாது மாயன். அவளும் பாவம் தானே. இங்க வந்ததுல இருந்து இங்கயே தானே இருக்கா." என்றதற்கு, நிலாவும் ஆமோதிக்கும் வகையில் மேலும் கீழும் தலையசைக்க,
"அதுகில்லை ஈலா.." என்றவனை பாதியில் வெட்டியவள், "நான் பார்த்துக்குறேன். என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா?" என கூறிவிட்டு நிலாவை நோக்கி தன் கரம் நீட்ட அதை பிடித்துக்கொண்டு லேசாய் தல்லாடிய வண்ணம் எழுந்து நின்றாள் அவள்.
"காய்ச்சல் வேற அவளுக்கு ரொம்ப அதிகமா இருக்கு.."
"நம்பலாம் காய்ச்சல் வந்தா இழுத்து போர்த்திட்டு படுத்திடுவோமா? உதறி தள்ளிட்டு வேலையை பார்க்க மாட்டோம்?"
"சரி பார்த்து போய்ட்டு வாங்க" என சுரத்தே இல்லாமல் அவன் கூறி முடிக்கும் முன், நிலா ஓடியே இருந்தாள்.
இருவரும் சிறிது தூரம் பேசி சிரித்த படி நடக்க, ஒரு பாறை மேல் ஏறிய ஈலா எதிர் திசையை நோக்கி வினோதமாய் ஒரு சத்தம் எழுப்பினாள்.
அடுத்த மூன்றாவது வினாடியில் அதேப் போல் ஒரு சத்தம் வர, அதைத் தொடர்ந்து வானிலிருந்து பறந்து ஈலாவை நோக்கி வந்தது அது.
நிலா மிரண்டு நிற்க, ஈலாவோ நெடு நாள் கழித்து சந்தித்த நண்பர்கள் போல் அதை ஆர தழுவி கொண்டிருந்தாள்.
நிலாவின் தும்பல் நானும் இங்க தான் இருக்கேன் என அவர்களுக்கு உணர்த்த, தன் கவனத்தை நிலாவின் பக்கம் திருப்பிய ஈலா, அவளின் கலவர முகத்தைக் கண்டு, "இவன் புட்டா(futta). பயப்படாத ஒன்னும்
பண்ணமாட்டான்." என ஓர் மூன்றரை அடியுள்ள ஒரு விலங்கைக் காட்டினாள். அது பார்ப்பதற்கு குட்டி யானைப் போல் இருந்தாலும் பனிகரடிப் போல் வெள்ளை தேகத்தை கொண்டிருக்க, அதன் முதுகு, படர்ந்து விரிந்த இறக்கைகளைக் கொண்டிருந்தது. அதன் நீண்டு வளைந்த தந்தம் மட்டும் சுமார் இரண்டு அடி இருக்கும்.
ஈலா கூறியவுடன் இவளைப் பார்த்து தன் தும்பிக்கையை தூக்கியபடி, அவளின் முன் வந்து நின்றது. யாரிடமும் சுலபத்தில் பழகி விடாத அது, நிலாவிடம் மட்டும் தானாய் வருவது ஈலாவிற்கே சற்று ஆச்சரியத்தை தந்தது. நிலாவோ துள்ளியபடி ஈலாவின் பின் ஒளிந்துக் கொண்டாள்.
"அது ஒன்னும் பண்ணாது.. உங்க உலகத்துல இருக்க நாய் பூனை மாதிரி தான்" என்க
"அய்யோ எனக்கு சின்ன வண்டு கிண்டு கூட பயம் தான் பா.. ப்ளீஸ் அதைப் போகச் சொல்லு"
"உனக்கு சுத்தி பார்க்கணுமா வேணாமா?"
"பாக்கணும்" என மெலிந்த குரலில் கூற,
"அப்போ நீ இவன் கிட்ட பழகி தான் ஆகணும்"
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இவன் தான் நம்பல சுத்திக் காட்ட போறான்"
"என்ன....!?" என கண்கள் விரிய கேட்டவளைக் கண்டு மானகீசமாய் சிரித்தவள், பின் "என்ன, என்ன?.."
"இதுவா நம்பலை கூட்டிட்டு போகப் போகுது?"
"பின்ன.. நம்ப காட்டுக்கு போறோம். நடந்தே போனா, ஒரு வாரம் ஆகிடும் என்றாள்.."
"பரவாயில்லை.. ஒரு வாரம் தானே." என அவள் சாதாரணமாய் கூற,
"ஹாஆஆன்.. மாயன் என்ன கொன்னே போட்டுடுவான்." என்றாள் ஈலா.
"அப்போ வா.. பரவாயில்லை நம்ப வீட்டுக்கே போய்டலாம்." என நிலா நடக்கத் தொடங்க
"காட்டுல அருவிலாம் இருக்கும் பா.." என நிலாவின் குணமறிந்து கைகளை கட்டிக்கொண்டு ஈலா கூற, நடப்பதை நிறுத்தியவள், யோசனையோடே திரும்ப, ஈலாவோ, "சரி வேணாம்னா விடு.." என கூறிவிட்டு நிலாவின் முக பாவனையை உற்று நோக்கினாள்.
"சரி.. நீ இவ்ளோ ஆசைப்படுற. அதனால..." என இழுத்தவளிடம், "அதனால..?!" என ஈலாவும் அதே தோணியில் கேட்க,
"போலாம்." என்றாள்.
"அப்படி வா வழிக்கு." எனக் கூ
றியவள், வேகமாய் புட்டாவின் மேல் ஏறிக் கொண்டு, தயங்கியபடி நின்ற நிலாவைக் காண, "என்னை நம்பு நிலா. ரொம்ப நல்லா இருக்கும்." என்றாள்.
"தாராளமா நம்புறேன். ஆனா அந்த டயலாக் மட்டும் சொல்லாத.." என்க, மாயன் எந்த அளவுக்கு அவளை பாதித்திருக்கிறான் என புரிந்துக் கொண்டாள் ஈலா.
"அப்புறம் என்ன யோசனை வந்து ஏறு.." என அவளை நோக்கி தன் கரத்தை நீட்ட, புட்டாவும் அதையே செய்ததைக் கண்டு, "பாரு புட்டா யாரோடையும் பழகாது தெரியுமா! ஏன் மாயன் கிட்டக் கூட. நானே இதை என்னோட பழக வைக்க ரொம்ப கஷ்டப் பட்டேன். ஆனா என்னமோ தெரியலை அதுவே உன்கிட்ட பழக தயாரா இருக்கு. நீ தான் ரொம்பப் பயப்படுற.." எனக் கூற,
"எனக்கென்ன ஆசையா? நானெல்லாம் பல்லியக் கண்டாளே பத்து கிலோ மீட்டருக்கு ஓடுறவ. என்கிட்ட வந்து ஏறு ஏறு னா?.. என் இடத்துல இருந்து பார்த்தா உனக்கு புரியும்.."
"அடக் கண்ணை மூடிக்கிட்டு ஏறு. பஞ்சு மெத்தைல உக்காருர மாதிரி தான் இருக்கும்.."
"சரி" என குரலில் நடுக்கத்துடன், அவள் சொன்னபடியே செய்தவளுக்கு, ஏதோ சொகுசான மெத்தை மேல் அமர்ந்திருப்பது போன்று தான் இருந்தது.
"போலாமா?" என ஈலா கேட்டதிற்கு அவள் சம்மதம் தெரிவிப்பதற்குள், அந்த அழகிய பயணம் ஆரம்பமானது. அப்போது கண்களை மூடிக்கொண்டு ஈலாவின் இடையைக் கட்டிக் கொண்டவள், இறங்கும் வரை பிடியை விடவும் இல்லை கண்களை திறக்கவும் இல்லை.
மலை உச்சியிலிருந்து வெள்ளியை உருக்கி ஓட விட்டதுப் போல் காட்சியளித்த அருவியின் சலசலப்புச் சத்தம் அவள் காதில் பாய, தன் இமைகளை மெல்ல விலக்கினாள் அவள்.
அவ்வருவியின் காட்சியும், அதைச் சுற்றி பச்சை பசேல் என்றிருந்த அந்த இயற்கையின் ஜாலமும், அங்கும் இங்கும் திரிந்துக் கொண்டிருக்கும் சற்றே பெரிதான இறகுகளுடுன் கூடுதல் வண்ணமுமாய் இருந்த வண்ணத்துப்பூச்சிகளும், அதன் பசியாற்ற எங்கும் நிறைந்திருந்த பெரிய பெரிய பல வகை மலர்களும், பகலிலும் ஜொலிக்கும் மின்மினி பூச்சிகளும், கண்களுக்கு அகப்படாத சிறு பூச்சிகளின் கீச் கீச் என்ற சத்தமும், தூரத்தில் இருந்து பாடும் பறவைகளின் இன்னிசையும் அந்த இடத்திற்கு மென்மேலும் அழகை வாரி வழங்கி இருந்தது.
தன் கண்முன் உள்ள காட்சியைக் கண்டு அவள் தன்னை மறந்திருக்க, புட்டாவின் உடலசைவு நிஜ உலகிற்கு அவளை அழைத்து வந்தது.
அதுவரை இருந்த உடல் சோர்வு எங்கோ பறந்துவிட்டதுப் போல் உணர்ந்தவள் ஈலா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒரே குதியாய் உள்ளே குதித்து விட்டாள். காட்டை சுற்றி பனி சூழ்ந்திருக்க, இந்த இடத்திலோ அதற்கான அறிகுறிக் கூட இல்லை.
அவள் இங்கு வந்ததில் இருந்து முதல் முறையாக மனதிலிருந்து சிரிப்பதைக் கண்ட ஈலாவும் அவளை தடுக்க மனமின்றி அவளை விட்டுவிட்டாள்.
நேரம் யாருக்கும் அடங்காமல் தன் வேலையை செவ்வனே செய்ய, இருளவும் தொடங்கியிருந்தது.
"போதும் வா.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சி காட்டு விலங்குகள் எல்லாம் நடமாட ஆரம்பிச்சிடும்.." என அவள் கூறிக்கொண்டிருக்க நிலாவோ, ஏதோ பேயைக் கண்டதுப் போல் அரண்ட படி நின்றுக்கொண்டு இருந்தாள். ஈலா தன் பின் கேட்கும் சத்தத்தை உணர்ந்து, அவள் அரண்டதிற்கான காரணம் அறிந்தவளின் உதடுகள், "துருவா" என முனுமுனுத்து.
சற்றும் திரும்பாமல் நிலாவைப் பார்த்தபடியே தன் முதுகில் இருந்த அம்புகளிள் ஒன்றை தன் வில்லில் நுழைத்தாள்.
அவள் தொண்டைக் குழி ஏறி இறங்க, நெற்றியிலிருந்து ஒரு துளி வேர்வை அவள் காதின் ஓரம் வழிந்தது. எதற்கும் அசராதவளின் இதயம் கூட தாறுமாறாய் துடித்தது. ஒரு கணம் தன் கண்ணை மூடி மொத்த தைரியத்தையும் சேர்த்துக் கொண்டவள், நொடியும் தாமதிக்காமல் சட்டென திரும்பி அதன் மேல் அம்பை பாய்ச்சும் முன், அதன் ஒரே வீச்சில் மரத்தின் மேல் தூக்கி எறியப் பட்டாள்.
நிலா செய்வதறியாது தேகம் நடுங்க சில்லிட்டு நின்றிக்கொண்டிருக்க, பயத்தினாலும், தன் கையாலாகாத தனத்தினாலும், ஈலாவைக் காப்பாற்ற முடியாத தன் இயலாமையாலும் அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
தான் எதற்கு இங்கே இருக்க வேண்டும் என்றுக் கூட தெரியாமல் பைத்தியக்காரிப் போல் சுற்றுவதற்கு சாவதே மேல் என அவள் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் இப்படி கொடூரமாய் கடிப்பட்டு இறப்பதற்கு அவளிடம் தைரியமும் இல்லை. அதை எதிர்ப்பதற்கு அவள் உடலில் வலுவும் இல்லை.
அவள் உயரத்திற்கு சற்றே குறைவான உயரத்தில், ஆண் சிங்கத்தைப் போல் பார்ப்பவர்களை கதி கலங்க செய்துவிடும் அதன் பார்வை நிலாவைத் தழுவியது. வெளிச்சம் இருந்தும் இல்லா அந்த வானத்தைப் பார்த்து அந்த காடு முழுவதும் எதிரொலிக்க கர்ஜித்த அது, அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் நிலாவின் பாதத்தை நோக்கி குனிந்து, மண்டியிட்டு, அதன் தரையை தடவும் இறக்கையை விரித்துக் கொண்டது.
இக் காட்சியைக் கண்டு தட்டு தடுமாறி எழுந்த ஈலா ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.
துருவா என்பது அவ்வுலகிலேயே சக்தி வாய்ந்த விலங்கின் இனம். அரிதான இனமும் கூட. நூறு யானைகளின் பலத்தை ஒரு சேரக் கொண்டது. காலப்போக்கில் அதன் இனமே அழிந்து விட நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் உயிருடன் இருப்பது இது ஒன்று மட்டும் தான். இதை கொல்வதற்கு என்று ஒரு யுக்தி இருக்கின்றது. ஆனால் அது தெரிந்தவர்களால் கூட அதை அவ்வளவு எளிதாய் அழிக்க முடியாது. யாரு
கட்டுக்கும் அடங்காத அது நிலாவின் முன் மண்டியிடுகிறதென்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.
ஈலா பிறந்ததில் இருந்து அதைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள். பல முறை இக் காட்டிற்கு வந்தும் அவள் துருவாவை கண்டதே இல்லை. அந்த இனத்தின் கடைசி விலங்கும் இறந்துவிட்டதென்று மக்கள் பலரும் கூட நம்ப ஆரம்பித்துவிட்டனர். நூறு பேரையும் ஒரே நேரத்தில் பந்தாடக் கூடிய பலத்தைக் கொண்ட இது, இதோ நிலாவின் காலடியில். ஏதோ கனவுப் போல் இருந்தது ஈலாவிற்கு.
தன் காலில் ஈரம் படர்வதை உணர்ந்த நிலா அது அவ்விலங்னுடயது என்று அறிய, விலங்குகலுக்கும் கண்ணீர் சிந்தத் தெரியுமா என்ன!? என அவள் மனதில் கேள்வி எழுந்தாலும் அதைக் கண்டவுடன் ஏனோ அவள் மனம் கனக்கத் தொடங்கியது.
தனக்கு நெருக்கமானவர்கள் யாரோ தன் முன் அழுவதுப் போல் அதன் மேல் அவளுக்கு இனம்புரியாத இரக்கம் தோன்றியது. பாச்சானுக்கே பாய்ந்துக் கொண்டு ஓடுபவள், முதன்முறையாய் தன் முழங்காலின் மேல் மெல்ல அமர்ந்து அதன் தலையின் ரோமத்தை மெல்ல வருடினாள்.
அவளின் வருடலில் நிமிர்ந்த அது ஏதோ கூற வருவதுப் போல் உடைந்த குரலில் கர்ஜிக்க, அதன் முகத்தை தன் பிஞ்சுக் கையால் ஏந்திக்கொண்டாள்.
அது நிலாவை ஒன்றும் செய்யாமல் இருப்பது ஈலாவிற்கு சிறு நிம்மதியை தந்தாலும், இங்கிருப்பது ஆபத்து என அவள் மனம் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்க, மெல்ல நிலாவின் அருகில் சென்று நின்றவள், நிலாவிடம் போகலாம் என்பதுப் போல் கண் ஜாடைக் காட்ட, அவளை நோக்கி திரும்பிய துருவா அவளை எரிக்கும் பார்வை பார்த்தவுடன் பயத்தில் இரண்டடி பின் வாங்கி நின்றுக் கொண்டாள்.
அதைக் கண்ட நிலா, ஏதோ நெடு நாள் பழக்கம் கொண்ட நண்பர்கள் போல் துருவாவிடம் கண்ணாலே போய் வரவா என கெஞ்ச, அதுவும் உடனே அவளை வழியனுப்பும் வண்ணம் எழுந்து நின்றுக் கொண்டு அவளுக்கு விடைக்கொடுத்தது.
"என்னால நம்பவே முடியல மாயன். இது.. இது நிஜமா?! துருவா.. துருவாஆஆஆஆஆ..
எவ்வளவு பலம் கொண்ட விலங்கு.. அந்த காட்டுக்கே ராஜா.. அது எப்படி.. ஐயோ என்னால நம்பவே முடியல.. இது எப்படி.. கொஞ்சம் சொல்லேன் நான் பைத்தியம் ஆயுடுவேன் போல.." என காட்டில் நடந்த காட்சியைக் கண்டு இன்னும் சிலிர்த்துப் போய் மாயனிடம் ஒன்று விடாமல் கூறிக் கொண்டிருந்தாள் ஈலா. அவனோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க பொறுமை இழந்தவள், "நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன் நீ என்னனா அமைதியாவே இருக்க?!"
"நீ ஒரு முட்டாள்"
"என்ன?!!"
"விலங்குகளுக்கு எதையும் உணருர சக்தி இருக்கு. அது உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் தானே.."
"எனக்கு இது தோணவே இல்லை பார்த்தியா" என தன் தலையில் தட்டிக் கொண்டாள் ஈலா.
நிலாவோ எதுவும் புரியாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தாள். அவள் மனதில் அது ஏன் அப்படி செய்தது என்பதை விட நான் எப்படி அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்ற கேள்வி தான் அவளை துளைத்துக் கொண்டு இருந்தது. வழக்கம் போல் குழப்பத்தை தவிர வேறு ஒன்றும் அவள் சிந்தைக்கு எட்டவில்லை. யோசித்த வண்ணம் தூங்கியே போனாள்.
தூக்கம் கலைந்து எழுந்தவள் யாருமில்லா அந்த குடிலைக் கண்டு சற்றே குழப்பத்துடன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த சமயம் மலர்ந்த முகத்துடனும் கையில் ஒரு குவளையுடனும் சரியாய் உள்ளே நுழைந்தாள் மாசா.
நிலாவைக் கண்டாளே, சிடுசிடுக்கும் அவளது முக பாவனை சற்றே, மாறியிருந்ததுப் போல் தோன்றியது நிலாவிற்கு. ஆனால் அவளின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள முடியாதவள், குழப்பம் நிறைந்த முகத்துடனே அவளை நோக்கியபடி, பின் "எல்லாரும் எங்க போயிருக்காங்க?" என்க
"மாயன் அண்ணா குடில்லதான் எல்லாரும் இருக்காங்க. நீ தூங்கி முழிச்சிட்டா, உங்களையும் அழைச்சுட்டு வர சொன்னாங்க."
"ஓஹ் அப்படியா. சரி வா டா போலாம்." என நிலா எழ,
"அதுக்கு முன்னாடி மாயன் அண்ணா உங்களுக்கு இதைக் குடுக்க சொன்னாங்க" என தன் கையில் இருந்த குவளையை அவள் முன் நீட்டினாள்.
ஏதோ கசாயம் போல் இருந்த அதைக் கண்டு முகத்தை அஷ்டக் கோணலாக மாற்றியவள், "என்ன டா இது!!!?" என கேட்க,
"இது உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது. நீங்க ரொம்ப பலகீனமா இருக்கீங்கனு, அண்ணன் தான் குடுக்க சொன்னாங்க."
"எனக்கு இதெல்லாம் வேணாமே. உங்க அண்ணன் கிட்ட நான் குடிச்சுட்டேனு சொல்லிடேன் ப்ளீஸ்."
"அட, குடிச்சுப் பாருங்களேன். சுவையா தான் இருக்கும். எனக்காக.." என அவள் குழந்தைப் போல் கேட்டவுடன் நிலாவால் மறுக்க முடியவில்லை.
"சரி உனக்காக மட்டும் தான். உன் அண்ணனுக்காக எல்லாம் இல்லை." என்றவள், அதை கையில் ஏந்தி மெல்ல வாயின் அருகில் கொண்டு சென்ற நேரம், ஒரு கரம் வந்து அதை அவள் கையிலிருந்து பிடுங்கியது.
அவள் நிமிர்ந்த போது, மாயன் சிவந்த கண்களுடனும், புடைத்த நரம்புகளுடனும், கோபத்தின் உச்சியில், அதிர்ந்துப் போய் நிற்கும் மாசாவை பார்வையால் சுட்டெரித்துக் கொண்டு இருந்தான். அவனைத் தொடர்ந்து ஈலா, சுமோ, சுசியா மூவரும் உள்ளே நுழைய, நான்காவதாய் புதியதாய் ஒருவன் சற்றே மிடுக்கான தோற்றத்துடன் உள்ளே நுழைந்தான்.
"அ.. அண்ணா.." என மாசா திணர,
"என்ன இனி அப்படி கூப்பிடாத." என தீயைக் கக்கியவனிடம்,
"நா.. நான் என்னணா பண்ணேன்?!"
"இது என்ன?" என நிலாவின் கையிலிருந்து அவன் பறித்த குவளையைக் காட்டி அவன் கேட்க,
"க..க.. கசாயம்" என விசும்பலுக்கு இடையில், அவள் கூறியவுடன் 'அப்படியா' என்பதுப் போல் பார்த்தவன், அதை வேகமாய் தன் வாயில் ஊற்றப் போக, பதறியடித்து மாசா அதைத் தட்டி விட்டதில் அதிலிருந்த கசாயம் சிதறி கீழே விழுந்தது.
"ஏன் தட்டி விட்ட?! இப்ப மட்டும் ஏன் தட்டி விட்ட?! உன்ன பார்த்து பார்த்து வளத்தேனடி, உன் மேல வச்ச நம்பிக்கையை எப்படி உடைக்க மனசு வந்தது? என்னதான் இருந்தாலும் என் கூட பிறக்காத தங்கச்சினு காட்டிட்டல்ல?" என கத்தியவனை அர்த்த பார்வைப் பார்த்தவள்,
"நாங்க உன் மேல வச்ச நம்பிக்கையை நீ உடைச்ச மாதிரியா?" என்றாள்.
"என்ன உளறுர!?"
"அதான் எல்லாத்துக்கும் வேவு பார்த்துட்டு வந்து இவரு சொல்லியிருப்பாரே. இதை மட்டும் எப்படி சொல்லாம விட்டார்" என புதியவனை பார்த்து அவள் கேட்க,
"நிறுத்துறியா" என அவளை அடிக்க வந்தவன் தன்னை கட்டுப்படித்துக் கொண்டு நின்றான்.
"ஏன் நிறுத்திட்ட.. அடி னா.. அடி.. அடிச்சே கொன்னுடு.. இவளுக்காக கூடப் பிறந்த இனியன் அண்ணாவையே கொன்னுட்ட. அப்போ நானெல்லாம் எம்மாத்திரம். என்னையும் அதே மாதிரி கொன்னுடு"
"உனக்கு யார் இப்படி எல்லாம் சொன்னா?" என லேசாய் தடுமாறியவனிடம்,
"இதுல சொல்ல என்ன இருக்கு. இனியன் அண்ணாவையே கொன்ன உனக்கு, என்னை கொல்றது ஒன்னும் கஷ்டம் இல்லையே. உனக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையாண்ணா? அவரு உன் இரத்தம் தானே."
"முழுசா தெரியாம முடிவு பண்ணாத மாசா. அதுக்கு நிலா என்ன பண்ணுவா?! எவனோ சொன்னா உடனே செஞ்சுடுவியா?" என அவன் கோவம் எல்லை மீற
"நான் ஏன் செய்யக் கூடாது?! என் அப்பாவும் அண்ணனும் சாக இவதான் காரணம். இனி எனக்குனு இருக்குறது, நீயும் பிஜிலியும் மட்டும் தான். உங்களையும் நான் இவளால இழக்க விரும்பலை. இவளை எங்கையாவது போக சொல்லு. இல்லைச் சாக சொல்லு." என வெறி பிடித்ததுப் போல் கத்தியவளின் கன்னத்தில் அவன் ஒரு அறை விட, அவனை தடுக்க முயற்சித்த நிலாவுக்கொரு அறை விழுந்தது.
"எல்லாம் உன்ன சொல்லனும். யாரு என்ன குடுத்தாலும் அப்படியே நம்பி லூசு மாதிரி வாங்கி குடிச்சிடுவியா. கொஞ்சமாவது அறிவிருக்கா?! நீ என்ன குழந்தையா? எப்ப பார்த்தாலும் ஒரு ஆள் உன்னை கவனிச்சிகிட்டே இருக்குறதுக்கு. மூளைனு ஒன்ன எப்பயாவவாது யூஸ் பண்ணு. என் உயிரை எடுக்க தான் உனக்குத் தெரியும்."
என கோவத்தில் தான் பேசுவதைக் கூட அறியாது, கத்தி விட்டு வெளியேறியவனை முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro