Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9

சிவகங்கை அரசு மருத்துமனை.

நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி.

திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்துநெடியைக் காட்டிலும் அதிகமாக அடித்த குப்பை நாற்றமும், குழந்தைகளின் வீறிட்ட அழுகை சத்தங்களும், அழுக்குப்படிந்த சுவர்களும், அசூசையான மனிதர்களுமாய்.... அவனது தாங்கும்சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது அவ்விடம்.

பள்ளிக்கூடத்தைக் கண்டு சிணுங்கும் குழந்தைபோல, மனமே இல்லாமல் அவள்பின்னால் ஒவ்வொரு எட்டாக வைத்து நடந்துபோனான் அவன். தப்பித்தவறியும் யார்மீதும், எதன்மீதும் உரசியோ, மிதித்தோ விடாமல், உச்சகட்ட கவனத்துடன் சென்றுகொண்டிருந்தான்.

முதன்மைக் கட்டிடத்தைத் தாண்டி, பிணவறைக் கூடத்துக்கு வந்தபோது, குடலைப் பிடுங்கும் ஃபார்மலின் நாற்றம் அவனைக் குமட்டச்செய்ய, அதற்குமேல் செல்ல விருப்பமின்றி, மரத்தோரம் நின்றுவிட்டான் அவன். ஒருமுறை அவனைத் திரும்பிப்பார்த்துவிட்டு, அவள் உள்ளே சென்றாள்.

முன்னறையில் அமர்ந்திருந்த பணியாளரிடம் விவரம் சொன்னபோது, சில கோப்புகளை நீட்டி அதில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, இறப்புச் சான்றிதழ்களைக் கையில் தந்தார் அவர்.

"சர்டிபிகேட்ஸ் மட்டும்தானா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே சார்?"

அந்த ஆள் சிரித்தார்.

"ரிப்போர்ட் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்தாச்சு. உங்க நிலமை தெரிஞ்சுதான், அலைய விடாம நானே VAO கையெழுத்தெல்லாம் வாங்கி சர்டிபிகேட் அடிச்சுக் குடுத்தேன். அதுக்கு நன்றி சொல்லாம.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கேக்கறீங்க..!"

அவள் சிரிக்கவில்லை.

"சந்தேகத்துக்கிடமா நடந்த மரணங்கள்ல, சம்பந்தப்பட்ட நபரோட குடும்பத்தினர் கிட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைக் காட்டணும். அவங்க ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிறகுதான் நீங்க டெத் சர்ட்டிபிகேட் அடிக்கணும்"

"இப்ப வந்து பேசறீங்க??.. பாடியை வாங்கமாட்டேன்னு காலைலயே வந்து தகராறு பண்ணவேண்டியதுதான? ஆபிஸ் சாத்துற நேரத்துல வந்து... கழுத்தறுப்பு!"

கத்தல் சத்தம் வெளியில்வரை கேட்க, திவாகர் சற்றுத் தயங்கினாலும், எதற்கும் போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்து அவளருகில் சென்று நின்றான்.

"என்ன பிரச்சனை?"

அவள் அவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அலுவலரும் அவளும் சண்டைக்கோழிகள் போல முறைத்தபடி நின்றனர்.

"இங்க பாருங்க, எந்தவொரு போஸ்ட்மார்ட்டம் பண்ணினாலும், ரெண்டு காபி ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணனும். போலீசுக்கு ஒண்ணு, குடும்பத்துக்கு ஒண்ணு. இந்த மக்கள் யாரும் அதைக் கேட்டு வாங்கிக்கறதில்லை. அதுக்காக சட்டத்தை நீங்க மாத்திக்க முடியாது. இப்ப நான் RTI, PIL எல்லாம் போட்டுட்டு வந்தா, ரிப்போர்ட்டோட சேர்த்து, உங்க வேலையையும் பறிகொடுக்கணும். நீங்களே யோசிச்சுக்கோங்க, எது நடக்கணும்னு."

சாந்தமான, ஆனால் அபாயகரமான தொனியில் அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரிக்க, அந்தப் பணியாளர் வெலவெலத்தார்.

திவாகருக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.

'கிராமத்துப் பெண்ணென நினைத்தோமே.. இவள் என்னவென்றால் சட்டங்களை புட்டுப்புட்டு வைக்கிறாள்! யாரிவள்? எப்படி வேம்பத்தூர் போன்ற கிராமத்தில் இருந்தவளுக்கு இத்தனை அறிவும் ஆற்றலும்? இவளைப் பற்றி நாம் நினைத்தது தவறோ? உண்மையில் இந்தப் பெண்ணுக்கும் நம் குடும்பத்துக்கும் என்ன உறவு? இவள் பெற்றோர் யார்? இந்த மரணத்தில் என்ன மர்மம்? ஏன் விபத்தென்று முடிந்துவிட்ட மரணத்தை மீண்டும் ஆராய நினைக்கிறாள் இவள்? '

அவளது தீர்க்கமான பார்வையாலேயே நடுங்கிப்போய், படபடவெனக் கணினியில் எதையோ தட்டி, அச்சு இயந்திரத்தில் வந்து விழுந்த காகிதங்களைச் சேர்த்து எடுத்து, அவளிடம் பணிவாக நீட்டினார் அந்த அலுவலர்.

"மேடம்.. டாக்டர் இப்ப இல்லை. அதுனால அவர்கிட்ட சைன் வாங்க முடியாது. தயவுசெய்து காலைல வந்தீங்கனா, நானே வாங்கி வைக்கறேன்.."

"தேவையில்ல. ரிப்போர்ட் மட்டும் எனக்குப் போதும். உங்க ஃபார்மாலிடி எல்லாம் நீங்களே வச்சுக்கங்க"

அவரது பதிலுக்குக் காத்திராமல் அவள் நகர, ஒரு இனம்புரியா பிரம்மிப்புடனும் பயத்துடனும் பின்தொடர்ந்தான் அவனும்.

காரில் வரும்வழியெல்லாம் அந்தத் தாள்களையே திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். வீட்டிற்கு வந்ததும் வேதாசலத்திடம் சென்று, "என்கூட போலீஸ் ஸ்டேஷன் வரை வரமுடியுமா மாமா?" எனக் கேட்க, தந்தையும் மகனும் ஒருசேரத் திகைத்தனர்.

"என்னாச்சும்மா?" ஒருகண்ணால் மகனையும் பார்த்தபடி அவர் கேட்க, "இல்ல மாமா.. ஏதோ.. சரியில்ல.. தப்பாப் படுது.. அதான்.. ஒருதரம் போயி, என்ன கேஸ்னு பாத்துட்டு வந்துட்டா..." என இழுத்தாள் அவள்.

"இப்ப வேணாம்மா. இருட்டுற நேரத்தில பொம்பளைப் புள்ளைய அங்கெல்லாம் கூட்டிட்டுப் போறது சரியில்ல. காலைல வெள்ளனவே போலாம்மா. இப்பப் போய் சாப்டுட்டு, எதையும் நினைக்காமத் தூங்குங்க"

தலையை மட்டும் அசைத்துவிட்டு, உள்ளே சென்றாள் அவள். தலைமுழுகி, உடைமாற்றி எட்டு மணியளவில் உணவருந்த வரும்வரை ஒருவார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை இருவரும். திவாகர் அம்மாவிடம் சென்று மழுங்கலாக, "அவ யாரு?" எனக் கேட்க, அவர் விழித்தார்.

பின் வானதியைத்தான் கேட்கிறான் எனப்புரிந்ததும் முறைத்தபடி, "உன் பொண்டாட்டி" என்றுகூறிவிட்டு நகர, ஹரிணி சத்தமின்றிச் சிரிக்க, அவளை முறைத்துவிட்டு, சாப்பிட வந்தான் அவன். அப்பாவும் அவளும் அமர்ந்திருக்க, அண்ணி பரிமாறிக்கொண்டிருந்தார். இவனும் போய் உட்கார்ந்ததும், "தோசை வைக்கட்டா?" எனக்கேட்டு எடுத்துத்தந்தார்.

"கலெக்டரம்மா, உங்களுக்கு?" எனப் புன்னகைத்தபடி பானு கேட்க, வானதியும், "வைங்க.." எனப் புன்னகைத்தாள்.

'கலெக்டரம்மா' என்ற விளிப்பால் திகைத்துபோனவனை வேதாசலம் பார்த்து, "வானதி கலெக்டருக்குப் படிச்சிட்டு இருக்கா" என விளக்கி, அவனது அதிர்ச்சியைப் போக்கினார்.

சாப்பிட்டுவிட்டுத் தங்கள் அறைக்கு வந்தபோது, திவாகர் கட்டிலில் படுத்துக்கொண்டு கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான். அவளோ, மூலையில் இருந்த மேசையில் அமர்ந்து புத்தகம் எதையோ புரட்டிக்கொண்டிருந்தாள்.

திவாகருக்குத் தூக்கம் கண்ணைத் தழுவியது. ஆனாலும் அவள் இன்னும் தூங்கிடவில்லையே என நினைத்துக் கண்ணைமூடிக் காத்திருந்தான்.

சிறிதுநேரத்தில் விளக்கு அணைக்கப்பட, அவளும் தூங்கிவிட்டாள் போலும் என நினைத்துக்கொண்டு சற்றே நிம்மதியாகத் தூங்கிப்போனான் அவன்.

நடுநிசியில் உறக்கம்கலைந்து விழித்த திவாகர், நிலவொளி விழும் இடத்தில் பால்கனி வாசலில் ஏதோ நிழலாடுவதைக் கண்டு கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தான்.
தன்னுடைய கட்டிலில் தான்மட்டுமே படுத்திருப்பதை உணர்ந்தவன், மெல்ல பால்கனியை நோக்கி நடந்தான்.

வெறித்த பார்வையுடன் வானத்தைப் பார்த்தபடி பால்கனித் தரையில் அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் தூங்கவே இல்லை என்பது புரிந்தது அவனுக்கு. தன்னுடன் ஒரே கட்டிலில் படுத்துக்கொள்ளக் கூச்சப்படுகிறாளோ என்னவோ என நினைத்து, "எனக்கு எதும் ப்ராப்ளம் இல்ல. நடுவில பில்லோ வச்சுக்கணும்னா கூட ஓகே" என்றான் அவன்.

இரவின் நிசப்தத்தில் அவனது குரல் சட்டெனக் கேட்கவும் திடுக்கிட்டு நடுங்கிப்போய் அவள் திரும்ப, அதை எதிர்பாராதவன் மன்னிப்பாகக் கைகளை உயர்த்தினான்.

பின் சன்னமான குரலில், "சாரி.. வேணும்னு பண்ணல. உனக்கு uncomfortableஆ இருக்கோன்னு தான்.." என விளக்கமளிக்கத் தொடங்க, அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் தன்பாட்டில் அமர்ந்திருந்தாள்.

பெருமூச்சு விட்டவன், அவளருகில் தரையில் சிரமத்துடன் அமர்ந்தான். அங்கிருந்து வானத்தைப் பார்க்க அழகாகத்தான் இருந்தது. ஆனாலும் அதைக்காட்டிலும் தூக்கமே பிடித்திருந்தது அவனுக்கு. அவளைத் தனியே விடவும் மனமில்லை. குடும்பத்தை இழந்த சோகத்தில் இருப்பவள் ஏதேனும் தவறாக முடிவெடுத்து விடுவாளோ என்றும் பயந்தான்.

அவளிடம் இதுவரை ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேசிடவில்லை என்பது உறுத்த, மெல்லப் பேச்செடுத்தான் அவன்.

"என் பேர் திவாகர். வயசு இருபத்தி அஞ்சு. பயோகெமிக்கல் இஞ்சினியர். அமெரிக்காவுல, ப்ரூக்லின்ல இருக்க BioGen மருந்துக் கம்பெனில ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்கேன். லீவுக்காக ஊருக்கு வந்துருக்கேன்.."

அவள் குழப்பமாகப் பார்க்க, அவனே, "உன்னை எனக்குத் தெரியலைன்னு தானே உனக்குக் கோபம்...? அதான்.. என்னைப் பத்தி நான் சொன்னேன். உன்னைப் பத்தி நீ சொல்லு இப்போ... ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்கலாம்.. பேசிப் புரிஞ்சுக்கலாம்.." என்றான்.

அவள் ஏளனமாகப் புன்னகைத்தாள்.

"இனிமே பேசி, தெரிஞ்சு, புரிஞ்சுக்கறதுக்கு எதுவுமில்ல. எல்லாம் முடிஞ்சிருச்சு. என்மேல பரிதாபப்பட்டு எல்லாம் வந்து இப்படி பேசிட்டுக்கிடக்க வேணாம்"

பட்டெனப் பேசிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றுவிட்டாள் அவள்.

அவளது துடுக்கும் திமிரும் அவனை அசரவைத்தது. தீயைத் தீண்டிட விரும்பும் விட்டில்போல, மீண்டும் மீண்டும் அவள்பின்னால் சென்றது அவன் மனது.

அறையில் பக்கவாட்டில் இருந்த சோபாவில் ஒரு தலையணையை எடுத்துப்போட்டவள், போர்வை ஒன்றையும் கட்டிலிலிருந்து எடுத்துக்கொண்டு சோபாவில் படுத்துக் கண்ணயர்ந்தாள்.

எதிரில் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து, அவளையே சிலகணங்கள் பார்த்தபடி இருந்தான் அவன்.

"மூடிட்டுத் தூங்கு...... கண்ணை."

சட்டென அவளிடமிருந்து அதட்டல் வர, மாட்டிக்கொண்ட திகைப்பில் போர்வையால் முகத்தைப் போர்த்திக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டான் திவாகர்.

அவளிடம் லேசாக எழுந்த புன்முறுவலை அவன் கவனிக்கவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro