7
வானதிக்கு முத்துப்பட்டி வந்து மீனாட்சியைப் பார்த்தவுடனே பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதிந்திருந்த நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடத்தொடங்கின. அனைத்துக்கும் சேர்த்து அவர் தோளில் முகம்புதைத்து அழுதுதீர்த்தாள் அவள்.
தனக்குத் தாலிகட்டியவனோ எதையும் கண்டுகொள்ளாமல் தன்பாட்டில் நின்றிருக்க, அவனது இருப்பை அவனது பெருமூச்சு சத்தம் மட்டும் உணர்த்த, அவன்மேல் கோபமும் வருத்தமும் மேலோங்கியது அவளுக்கு.
ஒருவார்த்தை பேசாமல் வேகமாகச் சென்று கதவடைத்துக்கொண்டவனை ஏதும் சொல்லாமல், இவளை பானுமதியுடன் மீனாட்சி அனுப்பிவைக்க, கசந்த பார்வையுடனே உள்ளே வந்தாள் அவள்.
பானுமதியின் அன்பான பேச்சும் கனிவான முகமும் ஆறுதலாக இருந்தது அவளுக்கு. தன் கண்ணீர் தன்னால் நின்றுவிட, நடப்பதையெல்லாம் சற்று நிதானமாக சிந்திக்கமுடிந்தது அவளால்.
எனக்கு மணமாகிவிட்டது. அதுவும் திவாகருடன். எந்த திவாகரை இருபது வருடங்களாகப் பார்க்காமல் தவித்திருந்தேனோ, யாரை நினைக்காமல் ஒருநாளும் கழிந்ததில்லையோ, அதே திவாகர்.
என் வாழ்வை நான் தீர்மானித்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. யார்யாரோ என் வாழ்க்கையில் முடிவெடுக்க வருகின்றனர். என்னால் எதுவும் செய்யமுடிவதில்லை.
உலகில் இப்போது என்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. அன்பும் பாசமும் காட்டக் குடும்பம் இல்லை. கட்டிய கணவனுக்கு என்னிடம் ஒட்டுறவில்லை. இந்திய வாழ்வில் பற்றுதலும் இல்லை.
விதியை நினைத்து மீண்டும் கசப்பாகப் புன்னகைத்தாள் வானதி.
பானுமதி அவளுக்குத் தேவையானவற்றை எடுத்துத் தந்தாள்; தன்னை அக்காவென்று அழைக்குமாறும் கூறினாள்.
சுதாகரின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், திவாகரின் அண்ணி என்று கூறியதைக் கேட்டு லேசாகப் புன்னகைத்தாள் வானதி.
'சுதாகரை எனக்குத் தெரியாது என்று நினைத்தாளா? என்னைத்தான் இவர்கள் யாருக்கும் தெரியாது என்று எப்போது புரியும் இவர்களுக்கு? சுதாகரை இவள் எப்போது மணந்தாள்? ஏன் சுதாகருடன் இல்லாமல் இங்கே இருக்கிறாள்? சுதாகருக்கேனும் என்னை நினைவிருக்குமா?'
குளித்து உடைமாற்றி வந்தபோது பூஜையறையில் விளக்கேற்றச் சொல்ல, மாமாவின் வார்த்தையை மீறாமலிருக்க அவற்றைச் செய்தாள் அவள்.
வீட்டில் இருக்கும்போது அம்மா ஆயிரம் முறை மன்றாடினாலும் மாலை விளக்கேற்ற வரமாட்டாள்.
"பக்தி, தெய்வநம்பிக்கை எல்லாம் ஒரு அளவுக்கு இருந்தாப் போதும்.. அளவை மீறினா அது பயங்கரவாதம் ஆகிடும்" என தத்துவம் பேசித் திட்டுவாங்குவாள்.
திட்ட மட்டுமே முடியும் தாய் வசந்தியால். கோபமாக அவளைநோக்கி ஓரடி எடுத்து வைத்தாலும், காக்கும் மதில்கள்போல அப்பாவும் அண்ணாவும் வந்துவிடுவர்.
"நம்ம வீட்டு குலவிளக்கே இவதான்... இவ தனியா வேற விளக்கேத்தணுமா? உன் சாங்கியத்தை எல்லாம் உன்னோட வச்சுக்கோ!! எம் புள்ளை கலெக்டராகப் போகறவ! நாளைக்கு சைரன் வச்சு காருல வந்து இறங்குவா... அப்ப கை ஓங்குவியான்னு பாக்கலாம்."
"ஆமா.. எம் பொண்ணை நான் அடிப்பேனா? பக்கத்துல போனாலே அய்யனும் மகனும் எதுக்கால வந்துருவீக.. உங்க சீமைகாணாத சீமாட்டியை நீங்களே சீராட்டுங்க!! நாளப்பின்ன கல்யாணமுன்னு எதையும் செஞ்சு வச்சிராதீக, அப்றம் கலெக்டரு மானம் கப்பலேறிடும்!"
"என் தங்கச்சி எனக்கு உசத்தி தான்!! என்ன, இவளைக் கட்டிக்கப்போற மகராசன நினைச்சாத்தான் பாவமா இருக்கு... இவளை சீராட்டியே அவன் சீவன் தீர்ந்துடுமே!... ஆ... ஏய்.. அடிக்காதடீ..."
கண்கள் தானாகவே கரித்தது. அதில் மீண்டும் உப்பைப் போடுவதுபோல் மீனாட்சியும் பேச, தன் மொத்த ஆற்றலையும் அழாமல் இருக்கச் செலவிடவேண்டியதாயிற்று.
சாப்பிட வந்தபோது திவாகரின் பாராமுகம் எரிச்சலூட்ட, சாப்பிடுமளவு திராணியும் இல்லாமல் இருக்க, இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள் அவள். பானுமதியின் அன்புமுகத்தால்கூட அவளை இருத்திவைக்க இயலவில்லை.
அப்போது ஜாதகம், வரவேற்பு என மீனாட்சி பேச்செடுத்தபோது, பட்டென்று "அதெல்லாம் இப்போதைக்கு வேணாம்" என நறுக்குத் தெறிக்கச் சொல்லிவிட்டு, பானுவின் அறைக்குள் வந்து அமர்ந்துகொண்டாள்.
மாமாவும் அத்தையும் வருத்தப்படுவர் என்று அவள் அறிவாள். ஆனால் அதற்காகவெல்லாம் இந்நிலையில் திருமணம், வரவேற்பு என்று ஈடுபட முடியாது அவளால். அதிலும் திவாகரே ஒட்டாமல் இருக்கும்போது இவளுக்கு என்ன?
நேற்றைய பிரயாணக் களைப்பும், நாள்முழுதும் அனுபவித்த துன்பத்தின் கனமும் அழுத்திட, தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள் அவள்.
சிறிதுநேரம் கழித்து ஏதோ ஓசைகேட்டுக் கண்களைத் திறந்தாள் வானதி. சுவரில் மாட்டியிருந்த பெரிய கடிகாரம் மாலை ஐந்தென மணிகாட்ட, கண்களைத் துடைத்தபடி எழுந்து அமர்ந்தாள். எதிரில் பானுமதியும் இன்னொரு பெண்ணும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
பள்ளிச் சீருடையில் இருந்த அந்தப்பெண், இவள் எழுந்துவிட்டதை அறிந்ததும் ஆர்வத்துடன் இவள்புறம் திரும்ப, அவளைப் பார்த்ததும் வானதியும் புன்னகையுடன் "ஹரிணி...?" என்க, அவளோ திகைப்புடன், "என்னை எப்டி.. உங்களுக்கு...?" எனத் திக்கித் திணறினாள்.
பானுமதியும் குழம்பிப்போய் நின்றாள்.
தன்னிலை விளக்கம் தரத் தயாரானாள் வானதி.
"என் பேர் வானதி. வானதி நஞ்சேசன். ஊரு வேம்பத்தூர். அப்பாவும் வேதா மாமாவும் ரொம்ப நெருங்கின ஃப்ரெண்ட்ஸ். எனக்கு அஞ்சுவயசு ஆகறவரை எல்லாரும் வேம்பத்தூர்ல தான் இருந்தாங்க. ஆனா.. சில காரணங்களால... ரெண்டு குடும்பத்துக்கும், பல வருஷமா ஓட்டுறவு இல்லை... நான் மதுரையில படிச்சிட்டு இருந்தப்போ மாமா எப்பவாச்சும் வந்து பாப்பாரு. உங்களைப்பத்தி பேசுவாரு. நான் பாத்தப்போ நீ கைக்குழந்தை. உனக்கு ஞாபகமிருக்காது.
இப்ப சென்னைல ரெண்டு வருஷமா சிவில் சர்வீஸ்க்கு கோச்சிங் எடுத்துக்கிட்டு இருக்கேன். நான் நேத்து சென்னையில இருந்து ஊருக்கு வந்தேன். நேத்து சாயந்திரம்... கார் ஆக்ஸிடெண்ட்ல எங்க அண்ணன்.. அம்மா.. அப்பா... மூணு பேரும்..."
தானாக அவளுக்குக் கண்கலங்க, அவசரமாக ஆறுதல்கூற வந்த இருவரையும் கையமர்த்தித் தடுத்துவிட்டு, அவளே தொடர்ந்தாள்.
"விஷயம் தெரிஞ்சு வேதா மாமா வந்தப்போ, ஒரு பிரச்சனை ஆக, அவசர முடிவா.. உங்கண்ணன் திவாகரை ஃபோர்ஸ் பண்ணி அவரை எனக்குத் தாலிகட்ட வைச்சுட்டாரு மாமா... எனக்கு வேற போக்கிடம் கிடையாதுன்னு முடிவுபண்ணி என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க."
ஹரிணி அதற்கு பதில்சொல்வதற்குள், வெளியே பெரியவர்கள் அவளை அழைக்கும் குரல் கேட்க, மூவரும் எழுந்து வெளியே கூடத்துக்குச் சென்றனர். அவள் வேண்டாமென மறுத்தும் ஜோசியர் ஒருவரை அழைத்திருந்தார் மீனாட்சி.
"வானி, சடங்கு சம்பிரதாயம் நிறைய இருக்கும்மா... மூணாம் நாளு, எட்டாம் நாளு, பத்து , பதினாறு, கருப்புன்னு ஆயிரத்தெட்டு இருக்கு. உன்னை இந்த நேரத்துல கஷ்டப்படுத்தறது தப்புதான். இருந்தாலும்.. முறைன்னு ஒண்ணு இருக்கில்ல.."
வேதா மாமாவை சுற்றுமுற்றும் தேடினாள் அவள். அவர் எங்கும் காணாதிருக்க, "நான் பாத்துக்கறேன்.. என்ன செய்யணுமோ சொல்லுங்க" என்றுமட்டும் ஒப்புகை தந்தாள் அவள். இம்மாதிரி சடங்குகளில் அவள் தந்தைக்கு நம்பிக்கை இல்லை. மரணமென்பது வாழ்வின் மற்றுமொரு கட்டமே என்பார் அவர். அதைத் துக்கமாக நினைக்காமல், மனித உடலிலிருந்து கிடைத்த விடுதலையாகப் பார்க்கவேண்டும் என்பார். அதையெல்லாம் இப்போது வாதிடப் பிடிக்கவில்லை அவளுக்கு.
அவள் சுரத்தின்றி நிற்க, வேதாசலம் வந்தார்.
"வானி, நீ திவா ரூமுக்கே போயிக்கம்மா.. திவா சரின்னுட்டான்"
அவள் கேள்வியாக திவாவைப் பார்க்க, அவனோ எங்கோ பார்த்தபடி நின்றான்.
மறுப்புச் சொல்லவில்லை அவளும். பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவனது அறையைத் தேடி வந்தாள்.
விசாலமாக, நவீனமாக, இருவர் தாராளமாகத் தங்குவதற்கு ஏற்றமாதிரி இருந்தது அவனது அறை. அறையைச் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள் அவள். அவனோ அவளையே பார்த்தபடி நின்றான்.
திவாகருக்குத் தன்னறையை அவளுடன் பகிர விருப்பமில்லாவிட்டாலும், தந்தையின் பேச்சுக்கு மறுப்புச்சொல்ல முடியாத ஒரே காரணத்தால் தலையாட்டி சம்மதித்திருந்தான் அவன். நிர்மலமான முகத்துடன் அறையோரம் நிற்பவளைக் கூர்ந்து பார்த்தான் அவன்.
அறையைக் கண்களால் அளப்பதுபோல் அவள் பார்த்துக்கொண்டே நிற்க, இவன் உதட்டை சுழித்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.
வானதி பொறுமையாக அவள் கொண்டுவந்த உடைகளையும், உடமைகளையும் அங்கங்கே அடுக்கத்தொடங்கினாள்.
இவன் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வருபவன் என்பதால், கிட்டத்தட்ட விருந்தினர் அறைபோலத்தான் இருந்தது. அவனுடைய பொருட்கள் பெரிதாக எதுவும் இல்லை.
அரைமணி நேரத்தில் வேலைகள் முடிந்துவிட, அவன் இன்னும் பால்கனியில் என்ன செய்கிறானென எட்டிப்பார்த்தாள் அவள். தலையைக் கைகளில் பிடித்துக்கொண்டு, பால்கனி கம்பிமீது சாய்ந்து கண்ணை மூடியிருந்தான் அவன்.
ஏதேனும் பேசலாமா என யோசித்த மனதை அதட்டிவிட்டு, மீண்டும் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தாள் அவள். ஆனால் அவள் வந்துசென்றதை உணர்ந்தவன்போல அவனும் சிலநொடிகளில் அறைக்குள் வந்தான்.
"ம்ம்... எக்ஸ்க்யூஸ்மீ... நான் யாருன்னு, உன-- உங்களுக்கு முன்னாலவே எதாவது தெரியுமா?"
அவனது கேள்விக்கு, சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் ஆயாசமாகப் பார்த்தாள் அவள்.
'நிஜமா என்னை உனக்கு ஞாபகமில்லயா? '
ஆனால் மறுகணமே கோபமானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro