48
*****************
கிட்டதட்ட ஒரு மாதம் கழிந்திருந்தது.
சுதாகரும் பானுவும் நாளை ஊருக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. வானதி வழக்கம்போல் அமைதியாக மீனாட்சிக்கு உதவியாக சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். பானுவும் ஹரிணியும் சண்டை சச்சரவுகளுக்கு நடுவே அவளது உடமைகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தனர்.
"நாளைக்கு காலைல ப்ளைட்டு... இப்பப் போயி இப்படி சண்டை கட்டிக்கறீங்க??" எனப் பொறுமையின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான் சுதாகர்.
"நான் இல்லைங்க.. இவதான்.." என்றாள் பானு, குரலெழுப்பாமல்.
"ஆமா.. அங்கயும் போயி அண்ணி சேலைதான் கட்டுவேன்னு அடம்புடிக்கறாங்க.. வேற ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்தே வைக்க மாட்டேங்கறாங்க!! புதுசா அவங்களுக்காக வாங்கின குர்த்தி எல்லாம் வேஸ்ட்டா அப்ப? அதான் கேட்டேன்.." என்றாள் ஹரிணி அங்கலாய்ப்பாக. சுதாகர் நம்பமாட்டாமல் தலையை அசைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தான்.
அனைவரும் உற்சாகத்தில், பரபரப்பில் இருக்க, வானதி அமைதியாக சமையலறையில் இருப்பதை சோகமாகப் பார்த்தான் திவாகர். ஒரு மாதமாகவே அவள் அப்படியேதான் இருந்தாள். உத்வேகங்கள் எல்லாம் தீர்ந்துபோய் சாந்தமாக, அமைதியாக. மையமாகச் சிரிப்பாள். இரண்டொரு வார்த்தைகள் பேசுவாள். அறைக்கு வந்தால், படுத்ததும் உறங்கிவிடுவாள். பார்வைப் பறிமாற்றங்கள் கூடக் குறைந்திருந்தன. அன்று அவன் அத்தனை முக்கியமான விஷயத்தை அவளிடம் பேசியபோதுகூட, சின்னத் தலையசைப்பு மட்டுமே. அவனுக்கே சந்தேகமாக இருந்தது, அது வானதிக்கு சம்மதம்தானா என்று. ஆனால், அவள் மனதை அறிந்தவனால், அவளது தேவைகளையும் உணரமுடிந்தது. தான் எடுத்த முடிவுதான் சரியானதெனத் தோன்றியது.
"வானதியம்மாவுக்கு லெட்டர் வந்துருக்குங்க ஐயா..."
வேலைக்காரப் பொன்னையா வந்து ஒரு கடிதத்தை நீட்ட, யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகர் தன்னிலை திரும்பி அதை வாங்கிக்கொண்டு தலையசைத்தான். உறையில் இட்டிருந்த முத்திரையைப் பார்த்ததுமே முகம் ஒருகணம் பிரகாசமானது அவனுக்கு. சட்டெனச் சென்று அறைக்குள் அதை மறைத்துவிட்டு வந்தான் அவன்.
வானதி அதையெதையும் கவனிக்காமல் அடுக்களையில் மும்முரமாக இருந்தாள். இரவு உணவிற்குப் பிறகு தங்கள் அறைக்கு அவள் வந்தபோது, "வானதி, உனக்கு ஒண்ணு தரணும்.." என இழுத்தான் அவன்.
அவள் கேள்வியாக நிமிர, "முடிவு எதுவா இருந்தாலும், ஒண்ணுமட்டும் நிச்சயம். நான் எப்பவும் உனக்குத் துணையா இருப்பேன். அப்பறம், நான் எடுத்த முடிவும் இதுனால மாறாது. வெற்றியோ தோல்வியோ, எதுவா இருந்தாலும்." என்றான் அவன், தீவிரமான குரலில்.
"என்ன சொல்ற திவா? என்னது? எனக்கு ஒண்ணும் புரியலையே..?"
தலையணைக்கு அடியிலிருந்து அக்கடிதத்தை எடுத்துத் தந்தான் அவன்.
"UPSC?? எப்ப வந்தது இது? ஏன் இப்ப தர்ற?"
கோபத்துக்கும் பதற்றத்துக்கும் மத்தியில் அவள் தொனிக்க, அவன் மென்மையாக அவள் கையைப் பிடித்துக்கொண்டு, "ரிசல்ட் உனக்கு சந்தோஷமா இருந்தா, குடும்பத்துக் கூடவும் ஷேர் பண்ணிக்க. ஒருவேளை அவங்க முன்னாடி இதைப் பிரிச்சு, அதுல உனக்கு வருத்தம் இருந்ததுன்னா, கஷ்டமாயிடும்ல?" என்றான் அவன்.
அவனது அக்கறை புரிந்து புன்னகைத்தாள் வானதியும்.
"பிரிக்கட்டுமா?"
"ஓ.."
கைகூப்பி ஒருகணம் வேண்டிக்கொண்டு, உறையைப் பிரித்துக் கடிதத்தை விரித்தாள் அவள். சட்டென அவள் முகம் இறுகியது. கண்கள் அக்கடிதத்தின் வார்த்தைகளிலேயே நிலைக்குத்தி நின்றன. திவாகர் பதற்றமானான்.
"வானி... என்ன எழுதியிருக்கு அதுல??"
விரித்த விழிகளோடு அக்கடிதத்தை அவனிடம் நீட்டினாள் அவள். அவனும் வேகமாக அதை வாங்கிப் படித்தான்.
"வானதி நஞ்சேசன் அவர்களுக்கு,
தாங்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுக்குத் தேவையான பயிற்சிகள் அனைத்தும் முசோரி லால்பகதூர் சாஸ்திரி பவனில் பதினான்கு மாதங்களுக்கு நடைபெறும். இன்னபிற விவரங்கள் அனைத்தும் அடுத்த கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படும்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
இந்திய ஆட்சிப் பணி."
"திவா!!! நான் செலெக்ட் ஆகிட்டேன்!! நான் ஐஏஎஸ் ஆபிசர் ஆகப்போறேன்!!!"
இத்தனைநாள் காணாதிருந்த மொத்தப் புன்னகையையும் முகத்தில் கொண்டு கத்தினாள் அவள்.
"மத்தாப்பூ!!!"
கட்டியணைத்துக் கத்தியும் பத்தாமல், அவளைத் தூக்கிக்கொண்டு தட்டாமலை சுற்றினான் அவன். அவளும் உற்சாகமிகுதியால் ஆனந்தக் கண்ணீருடன் சிரித்தாள்.
நான்கைந்து சுற்றுக்கள் சுற்றிவிட்டு, மெல்ல அவளை இறக்கிவிட, இருவரின் முகமும் ஒன்றோடொன்று உரசுமளவு நெருங்கின. நான்கு கண்களும் சந்தித்த அந்த கணம், சுற்றிலும் இருந்த அனைத்துமே ஒருநொடி நின்றுவிட, இரண்டு இதயங்களுமே இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்த தாபத்தில் துடிதுடிக்க, யார் முதலில் தொடங்கியதெனத் தெரியாத வேகத்தில் உதடுகள் நான்கும் தங்களுக்குள் காதலைப் பகிரத் தொடங்கியிருந்தன.
நீண்டநேரம் நடந்த அந்த முத்த யுத்தத்தில் களைத்து இருவருக்குமே மூச்சிரைக்க, ஒருவரையொருவர் பற்றிப்பிடித்துக்கொண்டு பலமாக மூச்சுவாங்கினர். திவாகர் சிரிப்போடு, "ட்ரெய்னிங்ல கத்துக்காத நிறைய விஷயத்தை இன்னிக்குக் கத்துத்தர்றேன் வா.." என்றபடி அவளை இழுத்து அணைத்து மெத்தையில் கிடத்தி, அவளருகில் அமர்ந்தான்.
வானதியும் குறையாத குறும்புச் சிரிப்போடு அவன் கன்னத்தைப் பற்றி முத்தமிட்டாள். அத்தோடு நில்லாமல் அவன் இடுப்பிலும் தன் வளைக்கரத்தை வளைத்துப் பிடித்துக் கிள்ளிவைத்தாள்.
"ஓஹோ... கத்துக்குடுக்கற அளவுக்கு நிறையத் தெரியுமோ.."
"ம்ம், இன்னும் நூறு வருஷமானாலும் என்னை மறந்துட முடியாதபடி உன்னை மாத்துற அளவுக்குத் தெரியும்..!"
"அப்டிங்களா பாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை??"
"ஆமாங்க கலெக்டர் மேடம்!!"
அவள் சிரிப்போடு தலைசாய்க்க, அவன் காதல் கவிதைகள் கிறுக்கத் தொடங்கினான் அவள் காதுமடலில். வானதியின் கை அனிச்சையாகச் சென்று விளக்கை அணைக்க, இருளின் இனிமையில் புதுப்புது இலக்கணங்கள் படிக்கத் தொடங்கியிருந்தனர் இருவருமே.
______________________________________
மதுரை விமான நிலையத்தில் சுதாகர்-பானுமதியை வழியனுப்ப வந்திருந்தனர் அனைவரும். வானதியின் ஆட்சிப் பணிக் கனவு நனவானதைக் காலையில் அனைவரிடமும் சொல்லியிருந்தான் திவாகர். குடும்பத்தினர் யாவருமே தங்கள் வாழ்த்துக்களை அவளுக்கு மனதாரச் சொல்லியிருந்தனர். அந்த மகிழ்வு ஒருபுறம் இருந்தாலும், தன் உடன்பிறவா சகோதரியாகவே இருந்து தனக்குத் தோள்தந்த பானுமதியைப் பிரிவது வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு.
ஒருபக்கம் வானதி பானுவுக்குக் கண்ணீருடன் விடைகொடுக்க, மற்றொரு பக்கம் மீனாட்சி சுதாகரை அணைத்துக்கொண்டு விசும்பினார். வேதாசலம் அவரை அதட்டினாலும், அவருக்கும் சற்றே ஏக்கமாக இருந்தது. அறிவுரைகள் ஆயிரங்கள் சொன்னார்கள் இருவரும்.
"ம்மா.. கண்டிப்பா ஆறு மாசத்துல ஒருதடவையாச்சும் வந்துருவோம் நாங்க.. நீங்க அழறதுக்கு அவசியமே இல்ல. சின்னவனும் ஹரிணியும் இனி எப்பவும் உங்ககூடத்தானே இருக்கப்போறாங்க..."
அம்மாவை ஆறுதல்படுத்துவதற்காகச் சொல்லிவிட்டு, 'ஸ்ஸ்' எனத் தலையில் கை வைத்தான் அவன்.
"திவாவே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தான்.. நான் உளறிட்டேனா?..."
வேதாசலமும் மீனாட்சியும் வினாவாக திவாகரைத் திரும்பிப்பார்க்க, அவன் தெளிவான முகத்துடன் தலையசைத்தான்.
"ஆமாம்மா, ஆமாம்பா. நான் மதுரை அக்ரி காலேஜ்ல எம்எஸ்சி சேர்ந்துருக்கேன்.. பயோ-அக்ரிகல்ச்சர் ரிசர்ச். வானதி ரெண்டு வருசம் கழிச்சு ட்ரெயினிங் முடிச்சிட்டு வரும்போது, நானும் என் படிப்பை முடிச்சிருப்பேன். விக்கி விட்டுட்டுப்போன ஆராய்ச்சியை நான் தொடரப் போறேன். மாமாவோட விவசாய சங்கத்தையும் நான் எடுத்து நடத்தறேன். இனி எனக்கு ப்யூச்சர் வயல்கள்ல தான்."
வானதி பெருமிதத்துடன் வந்து அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு தோளில் சாய்ந்துகொண்டாள்.
"நான் முசோரி போயிட்டு வந்தபிறகு, நாங்க வேம்பத்தூர் வீட்டுக்கே குடிபோகலாம்னு இருக்கோம் மாமா. எனக்கு வேலை எங்க கிடைச்சாலும், வீடுன்னு அதுமட்டுமே இருக்கணும்னு ஆசைப்படறேன்."
வேதாசலம் முகம் யோசனையாகக் கசங்க, அவர்கள் என்ன சொல்வார்களோ எனப் பயத்துடன் பார்த்தனர் இருவரும்.
மீனாட்சி அவருக்கு முன்னர், "என்னம்மா.. அப்போ முத்துப்பட்டி உன் வீடில்லையா?" என ஆதங்கமாகக் கேட்டார். வானதி பதில்கூறுமுன் வேதாசலம் இடையிட்டார்.
"இல்லை, முத்துப்பட்டி பாதியில வந்தது மீனாட்சி. நாமகூட நம்ம வாழ்க்கையைத் தொடங்குனதே வேம்பத்தூர்லதான். புள்ளையும் அதே ஊரைத்தான் வீடா நினைக்கறா.. நம்ம குடும்பத்துக்கும் அதுதான் வீடு. அம்மா வானி, நீ சொல்றதுதான் சரி. நாம எல்லாருமே வேம்பத்தூருக்கே போயிக்கலாம்."
திவாகரும் வானதியும் சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ஹரிணியும் உற்சாகமாய் வானதியைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தாள். விமானத்துக்கு அழைப்பு வரவும் பானுவும் சுதாகரும் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர். அவர்களுக்கு மனநிறைவோடு கையசைத்துவிட்டு, வேம்பத்தூர் வாழ்க்கையை எதிர்நோக்கியவாறே வீட்டுக்குக் கிளம்பினர் வானதி குடும்பத்தார்.
***
**
*
முற்றும்.
_____________________
வானதி மற்றும் திவாகரின் 'மர்மமான', ஆனால் அழகான காதல் பயணத்தில் இணைந்து வந்த அனைவருக்கும் நன்றி.
Thanks to everyone, who made this possible. At last, I too have written a mystery book!! *phew*!!
Love,
MADHU_DR_COOL.
Fb, Twitter,Instagram as Madhu_dr_cool
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro