47
வாசலில் மீண்டும் ஏதோ அரவம் கேட்க, திவாகர் எழுந்து வெளியே வந்தான்.
ஆய்வாளர் அழகேசன் நின்றிருந்தார். லேசாக மூச்சிரைத்தது அவருக்கு.
"சார்?? என்னாச்சு?"
"அந்த ஆதிகேசவன்... அவன் இங்க வர்றதா எனக்கு இன்ஃபர்மேஷன் வந்தது. அதான் திரும்பிவந்தேன். உங்களுக்கு ஒண்ணும் இல்லயே?"
காரேஜ் அருகில் அமர்ந்து விசும்பிக்கொண்டிருந்த வானதி திடுக்கிட்டு எழுந்து வந்தாள்.
"ஆதிகேசவனா? இங்கயா??"
அவள் வினவியபோதே நான்கைந்து பெரிய கருநிற ஸ்கார்ப்பியோ கார்கள் அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, அவர்களது வீட்டின்முன் நின்றது. ஒன்றிலிருந்து மலையப்பன் இறங்கினான். அழகேசனை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் திகைத்து நிற்க, மற்றொரு காரிலிருந்து, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் இறங்கினார்.
வாசலில் நின்றிருந்த மூவரையும் அளவெடுக்கும் பார்வை பார்த்துவிட்டு, மலையப்பனுக்குக் கண்ணைக் காட்ட, அந்த ஆள்தான் ஆதிகேசவன் எனப் புரிந்தது திவாகருக்கு.
நரித்தனமான சிரிப்போடு கைகூப்பியபடி, "வணக்கம்.. சிம்மக்கல் ஆதிகேசவன்னு என்னை சொல்வாங்க.. என்கூட ஏதோ பிணக்கு உங்களுக்கு இருக்குன்னு கேள்விப்பட்டு வந்தேன்... உள்ள போயி பேசலாமா?" என வந்தான் அவன்.
திவாகர் அரண்போல் அவன்முன் நின்று, "பேசலாம். இங்கயே." என்றான்.
பிற கார்களிலிருந்து அடியாட்கள் பத்துப் பதினைந்து பேர் இறங்க, அழகேசன் தனது பெல்ட்டோடு வைத்திருந்த துப்பாக்கியைக் கைக்குக் கொண்டுவந்து சாவதானமாக அசைத்தார்.
ஆதிகேசவன் ஒருநொடி முறைத்தாலும், மறுபடி முகத்தை மாற்றிச் சிரித்துக்கொண்டு, "இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு அநியாயத்துக்கு கோவம் வரும்போல.. அவிக எல்லாரும் நம்ம சொந்தக்கார பயலுவ சார்.. அதுக்கு ஏன் துப்பாக்கிய தூக்கறீக?" என்றான்.
ஆயினும் துப்பாக்கியை இறக்காமல் விரைப்பாகவே நின்றார் அழகேசன். ஆதிகேசவன் தலையை அசைத்துவிட்டு வானதியின் பக்கம் திரும்பினான்.
"என்னம்மா பொண்ணு.. என்ன நடந்துச்சு, ஏதோ ஆக்ஸிடெண்ட்ல உங்க அய்யனும் அம்மாளும் செத்துட்டாக.. அதுக்காக, கருமாதி முடிஞ்ச பெறகும் பொணத்தை தூக்கிட்டு சுத்தற மாதிரி, இப்படி ஸ்டேசனு, கேசுன்னு சுத்துனா எப்படி?"
திவாகர் கைகளை முறுக்க, வானதியோ சலனமின்றி நின்றாள். ஆனால் ஒரு அருவருப்பான பார்வை கண்ணில் தெரிந்தது. மனிதனாக அல்லாமல் ஒரு புழுவைப்போல அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
பதிலில்லாததால் அவனே தொடர்ந்தான்.
"சரி.. நடந்தது நடந்துபோச்சு.. எதுக்கு விசனப்பட்டுக்கிட்டு.. ஊரை மாத்திட்டு நடையக்கட்ட வேண்டிதுதான? முத்துப்பட்டியில வாக்கப்பட்டதாக பயலுவ சொன்னானுக? மறுபடி வேம்பத்தூருக்கு என்னத்துக்கு வார? சரி தாயி, முடிச்சிக்கிடுவோம். அம்மாவும் அப்பாவும் போயிட்டாக, கஷ்டந்தான். ஆளுக்கு பத்து லட்சம் சரியா இருக்குமல்ல... டேய்!!"
அடியாள் ஒருவன் ப்ளாஸ்டிக் பை ஒன்றை அவனிடம் தர, அதை வானதியிடம் நீட்டினான் ஆதிகேசவன். வெள்ளைநிறப் பையில், உள்ளே கட்டுக்கட்டாக இருந்தன காந்தி நோட்டுக்கள்.
"இந்தாம்மா.. வாங்கிக்க. எல்லாத்தையும் விட்டுரு. அப்படியே.. பத்திரத்தையும் எடுத்துக்குடுத்துடு."
அந்தப் பையை அவன் கையிலிருந்து ஆக்ரோஷமாகத் தட்டிவிட்டாள் வானதி. அதிலிருந்த நோட்டுக் கட்டுகள் கீழே சிதற, அடியாட்கள் "ஏய்!!" எனக் கூச்சலிட, அழகேசனும் பதிலுக்கு "டேய்!!" என உறும, ஆதிகேசவன் தன் வலது கையை உயர்த்தவும் அனைத்தும் அடங்கின. வானதியும் திவாகரும் மட்டும் இன்னும் குறையாத கோபத்துடன் முறைத்தனர் அவனை.
"நயமா சொல்லியும் கேக்கல.. அப்பறம் நான் என்ன பண்றது? இன்னொரு லாரியை விட்டு உங்களையும் உங்க அப்பனும் அம்மாளும் இருக்கற எடுத்துக்கே அனுப்ப எவ்வளவு நேரமாகும்?"
இப்போது திவாகர் அவன்முன் வந்தான்.
"டேய்--"
அதற்கே அடியாட்கள் கத்த, அழகேசன் வானத்தை நோக்கி ஒருமுறை சுடவும் சத்தம் அடங்கியது.
"ஒரு குடும்பத்தை அழிச்சிட்டு, அதை காசு குடுத்து மறைக்கற உன்னைப் போல ஈனப்பிறவிகிட்ட எல்லாம் பேசறதே அசிங்கம். நான் இருக்கற வரை, உன்னால அவ தலைமுடியை கூட தொட முடியாது. ஆனதப் பாத்துக்க."
"தம்பிக்கு உயிர்மேல ஆசையில்ல போல.. அவளக் காப்பாத்த நினைச்சா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை."
"நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேணா இருந்துக்க, ஆனா எங்க குடும்பத்து உசுருகளுக்கு, நீ பதில் சொல்லாமத் தப்பிக்க முடியாது. உன்னை அத்தனை லேசுல விட்டுற மாட்டோம் நாங்க!"
"அப்பறம் உன் இஷ்டம்."
அடியாட்கள் காருக்குள் ஏற, மலையப்பன் திவாகரை முறைத்தான். அவனோ, மலையப்பன் பார்த்துக்கொண்டிருந்தபோதே, வானதியைத் தோளோடு அணைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.
ஆதிகேசவன் அழகேசனை நேருக்குநேர் அழுத்தமாகப் பார்த்தான். அழகேசனும் பின்வாங்காமல் நின்றார்.
அபாயகரமான பார்வையோடு, அடர்ந்த வார்த்தைகள் பேசினான் ஆதிகேசவன்.
"உனக்கு சாவு நெருங்கிடுச்சு."
அழகேசனோ தனது காக்கி உடுப்பின் பாக்கெட்டுக்குள் கைவிட்டுக்கொண்டு மிடுக்காக நின்றார்.
"கோர்ட்ல சந்திக்கலாம் சார்."
__________________________________
"வேம்பத்தூர் விவசாயி நஞ்சேசன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த வசந்தி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் மரணத்துக்கு முழுக் காரணமும் சிம்மக்கல் ஆதிகேசவன் தான் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்ததால், குற்றவாளி ஆதிகேசவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மலையப்பனுக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறையும் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடாகத் தர, பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், வேம்பத்தூரில் மீதமுள்ள விவசாய நிலங்களில், மறு உழவு செய்யும் செலவுகளை, தமிழக வேளாண் கழகமே ஏற்றுக்கொள்கிறது. சிறந்த முறையில் இவ்வழக்கை விசாரித்த ஆய்வாளர் அழகேசனை, இந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பாராட்டுகிறது."
காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்குச் செல்லும் ஆதிகேசவனையும் மலையப்பனையும் தலைநிமிர்ந்து ஒரு திமிரான முறைப்போடு ஏறிட்டாள் வானதி. கண்களில் ரௌத்திரமும், துவேஷமும் அளவுக்கதிகமாய் இருந்தன. கண்ணீர்த்திரையால் அந்த அக்கினி ஜுவாலையை மறைக்க முடியவில்லை. அழகேசன் கம்பீரமாக நீதிபதிக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, வானதியைப் பார்த்துத் தலையசைத்தார். வானதியும் கண்ணீர்மல்கத் தலையசைத்தாள்.
இரு தூண்கள்போல் வேதாசலமும் திவாகரும் அவளருகில் நின்றிருந்தனர். இந்த இரண்டு வாரங்களில் வந்த எத்தனையோ அபாயங்களை, இவர்கள் தான் தடுத்து வானதியைக் காத்திருந்தனர். வேதாசலம் மட்டும் இல்லையென்றால், இவ்வழக்கு இத்தனை விரைவில் முடிந்திருக்காது. நன்றியாக இருவரையும் பார்த்தாள் அவள்.
அவளது தோளைத் தொட்டு ஆறுதலைப் பகிர்ந்தான் திவாகர். வேதாசலமும், "எல்லாம் முடிஞ்சதும்மா. என் நண்பனுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைச்சிருச்சு. நியாயம் ஜெயிச்சாச்சு, உன் கஷ்டத்துக்கு பலன் கிடைச்சாச்சு. இனி நடந்ததை மறந்துட்டு உன் வாழ்க்கையை முன்னோக்கி வாழத் தொடங்கணும்மா நீ. வா, போலாம்" என ஆறுதல் கூறி அழைத்துச் சென்றார்.
ஏதோ விரக்தியான பார்வையோடே தலையசைத்துவிட்டு, அவர்களுடன் நடந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து, காரில் ஏறி, வீட்டிற்கும் வந்துவிட்டாள் அவள். இருந்தும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மீனாட்சி வாசலிலேயே நின்று மூவரையும் தலைமுழுகச் செய்து திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச்சென்றார்.
பானு அவளது களையிழந்த முகத்தைக் கண்டு கரிசனமாக அருகில் வந்தாள்.
"என்ன வானி? எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுதானே? ஏன் உம்முனு இருக்க?"
ஒன்றுமில்லை எனத் தலையசைத்துவிட்டு அவள் செல்ல முற்பட, தோளைப் பிடித்துத் தடுத்தாள் பானு.
"என்னால சரியா புரிஞ்சுக்க முடியல, ஆனா நீ என்ன நினைக்கறனு ஓரளவு தெரியுது. இந்த கேஸ் முடிஞ்சதால உங்க குடும்பத்தை நீ மறக்கணும்னு அர்த்தம் இல்ல வானி. இனி அவங்க உன் நினைவுகள்ல, ஒரு சந்தோஷமான பகுதியா இருப்பாங்க. உன்னோட கடமையை நீ செஞ்சு முடிச்சாச்சு. இனி செய்யவேண்டியது எதுவுமில்ல, எந்தக் குற்றவுணர்வும் இல்லாம அவங்களோட நினைவுகளை நீ மனசுல தேக்கிக்கலாம். நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கலாம்."
திவாகரும்கூட சொல்லாத இந்த ஆறுதலான, மெய்யான புரிதல், வானதியின் முகத்திலும் மனத்திலும் ஒரு தெளிவை வெளிச்சமடிக்க, ஒரு புன்னகை மலர்ந்தது இதழ்களில்.
"ரொம்ப நன்றி அக்கா... எனக்கு இதுதான் தேவைப்பட்டது. எனக்குப் புரியுது... ரொம்ப தேங்க்ஸ்... நிஜமா.. இதைப் புரிஞ்சுக்காமத் தான் நான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. இப்ப தெளிவா இருக்கு."
அவளை ஆதுரமாக அணைத்துக்கொண்டு தட்டிக்கொடுத்தாள் அவள்.
"மனசை இனி குழப்பிக்காம, நிம்மதியா இரு, போ"
வானதி தங்கள் அறைக்கு வந்தபோது, திவாகர் அவளை அன்பாகப் பார்த்தபடி புன்னகைத்தான்.
"Wow.. This has been a long day... a long term of mystery and search. எல்லாமே சட்டுனு ஓய்ஞ்சு போனமாதிரி இருக்கு. இவ்ளோ நிம்மதியா இருந்ததே இல்லைன்ற மாதிரி இருக்கு பாரேன்.."
"ம்ம்" என்றுமட்டும் கூறிவிட்டு, தன் பொருட்களை அலமாரியில் அடுக்கத் தொடங்கினாள் அவள்.
சிறிதுநேரம் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அவன்.
"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே..."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro