46
வானதி-திவாகரின் வரவேற்புக்கு இருவருமே எதிர்பாராத விருந்தாளியாக வந்திருந்தாள் ரூபா. பெரிதாக பேச்சுக்களின்றி, ஒரு சின்ன பெட்டியை மட்டும் பரிசாகத் தந்துவிட்டு அவள் சென்றுவிட, எதுவும் புரியாமல் நின்றனர் அவளும் அவனும்.
"என்னதிது?? பென்டிரைவ்?"
ஹரிணி ஏமாற்றமான குரலில் கேட்க, வானதியும் திவாகரும் ஒருவரையொருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர்.
"இதை ஏன் நம்மளோட பெஸ்ட் கிப்ட்னு சொன்னா அவ?"
"அதை அப்பறம் பாத்துக்கலாம். இப்ப கிளம்பலாம்."
திவாகரின் சட்டைப்பையில் அந்த பென்டிரைவைப் போட்டுவிட்டு, இருவரும் பைக்கில் வேம்பத்தூர் கிளம்பினர். செல்லும் வழியிலேயே அழகேசனுக்கு அழைத்து, விக்கியின் கைபேசியில் இன்னும் திறக்கப்படாத கோப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா என விசாரிக்க, இல்லையென்றே பதில் வந்தது. எனவே வீட்டில் இருக்கும் கணினியில் தான் ஏதோ இருக்கவேண்டும் என்று முடிவாகியிருந்தாள் வானதி.
வந்ததும் வராததுமாய்க் கதவைத் திறந்துகொண்டு அவசரமாய் உள்ளே சென்று, கணினியின் ஸ்விட்சை சொடுக்கி, அதை உயிர்ப்பித்தாள். திரையில் கடவுச்சொல் கேட்ட இடத்தில் தாங்கள் கண்டறிந்த வாக்கியத்தை தட்டச்சு செய்தாள். கீய்ங் என்ற ஒலியுடன் திறந்துகொண்டது கணினி. வெற்றிச் சிரிப்போடு திவாகரைப் பார்த்தாள் வானதி.
அதிகம் தேடவிடாமல், முகப்புப் பக்கத்திலேயே, "வேம்பத்தூர் நிலங்கள்" எனப் பெயரிடப்பட்டு சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்ட தரவொன்று தென்பட்டது.
வேகமாக அதைத் திறந்தவள், அதிலிருந்த விவரங்களைக் கண்டு அதிர்ந்து உறைந்தாள். அவள்பின்னால் நின்றிருந்த திவாகரும் அதையெல்லாம் பார்த்து ஸ்தம்பித்தான்.
"வானி.. க்விக்!! இதையெல்லாம் உடனே இன்ஸ்பெக்டர் கிட்ட கொண்டுபோகணும்.. எல்லாத்தையும் எதுலயாச்சும் காபி பண்ணு. இந்த கேஸ் சால்வ் ஆகிடுச்சு!!"
எதில் தரவிறக்குவது எனத் தெரியாமல் அவள் அங்குமிங்கும் தேட, சட்டைப்பையில் இருந்த பென்டிரைவை நினைவுகூர்ந்து அதை எடுத்து நீட்டினான் அவன்.
அதை வாங்கி அவள் கணினியில் சொருகியதும், தன்பாட்டில் அதன் கோப்புகள் திறந்தன. அவசரமாக அதை மூட முயன்றாள் அவள். ஆனால் சட்டென அவன் அவளது கையைத் தடுத்தான்.
"இதை ஒருநிமிஷம் பாரு.."
ரூபா எதனால் அந்த பென்டிரைவை அவர்களது சிறந்த பரிசென்று கூறினாள் என்பது இப்போது விளங்கியது அவளுக்கு.
அவள் கேட்டதைத் தான் கொடுத்திருந்தாள் ரூபா. சிவகங்கையில் தனது கிளையை விரிக்க விரும்பும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தப் படிவங்களும், அதில் ஒப்பமிட்டிருந்த தமிழக அதிகாரிகளும்.
திவாகர் ஒருகணமும் விரயம் செய்யாமல், அழகேசனுக்கு அழைத்து, "சார், நீங்க உடனே வேம்பத்தூர் வந்தா நல்லது." என்று தகவல் அனுப்பினான். வானதி சற்றுமுன் தாங்கள் கண்டெடுத்த உண்மைகளையெல்லாம் நம்பமுடியாமல் அதிர்ந்துபோயிருந்தாள்.
அவள் ஏதும் செய்வதற்குள், "வானி!! திவா!!" என சத்தமிட்டவாறே வீட்டுக்குள் வந்தனர் சுதாகரும் பானுவும். வானதி திகைப்போடே நிமிர்ந்து பார்க்க, "உன்னைத் தேடி சித்ரான்னு ஒரு பொண்ணு வந்தா வீட்டுக்கு. அவ குடுத்துட்டுப் போன பேப்பர்ல, என்னவோ, இந்த வருஷம் வேம்பத்தூர் விவசாயிகளுக்கு விதையும் உரமும் அக்ரி ஆபிஸ்ல இருந்துதான் போயிருக்குன்னு சொல்லியிருக்கு.. அத்தோட, அந்த விதைகளை, வேளாண் ஆராய்ச்சி மையத்தில இருந்து வாங்கினதாவும் இருக்கே.." என்றவாறு விரைந்துவந்து அந்தத் தாளைக் காட்டினான் சுதாகர்.
திவாகரும் அதற்குள் வந்து, சித்ரா தந்திருந்த தகவலை முழுதாகப் படித்தான்.
"இல்லை, ஆய்வு மையத்தோட வெற்றியடைஞ்ச பயிரை வாங்கல, அந்த விஞ்ஞானியே நிராகரிச்ச பயிரை வாங்கி, அக்ரி ஆபிஸ் மூலமாவே வேம்பத்தூருக்கு வினியோகம் செஞ்சிருக்காங்க!"
மூவரும் அதிர்ச்சியாகப் பார்க்க, திவாகர் தீர்க்கமாகத் தலையாட்டினான்.
"ஆமா, இது திட்டமிடப்பட்ட, பன்முகத் தாக்குதல்."
வானதி அழவும் சக்தியற்று அதிர்வில் உறைந்திருக்க, பானு நடந்ததையெல்லாம் கேட்டறிந்து நடுங்கினாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே, ஆய்வாளர் அழகேசனின் ஜீப் சத்தம் வாசலில் கேட்டது.
____________________________________________
" We solved it. இப்ப எல்லாமே தெளிவாப் புரியுது... மதுரை முன்னாள் அமைச்சரும், ஒரு கிராமத்து விவசாயியும் எப்படித் தொடர்பு படறாங்கனு இப்பப் புரியுது.
வேம்பத்தூர் நிலங்கள் மொத்தமா 60 ஏக்கர். அதுல ஒன்றரை ஏக்கர் மட்டும்தான் உங்களுது. மத்ததெல்லாம் ஊரோட மத்த விவசாயிகளோடது. ஆனா எப்பவுமே சங்கம் மூலமா 60 ஏக்கரோட நடவும் அறுவடையும் ஒண்ணாத்தான் நடக்கும். இப்படி ஒத்துமையா இருந்தா, இந்த 60 ஏக்கர் நிலத்தை அபகரிச்சு, அதுல இந்த வெளிநாட்டு ஃபேக்டரிய கட்ட முடியாது. முதல்ல ஒருதடவை விலைக்குக் கேட்டுப் பார்த்து, நிலம் கிடைக்காததால, சங்கத்தைக் கலைச்சு, அதுமூலமா தனித்தனியா நிலத்தை வளைச்சுப்போட முடிவெடுத்திருக்காங்க ஆதிகேசவனும் அவனோட ஆளுங்களும்."
அழகேசன் தீர்க்கமான குரலில் கூற, சுதாகர் தலையசைத்துத் தொடர்ந்தான்.
"அதனால, அந்த வருஷத்தோட சாகுபடிக்கு, நிராகரிக்கப்பட்ட குறையுள்ள விதைகளை குறைஞ்ச விலைக்கு விவசாயிகளுக்கு வினியோகிச்சு, அதுமூலமா மண்ணை விளைச்சலுக்குத் தகுதியற்ற தரிசா மாத்தியிருக்காங்க. விக்கி மட்டும் தன்னோட ஆராய்ச்சியில கிடைச்ச விதைகளை அவங்க நிலத்துல போட்டதால, அந்த அறுவடையில அவிங்க நிலம் தப்பிச்சிடுச்சு. மத்தவங்க எல்லாம் நஷ்டப்பட்டாங்க. விக்கிக்கு சந்தேகம் வந்து, மண்ணையும், முன்ன விதைச்ச விதைகளையும் டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சான். நஞ்சேசன் மாமா தன்னோட விவசாயிகள் சங்கம் மூலமா நிலத்தைக் காப்பாத்த முயற்சி பண்ணியிருக்காரு.. "
திவாகர் தான் பார்த்துக்கொண்டிருந்த தரவுகளிலிருந்து நிமிர்ந்து ஆமோதிப்பாக கண்ணைக் காட்டினான். கோப்புகளை மற்றவர்களுக்குக் காட்டியபடி அவன் பேசத்தொடங்கினான்.
"மனீஷ் மல்ஹோத்ராவோட ஆபிஸ்ல இருந்து வந்த ஃபைல்கள்படி, ஒரு வடநாட்டு கம்பெனிக்கு இந்த இடத்தை வளைச்சுப்போட்டு அதுமூலமா வர்ற கமிஷனை கட்சி நிதியா சேர்த்திக்க முயற்சி நடந்திருக்கு. இது ஸ்ட்ராங்கான ஆதாரம். மோட்டிவ் தெளிவா இருக்கு.
மத்த விவசாயிகளோட நிலங்களை பல பினாமிகள் பெயர்ல ஆதிகேசவன் தான் வாங்கியிருக்கான். அதுல ஒருத்தனான மலையப்பனை ஈஸியாப் பிடிச்சுரலாம். அவனோட சாட்சியே போதும், காலத்துக்கும் அவனை களி திங்கவைக்கறதுக்கு!"
விக்கியின் கணினியின்முன் அமர்ந்திருந்த வானி கண்ணீர்மல்க இறுதி ஆதாரத்தை விளக்கினாள்.
"அண்ணோட கம்ப்யூட்டர் பர்சனல் ஃபோல்டர்ல அவன் கண்டுபுடிச்ச எல்லா விபரத்தையும் வச்சிருக்கான். விதைய வித்த டீலர்ல இருந்து, அப்பாவை மிரட்டுன அடியாள் வரைக்கும் அத்தனை ரெகார்ட்டும் இருக்கு. ஆதிகேசவனோட ப்ளானைத் தெரிஞ்சிக்கிட்டதால அண்ணனையும், நிலத்தை விட்டுக்குடுக்காததால அப்பாவையும் கொலைபண்ண நினைச்சிருக்கான் அவன். அதனால.. அந்த ஆக்சிடெண்ட். அதுல அம்மாவும்..."
நிற்காமல் கண்ணீர் கன்னமெல்லாம் வழிய, பானுவும் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்.
"அழாத வானி.. உன் கண்ணீருக்கெல்லாம் பதில் கிடைச்சாச்சு. எத்தனை பெரிய பாவத்தை செஞ்சுட்டு, இன்னும் தைரியமா வெளிய நடமாடிட்டு இருக்கான் அந்த சண்டாளன்! அவனுக்கு ஒரு கொடூரமான சாவு வரணும்! வரும்! நீ அழாதம்மா!"
"எமோஷனல் ஆகாதீங்க மேடம். நாங்க இதை இங்கிருந்து டீல் பண்ணிக்கறோம்.. இவ்வளவு எவிடன்ஸ் இருக்கும்போது, நிச்சயமா அவன் தப்பிக்க முடியாது! உங்க குடும்பத்துக்கு நியாயம் கிடைச்சிடும் நிச்சயமா."
அழகேசன் ஆறுதலாகச் சொல்லிவிட்டு, ஆதாரங்களைத் திரட்டி பென்டிரைவில் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
சுதாகர் பானுவை அழைத்துக்கொண்டு, அவர்களுக்குத் தனிமைதந்து வெளியேற, திவாகரின் தோளில் சாய்ந்தபடி எங்கோ வெறித்துப் பார்த்தாள் அவள்.
"கேவலம் நிலத்துக்காக... ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டானுக... எப்படி மனசுவருது திவா? எப்படி?"
அழுகையில் கரகரத்தது குரல்.
"ஷ்ஷ்... it's alright. எல்லாமே முடியப்போகுது. கொலைகாரனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கும். நடந்ததை எல்லாம் மறந்துட்டு, நம்ம வாழ்க்கையைத் தொடரணும் இனிமே.. எதையும் யோசிக்காத வானி. உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைன்னா, எப்பவேணா சொல்லு.. வேற எங்கயாச்சும் போயிடலாம். என்ன?"
அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
"நான் எங்கயும் வரமாட்டேன்! இங்கதான் இருப்பேன்! எங்கப்பா, அம்மா இருந்த ஊரவிட்டு எங்கயும் போகமாட்டேன்!! நான் போகமாட்டேன்!!"
அவள் சட்டென அவ்வாறு கத்தத் தொடங்கிடவும் திவாகர் சற்றே திகைத்தான்.
"சரி, சரி, எங்கயும் போகவேணாம்.. இங்கயே இருக்கலாம். ரிலாக்ஸ்.. take it easy..."
அமைதிப்படுத்துவதற்காக அவளது தலையைத் தடவ முயன்றபோது, அதைத் தட்டிவிட்டுவிட்டு எழுந்து வெளியேறினாள் அவள். திவாகர் செய்வதறியாது வேடிக்கை பார்த்து நின்றான்.
அவனுக்குப் புரிந்தது, இத்துணை நாட்கள் செய்த முயற்சிகள் யாவும் அவளுக்குத் தன் குடும்பத்தை கணந்தோறும் நினைவுபடுத்தும் ஒரு செயல்தான். தன் குடும்பத்தோடு ஒரு பிணைப்பு, ஒரு தொடர்பு, என ஏதோ ஒன்று இவ்வழக்கின்மூலம் அவளுக்குக் கிடைத்திருந்தது. இப்போது வழக்கும் தீர்ந்தது, பந்தமும் மறைகிறது. அவளுக்கு அதை ஏற்றுக்கொள்ள எத்தனை கடினமாக இருக்குமெனப் புரிந்தது.
மீண்டும் வாசலில் ஏதோ அரவம் கேட்டது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro