Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

44

தரையில் கிடந்தவன் சற்றே கஷ்டப்பட்டு முனகலுடன் எழுந்தமர்ந்தான்.

"இல்ல சார்.. என்னை எங்கயும் வரசொல்லல அவனுக. பத்திரத்தை வாங்கிட்டு, அதை நானே என் பேருக்கு மாத்தி எழுதிக்க சொன்னானுக. ஏன்னு கேட்டதுக்கு, தேவைப்படும்போது வாங்கிக்கறேன்னு சொன்னாங்க." என்றான்.

அழகேசன் தலையசைத்துவிட்டு திவாகரைப் பார்க்க, திவாகரும் புரிந்து சம்மதித்தான்.

"திவாகர், நீங்க ஒண்ணும் குழப்பிக்காதீங்க. இதை நான் ஸ்மூத்தா டீல் பண்ணறேன். மலையப்பனை எப்படி சிக்க வைக்கணும்னு தெரியும் எனக்கு. இப்ப நீங்க வானதியை போயி பாருங்க. எனக்குத் தெரிஞ்சு, நீங்க பயப்படவேண்டியது அவங்களை நினைச்சுதான்!"

அவன் தலையசைத்துவிட்டு பதற்றச் சிரிப்புடன் வெளியேற, அழகேசன் அடியாட்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றத் தொடங்கினார்.

______________________________________

"திவா!! உனக்கு ஒண்ணும் ஆகலையே?? என்ன நடந்துச்சு? எல்லாம் ஓகே தான?"

பயங்கரமாய்த் திட்டுவாள் என்று எதிர்பார்த்துத் தயங்கித் தயங்கி வீட்டுக்குள் நுழைந்தவன், அவளது பதற்றத்தைக் கண்டு அதிசயித்தான். சரிதான், பயத்தைக் கரிசனம் புறந்தள்ளி விட்டதென நினைத்துக்கொண்டு, அவளைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்தினான்.

"ஆளுங்களை மலையப்பன் தான் அனுப்பிருக்கான். ஸோ, இவனுகள வச்சு அவனைத்தான் பிடிக்க முடியும், ஆதிகேசவனை இல்ல. அதுக்கு இன்ஸ்பெக்டர் சார் வேற ஏதோ ப்ளான் போடறேன்னு சொன்னாரு. ஆனா, நாம அதுக்குள்ள, ஆதிகேசவனுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஒரு ஸ்ட்ராங்கான லிங்க்கை கண்டுபிடிச்சு வெளிப்படுத்தணும். நிலத்துக்காகத் தான் இந்தக் கொலைகள்னா, அப்படி அந்த நிலம் அவனுக்கு எதுக்காகத் தேவைப்படுது? பினாமி பேரில வேம்பத்தூர் நிலங்களை சேர்க்கறது எதுக்காக?"

"கண்டுபிடிக்கலாம். அந்த அக்ரி வாத்தியார் குடுத்தாரே ஒரு பொண்ணோட ஃபோன் நம்பர்.. அந்தப் பொண்ணு இன்னிக்கு ஊர்ல இருந்து வந்துடுச்சு. காலேஜ்ல இருக்கா. இப்ப போனா அவகிட்ட பேசலாம்."

தாமதிக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு இருவரும் மதுரை வேளாண் கல்லூரிக்குச் சென்றனர். வானதி அம்மாணவிக்கு அழைத்தபோது, கல்லூரியை அடுத்துள்ள விவசாய ஆராய்ச்சி மையத்தின் அருகில் வரச்சொல்ல, இருவரும் அதைநோக்கி நடந்தனர்.

வாசலிலேயே அவர்களுக்காகக் காத்திருந்தாள் அப்பெண்.

"ஃபோன்ல பேசுனது..?"
வானதி தயக்கமாக வினவ, அப்பெண் தலையசைத்தாள்.

"நான்தான். என் பேர் சித்ரா. நீங்க வானதி தானே? விக்கியோட தங்கச்சி?"

"ஆமா.. என்னை உங்களுக்கு... எப்படி?"

திவாகரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஆராய்ச்சி மையத்துக்குள் நடந்தாள்.

"விக்கி எனக்கு சீனியர். ஆனா, எங்களோட சேர்ந்து அக்ரி ரிசர்ச் நிறைய பண்ணுவார், இங்கதான். அப்ப உங்களைப்பத்தி, உங்க குடும்பத்த பத்தி நிறையப் பேசுவார். அவர் திடீர்னு இறந்துபோயிட்டார்னு கேட்டபோது, எங்களால நம்பவே முடியல. I'm so sorry for your loss."

விழியோரம் துளிர்த்த ஈரத்தை நாசூக்காகத் துடைத்துக்கொண்டு வானதி தலையசைத்தாள். தன் கைபேசியிலிருந்த கோப்புகளைக் காட்டி, "விக்கி கடைசியா செஞ்ச ஆராய்ச்சி நிலக்கடலை பத்திதான். இந்த ரிப்போர்ட் எதைப்பத்தினு கொஞ்சம் பார்க்கமுடியுமா?" என்றாள்.

சித்ராவும் அதை வாங்கி இரண்டு நிமிடம் படித்துவிட்டு, "இது ஒரு GMO பயிர், அதாவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலை. ஆனா, கன்ட்ரோல்ட் எக்ஸ்பெரிமண்ட் மாதிரித் தெரியலை. இதை நாங்க tandem mutationனு சொல்வோம். அது என்னன்னா, பயிரைத் தன்னிச்சையா அதோட மரபணுவை மாத்திக்க செய்யறது. ஒரு வரைமுறையே இல்லாம, இயற்கையோட விளையாடறது. ரொம்பவே ஆபத்தானது. இந்த விதைகள் மண்ணை மலடாக்கிடும், ஒருவேளை பயிரிட்டு, அறுவடை செய்யப்பட்டா, அதை உட்கொண்ட மனுசங்களுக்கு புற்றுநோய் கூட வரும்." என்றிட, திவாகரும் வானதியும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

அவர்களது அதிர்ச்சியைப் பார்த்த சித்ரா அவசரமாகத் தொடர்ந்தாள்.

"பயப்படாதீங்க, இதை விக்கி செய்யல. விக்கி செஞ்ச ஆராய்ச்சியோட ரிப்போர்ட் எல்லாம் இங்க லைப்ரரில இருக்கு. இந்தப் பயிர் விக்கியோடதே கிடையாது. இந்த சாம்பிள் அவருக்கு எப்படி கிடைச்சதுன்னு கண்டுபிடிச்சா, இதுக்கு பின்னால யார் இருக்கறாங்கனு தெரிஞ்சுடும்."

"சரி, source என்னனு எப்படி கண்டுபிடிக்கறது? விக்கி அதை ரிப்போர்ட்ல குடுக்கலையே?"

"எங்க archives எல்லாம் தேடுனா, இந்த மாதிரி பயிரை யார் ஆராய்ச்சி பண்ணதுன்னு கண்டுபுடிக்கலாம். ஆனா, கொஞ்சம் லேட்டாகும்.. நான் முடிஞ்சவரை தேடிப்பாக்கறேன். கிடைச்சதுன்னா கண்டிப்பா சொல்றேன்."

வானதியும் திவாகரும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினர். இருவருக்குமே மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தாலும், விக்கி எந்தத் தவறும் செய்யவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. மாலை ஆறு மணியளவில் முத்துப்பட்டிக்குத் திரும்பியபோது, காம்ப்பவுண்ட்டைச் சுற்றிலும்கூட சீரியல் விளக்குகள் மின்னி மின்னி எரிந்தன. பந்தல்கள், ஸ்பீக்கர்கள் என முற்றிலும் வரவேற்புக்குத் தயாராகியிருந்தது வீடு. வினோதமாக அதைப் பார்த்துக்கொண்டே வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் வர, வாசலில் மீனாட்சி நின்று இருவரையும் முறைத்தார்.

"நாளைக்கு வரவேற்பு. அதைப்பத்தி அக்கறையில்லாம எங்க போயிட்டு கருக்கல்தாண்டி வீட்டுக்கு வர்றீங்க ரெண்டுபேரும்?"

"அ.. அத்தை.. அது கொஞ்சம்.. முக்கியமான வேலை.."

அவள் பேசுவதற்குள் திவாகர் இடையிட்டு, "அவ சர்ட்டிபிகேட் எடுக்கத்தான் போனா.. நான்தான், கண்மாய் பாக்கணும்னு கேட்டு, அவளை கூட்டிட்டுப் போனேம்மா.. அதான் வர லேட்டாயிடுச்சு." என்றான்.

"ஆளைப்பாரு, எதுக்குடா இந்த நேரத்துல கண்மாயைப் பாக்கணும்? இருட்டு நேரத்துல அங்க தடந்தெரியாம எங்கயாச்சும் விழுந்திருந்தா என்னாகியிருக்கும்? நீ சுத்தறது பத்தாதுன்னு எதுக்கு அவளைவேற இழுக்கற?"

அவனைத் திட்டிக்கொண்டே மீனாட்சி செல்ல, வானதி அவனை நன்றியாகப் பார்த்துவிட்டு உடன்நடந்தாள்.

உள்ளே பூத்தோரணங்களை பானு தூண்களில் கட்டிக்கொண்டிருக்க, அதற்குப் பூச்சரங்களைக் கத்தரித்துத் தந்தவாறே அவளைக் கண்ணால் காதலித்துக் கொண்டிருந்தான் சுதாகர். திவாகர் அதைக்கண்டு நமட்டுச் சிரிப்போடு வானதியைப் பார்க்க, அவளுக்குமே சிரிப்பு வந்தது. வீட்டினரால் பார்த்து நடத்தப்பட்ட திருமணத்தில் கூட, மனதுவைத்தால் ஒரு காதல் துளிர்விடுமென இருவருக்குமே தோன்றியது.

அவர்களைத் தாண்டிக் கூடத்துக்குள் சென்றபோது, சோபாவில் அமர்ந்து திவாகரின் ஐபாடில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஹரிணி. அதைப் பார்த்ததுதான் தாமதம், "ஏய்!! என்னோட ஐபாடை எதுக்கு எடுத்த??!!" என சத்தமிட்டவாறு ஓடிச்சென்று அவளிடமிருந்து அதைப் பிடுங்க முயன்றான் திவாகர்.

வானதி கோபமாக வந்து, "ப்ச்.. பாட்டு தானே கேட்கறா.. என்னத்துக்கு இப்படி கத்துற?" என அதட்ட, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் வம்படியாக ஹரிணியிடமிருந்து தனது பாட்டுப்பெட்டியைப் பிடுங்கினான்.

"பாருங்க அண்ணி.. பாட்டுகூட கேக்க விடமாட்டேங்கறான்.. இவன்கூட நீங்க சேராதீங்க!!" எனச் சிணுங்கியவளை தோளோடு அணைத்து சமாதானம் செய்தாள் அவள்.

"விடு ஹரிணி.. அது செரியான சிடுமூஞ்சி!! நாம வேற வாங்கிட்டா போச்சு.."

"ம்ம், போயி வேற வாங்கிக்க தாராளமா. என்னோடதை எடுக்காத. நான் பர்சனலா ஒரு லிஸ்ட்டா பாட்டு வச்சிருப்பேன்.. அதையெல்லாம் நீ கலைச்சிடுவ."

திவாகர் பின்னணியில் பேச, ஹரிணி உதட்டைச் சுழித்து பழிப்புக் காட்டினாள் அவனுக்கு.

சட்டென ஏதோ பொறிதட்டியதாய் வானதி நிமிர்ந்தாள்.

"லிஸ்ட்டு.. ப்ளேலிஸ்ட்னா சொன்ன??"

"ம்ம், ஆமா. ஏன்..?"

வேகமாக அறைக்குள் சென்று தனது கைபேசியில் இருந்ந 'விக்கி' என்ற ப்ளேலிஸ்ட்டைத் திறந்தாள் அவள். திவாகர் என்னவாயிற்றோ எனக் குழம்பியவாறே பின்தொடர்ந்து வந்தான்.

"என்னாச்சு??"

"இது, அண்ணன் கடைசியா எனக்கு அனுப்புன ப்ளேலிஸ்ட். அவனோட சாங் கலெக்சனை, அடிக்கடி அனுப்புவான் எனக்கு. நான் கேட்கறது அபூர்வம்தான். எனக்குத் தெலுங்குப் பாட்டெல்லாம் அவ்வளவா புடிச்சதில்ல. அவனுக்குத் தான் உயிர். எனக்கு என்னவோ... கொஞ்ச நாளாவே, இந்த ப்ளேலிஸ்ட்ல என்னவோ இருக்குமோன்னு தோணிட்டே இருக்கு.."

"வாட்?? இதுலயா?"

திவாகரும் அவளது கைபேசியை எட்டிப்பார்த்தான். ஏகப்பட்ட தெலுங்குப் பாடல்களைத் தவிர, வேறெதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவன் சலிப்பாக நிமிர்ந்து, "நீ ரொம்ப டெஸ்பரேட்டா இருக்க வானி. எதாவது ஒரு பிடிப்பு கிடைக்காதான்னு, பாக்கற எல்லாத்துலயும் எதையோ தேடற நீ.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. ரெஸ்ட் எடு. நாளைக்கு நிக்க நேரமில்லாத அளவுக்கு வேலை இருக்கும்.. தூங்க ட்ரை பண்ணு" எனப் பேசிப் பார்த்தான்.

அவளோ, ப்ளேலிஸ்ட்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்து, "என் மொபைல்ல, ஆட்டோமேட்டிக்கா எல்லாப் பாட்டும் alphabeticalலா அரேஞ்ச் ஆகியிருக்கு. அண்ணன் செட் பண்ணின ஆர்டரை எப்படி எடுக்கறது? ஒருவேளை custom orderனு குடுத்தா விக்கி அடுக்கினமாதிரி வருமா?" எனத் தனக்குத்தானே சற்றே சத்தமாகப் பேசிக்கொண்டாள்.

திவாகர் மீண்டும் உச்சுக்கொட்ட, அதைப் பொருட்படுத்தாமல், வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு, 'custom order'ஐ அழுத்தினாள் அவள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro