41
"என்ன சொல்றீங்க??"
"சார்.. இது ஒரு நிலக்கடலை விதையோட நேச்சரல் காம்போசிஷன் இல்லையே.. ஒருவேளை ஒட்டுரக விதைகளையே தவறுதலா குடுத்துட்டாரா? இல்லையே.. அப்பவும், இது enhanced varietyஆ இருக்கமுடியாது... இங்க பாருங்க.. நிலக்கடலையில, பொட்டாசியம் சத்துதான் எப்பவும் அதிகமா இருக்கும். பொட்டாசியம் இருக்கற மண்ணுல அது நல்லா வளரும். இந்த விதைகள்ல, செலிரியமும், பாஸ்பரஸும்தான் அதிக அளவில இருக்கு. இந்தமாதிரி விதைகள் உடம்புக்கு மட்டுமில்லாம, அது விதைக்கப்படற மண்ணுக்கும் தீங்கு. மண் மலடாகறதுக்குக்கூட வாய்ப்பு இருக்கு. இதை க்ரீன் கில்லர்னு சொல்வாங்க. இதுல ஏதோ தப்பு இருக்கு."
அழகேசன் குழப்பமாக வானதியைப் பார்க்க, அவளும் புரியாமல் தலையசைத்தாள்.
"நான் கம்ப்யூட்டர் சயின்ஸ். அண்ணன்தான் அக்ரி. எனக்கு இதைப்பத்தி நுணுக்கமா எதுவும் தெரியாது. மேலோட்டமா அண்ணனும் அப்பாவும் பேசிக்கறதை வச்சு மட்டும்தான் எனக்கு இதையெல்லாம் தெரியும்."
திவாகர் உறுதியாக அதில் ஏதோ தவறு இருப்பதாகச் சொன்னான். சந்தேகம் இருப்பதால், இதுபற்றித் தெரிந்த யாரிடமேனும் கேட்கலாமென முடிவெடுத்து, மூவரும் கிளம்பி அரசு வேளாண் கல்லூரிக்கு விரைந்தனர்.
கல்லூரி விடுமுறை என்பதால், ஒரு பேராசிரியர் மட்டும் அங்கே இருந்தார். இவர்களின் கோப்புகளைப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினார்.
"நான் அக்ரி படிச்சு முப்பது வருஷமாகுது. நாளுக்குநாள் இதுல புதுப்புது முன்னேற்றங்கள் வந்துட்டு இருக்கறதால, எல்லாத்தையும் அப்டேட் பண்ணிக்க முடியாது எங்களால. எங்க ஸ்டூடண்ட்ஸ் நிறையப் பேரு 'seed enhancement' ஆராய்ச்சிகள் பண்ணிட்டு இருக்காங்க. நான் ஒரு பொண்ணோட நம்பர் தர்றேன்.. அவகிட்ட இதைக் கேளுங்க."
அவர் தந்த எண்ணை வாங்கிக்கொண்டு, நன்றி கூறிவிட்டுக் கிளம்பினர் மூவரும். அந்த எண்ணிற்கு அழைத்தபோது, வெளியூரில் இருப்பதாகவும் இரண்டு நாட்களில் திரும்பி வந்தபின்னர் சந்திக்கலாமென்றும் பதில் கிடைத்தது. மனதில் பல குழப்பங்களோடு வீடு திரும்பினர் வானதியும் திவாகரும்.
அவர்களுக்கு முன்னரே சுதாகரும் பானுவும் வந்துவிட்டிருக்க, "எதாவது கிடைச்சதா?" எனக் கேட்டபடி அவனிடம் சென்றாள் வானதி.
"ம்ஹூம்.. நீ சொன்னது மாதிரித்தான். சுத்திலும் பொட்டல்காடு. ஒரு க்ளூவும் இல்ல. என்ன ஒண்ணு, வெளியே போனதுக்கு வகைவகையா ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட முடிஞ்சுது. சே! என்ன டேஸ்ட் தெரியுமா?! ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்காது இந்த டேஸ்ட்டு!"
அவன் சிலாகிக்க, வானதி சோர்வாக முகத்தைத் தொங்கப்போட, அவன் பதற்றமானான்.
"ஹேய்.. ஐம் சாரி.. கண்டிப்பா எதாவது கிடைக்கும்னு தான் நினைச்சேன்.."
"சேச்சே.. அதெல்லாம் பரவாயில்லை. அட்லீஸ்ட் நீங்க என்ஜாய் பண்ணீங்க இல்ல.. அதுவே சந்தோஷம் தான்."
பானுவின் முகத்தை நிறைத்திருந்த மகிழ்ச்சியைப் பார்த்தபோது, சோகம் காணாமற்போனது அவளுக்கு. லேசான சிரிப்புடன் நகர்ந்தாள்.
அறைக்குள் வந்தபோது, திவாகர் கையில் ஃபைல்களை வைத்துக்கொண்டு தனது மடிக்கணினியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். அவனது தோளைத் தொட்டபடி அவனருகில் வந்து நின்றாள் அவள்.
"This is ridiculous. இந்தமாதிரி ஒரு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள பயிர் நிச்சயமா முளைவிட்டு, வளர்ந்து, ஒரே செடியா வரவே முடியாது. இது உங்க அண்ணன் கண்டுபிடிச்ச விதையா இருந்தா, அது அந்த வருஷம் விளைஞ்சு லாபம் குடுத்ததுன்ற கதையெல்லாம் பொய்யா? இல்ல, இந்தமாதிரி பயிர்களைத் தான் நாம எல்லாரும் சாப்டுட்டு இருக்கோமா?"
அவன் தலையைப் பிடித்துக்கொள்ள, வானதியும் வேதனையாக முகத்தைக் கசக்கினாள்.
"I feel frustrated. இதுவரை நாம கண்டுபிடிச்ச எதுவுமே, ஒண்ணோட ஒண்ணு பொருந்தவே மாட்டேங்குது.. இது ஏதோ.. ஒரு பெரிய பஸில் மாதிரி.. துண்டுதுண்டா இருக்கு.. ஒரு முக்கியமான துண்டு மட்டும் எங்கேயோ தொலைஞ்சிட்ட மாதிரி இருக்கு! அந்த உதவாக்கரைத்தன்மை.. கையாலாகாத்தனம்.. அப்படியே எரிச்சலா இருக்கு! சே!"
கையைக் காற்றில் வீசி அவன் கிட்டத்தட்ட கத்த, அவசரமாக அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டு சமாதானம் செய்தாள் அவள்.
"ஷ்ஷ்.. நாம கண்டிப்பா ஏதோ பெருசா கண்டுபிடிக்கப் போறோம். எனக்கு உள்மனசு சொல்லுது. Just.. wait till all the pieces arrive."
அவளுக்கே அதில் சற்றே சந்தேகம் இருந்தாலும், திவாகர் அமைதியானான்.
"எனக்கு லஞ்ச் வேணாம்.. நான் இன்னும் கொஞ்சம் இதைப்பத்திப் படிக்கணும்."
அவளுக்குமே சாப்பிடத் தோன்றவில்லை. அசதியில் அப்படியே தூங்கிப்போனாள். மூன்றுமணியளவில் விழித்தபோது, இன்னும் மடிக்கணினியில் எதையோ தட்டிக்கொண்டுதான் இருந்தான் திவாகர்.
"திவா.. எத்தனை நேரம்தான் இப்படியே உட்கார்ந்துட்டு இருப்ப? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.. எங்கயாச்சும் வெளிய போலாமா?"
"ம்ஹூம்.. மூட் இல்ல."
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
சுதாகர்தான் வந்திருந்தான்.
"எப்படித்தான் வீட்டுக்குள்ளயே உட்கார்ந்திருக்கீங்களோ.. வெளியே எங்கயாச்சும் போயிட்டு வரலாமா? பானு வரமாட்டேன்னுட்டா. நீங்க வந்தாலாச்சும் கம்பெனி இருக்கும்."
"அக்காவுக்கு என்னாச்சு? ஏன் வரலை?"
"தலைவலியாம்.. படுத்துட்டிருக்கா."
"சரி, திவாவை எங்கயாச்சும் கூட்டிட்டு போ. நான் அக்கா கூட இருக்கேன்."
திவாகர் அவளுக்குப் பின்னால் நின்று 'வேண்டாம்' என்பதுபோல் தலையசைக்க, சுதாகர் புரியாததுபோல் கண்களைச் சுருக்க, வானதி சட்டென்று திரும்பிவிட்டாள்.
அவள் முறைக்க, திவாகர் அசட்டுச்சிரிப்பு சிரித்தான்.
"இதோ.. ஒரே நிமிஷம்.. ரெடியாகிட்டு வர்றேன்."
பைக் சாவியை சுழற்றியபடி அவன் செல்ல சுதாகரும் அவன்பின்னால் நடக்க, இருவரும் போவதை ஒரு சிரிப்புடன் பார்த்துவிட்டு பானுவிடம் சென்றாள் வானதி.
________________________________
மாலை மங்கத் தொடங்கியும் இன்னும் பைக் சத்தத்தைக் காணவில்லை. இருளும் சூழத்தொடங்கியது. வெகுநேரமாகியும் இன்னும் இருவரும் வீடு திரும்பாமலிருக்க, வானதி கவலைதோய்ந்த முகத்துடன் திண்ணையில் அமர்ந்து காத்திருந்தாள். பானுமதியும் அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றாள்.
அவள் சாப்பிடாமல் காத்திருப்பதைக் கண்ட வேதாசலம், "நீ வந்து சாப்பிடும்மா.. அவனுக வந்துடுவானுக. பைக் ஓட்டுற ஜோருல, நேரத்தையெல்லாம் மறந்திருப்பானுக. நம்ம ஊரைப் பத்தி ஒண்ணுமே தெரியாம வளர்ந்தவனை, இப்பத் தனியா ஊர்சுத்தற அளவுக்கு மாத்திட்டியேம்மா.. இப்பப் பாரு, உன்னை விட்டுட்டு, அவங்க அண்ணன்கூட சேர்ந்து ஊர்சுத்திட்டு இருக்கான். நீ அவனுக்காக காத்துக்கிடக்கற!" என்றிட, கவலையை மறைத்துப் புன்னகைத்தாள் அவள்.
"எங்க போயிட்டாங்க.. ஊருக்குள்ள தான? வந்துடட்டும் மாமா. சேர்ந்து சாப்பிடலாம்"
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அவர்கள் வாசலில் வந்துநிற்க, இருவரும் அதிர்ச்சியுடன் ஏறிட்டனர். முன்சீட்டிலிருந்து சுதாகர் இறங்கவும் அவனுக்கு ஏதேனும் காயம்பட்டிருக்கிறதா எனக் கண்ணாலேயே ஆராய்ந்தாள் வானதி. சிராய்ப்புக் காயங்களைத் தவிர பெரிதாக எதுவுமில்லை.
இறங்கியவன், பின்கதவைத் திறந்து வீல்சேரில் திவாகரை இறக்கிக் கொண்டுவர, அவனைப் பார்த்த மறுகணத்திலேயே, "ஐயோ திவா..!!" என அலறினாள் வானதி. அவளைப் பார்த்ததும் எழமுயன்றவன், வலியில் முகம்சுழிக்க, வானதியின் கண்ணில் அதிர்ச்சியும் வலியும் பெருகின. வாய்விட்டு அழுதபடி அவனிடம் சென்று மண்டியிட்டாள்.
வேதாசலமும் மகனை அந்த நிலையில் கண்டதும் நெஞ்சு பதைத்து நின்றார். ஆனால் வானதியின் அழுகையையும் அவலக் குரலையும் எதிர்பாராதவர் திகைத்தார். எப்போதும் சாந்தசொரூபியான, அதிகம் அலட்டிக்கொள்ளாத வானதியை இப்போது திவாகரின் முன்னால் அழுது குலையும் வானதியோடு ஒப்பிட முடியவில்லை அவரால்.
திவாகர் எதையோ கூறவர, அவன்முன்னால் மண்டியிட்டு அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் அவள். அவளது சத்தத்தில் ஓடிவந்த பெண்களும், திவாகரைப் பார்த்ததும் அதிர்ந்து அழத்தொடங்கினர். மீனாட்சி தூணைப் பிடித்துக்கொண்டு சரிய, பானுமதி சுதாகரிடம் ஓடிச்சென்று, அவனுக்கு ஏதேனும் காயம்பட்டிருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தாள். அவளுக்கும் அழுகை வந்தது.
"எப்படிங்க இதெல்லாம் ஆச்சு?"
"அ.. அது.. நாங்க பைக்ல போயிட்டு இருந்தோமா.. அப்ப--"
"அப்ப பேலன்ஸ் தவறிக் கீழ விழுந்துட்டோம்."
திவாகர் பட்டென இடையிட்டுக் கூறிட, வானதி நம்பமுடியாமல் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். சுதாகர் தலையைக் குனிந்துகொண்டான். திவாகரே தொடர்ந்து, "விழுந்த இடத்துல ஷார்ப்பா ஏதோ கல்லு இருந்தது.. அதான் காயம்.." என்றான்.
"பாத்து ஓட்ட மாட்டியா..? இன்னும் மூணு நாள்ல வரவேற்பை வச்சுக்கிட்டு.. ப்ச்.." என வேதாசலம் கவலையோடு அலுத்துக்கொண்டார்.
அவர்கள் எடுத்துச்சென்ற பைக்கை வேனிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, வேன் கிளம்பியது. திவாகரைக் கைத்தாங்கலாக வேதாசலமும் சுதாகரும் உள்ளே கூட்டிச் செல்ல, மற்றவர்களும் உள்ளே செல்ல, வானதி காரேஜுக்குச் சென்று பைக்கை ஆராய்ந்தாள்.
கீழே விழுத்து விபத்து ஆனதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை அதில். இன்டிக்கேட்டர் மட்டும் லேசாக வளைந்திருந்தது. மற்றபடி கீறல்கள் கூட இல்லை வண்டியில்.
'எதற்காக என்னிடம் பொய் சொல்ல வேண்டும்? எதை மறைக்கிறார்கள் இருவரும்??'
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro