Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

32

"மத்தாப்பூ.." என்ற அவனது அழைப்பு வானதியின் இதயத்தை ஒருகணம் நின்று துடிக்கச் செய்தது.

திவாகரின் கைகளை சட்டென விலக்கிவிட்டு அவன் முகத்துக்கு நேரே மண்டியிட்டு அமர்ந்தாள் அவள். அவன் கண்ணில் இத்தனை ஆண்டுகளாகச் சேர்த்த ஏக்கமும் கலக்கமும் போட்டிபோட, அவளும் ஏதோ புரிந்து கண்ணீர்மல்க அவன் முகத்தைக் கைகளில் ஏந்திக்கொண்டாள்.

அவன் வாய்விட்டு அழுதான்.

"என் மத்தாப்பூ... உன்னப்போய் மறந்துபோயிட்டேனேடி... என் உசுரே நீதானடி..."

தேற்றுவாரின்றி இரண்டு மனங்களுமே கண்ணீரில் கரையத் தொடங்கின...

வேம்பத்தூரில் இருந்தவரை, வானதியையும் திவாகரையும் தனித்துப் பார்க்க எவராலுமே முடியாது. வானதி எங்கிருக்கிறாளோ, அங்குதான் இருப்பான் திவாகர். சுதாகரைவிட, திவாகர் மீதுதான் வானதிக்கும் வசந்திக்குமே பிரியம் அதிகம். 'அத்தை, அத்தை' என்று அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிலேயே வானதியுடனே பழியாய் கிடப்பான் அவனும்.

இவனுக்கு ஐந்துவயது ஆனபோது பள்ளியில் சேர்க்கையில், வானதி இல்லாமல் எங்கும் போகமாட்டேன் என்று அழுதுபுரண்டு அடம்பிடிக்க, சரியென ஓராண்டு தள்ளிப்போட்டு, ஆறுவயது ஆனபோதே இருவரையும் ஒன்றாகப் பள்ளிக்கு அனுப்பினர். அந்த அளவிற்கு வானதி என்றால் உயிர். இருவரும் சேர்ந்து நடக்காத வரப்பில்லை, ஏறாத குன்றுகளில்லை, போகாத கண்மாய்கள் இல்லை, ஆடாத ராட்டினங்கள் இல்லை. சுருக்கமாக, வானதி இல்லையென்றால் திவாகர் இல்லை.

ஆனால் அதற்கெல்லாம் இடியாக, திடீரென ஒருநாள் பள்ளி விட்டு வந்தபோது அவசர அவசரமாய் யாரிடமும் கூறிக்கொள்ளாமல் இவர்களது குடும்பம் ஊரைவிட்டுக் கிளம்ப, உடைந்தது அவர்களின் உறவு மட்டுமின்றி, திவாகரின் குழந்தை நெஞ்சமும்தான்.

சிவகங்கைக்கு வந்தபோதிலிருந்தே வானதியைக் கேட்டு நிறுத்தாமல் அழத்தொடங்க, காய்ச்சலாகி, மருத்துவரிடம் காட்டி, தூக்க மாத்திரைகள் தந்து தூங்கவைத்தனர் அவனை. எதுவும் பேசுவதற்கோ கேட்பதற்கோ இயலாமல் வேதாசலம் உடனடியாக சுதாகரையும் அவனையும் கேரளாவில் படிக்க அனுப்பிவைக்க, அங்கும் அவளது நினைவுடனே உண்ணாமல் உறங்காமல் தவித்து இளைத்துப்போனான் அவன். எவரிடமும் சரியாகப் பேசாமல் தனித்தே இருக்க விரும்பினான்.

சிறிதுசிறிதாக மனம் கெட்டிப்பட்டுப் போக, நாட்களும் நில்லாமல் ஓடிட, வளர்ந்து வெளிநாடும் போய்விட்டான் அவன். அவளது நினைவுகள் மனதினடியில் மண்டிப்போய் மறைத்துவிட்டாலும், அந்த உறவினால் ஏற்பட்ட மாற்றங்கள் அப்படியே தங்கிவிட்டிருந்தன. அதிகம் பேசாத, தனிமை விரும்பியான, ஊரைப் பற்றி அதிகம் தெரியாத, ஒரு அந்நிய மகனாகவே வளர்ந்திருந்தான் திவாகர்.

இன்று அம்மா கூறியதைக் கேட்டதும், வானதியின் குழந்தை முகமும், அவளது சிரிப்பின் சத்தமும், பைந்தளிர் விரல்களால் தலைகோதும் நேசமும் கண்ணில் மீண்டும் வந்துநின்றது. தலை வெடித்துவிடுவதுபோல வலியெடுத்தது.

அவளை எப்படி மறந்தோமெனப் புரியாமல் தன்னையே நோகடித்து நொந்துகொண்டான் அவன். எத்தனை கோடி முறைகள் அவளிடம் மன்னிப்புக் கேட்டாலும் தீராது என்றிருந்தது அவனுக்கு.

"என்னை மன்னிச்சிடு மத்தாப்பூ... நான் உன்னைப்போய் எப்படி மறந்தேன்? .. எனக்குத் தெரில. நீ இல்லாம தினம்தினம் அம்மாகிட்ட அடம்புடிச்சி அழுதுருக்கேன்... வீட்டைவிட்டு ஓடிவர நினைச்சிருக்கேன்... சத்தியமா! ஆனா.. எப்படி.. ஏன்.. எதனால..."

அவன் மெய்யான வருத்தத்தோடு தலையைப் பிடித்துக்கொண்டு அழ, அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டு தோளில் தட்டிக்கொடுத்தாள் அவள்.

"ஷ்ஷ்... இதுல உன் தப்பு எதுவும் இல்லை திவா. நீ என்மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா இது நடந்திருக்கும் தெரியுமா?

நான் படிச்சேன், நம்ம மூளைக்கு ஞாபகங்களை அழிக்கற சக்தி இருக்கு. Traumatic dissociative syndrome. ஒரு நினைவோ, ஞாபகமோ நினைக்க நினைக்க உனக்கு துன்பமும் வலியும் தந்தா, அதை அடிக்கடி நினைச்சு நீ வருந்தி அழுதா, உன் உடம்புக்கு அதுனால கஷ்டம் வந்தா, அந்த ஞாபகங்களை, உன்னைப் பாதுக்காக்கறதுக்காக உன் மூளையே உனக்குத் தெரியாம கொஞ்சம் கொஞ்சமா அழிச்சு, மறைச்சு வைச்சிடும். அதுதான் என்னைப்பத்திய நினைவுகளையும் உன் மூளை ஒளிச்சு வச்சிருக்கு. உன்னைக் கஷ்டப்படுத்தி நினைவுகளை மறுபடி கொண்டுவர நான் விரும்பல. அதுனாலதான் எதுவுமே பேசல.

நானும் எவ்ளோ அழுதேன் தெரியுமா? நாச்சி அத்தை செத்துப்போன அடுத்தநாள், உனக்காக நான் பாறைக்கரட்டுல உக்காந்து காத்துட்டு இருந்தேன்... இருட்டுற வரைக்கும் நீ வரவே இல்ல. விக்கி தான் வந்து என்னை கையப்புடிச்சி வீட்டுக்கு இழுத்துட்டுப் போனான். அம்மாகிட்ட உன்னைக் கேட்டு அழுதப்ப, நீங்க ஊருக்குப் போயிருக்கறதாவும், சீக்கரமே வந்துருவீங்கனும் சொல்லி சமாதானப்படுத்தினாங்க.

அதுனால, என்னைக்காவது நீ திரும்ப வந்துடுவங்கற நம்பிக்கையோட தினம்தினம் நம்ம உக்கார்ற தெக்கு வரப்புல நின்னு பாத்துட்டு இருப்பேன். எத்தனை வருஷம் போனாலும் அந்த நம்பிக்கை மாறவே இல்ல. இப்ப வரைக்குமே..."

அவளும் விழிநீர் சிந்தி விசும்பிக் கரைய, அழுகை சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென ஓடிவந்த மீனாட்சியும் பானுமதியும், இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்ததும் கூச்சப்புன்னகையோடு கதவைச் சாத்திவிட்டு விலகினர்.

"அத்தைய, மாமாவை, விக்கியை.. கடைசியா ஒருதரம் பாக்கக்கூட முடியாமப் போச்சே..."

அவளது மடியில் சாய்ந்து படுத்துக்கொண்டு புலம்பினான் அவன். துக்கம் தொண்டையை அடைத்தது வானதிக்கும். ஆனாலும் தனது திவாகர் தனக்கே திரும்பக் கிடைத்துவிட்டான் என்ற ஆனந்தமும் மனதோரம் முளைத்திருந்தது.

மென்மையாக அவன் தலையை வருடிக்கொடுத்தாள் அவள்.
"எதுவுமே உன் தப்பு இல்ல திவா... எல்லாம் விதி. அவங்க எங்கயும் போகல. இன்னும் நம்மகூடத்தான் இருக்காங்க.. நம்ம ஞாபகங்கள்ல."

அவளது கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டான் திவாகர்.
"மறுபடி உன்னை விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேன் மத்தாப்பூ."

புன்னகையுடன் அவன் முகத்தருகில் குனிந்து கன்னத்தில் முத்தமிட்டாள் வானதி.

எத்தனைநேரம் அப்படியே அந்தக் கனப்பில் லயித்துப்போய் இருந்தனரோ தெரியாது. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டபோதுதான் இருவரும் தன்னிலை திரும்பினர்.

"அண்ணா..! அண்ணி...! சாப்பிட வாங்க. அப்பா கூப்பிட்டாரு!"

அவளது கையை விடுவதற்கே மனது ஒப்பவில்லை அவனுக்கு. இணைந்திருந்த கைகளைப் பின்னால் மறைத்துக்கொண்டு இருவரும் எழுந்து கூடத்துக்குச் செல்ல, மீனாட்சி இருவரையும் பார்த்து ஆனந்தமாய்ச் சிரித்தார்.

"என்ன வானி... சண்டையெல்லாம் தீர்ந்து ராசியாகியாச்சா?"

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெட்கப்புன்னகையோடு தலையைக் குனிந்துகொள்ள, ஹரிணி நடப்பது புரியாமல் வினோதமாகப் பார்த்தாள் இருவரையும்.

"என்ன? என்ன நடக்குது இங்க? என்கூட சேர்ந்து அண்ணனைக் கலாய்க்கறதுக்கு நீங்களாவது இருக்கீங்களேன்னு நெனைச்சுட்டு இருந்தா, நீங்க இப்டி மாறிட்டீங்களே அண்ணி??"

அவள் குரலில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்ட வானதி சிரித்துவிட, திவாகர் இருவரையும் முறைத்தான். ஆனால் வேதாசலம் இருந்ததால் தங்கையைத் திட்டாமல் தவிர்த்துவிட்டான் அவன்.

மீனாட்சி மகனின் தலையைப் பாசமாகத் தடவியபடி, "சும்மா இருடி... என் மகனை சீண்டலைன்னா உனக்குப் பொழுதே போகாது" என்று கண்டிக்க, ஹரிணி உதட்டை சுழித்துக்கொண்டாள்.

"மகனுக மேலவே பூராப் பாசத்தையும் கொட்டாதம்மா... கடைசி காலத்துல நான்தான் உனக்குக் கஞ்சி ஊத்தணும் பாத்துக்க!"

இருவரும் செல்லச் சண்டையிட்டுக்கொண்டிருக்க, வேதாசலம் அதை ரசித்து சிரித்தவாறிருக்க, இங்கே இவர்களிடையே ஏதோ மாய மின்சாரம் பரவிக்கொண்டிருந்தது. வானதியின் கண்களில் திவாகர் தொலைந்துகொண்டிருக்க, அவளும் விழிகளாலேயே பிரிந்த நாட்களுக்கான விலையை வசூலித்துக்கொண்டிருந்தாள்.

பானு சமையலறையிலிருந்து ஏதோ பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தபோது இருவரையும் கவனித்துவிட, லேசாகத் தொண்டையை செறுமி அவர்களை நிகழுலகிற்குக் கொண்டுவந்தாள்.

"என்ன வானி... நீ கேட்ட டைம் முடிஞ்சது... ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிரலாமா?"

சட்டென அவள் கேட்கவும் வானதியும் திவாகரும் திடுக்கிட, பெரியவர்களும்கூட திகைத்தனர். வேதாசலம் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

"நல்லநேரம் ஞாபகப்படுத்தினம்மா. ஏதோ திடுதிப்புனு கல்யாணம் முடிஞ்சபோச்சு. வரவேற்பு வைக்கவும் நீ அப்போதைக்கு வேணாம்னுட்ட.. இப்பதான் எல்லாம் சரியாகிடுச்சே, ரிசப்ஷன் வச்சிடலாமா?"

அவள் அசௌகரியமாக முகம்சுழிக்க, திவாகர் அது ஏனென ஓரளவு தெரிந்ததால் தலைகுனிந்தான். இன்னும் அவர்கள் பேசவேண்டியது நிறைய இருந்தது.

"மாமா.. உங்க இஷ்டம்." என்றுவிட்டு வானதி தட்டில் குனிந்துகொள்ள அதற்குமேல் அந்த சம்பாஷணை வளராமல் நின்றுபோனது.

உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்த இருவரும் எங்கே பேச்சைத் தொடங்கவெனத் தெரியாமல் பால்கனி வழியே தோட்டத்தைப் பார்த்தபடி நிற்க, இருவரிடையே தென்றல் தவழ்ந்து தழுவி விளையாடிச்சென்றது.

வானதியே முதலில் மௌனத்தை உடைத்து, "அது யாரு..?" என்றாள் சன்னமான குரலில்.

ரூபாவின் குரலில் கவனித்த பயத்துக்கு நேர்மாறாய், வானதியிடம் தென்பட்ட மென்சோகம் அவன் மனதைக் கடைந்தது. இவள் சந்தேமாகக் கேட்கவில்லை, நடப்பை உணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டு, அதை உறுதிப்படுத்த மட்டுமே கேட்கிறாளெனப் புரிந்தது.

மெதுவாக ஏதோ பேச முயன்றபோது, சட்டென வீட்டுவாசலில் கேட்ட சைரன் சத்தத்தில் இருவரும் திகைத்துத் திரும்பினர்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro