28
சிலகணங்கள் இமைக்கக்கூட மறந்து உறைந்து அமர்ந்திருந்தாள் வானதி.
கண்ணீர் அதுபாட்டில் நிற்காமல் வழிய, அவனிருக்கும் அறையில் தானும் இருப்பது பிடிக்காமல், வேகமாக எழுந்து வெளியேறினாள். கூடத்தில் அமர்ந்தவள் கைபேசியில் தன் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்து, அதைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
'சிலநேரம் அன்புகொண்டவன்போல் நெருங்குகிறான்... சின்னச்சின்னதாய் ஆசைக்கோட்டை மனதில் கட்டவைக்கிறான்... பின் அவனே அதைத் தகர்த்து வலிகளைப் பரிசளிக்கிறான்... இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் தோற்பது என் காதல்தானா??'
நேரம்போவது தெரியாமல் அங்கேயே அமர்ந்து கரைந்து அவள் கண்ணயர, அங்கே அறைக்குள் மூடிய கண்களின்வழி நீரை உகுத்தபடி இருளினுள் மூழ்கித் துயரை மறக்க முயன்றுகொண்டிருந்தான் அவன்.
___________________________________
கண்மூடித் திறப்பதற்குள் தேர்வு நெருங்கிவிட, வீட்டில் அனைவருமே வானதிக்காகப் பார்த்துப்பார்த்து அனைத்தையும் செய்ய, அவன்மட்டும் அவளிடம் பேசமுயன்று தோற்றுக் கொண்டிருந்தான். நாளை முதலாவது தேர்வு. அன்று இரவு உணவுக்குப்பின், நாளைய தேர்வுகளுக்காக அவள் தூங்காமல் படித்துக்கொண்டிருக்க, அவளுக்குத் துணையிருப்பதற்காக ஹரிணியும் பானுவும் உடன் அமர்ந்திருந்தனர்.
அம்மாவும் அப்பாவும் தூங்கச் சென்றுவிட, அவளில்லாமல் தனியே தூங்கப்பிடிக்காமல் கூடத்தையே சுற்றிவந்தான் அவனும்.
குட்டிபோட்ட பூனை போல அவன் அங்குமிங்கும் நடப்பதைப் பார்த்து, ஹரிணியும் பானுவும் கண்களாலேயே சிரித்துக்கொண்டனர். பானு அவளுக்குக் காபி எடுத்துவருவதற்காகச் செல்ல, ஹரிணி கடைசிநேரத் திருப்புதலுக்காக அவளிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
திவாகரைக் கவனித்தாலும் திரும்பிப்பார்க்காமல், தனது பாடத்தில் முழுக்கவனம் செலுத்தி விடையளித்துக் கொண்டிருந்தாள் வானதி. நாளைய பரீட்சை அவளது வாழ்க்கை. அது நிச்சயமானது. திவாகரைப் போல அது மாறிவிடப் போவதில்லை.
ஹரிணிக்கு லேசாகக் கண்கள் சொக்க, அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு சிரித்தாள் வானதி.
"எனக்குத்தான எக்ஸாம்? நீ போயி தூங்கு. நான் பாத்துக்கறேன்"
"ப்ச்.. இல்ல அண்ணி.. தூக்கமெல்லாம் வரல.."
"அப்ப சரி.. அஞ்சு நிமிஷம் கண்ணை மூடி உட்காரு. அப்பறம் முழிச்சிருந்தா... பாக்கலாம்!"
அவளுக்கு சவால் விடுவதற்காக ஹரிணி சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடினாள். குறும்புச் சிரிப்புடன் அவள் பார்த்துக்கொண்டிருக்க, முப்பதே வினாடிகளில் தூங்கிவிழுந்தாள் ஹரிணி.
அவளைக் கைத்தாங்கலாக எழுப்பிச் சென்று அவளது அறையில் படுக்கவைத்துவிட்டு வரும்போது, காபியுடன் பானுமதி வந்துவிட்டாள். காபியைப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள் வானதி.
"அக்கா.. ஹரிணி தூங்கிட்டா. நீங்களும் போய் தூங்குங்க. நான் சமாளிச்சுக்கறேன்.."
திவாகரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அர்த்தமாகப் புன்னகைத்தபடியே சென்றுவிட்டாள் பானுவும். காபியை ஒரு கையிலும், புத்தகத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு அவள் சோபாவில் கால்களை மடக்கிக்கொண்டு அமர்ந்திருக்க, அண்ணியும் தங்கையும் சென்றுவிட்ட தைரியத்தில் பாதையிலிருந்து கூடத்துக்குள் வந்தான் அவன்.
கொஞ்சம் கலைந்துவிட்ட கேசமும், கண்ணில் லேசான சோர்வும், உதட்டில் அப்போது படித்துக்கொண்டிருந்த வார்த்தைகளும், கையில் காபிக் கோப்பையுமாய்.. அவளைப் பார்த்தபோது ஒரு ஓவியத்தைப் பார்ப்பதுபோல இருந்தது அவனுக்கு.
அவன் அருகில் வந்ததைக் கண்டு திரும்பியவள், "உனக்கு என்ன வேணும்? ஏன் தூங்காம இங்க வந்து நிக்கற.." எனச் சினந்தாள்.
பதில் கூறாமல் கடிகாரத்தைப் பார்த்தவாறே அவளெதிரில் சோபாவில் அமர்ந்தான் அவன். சரியாக மணி பன்னிரண்டு அடித்ததும், அவளைப் பிரியத்தோடு பார்த்து, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் வானதி" என்றான் ஒரு முறுவலுடன்.
சட்டெனத் திகைத்துப்போனாள் அவள்.
பிறந்தநாள்கள் கொண்டாடுவதில்லை அவர்கள் வீட்டில்.
"பிறந்த பலனா எதையாச்சும் சாதிச்ச பிறகு, அந்த சந்தோஷத்தோட பிறந்தநாள் விழா கொண்டாடலாம். அர்த்தமில்லாம அதைக் கொண்டாடக் கூடாது. ஏன் பிறந்தோம்னு நம்மை நாமளே அடிக்கடி கேட்டு, அந்த காரணத்தை கண்டறிஞ்சு சாதிக்கணும். அதுவரை இந்தமாதிரி மேம்போக்கான கொண்டாட்டங்கள் எல்லாம் வீண்!"
தந்தையின் வார்த்தைகள் இன்றுவரை தெளிவாக அவளது காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. எப்போதுமே கேக் வெட்டிக் கொண்டாடுவதெல்லாம் நடந்ததே இல்லை வீட்டில். பிறந்தநாளில், அம்மாவிடம் ஆசி வாங்கிக்கொண்டு, அண்ணனுடன் எங்காவது வெளியே சுற்றிவிட்டு வருவாள். அதுவே அவளுக்கு இமயத்தை வென்ற மகிழ்ச்சியை ஈட்டித்தரும். சென்னையில் இருந்தபோதும், பிறந்தநாள் கேளிக்கைகளில் ஈடுபட்டதேயில்லை.
நாளை தன் பிறந்தநாள் என்பது மனதோரம் நினைவிருந்தாலும், அன்புகாட்டும் குடும்பமே உயிரோடு இல்லாதபோது அதுமட்டும் எதற்கென நினைத்திருந்தவள், இப்போது திவாகர் வாழ்த்துச் சொல்லவும், இவனுக்கு எப்படித் தெரியும் என்று குழம்பித் திகைத்தாள்.
அவளுக்கு சிரமம் வைக்காமல், அவனே "உன்னோட ஹால்டிக்கெட்ல பாத்தேன்... நேத்து சாயந்திரம்" என்றான்.
"ஓ..."
எதையோ எதிர்பார்த்து ஏமாந்ததுபோல அவள் குரல் தொனிக்க, அவன் ஒருகணம் குழம்பினான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல், கைக்குலுக்கி வாழ்த்துச்சொல்லி, கட்டிப்பிடித்தான் அவளை.
அவன் நட்புப் பாராட்டச் செய்கிறான்போலும் என்று நினைத்தாள் அவளும். அதுவே மனதில் ஊசியாகக் குத்தி வலிக்கச்செய்தது. முடிந்தளவு வேகமாக அவன் அணைப்பிலிருந்து விலகியவள், கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் "தேங்க்ஸ்" என்றுவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.
அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தபடியே அவன் நிற்க, அவள் செய்வதறியாது அமர்த்து புத்தகத்துக்குள் மூழ்கப் பார்த்தாள். தன்னையே பார்த்துக்கொண்டு அவன் நிற்பது குறுகுறுவென்று உறுத்தியது அவளுக்கு. அவன் நகர்ந்து சென்றாலாவது தன் அபாக்கிய நிலையை எண்ணி நிம்மதியாக அழலாம்.. இவன்தான் ஆணியடித்ததுபோல் நிற்கிறானே.
சிலகணங்களில் அவனே, "வானதி.. இது உனக்கு எவ்ளோ முக்கியமான எக்ஸாம்னு புரியுது எனக்கு. அதனால, நடுவில எதையும் சொல்லி உன்னைக் குழப்ப விரும்பல. எதையும் யோசிக்காம, படிச்சிட்டு, சீக்கரம் தூங்க வா" என்றுவிட்டு நகர, 'என்ன இவன்... என்றுமில்லாதபடி இன்று பொறிவைத்துப் பேசுகிறான்..' என நினைத்தபடியே புத்தத்தில் கவனத்தைப் பதித்தாள் அவள். அப்படியே சிறிதுநேரத்தில் தூங்கியும் போனாள்.
மறுநாள் காலையில், அவள் குளித்துத் தயாராகி வந்தபோது, அவளது பிறந்தநாளென வீட்டிலிருந்த அனைவரிடமும் கூறியிருந்தான் திவாகர். அனைவரும் வாழ்த்துச் சொல்ல, அத்தை, மாமாவிடம் ஆசிபெற்றுக்கொண்டாள் அவள்.
"இன்னைக்குப் போலவே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்மா"
அவள் தலையைத் தடவி ஆசிகூறினார் வேதாசலம்.
காலை உணவை அவளது பிறந்தநாள் சிறப்பாக, தடபுடலாகச் செய்துவைத்திருந்தாலும், பரீட்சைக்குச் செல்வதால் அளவாக சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினாள் அவள். தானும் உடன்வருவதாக திவாகர் சொல்ல, சோகப்புன்னகையுடன் சம்மதித்தாள். ஓட்டுனர் காரைக் கிளப்ப, பின்சீட்டில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.
மதுரை பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த 'கேந்த்ரிய வித்யாலயா' பள்ளிதான் தேர்வுத்தலமாக இருந்தது அவளுக்கு. அங்கே சென்று கார் நின்றதும், திவாகரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இறங்கப்போனாள் அவள்.
சட்டென அவள் கையைப் பற்றினான் அவன்.
"எக்ஸாம் முடிச்சிட்டு.. நீ வெளியே வர்றப்ப, நான் இங்கயே வெய்ட் பண்ணிட்டு இருப்பேன், உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல.."
கண்கள்மின்னக் கூறிவிட்டு, அவளுக்குக் கையசைத்துவிட்டுக் கிளம்ப, அவள் புரியாத பூரிப்புடன் தேர்வு மையத்துக்குள் நுழைந்தாள்.
பிறந்தநாள் என்றாலே தானாக வரும் மகிழ்ச்சி, மாமாவின் வாழ்த்தால் வந்த ஆனந்தம், திவாகரின் கனிவினால் பிறந்த பூரிப்பு என்று சந்தோஷக் குவியலாக இருந்தாள் அவள். இதழின் புன்னகை அழிக்கமுடியாதபடி ஒட்டிக்கொண்டது.
வழக்கமான சோதனைகள், சரிபார்ப்புகள் எல்லாம் முடிந்து, சரியான நேரத்தில் தேர்வுஅறைக்குள் அனுமதிக்கப்பட்டாள் அவள். படபடவென நெஞ்சம் அடித்துக்கொண்டாலும், அந்த நாளின் நல்ல சகுனங்கள் தந்த நம்பிக்கையோடு வினாப் புத்தகத்தைப் பிரித்தாள்.
தேர்வு எதிர்பார்த்ததைவிட சுலபமாகவே இருந்தது. மிகவும் தீவிரமாக, கவனத்துடன் விடையெழுதிக் கொண்டிருந்தாலும், அடிக்கடி மனதோரம் திவாகரின் முகமும் அவனது கனவு ததும்பும் கண்களும், காலையில் பேசிய சொற்களும் வந்துவந்து போக, தானாகச் சிரித்துக்கொண்டே எழுதினாள். முழுமையாக எழுதிமுடித்துவிட்டு, சரியாக எழுதியிருக்கிறோமா என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு, மனதில் பெற்றோரை ஒருநிமிடம் நினைத்து வேண்டிக்கொண்டு, விடைத்தாளை ஒப்படைத்தாள் அவள்.
முதல் தேர்வு நல்லபடியாக முடிந்ததே அவளுக்குப் பாதி பயத்தைப் போக்கடித்து, மனதில் நம்பிக்கையை உருவாக்கியது.
'இன்னும் நான்கே நாட்கள், எட்டே தேர்வுகள். நிச்சயமாக நீ சாதித்துவிடுவாய் வானதி!!'
தேர்வுப் பயங்கள் நீங்கியதும், மீண்டும் திவாகர் நினைப்புத் தலைதூக்க, அவன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் வேகமாக வெளியே வந்தாள் அவள். பள்ளிக்கு எதிர்ப்புறம் இருந்த டீக்கடையில் நின்றிருந்தான் அவன்.
இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, வேகமாக இருவரும் அடியெடுத்து நெருங்க, சாலையைக் கடக்கும்முன் இருவரினிடையே வந்துநின்றது ஒரு வெள்ளை ஃபோர்ட் கார். திடீரென அதிலிருந்து இறங்கிய பெண்ணொருத்தி ஓடிச்சென்று திவாகரைக் கட்டிப்பிடித்துக்கொள்ள, வானதி திடுக்கிட்டுச் சிலையானாள்.
திவாகரும் குறையாத அதிர்ச்சியுடன் இருந்தான். ஆனால் கண்கள் வானதியிடம் இல்லை. தன்னைக் கட்டிப்பிடித்த பெண்ணிடம் தொலைத்திருந்தான் அதை.
உதடுகள் தாமாக அவள் பெயரை உச்சரித்தன.
"ரூபா..?"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro