21
ஆதிகேசவன் சிவகங்கை எனத் தேடியபோது ஏன் சிக்கவில்லை எனப் புரிந்தது இருவருக்கும். மதுரை சிம்மக்கல் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என ஹரிணியின் மூலம் தெரிந்தது.
வானதி ஹரிணியைப் பார்த்து, "உங்க ஸ்கூலுக்கு வந்தாரா? அதுனாலதான் உனக்குத் தெரியுமா?" எனத் துருவினாள்.
"ம்ம். எங்க ஸ்கூல் மதுரையில் இருக்க குறிஞ்சி ஸ்கூலோட ப்ரான்ஞ்ச் தான? அதுதான், மதுரைல இருந்து சீஃப் கெஸ்ட்டா வந்தார் அவரு."
அவள் திவாகரை அர்த்தமாகப் பார்த்தாள், பின் ஹரிணியிடம் திரும்பி, "நீ செஞ்ச ஹெல்ப்புக்கு தேங்க்ஸ். ஆனா, இதைப்பத்தி நீ எதுவும் யோசிக்காத. நாங்க ஒரு முக்கியமான விஷயமா இதை செஞ்சுட்டு இருக்கோம். நீ இதுல சம்பந்தப்படவேண்டாம். உன் நல்லதுக்கு தான் சொல்றோம். என்னை நம்பு" என்று பலவாறாக சமாதானம் செய்து அவளை அனுப்பிவைத்தாள்.
பின் திவாகருடன் அமர்ந்து, ஆதிகேசவனுக்கும் தன் குடும்பத்திற்கும் என்ன தொடர்பெனக் கண்டறிய முயன்றாள் அவள்.
"எட்டு வருஷம் முன்ன பதவியில இருந்திருக்கார். அதாவது ரெண்டு tenure முன்னாடி. அதுக்கப்பறம் நின்னப்போ ஜெயிக்கல. அவங்க கட்சியோட இன்னும் தொடர்புல தான் இருக்கார். மதுரையில ஒரு க்ரானைட் குவாரி வச்சு நடத்திட்டு இருக்கார். சிவகங்கைக்கும் அந்த ஆளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்க குடும்பத்துக்குமே அந்த ஆள்கூட எந்தத் தொடர்பும் இல்லை. பின்ன எந்த வகையில இந்த ஆள் எங்க குடும்பத்தோட மரணத்துக்கு காரணம்? இதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லணுமா?"
திவாகரும் யோசனையுடன் தலையசைத்தான்.
"அவர்னால இன்னும் டீப்பா விசாரிக்கமுடியும். அவர்கிட்ட இதை சொல்றதுதான் பெஸ்ட்."
இருவரும் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்றனர். அதிகநேரம் காக்கவைக்காமல் அழகேசன் சீக்கிரமே அவர்களை அழைத்தார்.
"வாங்க மிஸ் வானதி. நானே உங்களை கூப்பிடணும்னு நினைச்சேன்."
"ஏன் சார்? என்னாச்சு?"
"ஃபோன்ஸ் கிடைச்சாச்சு. பனையூர் ஸ்டேஷன்ல 'unclaimed property' ரூம்ல இருந்து எடுத்தோம். அங்க அது எப்டிப் போச்சுன்னு யாருக்குமே தெரியாதாம்.."
அவர் நக்கலோடு சொல்ல, திவாகரும் வானதியும் தீவிரமாக அவரையே கவனித்தனர்.
"நஞ்சேசனும் வசந்தியும் சாதாரண மொபைல் மாடல்தான் யூஸ் பண்ணியிருக்காங்க. விக்னேஷ் மட்டும்தான் ஆன்ட்ராய்ட் மாடல். சைபர்ல குடுத்து மொபைலை ஓப்பன் பண்ண சொல்லியிருக்கோம். கூடிய சீக்கிரத்தில எதாவது தெரியவரும்."
வானதிக்கும் நம்பிக்கையாக இருந்தது. முதலில் சாதாரணமாக நினைத்த வழக்கு இப்போது இந்தளவுக்கு வந்திருக்கிறது. அவள் கூறவந்ததையும் அழகேசனிடம் கூறினாள்.
"காலைல, சிவகங்கை அக்ரி ஆபிசுக்கு போயிருந்தப்ப, எங்களை ஒரு கும்பல் தாக்கவந்தது. அதுல ஒருத்தன், ஆதிகேசவன்னு ஒருத்தரை பத்தி பேசினான்."
அழகேசனின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது .
"இதை ஏன் இவ்ளோ லேட்டா வந்து சொல்றீங்க? உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?"
"நத்திங். என்கூட திவாகர் இருந்தார்."
அவள் அவனை நன்றியாக ஏறிட, அவன் புன்னகைத்தான்.
அழகேசன் அதைத் தன் கைபேசியில் குறித்தபடி, "ஆதிகேசவன்... ம்ம். நான் விசாரிக்கறேன். அதுவரை, நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. நாம நினைச்சதைவிட இந்தக் கேஸ் பெரிசா இருக்கும்னு தோணுது எனக்கு. வேற டீடெய்ல்ஸ் எதுவும் கிடைச்சா நானே கூப்பிடறேன்." என்று அவர்களை அனுப்பிவைத்தார்.
வழியில் மீண்டும் வேளாண் அலுவலகத்துக்குச் சென்றபோது, அங்கே அதிகாரி இல்லாமல் இருக்க, இவர்கள் வெறுங்கையோடு திரும்பவேண்டிதாயிற்று.
இரவு உணவுக்குப் பின்னர், திவாகர் தனது அலுவலக வேலை எதையோ மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருந்தான். வானதி பால்கனியில் நின்றிருந்தாள்.
ஏதோ தோன்ற, தனது கைபேசியில் பாடல்கள் செயலியைத் திறந்து, "விக்கி" என்று பெயரிட்டிருந்த playlistஐத் திறந்து ஓடச்செய்தாள் அவள்.
ஊகலோ ஊரேகே காலந்த்தா
இதி தாரலோ திகிஒச்சே வேளண்ட்டா
ஈ சமயானிகி.. தகு மாட்டலு எமிடோ...
எவ்வரினடிகாலட்டா..?
சாலா பத்தத்திகா பாவம் தெலிசி,
ஏதோ அன்னடம் கண்டே..
சாகே கபுர்லதோ காலம் மரிச்சி,
சரதாம் படதாம் அந்த்தே...
ஊகலோ ஊரேகே காலந்த்தா
இதி தாரலோ திகிஒச்சே வேளண்ட்டா
அழகான துள்ளலிசையுடன் அந்தத் தெலுங்குப் பாடல் ஒலிக்க, வானதி ஒருமுறை வானத்தைப் பார்த்துவிட்டு, கண்கலங்கி நின்றாள்.
அவள்பின்னால் வந்த திவாகர், "என்ன ஆச்சு?" எனக் கரிசனத்துடன் கேட்க, அவள் கண்ணீரை துடைத்துவிட்டு சோகத்துடன் புன்னகைத்தாள்.
"விக்கி எப்பவுமே தெலுங்குப் பாட்டுதான் நிறையக் கேப்பான்... அம்மாவுக்குப் புடிக்கவே புடிக்காது. ஆனாலும் அவன் மாத்திடவே மாட்டான். வீட்டுல, ஃபோன்ல, கார்ல, ஏன்.. வயலுக்குப் போகையில கூட ஹெட்ஃபோன் மாட்டிட்டு தெலுங்குப் பாட்டுதான் கேப்பான். அவனோட கலெக்ஷன் அருமையா இருக்கும். பழசோ, புதுசோ... மைல்டான சாங்ஸ்னா ரொம்ப இஷ்டம் அவனுக்கு..."
"உங்க அண்ணன் ரொம்ப ரசனையுள்ள ஆள்னு நினைக்கறேன்.."
"ம்ம்... aesthetic perspective ஜாஸ்தி அவனுக்கு. எல்லாத்தையுமே கலையா பார்ப்பான். டேபிள்ல கொட்டின காபியில இருந்து, வயல்ல பறக்குற பறவை வரைக்கும், எல்லாமே ஆர்ட் தான் அவனுக்கு. நிறைய கவிதை படிப்பான், பாட்டுக் கேப்பான். ஏன்... சுருதியே சேராம பாத்ரூம்ல கத்திப் பாடுவான்! அவன்கூட இருந்தா, நேரம் போறதே தெரியாது..."
கண்களில் நீர் வழிந்தாலும், சிரிப்புடன் அண்ணனை நினைவு கூர்ந்தாள் அவள்.
அவள் விக்கிமீது எவ்வளவு பாசம் கொண்டிருந்தாள் என்பது கண்கூடாகத் தெரிந்தது அவனுக்கு.
பால்கனியின் கம்பிமீது வைத்திருந்த அவளது கையை பரிவாகப் பற்றினான் அவன்.
"உங்க அண்ணன் இப்போ இருந்திருந்தா... நீ அழறதை பாத்து கஷ்டப்படுவார் தானே? நீ சந்தோஷமா இருக்கணும்னு தானே அவங்க ஆசைப்பட்டிருப்பாங்க..? உன் லட்சியத்தை, கனவை, நீ அடையணும்னு தானே அவங்களும் விரும்பியிருப்பாங்க?"
அவன் என்ன கூற வருகின்றான் எனப் புரியாமல் பார்த்தாள் அவள். அவளது கையை எடுத்து இறுக்கமாக இருகைகளாலும் பிடித்துக்கொண்டு, "வானதி நஞ்சேசன் ஐஏஎஸ்... இதுதான உன்னோட கனவு..? இதுதான உங்க அப்பாவோட கனவு..? இதைத்தான அவங்க எல்லாருமே விரும்பினாங்க? உனக்காக இல்லைன்னாலும், அவங்களுக்காக... இந்தக் கனவு தொடர வேணாமா?" என்றான் அவன் உருக்கமாக.
"ப்ளீஸ்... அது முடிஞ்சுபோன விஷயம். அந்தக் கனவெல்லாம் கனவாவே போகட்டும். அது மறுபடியும் வேணாம் எனக்கு."
அவள் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
"நான் மட்டும் சென்னைக்குப் போகாம இங்கயே இருந்திருந்தா, இந்நேரம் என் குடும்பம் உயிரோட இருந்திருக்கும்."
குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள் அவள்.
அந்த நொடியில் ஏதோ தோன்ற, சட்டென அவளை இழுத்து அணைத்துக்கொண்டு தலையில் கைவைத்து அவளைத் தேற்றத் தொடங்கினான் அவன். பின்னணியில் அந்தத் தெலுங்குப் பாடல் ரம்மியமாய் இசைத்தது.
எதிர்ப்புக் காட்டாமல் அவனது அணைப்பில் நின்றாள் அவளும். ஆனால் திவாகரே இரண்டு கணங்களில் விலகி நின்றான்.
"இதுல உன் தப்பு எதுவுமே இல்லை... கண்டதை நினைச்சுக் குழம்பாத. நான் சொல்றதைக் கேளு வானி... ப்ளீஸ். மெய்ன்ஸ் எக்ஸாம்க்கு அப்ளை பண்ணு. உன் கரியரை பர்ஸ்யூ பண்ணு. உங்க அப்பாவோட கடைசி ஆசையா அதை நினைச்சுக்க. அப்ப நிச்சயமா அதை செய்வதானே?"
அரைமனதோடு தலையாட்டினாள் அவள்.
"பாக்கலாம்..."
பால்கனி தரையில் அவன் அமர்ந்து, அவளையும் பிடித்து இருத்தினான் அவன்.
"இங்க பார். உனக்கு என்ன சப்போர்ட் வேணும்னாலும் செய்யறதுக்கு நான் தயார். அப்பாவும் அம்மாவும் கூட இருக்காங்க. உன் கவலையை தற்காலிகமா மறக்கறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. So please, do it."
அவள் தலையை பலமாக ஆட்டி, "சரி.. சரி.. செய்றேன். நாளைக்கு மெயின்ஸ்க்கு அப்ளை பண்ணலாம். சிவகங்கையையே எக்ஸாம் சென்டரா கேட்டுப் பாக்கலாம். ஆனா, மெயின்ஸ்ல ஒருவேளை நான் செலெக்ட் ஆகிட்டா, முஸ்ஸோரி போகவேண்டியிருக்குமே..? மினிமம் ஒன்றரை வருஷம் ட்ரெய்ணிங் இருக்கும்.. அப்பறமும் எந்த ஊர்ல போஸ்டிங் போடுவாங்கன்னு தெரியாது. இதெல்லாம் ஓகேவா? இல்லை இதைப்பத்தி நீ யோசிக்கவே இல்லையா?" என்றாள்.
அவன் உண்மையில் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. ஒரு வாரமாக இவளிடம் எப்படி இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம் என்று சிந்தித்தானே தவிர, அதன்பிறகு நடக்கப்போவதை யோசிக்கவில்லை அவன்.
ஆனால் முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு, "அதைக்கூட யோசிக்காம இருப்பாங்களா? நீ Mussouri போனா, நான் Missouri போறேன்... எனக்கு இன்னும் ஒரு மாசம்தான் லீவே. அது முடிஞ்சதுமே நான் கிளம்பித்தானே ஆகணும்?" என்று கேட்டுவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
வானதி அவனது பதிலில் ஏனோ கலங்கினாள்.
'மீண்டும் என்னை விட்டுப் போய்விடுவாயா நீ?'
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro