12
கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாமல் கையறுநிலையில் நின்றிருந்தான் திவாகர். மூச்சிழுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவளது தோளைத் தொட்டான்.
"வானதி... இப்போதைக்கு உடனடியா எந்த முடிவுக்கும் வர வேணாம். ஏற்கனவே காலைல இருந்து ரொம்பவே அலைச்சல்.. நீயும் பயங்கரமா டையர்டா இருக்க.
எனக்கு க்ரைம் சால்விங் பத்தியெல்லாம் பெருசாத் தெரியாதுதான். ஆனா, சோர்வா இருக்கும்போது மூளை வேலை செய்யாதுன்னு மட்டும் தெரியும். And trust me, i studied it. இங்க இருக்க பேப்பர்ஸ், ஃபைல்ஸ், எல்லாத்தையும் எடுத்துக்க. வீட்டுக்குப் போயி, நிதானமா தேடலாம்.."
இம்முறை அவனது அறிவுரை அவளுக்கு சரியாகப் பட்டது. தலையசைத்துவிட்டு, கண்களைத் துடைத்தபடி எழுந்து முக்கியமான கோப்புகளைத் தன் பையில் எடுத்துக்கொண்டாள் அவள்.
சாமி அறையில் வைத்திருந்த பெற்றோரின் புகைப்படத்தை ஒருமுறை வணங்கிவிட்டு, திவாகருடன் புறப்பட்டாள்.
வீட்டை அடைந்தபோது மாலை நான்காகியிருந்தது. வேதாசலம் முன்னறையில் தனது கணக்குப்பிள்ளையுடன் எதையோ பேசிக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைக் கண்டவரின் முகம் ஒருகணம் மலர்ந்தது.
மாமாவிடம் வந்த வானதி, "கேசை மாத்தியாச்சு மாமா... சாதாரண ஆக்சிடெண்ட் கேஸ் இல்ல அது" எனக் கூற, அவரும் சிரிப்பை விடுத்து இறுக்கமானார்.
"என்னம்மா சொல்ற? அதை எப்படி போலீஸ்ல பாக்காம விட்டாங்க?"
"தெரியல மாமா... இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கு. அப்றம், நாளைக்கு... மூணாம் நாள்... கருமாதின்னு.. ஊருல ஏதோ சொன்னாங்க.."
யோசனையாகத் தலையாட்டினார் அவர். தன் வேலையாளிடம், "முத்து... நாளைக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிடு. பெரிய அம்மாவைக் கேட்டு, அவ சொல்றதை செய்" என்றுவிட்டு, மீண்டும் வானதியின் பக்கம் திரும்பினார்.
"காலைல ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பிடணும்மா. நாளைக்கு நோன்பு இருக்கவேண்டி வரும்னு நினைக்கறேன். அத்தைகிட்ட கேட்டுக்க.. "
அவள் ஒப்புக்கொண்டு நகர, திவாகரிடம், "தம்பி.. நீயும்தான் காலைல கிளம்பியாகணும்.. கொஞ்சம் வெள்ளனவே எழுந்திரிச்சா பரவாயில்ல... இறந்தவங்க உனக்கு மாமனார்-மாமியார் முறை இல்லையா? அதனால, மகன் முறைல இருந்து நீதான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும்." என அறிவுரைத்து அனுப்பினார்.
வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த ஹரிணி வானதியைக் கண்டதும் உற்சாகமாய் எழுந்துவந்தாள்.
"காலைல இருந்து பாக்கவே முடியலையே சின்ன அண்ணிய? அண்ணன்கூட அவுட்டிங்கா?"
அவளது உற்சாகத்தைக் கெடுக்க மனமில்லாவிட்டாலும், தான் மறுத்துக் கூறாவிட்டால் தன் மதிப்புப் போய்விடும் என்பதால், தளர்வான குரலில், "போலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்தோம்." என்றாள் வானதி.
"அச்சச்சோ.. சாரி அண்ணி.. தெரியாம கேட்டுட்டேன்.."
அவசரமாக அவளைத் தடுத்தாள் அவள்.
"சேச்சே.. நான் எதுவும் நினைக்கல. உனக்கு ஸ்கூல் எல்லாம் எப்படி இருக்கு? வந்ததுல இருந்து சரியாவே பேசல..." எனப் பேசிக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு தாழ்வாரத்தில் சென்று அமர்ந்தாள்.
அவள்பின்னால் வந்த திவாகர், "அம்மா ஒரு காபி..." என சத்தமிட்டவாறே உள்ளே வர, ஹரிணியிடம் வானதி, "உங்க அண்ணனுக்கு சொந்தமா காபி போட்டுக் குடிக்ககூடத் தெரியாதா?" எனக்கேட்க, ஹரிணி சிரித்துவிட்டாள்.
காபி கேட்டதற்கு எதற்காக சிரிக்கின்றனர் எனப்புரியாமல் குழப்பமாக அவர்களைப் பார்த்தான் அவன்.
"என்ன?"
"காபிதான வேணும்? கிச்சனுக்குப் போய் போட்டு குடிக்கவேண்டியதுதான ஹரி?" ஹரிணியிடம் பேசுவதுபோல வானதி வினவினாள்.
ஹரிணி அதற்கும் சிரித்துக்கொண்டே அண்ணனிடம் திரும்பி, "அம்மாவும் பானு அண்ணியும் கோயிலுக்குப் போயிருக்காங்க. காபி எல்லாம் கிடைக்காது.." என்றாள்.
"ஓ..."
இறுக்கமான முகத்துடன் தலையசைத்துவிட்டு, தனது அறைக்குச் சென்றுவிட்டான் அவன். அவன் செல்வதைப் பார்த்தபடி வானதி சிறிதுநேரம் இருக்க, ஹரிணி அவளை உலுக்கினாள்.
"என்னாச்சு அண்ணி?"
"ஒருநிமிஷம்.. வந்துடறேன்.."
எழுந்து அறைக்குச் சென்று பார்த்தபோது, கால்களைப் பரத்திக்கொண்டு கட்டிலில் அவன் படுத்திருந்ததைக் கண்டாள் அவள்.
"கை காலைக் கழுவிட்டு, கிச்சனுக்கு வா"
அவளது குரலில் திரும்பியவன், நிமிர்ந்து குழப்பமாகப் பார்க்க, "காபி வேணும்னா, வா." என்றுவிட்டு நகர்ந்தாள் அவள்.
இரண்டு நிமிடத்தில் அவள் கூறியபடி சமையலறையில் ஆஜரானான் அவன். ஒரு அடுப்பில் பாலும் மற்றதில் தண்ணீரும் கொதிக்கவைத்துக் கொண்டிருந்தாள் அவள். ஹரிணி சமையலறை ஓரத்தில் சாய்ந்துநின்று, நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் வந்ததைப் பார்த்தவள், "காபிப் பொடியை எடு" என்று முகம்பார்க்காமல் சொல்ல, ஹரிணியைத்தான் சொல்கிறாளோ என நினைத்துக்கொண்டு அப்படியே நின்றான் அவன்.
இன்னும் அவன் அசையாததுகண்டு நிமிர்ந்தவள், "உன்னைத்தான். காபிப் பொடியை எடு" என அதட்ட, அவன் திகைத்தான். அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு, "எ..எங்கே இருக்கு?" என தயங்கிய குரலில் அவன் கேட்க, ஹரிணி சிரித்துவிட்டாள்.
வானதிக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் முகத்தைக் கறாராக வைத்துக்கொண்டு, "திரும்பித் திரும்பிப் பாத்தா? தானா வந்து உன் கையில விழுமா? இருக்கற அலமாரியில எல்லாம் தேடு. டப்பாவை எல்லாம் திறந்து பாரு. காபிக்கும் கடுகுக்குமாச்சும் வித்தியாசம் தெரியுமா?" என அதட்டல்போட, 'காபி கேட்டது ஒரு குத்தமாய்யா..?' என்ற முகபாவத்துடன் தேடத்தொடங்கினான் அவன்.
"பெரிய்ய அமெரிக்கா... சமைக்கக்கூடத் தெரியாம, அங்க என்னத்த தான் சாப்பிடறதோ.."
அவள் தனக்குள் முணுமுணுப்பதுபோல சத்தமாகவே சொல்ல, அவனும், "Hello, I can cook.." என்றான் சற்று ரோஷத்துடன்.
"ப்ச்... பிட்சாவை வாங்கி மைக்ரோவேவ்ல சூடு பண்ணுறதெல்லாம் சமையல் கிடையாது சார்!! ஒழுங்கா தண்ணி கொதிக்கறதுக்குள்ள காபிப் பொடியை எடுக்கற வழியைப் பாருங்க!!"
ஹரிணிக்கு அங்கு நடப்பவை யாவுமே சிரிப்பை மூட்ட, தரையில் புரளாத குறையில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள் பின்னணியில்!
அவனது அதிர்ஷ்டத்தின் பலனால், முன்வரிசையிலேயே காபித்தூள் அதன் பெயர்போட்ட ஜாடியில் இருக்க, பூரிப்புடன் அதை எடுத்து நீட்டினான் அவளிடம்.
அதை வாங்காமல், "திறந்து, ஒரு ஸ்பூன் எடுத்து, கொதிக்கற தண்ணியில போடு. அமெரிக்காவுல காபிகூடவா போடறதில்ல?" என்றாள் அவள்.
"I drink Starbucks..." என முனகிக்கொண்டு, காபித்தூளை நீரில் இட்டான் அவன். ஒரு உத்வேகத்தில் அதே கரண்டியில் அதைக் கலக்கிவிட, வானதி அவனை முறைக்க, ஹரிணியும் அதைப்பார்த்து வெடித்துச் சிரிக்க, திவாகருக்கு எரிச்சலாக இருந்தது.
வானதி நிதானமாக, "காபியை கலக்கின ஸ்பூனை இப்ப மறுபடி எப்படி டப்பாக்குள்ள போடறது?" என்க, "ப்ச்.. வேற ஸ்பூனை போட்டா ஆகாதா?" என பதில்கொடுத்தான் அவன்.
"நல்லது. அதே ஈர ஸ்பூனை அப்படியே போட்டுடுவியோன்னு நினைச்சேன்" என்றபடி காபித்தூள் ஜாடியை வாங்கி அலமாரியில் அதன் இடத்தில் வைத்துவிட்டு, கொதித்துவந்த டிகாக்ஷனை வடிகட்டி டபராவில் ஊற்றினாள் அவள்.
அவனிடம் திரும்பி, "பால், சக்கரை உனக்கு எவ்ளோ வேணுமோ கலந்துக்க. டபராவில இருக்கறதை ஒருதரம் டம்ளர்ல ஆத்திட்டு குடி" என்று படிப்படியாய் சொன்னாள்.
"காபியை எப்டி குடிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்.. சே!" என்றவாறு டபராவைப் பிடுங்காத குறையாக அவன் எடுக்க, கொதிக்கும் காபி கையில் சுட்டுவிட்டது. வானதி சிரிக்காமலிருக்க பெரும்பாடு பட்டாள்.
டபராவை வைத்துவிட்டு விரலை உதட்டில்வைத்து ஆற்றியபடி, "ஒரு காபி தான கேட்டேன்.. நீயே போட்டு எடுத்துட்டுவந்து குடுக்கக்கூடாதா?" என்றான் அவன், குரோதத்துடன்.
அவள் தீர்க்கமான பார்வையுடன் அவனை நிமிர்ந்து பார்த்து, "Give a man a fish, he eats for a day. Teach a man to fish, he eats every day" என்று உரைத்துவிட்டு, தனக்கு ஒரு கோப்பையில் காபி எடுத்துக்கொண்டு நகர, ஹரிணி பிரம்மிப்புடன் அவளுடன் சென்றாள்.
திவாகர் கண்களை அகல விரித்துப் பெருமூச்சு விட்டான்.
'இவகிட்டக் கத்துக்கறதுக்கு இன்னும் எத்தனை இருக்கோ...'
மாலை பானுவும் மீனாட்சியும் கோவிலிலிருந்து திரும்பியபோது, ஹரிணி நடந்ததை விவரிக்க, இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறைகூட அடுப்படிக்கு வந்திராத இளையவன் இன்று காபி போடக் கற்றுக்கொண்டதைக் கேட்டு மூக்கில் விரல்வைத்தார் மீனாட்சி.
"கெட்டிக்கார மருமகளாகத்தான் மாமா புடிச்சிட்டு வந்திருக்காரு அத்தை.."
பானுவும் அதே வியப்புடன் கூற, சிரிப்புக் குறையாத முகத்துடன், "வானதி எப்பவுமே என் மருமக தான், கெட்டிக்காரி தான்!" என்று முத்தாய்ப்பாகக் கூறினார் மீனாட்சி.
பானுவுக்குக் குழப்பமாக இருந்தாலும், எதையும் கேட்கவில்லை.
இரண்டு குடும்பத்துக்கும் இடையே என்ன உறவென்பது, இன்னமுமே இளைய தலைமுறைக்கு சரியாகப் பிடிபடவில்லை.
இரவு உணவு வரையிலும் அறைக்குள்ளேயே இருந்து வேம்பத்தூரிலிருந்து கொண்டுவந்த கோப்புக்களை ஆராய்ந்துகொண்டிருந்தாள் வானதி. திவாகரும் உடனிருந்தான்.
ஒரு நிலப்பத்திரத்தை அவன் எடுக்க, அப்போது எதையோ பார்த்து அதிர்ந்தாள் அவள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro