பாகம் 1
பாகம் 1
*சுரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.*
அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும், கல்லூரியின் பின்னாலிருந்த பெரிய விளையாட்டுத் திடலில் குழுமியிருந்தார்கள். அவர்கள், நிமல்... நிமல்... நிமல்...என்று ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்துக் கொண்டிருந்தது. சுரதா கல்லூரியும், சின்னமலை கல்லூரியும் இறுதிப்போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். இறுதி போட்டியின், இறுதி ஓவர். சுரதா கல்லூரி வெற்றி பெற ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மாணவர்கள் *நிமல்* என்று பெயர் சொல்லி அழைத்த அந்த மாணவன் பந்தை எதிர்கொள்ள தயாராக நின்றிருந்தான்.
இதற்கிடையில்...
ஒரு மாணவி, தன் தோழியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள், தங்கள் கல்லூரி வெற்றி பெறுவதைக் காண்பதற்காக.
"சீக்கிரமா வா வர்ஷினி, இல்லன்னா நம்ம காலேஜ் ஜெயிக்கிறத பாக்காம மிஸ் பண்ணிடுவோம்."
"உனக்கு வேணும்னா நீ போய்ப் பாரேன், சுதா. என்னை எதுக்கு இப்படி இழுத்துக்கிட்டு போற...?" என்றாள் வர்ஷினி.
"என்ன பொண்ணு டி நீ...? நம்ம காலேஜ் ஜெயிக்கிறத பார்க்கணும்னு ஆசை இல்லயா உனக்கு?"
"உனக்குத் தான் தெரியுமே, எனக்கு விளையாட்ல இன்டெரெஸ்ட்ட இல்ல..."
"எனக்காக வரமாட்டியா?" என்றாள் சுதா.
வேறுவழியின்றி சுதாவை பின்தொடர்ந்தாள் வர்ஷினி. அவர்கள் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார்கள்.
அதே நேரம், கடைசி ஓவரின் முதல் பந்து வீசப்பட்டது. நிமல் அந்த பந்தை அடித்த போது மைதானம் அமைதியாகிப் போனது. அங்கிருந்த அத்தனைப் பேரின் கண்களும், பறந்து சென்ற அந்த பந்தின் மீதே இருந்தது. மண்ணை தொடுவதற்கு முன்பாக, அந்த பந்து அங்கு நின்றிருந்த வர்ஷினியின் நெற்றியை தொட்டுப் பதம் பார்த்தது. அவளுடைய மெல்லியத் தோல் கிழிந்தது. ரத்தம் வழியும் தன் நெற்றியை அழுத்தி பிடித்துக் கொண்டு அப்படியேத் தரையில் அமர்ந்தாள் வர்ஷினி.
அதை சிக்சர் என்று டிக்லர் செய்தார் அம்பயர். சுரதா கல்லூரி, சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. சொந்த கல்லூரியில் பெற்ற வெற்றி என்றால் கேட்கவா வேண்டும்? அனைத்து மாணவர்களும் அதை கொண்டாடத் தொடங்கினார்கள், ஒரே ஒருவனைத் தவிர...! அந்த பந்தை அடித்த நிமல், அந்தப் பெண்ணுக்காக வருந்தினான். அவன் அங்கிருந்து அந்தப் பெண்ணை நோக்கி செல்ல எத்தனித்த போது, அங்கு கூடியிருந்த அவனுடைய தோழர்கள், அவனை தூக்கிப் போட்டு குதூகலிக்கத் தொடங்கினார்கள்.
கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, முதல் வேலையாக அந்த பெண்ணைத் தேடிச் சென்றான் நிமல். அந்த பெண்ணை தேடிக் கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய பிரயத்தனமாக இருக்காது என்று அவனுக்கு தெரியும். ஏனென்றால், அவளுடன் நின்றிருந்த சுதா, நிமலுக்கு பரிச்சயமானவள் தான். சுதா, நிமலுடைய சித்தி மகன், பிரகாஷுடைய கேர்ள் ஃப்ரெண்ட். பிரகாஷ் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். அவனுக்கு சுரதா கல்லூரியில் இடம் கிடைத்ததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில், நிமிலின் வீட்டில் தங்கிப் படித்து வருகிறான். அவர்கள் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த பொழுது, சுதா அந்த கல்லூரியில் வந்து சேர்ந்தாள். பிரகாஷுக்கு சுதாவை மிகவும் பிடித்துப் போனது. அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பழகி வருகிறார்கள். நிமலுக்கு சுதாவை நன்றாகவே தெரியும். அதனால் அவளுடன் இருந்த அந்த பெண்ணை கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினான்.
நேராக அங்கிருந்து ஸ்போர்ட்ஸ் ரூமிற்கு சென்றான். அது தான், காயம் கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம். அவன் யூகம் சரி தான். அங்கு சுதா, அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண், நிமலுக்கு தன் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தாள். ஆன்டிசெப்டிக் லோஷன் மூலமாக, அவளின் காயத்தை துடித்துக் கொண்டிருந்தாள் சுதா. அவர்களை நோக்கி வந்தான் நிமல்.
"அவங்க எப்படி இருக்காங்க, சுதா?" என்றான் நிமல்.
"கொஞ்ச நேரத்தில அவ சரியாயிடுவா" என்றாள் சுதா.
"ஹேய்... ஐம் சாரி..." என்று கூறியபடி அந்தப் பெண்ணை பார்த்த நிமலின் வார்த்தைகள், அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டன.
அந்த பெண், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்திலேயே, மிகச்சிறந்த கிரிக்கெட்டரான நிமல், *கிளீன் போல்ட்* ஆனான். அவள் அழுதிருக்கிறாள் என்பது அவள் சிவந்த கண்களைப் பார்த்த உடனேயே அவனுக்குப் புரிந்தது. அவள் கண்களும், முகமும் சிவந்து போயிருந்தன. அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.
சுதாவின் கையில் இருந்த பஞ்சு உருண்டையை தன் கையில் வாங்கிக் கொண்டு, அவளின் காயத்தை மெல்ல துடைக்கத் துவங்கினான். வர்ஷினிக்கு மட்டும் அல்லாது, சுதாவிற்கும் கூட சங்கடமாகத் தான் போனது.
மயிலிறகால் வருடுவது போல, அவளுடைய காயத்திற்கு மருந்திட்ட நிமலை, வைத்த கண் வாங்காமல் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் காயத்தின் மேல் ஒரு பேண்ட்- ஐட்டை ஓட்டினான்.
"ஐ அம் சாரி" என்றான்.
"பரவாயில்ல... அதுல உங்க தப்பு என்ன இருக்கு? நீங்க வேணும்னு அடிக்கலயே" என்று அவன் முகத்தைப் பார்க்காமல் கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல எத்தனித்த அவளை வழிமறித்தான் நிமல்.
"ஐ அம் நிமல்" என்றான். அவனைப் பார்த்து,
"ஓ... " என்றாள்.
"யாராவது அவங்க பேரை சொல்லி இன்டர்டியூஸ் பண்ணிக்கிட்டா, பதிலுக்கு நீயும் உன்னை இன்டர்டியூஸ் பண்ணிக்கணும். அதுவும், அது உன்னோட *சீனியரா* இருந்தா, நிச்சயம் செய்யணும்" என்றான் புன்னகையுடன்.
"ஐ அம் வர்ஷினி" என்றாள் பதட்டமாக.
"நைஸ் மீட்டிங் யு, வர்ஷினி" என்றான் நிமல்.
சரி என்று தலையசைத்து விட்டு, அங்கிருந்துச் சென்றாள் வர்ஷினி. சுதா அவளை பின் தொடர்ந்தாள். அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் நிமல். அவனால் நம்பவே முடியவில்லை, வர்ஷினி அவர்கள் பயிலும் அதே கல்லூரியில் தான் மூன்று வருடமாக படித்துக் கொண்டிருக்கிறாள் என்று. எப்படி அவன் இந்த பெண்ணை பார்க்காமல் போனான்? அவன், இறுதி ஆண்டு எம்பிஏ. அவள் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு. அவர்களுடைய வகுப்பறைகள் இருக்கும் கட்டிடங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும், சுதாவுடன் இந்தப் பெண்ணை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அதைப் பற்றி நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான். அவனுடைய சித்தி மகன் பிரகாஷ் மற்றும் அவனுடைய நண்பன் ராஜாவும் அவனை நோக்கி வந்தார்கள்.
"வர்ஷினியைப் பார்த்தியா?" என்றான் பிரகாஷ்.
ஆமாம் என்று தலையசைத்தான் விமல்.
"அவ எப்படி இருக்கா?" என்றான் ராஜா.
"நல்லா இருக்கேன்னு அவ சொன்னா. ஆனா, நான் அப்படி நினைக்கல"
"எப்படி அவ நல்லா இருக்க முடியும்? நீ அடிச்ச அடி அந்த மாதிரி..." என்றான் ராஜா.
"உனக்கு அந்தப் பெண்ணை முன்னாடியே தெரியுமா? நான் இதுக்கு முன்னாடி அவளைப் பார்த்ததே இல்லையே" என்றான் நிமல்.
"நம்ம கிளாஸை விட்டு வெளியே வர்றதுக்கு முன்னாடியே, அவ காலேஜை விட்டுப் போயிடுவா. அதனால தான் நீ அவளைப் பார்த்திருக்க மாட்ட" என்றான் ராஜா.
"அவ நம்மள மாதிரி இங்கேயும் அங்கேயும் சுத்த மாட்டா. கிளாஸ்குள்ள போயிட்டா, வெளியே வரவே மாட்டா" என்றான் பிரகாஷ்.
"ஸ்ட்ரேன்ஜ்..." என்றான் நிமல்.
"ஆமாம். அவளுடைய கார் அவளுக்காக காத்திருக்கும். பெல் அடிக்க பத்து நிமிஷத்துக்கு முன்னாடி அவளுடைய கார் நம்ம காலேஜ் கேம்பஸ்குள்ள வரும்"
"அவ சுதாவுடைய ஃப்ரண்டுன்னு என்னால நம்பவே முடியல" நிமல்.
"தனக்கு கிடைச்ச ஃபாரின் காலேஜ் அட்மிஷனை விட்டுட்டு, சுதா இந்த காலேஜ்ல சேர்ந்ததே வர்ஷினிகாகத் தான்" பிரகாஷ்.
"அப்படியா?" என்றான் ஆச்சரியமாக நிமல்.
"அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்தே ஃபிரண்ட்ஸ்"
"அவ வீடு எங்க இருக்கு?" என்றான் நிமல்.
"அவளப் பத்தி அதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தெரியாது. இதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி சுதா என்கிட்ட சொன்னது." பிரகாஷ்
"அதெல்லாம் சரி மச்சி, திடீர்னு எதுக்காக நம்ம *காலேஜ் கிங்* அவளைப் பத்தியெல்லாம் கேக்குறான்?" என்றான் ராஜா கிண்டலாக.
"உனக்கு அவளப் பத்தி முழுசா தெரியணும்னா, நான் சுதாகிட்ட கேட்டு உனக்கு அப்டேட் பண்றேன்" என்றான் பிரகாஷ்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அந்த பொண்ண காயத்தோட பார்க்கவே ரொம்ப பாவமா இருந்தது. அவ்வளவு தான்." நிமல்
"சரி... உனக்கு அவளை பாக்கணும்னா, இன்னைக்கு சாயங்காலம் பாரு. இன்னைக்கு லாஸ்ட் பீரியட் நமக்கு லீஷியர். நம்ம ப்ரோஃபசர் இன்னிக்கு வரல." ராஜா.
நிமல் ஆர்வமானான். அந்த பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று அவனுக்குள் ஆவல் மிகுந்தது. ராஜா கூறியது போல், மணியடித்து சில நிமிடத்திற்குள் அவள் பரபரவென ஓடி வந்தாள். அவள் நெற்றியில், நிமல் அணிவித்திருந்த பேண்ட்-எய்ட் இருக்கவில்லை. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. எதற்காக அவள் அதை எடுத்து விட்டாள்? மணியடித்து பத்தாவது நிமிடம், அவளுடைய கார், கல்லூரியை விட்டு பறந்தது. அப்பொழுது சுதா அங்கு வருவதை பார்த்தான் நிமல்.
"ஹாய் பிரகாஷ்" சுதா.
"ஹாய்..." பிரகாஷ்.
"உன்னோட ஃபிரண்டு எப்படி இருக்கா?" என்றான் நிமல்.
"பரவாயில்ல"
"எதுக்காக அவ பேண்ட்-எய்ட்டை எடுத்துட்டா?"
"அதைப் பாத்தா அவங்க அம்மா திட்டுவாங்க"
"திட்டுவாங்களா? ஆனா, அதுல அவ தப்பு எதுவுமே இல்லயே..."
"அவங்க அம்மாவுக்கு அவ மேல பாசம் ரொம்ப ஜாஸ்தி. அதனால தான்..."
அவள் பதிலைக் கேட்டு, அவனுடைய புருவங்கள் ஆச்சரியத்தால் மேலெழுந்தது.
குமணன் இல்லம்
நெற்றியில் பட்டக் காயத்தை மறைத்துக் கொண்டு, பயந்தபடி வீட்டினுள் நுழைந்தாள் வர்ஷினி. அப்பொழுது 'நில்' என்ற குரல் அவளை தடுத்தது. நின்ற இடத்தில் அப்படியே அசையாமல் நின்றாள் அவள். அவளுடைய அம்மா கல்பனா அவளை நோக்கி வந்து, அவளைத் தன் பக்கம் திருப்பினார்.
"என்ன இது?" என்றார் அவள் நெற்றியில் இருந்த காயத்தைச் சுட்டிக்காட்டி.
"படிக்கட்டில் இருந்து ஸ்லிப்பாகி விழுந்து பில்லர்ல இடிச்சிகிட்டேன், மா..."
அவள் கூறியது தான் தாமதம், அவள் கன்னத்தில் இடி போல ஒரு அறை விழுந்தது.
"உன்னோட கவனம் எங்க இருந்தது? எவனை பார்த்துகிட்டு படிக்கட்டைவிட்டு இறங்கின? உன்னுடைய படிப்பு, இந்த மிடுக்கான துணிமணி, இது எல்லாம் எங்களுடைய கௌரவத்தைக் காப்பாத்திக்கத் தான். அதெல்லாம் உனக்காக நாங்க செய்றோம்னு நினைக்காதே. ஏதாவது புத்திசாலித்தனமா செய்றதா நினைச்சு, ஏடாகூடமா செஞ்சா, நான் என்ன செய்வேன்னு உனக்கே நல்லா தெரியும். உன் கழுத்தில் காலை வச்சி மிதிச்சி கொன்னுடுவேன். ஞாபகத்துல வச்சிக்கோ."
அவள் கண்கள் அருவியாய் பொழிய, சரி என்று தலை அசைத்தாள் வர்ஷினி.
"உன்னோட ரூமுக்கு போ. மறுபடி வந்து உன் மூஞ்சிய என்கிட்ட காட்டாத." என்று கூறிவிட்டு, சமூக சேவை செய்ய, லேடிஸ் கிளபுக்கு சென்றார் கல்பனா. இந்தவித *பாசத்தை* பற்றி தான் சுதா கூறினாள்.
வர்ஷினியின் தந்தை, குமணன், பிரசித்தி பெற்ற வியாபாரப்புள்ளி. *பியூர் சண்டல்* சோப் கம்பெனியின் ஏகோபித்த முதலாளி. இறக்கமின்னைக்கும், அகம்பாவத்திற்கும் அவர் பெயர் போனவர். அது தான் அவருடைய வளர்ச்சிக்கும் காரணம். உண்மை, நேர்மை, நியாயம் எல்லாம் அவருடைய அகராதியிலேயே கிடையாது. பணம் ஒன்று தான் அவருடைய ஒரே குறிக்கோள். குறுக்கு வழியில் சென்று வெற்றியை ஈட்ட அவர் என்றுமே தயங்கியதில்லை. அவருடைய மனைவி கல்பனா, அம்மா என்ற உறவை விட, சமூக சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பெண்மணி.
பெற்றோர்களிடமிருந்து தினந்தோறும் அடி வாங்குவது வர்ஷினியின் வழக்கம். சரியோ, தவறோ, உதை படுபவள் அவள் தான். காரணம் பெரிதாய் ஒன்றும் இல்லை. அவள் பெண் குழந்தையாய் பிறந்தது தான். அவளுடைய பெற்றோர்கள் எப்பொழுதும் பெண் குழந்தை வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக, இதயமற்ற அவர்களுக்கு மகளாய் பிறந்துவிட்டாள் வர்ஷினி. அன்பு என்ற வார்த்தை, அவளைப் பொறுத்தவரை வெறும் வார்த்தை மட்டுமே. தன் பெற்றோரிடமிருந்து வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவள் கண்டதில்லை. அந்த வீட்டில் அவளுக்கு இருக்கும் ஒரே துணை, ஒரு ஆதரவு, அவளுடைய தம்பி ரிஷி மட்டுமே. எட்டாம் வகுப்பில் படிக்கும் மிகச் சிறிய பையன் அவன். அவனுக்கு அந்த குடும்பத்தில் இருக்கும் மரியாதை அளப்பரியது. ஏனென்றால், அவன் ஆண்பிள்ளை. வர்ஷினி பசிக்கு உணவு கேட்கவே தயங்கும் நிலையில், ரிஷிக்கோ விளையாட்டு பொருட்களை ஆயிரகணக்கில் பணம் கொடுத்து வாங்கி கொடுத்தனர். இது தான் அவளுடைய நிலை.
சுதா ஒருத்தி தான், சிறு வயது முதற்கொண்டே, அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒரு தோழி. வர்ஷினிக்கு தன்னை தவிர வேறு யாரும் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தான், மேற்படிப்பிற்காக லண்டன் செல்வதையே உதறித் தள்ளினாள் சுதா.
அதனால் தான், தனக்கு அன்புடன் சிகிச்சை செய்த நிமலை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. ஏனென்றால் அது தான் முதன்முறை, அக்கறை என்பதை அவள் சுதாவிற்கு அடுத்தபடியாக வேறு ஒருவரிடம் கண்டது.
ஆக... நமது கதாநாயகன் நிமல், வர்ஷினியின் வாழ்க்கையில் வந்து விட்டதால், அந்த நரகத்திலிருந்து அவளை மீட்டு, எப்படி அவன் அவளுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டப் போகிறான் என்பதை வரப்போகும் அத்தியாயங்களில் காண்போம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro