Part 9
பாகம் 9
*இனியவர்களின் இருப்பிடம்*
மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் நிமல். சூடேறிப் போயிருந்த அவனுடைய மனதை குளிர்விக்க வேண்டும் அவனுக்கு. வர்ஷினியின் துப்பட்டாவில் பற்றி எரிந்த நெருப்பை நினைத்த போதெல்லாம் அவன் பலவீனமடைந்தான். அவளுடைய நடுங்கிய கைகளும், பயந்த முகமும் அவனுடைய நிம்மதியை கெடுத்தன. எதற்காக அவன் அப்படி நடந்து கொண்டான்? ஏன் அவனால் அவளுக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை? அவள் யார் என்று அவனக்கு நன்றாக தெரியும். அவள் குமணனின் மகள்...! அவனுடைய வாழ்வின் மிகப்பெரிய எதிரி. அவன் குமணனின் குனைத்தை நன்றாகறிவான். அப்படி இருக்கும் பொழுது, எதற்காக அவனால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை ?
இல்லை... அவளுடைய நினைப்பிலிருந்து வெளியே வந்து தான் தீர வேண்டும். அவளுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுக்க கூடாது. அவள் குமணனுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டாள் போலிருக்கிறது. பிறகு, அவளைப் பற்றி யோசிப்பதில் என்ன பயன்? அவன் எந்த ஒரு ஏமாற்றத்தையும் சந்திக்க தயாராக இல்லை. அவளைவிட்டு விலகி இருப்பதே நல்லது.
இரண்டு நாட்களுக்கு பிறகு
நிமல் வர்ஷினியை முழுவதுமாக தவிர்த்து வந்தான். தவிர்ப்பது என்றால், அவளைப் பார்க்க கூட இல்லை அவன். அது அவளை மிகவும் வேதனைப் படுத்தியது. அவள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதை போல உணர்ந்தாள். ஒரு முறையாவது அவனை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள்.
தன் வகுப்பறையைவிட்டு அவனை தேடி வெளியே வந்தாள். அப்பொழுது அவன், அரங்கத்தின் அருகில் நின்றிருப்பதை பார்த்து அவளுடைய முகம் பிரகாசம் அடைந்தது. எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக அவனை நோக்கி ஓடிச் சென்றாள். அவள் அப்படி தாறுமாறாக ஓடி வருவதை மாணவர்கள் வித்தியாசமாக பார்த்தார்கள்.
நிமல் நின்றிருந்த இடத்திற்கு அவள் வந்த பொழுது, அவன் அங்கு இருக்கவில்லை. மூச்சிரைக்க, இங்குமங்கும் ஓடி, ஒரு பைத்தியக்காரியை போல, அவனை தேடினாள் அவள். அவனை காணாமல் அவள் கண்கள் அருவியாய் பொழிந்தது. அவள் இதயத்தில் ஏற்பட்டிருந்த வேதனையின் வெளிப்பாடு தான் அது.
அவள் கண்ணீர் சிந்தியதை பார்த்து, மற்றொரு இதயமும் வேதனை அடைந்தது. அது அரங்கத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலையை காண சகிக்காமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டான் நிமல். அவள் அவனை கண்டுபிடிக்கும் முன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
வர்ஷினியை பின் தொடர்ந்து வந்த சுதா, அவள் நடு மைதானத்தில் கண்ணீருடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க வர்ஷினி? எதுக்காக இப்படி பைத்தியக்காரி மாதிரி நடந்துக்குற?"
"நிமலை பார்க்க வந்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவர் இங்க தான் இருந்தார்"
"நீ வேற யாரையாவது பார்த்திருப்ப"
"இல்ல. எனக்கு தெரியும், அது நிமல் தான்"
"சரி விடு. அவர் வேற எங்கயாவது போயிருப்பார்"
"அவர் ஏன் என்னை அவாய்ட் பண்றாருன்னு எனக்கு புரியல" என்றாள் வேதனையுடன்.
"வர்ஷினி... நீ எதுக்காக இப்படி நடந்துக்குற? அவர் உன்னை அவாய்ட் பண்ணா, என்ன அதனால?"
"நான்... நான் அவரை விரும்புறேன், சுதா. அவருடைய ஒரே ஒரு ஸ்மைல் மட்டுமே எனக்கு சந்தோஷத்தை தருது."
"வர்ஷினி, நடக்க முடியாத ஒரு விஷயத்துல, உன்னுடைய மனசை தொலைக்காத..."
"நடக்க முடியாத விஷயமா...? ஏன் அப்படி சொல்ற?" என்றாள் சோகமாக
"சில சமயத்துல, நம்ம உண்மையை ஏத்துகிட்டு தான் ஆகணும்"
"என்ன உண்மை?"
"உன்னை தவிர்க்க, அவருக்கு காரணம் இருக்கு."
"காரணமா...? என்ன காரணம்?"
"உங்க அப்பா, விபி கம்பெனிக்கு எதிரி. நிமல் வேற யாரும் இல்ல, விபி கம்பெனி முதலாளி விஸ்வநாதனுடைய ஒன்லி சன்"
அந்த செய்தி வர்ஷினிக்கு அதிர்ச்சியை தந்தது. அவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
"வர்ஷினி, ப்ளீஸ் அழாதே"
"நான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவள்னு பாத்தியா சுதா. என் மேல அக்கறை காட்ட, எனக்குன்னு ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க போலிருக்கு. நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணுனேன்னு தெரியல, இப்படி அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்"
"ப்ளீஸ் ரிலாக்ஸ்"
"நான் எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும்? கற்பனை கூட பண்ணி பாக்க முடியாத, விலை மதிப்பில்லாத ஒரு விஷயம் என் கையில் கிடைச்சி, அதை நான் தவறவிட்டா, நான் எப்படி ரிலாக்சா இருக்க முடியும்?"
"அது கசப்பான உண்மையா இருந்தாலும், நம்ம ஏத்துகிட்டு தானே ஆகணும்?"
"நான் ஒரு தடவை முயற்சி பண்ணி பாக்கட்டுமா?"
"உனக்கு வலி மட்டும் தான் மிஞ்சும்"
"ஏற்கனவே நான் வலியில தானே இருக்கேன்...? புதுசா எனக்கு என்ன வலிச்சிட போகுது? ஒரு தடவை நான் நிமல்கிட்ட பேசி பாக்குறேனே..."
"சரி... பேசி பாரு" என்றாள் சுதா.
நிமலை தேடி வந்தாள் வர்ஷினி. அவன் ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு, கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்தவுடன் வழக்கம் போல் அவள் முகம் மலர்ந்தது... அவனை நோக்கி ஓடினாள்.
தன்னுள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு, கண்விழித்தான் நிமல். வர்ஷினி அவனை நோக்கி வருவதை பார்த்து அவன் சங்கடபட்டான். அங்கிருந்து சென்று விடலாம் என்று எழுந்து நின்று, தன்னுடைய கால்சட்டையில் தூசி தட்டினான். அவன் வர்ஷினியை பார்க்காமல் அவளை தாண்டி சென்ற பொழுது,
"நிமல்..." என்று அழைத்தாள் வர்ஷினி.
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அமைதியாக அவளை பார்த்தான் நிமல். அவளுடைய முகம் அமைதியற்று இருந்ததை அவன் உணர்ந்தான்.
"எஸ்...?"
"நீங்க... என் மேல கோவமா இருக்கீங்களா?"
"கோவமா? நான் ஏன் உன் மேல கோவமா இருக்கணும்?"
"நீங்க என்கிட்ட பேசுறதே இல்ல... சிரிக்கிறது கூட இல்ல..."
"இங்க பாரு, நம்ம ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் கிடையாது. ஒரே க்ளாஸ் கிடையாது... ஒரே டிபார்ட்மெண்ட் கூட கிடையாது. அப்படி இருக்கும் போது, உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு?" என்றான் தன் தோள்களை குலுக்கியவாறு.
"முன்னாடி எல்லாம் ரொம்ப நல்லா பேசிகிட்டு இருந்தீங்களே...?"
"என்னால உனக்கு காயம்பட்டுது. அதனால உன்னை ட்ரீட் பண்ணேன். அவளவு தான்."
"அவ்வளவு தானா?" என்றாள் வேதனையாக.
"ஆமாம்"
"நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?"
"ஏன்னா, இது தான் நான்."
"நீங்க பொய் சொல்றீங்க. நீங்க இந்த மாதிரி கிடையாது"
"உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியல"
"உண்மையாவே உங்களுக்கு புரியலயா?"
அவளுக்கு முதுகைக் காட்டியவாறு, திரும்பி நின்று கொண்டான் நிமல், அந்தப் பெண்ணின் வேதனை நிறைந்த முகத்தை காண அவனுக்கு தைரியம் இல்லை.
"உண்மையாவே எனக்கு புரியல" என்றான்.
"எனக்கு என்ன பிரச்சனைன்னு, என்னுடைய கண்ணீரும், என்னுடைய கெஞ்சலும் கூட உங்களுக்கு சொல்லலயா? என்னுடைய அழுகையை பாத்து கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?"
மெல்ல திரும்பி அவள் முகத்தை பார்த்தான். யாரோ அவன் இதயத்தை குத்தி கிழித்தது போல் இருந்தது அவனுக்கு. இந்த பெண் ஏன் பார்க்கவே இவ்வளவு பாவமாக இருக்கிறாள்? ஏதாவது செய்து அவள் கண்ணீரை நிறுத்திவிட முடியாதா என்று அவன் மனம் பதைபதைத்தது.
தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டாள் வர்ஷினி.
"உங்களால புரிஞ்சுக்க முடியலன்னா பரவாயில்ல... உங்களுக்கு புரிய வைக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான்... நான் உங்களை காதலிக்கிறேன். உங்க கூடவே இருக்க விரும்புறேன்... உங்க பக்கத்துல... சாகுற வரைக்கும்"
அவளுடைய நேரடியான ஒப்புதல் வாக்குமூலத்தை கேட்டு சிலையாகிப் போனான் நிமல். தன் காதலை வேண்டி, கண்ணீரால் ஈரமாகி விட்டிருந்த அவள் முகத்தை, பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான் நிமல்.
"நீ என்ன பைத்தியமா? என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்? நான் யாருன்னாவது உனக்கு தெரியுமா? நம்ம கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சந்திச்சோம்... அதுக்குள்ள உனக்கு என் மேல காதல் வந்துடுச்சா? உன்னை புத்திசாலி பொண்ணுன்னு நெனச்சேன். இது நடக்காது. உன்னுடைய மனசை மாத்திக்கோ. உன்னுடைய நல்லதுக்காகத் தான் சொல்றேன்."
"நீங்க என்னுடைய நல்லதை பத்தி யோசிக்கிறீங்க. அதனால தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க என் மேல காட்டுற அக்கறை தான், என்னை உங்களை பத்தியே நினைக்க வச்சது."
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"உங்களுடைய அக்கறையை நான் தப்பா புரிஞ்சுகிட்டேன். நான் உங்ககிட்ட இருந்து இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க கூடாது. உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு என்னை மன்னிச்சிடுங்க" என்று திக்கித் திணறி, கண்ணீருக்கு இடையில் கூறி முடித்துவிட்டு, அங்கிருந்து தன் கண்ணீரைத் துடைத்தபடி ஓடிப்போனாள்.
செய்வதறியாது திகைத்து நின்றான் நிமல். தானுண்டு தன் வேலையுண்டு என்று நிம்மதியாய் இருந்தாள் அவள். அவள் மனதில் பொய்யான நம்பிக்கையை வளர்த்து, அவளுடைய நிம்மதியை கெடுத்து விட்டான் இவன். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அவனுடைய அன்புக்காக ஏங்கி நிற்கிறாள் அந்த பெண். இவனால் தான், அவள் தன் மனதில் ஒரு கற்பனை உலகத்தை வடித்துக் கொண்டாள். அவனால் எப்படி அதைத் தகர்த்து எறிய முடியும்?
தன்னுடைய மனசாட்சிக்கு பதில் கூற வழியில்லாமல், குத்துச்சண்டை களத்தில் இருந்த மணல் மூட்டையை குத்தி, தன் கோபத்தை தீர்க்க முயன்று கொண்டு இருந்தான் நிமல்.
அப்பொழுது, ராஜாவும் பிரகாஷும் வந்து, அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு, கையில் இருந்த பிஸ்கெட்டை சாப்பிட தொடங்கினார்கள். அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தான் நிமல்.
"நீ சொல்றது உண்மையா?" என்றான் பிரகாஷ்.
"நூறு சதவீதம் உண்மை. எங்க அப்பாவுடைய சோர்ஸ் அதை நிச்சயப்படுத்திடாங்க"
"என்ன கொடுமை இது?"
"நான் அந்த முட்டாள் பயலை அடியோடு வெறுக்கிறேன்" என்றான் ராஜா.
"நானும் தான்... அவன் ஒரு பொறுக்கி"
"எப்படித்தான் வர்ஷினி, அவனோட வாழ போறாளோ தெரியல" என்றான் ராஜா வேதனையுடன்.
வர்ஷினியின் பெயரைக் கேட்டவுடன், அந்த மண் முட்டையை தன் கைகளில் பற்றிக் கொண்டு நின்றான் நிமல்.
"பாவம் அந்த பொண்ணு. குமணனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. அதனால தான், அவளை காமேஸ்வரனுடைய மகன், கார்த்திக்குக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறான்."
"என்னது? கார்த்திக்கா?" என்றான் அதிர்ச்சியாக நிமல்.
"ஆமாம். அப்பா சொன்னாரு. குமணன், அவளை கார்த்திக்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு, அவருடைய அரசியல் செல்வாக்கை உயர்த்திக்க திட்டமிட்டிருக்கிறாராம்" என்றான் சகஜமாக ராஜா.
"எப்படித் தான் ஒரு அப்பாவுக்கு இப்படி எல்லாம் செய்ய மனசு வருதோ...? கார்த்திக் எப்படிப்பட்ட பொறுக்கின்னு அவருக்கு தெரியாதா?" என்றான் பிரகாஷ்.
"அது அவளுடைய தலையெழுத்து" என்றான் ராஜா.
"அவளுடைய உணர்வுகளை பத்தி கவலைப்பட யாருமே இல்ல. பாவம், அவளைவிட, எல்லாருக்கும் அவங்களுடைய பிசினஸ் தான் முக்கியமா போச்சு" என்று மறைமுகமாக நிமலை தாக்கினான் பிரகாஷ்.
அவன் கூறியது நிமலை எரிச்சலூட்டியது. எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றான் நிமல். அவன் முகம் போன போக்கைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
இனியவர்களின் இருப்பிடம்
உணவு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த உணவைப் பற்றி கவலைப்படாமல், கார்த்திக்கை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் நிமல். அவன் வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள போகிறானா? அப்படி என்றால் அவளுடைய எதிர்காலம் என்னாவது? அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி இவன் ஏன் கவலைப்பட வேண்டும்? அவன் தான் அவளுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டானே. ஆனால், அவனால் கார்த்திக்கை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பொழுது, பார்வதியின் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது. அதில் புதிய எண் ஒளிர்ந்த போதிலும் எடுத்துப் பேசினார் பார்வதி.
"யார் பேசுறீங்க?"
"ஆன்ட்டி, நான் வர்ஷினி பேசுறேன்"
"ஹாய் என்ஜிஎஃப்... எப்படி இருக்க?"
அதை கேட்டு, நிமிர்ந்து அமர்ந்தான் நிமல். அவனுடைய முகபாவத்தை அமைதியாய் கவனித்துக்கொண்டிருந்தான் பிரகாஷ்.
"நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?"
"நான் சூப்பர் ஃபைன். உன்னுடைய உடம்பு எப்படி இருக்கு?"
"குட், ஆன்ட்டி"
"எனக்கு ஃபோன் பண்ணணும்னு உனக்கு எப்படி ஞாபகம் வந்தது? உன்னுடைய சீனியர் உன்னை ஏதாவது ட்ரபுல் பண்ணானா?"
சிரித்துக் கொண்டே அவர் நிமலை பார்க்க, அவனுடைய முகம் அமைதியாய் இருந்ததை அவர் கவனித்தார்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, ஆன்ட்டி. நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்ல தான் கால் பண்ணேன்"
"எதுக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்லணும்?"
"அவர் என்னை காயம் படாம காப்பாத்தினார். அதுக்கப்பறம் நான் அவரைப் பார்க்கல. அதனால தான் உங்களுக்கு கால் பண்ணேன்"
"உனக்கு என்ன ஆச்சு?" என்றார் கவலையாக.
"ஒரு சின்ன ஃபயர் ஆக்சிடென்ட் ஆன்ட்டி"
"ஃபயர் ஆக்சிடன்ட்டா? உனக்கு ஏதாவது காயம் பட்டுச்சா?" என்றார் அக்கறையுடன்.
"இல்ல, ஆன்ட்டி. எனக்கு காயம் படாம, நிமல் காப்பாத்திட்டார்."
"தேங்க் காட்... இரு நான் ஃபோனை நிமல் கிட்ட கொடுக்கிறேன்"
அவர் ஃபோனை நிமலிடம் கொடுத்தார்.
"ஹலோ..."
"ஐ அம் சாரி. நீங்க என்னை காப்பாத்தினப்போ, உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்"
"பரவாயில்ல..."
"இல்லங்க, நிமல்... "
அவள் அழுகையை கட்டுப் படுத்துவது அவனுக்கு புரிந்தது.
"நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும். ஏன்னா, நம்ம ஃபிரண்ட்ஸ் இல்ல... க்ளாஸ் மெட்சும் இல்ல. எந்த விதத்திலும் உறவில்லாத ஒருத்தருக்கு நன்றி சொல்றது தான் மரியாதை... ரொம்ப தேங்க்ஸ். ஆனா, நீங்க என்னை காப்பாத்தாமலே இருந்திருக்கலாம்..." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் வர்ஷினி, அவனுடைய பதிலுக்கு காத்திரமல்.
தன்னால் அவளுக்கு ஏற்பட்டிருந்த நிலையை பார்த்து அவனுக்கு வேதனை ஏற்பட்டது.
"அவளுக்கு என்ன ஆச்சு, நிம்மு?" என்றார் பார்வதி.
நிமல் எதுவும் கூறுவதற்கு முன் பிரகாஷ் முந்திக் கொண்டான்.
"சீரியஸா ஒன்னும் ஆகல. ஒயிட் பாஸ்பரஸ் அவ துப்பட்டாவில் விழுந்திடுச்சு. அது காஞ்ச உடனே தீ பத்தி எரிய ஆரம்பிச்சுடுச்சு. நிமல் தான் நெருப்பை அணைச்சி அவளை காப்பாத்தினான்."
"ஏன் தான் கடவுள் அந்த பெண்ணையே சோதிக்கிறாறோ"
"அவளுக்கு காயம் எதுவும் படல. அவ நல்லா தான் இருக்கா" என்றான் பிரகாஷ்.
"நெருப்பை பார்த்தவுடன் அவ எப்படி பயந்திருப்பா...?"
"ஆமாம். ரொம்ப பயந்து தான் போனா. அவளால தண்ணி கிளாஸ கூட கையில பிடிக்க முடியல. அவ கை அவ்வளவு நடுங்குச்சி."
வர்ஷினியை தண்ணீர் குடிக்க செய்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை நிமலால். அதற்காகத் தானே வேண்டுமென்று அதை பற்றி கூறினான் பிரகாஷ்.
"பாவம் அந்த பொண்ணு"
"விடுங்க பெரியம்மா..."
"இல்ல பிரகாஷ். எனக்கு என்னமோ அந்த பெண்ணை பார்க்க பாவமாக இருக்கு. அவ சந்தோஷமா இல்லன்னு எனக்கு ஏன் தோணுதுன்னு புரியல "
"இருக்கலாம்... ஆனா, நம்ம என்ன செய்ய முடியும்? அது அவளுடைய தலையெழுத்து. சில பேருக்கு வாழும் போதே நரகத்தை அனுபவிக்கணும்னு எழுதியிருக்கும் போல இருக்கு" என்ற பிரகாஷ், நிமலை நோக்கி ஒரு பொருள் பொதிந்த பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து சென்றான்.
வர்ஷினியை நினைத்தபடி, உணவு மேசையை சுத்தப்படுத்த துவங்கினார் பார்வதி.
ஃபோனில் வர்ஷினி பேசிய பேச்சு, நிமலின் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் அடைந்திருக்கும் அதே வேதனையில் தான்,
அவனும் இருக்கிறான் என்பதை, அவன் அவளுக்கு எப்படி உணர்த்த முடியும்? அவள் அவனை காதலிக்கிறேன் என்று கூறிய விதம் அவன் இதயத்தை கூரு போட்டது. அவள் அவ்வளவு எளிதாக அவள் மனதில் இருப்பதை போட்டு உடைப்பாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனால் என்ன செய்ய முடியும்? அவளை சுலபமா தவிர்த்து விடலாம் என்று எண்ணினான். ஆனால், அது சுலபமாக இருக்க போவதில்லை என்று அவனுக்கு புரிந்தது.
இந்த விஷயத்தில் அவன் குமணனைப் பற்றி யோசித்து தான் ஆக வேண்டுமா? ஏன் யோசிக்க வேண்டும்? அவனுக்கும் வர்ஷினிக்கும் இடையில் குமணன் யார்? ஒருவேளை பிரகாஷ் கூறியது போல, தன் தந்தையை விட்டு, அவனுடன் வர வர்ஷினி தயாராக இருந்தால்...? அவனுடைய வாழ்க்கையை வர்ஷினியுடன் அவனால் அமைத்துக்கொள்ள முடியாதா? எல்லா விஷயத்திலும் தைரியமாக முடிவெடுக்கும் அவன், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் தயங்க வேண்டும்? ஆனால், அவன் மட்டும் முடிவெடுத்து என்ன செய்வது? இது வர்ஷினியையும் சார்ந்த விஷயம். அவளுடன் ஏன் அவன் பேசி பார்க்க கூடாது? அவளுடைய காதலை, அவள் தைரியமாக கூறும்பொழுது, அவனால் மட்டும் ஏன் முடியாது? என்று எண்ணினான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro