Part 8
பாகம் 8
தன் விதியை நொந்தவாறு தன் அறையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் நிமல். அவன் வாழ்வில் பல பெண்களை கடந்து வந்திருக்கிறான். அதில் சிலர், அவனிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரிடத்திலுமே அவனுக்கு ஈர்ப்பு என்பது எழுந்ததே இல்லை. முதல் முறையாக அவனுக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது...! அந்த பெண்ணை விடாமல் துரத்தினான்... அவளுக்கு வேண்டியதை வரிந்து கட்டிக்கொண்டு செய்தான்... அவளிடம் அவன் காதலை கூறுவதற்கு முன்பாக, அவனுடைய காதல் முறிந்தும்விட்டது.
வர்ஷினி குமணனின் மகள். உலகத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் விட்டுவிட்டு, அவள் மீது அவனுக்கு ஏன் காதல் வந்தது? முதல் பார்வையிலேயே அவன் ஏன் தன்னை முழுமையாக அவளிடம் இழந்தான்? எதற்காக விதி அவனை அவள் முன் அழைத்துச் சென்று நிறுத்தியது? அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
"வர்ஷினினினி..." என்று கதறினான்.
இதிலிருந்து அவன் எப்படி வெளிவரப் போகிறான் என்று அவனுக்கு புரியவேயில்லை.
*இல்லை... நீ தைரியம் இழந்துவிடாதே. அவளைப் பற்றி நினைக்காதே. அவள் ஒரு விஷப் பாம்பின் வாரிசு. அவளுக்கும் அவளுடைய தந்தையின் குணம் தான் இருக்கும். அவளுக்காக நீ பலவீனம் அடையாதே. அவளிடம் நெருங்காமல் பார்த்துக் கொள். அதுவே உன்னை ஆசுவாசப்படுத்தும்* என்று தனக்குத் தானே அறிவுரை கூறிக் கொண்டான் நிமல்.
கல்லூரி
வர்ஷினியை தவிர்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான் நிமல். அவள் முன்பு வரக் கூட இல்லை அவன். ஆனால் அதை செய்யக்கூடாது என்று அவன் வர்ஷினியை தடுத்துவிட முடியாது அல்லவா...? அவள் அவனைத் தேடி வந்தாள். அவளைப் பார்க்காதவன் போல வேறு பக்கமாக சென்றுவிட்டான் நிமல். அவனுடைய செயல் வர்ஷினிக்கு விசித்திரமாய்பட்டது. அவன் அவளை தவிர்க்கிறான் என்பதை புரிந்து கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அந்த நாள் முழுவதும் அது தொடர்ந்தது.
மறுநாள்
ராஜாவும், பிரகாஷும் வர்ஷினிக்காக வருத்தப்பட்டார்கள். அவளைப் பற்றி நிமிலின் முன் பேசுவதில்லை என்று தீர்மானித்து கொண்டார்கள். நிமல் என்ன தான் செய்கிறான் என்று பார்க்க நினைத்தார்கள் அவர்கள். அவனோ, தான் நன்றாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு அனைத்து வித முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான். தன் கைகடிகாரத்தை பார்த்தான் நிமல். இன்னும் இரண்டு நிமிடங்களில், வர்ஷினியின் கார் கல்லூரிக்குள் வந்துவிடும்.
"நான் இப்ப வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ராஜாவும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வர்ஷினி காரைவிட்டு இறங்குவதை அவர்கள் பார்த்தார்கள். புதிய நம்பிக்கையை கொடுத்து, அவளுடைய தூக்கத்தை கெடுத்துவிட்ட அந்த ஒரு நபரை தேடி அவளுடைய கண்கள் அலைந்தன.
ராஜாவும் பிரகாஷும் அங்கு நிற்பதை பார்த்து சட்டென்று தலை குனிந்து கொண்டாள் அவள். மறுபடியும் மெல்ல தன் தலையை உயர்த்தி, அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.
"ஹாய் வர்ஷினி, சுதா ஃப்ரீயா இருந்தா கொஞ்சம் வரச் சொல்றியா?" என்றான் பிரகாஷ்.
"சொல்றேன்" என்று கூறிவிட்டு நடந்தாள்.
"இன்னிக்கு கல்சுரல்ஸ் ப்ரோக்ராம் ரிகர்சல் இருக்கறதுனால, நிமல் காலேஜுக்கு வரலன்னு நினைக்கிறேன்" என்றான் ராஜா.
அதைக் கேட்டு ஒரு நொடி நின்றுவிட்டு, மறுபடியும் நடக்க துவங்கினாள் வர்ஷினி. ராஜாவும் பிரகாஷும் பெருமூச்சு விட்டார்கள். அவர்கள் பொய்யுரைக்க காரணம், வர்ஷினி நிமலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் என்று தான்.
"குமணனுடைய பொண்ணா இருந்தாலும் கூட, இந்த பொண்ணு ஏன் தான் இப்படி பாவமா இருக்காளோ தெரியல" என்று அலுப்புடன் கூறினான் ராஜா.
"நிமலும் இந்த பொண்ண பத்தி அப்படித் தான் ஃபீல் பண்றான்"
"கிடையாது... அவனோட மனசுல இந்த பொண்ண பத்தி ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றான் நிமல். நான் அந்த பொண்ணு மேல வச்சிருக்கிறது வெறும் பரிதாப உணர்வு மட்டும் தான். ஆனா, நிமல் அவ மேல வச்சிருக்குறது நிச்சயமா பரிதாபம் கிடையாது."
"அவன் தான் ஒத்துக்க மாட்டேங்கிறானே... வர்ஷினிகிட்ட இருந்து அவன் விலகி போறத நீ பாக்கலயா? அவ கார் வரதுக்கு முன்னாடி அவன் எப்படி இங்கிருந்து ஓடிப்போனான்னு நம்ம தான் பாத்தோமே..."
"ஆமாம்... சரியான பிடிவாதக்காரன் அவன். ஏன் தான் விதி, அவனோட மட்டும் இப்படி கொடூரமான விளையாட்டு விளையாடுதோ தெரியல" என்றான் ராஜா.
"நம்மால எதுவும் செய்ய முடியாதா?" என்றான் பிரகாஷ் பரிதாபமாக.
"செய்யலாம். செய்யறதுக்கு என்கிட்ட ஒரு பிரமாதமான மேட்டர் இருக்கு"
"அப்படியா...? என்ன அது?" என்றான் ஆர்வமாக.
"என்னை இப்போ எதுவும் கேட்காதே. நேரம் வரும் போது சொல்றேன் "
"ஒரு வேளை, அந்த மேட்டர் வேலை செய்யலன்னா?"
"நிச்சயமா வேலை செய்யும்... அவனுடைய காதல் உண்மையா இருந்தா "
"க்ளாசுக்கு போலாம் வா"
இருவரும் தங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். வழக்கம் போல வகுப்பில் பாதி மாணவர்கள் இல்லை. மீதம் இருந்தவர்களும் மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன் கையில் இருந்த புத்தகத்தை தீவிரமாக படித்துக் கொண்டிருந்தான் நிமல். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டார்கள்.
"படிக்கிறாராமாம்... " என்றான் பிரகாஷ் சிரிப்பை அடக்கியபடி.
"ஆமாமா.... அவர் தான் படிப்பாளியாச்சே" என்றான் ராஜா.
அவர்கள் இருவரும் அவனை நோக்கிச் செல்லாமல் தனியே அமர்ந்து, அவர்களுக்கு தெரிந்த ஜோக்குகளை சொல்லி சிரிக்கத் தொடங்கினார்கள். அவர்களை எரிச்சலுடன் பார்த்தான் நிமல். சிறிது நேரத்திற்கு பிறகு, மீதமிருந்த மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஜோக்குகளை சொல்லி சிரிக்கத் தொடங்கினார்கள். நிமலுக்கு தாங்கவில்லை. அவர்கள் அவனிடம் வரவில்லை, மாறாக தனியே அமர்ந்து கொண்டு, ஜோக்குகளை சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் *டோன்ட் கேர்* என்று இருந்ததை பார்த்து அவன் புகைந்து கொண்டிருந்தான். கடுப்புடன் வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
.......
சுதாவும் வர்ஷினியும் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் வகுப்பிற்கு ஒரு பெண் வந்து வர்ஷினியை அழைத்தாள். அவள் கூப்பிட்டவுடன் எழுந்து நின்றாள் வர்ஷினி.
"ஃபவுண்டர்ஸ் டே ட்ராமாவுக்காக உன்னை குயின் ரோலுக்கு செலக்ட் பண்ணி இருக்காங்க." என்றாள்.
அதைக் கேட்டு அதிர்ந்தாள் வர்ஷினி.
"இல்ல. நான் டிராமாவில் நடிக்க மாட்டேன்"
"அப்படினா போய் சரோஜினி மேடமை மீட் பண்ணு. நடிக்க மாட்டேன்னு அவங்ககிட்டயே சொல்லிடு. அவங்க கெமிஸ்ட்ரி லேபில் இருக்காங்க" அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
"எனக்கு பயமா இருக்கு சுதா. அப்பாவுக்கு தெரிஞ்சா, என்னை கொன்னுடுவாரு."
"ஒன்னும் பயப்படாத. சரோஜினி மேடம் புரிஞ்சிக்குவாங்க. ஆனா, எவ்வளவு சீக்கிரம் சொல்றியோ அவ்வளவு நல்லது. அப்ப தான் அந்த ரோலுக்கு வேற யாரையாவது அவங்க செலக்ட் பண்ணுவாங்க."
"நீ சொல்றது சரி தான். நான் அவங்கள போய் பாத்து, என்னால அந்த ரோலை செய்ய முடியாதுன்னு சொல்லிட்டு வரேன்"
"அவங்ககிட்ட உண்மையான காரணத்தை சொல்லு"
"சரி"
"வா போகலாம்" என்றாள் சுதா.
அவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்கள். வேதியல் ஆய்வுக்கூடத்தை நோக்கி செல்லும் வழியில், அரங்கத்தில் நமது நண்பர்கள் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டார்கள். நிமலை பார்த்தவுடன், வர்ஷினியின் முகம் பிரகாசமானது. அப்படி என்றால், நிமல் கல்லூரிக்கு வந்து விட்டானா...? அப்பொழுது தான், பிரகாஷ் சுதாவிடம் கூற சொன்ன விஷயம் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
"சாரி சுதா. நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். பிரகாஷ் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு"
"எப்போ சொன்னாரு?"
"காலையில நான் காலேஜுக்கு வந்தபோது"
"சரி, நான் அப்புறமா பாத்துக்குறேன்"
"இல்ல.. நீ போய் அவரை பாரு. நான் சரோஜினி மேடமை பாத்துட்டு அங்க வரேன்"
அவள் யாரை பார்பாதற்கு அங்கு வருவாள் என்று சுதாவுக்குப் புரிந்தது. அங்கு நிமல் இருக்கிறானே... சரி என்று தலை அசைத்துவிட்டு அரங்கத்தை நோக்கி சென்றாள் சுதா. வர்ஷினி வேதியல் ஆய்வு கூடத்தை நோக்கி நடந்தாள். அங்கிருந்து சென்றுவிட நினைத்த நிமல், அவள் வேறு எங்கோ செல்வதை பார்த்து, அமைதியடைந்தான்.
"ஹாய் சுதா" என்றான் பிரகாஷ்.
"நீ என்னை பாக்கணும்னு சொன்னியாமே... வர்ஷினி சொன்னா. எதுக்கு பாக்கணும்னு சொன்ன?"
"அட... என்னை பார்க்க உனக்கு காரணம் வேணுமா? எல்லாரும் ஜாலியா கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நீ காரணம் தேடிக்கிட்டு இருக்க..."
"ஓகே ஓகே" என்றாள் சுதா.
"வர்ஷினி எங்க போறா?"
"கெமிஸ்ட்ரி லேபுக்கு"
"கெமிஸ்ட்ரி லேபுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் பிரகாஷ்.
"அவ சரோஜினி மேடமை பார்க்க போறா"
"ஓ... அப்ப அவ ஃபவுண்டர்ஸ் டே ப்ரோக்ராம்ல கலந்துக்க போறாளா?" என்றான் ராஜா.
"இல்ல... ப்ரோக்ராம்ல கலந்துக்க போறது இல்லன்னு சொல்ல போறா"
"ஆனா ஏன்?"
"சரோஜினி மேடம், அவளை குயின் ரோலுக்கு செலக்ட் பண்ணி இருக்காங்க. ஆனா, அவளால அதை செய்ய முடியாது"
"அவளுக்கு நடிக்கிறது பிடிக்காதா?" என்றான் ராஜா.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கு நடிக்கணும்னு ஆசை தான்"
"அப்பறம் என்ன? அந்த ரோலுக்கு அவ ரொம்ப நல்லா பொருந்துவா" என்றான் பிரகாஷ்
"பொருந்துவா தான். ஆனா, அவங்க அப்பா அவளை நடிக்க விட மாட்டாரு. அவருக்கு அதெல்லாம் பிடிக்காது"
ராஜாவும், பிரகாஷும், அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த, நிமலை கவனித்தார்கள். அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அப்படி என்றால், வர்ஷினி அவளுடைய அப்பாவிற்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தான் நிமல்.
வேதியல் ஆய்வுக்கூடம்
வர்ஷினி அங்கு வந்த பொழுது, சரோஜினி, ஒயிட் பாஸ்பரஸை பற்றி மாணவர்களுக்கு விவரித்து கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு சோதனைக்குழாய் இருந்தது. அந்த சோதனைக் குழாயில் பாதியளவு இருந்த தண்ணீருக்கு அடியில் வெள்ளை பாஸ்பரஸ் வைக்கப்பட்டிருந்தது.
அந்த வகுப்பை தொந்தரவு செய்யாமல், அமைதியாய் நின்று அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
"ரெட் பாஸ்பரஸ்ஸால எந்த பாதிப்பும் இல்லை. ஆனா, ஒயிட் பாஸ்பரஸ் ரொம்ப ஆபத்தானது. ஆக்ஸிஜனுடன் வினை புரியும் போது மோசமான விளைவுகளை தரக்கூடியது. அதனால, அதை தண்ணீருக்கு அடியிலயோ, இல்ல பாரஃபின் அடியிலயோ தான் பத்திரமா வைக்கணும். காய்ந்த உடனே, தானாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது"
அப்பொழுது, சரோஜினிக்கு பின்னால்,வெகு அருகில் வர்ஷினி நின்று கொண்டிருப்பதை பார்த்தாள் ஒரு பெண்.
"மேடம் வர்ஷினி வந்திருக்கா" என்றாள்.
சரோஜினி பின்னால் திரும்பிய பொழுது, அவர் கையில் இருந்த சோதனை குழாயில் இருந்து, ஒரு துளி ஒயிட் பாஸ்பரஸ் வர்ஷினியின் துப்பட்டாவில் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.
"சொல்லு வர்ஷினி"
"சாரி மேடம். என்னால டிராமாவில் ஆக்ட் பண்ண முடியாது"
"பட் ஓய்?"
"அப்பா சம்மதிக்க மாட்டார்"
"உங்க அப்பாவோட நான் பேசி பார்க்கட்டுமா?"
"நோ மேடம் ப்ளீஸ்... அவருக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றாள் அழாத குறையாக.
"நீ அந்த ரோலுக்கு நல்லா இருப்பேன்னு நினைச்சேன். ஓகே நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்"
"என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் மேடம்"
சரி என்று சரோஜினி தலையசைக்க, ஆய்வுக் கூடத்தை விட்டு நிம்மதியுடன் வெளியேறினாள் வர்ஷினி.
அரங்கத்தை நெருங்க தன்னுடைய நடையை வேகப்படுத்தினாள் வர்ஷினி. ஏனென்றால், அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவளை நிமலிடம் அழைத்துச் சென்றது.
பேசிக் கொண்டே முகத்தை திருப்பிய நிமல், வர்ஷினி அவர்களை நோக்கி வருவதை பார்த்து தர்ம சங்கடத்திற்கு உள்ளானான். அங்கிருந்து சென்று விடலாம் என்று அவன் நினைத்த பொழுது, அவன் கருத்தைக் கவர்ந்த ஒரு விஷயம், அவன் மூச்சை நிறுத்தியது. வர்ஷினியின் துப்பட்டா, திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
நிமலின் உலகம், தனது சுழற்சியை நிறுத்தியது. அவன் உள்ளிழுத்த மூச்சு காற்று வெளியே வராமல் உள்ளேயே தங்கி விட்டதைப் போல அவன் நெஞ்சை அழுத்தியது. அவன் அனைத்தையும் மறந்தான்... குமணனை மறந்தான்... அவர்களுக்கு இடையில் இருந்த விரோதத்தை மறந்தான்... அவனைச் சுற்றியிருந்த அனைத்தையும் மறந்தான்... நாலு கால் பாய்ச்சலில் அவளை நோக்கி ஓடினான்.
அவன் அப்படி தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்து, அந்த பக்கம் திரும்பினாள் சுதா. அவள் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன் சக்தி முழுவதையும் இழந்ததைப் போல் உணர்ந்தாள் சுதா. அவள் வர்ஷினியை நோக்கி செல்ல நினைத்த பொழுது, அவள் கையைப்பற்றி தடுத்து நிறுத்தினான் பிரகாஷ்.
தன்னை நோக்கி, நிமல் ஏன் அப்படி ஓடி வருகிறான் என்று புரிந்து கொள்ள முடியாமல், அவனை குழப்பத்துடன் பார்த்தாள் வர்ஷினி. தனக்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று குழப்பத்துடன் திரும்பி பார்த்தாள் அவள்.
"வர்ஷினி... உன்னுடைய ஷாலை கழட்டு" என்று கத்தியபடியே அவளை நோக்கி ஓடிவந்தான்.
அவனுடைய கத்தல், அவளை குனிந்து தனது துப்பட்டாவை பார்க்க வைத்தது. அவள் துப்பட்டா தீப்பற்றி எரிவதை பார்த்து வெலவெலத்துப் போனாள் வர்ஷினி. அந்த துப்பட்டாவை அவள் கழட்ட முயன்ற போது அவள் குத்தியிருந்த ஊக்கு வளைந்து போனது. அது அவளை மேலும் பதற்றமடைந்த செய்தது. நடுங்கும் கைகளுடன் அந்த துப்பட்டவை கழட்ட அவள் போராடிக் கொண்டிருந்தாள். அதைப் புரிந்து கொண்ட நிமல், அவள் அருகில் ஓடிச் சென்று அவள் தோளை பிடித்து அழுத்தி,
"கிழ உட்காரு" என்று கத்தினான்.
அவள் கீழே அமர்ந்தவுடன், மண்ணை வாரி அவள் துபாட்டாவின் மீது போட்டு அந்த நெருப்பை அனைத்தான். கீழே கிடந்த அவள் துப்பட்டாவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியின் கண்கள் அருவியாய் பொழிந்தது.
"இது எப்படி நடந்தது?" என்றான்.
"எனக்கு... எனக்கு தெரியல" என்று தடுமாறினாள்.
"கெமிஸ்ட்ரி லேப்ல எதையாவது தொட்டியா?"
"நான் எதையும் தொடல. ஆனா, மேடம் ஒயிட் பாஸ்பரஸ் பத்தி டீச் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரு வேளை அது தான் என்னுடைய ஷால்ல பட்டிருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் பதட்டம் நீங்காமல்.
அதைக் கேட்டு அவன் திடுக்கிட்டான்.
"ஒயிட் பாஸ்பரஸ்ஸா...? அது எவ்வளவு டேஞ்சரஸ்ன்னு தெரியுமா? எதுக்காக நீ இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க? அது உன்னை இந்நேரம் எரிச்சிருக்கும் தெரியுமா...?" கோபம் கொப்பளிக்க கத்தினான்.
அழுதபடி தலைகுனிந்து கொண்டாள் வர்ஷினி. அப்போது தான், தான் எல்லை கடந்து விட்டதை உணர்ந்தான் நிமல். ஏற்கெனவே பயந்திருக்கும் அவளை சமாதனபடுத்துவதை விட்டு விட்டு இப்படி திட்டுவது நியாயம் இல்லையே.
மெல்ல அவள் தோளை தொட்டு,
"உனக்கும் ஒன்னும் இல்ல. பயப்படாதே " என்றான்.
அவள் கையை பிடித்து அரங்கத்தை நோக்கி அழைத்து வந்தான். ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு, அவளுக்கு தண்ணீர் கொண்டு வர வாட்டர் கூலரை நோக்கி ஓடிச் சென்று, தண்ணீரை எடுத்துக் கொண்டு, போன வேகத்திலேயே திரும்பி வந்தான்.
"இதை குடி" என்றான் வர்ஷினியை நோக்கி நீட்டியபடி.
அந்த டம்ளரை நோக்கி தனது நடுங்கும் கையை நீட்டினாள் வர்ஷினி. அவள் பக்கத்தில் அமர்ந்து, அவளை அந்த நீரை பருகச் செய்தான் நிமல். அந்த நீரை பருகும் போது, அவள் கண்கள், நிமிலின் முகத்தைவிட்டு அகலவில்லை.
"உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லா இருக்க. சரியா...?" என்றான்.
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி. அவர்களுடைய நண்பர்கள், ஏதும் சொல்லாமலும், செய்யாமலும் அவர்களையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்கள். நிமிலின் உணர்ச்சிப் பெருக்கை கண்டு அவர்கள் வாயடைத்து நின்றார் என்று தான் கூற வேண்டும்.
மெல்ல அவர்களின் அருகில் வந்தார்கள். அவர்களை சுற்றி நின்றிருந்த மாணவர்களை கலைந்து போகச் சொல்லி கூறினான் ராஜா.
சங்கடத்துடன் எழுந்து நின்றான் நிமல். இரண்டு நாளைக்கு முன் தான், அவளுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு, அதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது போல் நடந்து கொண்டான். ஆனால், அவள் ஆபத்தில் இருக்கும் போது, பார்த்துக் கொண்டு அவனால் எப்படி சும்மா இருக்க முடியும்? அவள் காயப்படட்டும் என்று எப்படி அவனால் விட முடியும்?
அவளைப் பார்த்துக் கொள் என்று, சுதாவிற்கு சைகை செய்தான் நிமல். அவள் வர்ஷினியின் அருகில் அமர்ந்தது தான் தாமதம், சுதாவை கட்டிக் கொண்டு அழுதாள் வர்ஷினி. அவளை சமாதானப்படுத்தும் நோக்கில், அவள் முதுகை வருடி கொடுத்தாள் சுதா. அதை பார்த்த போது, ஏதோ செய்தது நிமலுக்கு.
ஏனோ தெரியவில்லை, அந்த பெண்ணின் கண்ணீர் அவனை நெருப்பின் மேல் இட்ட பனிக்கட்டியை போல் உருகச் செய்தது. நிமலுக்கு அவன் மீதே கோபம் வந்தது. ஏன் அவனால் முன்பை போல் கட்டுப்பாடுடன் இருக்க முடியவில்லை? அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், வர்ஷினியை நோக்கி ஒரு பார்வையை வீசிவிட்டு.
பிரகாஷும், ராஜாவும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் அவனை கிண்டல் செய்வார்கள் என்று எதிர்பார்த்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் அதை பற்றி வாயை திறக்கவே இல்லை. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், கூடவே எரிச்சலையும் தந்தது. அவனாகவே பேசத் துவங்கினான்.
"நான் ஜஸ்ட் அவளுக்கு ஹெல்ப் பண்ணேன்"
"தெரியும் நிமல். உன்னைப் பத்தி எங்களுக்கு தெரியாதா? வர்ஷினியோட இடத்துல வேற யார் இருந்தாலும் நீ இதைத் தான் செஞ்சிருப்ப..." என்றான் ராஜா.
"ஆபத்தில் இருகுறவங்களுக்கு உதவுறது தானே நியாயம். இது மனிதாபிமானம்னு எங்களுக்கு தெரியாதா...!" என்றான் பிரகாஷ்.
இது எரிச்சலின் உச்சம். வர்ஷினியின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவன் இதைத் தான் செய்திருப்பானா? அல்லது, அவனுடைய இடத்தில் வேறு யார் இருந்தாலும் வர்ஷினிக்காக இப்படித் தான் பதட்டப்பட்டு இருப்பார்களா? இவர்கள் இருவருக்கும் என்னவானது? இவர்கள் பைத்தியமாகி விட்டார்கள். என்று கடிந்து கொண்டான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro