Part 6
பாகம் 6
தனது அறையின் ஜன்னலின் பக்கத்தில் நின்று கொண்டு, புன்னகையுடன் நிலவை ரசித்து கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் அப்படி செய்வது இது தான் முதல் முறை. ஏனென்றால், இதற்கு முன், இயற்கையை ரசிக்கும் அளவிற்கு அவளுடைய மனநிலை அமைதியாக இருந்ததில்லை. ஆனால் இன்று, பார்க்கும் அனைத்தும் அவளுக்கு அழகாய் தெரிகிறது. அவள் தனிமையில் புன்னகைக்கிறாள்... நிலா, நட்சத்திரங்களுடன் பேசுகிறாள்... யாரைப் பற்றி? அவளுக்கு அக்கறையுடன் தேங்காய்ப்பால் கொடுத்தானே அவனைப் பற்றித் தான். தன் நெற்றியில் இருந்த ஆறிய வடுவை தொட்டுப்பார்த்தாள் வர்ஷினி. அந்தக் காயத்திற்கு மருந்திடும் பொழுது, அவளுக்கு வலிக்கக்கூடாது என்று நிமல் காட்டிய பொறுமையை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் விழியோரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது. அவள் இதழ்களில் புன்னகை பூத்தது.
முதன் முறையாக, அவள் ஒருவருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்... அதுவும் வாழ்நாள் முழுவதும். சட்டென்று அவள் புன்னகை மறைந்தது. அவள் மீது நிமல் அக்கறை காட்டினான் என்பதற்காக, இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது நியாயமா? அவன் அவளிடம் அப்படி நடந்து கொள்ள, பரிதாப உணர்வு கூட காரணமாக இருக்கலாம் இல்லையா? அவளுடைய மூளை சரியாக யோசித்தாலும், அவளுடைய இதயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது. அவள், அவனிடம் கண்டது வெறும் பரிதாப உணர்ச்சி மட்டும் தானா? அவன் உதடுகள் பேசாததெல்லாம் அவன் கண்கள் பேசினவே... மறுபடியும் அவள் புன்னகை புரிந்தாலும், இனம்புரியாத ஒரு பயம் அவள் மனதை ஆட்கொண்டது.
*வேண்டாம் வர்ஷினி... யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே... எதிர்பார்ப்பு வலியைத் தான் தரும். நீ அதிர்ஷ்டம் கெட்டவள். நிமலை போன்ற உயர்ந்த குணம் கொண்ட ஒருவன், உன் வாழ்க்கை துணையாக அமையும் அளவிற்கு நீ அதிர்ஷ்டக்காரி அல்ல. அவனை அடையும் தகுதி உனக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உன் பெற்றவர்களைப் பற்றி எப்படி நினைக்க மறந்தாய்? அவர்கள் உன்னை உயிரோடு புதைத்துவிடுவார்கள். ஆனால், நிமல் இல்லாமல் வாழ்வதற்கு, சாவது மேல் இல்லையா?* தன் எண்ண ஓட்டத்தை நிறுத்திவிட்டு, அவள் திடுக்கிட்டாள்.
*என்ன நினைக்கிறாய் வர்ஷினி? சாவதா? நீ நிமலை சந்தித்து வெகு சொற்ப நாட்களே ஆகின்றது. யாரும் உன் மீது காட்டாத அக்கறையை அவர் உன் மீது காட்டினார் என்பதற்காக நீ இவ்வளவு தூரம் செல்வது சரியல்ல. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல், நீ இப்படி சிந்திப்பது தவறு. நீ பலவீனமடையாதே. உன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்* என்று தனக்குத்தானே கூறி கொண்டு, படுக்கையில் விழுந்து, ஒரு தலையணையை அணைத்துக் கொண்டாள்.
மறுநாள்
கல்லூரிக்குள் நுழைந்த நிமல், மாணவர்கள் அனைவரும், அறிவிப்பு பலகையின் முன் கூடி நிற்பதை பார்த்தான். விஷயத்தைத் தெரிந்து கொள்ள அவர்களை நோக்கி சென்றான். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது *ஃபவுண்டர்ஸ் டே* வுக்கான அறிவிப்பு. அதைப் பார்த்து அவன் பெருமூச்சுவிட்டான். ஏனென்றால் *ஃபவுண்டர்ஸ் டே* முடியும் வரை எந்த வகுப்புகளும் நடைபெறாது. மாணவர்கள் அனைவரும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். அதற்கான ஒத்திகைகளும் ஆரம்பமாகிவிடும்.
அப்பொழுது அவன், வர்ஷினி அவள் வகுப்பறையை இருக்கும் கட்டிடத்தை நோக்கி செல்வதை பார்த்தான். அமைதியாய் அவளைப் பின் தொடர்ந்து வந்தான். யாரும் இல்லாத ஒரு திருப்பத்தில் அவளை அழைத்தான்.
"வர்ஷினி..."
அவளுடைய பெயரை நிமலின் குரலில் கேட்டு, வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல உணர்ந்தாள் வர்ஷினி. நிமலை பார்த்ததும் அவளால் புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளுடைய கண்களில் கிளர்ச்சி பொறி பறந்தது. அவளிடம் ஒரு கவரை நீட்டினான் நிமல். தயக்கத்துடன் அதை பார்த்தாள் வர்ஷினி.
"இதை வாங்கிக்கோ"
"இது என்னது?" என்றாள் அதைப் பெற்றுக் கொண்டு.
"அல்சர் மெடிசன். ரெகுலரா எடுத்துக்கோ"
"என்கிட்ட ஏற்கனவே இருக்கு" என்று பொய் உரைத்தாள்.
"இது தான் மார்க்கெட்டில் பெஸ்ட் மெடிசன்..."
"ஓ..."
"நீ இன்னும் டயட் கண்ட்ரோல இருக்கியா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"குட்"
அங்கிருந்து செல்ல, அவள் ஒரு அடி எடுத்து வைக்க,
"எங்க அவ்வளவு அவசரமா போற?"
"கிளாசுக்கு"
"இன்னைக்கு கூடவா?"
"இன்னைக்கு என்ன?" என்றாள் அவள் குழப்பமாக.
"ஃபவுண்டர்ஸ் டே டேட் டிக்கலர் பண்ணிட்டாங்க. அதனால எந்த கிளாஸும் நடக்காது... ஒன்லி லேப் ஆக்டிவிட்டீஸ்"
"ஓ..."
"சரி, வா போலாம்"
"எங்க?"
"கேன்டீனுக்கு... இல்லனா ஆடிட்டோரியத்த்துக்கு."
"ஆனா எதுக்கு?"
"பேசலாம்னு தான்"
"ஏதாவது முக்கியமான விஷயமா?"
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல"
"வேற, என்ன என்கிட்ட பேச போறீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.
"சும்மா பேசலாம். உனக்கு பிடிச்சது, பிடிக்காததை நீ சொல்லு. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கேளு"
"எனக்கு பிடிச்சது, பிடிக்காததுன்னு எதுவும் இல்ல..."
அதைக் கேட்டு அவன் புருவத்தை உயர்த்தினான்.
"உனக்கு எதுவுமே பிடிக்காதா? என்ன பொண்ணு நீ...? சரி உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? யாரும் இல்லன்னு சொல்லாத."
அவனை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. *எனக்கு உன்னை தான் பிடிக்கும்* என்று சொல்ல வேண்டும் என்று தான் அவளுக்கு ஆசை. அமைதியாய் தலைகுனிந்தாள்.
"நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" என்றான் நிமல்.
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. எனக்கு, எங்க அப்பா, அம்மா, தம்பி, சுதாவை பிடிக்கும்."
"சீக்கிரமே அந்த லிஸ்டுல நானும் வந்துடுவேன்னு நினைக்கிறேன்" என்று சிரித்தான்.
*நீங்கள் ஏற்கனவே அந்த லிஸ்டில் இருக்கிறீர்கள்* என்று நினைத்துக் கொண்டாள்.
"எனக்கு என்ன பிடிக்கும்னு நீ கேட்க மாட்டியா?"
"உங்களுக்கு என்ன பிடிக்கும்?"
"பாக்சிங், பேஸ்கெட் பால், கிரிக்கெட், பாதாம் ஹல்வா..."
என்று நிறுத்தியவன்,
"இப்போ எனக்கு யாரை பிடிக்கும்ன்னு கேளு" என்றான்.
"யாரை?" என்றாள்.
"உனக்கு பிடிக்குற மாதிரி தான், எங்க அம்மா, அப்பா, ராஜா, பிரகாஷ் அப்புறம் ஒரு பொண்ணு"
"பொண்ணா?"
"ஆமாம்... என்னை அவ ரொம்ப டார்ச்சர் பண்றா. என்னை நிம்மதியா தூங்க விட மாட்டேன்கிறா, சாப்பிட விட மாட்டேங்குறா, படிக்க விட மாட்டேங்கிறா. நான் எப்ப பார்த்தாலும் அவளையே நெனச்சுக்கிட்டு இருக்கேன். ஏன் அப்படி?"
"எனக்கு... எனக்கு தெரியலையே..."
"அந்த மாதிரி நீ எப்பவாவுது ஃபீல் பண்ணி இருக்கியா?"
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"நீ கூடிய சீக்கிரம் அப்படி ஃபீல் பண்ணணும்னு நான் விரும்புறேன்"
அவனை ஆர்வமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள், அந்தப் பெண் யார் என்று அவன் கூற மாட்டானா என்று.
"அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?"
"உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லனா.... "
"எனக்கு என்ன பிரச்சனை? உண்மையில் சொல்ல போனா, நான் உன்கிட்ட சொல்லித் தான் ஆகணும். எனக்கு வேற வழி இல்ல"
வர்ஷினியின் இதயம், பந்தயக் குதிரையைப் போல வேகமாக ஓடியது.
"ஏன்?"
"ஏன்னா, நீ என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்"
அதை கூறிவிட்டு, அவளைப் பார்த்த புன்னகைத்தபடி பின்னோக்கி நகர்ந்து சென்றான், அந்த பெண் யாரென்று சொல்லாமலேயே.
வர்ஷினிகோ ஏமாற்றமாய் போனது. அந்தப் பெண்ணின் பெயரை ஏன் அவன் கூறாமல் போனான்? அந்தப் பெண் நீ தான் என்று அவன் கூறிவிடக்கூடாதா?
அங்கு, தூணில் சாய்ந்தபடி நிமலைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தான் பிரகாஷ். நிமல், வர்ஷினியிடம் பேசியதை அவன் கேட்டுவிட்டான் போல தெரிகிறது.
"உன்னுடைய காதலை அவளுக்கு புரிய வைக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு?" என்றான்.
"அஃப் கோர்ஸ்..." என்று சிரித்தான் நிமல்.
"நீ அவளைத் தான் காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கலாம்" என்றான் பிரகாஷ்.
"ரொம்ப சீக்கிரம் சொல்லிடுவேன்"
அவர்கள் சிரித்தபடி கலை அரங்கத்தை நோக்கி சென்றார்கள். அன்று கல்லூரிக்கு ராஜா வருகை தரவில்லை.
*இனியவர்களின் இருப்பிடம்*
தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தான் நிமல். இது ஒன்றும் புதிதல்ல. அவனை வியர்க்க வைக்கும் அந்த ஒரு காட்சி, அவன் மனக்கண்ணில் வந்து போவது வழக்கம் தான். திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தவனுக்கு மூச்சிரைத்தது. அவன் எவ்வளவு தான் முயன்ற போதிலும், அவனுடைய கடந்த காலத்தை விட்டு அவனால் வெளிவரவும் முடியவில்லை... மறக்கவும் முடியவில்லை... தன் கண்களை மூடி, அந்த கொடுமையான கடந்த கால நிகழ்வில் பிரவேசித்தான் நிமல்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்...
பதிநான்கு வயதான ஒரு சிறுவன், அவனுடைய அப்பா குருபரன், மற்றும் அம்மா கல்யாணியுடன் காரில் சந்தோஷமாய் பயணம் மேற்கொண்டிருந்தான். அவர்கள், கோடை விடுமுறையை கழிக்க ஊட்டி வந்திருந்தார்கள். மிக பரபரப்பான குருபரன், தன் குடும்பத்தாருடன் சிறிது நேரம் செலவிட விரும்பினார். அதனால் அவர்கள் ஊட்டி வந்தார்கள்.
அப்போது, திடீரென்று ஒரு லாரி அவர்களுடைய காரை பின்தொடர்ந்து வந்தது. அது அவர்களுடைய காரை இடிக்க தொடங்கியது. அந்த சிறுவனுடைய பெற்றோர்கள், பதட்டத்தின் உச்சிக்கே சென்றார்கள். கார் ஓட்டுநரை வேகமாக செல்ல சொல்லி பணித்தார்கள். ஆனால், அந்த லாரி அவர்களை விடாமல் பின்தொடர்ந்தது. சற்று நேரத்தில், அந்த லாரியுடன் ஒரு கார் இணைந்து கொண்டது.
அந்த சிறுவனின் அம்மா கல்யாணி விழிப்படைந்தார். அவர் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்தார். அவருடைய மணிபர்சில் இருந்த பண கட்டை எடுத்து, தன் மகனின் கால்சட்டை பையில் திணித்தார். அவர்களுடைய கார் ஒரு குறுகலான வளைவில் திரும்பிய பொழுது, பின்னால் வரும் வண்டியில் இருப்பவர்கள் அவர்களை பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில், அவருடைய மகனை காரிலிருந்து வெளியே பிடித்து தள்ளினர். சரிவில் உருண்டு சென்ற அந்தப் சிறுவன், ஒரு மரத்தில் மோதி நின்றான். அடுத்த நிமிடம் அவர்கள் பயணித்த கார், பள்ளத்தில் உருண்டு கோர சத்தத்துடன் விழுந்து தீபிடித்து எரிந்தது. அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்ற அவனின் கவனத்தை, சில பேருடைய சிரிப்பொலி ஈர்த்தது. ஒரு வளைவில் சிலர் நின்றுகொண்டு கருணை இல்லாமல் சிரித்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், அந்த சிறுவனுக்கு மிகவும் பரிச்சயமானவன்... அவன் வேறு யாருமல்ல. நமக்கு நன்கு அறிமுகமான குமணன் தான். குமணன், அந்த சிறுவனால் அங்கிள் என்று அன்புடன் அழைக்கப்பட்டவன் தான். அவனது தந்தையின் மேலாளர். அவனுடைய அப்பா குருபரனின், நம்பிக்கையைப் பெற்றவன் குமணன்.
தன்னுடைய நேர்மையால் குருபரனின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றான் குமணன். அதனால் தன் குடும்பத்தினருடன் விடுமுறைக்கு செல்வதற்கு முன், குமணனை *பவர் ஆஃப் அட்டார்னி* யாக நியமித்தார் அவர். அவனை நம்பியதற்கு தண்டனையாகத் தான், தன் சுய ரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறான் குமணன். அன்று, அந்த சிறுவன் ஒரு சபதம் மேற்கொண்டான். குமணனின் கையில் இருக்கும் அனைத்தையும் பறித்துக் கொண்டு, அவனை நடுத்தெருவில் நிற்க வைப்பது என்று.
சிறிது நேரம் கழித்து, கடவுளின் கருணையால், அந்தப் பக்கமாக ஒரு தம்பதியினர் காரில் சென்றனர். பார்க்கவே பரிதாபமாக கதறி அழுது கொண்டிருந்த அவனை நோக்கி ஓடிச் சென்றனர்.
"என்னாச்சுப்பா?" என்றார் அந்த மனிதர்.
"எங்க அப்பா, அம்மாவை கொன்னுட்டாங்க" என்று அங்கே பாதாளத்தில் எரிந்துகொண்டிருந்த காரை காட்டினான் அழுதபடி.
"உனக்கு தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க யாராவது இருந்தா சொல்லு. நாங்க உன்னை அவங்ககிட்ட கொண்டு போய்விடுறோம்"
"எங்க அம்மா அப்பாவைத் தவிர எனக்கு வேற யாருமே இல்ல" என்று எரிந்து கொண்டிருந்த காரை பார்த்து கூறிய பொழுது, அவன் கண்ணில் இருந்து கண்ணீர் காட்டுக்கடங்காமல் வழிந்தது.
அவருடைய மனைவி, கண்களில் எதிர்பார்ப்பை தேக்கிக் கொண்டு, அவர் தோளை பிடித்து அழுத்தினார். அவருடைய மனைவிக்கு வேண்டியது என்ன என்பதை புரிந்து கொள்வதில் அவருக்கு எந்த கஷ்டமும் இருக்கவில்லை. அவர் அந்த சிறுவனை நோக்கி திரும்பினார்.
"நீ விருப்பப்பட்டா எங்க கூட வரலாம். நாங்க உன்னை எங்க சொந்த மகனை போல பாத்துக்குவோம்"
"ஆமாம்பா. நீ எங்களை நம்பலாம். ப்ளீஸ் எங்க கூட வந்துடு" என்று அந்த பெண்மணி கூறினார்.
"எங்க அப்பா அம்மாவை கொன்னவனை பழி வாங்க, நீங்க எனக்கு உதவி செய்யிறதா இருந்தா, நான் உங்க கூட வரேன்" என்றான் அந்த சிறுவன் பல்லைக் கடித்தபடி.
தம்பதியர் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டார்கள். குழந்தை வரம் கிடைக்காத அவர்களது வாழ்க்கையில் அந்த சிறுவன் ஒரு விடியலாய் வந்தான் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால், அந்த பிஞ்சு மனதில் பழி உணர்வு குடிகொண்டிருக்கிறது. அவர் தன்னை சுதாகரித்துக் கொண்டார்.
"நாங்க உனக்கு உதவுவோம். ஆனா, அதை நீ வெளிப்படையாக காட்டிக்க கூடாது. உன்னுடைய மனசுக்கு, நீ முதலாளியா இரு. உங்க அப்பா அம்மாவை கொன்ன அந்த கொலைகாரனை, அதை ஆளவிடாதே. நீ சோகமா இருந்தா அவன் ஜெயித்ததா அர்த்தம். உன்னுடைய வாழ்க்கையை நீ வழி நடத்துர விதத்திலேயே நீ அவனை ஜெயிக்கணும். பூமி, வெளியில பாக்க அழகாய் இருந்தாலும், அது உள்ளுக்குள்ள இன்னும் நெருப்பு கோளமாய் கொதிச்சிகிட்டு தான் இருக்கு. அதே மாதிரி, நீயும் நெருப்பை உன் மனசில் மட்டும் வை. சரியான நேரம் வரும் பொழுது, எரிமலையாய் அந்த நெருப்பை வாரி வீசு. அது வரைக்கும், அந்த பூமியுடைய வெளித்தோற்றம் போலவே, நீயும் உன்னை அழகா காட்டிக்கோ... முழுக்க முழுக்க வித்தியாசமா..."
அவர் சொல்வது போல் அந்த சிறுவன் நடந்து கொண்டால், நாளடைவில் அவனுடைய மனம் மாற்றம் அடையலாம் என்று அவர் நம்பினார். அவன் சந்தோஷமாக இருக்க பழகினால், அது அவனுடைய இயல்பாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது உண்மையில் சாத்தியம் தானா? அவன் மனதில் கொப்பளித்து கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பை, சிறு தூறல் அனைத்து விடுமா?
அந்த சிறுவன் அவர் பேசுவதையே அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனென்றால், அவர் பேசுவது, அவனுடைய தந்தை பேசுவது போலவே இருந்தது. அவர் அவனை சமாதானப்படுத்த முயன்ற விதம், அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கும் அவர்களை விட்டால் வேறு வழியும் இல்லாது போகவே, அவன் அவர்களுடன் செல்ல சம்மதித்தான்.
"சரி... நான் உங்க கூட வரேன்"
அந்த தம்பத்தியரின் முகத்தில், மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
"என் பேரு விஸ்வநாதன். இவங்க என்னுடைய வைஃப் பார்வதி. உன்னுடைய பெயர் என்ன?"
"என் பெயர் நிமலன்... நிமலன் குருபரன்..."
"உன்னை நாங்க சட்டப்படி தத்து எடுத்துக்க்குறோம். அப்போ உன்னுடைய பெயர் *நிமல் விஸ்வநாதன்* அப்படின்னு மாறும் பரவாயில்ல தானே?" என்றார் விஸ்வநாதன்.
அவனுக்கும் அதுவே சரியாகபட்டது. குமணனிடமிருந்து தன் அடையாளத்தை மறைக்க இந்த புது உறவும், பெயரும் அவனுக்கு துணை செய்யும்.
"பரவாயில்ல" என்று நிமல் தலையசைக்க, பார்வதி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro