Part 59
பாகம் 59
அந்த பங்களாவில் எப்படி தீ விபத்து நிகழ்ந்தது என்பது புரியவில்லை நிமலுக்கு. அவனுக்கு நிச்சயமாக தெரியும், அங்கு மின்சாரம் தூண்டிக்கப்பட்டு இருந்தது என்பது. அவன் உடனடியாக ராஜாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அவனைத் தவிர, ராஜாவுக்கு தானே அனைத்தும் தெரியும்...! ராஜாவை சந்திக்க செல்ல தயாரானான் நிமல். கீழ்தளம் வந்த போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்தியை பார்த்து ஸ்தம்பித்து நின்றான். அவன் மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள்
அந்த பங்களாவுக்கு தீ வைத்ததற்காக, நிமேஷை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். அவன் கோயம்புத்தூரிலிருக்கும் விஸ்வநாதனின் தம்பி மகன் என்பதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆம், நிமலையும் வர்ஷினியையும் பிரிப்பதற்காக, குமணனிடம் இரண்டு கோடிக்கு வியாபாரம் பேசிய அதே நிமேஷ் தான். ஒருவருக்கு ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயத்தில் நிமேஷ் எங்கிருந்து வந்தான்?
"என்னடா இது?" என்றார் பார்வதி அதிர்ச்சியுடன்.
தொலைக்காட்சித் திரையை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். அதன் பிறகு அங்கு நிற்க முடியவில்லை நிமலால். அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
ராஜராஜன் மனை
நிமலை பார்த்தவுடன் வழக்கமான புன்னகையுடன் அவனை வரவேற்றான் ராஜா. அவன் வெகு இயல்பாய் இருந்ததைப் பார்த்து குழம்பினான் நிமல். ராஜாவுக்கு இன்னும் விஷயம் தெரியாதா?
"நீ நியூஸ் பாக்கலயா?" என்றான்.
"பார்த்தேன். போலீஸ், நிமேஷை அரெஸ்ட் பண்ணிட்டாங்க" என்றான் ராஜா.
"ஆனா ஏன்? எதுக்காக போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணாங்க? அவன் ஒரு இன்னசென்ட்..."
"யாரு இன்னசென்ட்? நிமேஷா? அவன் என்ன செஞ்சான்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட..."
"என்ன செஞ்சான்?"
"உனக்கே நல்லா தெரியும், என்னுடைய எதிரியோட பாசறையிலும் எனக்கு ஆளுங்க இருக்காங்க..."
ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
"அவங்க மூலமா தான், நிமேஷை பத்தி எனக்கு தெரிஞ்சது"
(காமேஸ்வரன் இல்லத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது)
"இந்த குமணன், எங்க போயி தொலைச்சாருன்னு தெரியல..." என்றார் காமேஸ்வரன் எரிச்சலாக.
"எதுக்காக அவர் ஃ போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காரு?" என்றான் கார்த்திக்.
"குமணன் மட்டும் திரும்பி வராம போனா, நம்முடைய திட்டத்தை நம்ம எப்படி செயல்படுத்துறது?" என்றார் காமேஸ்வரன்
"எனக்கும் அது தான் பா புரியல" என்றான் கார்த்திக்.
"நிமலும் பொழச்சி வந்துட்டான். முன்ன இருந்ததை விட அவன் இப்போ ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கான். அவன் தன்னுடைய வேலையை செய்ய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அவன் எழுந்துக்க முடியாத மாதிரி, அவனை நம்ம அடிக்கணும்" என்றார் காமேஸ்வரன்.
"ஊட்டியில இருந்து திரும்பி வந்ததுக்கு அப்புறம், அதை செய்யலாமுன்னு குமணன் அங்கிள் சொல்லியிருந்தார். அவரை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு தான் புரியல" என்றான் கார்த்திக்.
"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்" என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.
அந்த குரலுக்கு சொந்தக்காரன் நிமேஷ் தான்.
"நீ இங்க என்ன செய்ற?" என்றான் கார்த்திக்.
"அதான் சொன்னேனே, உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்திருக்கேன்"
"உன்னால என்ன செய்ய முடியும்?"
"என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு"
"என்ன திட்டம்?" என்றான் கார்த்திக்
"குமணன், ஊட்டியில தான் எங்கேயோ இருக்கணும். அவரை கண்டுபிடிச்சி, கொன்னுடுங்க"
"கொல்றதா? எதுக்கு?"
"அவரை வச்சிக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க? அவரைக் கொன்னுட்டு, அந்தப் பழியை நிமல் மேல போடுங்க... அதை வர்ஷினியை நம்ப வையுங்க. அதுக்கு அப்புறம், அவள் அவனை திரும்பி கூட பாக்க மாட்டா... நிமலை போட்டுத் தள்ளிட்டு, வர்ஷினியை இழுத்துக்கிட்டு வந்துடுங்க... சிம்பிள்..."
அவனை சந்தேக கண்ணோடு பார்த்தான் கார்த்திக்.
"நீங்க என் மேல சந்தேகப்பட வேண்டிய அவசியமில்ல. நிமல் செத்ததுக்கு அப்புறம், எங்க பெரியப்பாவுடைய சொத்து, எனக்கு தான் வரும். அதுக்காகத் தான் நான் இதை செய்யறேன்"
அவன் சொல்வது உண்மை தான்.
"என் கூட நீங்களும் ஊட்டிக்கு வாங்க. இல்லன்னா, உங்க ஆளுங்களை என் கூட அனுப்பி வையுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்" என்றான் நிமேஷ்.
காமேஸ்வரனை பார்த்தான் கார்த்திக்.
"இங்க ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டு கார்த்திக் அங்க வருவான். இப்போதைக்கு, நீ எங்க ஆளுங்களை கூட்டிட்டு போ" என்றார் காமேஸ்வரன்.
(அங்கு நடந்தவற்றை கூறி முடித்தான் ராஜா )
அதை கேட்டு திகைத்தான் நிமல்.
"அவன் இவ்வளவு கீழ்த்தரமானவனா இருப்பான்னு நான் நினைக்கல" என்றான்
"ஆமாம்... அதனால தான், அவனுடைய திட்டத்துல, அவனையே நான் சிக்க வச்சேன்" என்றான் ராஜா.
"எப்படி நீ அதை செஞ்ச?"
"அது ரொம்ப சிம்பிள்... பணம்..."
"பணமா?"
"நிமேஷ், பேராசைக்காரன் மட்டுமில்ல சரியான அல்பமும் கூட... அதுல அடிச்சேன் விழுந்துட்டான்"
அவன் கூறுவது நிமலுக்கு புரியவில்லை.
"நான் கார்த்திகோட ஆள் மாதிரி, குமணனுடைய புது பங்களாவை பத்தி அவன்கிட்ட ஃபோன்ல பேசினேன். ஆனா, எந்த திடமான தகவலையும் கொடுக்கல. அதனால, அவன் நிச்சயமா எதுவும் தெரியாம அந்த பங்களாவுக்கு வந்தான். அது கம்ப்யூட்டரைஸ்டு பங்களா அப்படிங்கிறதால, அவனால உள்ள நுழைய முடியாதுன்னு எனக்கு தெரியும். நான் எதிர்பார்த்த மாதிரியே, அவன் பின்பக்க சுவற்றை உடைச்சி தான் உள்ள நுழைஞ்சான். அங்க பெட்டியில் இருந்த கட்டுக்கட்டான பணத்தை பார்த்ததும் அவன் குமணனை மறந்துட்டான். குமணன் ஏற்கனவே மயக்கமாகி இருந்தாரு. எந்த சிரமமும் இல்லாம, தன் கைக்கு வந்த பணத்தை, அவன் இழக்க மாட்டான்னு எனக்கு தெரியும். அவங்க ஏற்கனவே குமணனை கொல்ல திட்டம் போட்டிருந்ததால, அதை அவன் செய்ய நெனச்சான். அதனால, மெயின் ஸ்விட்சை ஆன் பண்ணி, ஒயரில் தீ வச்சான்... ஷார்ட் சர்க்யூட்ன்னு நம்ப வைக்குறதுக்காக. அவன் பங்களாவுக்கு உள்ள போன அதே நேரம், யாரோ சில பேர் ஒரு பொண்ண ரேப் பண்ண ட்ரை பண்றாங்கன்னு பொய்யான இன்ஃபர்மேஷன் கொடுத்து, அந்த ஏரியாவுக்கு நான் போலீசை வர வச்சேன். போலீசை பார்த்த உடனே, பதறிப்போன நிமேஷை, சந்தேகத்தின் பேரில் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க... அவன்கிட்ட, சரியான டாக்குமென்ட் இல்லாம நிறைய பணம் வேற இருந்தது... அவன், பங்களாவுக்கு தீ வச்சதை பார்த்ததா, என்னோட ஆளுங்க போலீஸ்ல சொல்லிட்டாங்க. முடிஞ்சது கதை."
"என்கிட்ட நீ இத பத்தி எதுவுமே சொல்லலயே..."
"நீ தான் உன் மாமனார், மாமியாரை வெளியில விட சொல்லிட்டியே... அதை செய்றதுல எனக்கு துளிகூட உடன்பாடு இல்ல. குமணனை வெளியில விடுறது மிகப் பெரிய முட்டாள்தனம். அவர் உயிரோட இருக்க வேண்டிய அவசியமில்ல. நீ வர்ஷினிகாக யோசிச்சேன்னு எனக்கு தெரியும். அதனால தான் நான் உன்கிட்ட சொல்லல. குமணன், ஊட்டியில புதுசா ஒரு கம்ப்யூட்டரைஸ்டு பங்களா வாங்கி இருக்கிற விஷயத்தை, எல்லார்கிட்டயும் சொல்லிட்டாரு குணசேகரன். அதனால, இப்போ எல்லாரும், குமணன் அந்த வீட்டோட பாஸ்வேர்டை மறந்து போயிட்டதா தான் நினைப்பாங்க... இல்லன்னா வேற ஏதாவது டெக்னிக்கல் ப்ராப்ளம்னு நினைப்பாங்க..." என்று புன்னகைத்தான்.
"கார்த்திக் என்ன ஆனான்?"
"நான் பெட்டு கட்றேன்... நிமேஷ், நிச்சயம் அவனை இந்த கேஸ்ஸுகுள்ள கொண்டு வருவான் பாரு... கார்த்திக்கை தப்பிக்க விடமாட்டான் நிமேஷ்"
"எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல"
"வர்ஷினி கூட சந்தோஷமா இரு. நீ வேற எதையும் யோசிக்க வேண்டிய அவசியமில்ல"
"தேங்க்யூ மச்சான்... உண்மையிலேயே இதை எப்படி முடிகிறதுன்னு தெரியாம இருந்தேன். ஏன்னா, வர்ஷினியையும் ரிஷியையும் நம்ம கணிக்க முடியாது..."
ஆமாம் என்று தலையசைத்தான் ராஜா. இப்படித் தான் நடக்கும் என்று தெரியாதா என்ன ராஜாவுக்கு? அதனால் தான் நிமலின் கவனத்திற்கு எதையும் கொண்டு செல்லாமல் அவனே கதையை முடித்து விட்டான்.
"அந்த பங்களாவை பத்தி மொத்தமா மறந்துடு. அதைப் பத்தி எப்பவும் வர்ஷினிகிட்ட பேசாதே" என்றான் ராஜா
"சரி... நான் கிளம்பறேன்"
"ஊட்டியிலிருந்து அவங்க பாடி வந்ததுக்கு அப்புறம் நான் வரேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு ராஜாவிடமிருந்து விடைபெற்றான் நிமல்.
இனியவர்களின் இருப்பிடம்
தங்கள் அறைக்கு வந்த நிமல், வர்ஷினி கட்டிலில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவள் அருகில் சென்று அமர்ந்தவுடன், அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் வர்ஷினி.
"நீ மனசு தளரக் கூடாது" என்றான்
"நான் மனச தளரல. நீங்க தான் என்கூட இருக்கீங்களே..."
"எப்பவும் இருப்பேன்"
"எனக்கு தெரியும்"
"ரிஷி எங்க?"
"ஆகாஷ் ரூம்ல இருக்கான்"
"அவனுக்கு எதுவும் தெரியாதா?"
"தெரியும்... நான் தான் அவனுக்கு சொன்னேன். அதனால தான் எல்லாரும் அவனோட இருக்காங்க"
"நீ தான் அவனுக்கு சப்போர்ட்டா இருக்கணும். நாங்க எல்லாரும் அவனோட இருந்தாலும் நீ தான் அவனுக்கு முக்கியம். அதை தான் அவனும் எதிர்பார்ப்பான்"
சரி என்று தலையசைத்தாள்.
"ராஜா எல்லாத்தையும் பார்த்துகிறேன்னு சொல்லியிருக்கான். நம்ம உங்க அப்பா வீட்டுக்கு போகணும்"
"நீங்களுமா வரிங்க?"
"ஏன் மாட்டேன்? அவங்க கதை முடிஞ்சிடுச்சு... அதுல யோசிக்க வேற எதுவும் இல்ல"
"எனக்காகவா?"
"வேற யாருக்காக?"
"நீங்க, இந்த மாதிரி எனக்காக ஏதாவது செய்யும் போதெல்லாம் நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்"
"நீ சந்தோஷமா தான் இருக்கணும்..."
அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டு அவனை சந்தோஷ படுத்தினாள் வர்ஷினி.
"குணசேகரன் கால் பண்ணாரா?"
"இன்னும் இல்ல. அப்பாவோட ரூமை என்னை செக் பண்ணி பார்க்க சொல்லி இருக்காரு. அப்பா அங்க எதையாவது விட்டிருக்கலாம்னு அவர் நினைக்கிறார்."
"இப்போ அதை செய்ய வேண்டிய அவசியமில்ல... இறுதி சடங்கு முடிஞ்சதுக்கு அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்"
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"நம்ம அங்க கிளம்பிப் போகலாம். நம்ம, அங்க இருக்கணும் இல்ல..." என்று தயங்கினான்.
"பாடி வரும்போதா...?" என்றாள் வர்ஷினி.
பெருமூச்சுவிட்டான் நிமல்.
"போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு வர நேரம் ஆகும்ன்னு குணசேகரன் அங்கிள் சொன்னார்"
"வேற என்ன சொன்னாரு?"
"அந்த பங்களா கம்ப்யூட்டரைஸ்டு அப்படிங்கறதால, ஏதாவது டெக்னிக்கல் பிராப்ளமால தான் அவங்க உள்ள மாட்டியிருக்கணும்னு சொல்றாரு. ஆனா, நிமேஷ், அந்த பங்களாவுக்கு தீ வைப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..."
அவள் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் நிமல்.
"இதெல்லாம் விதி... நம்ம ரெண்டு பேரையும் பிரிக்குறதுக்காக, நிமேஷ் கூட அப்பா வியாபாரம் பேசினாரு... ஆனா, அதே நிமேஷ், பணத்துக்காக அவரை கொன்னுட்டான்"
ராஜாவின் திட்டத்தை மனதுக்குள் பாராட்டினான் நிமல்.
"நீ சாப்பிட்டியா?" என்றான்.
இல்லை என்று தலையசைத்தாள்.
"ஏதாவது சாப்பிடு... உங்க அப்பா வீட்டுக்கு போனதுக்கப்புறம் நம்மால சாப்பிட முடியாது. பட்டினி கிடந்து மறுபடியும் அல்சரை வர வெச்சுகாதே"
"நீங்களும் சாப்பிடுங்க"
சரி என்று தலை அசைத்தான்.
"நான் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வரேன்" அவள் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயல, அவள் கையைப் பிடித்து மீண்டும் அமர வைத்தான்.
"ஆர் யூ ஆல்ரைட்?"
"ஐ யம் ஆல்ரைட்..."
அவளை அணைத்துக் கொண்டு,
"சாரி டா..." என்றான்.
"நம்ம எதைப் பத்தியும் யோசிக்க வேண்டிய அவசியமில்ல. நம்ம வாழ்க்கையை நம்ம வாழ ஆரம்பிச்சது நமக்காக... வாழ போறதும் நமக்காகத் தான்... என்னைக்காவது ஒரு நாள் இந்த சூழ்நிலையைக் நம்ம ஃபேஸ் பண்ணி தான் ஆகணும். நம்ம துரதிஷ்டம், ரொம்ப சீக்கிரமாவே இந்த சூழ்நிலையை நம்ம சந்திக்க வேண்டியதாப் போச்சு. குமணன் மாதிரி மனசாட்சி இல்லாத ஒருத்தருக்கு வேற எப்படிப்பட்ட முடிவு கிடைக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? அவரை மறந்துடுங்க... எனக்கு நீங்க இருக்கீங்க. அதை விட வேற எதுவும் எனக்கு தேவையில்ல. நீங்க தான் என்னுடைய பலம். நீங்க என் கூட இருந்தா, நான் எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன்." என்றாள் வர்ஷினி.
மீண்டும் அவளை அணைத்துக்கொண்டான். அவனுக்கு தெரியும், அவள் கூறியது அனைத்தும் உண்மை என்று. அவனுக்கு இது தான் வேண்டும்... அவள் நம்பிக்கை இழக்க கூடாது... அவளுடைய சந்தோஷம் தான் அவனுக்கு முக்கியம்... எப்போதும்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro