Part 58
பாகம் 58
வர்ஷினியும், ரிஷியும் பதட்டமாக இருப்பதை பார்த்தான் நிமல். அவர்களுக்கு என்ன கூறி சமாதானப்படுத்துவது என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. அவர்கள் ஏதோ முணுமுணுப்பதை அவன் கவனித்தான்.
"நீங்க ரெண்டு பேரும் டென்ஷன் ஆகாம இருங்க" என்றான்.
"டென்ஷன் ஆகாம எப்படி இருக்கிறது, மாம்ஸ்? அப்பா ஏன் கான்ஃபரன்ஸ்ஸை அட்டென்ட் பண்ணலன்னு ஒன்னும் புரியல. அவர் எப்போ திரும்பி வரப் போறாருன்னும் தெரியல. நான் இங்க தங்கி இருக்கிற விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா என்ன செய்றது? அவங்க எப்ப வர போறாங்கன்னு தெரிஞ்சா தானே நாம அதுக்கேத்த மாதிரி ப்ரிப்பர் ஆக முடியும்?" என்றான்.
நிமல், வர்ஷினியை பார்க்க, அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள். அப்படி என்றால், இவர்கள் அதைப் பற்றித் தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
"லட்சுமிக்கு ஃபோன் பண்ணி, அவங்க ஏதாவது சொன்னாங்களான்னு கேளு" என்றான் நிமல்.
"நான் எப்போ திரும்பி வருவேன்னு அவங்க கேட்பாங்களே" என்றான் ரிஷி வெறுப்புடன்.
"உங்க அப்பா, அம்மா வந்ததுக்கப்புறம் தான் திரும்பி வருவேன்னு சொல்லு. அதனால, அவங்க எப்ப வர போறாங்கன்னு உனக்கு சொல்ல சொல்லு" என்றான் நிமல்.
"சரி... அவங்க ரெண்டு பேரும் எங்க சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல" என்றான் அலுப்புடன் தன் கைபேசியை எடுத்தவாறு.
"நாளைக்கு நான் ஊட்டிக்கு போறேன்" என்றான் நிமல் வர்ஷினியிடம்.
"வேண்டாம் நிமல். நீங்க போக வேண்டாம்"
"ஏன்?"
"உங்களுக்கு எங்க அப்பாவை பத்தி தெரியாதா? அவர் யாரையுமே மதிக்க மாட்டார்... முக்கியமாக உங்களை... குணசேகரன் அங்கிள் அவரை தேடட்டும்"
"ஆர் யூ ஷ்யூர்?"
"ஆமாம்... அவர் வேற ஏதாவது பிளான் பண்ணி இருக்கலாம். நம்ம அதுல தலையிட வேண்டாம்னு நினைக்கிறேன்"
"ஒரு தடவை நல்லா யோசிச்சிக்கோ"
"ரெண்டு நாள் வெயிட் பண்ணி பார்க்கலாம். அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கலாம்"
"சரி"
லட்சுமியுடன் பேசி முடித்துவிட்டு வந்தான் ரிஷி.
"லட்சுமி அக்காவுக்கும் அவங்க கால் பண்ணலயாம்" என்றான்.
"நிஜமாவா? விசித்திரமா இருக்கே..." என்றாள் வர்ஷினி.
"இருக்கட்டும் விடுக்கா... அவங்க இன்னும் கொஞ்ச நாள் ஊட்டியிலயே தங்கட்டும். அதுவரைக்கும் நானும் இங்கேயே ஜாலியா இருப்பேன்..."
"பைத்தியக்காரா..." என்று அவனை செல்லமாய் தட்டினாள் வர்ஷினி.
"ப்ளீஸ், மாம்ஸ்... அவங்களை தயவுசெஞ்சு தேடாதீங்க. இந்த ஒரு தடவையாவது உங்க பொண்டாட்டி பேச்சை கேட்காதீங்க" என்றான் ரிஷி.
நிமல் வாய்விட்டு சிரிக்க,
"என்ன்ன்னது...?" என்றாள் வர்ஷினி.
"வர்ஷு, ரிஷியோட பேச்சை கேட்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்ல. இல்லனா, இந்த பையன் என்னை பொண்டாட்டி தாசன்னு சொல்லுவான்." என்றான் நிமல்.
அதைக் கேட்டு கலகலவென சிரித்தான், ரிஷி. தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பல்லை கடித்து கொண்டு நின்றாள் வர்ஷினி.
"நீங்களும் அவன் கூட சேர்ந்துக்கிட்டு என்னை கிண்டல் பண்றீங்களா?"
"நான் உண்மையைத் தானே சொன்னேன்?"
"அதானே... இவர் உண்மையிலேயே ஒரு பொண்டாட்டி தாசன் தானே...?" என்று ரிஷி கூற, தலையை லேசாய் குனிந்து அவன் கூறியதை ஏற்றுக் கொண்டான் நிமல்.
"ரெண்டு பேரும் வாயை மூட போறீங்களா இல்லயா...?" என்றாள் வர்ஷினி.
"நான் நிரூபிச்சி காட்டடுமா?" என்றான் ரிஷி.
நிமலும், வர்ஷினியும் அவனை ஆச்சரியமாய் பார்த்தார்கள், எப்படி அவன் நிரூபிக்க முடியும் என்று.
"மாம்ஸ், அக்காவுக்கு தலை வலிச்சா என்ன செய்வீங்க?"
"தைலம் தேச்சு விடுவேன்... இல்லன்னா தலையை பிடிச்சு விடுவேன்"
"கால் சுளுக்கிகிச்சின்னா...?"
"எங்க ரூமுக்கு தூக்கிட்டு போவேன்"
"கைல அடிபட்டா?"
"சாப்பாடு ஊட்டி விடுவேன்"
"அப்படின்னா, நீங்க பொண்டாட்டி தாசன் இல்லாம வேற யாரு?" என்று விழுந்து விழுந்து சிரித்தான்.
அவனை அடிக்க தன் கையை உயர்த்தினாள் வர்ஷினி. அவள் அடியில் இருந்து தப்பித்து ஓடிய ரிஷியை துரத்தத் துவங்கினாள் வர்ஷினி. அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நிமல், அவள் தன்னை தாண்டி ஓடும் போது அவள் கையை பிடித்து நிறுத்தினான்.
"அவன், அப்படி என்ன தப்பா சொல்லிட்டான்னு நீ அவனை இப்படி துரத்திகிட்டு இருக்க?"
"அவன் உங்களை பொண்டாட்டி தாசன்னு சொன்னான்..."
"சொல்லட்டும்... நான் சந்தோஷமான பொண்டாட்டி தாசனா இருந்துட்டு போறேன்..."
பெருமூச்சுவிட்டாள் வர்ஷினி.
"இப்போ நான் உனக்காக செய்வேன்னு சொன்ன வேலையெல்லாம், எனக்காக நீ செய்ய மாட்டியா?"
செய்வேன் என்று தலையசைத்தாள் வர்ஷினி. அதைக்கேட்டு சத்தமாய் சிரித்தான் ரிஷி.
"மாம்ஸ், நீங்க அவளை தூக்குற மாதிரி அவ உங்கள தூக்கினா, அவ கீழே விழுந்துடுவா..."
அதைக் கேட்டு நிமலும் சிரித்தான்.
"அவன் சொல்றது சரி தான்"
முகத்தை சுளித்து சினிங்கினாள் வர்ஷினி. அவளிடம் ஓடி வந்த ரிஷி,
"சும்மா விளையாட்டுக்கு தான் கா சொன்னேன்" என்று அவளை கட்டிக்கொண்டான்.
புன்னகையுடன் அவளும் அவனை கட்டிக்கொண்டாள்.
"ஒரு விஷயத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன்... உங்க சண்டைக்கு நடுவுல வரவே கூடாது. கடைசில நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிடுறீங்க..." என்றான் நிமல்.
அவர்கள் இருவரும் களுக்கென்று சிரித்தார்கள்.
"வாக்கா கீழே போகலாம்" என்று அவள் கையை பிடித்துக்கொண்டு கீழே அழைத்துச் சென்றான் ரிஷி.
கீழ் தளம் வந்து, மற்றவர்களுடன் அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் நிமல். இப்போதைக்கு அவன் குமணனைக் தேட வேண்டியதில்லை. ஆனால் அவனுக்கு தெரியும், நிச்சயம் குணசேகரன் அதை செய்வார். நாளை மாலை அவர்களை வெளியில் விட சொல்லி கூறியிருக்கிறான் அல்லவா... அப்பொழுது, அவர்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.
மறுநாள் மாலை
பதட்டத்துடன் நிமலின் அறைக்குள் நுழைந்தான் ரிஷி. அவன் அப்படி ஓடி வருவதைப் பார்த்து வர்ஷினியும் பதட்டம் அடைந்தாள்.
"என்ன ஆச்சி, ரிஷி?"
"குணசேகரன் அங்கிள் வந்திருக்காரு. நான் இங்க இருக்கறது தெரிஞ்சா, அவர் அப்பாகிட்ட சொல்லிடுவாரு."
"அவர் இங்கிருந்து போற வரைக்கும் நீ வெளியில வராத."
"ஓகே"
அவள் நிமலை பார்க்க, அவர்கள் இருவரும் கீழ்தளம் நோக்கி சென்றார்கள். பார்வதி, குணசேகரனுக்கு காபி கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார் குணசேகரன். நிமலும், வர்ஷினியும் வருவதை பார்த்து, அந்த குவளையை டீப்பாயின் மீது வைத்துவிட்டு எழுந்து நின்றார்.
"வாங்க அங்கிள்" என்றாள் வர்ஷினி.
"எப்படி மா இருக்க?"
"நல்லா இருக்கேன், அங்கிள். இவர் என்னோட ஹஸ்பண்ட்" என்று நிமலை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
"எனக்கு தெரியும் மா" என்றபடி அவனை நோக்கி கையை நீட்டினார். அவர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
"உட்காருங்க, சார்" என்றான் நிமல்.
மீண்டும் சோபாவில் அமர்ந்து, காபியை எடுத்துக் கொண்டார் குணசேகரன்.
"சொல்லுங்க அங்கிள்" என்றாள் வர்ஷினி.
"உங்க அப்பா ஒரு கான்ஃபரன்ஸ்காக ஊட்டிக்குப் போயிருந்தார். ஆனா, அவர் அந்த கான்ஃபரன்ஸ்ஸை அட்டென்ட் பண்ணல. இந்த தடவை உங்க அம்மாவும் அவரோட போயிருந்தாங்க. ஊட்டிக்கு போனதுக்கு அப்புறம், குமணன் யாருக்கும் கால் பண்ணவே இல்ல. அவருடைய ஃபோனும், உங்க அம்மாவுடைய ஃபோனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு. அவங்களை யாராலயும் காண்டாக்ட் பண்ண முடியல"
"அவங்க எங்க தங்கி இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றாள் வர்ஷினி.
"அது யாருக்கும் தெரியல"
"ஏன் அங்கிள்?"
"ஏன்னா, போன மாசம் அவர் ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு ஊட்டி போயிருந்தப்போ, ஒரு புது பங்களாவை ஊட்டியில் வாங்கினார். இந்த தடவை, அங்க தான் தங்க போறதா காமேஸ்வரன்கிட்ட சொல்லியிருக்கார்"
"நீங்க தான் அவரோட லாயராச்சே... அவர் புதுசா வாங்கின சொத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா?" என்றான் நிமல்.
"அந்த நேரம், நான் என்னோட மூத்த பொண்ணோட கல்யாணத்துல ரொம்ப பிசியா இருந்தேன். என்னால ஊட்டிக்கு போக முடியல."
"அந்த டாகுமெண்ட்டில் அட்ரஸ் டீடைல்ஸ் இருக்கணுமே..." என்றான் அவருக்கு தெரியாததைக் கூறுவது போல நிமல்.
"அந்த டாக்குமெண்டை குமணன் மிஸ் பண்ணிட்டாரு..."
"என்னது...? அப்பா டாக்குமெண்டை மிஸ் பண்ணிட்டாரா...?" என்றாள் வர்ஷினி நம்பமுடியாமல்.
"ஊட்டியில் இருந்து திரும்பி வரும் போது, கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல அவருடைய பேக்கை யாரோ திருடிட்டாங்க. ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு அவர் சென்னைக்கு வந்துட்டாரு. அதனால தான், எனக்கு அந்த பங்களாவை பத்தி எதுவும் தெரியல. தனக்கு அந்த பங்களாவை ரொம்ப பிடிச்சு இருந்துதுன்னு குமணன் சொன்னாரு. ஏன்னா, அது புது டெக்னாலஜியோட இருந்த ஒரு கம்ப்யூட்டரைஸ்டு பங்களா..."
"கம்ப்யூட்டரைஸ்டு பங்களாவா?" என்று விழி விரித்தாள் வர்ஷினி.
"ஆமாம்"
"அப்படின்னா, அது ரொம்ப செக்யூர்டா இருந்திருக்கணுமே..."
"அப்படித் தான் இருந்திருக்கணும்"
"அந்த பங்களாவை பத்தி அவர் வேற ஏதாவது சொன்னாரா?" என்றான் நிமல்.
"ஊட்டிக்கு முன்னாடியே இருந்ததுன்னு சொன்னார். சுற்றுவட்டாரத்தில் அரை கிலோ மீட்டருக்கு வீடே கிடையாதுன்னு சொன்னார்"
"அப்படின்னா, அந்த மாதிரி தனியா இருக்கிற பங்களாவை நம்ம ஏன் தேடி பார்க்க கூடாது?" என்றாள் வர்ஷினி
"என்னோட ஆளுங்க அதைத் தான் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, அது அவ்வளவு சுலபமான வேலை இல்ல. ஊட்டி, நிறைய மலைகளை உள்ளடக்கிய ஒரு இடம். அதோட சுற்றுவட்டாரத்தில் நிறைய வில்லேஜ் இருக்கு. ஆனாலும், நாங்க முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்..."
அப்போது, குணசேகரனின் கைபேசி அலறியது. அதிலிருந்த எண்களை பார்த்துவிட்டு, வர்ஷினியை பார்த்தார் குணசேகரன்.
"ஊட்டியில் இருந்து தான் கூப்பிடுறாங்க..." என்று கூறியபடி அழைப்பை ஏற்றார்.
"சொல்லுங்க...."
"......"
"என்னது...?"
"......"
"எப்போ?"
"...."
"நீங்க அவங்களை தேடி பார்த்தீர்களா?"
"....."
"அந்த ஃபோட்டோஸை எனக்கு உடனே அனுப்புங்க. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்"
மாறிக் கொண்டே இருந்த அவர் முகபாவத்தை, நிமலும், வர்ஷினியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த அழைப்பைத் துண்டித்தார் குணசேகரன்.
"என்ன ஆச்சி, அங்கிள்?"
"குமணன் சொன்னதோட ஒத்து போறா மாதிரி ஒரு பங்களாவை என்னோட ஆளுங்க கண்டுபிடிச்சிருக்காங்க"
"நிஜமாவா, அங்கிள்?"
"ஆமாம்... ஆனா, இன்னைக்கு காலையில அந்த பங்களாவில் ஏதோ ஃபயர் ஆக்சிடென்ட் நடந்திருக்கு போல இருக்கு... ஷார்ட் சர்க்யூட்டுன்னு சொல்றாங்க... ஏன்னா, அந்த வீட்டு பக்கத்துல இருந்த டிரான்ஸ்ஃபாமர் வெடிச்சிடுச்சாம். நெருப்புல சிதிலமடைஞ்ச அந்த வீட்ல சில பொருட்கள் கிடைச்சிருக்காம். அதுல ஏதாவது உங்களுக்கு தெரியுமான்னு பாருங்க"
வர்ஷினி மட்டுமல்ல நிமலும் கூட ஆடித் தான் போனான். ஷார்ட் சர்க்யூட்? அது எப்படி நடந்தது? அந்த வீட்டில் தான், மின்சாரம் மொத்தமாய் துண்டிக்கப்பட்டிருந்ததே...
"அந்த வீட்டில் யாராவது இருந்தாங்களா?" என்றான் நிமல்.
"தெரியல..."
தனக்கு, தன்னுடைய ஆட்களை அனுப்பி வைத்திருந்த புகைப்படங்களை, வர்ஷினியிடம் காட்டினார் குணசேகரன். அதில் பிய்ந்து போன செருப்பு, கைப்பையின் பாகம், கந்தலான துணி, போன்றவை படம் எடுக்கப்பட்டு இருந்தது.
அந்த கந்தல் துணியை பார்த்து வர்ஷினியின் கண்கள் விரிவடைந்தது. இதே புடவை, கல்பனாவிடம் இருந்தது.
"அம்மாகிட்ட இந்த ஸாரி இருந்துது, அங்கிள்"
"நிச்சயமா தெரியுமா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"நேரா குமணன் இல்லம் போங்க. உங்க அப்பாவுடைய ரூமை கொஞ்சம் செக் பண்ணி பாருங்க. அங்க நமக்கு ஏதாவது கிடைக்கலாம்"
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"தேங்க்யூ"
அங்கிருந்து கிளம்பிச் சென்றார் குணசேகரன்.
நிமலை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் வர்ஷினி. அவள் முதுகை வருடிக் கொடுத்தான் நிமல். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை.
"வர்ஷினி, உன்னை நீ தான் திடமா வச்சுக்கணும்" என்றார் பார்வதி.
நிமிலிடமிருந்து விலகி, ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி, கண்ணீரைத் துடைத்தபடி. அவள் நிமலை பார்த்து கூறினாள்,
"ஆண்டவனுடைய தீர்ப்பிலிருந்து யாராலயும் தப்பிக்க முடியல பார்த்தீங்களா...?"
மென்று முழுங்கினான் நிமல்.
"உங்க அப்பா, அம்மாவை எந்த ஊட்டியில அவர் கொன்னாரோ, அதே ஊட்டியில அவருக்கு முடிவை எழுதி வச்சிருக்கிறார் கடவுள்."
அமைதி காத்தான் நிமல்.
"இதைத் தான் கர்மான்னு சொல்றாங்க போல இருக்கு... விதைச்சதை அறுத்து தானே ஆகணும்...?"
"வர்ஷினி, அவர் செஞ்ச பாவத்தைப் பத்தி யோசிக்க, இது நேரம் இல்லம்மா" என்றார் பார்வதி.
"யோசிக்க வேற எதுவுமே இல்லம்மா... ஏன்னா, அவர் நல்லதுன்னு எதுவுமே செஞ்சதில்ல... செஞ்சது எல்லாமே பாவம் தான்... அதனால தான் கடவுள் அவரை தண்டிச்சிட்டார்..."
"நான் ஊட்டிக்கு போயிட்டு வரேன்" என்றான் நிமல்.
"வேண்டாம் நிமல். குணசேகரன் அங்கிளே எல்லாத்தையும் செய்யட்டும்..."
"ஆனா, வர்ஷினி..."
"அவங்களுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை மட்டும், நம்ம செய்யலாம். அது போதும்"
அவள் அவ்வளவு உறுதியாக இருந்ததை பார்த்து பிரமித்துப் போனான் நிமல்.
தன்னுடைய பெற்றோரை கொன்ற அவருக்காக, நிமல் எதையும் செய்ய வேண்டாம் என்று நினைத்தாள் வர்ஷினி. அவள் செய்யச் சொன்னால், நிமல் நிச்சயம் செய்வான் என்று அவளுக்கு தெரியும். ஆனால், தான் ஒரு சுயநலவாதியாக இருக்க அவள் விரும்பவில்லை. இப்போது அவன் தனக்காகவும், ரிஷிக்காகவும் செய்து கொண்டிருப்பதே போதுமானது. அவனுக்கு அறவே பிடிக்காத அவர்களுக்காக, அவனை எதையும் செய்ய வைக்க வேண்டாம் என்று நினைத்தாள் வர்ஷினி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro