Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 57

பாகம் 57

சுதாவின் இல்லத்திற்கு செல்ல அனைவரும் தயாரானார்கள். தன்னை நிமல் தடுக்காததை நினைத்து வர்ஷினி ஆச்சரியம் அடைந்தாள். அவளை தன்னுடன் இருக்குமாறு அவன் கேட்கவில்லை. அவளும் கூட, அவன் ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் நினைத்தாள். கடந்த இரு தினங்களாக அவனுக்கு சரியான உறக்கமில்லை. மேலும், வேறு ஒருவர் வீட்டில் இருக்க அவனுக்கு பிடிக்காது என்பதும் அவளுக்குத் தெரியும். அதனால் அவனை தங்களுடன் வருமாறு அவள் கேட்கவில்லை. வீட்டில் யாரும் இல்லாவிட்டால் அவன் ஓய்வெடுத்து தானே தீர வேண்டும்...?

"நாங்க கிளம்பறோம்... நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க" என்றாள் வர்ஷினி.

சரி என்று தலையசைத்தான் நிமல்.

"நீங்க அப்செட்டா இருக்கீங்களா?"

இல்லை என்று தலையசைத்தான்.

"நான் வீட்ல இருக்கவா?"

வேண்டாம் என்று வேறெங்கோ பார்த்தபடி தலையசைத்தான்.

"அப்புறம் எதுக்கு முகத்தை பரணை மேல தூக்கி வச்சிருக்கீங்க?"

"நீயும் அவங்களோட போறேன்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லயே..."

"எனக்கே இப்ப தான் சொன்னாங்க"

"ம்ம்ம்"

"கொஞ்சம் சிரிங்களேன்..."

"ஈஈஈ" என்று பல்லை கட்டினான் நிமல்.

களுக் என்று சிரித்தாள் வர்ஷினி.

"ஜாக்கிரதையா போயிட்டு வா"

"நான் ரிஷியை என்கூட கூட்டிகிட்டு போகட்டுமா?" என்றாள் தயங்கி.

அவளை நம்ப முடியாமல் பார்த்தான் நிமல்.

"அவன் கிளாசை பங்க் பண்ணான்னு உங்க அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது?" என்றான்.

"அவங்க அவ்வளவு மும்முரமாயெல்லாம் அவனை கவனிக்கிறவங்க கிடையாது. நம்ம லீவ் லெட்டர் கொடுத்துட்டா, அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல"

"ஆர் யூ ஷ்யூர்?"

"ரிஷி இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருக்க போறான். அதுவரைக்கும் அவன் சந்தோஷமா இருக்கட்டுமே..."

"சரி. உன் இஷ்டம்... நீ லீவ் லெட்டர் கொடுக்கிறதா இருந்தா, உங்க அப்பா கையெழுத்தோடவே கொடுக்கலாமே..." என்றான் கிண்டலாக.

புரியாமல் முகத்தைச் சுளித்த வர்ஷினி, அவன் வெற்று பத்திரங்களைப் பற்றி பேசுகிறான் என்பதை உணர்ந்து அவன் தோளில் பட்டென்று ஒரு அடி போட்டு, அவனைப் பார்த்து முறைக்க, வாய்விட்டு சிரித்தான் நிமல்.

"நான் கிளம்பறேன்" என்று அவள் நடக்க, அவளை பின்தொடர்ந்தான் நிமல்.

அவர்கள் கீழ்த்தளம் வந்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல தயாரான ரிஷி, தனது மதிய உணவு பையை சோகமாய் எடுத்துக்கொண்டான்.

"ரிஷி, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நம்ம சுதா வீட்டுக்கு போகலாம்" என்றாள் வர்ஷினி.

"நானும் உங்க கூட வர்றேனா?" என்றான் நம்ப முடியாமல்.

"ஆமாம், நாளைக்கு நம்ம லீவு லெட்டர் கொடுத்துக்கலாம்"

"ஏய்ய்ய்ய்... ஜாலி.... தேங்க்யூ, அக்கா"

விருந்தினர் அறையை நோக்கி ஓடினான் ரிஷி, உடை மாற்றிக்கொண்டு வர.
 
"குட் ஐடியா" என்றான் ஆகாஷ்.

"ஆமாம். அவன் ரொம்ப அப்செட்டா இருந்தான்" என்றாள் அனு.

"நிம்மு, உனக்கு லன்சை டைனிங் டேபிள்ல வச்சிருக்கேன். யாரும் இல்லைங்குறதால வேலனுக்கு இன்னைக்கு லீவ் கொடுத்திருக்கு. நீ நிம்மதியா படுத்து தூங்கு. ஏதாவது வேணும்னா ஃபோன் பண்ணு." என்றார் பார்வதி.

"அம்மா, நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல... யாராவது கூட இருந்து பார்த்துக்க..."

"அது சரி... நாங்க போயிட்டு வறோம்" என்றார் சிரித்தபடி.

"பை"

அனைவரும் சுதாவின் இல்லத்திற்கு கிளம்பிச் சென்றார்கள். விஸ்வநாதனும் அலுவலகம் கிளம்பினார். மீட்டிங்குக்காக மூன்று நாள் விடுப்பில் அவர் ஊட்டிக்கு சென்றதால், அலுவலகத்தில் அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன.

பரபரவென தன் அறையை நோக்கி சென்று, உடைமாற்றி தயாரானான் நிமல். மெத்தையை லேசாய் தூக்கியவன், குமணன் கையெழுத்திட்டிருந்த வெற்றுக் காகிதங்களை அங்கிருந்து புன்னகையுடன் எடுத்தான். அங்கு தான் அதை வர்ஷினி மறைத்து வைத்திருந்தாள். அந்த பத்திரங்களை தனது கோட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். ராஜாவுக்கு ஃபோன் செய்தபடி கீழ் தளம் வந்தான். அதே நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கதவைத் திறந்தவன், அங்கு ராஜா நின்றிருந்ததை பார்த்தான்.

"பிரைவேட் ஃபிலைட் ரெடியா இருக்கு" என்றான் ராஜா.

"நானும் ரெடி" என்றான் நிமல்.

"எல்லாரும் சாயங்காலம் திரும்பி வர லேட் ஆகும்னு பிரகாஷ் சொன்னான். நமக்கு நிறைய டைம் இருக்கு. நம்மளுடைய கல்குலேஷன் படி எல்லாம் சரியா நடந்தா, நம்ம ரெண்டரை மணி நேரத்துல ஊட்டி போயிடலாம். எல்லாரும் வரதுக்கு முன்னாடி, நம்ம திரும்பி வந்துடலாம்."

"கிளம்பலாம்"

அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்... விமான நிலையம் நோக்கி... ஊட்டியை நோக்கி...

ஊட்டி

மிகவும் பிரயத்தனம் செய்து தன் கண்களை திறந்தார் குமணன், மயான அமைதியுடன் விளங்கிய பங்களாவில் திடீரென கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதால். இரண்டு பேர் உள்ளே நுழையும் மங்கலான காட்சியைக் கண்டார் அவர். அவர்கள் அருகில் வந்த போது தான், வந்திருப்பது யார் என்பது தெளிவாய் அவருக்கு தெரிந்தது. அவரால் நம்பவே முடியவில்லை, தான் காண்பது, ராஜராஜனின் மகன் ராஜேந்திரனுடன் தன் மருமகனை தான் என்பதை. அவரை பட்டினி போட்டு கொன்றது இவன் தானா? தன்னை இப்படியெல்லாம் சித்திரவதை செய்பவன், தன்னை விட கொடுமைக்காரனாகத் தான் இருக்கவேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டிருந்த அவன், நிமல் தானா...? பிரயத்தனம் செய்து எழுந்து நின்றார் குமணன்.

எவ்வளவு முயன்றும், கல்பனாவால் எழுந்திருக்க முடியவில்லை. தன் கண்களைத் திறந்து வைக்க முயன்று கொண்டு, தரையில் படுத்தபடி அவர்களை பார்க்க முயன்றார். அவர் தன் சக்தியை முழுமையாய் இழந்துவிட்டிருந்தார்.

தான் வைத்த பணப்பெட்டி, தொட படாமல் இருந்ததை பார்த்தான் நிமல்.

"இந்த பணத்தை நீங்க இன்னும் சாப்பிடலயா?" என்றான் திடமான முகத்தோடு.

"நீயா...? இதெல்லாம் செஞ்சவன் நீ தானா, நிமல்?"

"ஆமாம். இதெல்லாம் செஞ்சது நான் தான்"

"ஏன்? உன்னை பெத்தவங்களை கொன்ன பழியை தீர்த்துக்கவா? நான் அவங்களை கொன்னேன்... ஆனா, நீ செஞ்சிருக்க? குருபரனோட மகன், இப்படிப்பட்ட கொடுமைக்காரனா  இருப்பான்னு நான் எதிர்பார்க்கல. உங்க அப்பா, வர்றவங்களுக்கு இல்லன்னு சொல்லாம சோறு போட்டவர். அவருடைய மகனா இருந்துகிட்டு, இப்படி சோறு, தண்ணி இல்லாம எங்களை கொடுமைப்படுத்த உன்னால எப்படி முடிஞ்சிது?"

"இது என்னோட அம்மா, அப்பாவுக்காக இல்ல... அதை நம்ம அப்புறம் பாத்துக்கலாம்... இது என்னோட வர்ஷினிக்காக"

அவனை புரியாமல் பார்த்தார் குமணன்.

"இப்படி தானே அவளும் பசியால துடிச்சிருப்பா...? இப்படித் தானே அவளும் பட்டினி கிடந்து அவஸ்தைப்பட்டிருப்பா...? ஆமாம், நான் கொடுமைக்காரன் தான். என் வர்ஷினியை யாரு கஷ்ட படுத்த நினைச்சாலும்... ஏன், அவளோட அப்பனே நினைச்சாலும், அவனுக்கு நான் கொடுமைக்காரனா தான் இருப்பேன். ஆனா, நான் உன்னைவிட ஒன்னும் கொடுமைக்காரன் இல்ல. பெத்த மகள்னு கூட பாக்காம அவளை பட்டினி போட்ட ராட்சசன் நீ. உன்னை எவ்வளவு சித்திரவதை செய்தாலும் தகும். பசியோட கொடுமை எப்படி இருக்கும்னு நீ தெரிஞ்சிக்கணும். அதோட, எங்க அப்பாவைப் பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல. நான் எங்க அப்பா மாதிரி நல்லவன் இல்ல தான். அவரை மாதிரியான நல்லவனா இருக்கவும் நான் விரும்பல... நல்லவனா இருந்தா தான், உங்களை மாதிரி ஆளுங்க வாழ விட மாட்டீங்களே..." என்று சற்று நிறுத்தினான் நிமல்.

"இன்னும் ஒரு விஷயம் இருக்கு. நீ எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன்னு நீ தெரிஞ்சுக்கணும்..."

தனது கோட் பாக்கெட்டில் வைத்திருந்த வெற்று முத்திரைத் தாள்களை எடுத்து, அதை குமணனிடம் காட்டினான். அதைப் பார்த்து விக்கித்து நின்றார் குமணன். தன்னுடைய கையெழுத்தை நிமலன் எப்பொழுது பெற்றான் என்பது அவருக்கு புரியவே இல்லை. அதுவும் வெற்று முத்திரைத் தாள்களில்...!

"என்னுடைய சிக்னேச்சரை நீ எப்போ... எப்படி வாங்கின? நான் எந்த வெத்து பத்திரத்திலும் இதுவரைக்கும் கையெழுத்து போட்டதே கிடையாது. என் கையெழுத்தை என்கிட்டயிருந்து வாங்க உனக்கு யார் உதவி செஞ்சது? சொல்லு, நிமல்"

நிமலின் பார்வை கல்பனாவின் பக்கம் திரும்பியது. அவரின் முகம் பயத்தில் வெளுத்துப் போயிருந்தது. அதில் மரண பயம் தெரிந்தது. இது நிமலிடம் தான் இருக்கிறதா? இவை நிமலுக்கு எப்படி கிடைத்தது? வர்ஷினி தான் அவனுக்கு கொடுத்திருக்க வேண்டும், என்று நினைத்தார் கல்பனா.

"இந்த பேப்பர்ல உங்க கையெழுத்தை வாங்கினது உங்க வைஃப் தான்... உங்களுக்கே தெரியாம... தன்னுடைய சுய லாபத்துக்காக..."

மீண்டும் கல்பனாவின் பக்கம் திரும்பி,

"நான் சொல்றது சரி தானே மிஸஸ். குமணன்?"

பேசவே திராணி இல்லாத கல்பனா, ஏதும் செய்ய இயலாதவராய் கண்களை மூடினார். அவர் மட்டும் முன்பு போல் இருந்திருந்தால் நிச்சயம் மறுத்து தான் பேசி இருப்பார். ஆனால் இப்பொழுது, அதை செய்யக் கூட அவருக்கு சக்தி இல்லை.

கல்பனாவை அதிர்ச்சியுடன் பார்த்தார் குமணன். அவர் காட்டிய அமைதி, குமணனுக்கு மேலும் அதிர்ச்சியூட்டியது.

"இது தான் நீங்க வாழ்ந்த வாழ்க்கை மிஸ்டர் குமணன். அடுத்தவங்கள கொன்னு, சொத்து சேர்த்த நீங்க, உங்களுக்கு உண்மையா இருக்க, ஒரே ஒருத்தரை கூட சம்பாதிக்கல. உங்க மனைவி கூட உங்களுக்கு உண்மையா இல்ல. நீங்க எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியணும். அதுக்காக தான் இந்த பேப்பர்ஸ்ஸை இங்க கொண்டு வந்தேன்"

தன் இதயத்தில் முள் தைப்பது போல் இருந்தது குமணனுக்கு... இதயமா...? இல்லை, இல்லை அந்த முள் வேறு எங்காவது தைத்திருக்கும்... அவருக்கு ஏது இதயம்?

"அதே நேரம், இப்படிப்பட்ட தண்டனையை, உங்களுக்கு கொடுத்தது யாருன்னும், எதுக்காகன்னும் உங்களுக்கு தெரியணும். முதுகுல குத்த, நான் உங்களை மாதிரி கோழை இல்ல. உங்க மேல நிறைய கோவம் இருந்தாலும், உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்... என் வர்ஷினியை பெத்ததுக்காக... குட் பை"

"நிமல், என்னை இப்படி விட்டுட்டு போகாதே... என்னை கொன்னு உன் கோபத்தை தீர்த்துக்கோ... என்னால பசி தாங்க முடியல... இது நரகம்"

"ரொம்ப சந்தோஷம், நரகம் பூமியில தான் இருக்குன்னு நீங்க தெரிஞ்சிக்கிட்டிங்களே... சொர்க்கமும், நரகமும், நம்ம வாழ்க்கையை வாழுற விதத்தில் தான் இருக்கு. அந்த உண்மையை புரிஞ்சுக்காம, மனுஷங்க வேண்டாத விஷயங்கள் பின்னாடி ஓடிக்கிட்டு இருக்காங்க. நீங்க எப்படியும் நரகத்துக்கு தான் போவீங்க. அதனால இப்பவே நீங்க நரகத்தில் இருக்கலாம்"

அங்கிருந்து ராஜாவுடன் நடக்கத் துவங்கினான் நிமல். மீண்டும் கணினி அட்டையின் உதவியுடன் வீட்டைப் பூட்டினான் நிமல்.

"நாளைக்கு சாயங்காலம் அவங்களை வெளியில விட்டுடு, ராஜா" என்ற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ராஜா.

ஆம் என்று தலை அசைத்தான் நிமல்.

"இதை செஞ்சது நம்ம தான்னு அவரால நிரூபிக்கவே முடியாது. மிச்சத்தை அவர் வெளியில வந்ததுக்கப்புறம் பாத்துக்கலாம்"

மறுப்பேதும் கூறாமல் சரி என்று தலையசைத்தான் ராஜா.

மாலை

அனைவரும் வீடு திரும்ப மணி 7 ஆகிவிட்டது. புன்னகையுடன் கதவைத் திறந்தான் நிமல். வர்ஷினி பதட்டத்துடன் இருந்ததை அவன் கவனித்தான்.

என்ன? என்பது போல் தன் புருவத்தை அவளை நோக்கி உயர்த்தினான். அவன் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள் வர்ஷினி. முகத்தை சுளித்தபடி அவளுடன் சென்றான் நிமல். யாரும் அவர்களை தடுக்க வில்லை. ஏனென்றால், அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது.

"என்ன ஆச்சி, வர்ஷு?"

"குணசேகரன் அங்கிள் கால் பண்ணி இருந்தார்"

"உங்க அப்பவோட லாயர், குணசேகரனா?"

"ஆமாம்... அப்பா, எதுக்காக ஊட்டிக்கு போனாரோ அந்த கான்ஃபிரன்ஸ்ஸை அவர் அட்டென்ட் பண்ணலயாம்..."

"இன்னைக்கு காலையில அப்பாவும் என்கிட்ட சொன்னாரு. சுதா வீட்டுக்கு போகும் போது, உன்னை அப்ஸட் பண்ண வேண்டாம்னு தான் நான் உன்கிட்ட சொல்லல" என்றான் நிமல்.

"அவங்களுடைய ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு. அவங்ககிட்ட யாராலயும் பேச முடியல. அவங்க இந்த மாதிரி இருந்ததே இல்ல. என்ன நடந்திருக்கும்?"

"அவர் ஊட்டிக்கு போனா, வழக்கமா எங்க தங்குவாரோ, அங்க விசாரிக்க சொல்லு..."

"இந்த தடவை, அவர் வழக்கமா தங்குற ஹோட்டல்ல தங்கலயாம். போன மாசம் ஊட்டியில புதுசா ஒரு பங்களா வாங்கினாராம். அங்க தான் தங்க போறதா சொன்னாராம்"

"அந்த பங்களாவுடைய அட்ரஸ் யாருக்காவது தெரியுமா?"

"யாருக்கும் தெரியாது"

"இது சம்பந்தமா நான் ஏதாவது செய்யணும்னு நீ நினைக்கிறாயா?"

"உங்க சோர்ஸை யூஸ் பண்ணி, உங்களால ஏதாவது செய்ய முடியுமா?"

"நாளைக்கு நான் ஊட்டிக்கு போயிட்டு வரேன்"

சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி. அவள் சோகமான முகத்தை பார்த்து பெருமூச்சுவிட்டான் நிமல்... இந்த முறை அவனால் எதுவும் செய்ய முடிவில்லை. இதயமற்ற அவள் பெற்றோருக்கு சரியான தண்டனை கிடைத்து தான் தீர வேண்டும். அவர்களுக்காக வர்ஷினி வருத்தப்படுவதை தடுக்க முடியாது... அவள் அப்படித் தான்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro