Part 52
பாகம் 52
வர்ஷினியின் கண்கள், அந்த பத்திரத்தின் மீதே இருந்தது. அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? குமணனின் கையெழுத்து, வெற்றுத் தாள்களில் எப்படி வந்தது? மூளையை பிழிந்து யோசித்தாள். அவள் முகத்தை பார்த்து நிமலும் குழம்பிப் போனான்.
"வர்ஷு..."
தன் கையை காட்டி, அவனை அமைதியாக இருக்கும்படி கூற, அவனது குழப்பம் மேலும் அதிகரித்தது.
தன் கண்களை மூடி நடந்தவற்றை யோசித்துப் பார்த்தாள் வர்ஷினி. சில முக்கியமான தாள்கள் காணாமல் போனதற்காக கல்பனா அவளை அடித்தது அவள் நினைவுக்கு வந்தது. என்ன நடந்திருக்கக்கூடும் என்று அவளுக்கு புரிய ஆரம்பித்தது.
அப்படியென்றால், கல்பனா தேடியது இந்த காகிதங்களை தானா...? தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காக, அவர் தான் இந்தத் தாள்களில் குமணனின் கையெழுத்தை பெற்றிருக்க வேண்டும். அதனால் தான், குமணனிடம் அந்த காகிதங்களை பற்றி, ரிஷி அவரைக் கேட்க சொன்ன போது கல்பனா பதட்டமடைந்தாரா...?
மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவளையே குழப்பமாய் பார்த்துக்கொண்டிருந்த நிமலை பார்த்தாள் வர்ஷினி. அவனருகில் வந்தமர்ந்தாள்.
"எங்க அப்பா உங்ககிட்ட இருந்து பறிச்ச எல்லா சொத்தையும் திருப்பி வாங்குற சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைச்சா என்ன செய்வீங்க?"
தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாய் அவளைப் பார்த்துவிட்டு, புன்னகைத்தான்.
"எனக்கு அந்த சொத்து வேண்டாம்"
தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை அவனிடம் நீட்டினாள் வர்ஷினி. அதைப் பார்த்த நிமலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, சில பேப்பர்ஸ் காணோம்னு எங்கம்மா என்னை அடிச்சாங்க..."
கேட்டவுடன் அவனுக்கு கோபம் கொந்தளித்தது. அதற்காகத் தான் அவன் கல்பனாவிற்கு வசமாய் திருப்பி கொடுத்து விட்டானே...!
"அது இந்த பேப்பர்ஸ் தான்னு நினைக்கிறேன். அப்பாவுக்கு தெரியாம அவர்கிட்ட அவங்க கையெழுத்து வாங்கி இருக்கணும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, சுதா எனக்கு கொடுத்த இந்த புக்குல அவங்க இதை வச்சிருக்கணும். பாருங்க, இது வந்து சேரவேண்டிய இடத்துக்கு சரியா வந்து சேர்ந்துடிச்சி. அதனால தான் எனக்கு கடவுள் மேல நம்பிக்கை அதிகம்" என்றாள் சந்தோஷமாக.
எந்த முகபாவமும் இன்றி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் நிமல்.
"என்ன எதுவுமே பேசாம என்னை பார்த்துகிட்டு இருக்கிங்க?"
"இந்த பேப்பரை நீ என்ன செய்யப் போற?"
தான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் வெகு சாதாரணமாய் இருப்பதை பார்த்து அவள் முகம் சுளித்தாள்.
"நிமல் இதெல்லாம் பிளாங்க் பேப்பர்ஸ்... உங்க அப்பாவை ஏமாத்தினவரொட கையெழுத்தோட இருக்கு..."
"அதான் பார்த்தாலே தெரியுதே..."
"பின்ன?"
"நமக்கு இந்த பேப்பர் எதுக்குன்னு கேட்டேன்"
"நீங்க அவர்கிட்ட இருந்து உங்களுடைய சொத்தை மீட்க முடியும். அவரை பழி வாங்க முடியும். அவர் உங்க அப்பாவுக்கு செஞ்சதையே நீங்களும் அவருக்கு திருப்பி செய்ய முடியும். அவரை ஒன்னும் இல்லாதவரா நடுரோட்டில் நிக்க வைக்க முடியும். உங்களுக்கு நடந்ததையே அவருக்கு நடத்திக் காட்ட முடியும்"
"அப்புறம்?"
"அவர் செஞ்ச தப்புக்கு அவருக்கு தண்டனை கிடைக்கும்"
"அப்போ ரிஷி என்ன ஆவான்?"
ஸ்தம்பித்து நின்றாள் வர்ஷினி.
"உங்க அப்பா செஞ்சதையே நானும் செஞ்சா, எனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? எங்க அப்பாவை அவர் ஏமாத்தினார். ஏன்னா, அவர் குமணன். நான் குமணன் இல்ல, நிமலன்..."
"ஆனா இதெல்லாம் உங்க சொத்து. நீங்க அவரை ஏமாத்தல. உங்களுடையதை தான் நீங்க திருப்பி எடுத்துக்க போறீங்க... உங்களுக்கு நல்லா தெரியும், அவர் செஞ்ச தப்புக்காக ரிஷியும் அவர் மேல கோவமா தான் இருக்கான்... "
"இருக்கலாம்... இப்போ அவன் சின்ன பையன். எதிர்காலத்துல அவன் வேற மாதிரி யோசிக்கலாம். அவனுடைய கோவம் நம்ம மேல திரும்பலாம். என்னோட கடந்த காலம் எவ்வளவு கசப்பானதுன்னு உனக்கு தெரியாது. இது ரொம்ப மோசமான வயசு. உங்க அப்பா கெட்டவர் அப்படிங்கறதுக்காக அவனுக்கு எந்த ஒரு கசப்பான அனுபவத்தையும் நம்மால ஏற்பட விடக்கூடாது. ஏற்கனவே உங்க அப்பாவால அவன் மனசு உடைஞ்சு இருக்கான். நானும் அதையே செய்யணும்னு நீ நினைக்கிறாயா? உங்க அப்பாவை விட்டுட்டு நம்ம கூட வந்து இருக்கணும்னு அவன் ஆசைப்படுறான். ஏன்னா, நான் உங்க அப்பா மாதிரி இல்லன்னு அவன் நம்புறான். அவனோட எண்ணத்தை நம்ம பொய்யாக்க கூடாது. அவன் நம்மளை மதிக்கிறான், நம்புறான், அதை நம்ம பாழாக்க கூடாது. அப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் ரொம்ப விலை மதிக்க முடியாதது. அவன் சந்தோஷமா இருக்கட்டும்"
பேச்சிழந்து நின்றாள் வர்ஷினி. நிமலின் உருவம் அவள் கண்களில் மங்கலாய் போனது. தேங்கி நின்ற கண்ணீர், அவன் முகத்தை சரியாய் பார்க்க விடாமல் தடுத்தது. அவளுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. புன்னகையுடன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான் நிமல்.
அவன் எதிர்பாராத விதமாக, அவன் கழுத்தை கட்டிகொண்டு, அவன் இதழ்களை சிறை பிடித்தாள். அவனுடைய காயம், வலி, அனைத்தையும் மறந்தாள். பதிலுக்கு ஒன்றும் செய்யாமல் அவள் தன்னை முத்தமிடவிட்டு நின்றான் நிமல். வேண்டாம் என்றல்ல... ஆரம்பித்துவிட்டால் அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பதற்காக. சிறிது நேரத்திற்கு பிறகு, அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தலை குனிந்தபடி அமர்ந்தாள் வர்ஷினி. ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நிமல்.
அந்த முத்திரைத் தாள்களை வாங்கி அதை கிழிக்க நிமல் முயன்ற பொழுது, அவனிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டாள் வர்ஷினி.
"என்ன பண்றீங்க நீங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்றாள் அதிர்ச்சியாக
"வர்ஷு..."
"நான் ஒத்துக்குறேன்... நீங்க ரொம்ப நல்லவர் தான்... மகாத்மா காந்தி தான்... ( வாய்விட்டு சிரித்தான் நிமல்) அதுக்காக இதை நீங்க கிழிப்பிங்களா?"
"நான் என்ன சொல்ல வர்றேன்னா..."
"நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்ல... இது என் அப்பாவுடையது. உங்களுக்கு வேண்டாம்னா போங்க..."
"அத வச்சி நீ என்ன செய்ய போற?"
"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்... நீங்க உங்க வேலைய பாருங்க..."
தன் கண்களை சுழற்றியபடி சிரித்தான் நிமல். அந்த தாள்களுடன் அறையை விட்டு வெளியேறினாள் வர்ஷினி. அவளுடைய கோபம் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைத்தது. குமணனை பற்றி எண்ணியபடி கட்டிலில் படுத்தான்.
சிறிது நேரம் கழித்து
ராஜாவுக்கு ஃபோன் செய்தான் நிமல். அந்த அழைப்பை உடனே ஏற்றான் ராஜா.
"எப்படி இருக்க, மச்சி?" என்றான்.
"நல்லா... சந்தோஷமா இருக்கேன்..."
அவன் குரலில் மகிழ்ச்சி தெறித்தது.
"என்ன மச்சான்... எப்ப பாத்தாலும் பொண்டாட்டி மடியிலேயே படுத்திருக்க போலருக்கு..."
"அட போடா... பக்கத்திலயே வர மாட்டேங்கறா..."
"பொண்டாட்டினா அப்படித் தான் இருப்பா"
"எப்படி?"
"உனக்கு உடம்பு சரியில்ல. அதனால அவ பயப்படுறது சகஜம் தானே? ஆனா, நீ துணிஞ்சா அவ உன்னைத் தடுக்க மாட்டான்னு நினைக்கிறேன்"
"அப்படியா சொல்ற?"
"நிச்சயமா தெரியல... நீ எல்லாத்துக்கும் ஃபிட்டுனா ட்ரை பண்ணி பாரு..."
"அஃப் கோர்ஸ்... நான் எப்பவும் ஃபிட்டு தான்"
"அப்ப நடத்து..." என்று சிரித்தான் ராஜா.
"நீ என்னை அடி வாங்க வைக்கிறதுக்கு எதுவும் பிளான் பண்ணலயே...?"
"அடி வாங்குறது எல்லாம் வீரனுக்கு சகஜம் தானே, மச்சி?"
"எக்ஸாக்ட்லி..."
"உன்னோட அதிர்ஷ்டம் எப்படி இருக்குன்னு முயற்சி பண்ணி பார்த்தா தானே தெரியும்? கிடைக்கலன்னா என்னத்த பெருசா இழந்திட போற...? காலம் பொன் போன்றது, மச்சி... அதை வேஸ்ட் பண்ணாத"
"அப்போ துணிஞ்சிடலாம்னு சொல்றியா...? விடு ஒரு கை பாத்துடலாம்"
"நீ பெருசா எதுவும் செய்ய வேண்டியிருக்காது... வர்ஷினி உன்னை ரொம்ப காதலிக்கிறா. நீ அவளைப் பார்த்தாலே அவ விழுந்துடுவா..."
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் நிமல்.
"அது தாண்டா பிரச்சனையே... அவ என்னை ரொரும்ப காதலிக்கிறா... அதனால தான் என்ன பத்தி ரொம்ப கவலையும் படுறா..."
"அப்படின்னா, நீ தான் அவளுக்கு தைரியம் கொடுக்கணும்"
"செஞ்சிடுறேன்..."
"சரி, எதுக்கு எனக்கு கால் பண்ண சொல்லு" என்றாள் சிரித்தபடி ராஜா.
"இன்னும் மூணு நாள்ல என்னுடைய ஸ்டிச்சஸை பரிச்சிடுவாங்க. இன்னும் ஒரு வாரத்துல நான் ஆஃபீஸ் போக ஆரம்பிச்சுடுவேன். நம்ம சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கணும்"
"ஓகே, நான் எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன். வேண்டிய ஏற்பாடை செய்ய ஆரம்பிச்சுடறேன்"
"ஓகே..."
"நான் என்ன செய்றேன்னு உனக்கு அப்பப்போ சொல்லிக்கிட்டே இருக்கேன்"
"ஓகே, ராஜா"
அவர்கள் அழைப்பை துண்டித்தார்கள்.
குமணன் இல்லம்
"நானும் உங்ககூட வரட்டுமாங்க?" என்றார் கல்பனா.
"நீ தான் ஏற்கனவே நிறைய தடவை ஊட்டிக்கு வந்திருக்கியே..."
"இங்க ரொம்ப வெயில் அதிகமா இருக்கு. நாலு நாள் அங்க இருந்துட்டு வரலாம்..."
"ரிஷியை விட்டுட்டு எப்படி போறது?"
"அவனையும் கூட்டிக்கொண்டு போகலாம்"
"அவனுக்கு ஸ்கூல் இல்லயா?"
ரிஷியை அழைத்தார் குமணன். அவர் முன் வந்து நின்றான் ரிஷி.
"நானும் அம்மாவும் ஊட்டிக்கு போறோம். நீயும் எங்க கூட வா"
"எனக்கு எக்ஸாம் இருக்கு. என்னால வர முடியாது" பொய் கூறினான்.
அன்று தான் அவனுக்கு பரிட்சைகள் முடிந்திருந்தது. அவனுக்கு, தன் அக்காவையே கொல்ல முயன்ற தன் தந்தையுடன் செல்ல விருப்பமில்லை.
"நீ வீட்ல எப்படி தனியா இருப்ப?" என்றார் கல்பனா.
"லக்ஷ்மி அக்கா இருக்காங்க. ராமு அண்ணன் இருக்காரு. நான் ஏன் தனியா இருக்க போறேன்? இல்லன்னா, எங்க ஃப்ரெண்ட் வீட்டுல என்னை விடுங்க. நான் அங்கே இருக்கேன்"
"எந்த ஃபிரெண்டு?" கல்பனா
"விக்கி... அவங்க அம்மா தான் எங்க மேக்ஸ் டீச்சர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவங்க. ஆனா ரொம்ப நல்லா கணக்கு சொல்லிக் கொடுப்பாங்க. அவங்க வீட்ல இருந்தா, நான் என்னுடைய டவுட் எல்லாத்தையும் கிளியர் பண்ணிக்குவேன்" என்று கதை அடித்தான்.
கல்பனாவை பார்த்தார் குமணன்.
"நான் அவங்க டீச்சர்கிட்ட பேசுறேன்" என்றார் கல்பனா.
"இப்பவே பேசு" என்றார் குமணன்.
"அவங்க ஃபோன் நம்பர் உன்கிட்ட இருக்கா?" என்றார் கல்பனா.
"இருக்கு. இருங்க என் மொபைலை கொண்டு வரேன்"
அவன் தன் அறையை நோக்கி நடக்க கல்பனா அவனை பின்தொடர்ந்து வந்தார். ரிஷி பதட்டமானான். கல்பனாவும் அவனுடன் வருவார் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய கைபேசியை எடுத்து, இனியவர்களின் இருப்பிடத்தின் லேண்ட் லைன் எண்ணுக்கு ஃபோன் செய்தான்.
கோபாலன் ஃபோனை எடுத்துப் பேசினார்.
"யார் பேசுறீங்க?"
"நான் ரிஷி பேசறேன். மேடம்கிட்ட பேசணும்"
"எந்த மேடம்? பார்வதி மேடமா? வர்ஷினி மேடமா?"
"ரிஷி பேசுறேன்னு சொல்லுங்க"
"ரிஷியா?"
அந்தப் பக்கம் சென்ற பார்வதி ரிஷியின் பெயரைக் கேட்டார்.
"யார் கோபால் பேசுறது?"
"யாரோ மேடம்கிட்ட பேசணும்னு சொல்றாங்க, அம்மா"
கோபாலனிடம் இருந்து ஃபோனை பெற்று பேசினார்.
"யார் பேசுறீங்க?"
"நான் ரிஷி பேசுறேன், மேடம்"
"ரிஷி... என்ன நீ என்னை மேடம்னு சொல்ற?"
"அம்மா உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னாங்க, மேடம். எங்க அம்மாவும் அப்பாவும் ஊட்டிக்கு போறாங்க. நீங்க சொன்னீங்கல்ல, டைம் கிடைக்கும் போது என்னுடைய டவுட்டை எல்லாம் கிளியர் பண்ணிக்கணும்னு... நான் உங்க வீட்ல தங்கினா, என்னுடைய எல்லா டவுடையும் கிளியர் பண்ணிக்குவேன். நீங்க என்னுடைய மேக்ஸ் டீச்சர் அப்படிங்கறதால, உங்க வீட்ல நான் சேஃபா இருப்பேன்னு அம்மா நினைக்கிறாங்க. நான் அம்மாகிட்ட ஃபோனை கொடுக்கிறேன் மேடம். நீங்க பேசுங்க, மேடம்"
எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாய் விளக்கிய பின், தன் கைபேசியை கல்பனாவிடம் கொடுத்தான் ரிஷி. தான் என்ன செய்ய வேண்டும் என்று ரிஷி விரும்புகிறான் என்று புரிந்துகொண்டார் பார்வதி.
"குட் ஈவினிங், மேடம்" என்றார் கல்பனா.
"குட் ஈவினிங். வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என்றார் மிடுக்குடன் பார்வதி.
"ரிஷி, உங்க வீட்ல, உங்க பையனோட இருக்கணும்னு நினைக்கிறான்"
"ஆமாம்... அவன் எப்பவுமே என் பையனோட இருக்க விரும்புவான்" என்றார் பார்வதி.
"உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லயே...?"
"நிச்சயமா இல்ல. ரிஷியும் என் பிள்ளை மாதிரி தான்... அவனை நான் பார்த்துக்கிறேன்"
"நாங்க திரும்பி வர நாலு நாள் ஆகும்"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க பொறுமையா வாங்க"
"நான் டிரைவர்கிட்ட ரிஷியை உங்க வீட்ல விட சொல்றேன்"
"அவசியம் இல்ல. நாளைக்கு காலையில வழக்கம் போல ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்ச பிறகு, நான் எங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போறேன்"
"தேங்க்யூ சோ மச், மேடம்"
"யூ ஆர் வெல்கம்"
அழைப்பை துண்டித்து விட்டு சிரித்தார் பார்வதி. அங்கிருந்து நேராக நிமலின் அறையை நோக்கிச் சென்றார். அங்கு வர்ஷினி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
"என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க மருமகளே?" என்றார்.
"அவ ரிஷியை பத்தி யோசிச்சிகிட்டிருக்கா"
"அப்படின்னா நான் சொல்லப் போற விஷயம், உனக்கு எனர்ஜியை கொடுக்கும்"
"என்னம்மா விஷயம்?" என்றான் நிமல்.
"ரிஷி நம்ம வீட்டுக்கு நாளைக்கு வரப்போறான். நம்ம கூட நாலு நாள் தங்க போறான்"
"என்ன சொல்றீங்க? எப்படி?" என்றாள் வர்ஷினி நம்பமுடியாமல்.
பெருமூச்சுவிட்டான் நிமல். இந்தப் பையனுக்கு தைரியம் அதிகம் தான். ஆனால் அவனுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?
"அவன் ரொம்ப புத்திசாலித்தனமா அவங்க அம்மா அப்பாவை சமாளிச்சிட்டான் தெரியுமா...?"
"அவன் ரிஸ்க் எடுக்கிறான், மா" என்றான் நிமல்.
"உன்னோட மச்சானை குறைச்சி எடை போடாதே. அவன் பயங்கர திறமைசாலி"
நடந்த கதையைக் கூறி முடித்தார் பார்வதி. அதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் வர்ஷினி.
"நல்ல குடும்பம்..." என்றான் நிமல்.
"அதுல என்னடா உனக்கு சந்தேகம்?" என்றார் பார்வதி
"அதானே...?" என்று சிரித்தாள் வர்ஷினி.
சிரித்துக் கொண்டிருந்த வர்ஷினியை பார்த்தான் நிமல்.
"நாளைக்கு ரிஷி வரப்போறான்... ரெண்டு மூணு நாள்ல காஞ்சிபுரம் கேங்க்கும் வந்துடும். அதுக்கப்புறம் வர்ஷினியை பிடிக்கிறது அவ்வளவு லேசான காரியம் இல்ல. நிமலா... உன் பாடு திண்டாட்டமாக போகுது... அதுக்கு முன்னாடி, உன்னோட அதிர்ஷ்டத்தை முயற்சி பண்ணி பாத்துடு... ராஜா சொன்னது சரி. காலம் பொன் போன்றது. அதை வீணாக்காதே..." என்று மனதிற்குள் நினைத்தபடி புன்னகைதான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro