Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 51

பாகம் 51

வீட்டுக்கு செல்ல தயாரானான் நிமல். அவன் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான். பார்வதியும், வர்ஷினியும் அனைத்து பொருட்களையும் பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்தார் மருத்துவர்.

"கரெக்டான டைமுக்கு மருந்து சாப்பிடு. ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கயும் அங்கயும் அலஞ்சிகிட்டு இருக்கக் கூடாது. இன்னும் ஸ்டிச்சஸ் பிரிக்கல, அதனால ஜாக்கிரதையா இருக்கணும்" என்றார் டாக்டர்.

"நீங்க கவலைப்படாதீங்க டாக்டர். வர்ஷினி அவனை பாத்துக்குவா" என்றார் பார்வதி.

"தினமும் அவனுக்கு டிரெஸ்ஸிங் செஞ்சிவிடு, வர்ஷினி. அவனுடைய காயம், ரெண்டு மூணு நாள்ல கம்ப்ளீட்டா குணமாயிடும். அதுக்கப்புறம் நம்ம ஸ்டிச்சை பிரிச்சிடலாம்..."

"ஓகே, அங்கிள்"

"நான் சொன்னதை மறந்துடாத, நிமல்" என்றார் மருத்துவர்

"மறக்க மாட்டேன், அங்கிள்" என்றான்.

"நாங்க கிளம்பறோம்" என்றார் விஸ்வநாதன்.

"டேக் கேர்"

அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள். பின்சீட்டில் வர்ஷினியுடன் அமர்ந்துகொண்டான் நிமல். இனியவர்களின் இருப்பிடம் நோக்கி கிளம்பியது கார். பல யுகங்களுக்கு பிறகு, நல்ல காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தான் நிமல். வர்ஷினிக்கு நெருக்கமாய் அமர்ந்து, தன் கை விரல்களை அவள் விரல்களுடன் பிணைத்துக் கொண்டான்.

இனியவர்களின் இருப்பிடம்

நிமலை ஆலம் சுற்றி வரவேற்றார் பார்வதி.

"இதெல்லாம் அவசியமா, மா?" என்றான் நிமல்.

"எல்லாத்துக்கும் கேள்வி கேட்கிறது அவசியமா?" என்றாள் வர்ஷினி. 

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் விஸ்வநாதன்.

"அப்பாடா... நிமல் வாயை மூட ஒரு சரியான ஆள் வந்தாச்சு" என்றார் சிரித்தபடி.

"சரியா சொன்னீங்க" என்றார் பார்வதி.

"நான் தப்பா எதுவும் கேட்கலயே" என்றான் நிமல் சிரித்தபடி

"இதெல்லாம் செய்யறது அவசியம் தான். நீங்க மறுபிறவி எடுத்து வந்திருக்கீங்க" என்றாள் வர்ஷினி.

"அவ சொல்றது சரி தான். எவ்வளவு பெரிய கண்டத்தைத் தாண்டி நீ வந்திருக்க..." என்றார் பார்வதி.

"சரி மா, ஒத்துக்குறேன்"

"நீங்க இங்க உட்காருங்க. நான் போய் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரேன்" என்றாள் வர்ஷினி.

"நான் நம்ம ரூமுக்கு போறேன்"

"ஏன்?"

"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு"

"சரி வாங்க. நான் உங்களை கூட்டிக்கிட்டு போய் விடுறேன்"

நிமலை பார்த்து பார்வதி கிண்டலாய் சிரிக்க, அவரைப் பார்த்து கண்ணடித்தான் நிமல்.

"நிம்மு, நீ ரெஸ்ட்ல இருக்கணும். அதை மறந்துடாதே" என்றார்.

தன் கண்களை சுருக்கி, ஜாடையால் அவரிடம் கெஞ்சினான் நிமல்.

"நான் அவரை தூங்க வைக்கிறேன், மா" என்றாள் வர்ஷினி.

"அது தான் நல்லது" என்றார் பார்வதி.

இல்லை என்று தலையை அசைத்தபடி, கண்களை சுழற்றினான் நிமல்.  அவனை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள் வர்ஷினி. அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"நீ எங்க போற?" என்றான்.

"உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரேன்"

"கோபால் அண்ணன் கொண்டு வருவாரு"

"முடியாது... உங்களுக்கு நான் தான் கொண்டு வருவேன்" அவன் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து ஓடினாள். பெருமூச்சுவிட்டான் நிமல்.

வர்ஷினி சமையல் அறையில் நுழைந்த போது,

"என்ன வேணும், வர்ஷு?" என்றார் பார்வதி.

"நிமலுக்கு ஜூஸ் கொண்டு போக வந்தேன், மா"

"நான் கோபாலன்கிட்ட கொடுத்து அனுப்பி இருப்பேனே..."

"பரவாயில்ல, மா. நான் சும்மா தானே இருக்கேன்"

"ரூம்ல தனியா இருந்தா நிமல் ரொம்ப போரா ஃபீல் பண்ணுவான். பாவம், அவனும் எவ்வளவு நேரம் தான் தனியா இருக்க முடியும்? நீ போ. நான் கோபால்கிட்ட குடுத்து அனுப்புறேன்"

"பரவாயில்ல, மா. இந்த தடவை நான் கொண்டு போறேன்"

அவளாகவே ஆரஞ்சு பழங்களை எடுத்து சாறு பிழிய துவங்கினாள்.

"அம்மா, எனக்கு சமையல் சொல்லித் தரேன்னு சொன்னிங்களே..."

"இப்போ வேணாம். நிமல் ஆஃபீஸ் போக ஆரம்பிக்கட்டும்..."

சமையல் கற்றுக் கொள்கிறேன் என்ற பெயரில், வர்ஷினி சமையலறையில் பழியாய் கிடப்பதை பார்வதி விரும்பவில்லை. நிமலை வருத்தப்பட வைக்க அவருக்கு விருப்பமில்லை.

"சரி" என்று சோகமாய் தலையசைத்தாள் வர்ஷினி.

பழச்சாறுடன் தங்கள் அறைக்கு வந்து, அதை நிமலிடம் நீட்டினாள். அவள் மீண்டும் அங்கிருந்து போக நினைத்த பொழுது, அவள் கையை பற்றி, தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவன் பற்றியிருந்த அவளது கரத்தை விடாமல் பழச்சாற்றை அருந்தினான். வர்ஷினியோ இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள், நிமல் ஒருவனைத் தவிர மற்ற அனைத்தையும்.

பழச்சாற்றை குடித்து முடித்தான் நிமல். அந்த தம்ளரை வாங்க தன் கையை நீட்டினாள் வர்ஷினி. அதை அவளிடம் கொடுக்காமல் கீழே வைத்தான்.

"டாக்டர் என்ன சொன்னார்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான்.

"இருக்கு"

"அவர் என்னை ரெஸ்டில் இருக்க சொன்னாரு"

"நீங்க ரெஸ்டில் தானே இருக்கீங்க..."

"நீ என் பக்கத்துல இல்லனா, நான் ரெஸ்ட்லெஸ் ஆயிடுவேன்..."

"நான் இங்க தானே இருக்கேன்..."

"போகாத... இங்கேயே இரு... என் கூட"

"அம்மா தனியா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க"

"அதுக்காக அவங்க வருத்தப்பட மாட்டாங்க"

"அவங்க வருத்தப்பட மாட்டாங்க. ஆனா, எனக்கு கஷ்டமா இருக்கு"

"நீ என்கூட இல்லன்னா நான் கவலை பட மாட்டேனா? என்னைப் பத்தி உனக்கு கவலை இல்லயா? நான் ஒரு பேஷன்ட். அதை மறந்துடாத"

"அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, அதுக்கப்புறம் உங்க கூடவே இருக்கேன். நீங்க பேஷன்ட். அதனால, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடுங்க. ஏன்னா, நீங்க ஆஃபீஸ் போக ஆரம்பிச்சுட்டா, மறுபடியும் பிஸியா ஆயிடுவீங்க"

"அதையே தான் நானும் சொல்றேன். நான் ஃப்ரீயா இருக்கும் போதே உன் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்"

"ஒரு மணி நேரம் டைம் குடுங்க. நான் வேலைய முடிச்சிட்டு வரேன்"

பெருமூச்சுவிட்டான் நிமல்.

"சரி... ஒரு மணி நேரம் தான்"

"ஓகே"

செல்லமாய் அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு, அங்கிருந்து புன்னகையுடன் வெளியேறினாள் வர்ஷினி.

நிமலுக்கு தெரியும், அவள் ஏன் அங்கு இருக்க மறுக்கிறாள் என்று. அவள் அங்கு இருந்தால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நிமல் நினைப்பானோ என்று அவள் அஞ்சுகிறாள். அவள் நினைப்பது தவறில்லை. அதனால், எந்த சேட்டையும் செய்யாமல் இருப்பது என்று முடிவெடுத்தான் நிமல். அப்படி இருந்தால் தான் வர்ஷினியும் அவனுடன் இருக்க நினைப்பாள். படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு தங்கள் அறைக்கு வந்த வர்ஷினி, அவன் உறங்குகிறான் என்று எண்ணி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். மெல்ல அவன் தலையை கோதி விட்டாள். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கண்ணிமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். கல்லூரியில் படிக்கும் காலங்களில், இப்படிப்பட்ட நாள் தன் வாழ்க்கையில் வராதா என்று அவள் ஏங்கியிருக்கிறாள். ஒரே அறையில் நிமலுடன் வாழ்க்கை நடத்துவது என்பது அவள் வாழ்வில் கண்ட மிகப்பெரிய கனவு. சிறிதும் சலிப்புத் தட்டாமல் அவனை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அதில் ஒரு பகுதி.

அப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்டு, அவள் கதவை திறந்தாள். அங்கு பார்வதி நின்றிருந்தார்.

"லஞ்ச் ரெடி ஆயிடுச்சு. சாப்பிடலாம் வா"

"நிமல் எழுந்ததுக்கு அப்புறம் சாப்பிடறேன் மா..."

"நிமல் தூங்குறானா?" என்றார் பார்வதி நம்பமுடியாமல்.

அவருக்குத் தெரியாதா அவர் மகனைப் பற்றி?

"ஆமாம்மா..."

நிமல் தூக்கம் கலைந்து எழுவதை பார்த்தார்கள் அவர்கள்.

"நிம்மு... பரவாயில்லயே.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்ட போல இருக்கே..." என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

"ஆமாம்மா எப்படி தூங்கினேன்னு எனக்கே தெரியல" என்றான் அப்பாவியை போல.

"நெஜமாவா...? அப்போ, வர்ஷினி உன்கூட இல்லன்னா, நீ நல்லா தூங்குவ போல தெரியுது..." என்று அவன் காலை வாரினார்.

"எனக்கு தூக்கம் வராம இருந்திருந்தா நான் கீழே வந்து இருப்பேன்" என்றான்.

"நீ எங்க சாப்பிட போற?" என்றார் பார்வதி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு.

"நான் கீழே வரேன்"

"வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க. உங்களுக்கு நான் சாப்பாடு கொண்டு வரேன்" என்று பரபரவென கீழே ஓடினாள் வர்ஷினி.

"அவ உண்மையிலேயே பச்சைக் குழந்தை டா... நீ நெஜமாவே தூங்குறியா நடிக்கிறியான்னு கூட அவளுக்கு தெரியல..." என்றார் பார்வதி.

"அவ அப்படியே இருக்கட்டு மா... கண்டுபிடிச்சா என்னை உதைப்பா"

"நீ அவளை டென்ஷன் பண்ணாத. உன்னோட காயத்தை நினைச்சு அவ ரொம்ப வருத்தப்படுரா..."

"ட்ரை பண்றேன்..."

"எனக்கு அப்படி தெரியல..."

"எனக்கும் தான்..." என்று நிமல் கூற அவர்கள் இருவரும் சிரித்தார்கள்.

நிமலுக்கு உணவுடன் வந்த வர்ஷினி, அவர்கள் சிரிப்பதை பார்த்து,

"என்னம்மா விஷயம், நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க...?"

"உன்னால தான் நாங்க சந்தோஷமா இருக்கோம்" என்றார் பார்வதி.

"என்னாலயா?"

"நமக்குள்ள இருந்த எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சுல்ல? அதை சொல்றாங்க" என்றான் நிமல்

"அவன் சொல்றது சரி தான். அவன்கிட்ட தட்டை கொடுத்துட்டு, நீ வா நாம போகலாம்" என்றார் பார்வதி.

இவர்களை என்ன செய்தால் தகும் என்பது போல பார்வதியை பார்த்து முறைத்தான் நிமல்.

"நானும் அவரோடவே சாப்பிடுறேன், மா" என்றாள் வர்ஷினி.

"ஓ... உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே சாப்பாடு  கொண்டு வந்துட்டியா..."

"ஆமாம்மா"

"சரி. அப்ப நீ சாப்பிடு" என்று அங்கிருந்து கிளம்பி சென்றார் பார்வதி.

கட்டிலின் மீது அமர்ந்து அவனுக்கு ஊட்டிவிட துவங்கினாள் வர்ஷினி. ஒரு விஷயத்தை கவனித்தான் நிமல். அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் அமர்ந்து அவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவள், இப்பொழுது அவனை ஒரு முறை கூட பார்க்கவில்லை. அவன் அவளை பார்க்காத பொழுது அவனை பார்ப்பதும், பார்க்கும் பொழுது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்வதுமாகவே இருந்தாள்.

அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு முறை அவர்கள் பேசிக்கொண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

{"இப்படி என்னை பார்த்துகிட்டே இருந்தா சீக்கிரமே உனக்கு போரடிச்சிடும்" நிமல்.

"நமக்கு ஒரு விஷயத்தை பிடிக்கலன்னா தான் போரடிக்கும். நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எப்பவும் போரடிக்காது.  அப்படி பார்க்கப் போனா, உங்க விஷயத்துல எனக்கு போரடிக்க வாய்ப்பே இல்ல. நமக்கு கல்யாணம் ஆன பிறகு கூட, நான் உங்களை இப்படியே பார்த்துக்கிட்டு இருக்கிறதை நீங்க பாப்பீங்க" -வர்ஷினி }

உள்ளூர சிரித்துக் கொண்டான் நிமல். அப்போது அவள் கூறியதைத் தான் இப்பொழுது அவள் செய்து கொண்டிருக்கிறாள்.

"நீயும் சாப்பிடு, வர்ஷு" என்றான்.

சரி என்று தலையசைத்து விட்டு அவளும் சாப்பிட தொடங்கினாள். அவளுடைய கண்கள் நிலையில்லாமல் அலைந்து திரிந்தது... ஆனால், அவள் பார்வை முடியுமிடம் நிமலின் முகமாகத் தான் இருந்தது. அவனுடைய உடல் நிலை காரணமாக அவனை சஞ்சலப் படுத்த வேண்டாம் என்று நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டு புன்னகைத்தான் நிமல்.

சாப்பிட்டு முடித்த பின் அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை வழங்கினாள் வர்ஷினி. அதை விழுங்கினான் நிமல்.

இரவு

நிமலிடம் பால் தம்ளரை வர்ஷினி நீட்ட, முகத்தை சுளித்தான் நிமல்.

"எனக்கு பால் பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா?"

"தெரியுமே"

"தெரிஞ்சும் குடுக்கிறியா?"

"இதையும் மருந்துன்னு நெனச்சு குடிங்க. பிடிச்சா மருந்தை சாப்பிடுறீங்க? உடம்பு குணம் ஆகணும்னு தானே? அதே மாதிரி தான் இதுவும்"

அவன் முகத்தைப் பற்றி அந்தப் பாலை குடிக்க வைத்தாள் வர்ஷினி. கண்ணை மூடிக்கொண்டு குடித்தான் நிமல்.

"இப்ப நீங்க தூங்கலாம்"

"நீயும் வா"

"நான் வரேன். நீங்க தூங்குங்க"

"நீ சொல்றதை நான் கேட்டேன்... அதே மாதிரி நான் சொல்றதை நீ கேளு" என்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.

தன் தயக்கத்தை காட்டிக்கொள்ளாமல் அவளும் படுத்துக்கொண்டாள்.

"ஃபைனலி..." என்று சிரித்தான்.

அவள் கையை பிடித்து தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டான்.

"இது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றான்.

"நானும் தான்"

சற்றே அவளருகில் நகர்ந்து, அவளுக்கு சங்கடத்தை அளித்தான்.

"உங்க காயம்..."

"ஒன்னும் ஆகாது"

வெகு நேரம் அவர்கள் தூங்கவில்லை. இவ்வளவு நாள் பேசாமல் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் பேசி தீர்த்து விடுவது என்று தீர்மானித்து இருந்தார்களோ என்னவோ...

"நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்ல?"

"நம்ம ஏற்கனவே நிறைய டைமை அதுல வேஸ்ட் பண்ணிட்டோம்... அதைப் பத்தி பேசி, மறுபடியும் வேஸ்ட் ஆக்க வேண்டாம்"

அவள் நெற்றியில் அழுத்தமாய்  முத்தமிட்டான்.

"நீ சொல்றது சரி தான். நம்ம வேற ஏதாவது பேசலாம்"

"எனக்கு தூக்கம் வருது" என்றாள்.

"சரி, தூங்கு" என்று பெருமூச்சு விட்டான்.

தன் கண்களை மூடிக்கொண்டாள் வர்ஷினி.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... என்னோட காயம் வலிக்கவே இல்ல"

"அப்படியா...?"

"நிஜமா தான் சொல்றேன்"

"அப்படின்னா நீங்க சூப்பர் ஹீரோவா தான் இருக்கணும்... இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு ஆறிடுச்சே..."

"நீ என்னை நம்ப மாட்டியா? நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்ல போறேன்?"

"அதானே... உங்களுக்குத்தான் பொய் சொல்ல எந்த காரணமும் இல்லயே" என்று புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டாள். அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்தான் நிமல்.

மறுநாள் காலை

சமையலறைக்குள் வர்ஷினியை வரக்கூடாது என்று தீர்க்கமாய் கூறிவிட்டார் பார்வதி. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள் வர்ஷினி.

இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு, அவர்கள் ஒன்றாய் இணைந்த பின், அவள் தன்னுடன் இல்லாமலிருப்பது நிமலுக்கு வருத்தத்தை தந்தது. அவன் கூறாமலேயே அதை புரிந்துகொண்டார் பார்வதி.

ஆனால் வர்ஷினியோ அவன் அருகில் செல்லவே தயங்கினாள். தங்கள் அறைக்குச் சென்றுவிட்டால், பாழாய்ப்போன அவளுடைய கண்களை அவளால் நிறுத்த முடிவதில்லை. சதா நிமிலின் முகத்தையே பார்க்க வேண்டும் என்று தவிக்கும். அது நிச்சயம் நிமலுக்கு தைரியத்தை தரும். அவனுடன் இருந்து கொண்டு எப்படி அவனை பார்க்காமல் இருப்பது? என்ன செய்வது என்று யோசித்தபடி தன் அறைக்கு வந்தாள் வர்ஷினி. அப்பொழுது சுதா கொடுத்த சமையல் கலை புத்தகம் அவள் நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகத்தைப் படித்தது போலவும் ஆயிற்று... நிமலுடன் இருந்தது போலவும் ஆயிற்று... புத்தகத்தைப் படிப்பது போல், அவ்வப்போது நிமலையும் ஓரக் கண்ணால் பார்க்கலாம்.

அவளைப் பார்த்தவுடன் வழக்கம் போல நிமலின் முகம் பிரகாசமானது. அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுத்து, சோபாவில் அமர்ந்து, அதன் பக்கங்களை திருப்ப தொடங்கினாள்.

அது என்ன புத்தகம் என்று நிமலுக்கு தெரியவில்லை.

"அது என்ன புக், வர்ஷு? அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா படிச்சிகிட்டு இருக்க?" என்று அவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வரவில்லை வர்ஷினியிடமிருந்து.

அவளுடைய கண்கள் எதிலோ நிலைத்திருந்தது. அவள் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது, குமணன் கையெழுத்திட்டிருந்த வெற்று பத்திரங்களை பார்த்த போது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro