Part 49
பாகம் 49
வர்ஷினியை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதான் ரிஷி. வர்ஷினியின் கண்களும் மனமும் கலங்கியது என்று கூறத் தேவையில்லை. அவள் நிமலை நோக்கி தன் தலையை உயர்த்த, அவன் வலி நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய அந்தப் பார்வை, ரிஷியின் வார்த்தைகளுக்கு சாட்சியம் சேர்த்தது. விஸ்வநாதன் மற்றும் பார்வதியின் நிலையும் கூட, நிமலை போலவே இருந்ததை அவள் கவனித்தாள்.
வர்ஷினி தன் தந்தையை எப்பொழுதும் வெறுத்தது இல்லை, அவர் எவ்வளவு மோசமானவராக இருந்த போதிலும்...! ஆனால் இன்று, அவரை தன் தந்தை என்று கூறவே அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவளுடைய தந்தை ஒரு கொலைகாரன். அவரால் நேரடியாக பாதிக்கப்பட்டவனோ, தன் உயிரையும் தந்து அந்த கொலைகாரனின் மகளை காக்கிறான்... என்ன கொடுமை இது...!
வர்ஷினிக்கு தலை சுற்றியது. அவளை அணைத்துக் கொண்டு நின்ற ரிஷி, அதை உணர்ந்து, அவளை ஏறிட்டு நோக்கினான்.
"அக்கா..."
அவளை நோக்கி ஓடிச் சென்றார் பார்வதி. அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். அரைவாசி திறந்திருந்த அவளுடைய கண்கள், விடாமல் கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர தவித்தது.
"வர்ஷு... ரிலாக்ஸா இரு" என்றார் பார்வதி.
அவர் அவளுக்கு தண்ணீர் கொடுக்க, அதை வேண்டாம் என்று மறுத்தாள் வர்ஷினி.
அவள் தலை நிமிர்ந்து நிமலை பார்க்க, அவன் தன் தலையை இடவலமாக அசைத்து அழாதே என்று சைகை செய்தான். அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று நினைத்திருந்த போது, இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று அவள் மனதில் இருந்த எண்ணம், எப்பேர்பட்ட மனிதன் இவன்...! என்று உருமாற்றம் பெற்றது.
என்ன நடந்திருக்க கூடும் என்பதை அவள் யூகித்து பார்த்தாள். தன்னுடைய பெற்றோரை கொன்றவனின் மகள் என்ற உண்மை தெரியாமலேயே தன்னிடம் அவன் காதல் வயப்பட்டு இருக்கிறான். அந்த உண்மை தெரிய வந்த பொழுது, அவளிடமிருந்து விலகிச் செல்ல நினைத்திருக்கிறான். ஆனால், வர்ஷினி அதற்கு இடம் தரவில்லை. தன்னுடைய காதலின் ஆழத்தை அவனுக்கு புரிய வைத்து, அவனை அப்படி செய்ய விடாமல் தடுத்து விட்டாள். அவளுடைய தந்தை தான் தன்னுடைய பெற்றோர்களை கொன்றவன் என்ற உண்மை தெரிந்திருந்தும் கூட, அவள் மீது அவன் கொண்டிருந்த காதல், சிறிதும் குறையவில்லை. அவளுடைய தந்தையின் செயலில் அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டதற்காக வருத்தப்பட்டாள் வர்ஷினி.
ரிஷி நிமலிடம் சென்று அவன் அருகில் அமர்ந்தான். கண்ணீர் ரேகைகள் பரவிக் கிடந்த, அந்த சின்னப் பையனின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தான் நிமல். நிமலின் கரத்தை தன் கரங்களால் பற்றிக்கொண்டான். அவனுடைய அந்த செயல் நிமலை திகைப்படையச் செய்தது.
"உங்களுக்கு எல்லாமே தெரியும் தானே?" என்றான்.
அவனுக்கு பதில் கூறாமல் வர்ஷினியின் பக்கம் தன் கண்களை ஓட்டினான் நிமல்.
"எங்க அப்பா மேல உங்களுக்கு நிச்சயம் கோவம் இருக்கும். அது தப்பு இல்ல. ஆனா உங்க கோவத்தை அக்கா மேல காட்டாதீங்க. அவ ரொம்ப பாவம். உங்களைத் தவிர வேற யாருமே அவகிட்ட பாசமா இருந்ததே இல்ல. அவ உங்க மேல உயிரையே வச்சிருக்கா. தயவுசெய்து அவளை கஷ்டப் படுத்தாதிங்க. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க..."
அவன் ஏன் அப்படி கூறுகிறான் என்று புரியாமல் விழித்தான் நிமல்.
"இன்னும் கொஞ்சம் வருஷம் போனதுக்கப்புறம், நான் எங்க கம்பெனியோட பொறுப்பை ஏத்துக்குவேன். அப்போ எல்லாத்தையும் நான் உங்ககிட்டயே திருப்பி கொடுத்துடுறேன். எங்க அக்காவை மட்டும் அழ வைக்காதீங்க, மாமா"
நிமலும் வர்ஷினியும் மட்டும் அல்ல, விஸ்வநாதனும் பார்வதியும் கூட கலங்கித் தான் போனார்கள். தன் தொண்டையை அடைத்த கடினமான உணர்வை விழுங்கினான் நிமல்.
"உங்க அக்கா தான் என்னுடைய உண்மையான சொத்து. அவ சந்தோஷத்தை தவிர வேறு எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல. ஐ ப்ராமிஸ்... அவ சந்தோஷமா இருப்பா. அவளை நான் எப்பவும் கஷ்டப்படுத்த மாட்டேன். அது அவளுக்கும் தெரியும். ஓகே?"
நிமலை அணைத்துக்கொண்டான் ரிஷி.
"தேங்க்யூ மாமா... நீங்க ரொம்ப நல்லவரு... ஐ லவ் யூ சோ மச்"
"ஐ லவ் யூ டூ... " என்றான் நிமல், ரிஷியின் முதுகை லேசாய் தட்டியபடி.
நிமலிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு,
"நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா?" என்றான்.
"நீ எப்ப வேணும்னாலும் வரலாம்"
"அங்கேயே தங்கிடவா?" என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
"எங்க அப்பாவை எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல. நான் அவரை வெறுக்கிறேன்..."
"ஆனா அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ அவரை விட்டுட்டு வந்தா, அவருக்கு எங்க மேல இருக்கிற கோவம் இன்னும் அதிகமாகும். எங்களை கொல்ல, இன்னும் முயற்சி செஞ்சுகிட்டே இருப்பாரு. அப்படி நடக்கணுமா?"
அமைதியானான் ரிஷி.
"உனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கோ. சரியா?"
"நீங்க அவர் மேல கேஸ் ஃபைல் பண்ணுங்க. நான் கோர்ட்ல எல்லாத்தையும் சொல்றேன்"
"ரிலாக்ஸ் ரிஷி... நீ ரொம்ப சின்ன பையன். பெரிய பெரிய விஷயங்களை போட்டு உன்னை குழப்பிக்காத. இது சந்தோஷமா இருக்க வேண்டிய வயசு. படிப்புல கவனம் செலுத்து. உனக்கு எது ரொம்ப பிடிக்குமோ அதை செஞ்சு, இந்த விஷயத்துல இருந்து உன்னை டைவர்ட் பண்ணிக்கோ. புரிஞ்சுதா?"
சரி என்று சோகமாய் தலையசைத்தான் ரிஷி. விஸ்வநாதனும், பார்வதியும் ரிஷிக்காக வருத்தப்பட்டார்கள். இதே வயதில் தான், நிமலும் அவனுடைய பெற்றோரை இழந்தான். பெற்றோரை மட்டுமல்ல, அந்த வயதுக்கே உரித்தான குறும்பு தனத்தையும் இழந்தான். தனது பெற்றோரின் இழப்பினால் பாதிப்படைந்து, அவனுடைய இதயம் விஷமானது. அதே தான் இப்போது ரிஷியின் வாழ்க்கையிலும் நடக்கிறது. ஆனால், வேறு விதத்தில்...
"நீ எங்க இருந்து வந்த?" என்றான் நிமல்.
"ஸ்கூல்ல இருந்து"
"சரி. திரும்பி ஸ்கூலுக்கு போ. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா, நீ மாட்டிக்குவ"
"அவருக்கு தெரியாது. என்னை டிரைவர் ஸ்கூல்ல விட்டுட்டு போனதுக்கப்புறம், நான் ஆட்டோல வந்தேன்."
"நீ கவலப்படாதே நிமல். அவனை நான் ஸ்கூல்ல விடுறேன்" என்றார் விஸ்வநாதன்.
அவரைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தான் ரிஷி. நிமல் பெருமூச்சுவிட்டான்.
"அது சரி... இந்த பர்தாவை எங்க பிடிச்ச?" என்றார் பார்வதி சிரித்தபடி.
"என்னோட கிளாஸ் மேட் நூர்ஜஹானுக்கு நேத்து ஃபோன் பண்ணி கொண்டு வர சொன்னேன். இதை அவ தான் எனக்காக கொண்டு வந்தா"
"பரவாயில்லயே... உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா?" என்றார் பார்வதி.
ஆமாம் என்று தலையசைத்தான் ரிஷி.
"நீ ஏதாவது சாப்பிட்டியா?" என்றார் விஸ்வநாதன்.
இல்லை என்று தலையசைத்தான் ரிஷி.
"சரி வா கேண்டீன்ல போய் ஏதாவது சாப்பிடலாம்"
சரி என்று தலையசைத்துவிட்டு அவர்களுடன் சென்றான் ரிஷி. வர்ஷினியை கவனித்துக் கொள் என்பது போல் சைகை செய்துவிட்டு சென்றார் பார்வதி. நிமல் தன் கண்களை சிமிட்டி சரி என்றான்.
தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் வர்ஷினி. அவளுடைய கண்கள் இன்னும் பொழிவதை நிறுத்தவே இல்லை. அவளைப் பார்க்க மிகவும் பாவமாயிருந்தது நிமலுக்கு. இதனால் தான், அவளுக்கு உண்மை தெரிய வேண்டாம் என்று நினைத்திருந்தான் அவன். அவனுக்கு தெரியும் அவள் சுக்குநூறாக நொறுங்கிப் போவாள் என்று.
"வர்ஷு..." என்று மென்மையாய் அவள் பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் உதட்டை கடித்து அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள்.
"என்கிட்ட வர மாட்டியா?" என்றான் தன் கரத்தை அவளை நோக்கி நீட்டி.
தன் முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டு அழுதாள் வர்ஷினி. நிமல் கட்டிலை விட்டு கீழே இறங்க முயல்வதை பார்த்த அவள், அவனை நோக்கி ஓடிச் சென்று அவனை தடுத்து நிறுத்தினாள். கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்த நிமலின் கழுத்தை கட்டிக்கொண்டு, தன் கன்னத்தை அவன் தலையின் மீது பதிய வைத்துக்கொண்டு மீண்டும் அழுதாள்.
"வர்ஷு, அழாத... நம்மால எதையும் மாத்த முடியாது. அது நடந்திருச்சு... அதை மறக்கிறது தான் நமக்கு நல்லது"
"இதனால தான் நீங்க எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறைச்சிட்டீங்களா?"
ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தான் நிமல்.
"ஏன்? தகுதியில்லாத ஒருத்தருக்காக எதுக்காக நீங்க உண்மையை மறைச்சிங்க?"
"நான் அவருக்காக மறைக்கல. உனக்காகத் தான் மறைச்சேன். நீ வருத்தப்படக் கூடாதுன்னு தான் மறைச்சேன்... எனக்கு தெரியும், உன்னால உண்மையை தாங்க முடியாதுன்னு... அதனால தான் மறைச்சேன்"
"நீங்க இதையெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா, நமக்குள்ளே இருந்த எல்லா பிரச்சனையும் முடிஞ்சு இருக்குமே"
"முடிஞ்சிருக்கும்... ஆனா, நீ உடைஞ்சி போயிருப்ப"
"மாட்டேன்... நீங்க தான் இருக்கீங்களே... என்னை அப்படியா விட்டிருக்க போறீங்க?"
அவளை அணைத்து, அவள் நெஞ்சில் சாய்ந்து இல்லை என்று தலை அசைத்தான்.
"நிச்சயம் விட்டிருக்க மாட்டேன்"
அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
"என்னை அவரோட பொண்ணுன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு"
"நீ குமணனோட பொண்ணு இல்ல. நிமலுடைய மனைவி... அதை மறக்காதே..."
"ம்ம்ம்"
"வர்ஷு, எனக்கு எல்லாமே நீ தான். உன்னுடைய மனசுலயும் நான் அப்படித் தான் இருக்கேன்னு நம்புறேன். உன்னை எப்பவுமே ஒழுங்கா நடத்தாத ஒரு மனுஷனை பத்தி நீ நினைச்சி வருத்தப்பட வேண்டிய அவசியமில்ல. போனதைப் பத்தி கவலை படாம, இருக்கிறதை நினைச்சி சந்தோஷப்படு"
"அவரு எப்படி உங்க அம்மா அப்பாவை கொன்னாரு?"
"விடுன்னு சொன்னேன் இல்ல?"
"சொல்லுங்க"
"எங்களுடைய காரை, லாரியால இடிச்சி, பள்ளதாக்குல தள்ளி விட்டுட்டாரு. கார் வெடிச்சி எரிஞ்சு போச்சு"
"நீங்க எப்படி தப்பிச்சீங்க?"
"ஆக்சிடன்ட் நடக்குறதுக்கு முன்னால, எங்க அம்மா, என்னை காரிலிருந்து கிழ தள்ளிவிட்டுடாங்க"
"உங்க அம்மா அப்பாவோட பேர் என்ன?"
"குருபரன், கல்யாணி"
"எங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"
"அவர் எங்க மேனேஜர். எங்க அப்பா அவரை ரொம்ப நம்பினார். எங்க அப்பாவுடைய இதயத்துல அவரு ரொம்ப சீக்கிரம் இடம்பிடிச்சிட்டார். ரொம்ப முக்கியமான காண்ட்ராக்ட்டை முடிக்க வேண்டி இருந்ததால, நாங்க ஊட்டிக்கு போனப்போ, பவர் ஆஃப் அட்டர்னியை குமணன் பேர்ல எங்கப்பா கொடுத்தாரு. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எங்களை கொல்ல முடிவு பண்ணாரு குமணன். ஆனா, நான் உயிரோட இருக்கிற விஷயம், உனக்கு ஆக்சிடென்ட் ஆகுற வரைக்கும் அவருக்கு தெரியாது"
"ஐ அம் சாரி..."
அவள் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் நிமல்.
"நான் ஏற்கனவே சொன்னேன். நீ என்னுடைய வைஃப். யாரோ செஞ்ச தப்புக்காக நீ என்கிட்ட மன்னிப்பு கேட்காத. தான் செய்யாத தப்புக்காக என்னுடைய வைஃப் இறங்கி போறது எனக்கு பிடிக்காது"
அவள் சரி என்று தலையசைக்க, மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான். அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ... கதவை திறக்கும் சத்தம் கேட்டு தான் அவனைவிட்டு விலகினாள் வர்ஷினி.
விஸ்வநாதனுடனும் பார்வதியுடனும் உள்ளே வந்தான் ரிஷி.
"நான் கிளம்பறேன், கா"
"ஜாக்கிரதையா இரு. மாமா சொன்னதை மறக்காதே"
"சரிக்கா... நீயும் மறக்காதே, நான் எப்ப வேணும்னாலும் உங்க வீட்டுக்கு வருவேன்"
"எப்ப வேணும்னாலும் வா" என்றார் பார்வதி
தன் முகத்தை பர்தாவினால் மறைத்துக் கொண்டான் ரிஷி.
"என்னை வீட்டில் விட்டுடு போங்களேன்" என்றார் பார்வதி.
"டிரைவரை வர சொல்லியிருக்கேன். அவன் உன்னை கூட்டிக்கிட்டுப் போவான்" என்றார் விஸ்வநாதன்.
விஸ்வநாதனும் ரிஷியும் மருத்துவமனையை விட்டு கிளம்பினார்கள்.
டிரைவருகாக காத்திருந்தார் பார்வதி. அப்பொழுது அவருடைய கைபேசிக்கு அழைப்பு வந்தது.
"தாட்சாயணி பேசுறா" என்றார் பார்வதி.
"அவங்ககிட்ட என்னை பத்தி எதுவும் சொல்லாதீங்க" என்றான் நிமல்
"ஏன்?"
"நலம் விசாரிக்கிறேன்னு குடும்பத்தோட வந்து, என்கூட உட்கார்ந்துக்குவாங்க" என்றான்.
களுக்கென்று சிரித்து விட்டு அழைப்பை ஏற்றார் பார்வதி.
"எப்படி இருக்க, தாச்சு?"
"என்கிட்ட பேசாத, கா"
"என்கிட்ட பேசாதன்னு சொல்ல தான் பேசினியா...?"
"ஏன் நிமலை பத்தி எதுவும் என்கிட்ட நீ சொல்லல?"
"உனக்கு யாரு அவனை பத்தி சொன்னது?"
"ராஜா தான் அனுகிட்ட சொல்லியிருக்கான்"
"நான் ஹாஸ்பிடல்ல பிஸியா இருந்தேன். அதனால தான், உனக்கு ஃபோன் பண்ணி என்னால நிமலை பத்தி சொல்ல முடியல"
ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டான் நிமல்.
"நான் சென்னைக்கு வரேன்" என்றார் தாட்சாயணி.
"முதல்ல பிரகாஷையும், சுதாவையும் பாரு. அவங்களுடைய இனிமையான நாட்களை இப்படியெல்லாம் வீணாக்காதே. நிமல் நல்லா இருக்கான்... அதனால, அடுத்த வாரம் வா"
"ஆனா, இங்க எல்லாரும் அவனை வந்து பாக்கணும்னு துடிக்கிறாங்க"
"அவங்ககிட்ட நான் பேசுறேன்"
"சரி" என்று பெருமூச்சு விட்டார் தாட்சாயணி.
நிமல் பார்வதியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அழைப்பை துண்டித்தவாரு,
"நான் என்னடா செய்றது? அவ ஏற்கனவே என் மேல கோவமா இருக்கா. உனக்கு இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் நடந்துதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் உன் ஃபிரண்ட்ஸ் எப்படி உன்னை பார்க்காம இருப்பாங்க?"
"இங்க வந்தா என்னை விடவே மாட்டாங்க மா. முக்கியமா அந்த ஆகாஷ் மடையன் எப்பவும் கூட ஒட்டிக்கிட்டே இருப்பான்..."
"அவங்க ஒரு வாரம் கழிச்சு தான் வருவாங்க. அதுக்குள்ள நீ சரியாயிடுவ. அதுக்கப்புறம் நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்."
பக்கத்தில் இருந்த சுவற்றில், தன் தலையை மோதிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது நிமலுக்கு. இங்கு இவன், வர்ஷினியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, படாதபாடுபட்டு, வீட்டுக்கு செல்ல டாக்டரிடம் அனுமதி பெற்றால், அவன் அம்மாவுடைய தங்கையின் குடும்பம் அத்தனையும் பாழாக்க காத்திருக்கிறது.
அவன் முகம் போன போக்கை பார்த்து வாய்விட்டு சிரித்தார் பார்வதி.
"கவலைப்படாத நிம்மு. அவங்க உன்னையும் வர்ஷினியும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க." என்றார் வர்ஷினியை பார்த்து கண்ணாடித்து.
வெட்க புன்முறுவல் பூத்தாள் வர்ஷினி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro