Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 48

பாகம் 48

காலி டப்பாக்களை வீட்டிற்கு கொண்டு செல்ல, பையில் எடுத்து அடுக்கினார் பார்வதி, நாளை உணவு கொண்டு வருவதற்காக.

"வர்ஷினி, இன்னைக்கு நீ வீட்டுக்கு போ. நான் இங்க இருந்து நிமலை பாத்துக்கிறேன். நீ சரியா தூங்கவே மாட்டேங்குற. உனக்கு ரெஸ்ட் அவசியம்" என்றார் பார்வதி.

அவரை கலவரத்துடன் பார்த்தான் நிமல்.

"இல்லம்மா, நான் இங்கேயே  இருக்கேன். இன்னைக்கு இராத்திரி நிச்சயமா தூங்குறேன்..." என்றாள் வர்ஷினி.

அதைக்கேட்டு நிமலின் மனம் புத்துயிர் பெற்றது.

"உன் உடம்பை கெடுத்துக்காதே வர்ஷினி. சரியா தூங்காம, தினமும் கண் விழிக்கிறது நல்லதில்ல"

"நிச்சயமா தூங்குவேன், மா"

"கொஞ்ச நேரமாவது தூங்கு"

சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"அவளை நான் பார்த்துகிறேன், மா" என்றான் நிமல்.

மாமியாரும் மருமகளும் அவனை விசித்திரமாய் பார்த்தார்கள்.

"நிம்மு, உன்னை பாத்துக்கவே ஒரு ஆள் தேவைப்படுது அதை நீ மறந்துட்டியா?"

"அதை நான் மறக்கலம்மா" என்றான் வர்ஷினியை பார்த்தபடி.

"சரி, சரி நடக்கட்டும்" என்று சிரித்தார் பார்வதி.

சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றார் அவர். நிமலுக்கு ஏற்றப்பட்டிருந்த சலைன், கொஞ்சமே மீதமிருந்தது. அதைப் பார்த்துவிட்டு, நிமலின் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டாள் வர்ஷினி.

"வர்ஷு, நீ தூங்கு. எனக்கு ஏதாவது வேணும்னா நான் உன்னை எழுப்புறேன்..."

"இந்த சலைன் பாட்டில் முடியட்டும். அதுக்கப்புறம் தூங்குறேன்" என்றாள் வர்ஷினி.

"அந்த பாட்டில் காலியான உடனே, நான் இன்டர்காமில் நர்சை கூப்பிட்டுக்குறேன்..."

அப்படியா? என்பது போல் தன் கைகளை கட்டிக்கொண்டாள் வர்ஷினி.

"நான் என்ன இங்க தூங்குறதுக்காகவா இருக்கேன்? எப்போ தூங்கணும்னு எனக்கு தெரியும்... நீங்க முதல்ல தூங்குங்க" என்றாள் அதிகாரமாக.

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, சரி என்று தலை அசைத்தான் நிமல். இருபது நிமிடங்கள் கழித்து, அந்த சலைன் பாட்டில் முழுவதுமாய் தீர்ந்தது. அந்த இருபது நிமிடமும், நிமலின் பார்வை, வர்ஷினியின்  முகத்திலிருந்து அப்படி இப்படி அகலவில்லை. அவனுக்கு தூங்கும் உத்தேசம் இல்லை போலிருக்கிறது.

ஒரு செவிலியர் வந்து, நிமலின் கையில் இருந்த, சலைன் ஏறிக்கொண்டிருந்த ஊசியை எடுத்து விட்டார்.

"அடுத்த பாட்டில் போடலயா?" என்றாள் வர்ஷினி

"இல்ல மேடம்... அவரு சாப்பிட ஆரம்பிச்சிட்டார்ல...? அதனால இனிமேல் இது தேவையில்ல"

"என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?" என்றான் நிமல்.

"நீங்க டாக்டர்கிட்ட தான் சார் கேக்கணும்..." என்று, அவர் அங்கிருந்து சென்றார்.

"இப்போ நீ தூங்கு, வர்ஷு"

"டாக்டர் வந்து போகட்டும்..."

"நானும் அவர்கிட்ட எப்ப டிஸ்சார்ஜ் பண்ண போறாருன்னு கேட்கணும். இங்க இருக்கிறது எரிச்சலா இருக்கு" என்றான்.

"வீட்டுக்கு போய் என்ன செய்யப் போறீங்க? வீட்டுக்கு வந்தாலும், நீங்க பெட்ல தான் இருக்கணும்..."

"ஒரே இடத்துல எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்து இருக்கிறது, வர்ஷு?"

"இருந்து தான் ஆகணும்..."

"நீ எனக்கு ஹெல்ப் பண்ணா நிச்சயம் இருப்பேன்..."

"ஹெல்பா? என்ன ஹெல்ப்?"

அப்பொழுது மருத்துவர் வருவதை அவர்கள் பார்த்தார்கள்.

"ஹாய், சாம்ப்... ஹொவ் ஆர் யூ ஃபீலிங் நௌ?" என்றார்.

"நல்லா இருக்கேன், அங்கிள்"

அவன் குரலில் இருந்த புத்துணர்ச்சியை கவனித்தார் டாக்டர்.

"கிரேட்... ஏன் இன்னும் தூங்காம இருக்க?"

"உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"நீ தூங்கினாலும் என்னால உன்னை செக் பண்ண முடியும்"

"இல்ல, நான் உங்களை ஒன்னு கேட்கணும்"

"கேளு "

"எப்போ என்னை டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?"

"அவ்வளவு என்ன அவசரம்? இங்க உனக்கு கம்ஃபர்டபுலா இல்லயா?"

"பேஷன்ட் மாதிரி இருக்கேன்... வர்ஷினியும் இங்க இருந்து கஷ்டப்படுறா..."

"நீ பேஷன்ட் இல்லாம வேற என்ன? உன்னோட காயம் முழுசா குணமாக வரைக்கும் நீ பேஷன்ட் தான்." என்றார் கிண்டலாக.

அவர் வர்ஷினியின் பக்கம் திரும்பினார்.

"வர்ஷு, நீ இங்க நிமல் கூட இருக்க வேண்டிய அவசியமில்ல. பாரு, அவன் உனக்காக எவ்வளவு வருத்தப்படுறான்னு... நீ வீட்டுக்குப் போ. இங்க ரொம்ப நல்ல நர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்க இவனை பாத்துக்குவாங்க"

நிமலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவருக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் வர்ஷினி.

"நீ நிம்மதியா இருக்கலாம், நிமல். இனிமே வர்ஷினி இங்க கஷ்டப்படமாட்டா" என்றார்.

"நான் அப்படி சொல்லல... ப்ளீஸ் என்னை வீட்டுக்கு அனுப்புங்க"

"நீ கியூர் ஆனதுக்கப்புறம் போகலாம்"

"நான் வீட்டுக்கு போனா, நல்லா ஆயிடுவேன்"

"அட... பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி அடம் பிடிச்சானோ, அதே மாதிரி தான் இப்பவும் இருக்கான்"

"அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அங்கிள்... என்னை அனுப்பிடுங்க"

"அப்போ உனக்கு யாரு டிரஸ்ஸிங் பண்ணி விடுறது? தினமும் நான் உங்க வீட்டுக்கு ஒரு நர்ஸை அனுப்பவா?"

"நான் செஞ்சி விடலாமா அங்கிள்?" என்றாள் வர்ஷினி.

அது அந்த மருத்துவரை வெகுவாய் கவர்ந்தது. நமது கதாநாயகனோ வானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

"உன்னால முடியுமா?"

"சொல்லிக் கொடுத்தா செய்யறேன், அங்கிள்"

"அப்போ பிரச்சனை இல்ல. நீ நாளை மறுநாள் வீட்டுக்கு போகலாம். நாளைக்கு ஒரு நாள் உன்னுடைய புராக்ரஸ்ஸை மானிட்டர் பண்ணிட்டு அனுப்புறேன். அதுக்கப்புறம், நீ ஸ்டிச்சஸை பிரிக்க, அடுத்த வாரம் வந்தா போதும்" என்றார்.

"தேங்க்யூ, அங்கிள்" என்றான் நிமல்.

"பாத்துக்கோமா இவனை" என்றார் டாக்டர் வர்ஷினியிடம்.

அவள் சரி என்று புன்னகையுடன் தலையசைத்தாள். மருத்துவர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின், மீண்டும் நிமலின் அருகிலிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள் வர்ஷினி. அவளிடம் பேசுவதைத் தவிர்த்தான் நிமல். பேசிக்கொண்டு இருந்தாள் அவள் தூங்க மாட்டாள் என்பதற்காக. அவன் எதிர்பார்த்தபடியே, அவன் கட்டிலின் மீது தலை வைத்து, உட்கார்ந்தபடியே உறங்கிப் போனாள். அவள் தலையை ஆசையாய் வருடி கொடுத்தான் நிமல்.

சிறிது நேரத்திற்கு பிறகு, அவளுடைய கழுத்து ஒரே நிலையில் இருந்ததால், வலி ஏற்பட்டு தூக்கத்திலிருந்து எழுந்தாள் வர்ஷினி. தலையை நிமிர்த்தியவள், நிமல் அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது பார்த்தாள்.

"நீங்க தூங்கலயா?" என்றாள் தூக்கம் மாறாத குரலில்.

"எனக்கு தூக்கம் வரல"

"ஏதாவது வேணுமா உங்களுக்கு?"

"இல்ல... ஒன்னும் வேணாம். நீ தூங்கு"

"நீங்களும் தூங்குங்க"

படுத்துக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டான்.

வர்ஷினி மறுபடியும் தூங்கிப் போனாள். மெல்ல கண் திறந்த நிமல், அவள் தூங்கி விட்டாள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, மீண்டும் எழுந்து அமர்ந்துகொண்டான்.

அவள் நிம்மதியாய் உறங்குவதை பார்த்து புன்னகை புரிந்தான். அவளை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனுக்கு அலுப்பதே இல்லை. அவளைப் பார்த்துக் கொண்டே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்து விடுவான் நிமல். அது மட்டுமின்றி அவனுக்கு அவளிடமிருந்து மன்னிப்பும் கிடைத்தாகிவிட்டது. அவனுக்கு வேறு என்ன வேண்டும்...!

வழக்கம் போல நான்கு மணிக்கு கண் விழித்து விட்டாள் வர்ஷினி. மருத்துவமனைக்கு வந்த பிறகு, அது அவளுடைய வழக்கமாகிப் போனது. அவன் இன்னும் தூங்காமல் இருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.

"எதுக்காக நிமல், என்னை பார்த்துகிட்டு இருக்கீங்க?"

"ஒன்னும் இல்ல... சும்மா..."

"கொஞ்ச நேரம் கூட நீங்க தூங்கவே இல்லயா?"

"தூங்கினேன்... இப்ப தான் எழுந்தேன்"  என்று பொய் கூறினான்.

"உங்களைப் பார்த்தா அப்படி தெரியலயே. உங்க கண்ணுல கொஞ்சம் கூட தூக்கக் கலக்கம் இல்ல. பளிச்சுன்னு இருக்கு...? உண்மையை சொல்லுங்க. நீங்க தூங்குனீங்களா?"

"எனக்கு தூக்கம் வரலயே... நான் என்ன செய்றது?"

"என்னனனது....? மணி நாலாகுது நிமல். இன்னும் நீங்க தூங்காம இருக்கீங்க... உங்களுக்கு ரெஸ்ட் தேவை... இல்லன்னா உங்க ஹெல்த் கெட்டுப் போயிடும்"

"எனக்கு ஒன்னும் ஆகாது, டா"

"ஓ அப்படியா...? எப்படி?"

"ஏன்னா, நீ தான் என்கூட இருக்கியே"

சில நொடி ஸ்தம்பித்து நின்ற அவள், சுதாகரித்துக் கொண்டாள்.

"நான் உங்க கூட தான் இருக்கேன். இப்ப தூங்குங்க"

தன் கையை அவளை நோக்கி நீட்டி பற்றி கொள்ளுமாறு சைகை செய்தான். கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள் வர்ஷினி.

"நீ எப்பவும் என் கூட இருப்பியா?"

"இருப்பேன்... எப்பவுமே..."

அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

"எனக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். நீ இல்லாம என்னால இருக்க முடியாது"

"நான் உங்க கூட தான் இருப்பேன். ஏன்னா, என்னாலயும் நீங்க இல்லாம இருக்க முடியாது"

"தேங்க்யூ"

"என்னை முறைச்சு பாக்குறதை நிறுத்திட்டு, தூங்குங்க"

"நான் உன்னை பார்க்க கூடாதா?"

"பாக்கலாம்... ஆனா தூங்காம, உடம்பை கெடுத்துக்கிட்டு இல்ல..."

"தூக்கம் ஒரு விஷயமே இல்ல"

"விஷயம் தான்... நாளைக்கு காலையில நீங்க டயர்டா இருந்தா, டாக்டர் எப்படி உங்களை வீட்டுக்கு அனுப்புவார்? அவர் உங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிடுவாரு. ஆனா, நான் நிச்சயமா வீட்டுக்கு போயிடுவேன். அப்ப தான் நீங்க தூங்குவீங்க"

"ப்ளீஸ், போகாதே..."

"அப்போ தூங்குங்க... இல்லன்னா, டாக்டர்கிட்ட ஊசி போட்டு உங்களை தூங்க வைக்க சொல்லுவேன்"

"வேணாம்... நான் தூங்குறேன்"

"படுங்க"

அவனை படுக்க வைத்துவிட்டு, அவன் அருகில் அமர்ந்தாள் வர்ஷினி, அவனை பார்த்த படி... ஆம். இது அவளுடைய முறை...!

மறுநாள்

பர்தா அணிந்து மருத்துவமனைக்குள் ஓடி வந்த ஒரு பெண், பார்வதியின் மீது மோதி விழப்போனாள். அவள் தோளை பற்றி தடுத்தார் பார்வதி

"சாரி, ஆன்ட்டி" என்ற அந்தப் பெண், பார்வதியை அடையாளம் கண்டுகொண்டு,

"நீங்க மாமாவோட அம்மா அப்பா தானே...?" என்றாள்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"நான் மாமாவை பாக்கலாமா?"

"மாமாவா?"

"யாரும்மா உங்க மாமா?"

"நிமல் மாமாவை தான் சொல்றேன்"

அவர்கள் மேலும் குழம்பினார்கள். அந்தப் பெண்ணின் குரல், ஒரு சிறுவனின் குரல் போல் இருந்தது.

"வர்ஷினிக்கு யாரும் தங்கச்சி இல்லயே" என்றார் பார்வதி.

அந்தப் பெண் லேசாய் தன் பர்தாவை நீக்கினாள். அந்த பர்தாவுக்குள் தெரிந்தது ரிஷியின் முகம்.

"நான் ரிஷி, ஆன்ட்டி. வர்ஷினி அக்காவோட தம்பி. நான் ஸ்கூல்ல இருந்து, யாருக்கும் தெரியாம மாமாவை பார்க்க வந்திருக்கேன். என்னை மாமாகிட்ட கூட்டிகிட்டு போறீங்களா?" என்றான் ரிஷி.

பார்வதிக்கு ரிஷியை பற்றி தெரியும். ரிஷிக்கு வர்ஷினியை மிகவும் பிடிக்கும். நிமலுக்கு நடந்த விபத்தை பற்றி அறிந்து, அவனை பார்க்க வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டு, அவனை நிமலிடம் அழைத்துச் சென்றார்கள்.

தங்கள் அறைக்குள் பர்தா அணிந்த ஒரு பெண் நுழைவதை பார்த்து, நிமலும் வர்ஷினியும் முகத்தை சுருக்கினார்கள். அது ரிஷி என்று தெரிந்ததும் அவர்கள் அசந்து போனார்கள். அவர்கள் அவனைப் பார்த்து புன்னகைக்க, ஓடிச்சென்று நிமலை கட்டிக்கொண்டான் ரிஷி. அதை பார்த்தவுடன் வர்ஷினியின் இதழ்களில் புன்னகை விரிந்தது.

"ஐ அம் சாரி, மாமா..." என்ற அவன் குரல் கம்மியது.

"நீ எதுக்கு சாரி கேக்குற?" என்றான் நிமல் குழப்பமாக.

"உங்களைக் கொல்ல ட்ரை பன்னது யாருன்னு எனக்கு தெரியும்" என்றான் கலங்கிய கண்களோடு.

நிமல் பேச்சிழந்து போனான்.  அவனுடைய பார்வை, வர்ஷினியை நோக்கி அனிச்சையாய் திரும்பியது. அவள் பேயறைந்தது போல் இருந்தாள்.

"ரிஷி, ரிலாக்ஸ்..." என்றான் நிமல்.

நிமலிடம் இருந்து ரிஷியை இழுத்தாள் வர்ஷினி.

"வர்ஷு..." என்று நிமல் அழைக்க, தன் கையைக் காட்டி அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

"யாரு ட்ரை பண்ணது?" என்றாள்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,

"அப்பா" என்றான்.

"என்ன்னனது...?" என்றாள் அதிர்ச்சியாக.

"மாமாவை மட்டுமில்ல உன்னையும் தான்"

"உனக்கு எப்படி தெரியும்?"

"அவர் அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு"

"அம்மாவுக்கும் தெரியுமா?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"அது மட்டும் இல்ல, கா..." என்று நிறுத்திவிட்டு அழுதான் ரிஷி.

"வேற என்ன?" என்றாள் நடுக்கத்துடன்.

"வர்ஷு... காம் டவுன்..." என்றான் நிமல்.

ரிஷியை தடுக்க, ஓர் அடி எடுத்து வைத்தார் பார்வதி. அவரின் கையை பிடித்து தடுத்தார் விஸ்வநாதன். அவருக்குப் புரிந்து போனது, பெரிதாய் ஏதோ ஒன்று வெளிவர இருக்கிறது என்பது.

ரிஷியின் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டாள் வர்ஷினி.

"சொல்லு, ரிஷி..."

"மாமாவுடைய அம்மா, அப்பாவை கொன்னது யாருன்னு உனக்கு தெரியுமா?"

கொன்றதா? அவளின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நிமலின் பெற்றோர்கள் இறந்து போன விஷயம் அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த உண்மை அவளுக்கு புதிது. அவனுடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்களா?

"யாரு?" என்ற அவளது குரல் நடுங்கியது.

"நம்ம அப்பா தான், கா... அவர் தான் கா மாமாவோட அப்பா அம்மாவை கொன்னது. அவங்க சொத்துக்காக அவங்களை சாகடிச்சிட்டாரு, கா. நம்ம சொத்து எதுவுமே நம்மளோடது இல்ல, கா. எல்லாமே மாமாவுடைய அப்பா அம்மாவுடையது." வர்ஷினியை கட்டிப்பிடித்துக்கொண்டு, ஓவென்று அழுதான் ரிஷி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro