Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 47

பாகம் 47

அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டான் நிமல். காயம் மிகவும் ஆழமானது என்பதால், தொடர்ந்து அவனுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இல்லாவிட்டால், அவன் கண் விழிக்கும் பொழுது உயிர் போகுமளவிற்கு வலியிருக்குமே...!

வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டாள் வர்ஷினி. பிடிவாதமாக பார்வதியுடன் மருத்துவமனையிலேயே தங்கினாள். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் தன் சுய நினைவை பெற்றான் நிமல். அவன் கண் விழித்த பொழுது, அவன் அருகில், நாற்காலியில் அமர்ந்து, அவனுடைய படுக்கையில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் பார்வதி. அவன் மெல்ல அவர் தலையை தொட, திடுக்கிட்டு எழுந்தார் பார்வதி. அவன் கண் விழித்துவிட்டதை பார்த்து புன்னகை புரிந்தார்.

"நிம்மு..."

"வர்ஷு எப்படி இருக்கா?" என்றான் மெல்லிய குரலில்.

அவனுடைய கட்டிலுக்கு பின்னால் இருந்த ஜன்னலின் அருகில் நின்றிருந்த வர்ஷினி, அவன் குரல் கேட்டு முன்னால் வந்தாள். அவள் நன்றாக இருப்பதைப் பார்த்து புன்னகைத்தான்.

"ரொம்ப வலிக்குதா, நிம்மு?" என்றார் பார்வதி.

இல்லை என்று தலையசைத்தபடி கண்களை மூடினான். அவன் பலவீனமாய் இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவன் கண் விழித்துவிட்ட செய்தியை மருத்துவரிடம் கூற ஓடினாள் வர்ஷினி. அவளுடன் வந்த மருத்துவர், நிமலை பரிசோதித்து பார்த்தார். அவன் நன்றாக இருக்கவே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

"நாளைக்கு காலையிலயிருந்து லிக்விட் ஃபுட் கொடுக்க ஆரம்பிங்க. அவனோட ப்ராக்ரஸ்ஸை ஒரு நாள் மானிட்டர் பண்ணதுக்கு அப்பறம், சாலிட் ஃபுட் கொடுக்குறத பத்தி யோசிக்கலாம்."

"ஓகே டாக்டர்" என்றார் பார்வதி.

அந்த அறையைவிட்டு சென்றார் மருத்துவர்.

நிமலின் உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்தது. மருந்துகளின் உதவியால் வலியும் குறைந்து கொண்டு வந்தது. தூக்க மாத்திரையின் துணையுடன் தான் அவனால் வலியை மறந்து உறங்க முடிந்தது.

மறுநாள்

அன்று எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது நிமலுக்கு. சற்று உட்கார்ந்தால் தேவலாம் என்றிருந்தது. படுத்துக் கொண்டே இருந்ததால் முதுகு வலித்தது. ஆனால், தானாக எழுந்து அமரும் அளவிற்கு அவன் உடலில் தெம்பில்லை. அவன் அமர்வதற்கு பார்வதி உதவினார். அவன் முதுகுக்கு பின்னால் சில தலையணைகளை அடுக்கி, அவன் சாய்ந்து கொள்ளுமாறு செய்தார்.

அவனுக்கு திரவ உணவு வழங்குமாறு மருத்துவர் கூறியிருந்ததால், கஞ்சி கொண்டு வர வீட்டிற்கு சென்றார் பார்வதி. அவருக்கு தெரியும், வர்ஷினி நிமலை கவனித்துக் கொள்வாள் என்று. அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டு, மருத்துவமனை மருந்தகத்தில் இருந்து சில மருந்துகளை வாங்கிக்கொண்டு நிமிலின் அறைக்கு திரும்பினாள் வர்ஷினி. அப்பொழுது நிமல், அங்கு வந்த செவிலியரை தன் பணியை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு வேண்டாம்னு சொல்றேன்ல... இங்கயிருந்து போங்க" என்றான் பலவீனமான குரலில்.

வர்ஷினி உள்ளே நுழைந்ததை பார்த்து அமைதியானான். அவன் வேண்டாம் என்று கூறியது ஸ்பான்ச் பாத்தை. வெளியே சென்ற செவிலியரை தடுத்தாள் வர்ஷினி. அதைப் பார்த்து பதட்டமானான் நிமல். அவள் ஸ்பான்ச் பாத் எடுக்க சொல்லி அவனை வற்புறுத்தினால், அவன் எப்படி வேண்டாம் என்று மறுப்பது? அவள் கூறுவதை மறுத்தால், அவள் வருத்தப்படலாம். முன் பின் தெரியாத ஒருவர் நம் உடலை தொடுவது என்பது, மிகவும் சங்கடமான விஷயம்.

ஆனால், அந்த செவிலியரின் கையிலிருந்த வெந்நீர் பாத்திரத்தை வர்ஷினி வாங்கிக் கொண்டதை பார்த்து அவன் திகைத்தான். அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை நோக்கி வந்த அவள், பக்கத்தில் இருந்த மேஜையின் மீது அந்த பாத்திரத்தை வைத்து விட்டு, அவனை போர்த்தியிருந்த போர்வையை விலக்கி ஓரமாய் வைத்தாள். இவ்வளவையும் செய்யும் வரை அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அவனோ, கண்ணை கூட இமைக்கவில்லை. அவளே அதை செய்யப்போகிறாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அந்த செவிலியர் கொண்டுவந்திருந்த சுத்தமான வெள்ளைத் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்தாள். அவனது வெற்றுடலை தொட்டு விடாமல் கவனமாக அவன் உடலை துடைக்க துவங்கினான். அவன் முகத்தை அவள் பார்க்காமல் இருந்தது, அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது.

துப்பாக்கி குண்டு துளைத்த பகுதியை துடைத்த போது அவள் கைகள் நடுங்கியது. அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர், அவன் கையில் விழுந்தது. அது நிமலை பதடப்படுத்தியது.

"வர்ஷு, எனக்கு ஒன்னும் இல்ல... ப்ளீஸ், அழாதே" என்றான்.

அவள் ஒன்றும் கூறவுமில்லை, அவனை பார்க்கவும் இல்லை. காய்ந்த துண்டால் அவனுடைய உடலை துவட்டி விட்டு, போர்வையால் மீண்டும் அவனுக்குப் போர்த்தி விட்டாள். அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"அம்மா எப்ப வருவாங்க?" என்றான்.

"அவங்க உங்களுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டுவர வீட்டுக்கு போயிருக்காங்க..."

இரண்டு அடி நகர்ந்த அவள், மீண்டும் நின்றாள்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

"தண்ணி..."

பாட்டிலில் இருந்த தண்ணீரை ஒரு தம்ளரில் ஊற்றினாள். நிமல் தன் கையை நீட்டி அதை அவளிடமிருந்து பெரும் முன், அந்த தண்ணீரை அவளே அவனுக்கு புகட்டினாள். ஏக்கம் நிறைந்த பார்வையுடன் அவளை பார்த்தபடியே அவன் அந்த தண்ணீரை குடித்த விதம் அவள் வயிற்றைக் கலக்கியது.

"படுக்கப் போறீங்களா?" என்று அவள் கேட்டவுடன் ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.

அவன் சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் வர்ஷினி கேட்ட பின் வேண்டாம் என்று கூற அவனுக்கு மனம் வரவில்லை. வர்ஷினியின் சங்கடம் உச்சத்தை தொட்டது. ஏனென்றால், இப்பொழுது அவள், அவனது வெற்றுடலை தொட்டு தான் தீர வேண்டும். வேறு வழியில்லை.

அவனைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தாள். அவன் தோள்களைப் பற்றி, அவனை அவள் தோளின் மீது சாய்த்துக் கொண்டாள். கண்களை மூடி, அந்த பரவசத்தில் ஆழ்ந்து போனான் நிமல். அவனுக்குப் பின்னால் இருந்த தலையணைகளை நீக்கி விட்டு, மெல்ல சாய்த்து அவனை படுக்க வைத்தாள். அதைச் செய்து முடித்து விட்டு, அவன் கட்டிலுக்கு பின்னால் இருந்த ஜன்னலை நோக்கி சென்று, அதன் அருகில் நின்று கொண்டாள், வேகமாய் ஓடிய இதயத்துடிப்புடன்.

மறுநாள்

நிமலை பரிசோதித்தார் மருத்துவர்.

"எப்படி இருக்க, நிமல்?"

"குட் அங்கிள்"

"கெட் வெல் சூன்" என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் மருத்துவர், ஆழமாய் சிந்தித்தபடியே.

நிமலின் உடல்நிலை பற்றி, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் வர்ஷினி. ஆனால், அவளால் அதை நிமலின் முன்னால் செய்ய முடியாது. அதனால் சிறிது நேரம் சகஜமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு, பிறகு வெளியே வந்தாள். ஒரு திருப்பத்தில், மருத்துவர் வேறு யாரிடமோ பேசிக் கொண்டு நின்றிருந்ததை பார்த்தாள். அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அவள் அப்படியே நின்றாள். அவர் பேசிக்கொண்டிருந்தது வேறு யாரிடமும் இல்லை, அவளுடைய மாமனார், மாமியாரிடம் தான்.

"நிமல் நல்லா இருக்கான்ல?" என்றார் டாக்டர்

"இந்தக் கேள்விக்கு நீ தானே பதில் சொல்லணும்?" என்று சிரித்தார் விஸ்வநாதன்.

"நான் அவன் உடம்பை பத்தி கேட்கல..."

"ஏதாவது பிரச்சனையா டாக்டர்?" என்றார் பார்வதி கவலையாக.

"அவன் ஆபத்தை கடந்துட்டான். அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா எதிர்பார்த்த முன்னேற்றத்தை அவன்கிட்ட பார்க்க முடியல. அவனுடைய உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, ரொம்ப ஸ்லோவா ரெக்கவர் அகுறான். அவன் சந்தோஷமா இருக்கானா? அவன் மனசுல ஏதாவது கவலை இருக்கா? நம்ம மனசுக்கும் ஒடம்புக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. மனசு, உடம்போட ஒத்துழைக்கணும். அப்போ தான் நம்மால ஆரோக்கியமாக இருக்க முடியும். நிமல் விஷயத்துல அப்படி நடக்கிறதா எனக்கு தோனல. அவனோட மனசு, உடம்போட சப்போர்டா இல்ல. அவன்கிட்ட பேசுங்க. அவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அவனை சந்தோஷப்படுத்த பாருங்க. நம்பிக்கையோட சப்போர்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம் பாருங்க அவன் எவ்வளவு சீக்கிரம் ரெக்கவர் ஆக போறான்னு..."

அவர் அடுத்த அறைக்கு சென்றார். விஸ்வநாதனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் செய்வதறியாமல் பார்த்து நின்றார்கள். அங்கிருந்த நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தார்கள்.

"எல்லாம் என்னால தான்" என்று வருத்தப்பட்டார் விஸ்வநாதன்

"அப்படி சொல்லாதீங்க"

"இல்ல பார்வதி, வர்ஷினியை பத்தி விசாரிக்கிறதுல, நான் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா, வர்ஷினி அவனை தப்பா நினைச்சிருக்க மாட்டா. நிமல் பிரச்சனையை ரொம்ப அழகா கையாண்டிருப்பான். நான் எல்லாத்தையும் கெடுத்துட்டேன். நம்ம பிள்ளை, வாழ்க்கையோட ரொம்ப மோசமான கட்டத்துல இருக்கான். அவனை எது கஷ்டப்படுத்துதுன்னு நமக்குத் தெரியுமே..." என்றார் வேதனையாக.

ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி.

"நம்ம வர்ஷினிகிட்ட பேசி பாக்கலாமா?"

"அவகிட்ட பேச வேண்டியதில்ல. அவ நிமலை பாத்துக்குவா"

"நிமல் ரெக்கவர் ஆகி வரணும். டாக்டர் சொன்னதை நீ கேட்டல்ல? வர்ஷினியால தான் நிமலை பழையபடி தேத்தி கொண்டு வரமுடியும்..."

"அவளுக்கு நம்ம கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்த நிலைமையில அவ என்ன செய்யப் போறான்னு கொஞ்சம் பொறுத்து பாருங்க... தேவைப்பட்டா அதுக்கப்புறம் நிச்சயம் அவகிட்ட பேசலாம்" என்றார் பார்வதி.

வர்ஷினியின் அப்போதய மனநிலை அவருக்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் இருந்தார் பார்வதி.

சரி என்று தலையசைத்தார் விஸ்வநாதன். அவர்கள் பார்க்கும் முன் அங்கிருந்து ஓடிப்போனாள் வர்ஷினி. நிமலின் அறைக்குள் நுழைவதற்கு முன், யோசிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் தேவை. என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாள். ஏனென்றால், அவளுடைய நடவடிக்கையை, பரிதாபம் என்று நிமல் தவறாக நினைத்துவிடக் கூடாது. எப்படி அவனை இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வருவது? அவளுக்கு தெரியாதா, அவன் மனதை அழுத்திக் கொண்டிருப்பது என்னவென்று? மன அழுத்தம் என்பது மனிதனை உயிரோடு எரித்து கொல்லும் பயங்கர கொள்ளி. சற்று நேரம் அமர்ந்து அமைதியாய் சிந்தித்துவிட்டு, தன் முகத்தை துடைத்துக்கொண்டு நிமிலின் அறையை நோக்கிச் சென்றாள் வர்ஷினி.

விஸ்வநாதனும் பார்வதியும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்தவுடன் அவர்கள் வழக்கம் போல் புன்னகைத்தார்கள்.

"எங்க போயிருந்த வர்ஷு?" என்றார் பார்வதி.

"கோவிலுக்கு போயிட்டு வந்தேன், மா"

"உனக்கு சாப்பாடும், நிமலுக்கு சூப்பும் கொண்டு வந்திருக்கேன். முதல்ல வந்து சாப்பிடு..."

"நான் அப்புறமா ( சற்றே நிறுத்தி) அவரை சாப்பிட வச்சிட்டு சாப்பிடுறேன்" என்ற அவளை, மூவரும் நம்ப முடியாமல் பார்த்தார்கள். ஏனென்றால், பார்வதி அங்கு இருக்கும் பொழுது, அவள் அதை செய்ய வேண்டிய தேவை இல்லையே... எதைப் பற்றியும் யோசிக்காமல், பையிலிருந்த டப்பாவை வெளியே எடுத்தாள் வர்ஷினி.

"அவனுக்கு ஊட்டி விட போறியா?" என்றார் பார்வதி. ஏனென்றால், நிமலால் கிண்ணத்தை கையில் பிடித்துக் கொள்ள முடியாது. அடிப்பட்ட காயம் வலிக்கும் என்பதால் பார்வதி தான் அவனுக்கு ஊட்டி விடுவார்.

ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"அப்போ, நம்ம போய் டாக்டர் பாத்துட்டு வரலாம்" என்று விஸ்வநாதானுக்கு ஜாடை காட்டினார் பார்வதி.

சந்தோஷமாய் அவருடன் சென்றார் விஸ்வநாதன். நிமல் பூலோகத்திலேயே இல்லை. வர்ஷினி செய்வதையெல்லாம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சூப்பு கிண்ணத்துடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். ஒரு தேக்கரண்டி சூப்பை அவனுக்கு ஊட்டி விட்டாள். அவள் முகத்திலிருந்து கண்களை அகற்றுவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தான் நிமல்.

"என் மேல கோவமா இருக்கல்ல?" என்றான்.

இல்லை என்று தலையசைத்தாள் சூப் கிண்ணத்தை பார்த்தபடி.

"நிஜமாவே உனக்கு என் மேல கோவம் இல்லயா?"

"அதையெல்லாம் மறந்துடலாம்..."

"உன்னால முடியுமா?"

"நான் எதைப் பத்தியும் யோசிக்க விரும்பல. யோசிக்க வேண்டிய அவசியமும் இல்ல. நம்ம போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. வாழ வேண்டிய வாழ்க்கை இருக்கு. என் வாழ்க்கையோட முதல் பாகம் சரியா அமையல. அதுக்கு நான் பொறுப்பு இல்ல. ஆனா, இரண்டாவது பாகம், முழுக்க முழுக்க என்னோட பொறுப்பு தான். நான் அதை கெடுத்துக்க விரும்பல. யாரையும் இழக்கவும் நான் தயாராயில்ல"

அவள் யாரையும் என்று சொன்னது அவனைத் தான் என்று புரிந்தது நிமலுக்கு.

"நீங்க தேவையில்லாம எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க எது வேணும்னாலும் என்னைக் கேட்கலாம். தயங்க வேண்டியதில்ல. நான்... நான் இருக்கேன்... உங்க கூட..." அவளையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்த அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்"

பேச வேண்டியதை பேசி முடித்துவிட்டதால் அங்கிருந்து செல்ல கட்டிலிலிருந்து எழ முயன்றாள். அவள் கையை பற்றினான் நிமல். அவனை பார்க்காமல் கட்டிலில் அமர்ந்தாள் வர்ஷினி. அவளுக்கு தெரியும், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திற்காக தான் அவன் வெகு நாளாய் காத்திருக்கிறான் என்று.

"நான் உன்னை ஒன்னு கேட்டா, நீ தப்பா நினைச்சுக்க மாட்ட இல்ல?"

"என்ன?"

"வந்து... நான்..."

"என்ன வேணும் சொல்லுங்க"

"நான் உன்னை கட்டி பிடிச்சுகட்டுமா?"

தன் கண்களை மூடிக்கொண்டு சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி. ஒரு அழகிய கவிதையைப் போல், அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான் நிமல், என்னமோ, அது தான் அவனை ஒட்டு மொத்தமாய் குணப்படுத்தப் போகும் மாமருந்து என்பதை போல. தனது பிறவிப் பயனை அடைந்து விட்டவனைப் போல் அவளை ஆரத் தழுவிக் கொண்டான். வர்ஷினியும் அவன் கழுத்தை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டாள்.

வர்ஷினி என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை... இந்த காட்சி அவர்களுடைய வாழ்க்கையில் மறுபடியும் தோன்றும் என்று. இதே போலத் தானே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுது, அவள் நிமலிடம் கேட்டாள்...! இன்று அவர்கள் இருவரும், இடம் மாறி அமர்ந்திருக்கிறார்கள். நிமலால் தன் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

"வர்ஷு, ஐ அம் சாரி டா... நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடு..."

"ஷ்ஷ்ஷ்... அமைதியா இருங்க"

"உனக்கு என் மேல கோவம் இருந்தா, என்னை அடி... திட்டு... ஆனா, பேசாம மட்டும் இருக்காத. என்னால இந்த தண்டனையை தாங்கவே முடியல. நீ இப்படி செஞ்சா நான் நிச்சயமா செத்துடுவேன்..."

இதே வார்த்தைகளை அவள் ஒருமுறை நிமலிடம் கூறியிருக்கிறாள்... குமணன் இல்லத்தின் ஜெனரேட்டர் அறையில்...!

நிமலை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள் வர்ஷினி, இனி எப்பொழுதும் அப்படி செய்யமாட்டேன் என்ற பதிலை செயலின் மூலம் தந்து. அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவன் கண்ணீரை துடைத்து விட்டாள்.

"அதனால தான் அந்த புல்லட்டை, நீங்க நெஞ்சில வாங்கிட்டீங்களா?"

"இல்ல... நான் சாகுறதுக்காக அந்த புல்லட்டை நெஞ்சில வாங்கல... உன்கிட்ட இருந்து மன்னிப்பை வாங்காம நான் சாக மாட்டேன்னு எனக்கு தெரியும். உனக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு தான் அந்த புல்லட்டை நான் வாங்கிகிட்டேன்... உன்னால வலி தாங்க முடியாதுன்னு எனக்கு தெரியும்"

அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள் வர்ஷினி. அழகான புன்னகையுடன் அவளை தழுவிக் கொண்டான் நிமல். கல்லூரி நாட்களில் வர்ஷினியிடம் கண்ட அதே துடிப்பை, அன்று மீண்டும் அவளிடம் கண்டான் நிமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro